Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, October 16, 2011

"புது நெறி காட்டிய பாரதி"


"அச்சம் தவிர்!"
("புது நெறி காட்டிய பாரதி" எனும் நூலில் தோழர் ஆர்.கே.கண்ணன் எழுதியது)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்ளுக்குள்ளே குமுறலும் புகைச்சலுமாக இருந்த போதிலும் -- 1857ஆம் ஆண்டில் துவங்கிய இந்திய விடுதலைப் போர் (சிப்பாய் கலகம் என்று ஏகாதிபத்தியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்கள் இதனைக் குறிப்பிடுவர்) தோற்றுப்போன பின்னணி இங்கு நினைவுகூரத்தக்கது -- வெளியே மொத்தத்தில் அடிமை இந்தியா மனமொடிந்து, செயல் திறனிழந்து, சிந்தனை சாம்பிப் போய், அந்நிய ஆட்சிக்குப் பயந்து வாழ்ந்து வந்தது. பழமைப் புலம்பலுக்கோ, போலி விருப்புக்கோ இடந்தராமல், உள்ளது உள்ளபடியே இந்நிலைமையை "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிற பாட்டில் பாரதி கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறான். புண்ணைக் கீறிக் கிளறிப் பார்த்த பிறகன்றோ நோயின் தன்மை தெரியும், மருத்துவம் செய்ய முடியும்? "இந்த நிலைகெட்ட மனிதரை" பாரதி எவ்வாறு வர்ணிக்கிறான் என்று பாருங்கள்.

"அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"

என்று அச்சப் பேயை முதலில், எடுத்த எடுப்பிலே குறிக்கிறான். இந்த அச்சத்தின் மிக முக்கியமான, மிகப் பரவலான வெளியீடு எது?

"தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்"

என்ற அரசுபால் மக்கள் காட்டும் பயத்தை முதலில் சுட்டுகிறான். கேவலம் மக்கள் தரும் வரிப்பணத்தை நம்பி இயங்குகின்ற ஒரு அரசைக் கண்டு அதே மக்கள் பயங்கொள்வதா? இதைக் காட்டிலும் அபத்தமான, பைத்தியக்காரத்தனமான அச்சம் வேறொன்று இருக்க முடியுமா என்பது கவிஞனின் மிகமிக எளிமையான, ஆனால் மிகமிக முக்கியமான கேள்வி.

அடுத்து, இந்த அச்சத்திற்குப் பிறப்பிடம், மூலகாரணம் எது என்று எடுத்துக் காட்டுகிறான் பாரதி.

"கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?"

என்று ஓகாரத்தில் கவிஞனின் திகைப்பு முற்றளவாக வெளிப்படுகிறது. ஒற்றுமையின்மையை இரண்டாவதாக இவ்வாறு வைத்த பாரதி அதன் காரணத்தை இனி விளக்க முற்படுகிறான்.

"சாத்திரங்கள் ஒன்றுங் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்."

என்று தத்துவப் பார்வை பிழையை, கேட்டை, மூன்றாவதாக வைக்கிறான். விழி கெட்டால் வழிகெடும் அல்லவா?

இந்தத் தத்துவப் பார்வைக் கேடு பிரிவினைகளை வளர்த்தது மட்டுமின்றி மற்றொரு தீங்கும் விளைத்தது என்று அடுத்து வரும் வரிகளில் சுட்டிக் காட்டுகிறான்.

"கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்"

என்று பிரிவினைகள் வளர்ந்தது மட்டுமின்றி, தீது சூதுவாதுகளின் காரணங்களைக் காணும் அறிவும் அற்றுப் போயினர். ஜனக்கட்டு நலிய அறிவுக்கண் மங்கியது என்று இதை நான்காவதாக வைக்கிறான். சமுதாயத்தின் ஒன்ற்றுமை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அந்தச் சமுதாயத்தின் அறிவும் ஆற்றலும் வெளிப்பட்டு இயங்கும் என்று அவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பாரதி சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் உண்மையாகும். கல்லணை கட்டிய அந்தக் காலமாயினும் சரி, எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையல்லவா இது? "ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!" என்ற வரியின் ஆழமும் விரிவும் சிந்தித்து அறியத்தக்கன.

இவற்றின் விளைவென்ன?

"கண்ணில்லாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்"

என்று மிக எளிமையாக விளக்கி விடுகிறான் பாரதி. குழந்தைகளின் இயல்பான பேதைமையோடு பாரதி ஒப்பிடவில்லை. எந்தக் குழந்தையும் பிறர் காட்டிய வழியிற் சென்று முதலில் பார்க்கத்தான் செய்யும்; எனினும் வெகு தூரம் சென்று மாட்டிக் கொள்ளாது; தனக்குப் பழக்கமில்லாத பாதையில் போகத் தயங்கும். சுற்றுமுற்றும் பார்க்கும், நின்று அழும். ஆனால் அந்தக் குழந்தைக்குக் கண்ணும் இல்லை என்றால்? அந்தப் பேதைக் குழந்தைக்குத் தனக்குப் பழக்கப்பட்ட பாதை எது பழக்கப்படாத பாதை எது என்று கண்டறியக் கண்ணும் இல்லாத ஒரு நிலையிலே 'பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்ளும்'. எளிய உவமை "கண்ணில்லாக் குழந்தைகள்" நல்ல வழி சொன்னாலும், அதிலே நேராக நடக்க இயலாத குழந்தைகள். நல்லவழி காட்டுகிறவனும் குழந்தையைக் கையோடு கூட்டிக் கொண்டு வழி நடந்தால்தான் உண்டு முன்னேற்றம்.

இந்தக் குழந்தைகள் ஒரு காலத்தில் இருந்த உச்சநிலை எங்கே? வீழ்ந்துள்ள பள்ளம் எங்கே? என்பதைக் கடைசியிலே ஐந்தாஅகச் சுட்டிக்காட்டிச் சித்திரத்தின் பயங்கரமான சோகத்தை வெளியிடுகிறான்.

"நண்ணிய பெருங் கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகல் போல வாழ்வார்."

