Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

மகாகவி பாரதியாரின் 'குயில்பாட்டு'திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் அஞ்சல் வழிப் பயிற்சிப்பாடம் மகாகவி பாரதியாரின் 'குயில்பாட்டு'
கு. ராஜவேலு, M.A.,
(தமிழறிஞர் கு.ராஜவேலு அவர்கள் எழுதியுள்ள "வான்குயில்" எனும் நூலிலிருந்து தாகுக்கப்பட்டது)

முன்னுரை:
மகாகவி பாரதி வெறுங்கவிஞர் அல்லர். உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த பண்புகள், உயர்ந்த செயல்கள் எல்லாம் செழித்தோங்கப் பாடிய உயர்ந்த கவிஞர். அவர் பாடிய பாடல்களுள் உணர்ச்சிச் செல்வமும் கற்பனை மெருகும் இழைந்து விளங்கும் சிறு காவியம் 'குயில்பாட்டு'. அதைப் பாடி முடிந்தபின் அதனுள் ஆழ்ந்த பொருள் வேறு இருப்பதாக அவரே உணர்ந்தார். "கற்பனையே ஆனாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க" இடம் இருப்பதாக உணர்ந்தார். அதனால் ஆன்ற தமிழ்ப் புலவீர் என்று விளித்து ஒரு வேண்டுகோளும் விடுத்தார். அந்த வேண்டுகோளுக்குச் செவி சாய்த்துப் பொருள் விரித்து உரைக்க முற்பட்ட புலவர் பலர். அவர்களுள் ஒருவராக இந்நூலாசிரியர் கு.ராஜவேலு விளங்குகிறார். (டாக்டர் மு.வ. அவர்களின் முன்னுரை)

குயில்பாட்டின் கவிதைப் பகுப்பு:
மேனாட்டு இலக்கிய ஆய்வாளர்கள் கவிதைகளை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள். ஒன்று வாழ்க்கையிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்தல்; இரண்டாவது வாழ்க்கைக்கு விளக்கம் கொடுப்பது; மூன்றாவது வாழ்க்கையிலிருந்து ஒருவகையாகத் தப்பித்துக் கொள்ளுதல். இம்மூன்று பகுப்புகளையும் உள்ளத்திற்கொண்டு 'குயில்பாட்டை' நாம் ஆராய்வோமானால், அம்முப்பெரும் பகுப்புகளிலும் பொருந்தும் வகையில் இக்குயில்பாட்டு அமைந்திருப்பதைக் காணலாம்.

எனினும், பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய தீஞ்சுவைப் பாடல்களையும் குறிப்பாகச் சுயசரிதையையும் படித்துப் பின்னர் சிந்தித்துப் பார்த்தால் இக் குயிற்பாட்டு, துன்பமும் ஏமாற்றமும் நிறைந்த வாழ்க்கையினின்றும் தப்பி, நெட்டைக் கனவிலே மிதப்பதற்கு அவருக்குக் கிடைத்த ஒரு வட்டத்தோணியாக அமைந்ததோ என்று எண்ணவும் பரந்த இடம் உண்டு.

"அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே" என்று நம்முடைய தமிழ் இலக்கண நூல்கள் கூறுகின்றன. நூல்கள் அறத்தையும், பொருளையும், இன்பத்தையும் இறுதியாக வீடு பேறையும் நல்கும் வகையில் அமைந்திருத்தல் வேண்டும். இந்நான்கு பொருள்களையும் ஒரு நூல் அளிக்க வேண்டுமேயானால், அது மேலை நாட்டின் இலக்கிய ஆய்வாளர்கள் கூறுவதைப் போன்று அவர்களின் மூன்று பகுப்புக்களையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தால்கூட இந்நான்கு பொருள்களையும் அடைய முடியாது.

மகாகவியின் 'குயில்பாட்டு' அரிய பல செய்திகளை உள்ளடக்கியது. புதுச்சேரியில் கடல் அலை எழுப்பும் ஓசை கவிஞருக்கு வேதப் பொருளை உரைக்கிறதாம். கடல் அலைகள் மட்டுமா செய்தி சொல்லுகிறது. இல்லை; குக்குக்கு வென்று குயில் பாடும் பாட்டில் தொக்க பொருளெல்லாம் தோன்றுகின்றது அவரது சிந்தைக்கே. அந்த பொருளை அவனிக்கு உரைத்திடுவேன் என்று 'குயில்பாட்டை'ப் பாடுகிறார்.

காலை இளம் பரிதி வீசும் கதிர்களிலே நடைபெறும் விந்தையெலாம், கவிஞர் கற்பனையில் சித்திரம் வரைந்து காட்டுகிறார். அதில் சிறு துளி இதோ:--


"காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்,
தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?"

அதுமட்டுமல்ல: காலை இளம் கதிர்கள் விளைவிக்கும் மாற்றங்களைக் கவிஞர் வாக்கால் காண்போம்.

"புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி,
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி, விந்தைசெயுங் சோதியினைக்
காலைப் பொழுதினிலே, கண்விழித்து நான் தொழுதேன்"

அமுதம் தேவலோகத்து இனிய பானம். அதன் சுவையோ எல்லையில்லாதது. அந்த இன்னமுதைக் கொண்டு போய்க் காற்றில் கலந்து விட்டால், இந்த உலகமெலாம் அதன் இன்சுவை பரவாதோ?

"இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல்
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகஇனிதாய் வந்து பரவுதல் போல்"

இசையில்தான் எத்தனை வகை? அந்த இசையில் மயங்காதோர் யார்? "காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்" இப்படி எத்தனையோ இனிய காட்சிகளை நமக்களிக்கும் ஓவியம்தான் குயில்பாட்டு.

