Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

பாரதியார் கட்டுரைகள் (2)



திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
வழங்கும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம் பாரதியார் கட்டுரைகள் (2)

மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முழு நூலாக வெளியிட்டிருப்பதையும், அதில் ஒரு பகுதியை முந்தைய பாடத்திலும் பார்த்தோம். இந்தப் பாடத்தில் 'பாரதியார் கட்டுரைகள்' நூலிலிருந்து மற்றொரு பகுதியைப் பார்க்கலாம். ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இல்லாவிட்டாலும், இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் சுவையானவை; பல அரிய செய்திகளை உள்ளடக்கியவை. இவை எந்தக் காலத்திலும் படிப்போர்க்கு பயன் தரக்கூடியவை, எனவே படியுங்கள்.

நெல்லிக்காய்க் கதை

நான் சிறு குழந்தையாக இருக்கும்போது, 'ஹிந்துக்களைப் போலே ஒற்றுமைக் குறைவான கூட்டத்தார் உலகத்தில் வேறெந்த தேசத்திலும் இல்லை' யென்றும் 'ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டைக்குச் சமான' மென்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு, உலகத்திலுள்ள வேறு பல தேசங்களின் பூர்வ சரித்திரத்தையும் தற்கால இயல்பையும், பல விதங்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், மேற்படி வார்த்தை தவறு என்று தெரிந்தது. கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே உலகத்திலுள்ள எந்த ராஜ்யத்தைப் பார்த்த போதிலும் அங்கு பணமும் அதிகாரமும் இருக்கும் வரை, மனிதர் பரஸ்பர விரோதங்களையும் பொறாமை களையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு ஒரு விதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள். இருந்தாலும், நாலடியாரில் சொல்லியபடி,

"அட்டுற யார்மாட்டும் நில்லாது
செல்வம் சகடக்கால் போலவரும்."
(முழுப்பாடலும் வருமாறு:
"துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்"

இதன் பொருள்:- குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து ஈட்டிய அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம் போல் - மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறிவரும்.

லக்ஷ்மி தேவி எந்த இடத்திலும் ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும் அதனாலுண்டான பெருமையும், ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவுபடும்போது, உட்பொறாமையும் மாற்சரியமும் வெளிப்பட்டு தலைதூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.


இந்துக்களின் சிறப்பு
ஆனால், இவ்விஷயத்திலேகூட, மற்ற தேசத்தாரைக் காட்டிலும் ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகின்றது. ஏனென்றால் ஹிந்துக்களிடம் தெய்வபக்தி என்ற சிறந்த குணம், மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகமென்பதை மேற்குப் பக்கத்துப் பண்டிதரிலேகூடப் பக்ஷபாதமற்ற பல யோக்கியர் கண்டு பிடித்துச் சொல்லி யிருக்கிறார்கள். தெய்வ பக்தியினால் ஜீவதயை உண்டாகிறது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
யல்லாமல் வெறொன்றறியேன் பராபரமே"

என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார்.

சென்ற கார்த்திகை மாதம், புயற் காற்றடிப்பதைப் பற்றி தென்னாற்காடு ஜில்லாவைச் சோதனை செய்த ஸர்க்கார் அதிகாரியான ஓர் ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில், ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதயை, அதிதி ஸத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்த இரவில் சில வைதிக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடங் கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாளன் ரூபத்துடன் சங்கராசார்யாருக்கு ஸமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக்குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாரக வேதியின் முதுகிலே சுமந்து கொண்டு வந்து தனது கர்வநோயை தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.

"சந்திரனில் ஒரு களங்கம் --
ஆனால் தீர்க்கக் கூடியது."

சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பதுபோல், இப்போது நம்முடைய கூட்டத்தில் ஒரு களங்கமிருக்கிறது. ஆனால் பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக் கொள்ளாது. ஞான சூரியராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிறார்கள். அந்தக் களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பி எல்லோரும் இன்புற வேண்டி குணகர்மங்களால் வர்ண நிச்சயம் செய்து கொண்டு, பூமண்டலத்துக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லோரும் ஹிந்துக்களை கை தூக்கிவிடப் புறப்பட்டிருக்கிறார்கள். பரமாத்மா ஒன்று. அவனுக்கு ரிஷிகள் பல பெயர் சொல்லிப் போற்றுகிறார்களென்று வேதம் சொல்லுகிறது.

"பேரனந்தம் பேசி மறையனந்தஞ் சொலும்
பெரிய மெளனத்தின் வைப்பு"

என்று தாயுமானவர் காட்டினார். ராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றி விட்டது. எனவே கலி நீங்கிவிட்டது.

பலாப்பழம்

நெல்லிக்காய் மூட்டையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. நெல்லிக்காய் கொடுத்தால் எல்லோரும் வாங்கித் தின்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டை போலென்று சொல்வோனைக் கண்டால் எல்லோரும் கைகொட்டிச் சிரிப்பார்கள். இந்த தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப்பழத்தைப் போலாகி விட்டது. இனியென்றும் அழியாத பலாப்பழம். ஒவ்வொரு ஆர்யனும் அதில் முளைத்தவன். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல் தோல், உள்ளே ஞானச்சுளை, நமக்கு அழிவில்லை. நமக்குள்ளே பிரிவில்லை. நாமொன்று. நாம் எப்போதும் தெய்வத்தை நம்புகிறோம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால், நம்முடைய யோக க்ஷேமங்களை தெய்வம் ஆதரிக்குமென்று பகவத்கீதை சொல்லுகிறது.

ராகவ சாஸ்திரியின் கதை

வேதபுரத்தில் தெலுங்குப் பிராமணர்களின் புரோகிதராகிய குப்பு சாஸ்திரி என்பவர் நேற்றுக் காலை என்னைப் பார்க்கும் பொருட்டு வந்தார். நாற்காலியில் உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தார்.

"ஆச்சரியம்! ஆச்சரியம்." என்றார்.

"என்னங்காணும் ஆச்சரியம்!" என்று கேட்டேன். குப்புசாமி சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். "புளியஞ்சாலைக்கு அருகே சத்திரம் இருக்கிறது, தெரியுமா! அங்கே மலையாளத்திலிருந்து ஒரு நம்பூரி பிராமணர் வந்திருக்கிறார். அவருடைய கல்விக்கோர் எல்லையே கிடையாது. நாலு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்திநாலு கலைஞானம் -- ஸகலமும் அவருக்குத் தெரிகிறது" என்றார்.