கடைசி வரியிலே கடைசிச் சொல்லிலே சித்திரத்தின் கசப்பு அத்தனையும் கொட்டி விடுகிறான் பாரதி. "பொறியற்ற விலங்குகள்" என்று வருணித்து விட்டதோடல்லாமல் அவற்றைப் போல் இவர்கள் "வாழ்வார்களாம்!". இது வாழ்வா? மனிதனுக்குரிய வாழ்வா? இந்தப் புண்ணிய நாட்டினிலே இதுவும் ஒரு வாழ்வா? என்கிற பொருட் தொனிகள், உணர்ச்சித் தொனிகள், நெஞ்சிலே சிந்தியவாறு முடிகிறது இந்த நொண்டிச் சிந்து.

உணர்ச்சிப் பிழம்பான இந்தப் பாடலில், கருத்துக்கள் எவ்வளவு ஒழுங்காக, சீராக வைக்கப்படுகின்றன. கவனியுங்கள். "ஞானமும் பொய்க்க நசிக்கு மோர் சாதி" என்று தத்துவப் பார்வையின் இன்றியமையாத் தன்மையை உணர்ந்த கவிஞன் பாடலில் அதை முதன்மைப்படுத்தவில்லை. அச்சத்தையே முதலில் வைத்தான். காரணம்? அலிக்கு இன்பம் இல்லை; கோழைக்குத் தர்மம் இல்லை. கோழைக்குத் தர்மம் கோழைத்தனம் ஒன்றுதான்! கோழைத்தனம் குடிகொண்டுவிட்ட நாட்டில் ஞானம் இருந்தென்ன போயென்ன? இரண்டும் ஒன்றுதான்! எனவெதான் "அச்சம் தவிர்" என்று புதிய ஆத்திசூடியில் துவக்கிச் சமயம் வரும் போதெல்லாமே பாடல்களிலும், கட்டுரைகளிலும் அச்சம் என்கிற முதற் பகைமையை, மூலப் பகையை, உட்பகையை முதலில் வேரறுக்கச் சொல்கிறான். புரட்சி செய்வதற்கு முதல் தேவையாக "நெஞ்சத்துணிவு வேண்டும்"; மேலும் துணிவு வேண்டும்; மேலும் மேலும் துணிவு வேண்டும்" என்று பிரெஞ்சுப் புரட்சியின் கலையைப் பயின்ற டாண்டன் (Danton) போதிக்கிற சொற்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன.

இவ்வாறு கருத்துக்களை ஆய்ந்து தேர்ந்து அளந்து வரிசைப்படுத்தி ஒவ்வொரு பாட்டிலும் கோவையாக அழகு தமிழிலே அமைப்பது பாரதியின் கவிதைக்குரிய முக்கிய இலக்கணங்களில் ஒன்றாகும். பாரதி சீரிய சிந்தனையாளன்; வெறும் வார்த்தை ஜாலங்கள் செய்யும் கவிஞனும் அல்ல; நல்ல முற்போக்கான கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை முழு வடிவத்திலே கண்டு தேர்ந்து ஒழுங்குபடுத்திச் சொல்ல இயலாமல் உள் சமநிலையற்ற உள்ளடக்கத்தோடு பாட்டிசைக்கும் கவிஞனும் அல்ல.

பாரதியின் பாப்பா பாட்டைப் பாருங்கள். பாப்பாவுக்குப் பழக்கமான எளிய சொற்களை மட்டுமே கையாள்வதிலே எத்துணை அக்கறையும் விழிப்பும் காட்டினானோ அதே போல் எந்தெந்தக் கருத்துக்களை -- ஆதாரக் கருத்துக்களை -- எப்படிச் சொல்வது என்பதிலும் மிகுந்த விழிப்பும் அக்கறையும் பாரதி காட்டி இருக்கிறான். உயர்திரு ரா.அ.பத்மநாபன் அவர்களின் "சித்திர பாரதி"யிலே இதற்குச் சான்று கிடைத்திருக்கிறது.

பாப்பா பாட்டை முதலில் பாடியபோது பாரதி எழுதிய சில வரிகள் பின்வருமாறு:

"சாதிப் பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்
நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய உடையவர்கள் மேலோர்."

இதைத்தானே மறுபடியும் சிந்தித்துப் பார்த்துவிட்டு பாரதி தன்னைத்தானே திருத்திக் கொள்கிறான்! சுயவிமர்சனம் தன்னியல்பாக வருகிறது - எந்தப் பாப்பாவும் கேட்காமலே, எந்தத் தாத்தாவும் கேட்காமலே!

"சாதிப் பெருமையில்லை பாப்பா" என்பதை "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று மாற்றுகிறான்.

எவ்வளவு பொருள் நிறைந்த மாற்றம்? சாதிகள் இருக்கலாம், ஆனால் அவை பற்றிப் பெருமை பாராட்டி நடக்காதே என்பது முதல் வரிகள். இப்போது, அந்தக் கருத்தும் தவறு என்று தீர்மானித்து "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று சாதிப்பேயின் மண்டையில் ஓங்கியடித்து விடுகிறான்.

அடுத்து ..........

"அதில் தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்" என்கிற வரியை "குலத் தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்" என்று திருத்துகிறான். முன்னே வந்த திருத்தத்தை யொட்டி இங்கே வினையின் தன்மையையும் நேராக்குகிறான். முன்பு "சாதிகள் இருந்தாலும் சாதியிலே பெருமையில்லை, எனவே தாழ்ச்சி யுயர்ச்சி செய்யாதே என்றான்; இப்போது சாதிகளே இல்லை என்று ஓர்ந்ததினாலே தாழ்ச்சியுயர்ச்சி சொல்வதே பாவம் என்று திருத்தத்தின் மூலம் கருத்துக்கு வலுவேற்றுகிறான்.

"நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய உடையவர்கள் மேலோர்"

என்கிற வரையைப் பார்க்கிறான். "தெளிந்த மதி" என்பதை விட "உயர்ந்த மதி" எனக் குறித்தல் சிறப்பு என்று உணர்கிறான். "உயர்ந்த மதி" என்று சொல்வதிலேயே தெளிவும் தொக்கி நிற்கிறது என்று காண்கிறான். பிறகு பாப்பாவுக்காகப் பாட்டுப் பாடப்படுகிறது என்பதைத் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்கிறான். பாப்பாவுக்கு இந்த நீதி, மதி எல்லாம் எப்படிக் கிடைக்கும்? கல்வியை மறந்து விட்டது எவ்வளவு பெரிய தவறு? என்று உணர்கிறான். குழந்தைக்குக் கல்வி இன்றியமையாததாயிற்றே! அதைப் பாட்டிலே செருகி விடுகிறான். எத்துணை விழிப்போடு, பொறுப்பு உணர்ச்சியோடு, பாப்பாக்களிடம் இந்த மகாகவி நடந்து கொள்கிறான்! வரிகள் பின்வருமாறு திருத்தப் பெறுகின்றன.

"நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"

இப்போது பாரதிக்கு "உடம்பு நேராச்சு; பாட்டும் நேராச்சு!"

இவை மட்டுமா? இந்தச் செய்யுளுக்கு முன் சென்ற இரு செய்யுளிலும் முக்கியமான திருத்தங்கள் செய்திருக்கிறான் பாரதி.

"அமிழ்தில் இனியதடி பாப்பா - எங்கள்
ஆரிய தேசமடி பாப்பா"

என்கிற, தான் முதலில் எழுதிப் பதிப்பித்த வரிகளை மறுபடியும் ஆராய்கிறான். குற்றம் கண்ணுக்குப் புலப்படுகிறது! குழந்தைக்கு ஆரியன், திராவிடன் என்றால் என்ன தெரியும். எது விளங்கும்? பிறர் ஒரு அர்த்தத்தில் அவற்றைப் பயில, இரண்டுக்கும் நடுவே பாப்பா சிக்கிக்கொண்டு இடர்ப்பட இடம் வைக்கலாமோ? கூடாது என்று தீர்மானிக்கிறான் பாரதி. பாப்பாவுக்குச் சங்கடமில்லாதவாறு வரியைத் திருத்த முற்படுகிறான். இதோ:--

"அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா"

இப்போது விஷயம் நேராகி விட்டது; உயர்வாகவும் அமைந்துவிட்டது. அதிலே பாரதிக்கு மனப்பூரிப்புத் தாங்கவில்லை -- குழந்தைகளோடு ஒட்டிக் கொள்கிறான். "எங்கள்" என்ற சொல்லுக்குப் பதிலாக குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாகச் சேர்ந்து கொண்டு "நம்" ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! என்று திருத்துகிறான்.

அதே போல்: "செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தெய்வமென்று கொண்டாடு பாப்பா!"

என்பதில் கடைசி வரியை "தினமும் புகழ்ந்திடடி பாப்பா" என்று திருத்துகிறான். திருத்திய பிறகு குழந்தைக்கு இந்த விளக்கத்தின் பயனைத் தரவேண்டிப் புதிதாக இரண்டு செய்யுட்களைப் பாப்பா பாட்டில் சேர்க்கிறான். அவை:

"வடக்கில் இயமமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
வேதமுடைய திந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேத மில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!"

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானத்தைத் "தெய்வம்" என்று கொண்டாடு பாப்பா என்று சொல்வது பாரதிக்குச் சரியென்று படவில்லை. அதைத் "தினமும் புகழ்ந்திடடி" என்று திருத்திவிட்டான். பின் எதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா" என்று சொல்கிறான்? வேதமுடைய நாட்டை; வீரர் உள்ள நாட்டை! - இதைத் தெய்வமென்று கொண்டாடு என்கிறான்.

சொற்திருத்தங்கள் சிறியவையாயினும் பொருள் நிறைந்த திருத்தங்கள் அல்லவா? சொல்லின்பத்தைத் தெய்வமாகப் போற்றிய பாரதி கருத்து விஷயத்தில் - உள்ளடக்கத்தின் விஷயத்தில் - எவ்வளவு பிரமிக்கத்தக்க பொறுப்புணர்ச்சியும், ஆழ்ந்த சிந்தனையும் காட்டியிருக்கிறான்.

பாரதி மகாகவி என்பதற்கு இதுவும் ஒரு ஆணித்தரமான சான்றாகும்.

அகண்டாகாரமாக விரிந்து உயர்ந்து நிற்கும் வாழ்விலே ஏற்கனவே மனிதகுலம் சாதித்த சமுதாயச் சமன நிலைக்குரிய கருத்துக்களையும், பண்புகளையும், அவற்றிற்கிடையே இருக்கும் பரஸ்பர, ஆதார - இணைப்புக்களையும் பழுதறக் காக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி. அதோடு நில்லாமல் அந்த அகண்டாகாரமான வாழ்விலே இன்று காணவேண்டியிருக்கிற புதிய சமன நிலைக்கு அடிகோலக்கூடிய புதிய கருத்துக்களையும், பண்புகளையும், அவற்றிற்குரிய பரஸ்பர ஆதார இணைப்புக்களையும் ஒரே முழுமையாக (தத்துவமாகவும், செயல் திட்டமாகவும், செயலாகவும், கலையாகவும்) படைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி; இவ்விரண்டு பொறுப்புணர்ச்சிகளும் மகாகவிகளின் சாதனையிலே வெளிப்படுவதைக் காண்கிறோம்.

உலக மகாகவி கத்தே தனது FAUST படைப்புக்கு இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். "போரும் அமைதியும்" என்கிற நவீன காலத்திய இதிகாசத்தை எழுத டால்ஸ்டாய் எட்டு ஆண்டுகள் செலவிட்டார் என்கிற பல செய்திகளின் அடியில் காணக்கிடக்கும் உண்மை இதுவன்றி வேறென்ன?

எனவேதான் அவர்களின் இலக்கியங்களை வெறும் இலக்கியங்கள் என்று மக்கள் கொள்வதில்லை; மனிதகுலத் தொன்மையின் தொடக்கப் புள்ளியிலிருந்து முன்னே தோன்றும் அடிவானம் வரைக்கும் ஓங்கி வளைந்த வானப் பாலங்கள், வான வளைவுகள், அவை என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

நன்றி: ஆர்.கே.கண்ணன் "புது நெறி காட்டிய பாரதி. நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.