பாரதியாரின் குயில்பாட்டு இவ்வாறு விழுமிய பொருளையும் உயர்ந்த தத்துவக் கருத்தையும் மனித வாழ்க்கையை, லட்சியத் துணையோடு இணைக்கும் வகையிலும் அமைந்து, பொருள்நயமும், கவிதைஇனிமையும் ஓசையுடைமையும், ஆழம் உடைமையும் உடையதாக அமைந்துள்ளது. அவர் இப்பாட்டிலே கூறும் வேதாந்தப் பொருளை ஆராயப் புகுமுன் அதன் கதைப் பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

குயிலின் கதை:
வைகறை வேளை. உலகைப் போர்த்திய இருள் மெல்ல மெல்ல கிழிகின்ற காலம். கதிரவன் தன்னுடைய ஆயிரம் செங்கதிர்க் கரங்களை அகல விரித்து இப்பாரின் மீது ஆடுகின்ற நேரம், அவனுடைய கோலக்கூத்திலே மெய்மறந்த மாக்கடல், தன் நீண்ட அலைக் கரங்களைக் கொட்டி ஆர்த்துப் பெரு முழக்கம் செய்கின்ற சிறுகாலைப் பொழுது.

அவ்விளங்காலை போதிலே, புதுவை நகர் மெருகு ஊட்டிய பொன்போல எழில் பூத்து விளங்குகிறது. அப்பட்டினத்தின் மேற்கே நிழல் விரிக்கும் நீண்டு உயர்ந்த பசுமரங்கள் அடர்ந்த ஓர் எழிலாரும் மாஞ்சோலை. அவ்விளமரக் காவிலே ஒரு நாள், நம் புலவன் அகம் மகிழ்ந்து சுற்றி வருகின்றான். மாமரத்தின் ஒரு கிளையிலே இசைக்குயில் ஒன்று அமர்ந்து கல்லும் கரையும் வண்ணம், மிக இனிமையான காதற்பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டிருக்கிறது. அப்பாட்டின் நெருப்புச் சுவையிலே விண்ணும் மண்ணும் மயங்குகின்றன. குயிலின் கருத்தைக் கவரும் பாட்டிலே கவிஞன் மயங்கி முடிவில் தன்னையும் மறக்கிறான். அந்தக் குயிலைக் காதலித்து அதனுடனே கூடிவாழ வகை கிடைக்காதா என்று ஏங்குகிறான். இல்லையெனில் அதனுடைய "நாதக் கனலிலே நம் உயிரைப் போக்கோமா?" என்றும் பொருமுகின்றான். இவ்வாறு அவன் உள்ளம் கனலாய்க் காய்ந்து, புனலாய் ஓடும் வண்ணம் அக்குயில்:


"காதல், காதல், காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்"

என்று பாடி முடிக்கிறது. புலவன் அக்காதற் குயிலை நோக்கி "உலகை மயக்கும் இசைச் செல்வத்தையுடைய குயிலே! உனக்கு எய்திய துன்பம் யாது?" என்று உசாவுகிறான். மாயக் குயிலும் மானுடர் பேச்சிலே அவனுக்கு, "காதலை வேண்டி கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்று மறுமொழி ஈந்தது. சிந்தை நோய் கூறும் குயிலின் வெந்துயர் மாற்றத்தைக் கேட்டுக் காதலால் மயங்கும் கவிஞன் உள்ளம் விம்மிதம் அடைகிறது. அவன் நெஞ்சம் கவல்கிறது (துன்பப்படுகிறது).

"காதலன் யாரையும் நீ பெறாத காரணந்தான் யாதோ?" என்று கவிஞன் அந்தக் குயிலை வினவ, அதற்கு அது தனது நெஞ்சத்தைக் குடைகின்ற உள்ள நோயினை விளக்கிக் கூறுகிறது.

பிறப்பிலே குயிலாகக் காட்சி அளித்தாலும் அதற்கு எவ்வாறோ மாந்தர் பேசுகின்ற பேச்சும் நன்கு தெரிகின்றது. மானிடர் மொழி மட்டுமல்ல! மற்ற எல்லோர் மொழிகளையும் உணரும் பெற்றியும் வாய்ந்ததாயுள்ளது. எனினும் அதனுடைய சிந்தை, மானிடப் பெண்கள் காதலினால் ஊன் உருகப்பாடும் பாட்டிலும், உழவனுடைய ஏற்றப் பாட்டினிலும், நெல்லை உரலில் இட்டு இடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டினிலும், அவர்களின் கொஞ்சும் தேன்மொழியினிலும் இன்னும் மாந்தர்கள் பயில்கின்ற குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளின் தேனிசையிலும் தன்னுடைய நெஞ்சை முற்றிலும் பறிகொடுத்துள்ளது. ஆகையால் அதனுடைய காதலும் மானிடர் மீதே பற்றிப் படர்கின்றது. அதனுடைய உள்ளப்பாங்கைக் கவிஞனுக்கு வகையாய், வீணையின் ஏழிசைக் குரலையும் ஒரு குரலிலே அடக்கி, தகவாய் இயம்புகின்றது.

"காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்"

என்று புலம்பும் தன் நெஞ்சின் துயரைக் கூறுகின்றது.