"இத்தனை விஷயம் அவருக்குத் தெரியுமென்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டேன். குப்பு சாஸ்திரி, "நேற்று நான் சம்பாஷணை செய்து கொண்டிருந்தேன். ஸம்ஸ்கிருதம்தான் பேசுகிறார். கடல்மடை திறந்து விட்டது போல வார்த்தை சொல்லுகிறார். ஸரஸ்வதி அவதாரமென்றே சொல்ல வேண்டும்" என்று அளவில்லாமல் புகழ்ந்தார்.

"அந்த நம்பூரியின் பெயரென்ன?" என்று கேட்டேன். "அவர் பெயர் ராகவ சாஸ்திரி" என்று குப்பு சாஸ்திரி சொன்னார். "அவரை நம்மிடம் அழைத்து வாரும்" என்று சொல்லி அனுப்பினேன்.

இன்று காலையில் மேற்படி ராகவ சாஸ்திரி வந்தார். குப்பு சாஸ்திரிக்கு பக்கத்து கிராமத்தில் ஏதோ விவாகக் கிரியை நடத்தி வைக்கும்படி நேரிட்டிருப்பதால் அவர்கூட வராமல் இந்த ராகவ சாஸ்திரியை என் வீட்டு அடையாளம் சொல்லியனுப்பி விட்டாரென்று பின்னிட்டுத் தெரிந்தது.

ராகவ சாஸ்திரியைப் பார்த்தால் பார்ஸிக்காரரைப் போலேயிருந்தது. காலிலே பூட்ஸ், கால்சட்டை, கோட்டு, நெக்டை, டொப்பி - பாதாதிகேசம் வெள்ளைக்கார உடுப்புப் போட்டிருந்தார். நான் இவரைப் பார்த்தவுடனே 'பார்ஸியோ, யூரேஷியனோ' என்று எண்ணி, "நீ யார்" என்று இங்கிலீஷிலே கேட்டேன். "நான்தான் ராகவ சாஸ்திரி. தாங்கள் என்னைப் பார்க்க விரும்பியதாக குப்பு சாஸ்திரி சொன்னார். தாங்கள்தானே காளிதாசர்?" என்று அவர் கேட்டார். "ஆம்" என்று சொல்லி உட்காரச் சொன்னேன். அவரை ஏற இறங்க மூன்று தரம் பார்த்தேன். என் மனதில் சந்தேகம் ஏற்பட்டது. "நீர் பிராமணனா?" என்று கேட்டேன். "இல்லை" என்றார். "நீர் நம்பூரி பிராமணன் என்று குப்பு சாஸ்திரி சொன்னாரே?" என்றேன்.

அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார், "நான் மலையாளி என்று குப்பு சாஸ்திரியிடம் சொன்னேன். ஸமஸ்கிருதம் பேசுவதிலிருந்து நம்பூரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்று குப்பு சாஸ்த்ிரி தாமாகவே ஊகித்துக் கொண்டார் போலும். நான் ஜாதியில் 'தீயன்'. மலையாளத்தில் தீயரென்றால் தமிழ் நாட்டில் பள்ளர் பறையரைப் போலேயாம். தீயன் சமீபத்தில் வந்தால் பிராமணர் அங்கே ஸ்நானம் செய்து பாவத்தை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்" என்றார்.

இவர் இங்கிலீஷ்காரரைப் போல் உடுப்புப் போட்டிருந்தாலும் இவருக்கு இங்கிலீஷ் பாஷை தடதடவென்று பேச வரவில்லை. எனக்கோ ஸமஸ்கிருதம் பேசத் தெரியாது. பிறர் பேசினால் அர்த்தமாகும். ஆகவே, நான் இங்கிலீஷில் கேட்பது, அவர் ஸமஸ்கிருதத்தில் மறுமொழி சொல்வது என்பதாக உடன்பாடு செய்து கொண்டோம். நெடுநேரம் சம்பாஷணை நடந்தது. அவருடைய பூர்வோத்தரங்களை யெல்லாம் விசாரணை செய்தேன். அவர் என்னிடம் சொல்லிய கதையை இங்கே சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:--

"நான் பிறந்தது கள்ளிக்கோட்டை என்று சொல்லப்படும் கோழிக்கூட்டுக்கு சமீபத்தில் இரண்டு காத தூரத்தில் உள்ள ஒரு கிராமம். என்னுடைய தாயார் நான் பிறந்து நாலைந்து மாதத்திற்குள் இறந்து போய்விட்டாள். தகப்பனார் என்னை இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்தார். நாலைந்து வகுப்பு வரை படித்தேன். எனக்கு இங்கிலீஷ் படிப்பு சரியாக வரவில்லை. அப்போதே எனக்கு மலையாள பாஷையிலே தேர்ச்சி உண்டாயிற்று. பதினைந்து வயதாக இருக்கையில் எனக்கு மலையாளத்தில் ஸ்லோகம் எழுதத் தெரியும். பதினெட்டு வயது வரையில் சும்மா சுற்றிக் கொண்டிருந்தேன். பிறகு தகப்பனாரிடம் சொல்லாமல் காசிக்குப் புறப்பட்டுப் போய் விட்டேன். காசியில் பண்டிதர்கள், "நான் பிராமணன் இல்லை" என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சம்மதப்படவில்லை. அங்கே ஆர்ய ஸமாஜத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு நண்பர் ஆனார்கள். ஆர்ய ஸமாஜத்தார் ஜாதி பேதம் பார்ப்பது கிடையாது. அவர்களுக்குள்ளே உயர்ந்த ஸமஸ்கிருத வித்வான்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் ஐந்தாறு வருஷம் ஸமஸ்கிருதம் படித்தேன். பிறகு பஞ்சாப் நாட்டிற்குப் போய் லாஹோர் பட்டணத்தில் ஆர்ய ஸமாஜ உபதேசியாய்க் சில வருஷங்கள் கழித்தேன். அங்கிருந்து கல்கத்தாவுக்கு வந்தேன். கல்கத்தா ஸர்வகலா சங்கத்தார் முன்பு பரீக்ஷை தேறி, "வியாகரண தீர்த்தன்" என்ற பட்டம் பெற்றேன். இதற்கிடையே மலையாளத்திலிருந்து எனது பிதா இறந்து போய்விட்டார் என்ற செய்தி கிடைத்தது. கொஞ்சம் பூர்வீக சொத்து உண்டு. அதைப் பிறர் கைக்கொள்ளாதபடி பார்க்கும் பொருட்டு, மலையாளத்துக்கு வந்தேன். இப்போது சில வருஷங்களாக கோழிக்கூட்டிலேதான் வாஸம் செய்து வருகிறேன். எனக்கு சாஸ்திரி பட்டம் பஞ்சாபிலே கிடைத்தது" என்றார்.