Saturday, October 15, 2011

ஸத்ய லோக சிந்தனை


"ஞானரதம்" நூல் பற்றிய கட்டுரையின் ஒரு பகுதி .....

(அறிஞர் பெ.சு.மணி அவர்களின் "பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள்" நூல் கட்டுரையிலிருந்து)

ஸத்ய லோக சிந்தனைகளில் பாரதியாருக்கு ஒளவையார் பற்றிய சிந்தனை வந்தது மகிழ்ச்சி கலந்த வியப்பைத் தருகின்றது. ஒளவையார் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை; அவருடைய பாடல் ஒன்றிற்கு புதுமையாக விளக்கம் கொடுக்குமிடத்தில் "கவி" என்று மட்டுமே குறிப்பிடுகின்றார். விளக்கத்தைக் கொண்டு பாடலையும், கவிஞரையும் இனங்காண முடிகிறது.

ஒளவையார் சீர் பரப்புவதில் முன்னணியில் நிற்பவர் பாரதியார். கட்டுரைகளில் ஒளவையார் கவித்திறம் குறித்து, ஆன்மீக ஞானம் குறித்து புகழ்மாலை சூட்டியவர் பாரதியார். மெக்காலே பாணியில் ஒளவையார் பற்றி பின்வருமாறு பாரதியார் கூறியது, ஒளவையார் இலக்கியத்தில் அவருக்கிருந்த நிகரற்ற ஈடுபாடு விளக்கமுறுகின்றது.

"தமிழ் நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், "மற்ற செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்" என்று நாம் மறுமொழி உரிக்கக் கடமைப் பட்டிருக்கின்றோம்."

'மெக்காலே பாணி' என்பது என்ன என்பதை பாரதியார் வாக்காலேயே பின்வருமாறு அறிவோம்.

"நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமேயன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் ஒருப்பட மாட்டோம்" என்று நாம் மறுமொழி சொல்வோமென்று 'மெக்காலே' என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகின்றார்."

பொருள் தேடலையும் உழைப்பையும் வலியுறுத்தியுள்ளார் பாரதியார். காந்தியடிகளின் பதினெட்டு நிருமாணத் திட்டங்களைக் குறிப்பிட்டு அத்துடன் பத்தொன்பதாவதாக பொருள் ஈட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று பாரதியார் எழுதியுள்ளார்.

ஸத்யலோக சிந்தனைகளில் ஒன்றாக வரும் பின்வரும் சிந்தனை ஒளவையார் பாடலொன்றுடன் தொடர்புடையது.

"மண்ணுலகத்துப் பொருளும் பெருமையும் மிக இழிவுடையனவாயினும், அவற்றைக்கூட சோம்பரால் துறந்திருப்பவன் நற்கதியடைய மாட்டான். உழைத்துத் தேடி அவற்றின் இயற்கையை அனுபவித்துப் பார்த்தப் பின்பு துறக்க வேண்டும். பாடுபட்டுத் தேடிப் பணத்தை அடைபவனைக் கவி நிந்தனை செய்யவில்லை. அதைப் போற்றுதற்குரியதோர் பெருமையுடைய தென்றெண்ணிப் புதைத்து வைப்பவனையே நிந்தை செய்கின்றார். அதை நன்கு செலவிடுகிறானா அல்லது துர்வினியோகம் செய்கிறானா என்பதைப் பற்றி இங்கு விவகாரமில்லை. அது வேறு விஷயம். அதைத் தேடிக் கண்டு அனுபவித்துணர்ந்த பிறகுங்கூட அதன் சிறுமையை அறிந்து வெறுத்துத் தள்ளிவிடாமல், அதில் மேன்மேலும் ஆசை கொண்டு ஆதரிப்பவனே - கேடுகெட்ட பாவியாவானென்று கவி சொல்லுகிறார்."

மேலே 'கவி' என்று பாரதியார் குறிப்பிடுவது ஒளவையார் என்பதை பின்வரும் ஒளவையாரின் பாடலைக் கொண்டு முடிவு செய்யப்படுகின்றது.

"பாடுபட்டு தேடிப்பணத்தை புதைத்து வைத்து
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்."

ஸத்யலோகம் பயண முடிவில் தமக்கேற்பட்ட அனுபவத்தைப் பாரதியார் பின்வருமாறு வருணித்துள்ளார். திருவல்லிக்கேணியில் தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான ராயர் ஒருவரின் குடும்பத்தை நோவாத ஹாஸ்ய ரசத்துடன் பின்வருமாறு பாரதியார் வருணித்துள்ளார்.

"முன்பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்கும் பகல் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபி முன் முத்திரைகள் எத்தனையோ, அத்தனை குழந்தைகள். அவள் மனைவி மறுபடியும் கர்ப்பம்."

நயமான நகைச்சுவைக்கு மேலும் ஒரு சான்று, பின்வருவது.

"திருவல்லிக்கேணியிலே 'செ ..... சங்கம்' என்பதாக ஓர் தேசபக்தர் சபை உண்டு. அதில் தேசபக்தர்கள்தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து 'காரியங்கள்' -- ஒரு காரியமும் நடக்கவில்லை - நடத்தினோம். நாங்கள் தேசபக்தர்கள் இல்லையென்று அந்தச் சபை ஒன்றுமில்லாமற் போனதிலிருந்தே நன்கு விளங்கும்."

மேலே, "செ ..... சங்கம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது சென்னை ஜனசங்கம் எனும் அரசியல் அமைப்பாகும். 1908இல் அமைக்கப் பெற்றது இந்த ஜன சங்கம்.

பாரதியார், அவருடைய சிறிய தாயார், மனைவி, மைத்துனிப் பெண், தம்பி சி.விசுவநாதன், அவருடைய முதல் குழந்தை தங்கம்மா ஆகியோரைக் கொண்டது பாரதியார் குடும்பம் எனும் குறிப்பும் இந்தப் பகுதியில் உள்ளது.