கவிஞனின் காதல்:
மகுடியின் இசையிலே மயங்கும் நாகம் போன்று மாங்குயிலின் பேச்சிலே கவிஞன் கட்டுப்படுகிறான். அவனுடைய உள்ளத்தில் குயிலின் காதற்பாட்டைத் தவிர வேறோர் இசை இல்லை. எங்கிருந்தோ இந்நேரத்தில் பறவைகள் பறந்து வந்து அம்மாஞ்சோலையினுள்ளே புகலடைகின்றன. தங்கள் காதல் உரையாடலுக்குத் தடை வந்ததைக் கண்டு, அந்த நீலக்குயில் நீண்ட பெருமூச்சு விடுகிறது. "ஐயனே! காதல் வழிதான் கரடுமுரடானது என்பர்" அது நம் வாழ்வில் முழு உண்மையோடு விளையாடித் திளைக்கின்றது. உங்களோடு பேசி அளவளாவுகின்ற இன்பத்திற்கும் இப்போது இடையூறு மூண்டுவிட்டது. தாங்கள் அன்போடு அடுத்த நான்காம் நாள் இங்கு வந்தருளல் வேண்டும். மறக்காதீர்! என்னுடைய சிந்தையைப் பறித்துக்கொண்டு செல்கின்றீர்; குறித்த நாளில் வராவிடிலோ இக்குறுவடிவக் குயிலின் ஆவி தரியாது. அறிந்திடுவீர்! நான்காம் நாள் என்பதனை மறந்து விடாதீர். இந்நாட்கள் நான்கையும் பத்து யுகம்போல நான் கழிப்பேன். சென்று வருவீர்! என் சிந்தையை எடுத்துக்கொண்டு செல்கின்றீர் என்பதை மீண்டும் மீண்டும் விண்டு உரைக்கின்றேன். மறவாதீர், சென்று வாருங்கள்" என்று தேற்ற முடியாத பெருந்துயரத்தோடு அவனை வழி அனுப்பி வைக்கிறது அந்த மாயக் குயில்.

இரண்டாம் நாள்:
குயில் மறைந்து போகிறது. காதல் வயப்பட்ட கவிஞன் களிவெறி கொண்டவன் போல் தன் வீடு நோக்கித் திரும்புகிறான். வருகின்ற வழியெல்லாம் வஞ்சனைக் குயிலின் உருவமே எங்கும் நிறைந்து, எல்லாமாய் நிற்பதனைக் காண்கின்றான். நாள் ஒன்று போவதற்கு அவன் பட்ட பாட்டைத் தாளமும் படாது, தறியும் படாது. இந்நிலையில் எவ்வாறோ நாள் ஒன்று கழிகின்றது.

மறுநாள் அதே வைகறை வேளை. புத்தி, மனம், சித்தம், புலன் ஒன்றும் அறியாமல் காதல்வயப்பட்ட மனத்தினனாய், கயிற்றினால் ஆட்டுவிக்கப்படும் பாவைபோல கவிஞன் அந்த மாஞ்சோலையை நோக்கி விரைந்து செல்கின்றான். வழியில் இருந்த எந்த பொருளும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அந்த காலை வேளையில் செஞ்ஞாயிற்றின் செழுங்கதிர் ஒளியினால் பச்சை மரங்களெல்லாம் பளபளத்து மின்னுகின்றன. காதல் குயிலோடு தனித்து உரையாடிக் களித்து இன்புற வேண்டுமென்ற அவன் இச்சையை உணர்ந்தனபோல, சோலைப் பறவையெல்லாம் எங்கோ போய்விட்டன. சிறுகுயிலைக் காணக் கரையடங்கா வேட்கையோடு, ஒவ்வொரு மரமாகப் பார்த்துக் கொண்டே வருகிறான்.

குயிலும் குரங்கும்:
முன்னை நாள் கண்ட மரக்கிளையில் குயிலைக் காணாது அவனுடைய மனம் துடிக்கிறது. முடிவில் வஞ்சனை விளைந்ததுபோல் காணக் கசக்கும் ஒரு காட்சியை அவன் கண்கள் காண்கின்றன. அன்று தன்னிடம் காதல் மொழி பேசிய அந்த நீலிக் குயில் இன்று ஒரு குரங்கினிடம் அவ்வாறே -- அதே காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறது. இன்று அது குரங்கினிடம் குரங்கு மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால், பொருளோ நேற்றுப்பாடிய அதே காதற் பாட்டின் பொருள்தான்.

"வானரரே! ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான் எப்பிறப்பு கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?" என்று சொல்லி மானுடர்கள் சில வகையில் மேன்மையுற்றிருந்தாலும், உன்போற் மேனி அழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும், கூனியிருக்கும் உன் கொலு நேர்த்தி தன்னிலும் வானரர்க்கு மானுடர் நிகர் ஆவாரோ? பட்டுமயிர் மூடப்படாத தமது உடலை, பட்டு உடைகளால் அலங்கரித்துக் கொண்டாலும், மீசையும் தாடியும் வைத்துக்கொண்டு உமது ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றாலும், நீங்கள் தாவிக் குதிப்பதைப்போல் அவர்களும் கூடிக் குடித்துவிட்டு ஆடினாலும், கோபுரத்தில் ஏறுகின்ற உங்கள் நேர்த்திக்கு எதிராக இவர்கள் ஏணி வைத்து ஏறமுயன்றாலும், வேறு எதனைச் செய்தாலும், தாவிப் பாய்வதிலே வானரர்க்கு மானுடர் நிகர் ஆவாரோ? அதெல்லாம் போகட்டும், வாலுக்கு எங்கே போவார்கள்? தலையில் கட்டும் தலைப்பாகையின் கச்சை உங்கள் வாலுக்கு நிகர் ஆகிவிடுமோ? அடடா! உங்கள் சைவ சுத்த போஜனமும், சாதுரியப் பார்வைகளும் உங்களைப்போல் வேறொரு சாதி மண்மீது இருக்கிறதோ?" இப்படி பேசுகிறது குயில்.