"இங்கு எதற்காக வந்தீர்?" என்று கேட்டேன். அதற்கு ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்.

"எனக்கு விவாஹம் ஆகவில்லை. வேறு பந்துக்களும் இல்லையாதலால் எவ்விதமான குடும்ப பாரமும் கிடையாது. போஜனத்திற்கு பூர்வீக சொத்திருக்கிறது. ஆதலால், என் காலத்தை தேசத்துக்காக உழைப்பதிலே செலவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிருக்கிறது. தேசத்துக்கு எவ்விதமான கைங்கர்யம் பண்ணலாம் என்பதைத் தங்களிடம் கேட்டுக்கொண்டு போகலாம் என்ற நோக்கத்துடன் இந்த ஊருக்கு வந்தேன்" என்று சொன்னார்.

"எனக்குத் தெரியாது. நீர் உலகத்துக்கு என்ன விதத்திலே உபகாரம் பண்ண முடியுமென்பது உம்முடைய கால தேச வர்த்தமானங்களையும், உம்முடைய திறமையையும் பொறுத்த விஷயம்" என்றேன்.

"ஜாதி பேதம் கூடாது. அதற்கு நமது பூர்வ சாஸ்திரங்களில் ஆதாரமில்லை. ஆணும் பெண்ணும் ஸமானம், யாரும் யாரையும் அடிமையாக நடத்தக் கூடாது. இன்று நாம் பிறரை அடிமையாக நடத்தினால் நாளை நம்மையேனும் நம்முடைய மக்களையேனும் பிறர் அடிமையாக நடத்துவார்கள். ஹிந்துக்கள் சட்டத்தை உடைக்காமல், இரவிலும், பகலிலும், விழிப்பிலும், தூக்கத்திலும், கனவிலும் எப்போதும், ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபட வேண்டும். விடுதலை யில்லாதவர்கள் எப்போதும் துன்பப்படுவார்கள். இதுபோன்ற விஷயங்களை ஊரூராகப் போய் உபந்யாஸம் செய்தாலென்ன? தாங்கள் உத்தரவு கொடுத்தால் நான் இந்தக் காரியம் செய்யக் காத்திருக்கிறேன்" என்று ராகவ சாஸ்திரி சொன்னார். இப்படி இவர் பேசிக் கொண்டிருக்கும்போது, நம்முடைய சிநேகிதர் வேதாந்த சிரோமணி ராமராயர் வந்து சேர்ந்தார். அவரிடம் இந்த மலையாளியின் பூர்வோத்தரங்களையும் இவர் என்னிடம் கேட்கும் கேள்வியையும் சொன்னேன். ராமராயர் ஸந்தேகமே அவதாரம். இவர் இந்த மலையாளியின் உடுப்பையும், இவர் கேள்வியையும் பார்த்து ஏதோ மனதில் ஐயங்கொண்டு பின் வருமாறு சொல்லத் தொடங்கினார்:-

"ஓய் மலையாளி, 'காளிதாஸர்' இஹலோக தந்திரங்களில் புத்தி செலுத்துவது கிடையாது. 'சக்தி, சக்தி' என்று ஒருவன் ஜபம் பண்ணிக் கொண்டிருந்தால், அவன் எல்லா விதமான பந்தங்களினின்றும் விடுபட்டு ஜீவன் முக்தியடைவான் என்ற தர்மத்தையே அவர் இடைவிடாமல் சொல்லிக் கொண்டு வருகிறார். இந்த தர்மம் ஹிந்துக்களுக்கு மாத்திரமன்று; அமெரிக்கா தேசத்தார் எல்லோருக்கும் நல்லது. சக்தி உபாஸனையினாலே காளிதாஸன் மஹாகவியானான். சக்தி உபாஸனையாலே விக்கிரமாதித்தன் மாறாத புகழ் பெற்றான். இதைத்தான் இவர் சொல்லுவார். சுதேசிய விஷயமாக எப்படி உழைக்கலாம் என்பதை நீர் தெரிந்து கொள்ள வேண்டுமானால், சென்னைப் பட்டணத்திலும், வடநாட்டு நகரங்களிலும் புகழ்பெற்ற ஜனத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவரிடத்திலே போய் கேட்டுத் தெரிந்து கொள்ளும்" என்று ராமராயர் சொன்னார்.

இங்ஙனம் ராமராயர் சொல்லியதில் அந்த ராகவ சாஸ்திரி திருப்தி அடையாமல் மறுபடி என்னை நொக்கி, "எனக்கு என்ன உத்தரவு செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு நான்:-

"கேளீர், ராகவ சாஸ்திரியாரே! சட்டத்திற்கு விரோதமில்லாமல் நீர் சுதேசியம் பேசுவதிலும், மற்றபடி ஸமத்வம், விடுதலை முதலிய தர்மங்களை ஹிந்துக்களுக்குப் புகட்டுவதிலும் எனக்கு யாதொரு ஆக்ஷேபம் கிடையாது. ஆனால் நான் இப்போது கைக்கொண்டிருக்கும் தர்மத்தை உம்மிடம் சொல்லி விடுகிறேன். ஸம்மதமுண்டானால் அதை இந்தியாவில் மாத்திரமன்று, பூமண்டல முழுவதும் சென்று முரசு அடிக்கக் கடவீர். அந்த தர்மம் யாதெனில், "மானிடரே! நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி உலகம் நடக்கிறது. 'தெய்வமே சரண்' என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது நிச்சயமாகப் பயன்பெறும். மனிதன் தன் உள்ளத்தைத் தெய்வத்துக்குப் பலியாகக் கொடுத்துவிட வேண்டும், அதுவே யாகம். அந்த யாகத்தை நடத்துவோருக்குத் தெய்வம், வலிமை, விடுதலை, செல்வம், ஆயுள், புகழ் முதலிய எல்லா விதமான மேன்மைகளும் கொடுக்கும். இந்தக் கொள்கை நமது பகவத் கீதையில் சொல்லப்படுகிறது. இதனை அறிந்தால், பயமில்லை. ஹிந்துக்களுக்குத்தான் இவ்விதமான தெய்வபக்தி சுபாவம். ஆதலால் ஹிந்துக்கள் தெய்வத்தை நம்பி எப்போதும் நியாயத்தைப் பயமில்லாமல் செய்து மேன்மை பெற்று மற்ற தேசத்தாரையும் கை தூக்கிவிட்டாலொழிய இந்தப் பூமண்டலத்துக்கு நன்மை ஏற்படாது. உலகத்தார் அகங்காரம் என்ற அசுரனுக்கு வசப்பட்டு சகல தேசங்களிலும் நரக துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அகங்காரத்தை வெட்டி எறிந்து விட்டால் மனித ஜாதி அமரநிலையடையும். தன்னை மற. தெய்வத்தை நம்பு. உண்மை பேசு. நியாயத்தை எப்போதும் செய். எல்லா இன்பங்களையும் பெறுவாய். இப்போது பழைய யுகம் மாறிப் புதிய யுகம் தோன்றப்போகிறது. அந்தப் புதிய யுகம் தெய்வ பக்தியையே மூலாதாரமாகக் கொண்டு நடைபெறப் போகிறது. ஆதலால் அதில் ஹிந்துக்கள் தலைமை பெறுவார்கள். இது ஸத்தியம். இதை எட்டுத் திசைகளிலும் முரசு கொண்டடியும். இதுவே யான் சொல்லக்கூடிய விஷயம்" என்றேன்.