"கண்கள் சுழன்றன. சிறிது மயக்கமுண்டாயிற்று. பின் மயக்கம் தெளிந்தது. கண்ணை விழித்துப் பார்த்தேன். 'மறுபடி மண்ணுலகத்திலே, திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் கிழக்கு முகமுள்ள வீட்டு மேன் மாடத்தில், - நானும் என் பக்கத்திலே சில வர்த்தமானப் பத்திரிகைகள், எழுதுகோல், வெற்றிலை பாக்கு முதலிய என்னுடைய பரிவாரங்களும் இருப்பது கண்டேன்' என முடிக்கின்றார்.

1910இல் வெளிவந்த மேல்வரும் வருணனை 1923இல் வெளிவந்த பாரதியாரின் "குயில் பாட்டிலும் அதே அநுபவம் சில சொற்களில் மாறுபட்ட வகையில் வெளிவந்திருப்பது ஓர் ஒற்றுமை அம்சத்தைக் காட்டுகின்றது. "குயில் பாட்டு" 1914-15 களில் எழுதப் பெற்றது. 'பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றும் நெட்டைக் கனவின் நிகழ்ச்சி" என்ற பெயரில் தோன்றிய கற்பனைக் காவியத்தை முடித்து வைத்தப் பாங்கும், 'ஞானரதம்' - சத்யலோக வருணனையின் இறுதிப் பகுதியும் பெருமளவில் ஒத்திருப்பதை பின்வருமாறு அறியலாம்.

"வீழ்ந்தேன் பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்
பத்திரிகைக் கூட்டம் பழம்பாய் வரிசையெல்லாம்
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம்! எனவுணர்ந்தேன்."

நன்றி: பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் திரு பெ.சு.மணி.

Friday, October 14, 2011

பாரதியின் தேசாவேசம்

முதல் பிரசுரம்
(திரு ரா.அ.பத்மநாபன் அவர்கள் வெளியிட்ட சித்திரபாரதியிலிருந்து)

1904இல் சென்னை வந்தது முதலே பாரதியின் தேசாவேசம் பெருந்தீயாகக் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. வங்கப் பிரிவினை சமயம் 'வந்தேமாதரம்' கீதத்தை, 'இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!' என்று துவங்கும் முதல் மொழிபெயர்ப்பை, 1905 டிசம்பர் மாதம் 'சக்கரவர்த்தினி'யில் பாரதி வெளியிட்டார்.

இதற்கு இரண்டு மாதம் கழித்து, 1906 பிப்ரவரியில், 'எமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பித்து ஒரு நூல் வெளியிடத் தாம் விரும்புவதாகவும், பழைய நூல்களிலுள்ள நாட்டு வர்ணனைகளல்லாமல் புதியனவான தேசபக்திப் பாடல்களைப் புனைந்தனுப்புமாறும் 'சுதேசமித்திர'னில் ஒரு வேண்டுகோள் வெளியிட்டார்.

பாரதி எதிர்பார்த்தபடி தேசியக் கவிதைகளை எவரும் அனுப்பவில்லை. ஆதலால், குறையை நிவர்த்திக்கும் பணியில் தாமே ஈடுபட்டுவிட்டார்! அவர் இயற்றிய பல தேசாவேசப் பாக்கள் 'மித்திர'னிலும், 'இந்தியா'விலும் இதரப் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆயினும் கவிஞருக்குத் திருப்தியில்லை. தமது பாடல்களை நூல் வடிவில் வெளியிட ஆவலாயிருந்தார்; ஆனால் பணத்துக்கோ வழியில்லை என்ன செய்வது? தம் சிநேகிதரான ஜி.ஏ.நடேசனிடம் தம் மனக்குறையைத் தெரிவித்துக் கொண்டாராம். அதற்கு அவர், 'உங்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடியவர் வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரே. வேண்டுமானால் உங்களை அவரிடம் இன்றே அழைத்துச் செல்கிறேன்' என்றார்.

பழுத்த மிதவாதியும், தமது 'இந்தியா' பத்திரிகையில் வாரந்தோறும் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகுபவருமான ஒரு அரசியல் எதிராளியிடம் இந்தச் சகாயத்துக்குப் போவதா? போனால்தான் பலிக்குமா? 'அவர் சதா என்னைப் பற்றிக் கோபத்துடன் பேசுகிறாராமே! எனக்கு அவரிடம் போக இஷ்டமில்லை' என்றார் பாரதி.

நடேசன் விடவில்லை. 'உங்களுக்கு அவர் சுபாவம் தெரியாது. உங்கள் பாட்டை அனுபவித்தாரானால் தகுந்த உபகாரம் செய்யாமல் இருக்க மாட்டார்' என்று திரும்பத்திரும்ப வற்புறுத்தி, அன்று மாலை பாரதியைக் கிருஷ்ணஸ்வாமி ஐயர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மயிலாப்பூரிலுள்ள தமது பங்களாவுக்கு முன்னால் திறந்த வெளியில் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர். சற்றே இருட்டிய சமயம் நடேசன் ஏதோ புது மனிதர் ஒருவருடன் வந்திருப்பதைக் கண்டு யாரென விசாரித்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர். ஐயரும் பாரதியும் முன்னர் சந்தித்ததில்லை. நடேசன் புன்முறுவலுடன், 'இவர் ஒரு தமிழ்க் கவிஞர், சில பாட்டுக்களை இயற்றியிருக்கிறார். நிச்சயம் கேட்பீர்கள் என்று அழைத்து வந்திருக்கிறேன்' என்றார். ஐயரின் குறிப்பறிந்து பாரதியைப் பாடச் சொன்னார் நடேசன். கணீரென்ற குரலில் பாரதி 'வந்தேமாதரம் என்போம்' என்ற பாட்டை நாதநாமக்கிரியையில் ஆனந்தக் களிப்பு மெட்டில் பாடத் தொடங்கினார். 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி' என்ற அடியில் நாற்காலியில் சாய்ந்திருந்த கிருஷ்ணஸ்வாமி ஐயர் உட்கார்ந்துவிட்டார்.