குயிலின் பைங்குரல் இசையில் அந்தக் குரங்கு தன் நெஞ்சைப் பறிகொடுக்கிறது. அதன் இயல்புக்கேற்ப காதல் வெறிகொண்டு தாவிக் குதிக்கிறது; தாளங்கள் போடுகிறது; கண்ணைச் சிமிட்டுகிறது; காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரியிறைக்கிறது.

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு"

இது திருக்குறள். காமத்திற்கு உரிய சிறப்பினை இதனைக்காட்டிலும் படம்பிடித்துக் காட்டமுடியுமா? "காதல் வழிதான் கரடு முரடாம் என்பர்" என்று கூறும் கவிஞர், மகாகவி ஷேக்ஸ்பியரின் "The course of love never did run smooth" எனும் வரிகளை நமக்கு நினைவு படுத்துகிறார். குரங்கு சொல்லுகிறது:

"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!
பேசமுடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
எப்பொழுதும் நின்னை இனிப் பிரிவ தாற்றுகிலேன்".

என்று பாடிக்கொண்டு அந்தக் குரங்கு கூத்தாடுகிறது. அதனுடைய வெறியாட்டத்தைக் கண்டு கவிஞனின் உள்ளம் அலையாடுகிறது. குரங்கைக் கொல்ல எண்ணிக் கைவாளை வீசுகின்றான். ஆனால், 'கனவோ? நனவோ? அன்றித் தெய்வ வலியோ?' என்று உள்ளம் திகைக்கும்படி அவனுடைய சிறுவாளுக்கு அச்சிறு குரங்கு தப்பிச் சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல், சோலைப் பறவைகள் எல்லாம் தொகை தொகையாய்த் திரும்பி வருகின்றன. செய்வதறியாது அக்குட்டிக் குயிலைத் தேடுகின்றான். ஆனால் அது மறைந்து போய்விடுகிறது.

அவன் உள்ளம் பதைபதைக்கின்றது. உடல் சோர்கின்றது. விழி மயங்குகின்றது. நாணமும் துயரமும் அவனை நலிவுறுத்துகின்றன. மீண்டும் இல்லம் நோக்கித் திரும்புகிறான். தன்னுடைய உணர்வை இழந்து விழுந்து விடுகின்றான். மாலை நேரத்து மயக்கம். அவனுடைய நண்பர்கள் அவனைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவன் மயக்கமும் பையப் பையத் தெளிகிறது. அவன் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அவனால் விடையிறுக்க இயலவில்லை. "நண்பர்களே! நாளை வாருங்கள், நடந்தவற்றை நான் முழுவதுமாய் நவில்கின்றேன். இன்று என்னைத் தனியே இருக்க விடுங்கள்' என்கிறான். தோழர்கள் சென்றுவிட்டாலும், அவனுடைய நிலை கண்டு அவன் தாயார் நைந்து போய்விட்டார். தளர்ந்த தன் தனயனின் மயக்கம் தீரத் தன் தளிர்க் கரத்தால் தீம்பால் கொணர்ந்து, அன்பால் அவனைத் தேற்றி, அப்பால் அருந்தச் செய்கின்றார். பாலருந்தியபின் பெருந்துயில் கொள்கின்றான்.

மூன்றாம் நாள் காதல்:
மூன்றாம் நாள், முந்தைய நாட்களில் நடந்தவற்றை மறப்பதற்காக இயற்கையைச் சரணடைகிறான். அவனுடைய கால்கள் முன்போலவே அவனை அந்த இளமரக்காவிற்கு இழுத்துச் செல்கின்றன. சொந்த நினைவு இழந்து அவனும் சோலையிலே வந்து நிற்கின்றான். மோசக்குயிலை சுற்றுமுற்றும் தேடுகின்றான். கோலப்பறவைகள் கூட்டத்தையும் காணவில்லை. பின்னர் ஆங்கோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே அந்த நீசக்குயில் நீண்ட கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. கீழே ஒரு கிழட்டுக் காளையொன்று அந்தக் குயில் சொல்லும் காதல் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதைக் கண்டு கவிஞன் உள்ளம் புண்ணாகி, சினமென்னும் செந்தீயை, பொறாமைக் காற்று வீசி மேலும் கொழுந்து விட்டெரியச் செய்கிறது. கொன்று விடலாமா என்று எண்ணுகிறான். ஆனால், உள்ளம் மீண்டும் சுருங்குகின்றது. பொய்க்குயில் பேசும் மாயக் காதலை முற்றிலும் கேட்டுவிட்டுப் பின்னர் கொல்லுதலே நல்ல சூழ்ச்சி என்று எண்ணுகிறான். மறைந்து நின்று அந்த உரையாடலைக் கேட்கிறான். அந்தக் குயிலும் தன் பொன்போன்ற குரலிலே மின்னல் போன்ற சொல்லெடுத்துத் தன் கரையடங்காக் காதலை அந்தக் கிழக்காளையிடம் சொல்லுகிறது.

"காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!
தாளைச் சரணடைந்தேன், தையலெனைக் காத்தருள்வீர்!
காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை
மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று கூறி, பண்டுபோல் தனது பாழடைந்த பொய்ப்பாட்டை எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியது. குயில் அந்தக் கிழக்காளையைப் பார்த்து சொல்லுகிறது: "நந்தியே! பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே! காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே! பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதி பிரிதும் உண்டோ? மானுடர்களுக்குள்ளே வலிமையுள்ள ஆண்மகனை என்ன சொல்லி அழைக்கிறார்கள். "காளை" என்றுதானே சொல்லுகிறார்கள். அடடா! உனது நீண்ட முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும், பஞ்சுப்பொதி போன்ற உடலும், வீரத்திருவாலும், வானத்தில் இடி இடிப்பது போல "மா" என்று நீ உறுமுவதும், உன் முதுகில் ஈனப் பறவைகள் ஏதேனும் அமர்ந்து விட்டால் அதனை உன் வாலை வீசி அடிக்கும் நேர்த்தியும் கண்டு நான் மோகித்துவிட்டேன்".