பிறகு, நான் சில வார்த்தைகள் பேசிய பிறகு ராகவ சாஸ்திரி விடை பெற்றுக் கொண்டு போகுந் தருணத்தில் ராமராயர் அவரை நோக்கி:-

"முதலாவது, இந்த உடுப்பை மாற்றி ஹிந்துக்களைப் போலே உடுப்புப் போட்டுக் கொள்ளும். அதுவே ஆரம்பத் திருத்தம். கல்கத்தாவில் 'அமுர்த பஜார்' பத்திரிகையின் ஆசிரியராகிய ஸ்ரீமான் மோதிலால் கோஷ் அங்கே கவர்னராக இருந்த லார்ட் கார்மைக்கேல் என்பவரைப் பார்க்கப் போயிருந்தாராம். உஷ்ண காலத்தில் சீமை உடுப்பைப் போட்டுக் கொண்டு லார்ட் கார்மைக்கேல் வியர்த்துக் கொட்டுகிற ஸ்திதியில் இருந்தாராம்.அப்போது மோதிலால் கோஷ் கவர்னரை நோக்கி, "இந்தியாவில் இருக்கும்வரை எங்களைப் போலே உடுப்புப் போட்டுக் கொண்டால் இத்தனை கஷ்டம் இராது" என்று சொன்னாராம். அதற்கு லார்ட் கார்மைக்கேல், "நீர் சொல்லுவது சரிதான். எங்களுடைய மூடத்தனத்தாலே அவ்வாறு செய்யாமலிருக்கிறோம்" என்று மறுமொழி சொன்னாராம். அப்படியிருக்க நம்மவர் நம் தேசத்தில் சீமை உடையுடுப்பு மாட்டுவது எவ்வளவு மூடத்தனம் பார்த்தீரா?" என்று சொன்னார். "இனிமேல் சுதேசி உடுப்புப் போட்டுக் கொள்கிறேன்" என்று ராகவ சாஸ்திரி சமஸ்கிருத பாஷையிலே சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்.

மலையாளம் (1)

மலையாளத்து ராகவ சாஸ்திரி என்பவர் நேற்று சாயங்காலம் மறுபடி என்னைப் பார்க்க வந்தார். நான் மெளனவிரதம் பூண்டிருந்தேன். பிரமராய அய்யரும் 'பெண்-விடுதலை' வேதவல்லியம்மையும் ஏற்கனவே வந்திருந்தார்கள். மேனிலை முற்றத்தில் நல்ல தென்றல் காற்று வந்தது. அங்குபோய் உட்கார்ந்து கொண்டோம். அவர்கள் பேசினார்கள். நான் வாயைத் திறக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பிரமராய அய்யர் ராகவ சாஸ்திரியை நோக்கி 'மலையாளத்திலிருப்போர் இந்தப் பக்கத்தாரைக் காட்டிலும் நல்ல சிகப்பு நிறமாக இருக்கிறார்களே, காரணமென்ன?' என்று கேட்டார். 'குளிர்ச்சியான பூமி' என்று வேதவல்லியம்மை சொன்னாள். கமுக மரத்தில் வெற்றிலைக் கொடிகள் படர்ந்திருக்குமென்றும், எங்கே பார்த்தாலும் ஏலக்காய் சிதறிக் கிடக்குமென்றும், பல வகைகளிலே மலையாளத்து நிலவளத்தைப் புகழ்ந்து சில சுலோகங்கள் சொல்லி அவற்றை ராகவ சாஸ்திரி கொச்சை இங்கிலீஷில் மொழிபெயர்த்துச் சொன்னார். வேதவல்லியம்மைக்கும் பிரமராயருக்கும் கொஞ்சம் ஸமஸ்கிருதம் தெரியும்; என்றாலும் செளகரியத்தின் பொருட்டு எல்லோரும் இங்கிலீஷ் பாஷையிலே ஸம்பாஷணை செய்யத் தொடங்கினார்கள்.

'பூமி மிகவும் செழிப்பாகவும், அழகாகவும் இருக்கிறது. மலையாளத்தின் மனிதர் மாத்திரம் மூடர்' என்று வேதவல்லி சொன்னாள்.

'மூடர் மலையாளத்தில் மாத்திரமா? இந்தியாவில் எங்கும்தான் நிரம்பிக் கிடக்கிறார்கள்' என்றார் ராகவ சாஸ்திரி.

'இருந்தாலும் சராசரிக் கணக்கு போட்டுப் பார்த்தால் மலையாளத்தில் மூடர் தொகை கொஞ்சம் அதிகம். விவேகானந்தர் மலையாளத்தைப் பற்றி எவ்வளவு கோபத்துடன் பேசுகிறார்?"

"நூறு கஜமுள்ள ஒரு பாலத்தின் இந்த ஓரத்தை ஒரு தீயன் தொட்டால் அந்த ஓரத்திலுள்ள நம்பூரி பிராமணனுக்குத் தீண்டல் வந்து விடுகிறதாம்; மூடநம்பிக்கை அங்கே மிகவும் அதிகம்" என்று பிரமராய அய்யர் மறுபடி வற்புறுத்திச் சொன்னார்.

அப்போது ராகவ சாஸ்திரி:- "அதெல்லாம் பண்டைக் காலத்தில். இப்போது மலையாளத்து நாயர்களும் தீயர்களும் பழைய வழக்கங்களை மாற்றுவதற்குப் பெரிய முயற்சிகள் செய்து வருகிறார்கள்."