அடுத்தபடி 'எந்தையும் தாயும்' என்று துவங்கும் நாட்டு வணக்கத்தைக் காம்போஜியிலும், முடிவாக 'மன்னும் இமயமலை' என்று துவங்கும் 'எங்கள் நாடு' பாட்டைப் பூபாளத்திலும் பாடி முடித்தார் பாரதி. கிருஷ்ணஸ்வாமி ஐயருக்கு உற்சாகம் தாங்கவில்லை. இவ்வளவு அழகான பாட்டுக்களை ஏன் நீர் ஊறப்போட்டு வைத்துக் கொண்டிருக்கிறீர்! நாடெங்கும் பள்ளிகளிலும், பெண்களுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் தனிகர்களிடையிலும் இவற்றைப் பரவச் செய்ய வேண்டாமா? ஏன் சும்மா இருக்கிறீர்? என்று கேட்டார்.

நண்பர் நடேசன் கவிஞரின் நிலைமையை நயமாக விளக்கினார்; 'நீங்கள் உதவி செய்தால்....." என்றார்.

'அதற்கென்ன தடை? இதோ உங்களுக்கு நூறு ரூபாய். இந்த மூன்று பாட்டுக்களை அச்சிட்டு இனாமாக வழங்க ஆகும் செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் பெயர் என்ன?'

தர்மசங்கடமான நிலைமை, பாரதி நடேசனைப் பார்த்தார். அவரோ சிரிப்புடன் 'இவர்தான் அடிக்கடி 'இந்தியா' பத்திரிகையில் நீங்கள் வாசிக்கும் கட்டுரைகளின் ஆசிரியர் பாரதியார்' என்று தெரிவித்தார். எதிர்பார்த்தற்கு மாறாக கிருஷ்ணஸ்வாமி ஐயரும், 'தாங்கள்தான் சுப்பிரமணிய பாரதியாரா? என்ன உயர்ந்த தேசாபிமானம் தங்களிடம் தெரிகிறது. இது தெரியாமல் தங்களை வெறும் வெறிபிடித்தலையும் தீவிரவாதிகளில் ஒருவராக அல்லவோ நினைத்தேன்!' என்றாராம்.

அன்று பாரதி பாடிய மூன்று பாட்டுக்களையும் பதினையாயிரம் பிரதிகளுக்குமேல் அழகிய காகிதத்தில் அச்சிட்டு நாடெங்கும் பள்ளிக்கூடங்களுக்கும் பொது ஸ்தாபனங்களுக்கும் இலவசமாய் அனுப்பி வைத்தார் கிருஷ்ணஸ்வாமி ஐயர்.

இந்த விவரங்களை வி.கிருஷ்ணஸ்வாமி ஐயரின் புதல்வர் கி.சந்திரசேகரன் தமது தந்தையின் சரித்திர நூலில் வெளியிட்டிருக்கிறார்.

பாரதியின் பாடல்கள் தனிப் பிரசுரமாக வெளிவந்தது இதுதான் முதல் தடவை. 1904இல் முதல் தடவையாக பாரதி பாடல் அச்சேறியது. 1907இல் முதல் தடவையாக பாரதி பாடல்கள் சிறு தனிப்பிரசுரமாக வெளியாயின.

1907இல் வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர் வெளியிட்ட 'ஸ்வதேச கீதங்கள்' பதிப்பில் 'வந்தேமாதரமென்போம்' என்ற முதல் பாடலின் கடசிப் பா பின்னர் வந்த பதிப்புகளில் விட்டுப் போயிருக்கிறது.

"தேவி நம் பாரதபூமி - எங்கள்
தீமைகள் யாவையுந் தீர்த்தருள் செய்வாள்
ஆவியுடல் பொருள் மூன்றும் - அந்த
அன்னை பொற்றாளினுக் கர்ப்பிதமாக்கி -- வந்தே

என்பதுதான் விட்டுப்போன பா. ஆனால், இந்த 1907இல் பதிப்பில் இல்லாத 'புல்லடிமைத் தொழில் பேணி' என்ற பா தற்போதைய பதிப்புகளில் இருக்கிறது.

வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர், சென்னை பிரசிடென்சி கல்லூரித் தமிழ்ச்சங்கத்தில் செய்த ஒரு பிரசங்கத்தைக் கேட்டே பாரதி 'செந்தமிழ் நாடு' என்ற தமது பாட்டைப் பாடியதாக, 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் தமது 'நினைவு மஞ்சரி'யில் கூறியுள்ளார். பிரசிடென்சி கல்லூரித் தமிழ்ச் சங்கத்தில் பேச்சைக் கேட்டு பாரதி பாடியது 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்' பாடலாக இருக்க வேண்டும். 'செந்தமிழ் நாடு' பாடல், பாரதி புதுவையில் இருந்தபோது ஒரு போட்டிக்காக பாடப்பெற்றது. இரண்டாம் பரிசை பெற்றது.

தமிழ்ப் புலவர்களிடம் பாரதிக்கு அளவுமிக்க பரிவு உண்டு. சாமிநாதையர் மகாமகோபாத்யாய பட்டம் பெற்றபோது பாராட்டுக் கூட்டத்தில் பாரதி பாடிய பாடல் மறக்கவொண்ணாதது. அது சொற் பிழை, சுவைப்பிழை உளது என யாரோ (தவறாக) சொல்லிவிட, பாரதி கூட்டம் முடியுமுன்பே போய்விட்டார். கூட்ட முடிவில் சாமிநாதையர் பாடலை மிகவும் போற்றி, மீண்டும் கேட்க விரும்பினார்; பாரதி இல்லை.

மற்றொரு தமிழறிஞர் மு.ராகவையங்கார் 'செந்தமிழ்' பத்திரிகையில் 'வீரத் தாய்மார்கள்' என்று பழந்தமிழ் மாதரின் வீரத்தையும் நாட்டுப் பற்றையும் பற்றி எழுதியபோது பாரதி, 'தங்கள் புகழ் உலகறியும், தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் 'ஸ்வதேச பக்தி' என்ற புது நெருப்பிற்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்' என்று பாராட்டினார்.