இவ்வளவையும் சொல்லி முடித்துவிட்டு குயில் மேலும் தொடர்கிறது "காளையரே! உம் மேல் காதலுற்று வாடுகின்றேன், காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை என்பதை அறிவேன். எனினும் என் செய்வேன். என்போல் அபூர்வமாய் காதல் கொண்டால் தானாய் உரைத்தலின்றி வேறு வழியுளதோ?. இப்படி அந்த நீசக் குயில் அந்தக் கிழக் காளையிடம் பாடி முடிக்கும் வரை கவிஞனுக்கு இவ்வுலக நினைவே இல்லை.

"பாட்டு முடியும்வரை பாரறியேன் விண்ணறியேன்
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்
தன்னை யறியேன், தனைப்போல் எருதறியேன்,
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே கண்டேன்"

என்று சினத்தீ மூண்டு தவிக்கும் கவிஞனே அப்பாட்டை வியந்து பாராட்டினான் என்றால், அதன் இன்பச்சுவை எவ்வாறு அவனி முழுவதையும் மயக்கி ஆட்கொண்டிருக்கும் என்பதை நன்கு அறியலாம்.

கரைபுரண்ட ஆற்று வெள்ளம் வற்றியவுடனே தலைசாய்ந்த நாணற்புற்கள் மீண்டும் நிமிர்வதைப் போன்று பாட்டு முடிந்தவுடன் கவிஞனின் சினமும் நிமிர்ந்து நிற்கிறது. கைவாளை எடுத்துக் காளையின் மேலே வீசுகின்றான். ஆனால் காளையோ? விரைந்து ஓடிவிடுகிறது. கார்வண்ணக் குயிலும் கடிதில் மறைந்து விடுகிறது. சோலைப் புள்ளின் கூட்டமெல்லாம் மீண்டும் ஒலிசெய்த வண்ணமே விந்தைக் கனி கொடுக்கும் தண்ணார் பொழிலை வந்தடைகின்றன.

நாணமில்லா காதல் கொண்ட கவிஞன் வீணிலே அந்தக் குயிலை யாண்டும் தேடி அலைகின்றான். உற்ற பயன் ஏதும் இல்லை. வறிதே வீடு வந்து சேருகின்றான். ஆனால், உள்ளமோ ஓராயிரம் எண்ணங்களை எண்ணுகின்றது. "கண்ணிலே நீர் வடிய, கானக் குயில் முதலில் ஏன் என்னிடம் காதலைப் பேசியது. அந்தப் பாட்டிலே நான் ஏன் நெஞ்சம் கரைந்தேன். பேச முடியாப் பெருங்காதல் ஏன் கொண்டேன்? இன்ப உரையாடல் நிகழும் வேளையிலே புன்பறவைக் கூட்டம் எங்கிருந்து வந்தது? தண்டலையை ஏன் அடைந்தது?

என்னைப் பேதையாக்க இவ்வளவும் போதாமல் மேலும் என் சித்தம் திகைப்புறும் வண்ணம் எனக்கு எதிரியாக எங்கிருந்தோ சொத்தைக் குரங்கு ஒன்று வந்ததே? அப்பால் தொழுமாடும் எவ்வாறு போட்டியாகத் தோன்றியது? இவ்விரண்டும் என் காதலுக்கு முற்றிலும் வைரிகளாக மூண்ட கொடுமையை என்னென்பேன்? உலகமே விந்தை நிறைந்த ஒரு விலங்கினக் காட்சிசாலை போன்றல்லவா தோற்றமளிக்கிறது.

நான்காம் நாள்:
வண்ணக்குயில் கவிஞனைச் சோலைக்கு வரச்சொன்ன நான்காம் நாள், உள்ளம் சோர்ந்து, அறிவிழந்து, சித்தம் திகைப்புற்று, செய்கையறியாமல் தன் வீட்டின் மாடத்திலே ஏக்கமே உருவமாய் இருக்கின்ற இளங்காலை வேளையில் அவனையறியாமலே அவனுடைய நாட்டம் காட்டுத் திசையில் செல்லுகின்றது. என்ன வியப்பு? வானத்தே ஒரு கரும் பறவை வருவதனை அவன் கண்கள் நோக்குகின்றன.

"இது நமது பொய்க்குயிலோ?" என்று உள்ளம் திகைக்கின்றான். நீண்ட தொலைவிலே அது நின்ற காரணத்தால் அதன் வடிவம் நன்கு துலங்கவில்லை. ஆனால், மனமோ அதனை விட்டுப் பிரிய முடியாது பேதலிக்கின்றது. உயர்மாடத்தினின்றும் இறங்கி வீதியிலே வந்து நிற்கின்றான். ஒளிக்கடலில் தோன்றும் ஒரு புள்ளியைப் போல் அக்கருங்குயிலும் வானத்தே காட்சியளிக்கிறது. "நம்முடைய நாணமிலாப் பெண் குயிலோ இது?" என்று அறிவோம் என்று எண்ணி அவன் விரைந்து அதன் பின்னே செல்லுகின்றான். வானத்தில் வட்டமிட்டு நின்றே வழிகாட்டி அக்கானப் பறவையும் செல்லுகின்றது. அவன் நின்றால் அது நிற்கும்; அவன் சென்றால் அதுவும் செல்லும். இறுதியில் அந்தக் குயில் மாஞ்சோலையைச் சென்றடைகின்றது. ஆங்கோர் கொம்பின் மீது அமர்கிறது. பழைய காதற்பாட்டை இப்போதும் பாடிக்கொண்டிருக்கிறது. கவிஞன் உள்ளம் குமைந்து அதன் எதிரில் போய் நிற்கிறான். சினம் பொங்க வினவுகிறான்.