"ஆமாம் ஐயா! நான்கூடக் கேள்விப்பட்டேன். தீயர்களுக்குச் சிவாலயங்கள் கட்டிக் கொடுத்து அவர்களை மற்ற ஹிந்துக்களைப் போலவே செய்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஸ்ரீ நாராயணஸ்வாமி என்ற ஸந்யாஸி ஒருவர் பாடுபடுகிறதாகவும், படிப்பு, ஒற்றுமை முதலிய நற்குணங்களில் தேர்ச்சி பெறும் பொருட்டு மலையாள முழுவதும் பல இடங்களில் தீயர் ஸமாஜங்கள் ஏற்பட்டிருக்கிறதாகவும் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். அந்த நாராயணஸ்வாமியின் வரலாறு என்ன? கொஞ்சம் சொல்லும்" என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:-

ஸ்ரீ நாராயணஸ்வாமி என்பவர் தீயர் ஜாதியில் பிறந்து பெரிய யோகியாய் மலையிலே தவஞ்செய்து கொண்டிருந்தார். அப்போது பல தீயர் அவரிடம் போய் "ஸ்வாமி, தங்களை மலையாளத்து மஹாராஜாகூட மிகவும் கெளரவப்படுத்தும்படி அத்தனை மேன்மையான நிலைமையிலே இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை இதர ஜாதியார் மிகவும் தாழ்ந்த நிலைமையிலே வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குப் போனால் மற்ற ஜாதியார் எங்களை வெளிப்புறத்திலே நிறுத்துகிறார்கள். நேரே ஸ்வாமி தரிசனம் பண்ண வழியில்லை. எங்களுக்கு ஒரு புகல் சொல்லக்கூடாதா?" என்று கேட்டார்கள். அப்போது நாராயணஸ்வாமி சொல்லுகிறார்.

"கேளீர், ஸகோதரர்களே! கோயில் கட்டுவதற்கு நம்பூரிப் பிராமணர் தயவு வேண்டியதில்லை. கல் வேலை தெரிந்த கல்தச்சர் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் கோயில் கட்டிக் கொடுப்பார்கள். ஆதலால், நீங்கள் இந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டாம். பணம் சேர்த்துக் கொண்டு வாருங்கள். எத்தனை கோயில் வேண்டுமானாலும் கட்டலாம். நான் ப்ரதிஷ்டை பண்ணிக் கொடுக்கிறேன்" என்றார். இதைக் கேட்டவுடனே தீயர்கள் தமக்குள்ளிருந்த பணக்காரரிடம் தொகை சேர்க்கத் தொடங்கினார்கள். காலக்கிரமத்தில் பெரிய தொகை சேர்ந்தது. இப்போது பல இடங்களில் மேற்படி ஸ்ரீ நாராயணஸ்வாமி ஆலயப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்" என்று சாஸ்திரி சொன்னார்.

"இவர் கோயில்கள் கட்டினதைப் பற்றி இதர ஜாதியார் வருத்தப்பட வில்லையா?" என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

"ஆம். அவர்களுக்குக் கோபம்தான்; ஒருநாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கை சிறுவிரலை நீட்டிக் கொண்டு "பெயரென்ன?" என்று கேட்டார்.

"என் பெயர் நாணு என்று ஜனங்கள் சொல்லுவார்கள்" என்று நாராயணஸ்வாமி சொன்னார்.

"தீயர்களுக்குக் கோயில் கட்டிக் கொடுக்கும் ஸந்யாஸி நீர்தானோ?" என்று நம்பூரி கேட்டார்.

"ஆம்" என்று ஸ்வாமி சொன்னார். "பிராமணர் பிரதிஷ்டை செய்து பூஜிக்க வேண்டிய தெய்வத்தை நீர் பிரதிஷ்டை செய்யும்படி உமக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?' என்று நம்பூரி கேட்டார்.

அதற்கு நாராயணஸ்வாமி, "பிராமணர்களுடைய சிவனை நான் பிரதிஷ்டை செய்யவில்லை. நான் பிரதிஷ்டை செய்தது தீயர்களுடைய சிவன். இதில் தாங்கள் வருத்தப்பட வேண்டாம். தங்களுடைய சிவன் வழிக்கே நாங்கள் வரவில்லை" என்றார்.

இவ்வாறு ராகவ சாஸ்திரி மேற்படி நாராயணஸ்வாமியைக் குறித்துப் பல கதைகள் சொன்னார். பிறகு மலையாள பாஷையின் ஆதிகவியாகிய துஞ்சத்து எழுத்தச்சன் என்பவரைப் பற்றி கொஞ்சம் வார்த்தை நடந்தது. எழுத்தச்சன் என்றால் எழுத்தின் அச்சன் (தந்தை) என்று பொருள். அந்த எழுத்தச்சன் எத்தனையாவது நூற்றாண்டிலிருந்தான் என்ற கால நிர்ணயம் ராகவ சாஸ்திரிக்குத் தெரியவில்லை. இவர் பிறந்த கிராமத்தின் பெயர் ஏதோ சொன்னார்; அது எனக்கு மறந்து விட்டது. இக்காலத்திலேகூட அந்தக் கிராமத்துக்குப் பக்கத்து நாட்டுப் புறங்களிலே எங்கேனும் ஓரிடத்தில் பிள்ளைகளுக்கு அக்ஷராப்யாஸம் பண்ணி வைத்தால் அதற்கு அந்தக் கிராமத்திலிருந்து மண் எடுத்துக் கொண்டு வந்து அக்ஷரம் படிக்கும் சிறுவனுக்குக் கொஞ்சம் கரைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு என்று மேற்படி சாஸ்திரியார் சொன்னார். துஞ்சத்து எழுத்தச்சன் செய்த ராமாயணத்திலிருந்தும் சில சுலோகங்களை எடுத்துச் சொல்லிப் பொருள் விளக்கினார். அதன் நடை பழைய தமிழ்; கொச்சையில்லாத சுத்தமான ஸம்ஸ்கிருதச் சொற்களையும் தொடர்களையும் யதேஷ்டமாகச் சேர்த்துச் சொல்லைப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழ் காதுக்கு மிகவும் ஹிதமாகத் தானிருக்கிறது. துஞ்சத்து எழுத்தச்சன் வாணிய ஜாதியைச் சேர்ந்தவராம். இவர் தமிழ் நாட்டிலே போய் கல்வி பயின்றவராம். இவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷயமாகப் பக்திப் பாட்டுகள் பல பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பாட்டுக்களை மலையாள ஸ்திரீகள் பாடும் போது கேட்டால் மிகவும் இன்பமாக இருக்குமென்று ராகவ சாஸ்திரி சொன்னார். அவரே மாதிரி கொஞ்சம் பாடிக் காட்டினார்:-

"கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்கேணும்
விண்ணோர் புகழ்ந்த நாயிகே, மாயிகே, நீ"

என்று அந்தப் பாட்டின் முதற்கண்ணி சொன்னார். அதாவது "கண்ணனை எங்களுக்குக் காந்தனாய் நல்க வேண்டும்; விண்ணோர் புகழும் நாயிகே" என்றவாறு. 'நாயிகே' என்பது வடசொல். "நாயகியே என்பது பொருள்." மாயிகே என்றால் ஹே மாயாதேவி என்று அர்த்தம். இது பராசக்தியை நோக்கி கோபிகள் தமக்கு கண்ணனைத் தரும்படி வேண்டிய பாட்டு.