பாரதிக்கு சாமிநாதையரிடமும், சாமிநாதையருக்கு பாரதியிடமும் இவ்வளவு மரியாதை இருந்தும், 1922இல் பாரதி காலமானபின், செல்லம்மா பாரதி வெளியிட்ட 'ஸ்வதேச கீதங்கள்' நூலுக்கு முகவுரை தருமாறு சாமிநாதையர் அணுகப்பட்டபோது, அவர் ஒப்பவில்லை. தாம் அரசாங்க கல்லூரியில் ஆசிரியர் என்ற காரணத்தால்!

(நன்றி: சித்திர பாரதி)

புதிய மதிப்பீடு தேவையா?

புதிய மதிப்பீடு தேவையா?

எட்டையபுரத்துக் கவிஞன் பாரதி மகாகவியா? என்ன யோசிக்கிறீர்கள். மீண்டும் அறுபது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டோமோ, வ.ரா. கல்கி இவர்களுக்கிடையே நடந்த "பாரதி மகாகவியா?" எனும் விவாதம் குறித்து பேசுகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறதா? இல்லை, சமீபத்தில் இப்படியொரு சர்ச்சையைச் சிலர் தொடங்கி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், தங்கள் மேதா விலாசத்தை வெளிக்காட்டிச் சொற்களை வளைத்து வளைத்து எழுதி பாரதியை உருமாற்றிக் காட்ட முயற்சிகளைச் செய்தாலும் பாரதி மகாகவியே. அதில் எள்ளத்தனை சந்தேகமும் தேவையில்லை; அப்படி சொல்வோரது பேச்சுக்களைக் கேட்க வேண்டியதில்லை.

எனக்குத் தெரிந்து கடிகாரம் பழுது பார்ப்பவர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை வராத நாளில் ஏதாவது ஒரு கடிகாரத்தை எடுத்துப் பிரித்து மறுபடி பூட்டி ஓடவைத்துக் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட பழுது பார்ப்பவர் சிலர் இப்போது மகாகவி பட்டம் பாரதிக்கு ஏற்றதா இல்லையா என்பதை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் படித்து விட்டாலும், பலரும் இவர்களை அறிவாளிகள் என்று சொல்லிவிட்டதாலும் ஏற்படுகின்ற கோளாறு இது. என்ன செய்வது? நீங்களே சொல்லுங்கள். உங்கள் கருதுக்களை. "பாரதி மகாகவியா" என்பது பற்றி அல்ல! இதுபோன்ற விமர்சனங்கள் தேவையா என்பது பற்றி. முடிந்தால் பாரதிக்குப் பெருமை சேர்க்க முயற்சி செய்யுங்கள். அவனைக் குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.

Tuesday, October 4, 2011

மகாகவி பாரதி அனைவருக்குமே சொந்தம்

மகாகவி பாரதி உலக மாந்தர்க்கெல்லாம் சொந்தமானவன்.

அமுதசுரபி மாத இதழில் 'பாரதி' எனும் பெயரைத் தன்னுடைய பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கும் சிலருக்குப் பிடித்தமான பாரதியின் வரிகள் எவை என்று கேட்டிருந்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த விடை அனைத்துமே மிக அருமையான வரிகள். நெஞ்சில் தைக்கக்கூடிய அழுத்தமான வரிகள். இதே கேள்வியை 'பாரதி' என்று பெயரில் இல்லாத பல பாரதி அன்பர்களிடம் கேட்டிருக்கலாம். அல்லது பாரதி பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடம் கேட்டிருக்கலாம். தன் பெயரில் பாரதி இல்லாமலே தங்கள் நெஞ்சில் பாரதியின் வரிகளைச் சுமக்கும் ஏராளமான பாரதி அன்பர்களைக் கண்டுபிடித்திருக்கலாம்.

இதில் இன்னொரு ஐயப்பாடு உண்டு. பாரதியின் வரிகளில் நமக்கு மிகவும் அதிகமாகப் பிடித்த வரிகள், அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாரதியின் வரிகளில் நம்முள் ஏற்படுத்திய தாக்கம், மனச்சோர்வடைந்த போது ஊக்கமூட்டிய வரிகள் என்றெல்லாம் கூட வகைப்படுத்திட முடியும். அப்படி அந்த வரிகள் அவர்களை எப்படி பாதித்தது என்பதையும் சொல்ல வைத்திருக்கலாம். எந்த வகையில் பார்த்தாலும், பாரதியின் சொற்கள் மனதுக்கு ஊக்கமளிக்கும் சக்தி கொண்டவையே என்பதில் ஐயமில்லை.

ஆண்டுதோறும் பாரதிக்கு பிறந்த நாளும், நினைவு நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நேரத்தில் பாரதியை நினைத்துக் கொள்வோர் ஏராளம். செப்டம்பர் 11க்கும், டிசம்பர் 11க்கும் பாரதிக்கு பத்திரிகைகள் அதீதமான முக்கியத்துவம் கொடுக்கும். வேறு என்ன செய்ய முடியும், ஆண்டு முழுவதுமா எழுதிக் கொண்டிருக்க முடியும்? மகாத்மா காந்திக்கு அக்டோபர் 2ஆம் தேதியிலும், இந்திய தேசியத்துக்கு ஆகஸ்ட் 15, ஜனவரி 26இல் கிடைக்கும் முக்கியத்துவமும் போலத்தான் இதுவும். அதுவாவது பரவாயில்லை. தொலைக்காட்சியில் இதுபோன்ற நாட்களில், அதில் சம்பந்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி நினைப்பதற்கு பதிலாக, திரைப்படங்கள், நடிக, நடிகைகள் பேட்டி என்று சம்பந்தமில்லாமல் கலக்குகிறார்கள்.

ஆனாலும் ஒன்று, பாரதியை விரும்பாதவர் யார்? பாரதியின் வரிகளைச் சொல்லாமல் மேடையில் யாராவது பேசுகிறார்களா? அது ஏன் அப்படி? இதனை யோசிக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. அவன் நம் மொழியில் பேசினான். நம் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடினான். அவன் சாதாரண மக்களுக்குத் தோன்றாத பல புதிய கோணத்தில் பிரச்சினைகளை அணுகினான்.