"நீசக் குயிலே, நிலையறியாப் பொய்மையே,
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை"

என்று நெருப்பெனக் கேட்டு அதனை நெரிக்கிறான். அதனைக் கொல்லவும் நினைக்கிறான், எனினும் பின்னே மனம் இளகிவிடுகிறது.

குயிலின் கண்களிலே நீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது. வேதனையோடு குயில் கூறுகிறது, "ஐயனே, என்னை இவ்வுலகத்தில் வாழவைக்கத் திருவுளமோ? அன்றிக் கொன்றுவிட எண்ணமோ? தன் துணை பிரிந்தால் அன்றிற்பறவை உயிர் வாழாது. ஞாயிற்றின் வெம்மையில் மலருக்கு வாழ்வு ஏது? தாயே உயிரை எடுப்பதென்றால் மதலைக்குச் சரண் ஏது? தேவர்கள் சினந்துவிட்டால் சிற்றுயிர்கள் என்னவாகும்? நீங்கள் என்னைச் சினந்தால் நான் உயிர் துறப்பேன். நான் குற்றம் புரிந்ததாகச் சொன்னீர்கள். ஆனால் நான் குற்றம் புரிந்தவள் அல்ல. புன்மைக் குரங்கையும், பொது மாட்டையும் நான் கண்டு மெய்மைக் காதல் விளையாடினேன் என்று சொல்லுகின்றீர். ஐயகோ! என் செய்வேன்? நான் எங்ஙனம் உய்வேன்? உங்கள் சொல்லை மறுக்கவும் வழியில்லை. என்மேல் பிழையும் இல்லை. வெவ்விதியே! என்னை நீ என்னுடைய வேந்தனோடு சேர்த்தாலும், அல்லது என்னை நம்பாமல் அவர் என்னை புறக்கணித்துச் செல்ல, அதனால் நான் வெந்தழலில் வீழ்ந்து அழிய நேரிட்டாலும், நான் எக்கதிக்கு ஆளாவேன்?" என்று பல பேசி குயில் புலம்புகிறது.

குயிலின் முந்தைய பிறப்பு:
குயில் மீண்டும் கவிஞனை நோக்கிக் கூறுகிறது, "என் உயிரே, என்னை விட்டுப் போவதன் முன்னால் நான் சொல்லுவதனை அருள்கூர்ந்து கேட்க வேண்டும். ஒரு நாள் பொதியமலையின் அருகேயுள்ள ஒரு சோலையில் ஆழ்ந்த சிந்தனையோடு நான் அமர்ந்திருந்தேன். அவ்வேளையில் அங்கு ஓர் முனிவர் வந்தார். இவர் யாரோ பெரியவர் என்றெண்ணி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன். அவர் என்னை வாழ்த்தி ஆசி கூறினார். அதன்பின் என் உள்ளத்திலே விடைகிடைக்காமல் இருந்த ஒரு வினாவுக்கு அவரிடம் விடை தேடினேன். "வேதமுனிவரே! மேதினியில் நான் கீழ்ப்பறவை சாதியிலே பிறந்தேன். ஆனால், மற்ற குயில்களைப் போலன்றி என் மனம் மானுடரைப் போல் எண்ணுகிறது, அவர்கள் பேசும் மொழி எனக்குப் புரிகிறது. இதன் காரணம் என்ன? இதன் உண்மையை எனக்கு விளக்கியருள வேண்டும்" என்று வணங்கிக் கேட்டேன்.

"அப் பெருமுனிவர் பேசினார். "குயிலே! கேள். சேரவள நாட்டின் தென்புறத்தே ஒரு மலை உள்ளது. அம்மலையில் வாழும் வேடர்களுக்கு வீரமுருகன் என்பவன் முன்பு தலைவனாக இருந்தான். முற்பிறப்பில் அந்த வீரமுருகனின் மகளாகப் பிறந்திருந்தாய். அப்போது உன்னைச் "சின்னக்குயிலி" என்ற பெயரால் அழைப்பர். உன்னுடைய அழகு, ஒளிவீசும் முகம் இவற்றுக்கு இணையாக தமிழ்நாட்டில் யாருமே இல்லை.

அப்போது, உன்னுடைய மாமன் மகன் மாடன் என்பவன் இருந்தான். நினது பேரழகைக் கண்டு அவன் உன்னை மணக்க விரும்பி உன் நினைவாகவே சித்தம் வருந்தினான். தேமொழியே! அவனுடைய பெருந்துன்பத்தைக் காணச் சகிக்காமல் அவனை மாலையிட நீ வாக்களித்தாய். இந்நிலையில் உன்னுடைய பேரழகின் பெரும் கீர்த்தி தேசமெல்லாம் பரவியது. தென்மலையின் வேடர் தலைவன் மொட்டைப்புலியனின் மகனான நெட்டைக்குரங்கனுக்கு, உன்னை மணமுடிக்க நிச்சயித்தான் அந்த மொட்டைப்புலியன். அவன் உன் அப்பனை அணுகி "உன் தையலை என் தனயனுக்குக் கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றான். முருகனும் அதற்கு உடன்பட்டான். பனிரெண்டு நாட்களிலே பாவை உன்னை மணம்புரிய அவர்கள் உறுதி பண்ணிவிட்டார்கள்.