இங்ஙனம் அவர்கள் நெடுநேரம் ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள்.

பிரமராய அய்யர் கடைசியாக "ஹிந்து தேசமாகிய ரத்ன மலையில் மலையாளம் ஸாமான்ய ரத்னமன்று" என்றார்.

பிறகு வேதவல்லியம்மை அச்சிகளைப் பற்றி பல கேள்விகள் கேட்டார். ஏற்கனவே, ஐரோப்பிய ஸ்திரீகளுக்கு உள்ள விடுதலை (நாயர் ஸ்திரீகளாகிய) அச்சிகளுக்கு உண்டென்று வெளிப்பட்டது. வேதவல்லியம்மைக்கு சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. பிரமராயர் பெருமூச்சு விட்டார். உடனே பிரமராய அய்யருக்கும் வேதவல்லிக்கும் சண்டை உண்டாயிற்று. இந்த வியாஸம் ஏற்கனவே நீண்டு போய்விட்ட படியால், மேற்படி பிரமராயர் வேதவல்லி யுத்தக் கதையை ஸெளகரியப்பட்டால் மற்றொரு முறை எழுதுகிறேன்.

மலையாளம் (2)

அந்த ராகவ சாஸ்திரி இன்னும் ஊருக்குப் போகவில்லை. வேதபுரத்தில்தான் இருக்கிறார். இன்று காலையில் வந்தார். நான் தனியே இருந்தேன். வேறு யாருமில்லை. எங்களுக்குள்ளேயே பேச்சு நடந்தது. மிகவும் நீண்ட கதை. அவர் ஆறுமணி நேரஞ் சொன்னார். எனக்கு ஞாபகமிருக்கிற பாகத்தைச் சுருக்கமாக எழுதுகிறேன்.

நான் கேட்டேன், "சாஸ்திரியாரே, அந்த தீயர் ஸமாஜத்தின் பெயரென்ன?"

சாஸ்திரியார், "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்".

"யோகம் என்றால் சபை என்று அர்த்தமா?"

சாஸ்திரி, "ஆம்."

"அந்த சபை அங்கே, மலையாளத்தில் அதிகமாய் பரவியிருக்கிறதோ?" என்று நான் கேட்டேன்.

சாஸ்திரி, "ஆம், அதில் ஸ்திரீகளினுடைய யோகம் என்ற பகுதி ஒன்றிருக்கிறது."

"ஓஹோ! புருஷர் ஸமாஜத்தைப் பற்றி முதலாவது பேசுவோம்" என்றேன்.

ராகவ சாஸ்திரி தொடங்கினார். ராகவ சாஸ்திரி சொல்லியது என்னவென்றால்:--

மேற்படி ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்துக்கு வட மலையாளத்தில், கண்ணனூர், மாஹி, கோழிக்கூடு முதலிய இடங்களிலும் தென் மலையாளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் முதலிய இடங்களிலும் கொச்சி ராஜ்யத்திலும், மங்களூரிலும், மலையாள தேசம் முழுதிலுமுள்ள முக்கிய ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் கிளைச் சபைகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னைப் பட்டணத்தில் ஒரு கிளை இருக்கிறது. இந்த வருஷத்துப் பெருங் கூட்டம் சில மாதங்களின் முன்பு திருவாங்கூரில் உள்ள ஆலுவாய் என்ற ஊரிலே நடந்தது. அப்போது பாலக்காட்டிலுள்ள விக்டோரியா காலேஜ் முதல் வாத்தியாராகிய ஸ்ரீமான் பி.சங்குண்ணி அக்ராஸனம் வகித்தார். இப்போது அவர் செய்த பிரசங்கத்தில் சில குறிப்பான வார்த்தைகள் சொன்னார். அவையாவன:-

நாம் பயப்படக்கூடாது. மனம் தளரக்கூடாது. மேற்குலத்தார் நம்மை எத்தனை விதங்களில் எதிர்த்த போதிலும் நாம் அவர்களைக் கவனியாமல் இருந்துவிட வேண்டும். எனக்குப் பாலக்காட்டில் அடிக்கடி கையெழுத்துச் சரியில்லாத மொட்டைக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கடிதங்களில் நான் காலேஜ் வாத்தியாராய் வேலையில் இருக்கக் கூடாதென்றும், அது பிராமணர் செய்ய வேண்டிய தொழில் என்றும், எனது முன்னோர் செய்த தொழில்களாகிய உழவு, விறகு வெட்டுதல், பனையேறுதல் முதலியவுமே நான் செய்யத்தக்க தொழில்களென்றும் பாலக்காட்டுப் பிராமணர் சொல்லுவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் கவனியாததுபோலே இருந்துவிட வேண்டும். நாம் கீழ் ஜாதி என்ற நினைப்பே கூடாது. எவன் தன்னை எப்படி நினைத்துக் கொள்கிறானோ, அவன் அப்படியே ஆய்விடுகிறான். நாம் மேல் ஜாதியாரை வெல்ல வேண்டுமானால், மேன்மைக் குணங்கள் பழகிக் கொள்ள வேண்டும். படிப்பினால் மேன்மையடையலாம். இங்ஙனம் ஸ்ரீமான் சங்குண்ணி தீயருக்கு நல்ல நல்ல உபதேசங்கள் செய்தார்.

ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பெண்களின் கூட்டம் இவ்வருஷத்தில் ஆலுவாயில் நடந்தது. ஆண்களின் கூட்டம் கழிந்த பிறகு, பெண் கூட்டம் நடத்தினார்கள். இதில் திருவாங்கூரின் திவானாகிய ஸ்ரீமான் கிருஷ்ணன் நாயர் அக்ராஸனம் வகித்தார். இந்த ஆலுவாயில் ஒரு நதி ஓடுகிறது. அதன் ஜலம் மிகவும் ரமணீயமானது. வஸந்த காலத்தில் அவ்வூர் வாஸத்துக்கு மிகவும் இன்பமென்று கருதி வடநாட்டிலிருந்து கூட அநேகர் அங்கே வந்து வாஸம் செய்கிறார்கள். ஆலுவாயில் தீயர் யோகத்தின் பெண் கிளைக்கூட்டம் நடந்தபோது அங்கே கெளரியம்மை என்ற தீயர் ஜாதிப்பெண் வந்து இங்கிலீஷ் பேசினாள். இவள் பி.ஏ. பரீக்ஷையில் தேறினவள். இவளுடைய பேச்சை எல்லாரும் வியந்தார்கள். தீயர் முன்னுக்கு வந்து மேன்மைபெற முயற்சி செய்வதில் திவான் கிருஷ்ணன் நாயர் மிகுந்து அனுதாபம் காட்டி வருகிறார்.