சில இடங்களில் அவனது எழுத்துக்களைப் படிக்கையில் இவன் இது பற்றியெல்லாம் எப்போது படித்தான், எங்கு படித்தான் என்ற ஆச்சரியம் தோன்றத்தான் செய்கிறது. சில இடங்களில் அவன் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் புழக்கத்தில் இல்லாத, பழைய, ஆனால் பொருள் பொதிந்த சொற்கள் என்பது விளங்குகிறது. அகராதியை எடுத்துப் புரட்டும்போதுதான் அது புரிகிறது. சாதாரணமாக பாரதியின் எழுத்துக்கள் என்றால் எளிமையானது, எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அப்படி அல்ல. அவன் ஆழங்காணமுடியாத அறிவுச் சுரங்கமாக சில இடங்களில் தோற்றமளிக்கிறான்.

பாரதியின் பாடலுக்கு ஒரு மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். தமிழில் கட்டுரை எழுதும் போது கூட ஒருவர் அந்தப் பாடலைப் பயன்படுத்தி இருந்தார். அதில் ஒரு வரி வருகிறது. "....அம்புக்கும், தீக்கும், விடத்துக்கும்" என்று. மொழிபெயர்த்தவரும் சரி, அந்தப் பாடலைத் தன் கட்டுரையில் பயன் படுத்தியவரும் சரி, இந்த அம்பு என்ற சொல்லுக்கு வில் அம்பு எனும் பொருளில் எழுதியிருந்தார்கள். இங்கு அம்பு என்பது நீர் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கவில்லை. சொல் பிரயோகத்தின்படி பார்த்தாலும், இங்கு அம்பு, தீ, விடம் என்று வருவதால் இது நீரைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அது போலவே ஒரு பெரியவர் என்னிடம் கேட்டார். புதிய பாரதத்தை வரவேற்று பாரதி ஒரு பாடலை எழுதியிருக்கிறான். அதில் "இளைய பாரதத்தினாய் வா! வா! வா!" என்று மிகமிக எளிமையாத் தொடங்கி எழுதுகிறான். அதில் கடைசி வரியில் "விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல் விழியினால் விளக்குவாய், வா! வா! வா!" என்கிறானே அது என்ன என்று கேட்டவுடன் கிட்டத்தட்ட அனைவருமே சிறிது யோசிக்கத் தொடங்கி விட்டனர். பார்த்தன் என்பது அர்ஜுனன் தெரிகிறது. அவன் எதை விழியினால் காட்டி வரப்போகும் மாண்பினை விளக்கினான் தெரியவில்லையே என்று யோசிக்கின்றனர். ஒரு தமிழறிஞர் சொன்னார், அது கண்ணன் சொன்ன கீதையை அர்ஜுனன் புரிந்து கொண்டதைத் தன் கண்களால் காட்டினான் என்றார். அது சரியாகப் படவில்லை. பிறகுதான் அதன் உட்பொருள் என்ன என்பது புரிந்தது.

மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் தனது மாணவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். எதிரே ஒரு பெரிய மரத்தின் மேல் கிளையில் சில காய்ந்த சருகுகள் ஒரு பறவையின் தோற்றத்தில் காணப்பட்டன. அதில் கண் போன்ற பகுதியை குறிவைத்து அம்பு எய்ய ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவனாகக் கூப்பிட்டு நீ வில்லில் அம்பைப் பூட்டித் தயாராக இருந்து கொள். நான் உன்னைச் சில கேள்விகள் கேட்பேன். அதற்கு நீ விடை அளித்த பின் 'விடு' என்பேன், நீ அம்பைச் செலுத்த வேண்டும் என்றார்.

முதலில் துரியோதனன் வந்தான். குறி பார்த்தான். ஆசிரியர் கேட்டார். நீ இப்போது என்னவெல்லாம் பார்க்கிறாய் என்றார். அவன் சொன்னான், மரம், அதில் கிளை, அதில் காய்ந்த சருகுகள், அதில் கண் போன்ற பகுதி, மரத்தின் எதிரில் நீங்கள் எல்லோரும் என்று. சரி, வேண்டாம், நீ ஒதுங்கிக் கொள் என்று அடுத்து ஒவ்வொருவராக அழைத்துக் குறி பார்க்கச் சொல்ல, அவர்களும் அவனைப் போலவே பதில் சொன்னார்கள். இறுதியில் அர்ஜுனனை அழைத்துக் குறி வைக்கச் சொன்னார். அவனும் அவர் சொன்னபடி செய்தான். அவனிடம் துரோணர் கேள்விகளைக் கேட்டார், அவன் முதல் கேள்விக்கு என் இலக்கு தெரிகிறது என்றான். நன்றாகப் பார், உனக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்றார், அவன் பதில் சொல்லவில்லை. ஆசிரியர் செலுத்து என்றார், அவனும் அம்பைச் செலுத்தினான், அது இலக்கைத் துளைத்தது.

ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால், தனது முழு ஈடுபாட்டையும், கவனத்தையும் அதில் செலுத்திவிட வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும், அப்படிப்பட்ட இளைஞர்களை வா, வா, வா என்று புதிய பாரதம் படைக்க அழைத்தான் பாரதி. பாரதியைப் படிப்போம். மீண்டும் படிப்போம். புதிய பல செய்திகளை அறிவோம். பாரதிக்கு அமுதசுரபி செய்திருக்கும் சேவை அபாரமானது. 'அமுதசுரபி' என் மனதில் உண்டாக்கிய எண்ண அலைகள் இவை. மகாகவி பாரதி அவன் பெயரை வைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்து மாந்தர்கள் அனைவருக்குமே சொந்தம் தானே. என்ன? உங்கள் கருத்துக்களையும் சொல்லலாமே.

Saturday, October 1, 2011

காந்தி ஜெயந்தி விழா


காந்தி ஜெயந்தி விழா
2-10-2011

1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.

மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!