செய்தி கேட்டு மாடன் மனம் புகைந்தான். அவன் உன்னிடம் வந்து தன்னை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தினான். அவன்பால் கருணை கொண்ட நீ அவனிடம் சொன்னாய், "மாடா! உன்னுடைய சினத்தை நீ தவிர்ப்பாயாக. நெட்டைக் குரங்கனுக்கு நான் பெண்டாட்டியாக நேர்ந்தாலும் மூன்று மாதங்களுக்குள் ஏதாவது மர்மம் செய்து வேற்றுமையை விளைவித்து இங்கே நான் வந்தடைவேன். தாலியை மீண்டும் அவர்களிடமே கொடுத்து விடுவேன். நான்கு மாதத்தில் நாயகனாக உன்னை நான் மணம் புரிவேன். என் பேச்சு தவறமாட்டேன். மாடா! என்னை நம்பு" என்று இரக்கத்தினால் உரைத்தாய்.

நாட்கள் சென்றன. ஒரு நாள் மாலை, மின்னற்கொடிகள் ஒன்றோடொன்று ஓடி ஒளிந்து விளையாடுவதைப் போன்று நீயும் உன் தோழியரும் காட்டிலே விளையாடிக்கொண்டிருந்தீர்கள். அப்போது சேரமன்னனின் மகன் வேட்டையாட காட்டிற்கு வந்தவன், நீங்கள் இருக்குமிடம் வந்தான். உன்னைக் கண்ட அந்த அரசகுமாரன் உன் மீது மாளாக் காதல் கொண்டான். நீயும் அவனைக் கண்டாய், அவன்மீது ஆறாக் காதல் கொண்டாய், இருவரும் ஆவி ஒன்றென தழுவி நின்றீர்.

அவ்வேளையில் ஊரிலிருந்து நெட்டைக் குரங்கன் வந்து சேர்ந்தான். தனக்கு உறுதி செய்த வேடர் குலப் பெண், காட்டிற்கு விளையாடச் சென்றிருப்பதறிந்து நின்னைக் காண ஆத்திரத்தோடு ஓடிவந்தான். அங்கு சேர இளவரசனும் நீயும் நெருக்கமாக இருப்பதைக் கண்டான். அவன் உள்ளம் தீப்பற்றி எரிந்தது.

நெட்டைக்குரங்கன் வந்த செய்தியை யாரோ இதற்குள் மாடனுக்குத் தெரிவித்தார்கள். அவனும் சின்னக் குயிலியைத் தேடிக்கொண்டு காட்டிற்கு ஓடிவந்தான். கண்களில் கனல் தெறிக்க ஐம்புலன்களும் கலங்க மாடன், குயிலி அயலான் ஒருவனுடன் இருப்பதைக் காண்கிறான். நெட்டைக்குரங்கன் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. தனக்குப் பின்னே வந்து நின்று தணலாய்க் கொதிக்கும் மாடனை நெட்டைக்குரங்கனும் காணவில்லை. குயிலியோடு நிற்பவன் நெட்டைக்குரங்கன் என்று மாடன் நினைத்தான். குரங்கனோ இவள் காட்டில் எவனிடமோ காதல் அமுதம் அருந்துகிறாள் என்று நினைத்தான். இருவரும் தத்தம் உடைவாளை உருவிக்கொண்டு முன்னே பாய்ந்தனர்.

இளவரசன் மீது இருவர் வீசிய வாட்களும் பாய்ந்தன. சடாரென திரும்பினான் இளவரசன். உடைவாளை எடுத்து ஒரே வீச்சில் மாடனையும் குரங்கனையும் மண்ணிலே சாய்த்தான். அடுத்த கணமே அவனும் அடியற்ற மரம்போல் சாய்ந்தான். குருதி கொப்புளிக்க விழுந்து கிடந்த இளவரசன் உடலைத் தன் மடிமீது வைத்து சின்னக்குயிலி கண்ணீர் வடித்தாள். இளவரசன் "வஞ்சியே, நீ அஞ்சாதே. பிறப்பும் இறப்பும் இவ்வையகத்தில் புதுமையன்று. சாவிலே துன்பம் ஒன்றும் இல்லை. நாம் இருவரும் மீண்டும் இம்மண்ணில் பிறப்போம். அப்போது உன்னை மீண்டும் கண்டு அன்பு கொள்வேன். அப்பால் உடலும் உயிரும் ஒன்றென நாம் இல்லறம் காண்போம்" என்று புன்னகை பூக்கச் சொல்லி ஆவி நீங்கினான். இப்பிறப்பில் நீ குயிலாய் காட்சி கொடுக்கின்றாய்" என்று அந்த முனிவர் குயிலின் வரலாற்றைக் கூறி முடித்தார்.

முனிவர் சொன்ன செய்தி கேட்டு என் உள்ளம் நடுங்கியது. மேலும் நடப்பதை அறிய ஆவல் கொண்டேன். அந்த முனிவர் மேலும் பேசினார். "உன்னுடைய மன்னவன் இப்பிறப்பில் தொண்டை வளநாட்டில் கடற்கரைப் பட்டினம் ஒன்றில் பிறந்து வளர்கிறான். உன்னை ஒருநாள் சோலையினிடத்தே காண்பான். உள்ளம் உருக நீ பாடும் காதல் பாட்டினைக் கேட்பான். ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் காரணத்தால் அவன் உன்மேல் மீண்டும் காதல் கொள்வான்" என்றார். அது கேட்டு நான் வியப்படைந்தேன். "ஐயனே! இப்பிறப்பில் நானோ குயில் உருவம் கொண்டுள்ளேன். என் கோமானோ பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் நெஞ்சம் ஊடுருவிக் காதல் மலர்ந்தாலும், எங்ஙனம் எங்கள் திருமணம் நடக்கும்?" என்றேன்.