"தீயர் கள்ளிறக்கும் ஜாதியார் அன்றோ? தீயருக்கு ஈழுவர் என்ற பெயர் அன்றோ, நமது தமிழ்நாட்டுச் சாணாரைப்போலே?" என்று கேட்டேன்.

ராகவ சாஸ்திரி சொல்லுகிறார், "ஆம்! சாணாரைப் போல் கள்ளிறக்கும் தொழில் உண்டு. சங்குண்ணி சொல்லியது போலே விறகு விட்டுதல், உழுதல் மற்றும் வைத்தியம் செய்தல், மந்திரவாதம் செய்தல், இவையெல்லாம் பண்டு தீயர் தொழிலாக இருந்தன. இப்போது தீயர்களில் வக்கீல்கள், உத்தியோகஸ்தர், வாத்தியார், உயர்ந்த தொழில் செய்வோர் இருக்கிறார்கள்."

நம்பூரிகளும் தீயரும்

"நம்பூரிகள் மிகவும் வைதீகமாயிற்றே! அவர்களிடத்தில் தற்காலத்துப் புதிய தீயர் எவ்விதமான எண்ணம் வைத்து நடக்கிறார்கள்?" என்று கேட்டேன்.

"பகை" என்று ராகவ சாஸ்திரி சொன்னார். "காரணமென்ன?" என்றேன்.

புதிய தீயர் இப்போது நம்பூரிகளைப் பகைப்பது மாத்திரமேயல்லாது, எப்போதுமே நம்பூரிகளைத் தீயர் பகைத்து வந்ததாகச் சொல்லி வருகிறார்கள். ஆலுவாயில் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஒரு ஸம்ஸ்கிருத பள்ளிக்கூடம் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார். நிறையப் பணம் சேர்ந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்கும் ஸமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. ஒரு மகம்மதியப் பிள்ளைகூட அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசித்து வருகிறான். இங்ஙனம் பல வகைகளிலே தீயர் மேன்மை பெற முயல்வதில் நம்பூரிகளுக்குச் சம்மதமில்லை. அதனால் நம்பூரிகளிடம் தீயருக்குப் பகை உண்டாகிறது. இயற்கை தானே? செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா?

"பிராமணராக நம்பூரிகள் பரசுராமனால் செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பு மீன் பிடிக்கும் செம்படவராக இருந்தனரென்றும் தீயர்கள் நம்பி வருகிறார்கள். மலையாள பூமி செழித்துப் போய் காடுபட்டுக் கிடந்ததை பரசுராமன் நாடாகத் திருத்திய போது, அங்கு வந்து குடிபோகும்படி கர்நாடகத்திலிருந்தும், சோழ நாட்டிலிருந்தும் பிராமணர்களைக் கூப்பிட்டார். இந்தப் பார்ப்பார் அங்கே போய் குடியேறச் சம்மதப்படவில்லை. எனவே பரசுராமன் கோபம் கொண்டு தென் கன்னடக் கரையிலிருந்த செம்படவரைப் பிராமணராகச் செய்து குடியேற்றினார். நம்பூரிகள் விவாக சமயங்களில் குளம், நதி ஏதேனும் நீர் நிலைக்குப் போய் வலைபோடுவது போலே அபிநயிக்கும் பொய்ச் சடங்கொன்று நடத்தி வந்தார்கள். இப்போது நம்பூரிகளும் நாகரீகப்பட்டு வருகிறபடியால் வீட்டிலேயே ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் வாழை இலையைத் துண்டு துண்டாக மீன் ஸ்தானத்தில் போட்டு வைத்து, அதன் மேலே வலைபோடுவதுபோல் துணி போட்டு அபிநயித்து வருகிறார்கள். மேற்படி பரசுராமன் கதை பொய்க் கதை என்பதே என்னுடைய அபிப்பிராயம். இக்காலத்து நம்பூரிகள் விவாக சமயங்களில் மீன் பிடிக்கும் நடங்கு நடத்துவதற்கு வேறேதேனும் மூலமிருந்தாலும் இருக்கலாம். நான் அக்கதையை ஏன் சொன்னேன் என்றால், இக்காலத்துத் தீயர்களுக்கு நம்பூரிகளித்தில் எத்தனை பெரும்பகை இருக்கிறதென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேனே யொழிய வேறொன்றுமில்லை."

"ஆதிமுதல் தீயருக்கும் பிராமணருக்கும் சண்டை உண்டு. தீயர் மற்ற ஹிந்துக்களைப்போலே மக்கள்தாயத்தை அனுசரிக்கிறார்கள். மருமக்கள்-தாயம்* நாயருக்குள்ளே இருப்பதுபோல் தீயருக்குள் இல்லை. பிராமணர் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் செய்வது போலே தீயருடன் செய்து கொள்ள இடமில்லை. தீயர் அதனை விரும்பவில்லை. இதுவே நம்பூரிகளுடன் பகைகைக்கு மூலம்."

(நமது குறிப்பு:- மருமக்கள்-தாயம் என்பது நாஞ்சில் நாடு என வழங்கும் திருவாங்கூர் சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த வேளார் குலத்தாரிடையே ஓர் விசித்திரமான வழக்கம் இருந்து வந்தது. அங்கு சொத்தின் உரிமை உற்ற மனைவிக்கோ அல்லது பெற்ற மக்களுக்கோ கிடையாது, மாறாக சகோதரியின் மக்களுக்குப் போய்ச்சேர்ந்தது. இந்த வழக்கத்தின் காரணமாகப் பல வாழ்ந்த குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. இந்த மோசமான சமூக சீர்கேட்டை ஒழித்திடும் நோக்கத்தோடு நாஞ்சில் நாடு மருமக்கள்-தாயம் சீர்திருத்த மசோதா கொல்லம் ஆண்டு 1101ல் அதாவது கி.பி.1926ல் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் வருவதற்குக் காரணமாக இருந்தது "தமிழன்" எனும் பத்திரிகையில் 1917 முதல் 1918 வரை எழுதி வெளியான "மருமக்கள் வழி மான்மியம்" எனும் கவிதைத் தொகுதியாகும். இது ஏதோ பழைய ஏட்டுச் சுவடியிலிருந்து எடுத்து வெளியிட்டதுபோன்ற தோற்றத்தை உருவாக்கப்பட்டதே தவிர உண்மையில் இதனை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாவார். இந்த "மருமக்கள் வழி மான்மியம்" மிக சுவாரசியமானது. இது சமுதாயத்தில் ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெருமைக்குரியது. வாய்ப்பு கிடைத்தால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதை நூலில் இந்த இலக்கியத்தைப் படித்து மகிழ்வதோடு, இந்த மருமக்கள்-தாயம் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்)

