திருவையாறு பாரதி இயக்கம்
ஓர் அறிமுகம்
தமிழ் மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்து மளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!
= மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியாரின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டுமென்ற அவாவின் காரணமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு திருவையாற்றில் ஒரு சில பட்டதாரி இளைஞர்களால் தொடங்கப்பட்டதுதான் "பாரதி இயக்கம்". அந்த சமயம், அதாவது 1977இல் பட்டுக்கோட்டையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அமரர் திரு மு.சந்திரமெளலி அவர்களின் முயற்சியால் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. திரு சந்திரமெளலி செல்லுமிடங்களிலெல்லாம், இளைஞர்களை ஒன்றுதிரட்டி மகாகவி பாரதியின் பெருமைகளையெல்லாம் விளக்கி, அவர் பெயரால் ஓர் இயக்கம் தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவார். அப்படி அவர் தொடங்கிய பல அமைப்புகளில் இன்றும் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கும் இயக்கம்தான் "திருவையாறு பாரதி இயக்கம்". இதன் பெருமையெல்லாம் அந்த பெருந்தகையாளர் திரு சந்திரமெளலியையே சாரும்.
இவ்வியக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம், பாரதியின் எழுத்துக்கள், இலக்கியங்கள், கருத்துக்கள், அவனது எதிர்கால கனவுகள் அனைத்தையும் நனவாக்கிட, அவற்றை மக்களிடம் எடுத்துச் சென்று பாடுபட வேண்டுமென்பது தான். மக்களிடையே ஒரு சாபக்கேடாக நிலைபெற்றுவிட்ட ஜாதி, சமய வேறுபாடுகளைக் களைவது, இளைஞர்களின் உள்ளக்கிடக்கையில் அழுந்திக் கிடக்கும் அவர்களது திறமைகளைப் புரிந்துகொண்டு அவற்றை வெளிக்கொணர்வது, மக்களின் நலனைப் பேணிக்காத்திட பாடுபடுவது, அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இவையெல்லாம் பாரதி இயக்கம் துவக்கப்பட்டதன் தலையாய குறிக்கோள்களாகும். கடந்த 32 ஆண்டுகளாக பாரதி இயக்கம் மேற்சொன்ன குறிக்கோளையடைய சரியான பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதன் கடந்த கால பணிகளைத் திரும்பிப் பார்க்கும்போது, இவற்றை நாம் நிறைவேற்றியிருக்கிறோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
இவை தவிர, நாட்டுக்குழைத்த நல்லோர்களை நினைவுகூர்தல், தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த பெரியோர்களை பாராட்ட விழாக்கள் எடுத்தல், பாரதியின் கருத்துக்களைப் பரப்பும் மலர்களை வெளியிடுதல், உறுப்பினர்களின் படைப்பாற்றலை வளப்படுத்த ஆவன செய்தல் இவைகளும் எமது நோக்கங்களாகும்.
இளைஞர்களும், மாணவர்களும் அரிய நூல்களைப் படிக்க வேண்டும் என்று ஓர் சிறந்த நூலகத்தைத் தொடங்கினோம். ஒவ்வோராண்டும் திருவையாற்றில் நடைபெறும் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதானை விழாவில் ஓர் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தைத் திறந்து பல்லாயிரக்கணக்கான நூல்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து வருகிறோம். சமூகப் பணிகளாக பல ஊர்களில் இலவச மருத்துவ முகாம்களை அமைத்து கிராம மக்களுக்கு மருத்துவச் சேவையைச் செய்து வருகிறோம். சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அதற்காக சைக்கிள் பேரணிகளை அனைத்து கிராமங்களுக்கும் நடத்தி வருகிறோம். அடிக்கடி ரத்ததான முகாம்களை நடத்தி மக்களின் உயிர்காக்கும் பணியில் ஈடுபடுகிறோம். மிகவும் பின் தங்கிய சில கிராமங்களை தத்து எடுத்துக் கொண்டு அங்கெல்லாம் சென்று, கிராம வளர்ச்சிக்கும், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். இவ்வாறு பாரதி இயக்கம் இலக்கிய, சமூகப் பணிகளில் தங்கள் தார்மீகப் பொறுப்பை செய்து வருகிறது.
பாரதி இயக்கம் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறது. இவற்றில் 1997ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த பாரதி இயக்கத்தின் 10ஆம் ஆண்டு "பாரதி விழிப்புணர்வு மாநாடும்", 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் நடந்த "வெள்ளிவிழா மாநாடும்" குறிப்பிடத்தக்கவை. இவற்றில் தமிழகமெங்கணுமிருந்தும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறுகதை மன்னன் த.ஜெயகாந்தன் எங்கள் மாநாடுகளிலெல்லாம் கலந்து கொண்டு எங்களுக்கு வழிகாட்டியாகவும், பக்கபலமாகவும் இருந்திருக்கிறார்.
பாரதி இலக்கியங்களைப் பரப்பிட பாரதி இலக்கியப் பயிலகம் எனும் ஓர் பிரிவு தொடங்கப்பட்டு, அதன் சார்பில் இலக்கிய வகுப்புக்கள், பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு அஞ்சல் வழியில் இலவசமாக அஞ்சல் வழியில் பாரதி பாடங்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பல நூறு மாணவர்கள் படித்துப் பயனடைந்திருக்கிறார்கள். இனி இந்த வலைத்தளத்தில் இலவச அஞ்சல் வழிப் பாடத் திட்டத்தில் அனுப்பப்பட்ட பாடங்கள் சிலவற்றைப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை பாரதி இயக்கத்துக்குத் தெரிவித்து எங்கள் பணியில் பங்கு பெறுங்கள். வணக்கம், நன்றி.
பாரதியார் ப்ராமணர் என்பதாலேயே தமிழ் நாட்டில் புறக்கனிக்கப்படுகிறார்.
ReplyDeleteregards
ram
www.hayyram.blogspot.com
வானில் தெரியும் சூரியனை வெறும் கரங்களால் மறைக்கமுடியாது. பழைமை பேதமைகளை எரிக்கும் தீப்பிழம்பினை வாயால் ஊதி அணைத்திட முடியாது. பாரதியை எந்த காரணம் காட்டியும் யாரும் புறக்கணிக்க முடியாது. அவன் பெயரைச் சொல்லாமல் எவரும் மேடையில் ஏறி பேசமுடியாது. உங்கள் ஆதங்கம் புரிகிறது. காலத்தால் மறக்க முடியாத யுகபுருஷன் பாரதி. நன்றி.
ReplyDeleteசத்தியமான வார்த்தைகள்... "ஆயிரமாயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது"
ReplyDeleteகம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் பெருமைப் பட பாடியவன் மட்டும் அல்ல
அவர்களையும் மிஞ்சி அவர்களின் துணையோடு இந்த மானுட சமூகத்தை வேறு ஒரு
சுந்தர உலகை நோக்கிப் பயணிக்கச் செய்துவிட்டு அவனும், அவன் கவிதைகளில் வாழ்ந்து கொண்டே நம்மோடுப்
பயணிக்கிறான் பாரதி....
பஞ்ச பூதங்கள் எப்படி அனைவருக்கும் பொதுவோ, அப்படி இந்த பாரதியும் அனைவருக்கும் பொது
அவனின் கருத்தை புரிந்து கொள்ளாத அறைவேக்காடுகளைப் பற்றி கவலைப் படத் தேவை இல்லை.
வாழ்க பாரதி இலக்கியப் பயிலகம். வளர்க அதன் ஒப்பில்லாத் தொண்டு. நன்றி.