"நம்பூரிகளிலே பலர், பரசுராமன் மலையாளத்து பூமியைத் தங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள். அவர்கள் பெரிய ஜாகீர்தார்களாகவும், மிராசுதாரர் களாகவும் இருக்கிறார்கள். 'ஜன்மி'கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். 'ஜன்மி' என்றால் ஜன்மபாத்யதை உடையவர்களென்று அர்த்தம்."

"நம்பூரிகளெல்லாம் நல்ல சிவப்பு நிறம்; மிகவும் அழகாக இருக்கிறார்கள். பொதுவாகவே மலையாளத்தார் தமிழரைக் காட்டிலும், தெலுங்கரைக் காட்டிலும் அதிக சிவப்பு நிறமுடையவர்கள். குஜராத்தியரை மாத்திரமே, நிற விஷயத்தில், தக்ஷிணத்தில் மலையாளிக்குச் சமமாகச் சொல்லலாம். அதிலும், நம்பூரிகள் நல்ல சிவப்பு. ஆனால் நாகரீக ஜனங்களில்லை. நம்பூரிக்கும் நாகரீகத்துக்கும் வெகு தூரம்."

"நம்பூரிக்குள்ளே ஜாதிப் பிரிவுகள் உண்டு. இந்தியாவில் ஜாதி வித்யாசத்திலே ஒரு விநோதம் என்னவென்றால், எந்த மூலையிலே போய் எந்த ஜாதியை எடுத்துப் பார்த்தாலும் அதற்குள் நாலு உட்கிளையில்லாமல் இருப்பதில்லை. நம்பூரிகளுக்குள்ளே ஸம்ஸ்கிருதப் படிப்பும் வேத பாடமும் இப்போதும் அழிந்து போகவில்லை. திருஷ்டாந்தமாக தாழைக் காட்டுமனை என்ற இல்லத்து நம்பூரிகள் வேதப் படிப்பில் கீர்த்தி பெற்றவர்கள்; அவர்களிடம் பணமும் அதிகம். பிராயசித்தம் முதலிய வைதீக கிரியைகளிலே முடிவான தீர்மானங்கள் கேட்க வேண்டுமானால், ஜனங்கள் அந்த இல்லத்தாரிடத்திலே கேட்கிறார்கள்."

இங்ஙனம் மேற்படி ராகவ சாஸ்திரி சொல்லி வருகையில், நான் 'ஜன்மி'களாகி ஜமீன்தார்களாகவும் வித்வான்களாகவும் குடும்பத்தார் இருப்பது விசேஷம்தான்" என்று சொன்னேன். அதற்கு ராகவ சாஸ்திரி, "வேதத்துக்குப் பொருள் தெரிந்து படிக்கும் நம்பூரிகளை நான் பார்த்தது கிடையாது. பிறரை மயக்கும் பொருட்டு ஓர் இரண்டு வேத சம்ஹிதைகளைப் பாராமல் குருட்டு உருப்போட்டு வைக்கிறார்கள். இதில் அதிக விசேஷமில்லை" என்றார்.

பிறகு சாஸ்திரியார் நம்பூரிகள் குறித்துப் பல கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை மிகவும் பெரிய கதைகள். இந்த வியாஸம் ஏற்கனவே மிகவும் நீண்டுபோய் விட்டது. ஆதலால், அவர் சொல்லியதன் தொடர்ச்சியை மற்றொரு வியாஸத்தில் எழுதுகிறேன். ராகவ சாஸ்திரி நான் மெளன விரதம் பூண்ட நாளில் துஞ்சத்து எழுத்தச்சன் விஷயமாகச் சொல்லிய விஷயத்தைக் குறித்து மறுபடி இன்று காலை சம்பாஷித்தோம். அதையும் பின்புதான் தெரிவிக்க வேண்டும்.

நான், "நல்லது, புதிய தீயருக்கும், நாயருக்கும், நம்பூரிகளுக்கும் ஒற்றுமையும், அன்பும், அறிவும், பகவதி சேர்த்திடுக" என்றேன். இந்த சமயத்தில் பாப்பா வந்து "பகவதி பாட்டு பாடட்டுமா" என்று கேட்டது. பாடு பாடு என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.

"ஆ - ஆ - ஆ - !

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி

என்னைப் புதிய உயிராக்கி - எனக்
கேதும் கவலை யறச் செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! ஹே!
காளீ, வலிய சாமுண்டீ! - ஓங்
காரத் தலைவி யென் னிராணீ!
பாடம் வினாக்கள்

1. 'அட்டுற யார் மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போலவரும்' எனும் நாலடியார்
பாடலை பாரதி எப்படி விளக்குகிறார்?
2. நம் நாட்டு மக்களின் 'ஜீவதயை' குறித்து ஓர் ஆங்கிலேய அதிகாரி கொடுத்த அறிக்கை
கூறுவது என்ன?
3. ராகவ சாஸ்திரி என்பவர் பற்றி பாரதி கூறும் வர்ணனையிலிருந்து அவர் யாராக
இருக்கக்கூடும் என்று உங்களுக்குத் தோன்றுகிறது?
4. நாராயணசாமி (நாராயண குரு) எனும் தீயர்களின் குரு பற்றி சிறிது கூறுக.
5. நம்பூரிகள் அவதார புருஷன் பரசுராமன் வம்சம் என்கிற யூகத்துக்கு என்ன ஆதாரம்?
6. திருவாங்கூர் பகுதி நாஞ்சில் நாட்டில் நிலவி வந்த "மருமக்கள் தாயம்" பற்றி
உங்களுக்குப் புரிந்த விவரங்களை சிறு கட்டுரையாக எழுதுக.
(முடிந்தால் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைத் தொகுப்பிலுள்ள
இந்தப் பகுதியைப் படித்து விடை எழுத முயற்சி செய்யுங்கள்)

No comments:

Post a Comment

You can send your comments