"பேதாய்! இப்பிறவியிலும் நீ விந்தியமலைச் சாரலில் உள்ள ஒரு வேடனுக்குக் கன்னியாகவே பிறந்தாய். தீவினைப் பயனாய் மாடன், குரங்கன் இருவருமே கொடும்பேய்களாக அலைகின்றனர். அவ்வாறு அவர்கள் காடு, மலை, மேடு, பள்ளமெல்லாம் சுற்றி அலைந்து திரிந்துவரும் வேளையிலே, உன்னைக் கண்டு விட்டனர். இப்பிறப்பிலும் நீ மன்னனையே மணப்பாய் என்றெண்ணி உன்னைச் சின்னக் குயிலாக்கி, நீ செல்லும் திசையெல்லாம் நின்னுடனே சுற்றி, சூழ்ச்சி பல செய்து வருகின்றனர். நீ இதனைத் தெரிகிலையோ?" என்றார் முனிவர்.

"ஐயோ! பேய்கள் என்னைப் பேதப்படுத்தி, பிறப்பையும் மறக்கச் செய்து வாதைப்படுத்தி வருமாகில், யான் மீண்டும் என் மன்னவனைக் கண்டால் என் செய்வேன்? இப்பேய்கள் அவருக்குத் தீங்கிழைத்தால் நான் எங்ஙனம் தடுப்பேன்? தேவரே! இதற்கு ஓர் மாற்று இல்லையா?" என்று மனம் மறுகி நான் கேட்டேன்.

மாமுனிவரும், "பெண்ணே! வேந்தன் மகன் உன்னைக் கண்டு நேசம் காட்டி நிற்கையில், இப்பேய் இரண்டும் மாயம் பல செய்யும். அவனும் அதன் பயனாய் உன்பால் ஐயம் கொள்வான். சினம் கொண்டு கன்னி உன்னை விட்டுவிட உறுதி கொள்வான். இதற்கப்பால் நேருவதையெல்லாம் நீயே அறிந்துகொள்வாய், எனக்கு சந்தியாவந்தனம் ஆற்றுகின்ற நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி அவரும் காற்றிலே மறைந்து போனார்.

இதுவே என்னுடைய பழம்பிறப்பின் கதை. இப்பிறப்பின் பின்னைப் பகுதியிலே நடந்தவற்றைப் பார்த்திபனே, நீர் முற்றிலும் அறிவீர்!

" .......................... ஆரியரே!
காத லருள்புரிவீர் காதலில்லை என்றிடிலோ
சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்!"

என்று அருவிபாய் கண்களோடு பூங்குயில் உண்மையை ஒளிக்காது சாற்றியது. கொலைகாரனின் நெஞ்சையும் தன்னோடு வாரிச் செல்லும் அன்பிற் பெரிய அச்சிறு கருங்குயில் தன் துன்பக் கதையை முடித்தது. எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்ட பெரிய பாவலனின் உள்ளம் அது கேட்டுப் பாகாய் - அனலில் இட்ட அரக்காய் உருகியது. அவ்வேளையிலே வியன் உலகும் விரி நீலவானும், உயிர்க்குலம் அனைத்தின் கண்ணும் மனமும் களிகூரத் தன் காவலனின் செந்தாமரைக் கரங்களிலே பைங்குயில் பாய்ந்து விழுந்தது.

இன்பவெறி கொண்டு தன் இணைக்கரத்தால் அதனை அவன் ஏந்தி, இருவிழியால் நோக்கினான். ஆராத அன்போடு அதனை முத்தமிட்டான். என்ன விந்தை! அடுத்த கணம் இன்பக் குயிலைக் காணவில்லை, நாடகத்தின் காட்சியும் திரையும் மாறுகின்றன. கதையிலே நெஞ்சையள்ளும் ஒரு நல்ல திருப்பம் நேருகிறது. அற்புதக் காட்சிபோல் அங்கு - அவ்விடத்தில் கோலமெல்லாம் குன்றெனத் திரண்ட பெண் ஒருத்தி நின்றாள். அவள் அழகு பேசும் திறமன்று என்று சொல்லி அப்பெண்மணியை முத்தமிட்டான். அந்த மோனப் பெரு மயக்கத்தில் சித்தம் மயங்கினான். தன்னையும் மறந்து கிடந்தான். பின்னர் சட்டென கண்விழித்தான்.

"........... பிறகு விழி திறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம்
ஒத்திருக்க நாம் வீட்டில் உள்ளோம் எனவுணர்ந்தேன்".

என்று கவிக்குயில் பாரதியின் வான்கவிதை முடிகிறது. இதுவே வண்ணக் குயிலின் உள்ளக் கதை. வான்குயிலின் புறவாழ்க்கை தத்துவத்தைப் பொதித்து மூடியிருக்கும் மாய வாழ்க்கையின் பெருவிளக்கம். இதனை வெறும் கதையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மகாகவி இந்தக் 'குயில்பாட்டின்' மூலம் அரிய வேதாந்தக் கருத்துக்களை சொல்ல விரும்புகிறார். அது என்ன? என்பதை அனுபவத்தால், அறிவின் தேடலால் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் 'குயில்பாட்டின்' இறுதியில் வரும் மகாகவியின் சில வரிகளைக் கொடுத்திருந்தோம். அது: "ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரோ?" என்பது. இப்போது அந்தகதையின் வேதாந்தக் கருத்து என்ன என்பதை அறிந்து கொண்டவர்கள் சிந்தியுங்கள். மற்றவர்கள் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதையைப் படித்துவிட்டு, "குயில் பாட்டை"ப் படியுங்கள். பொருள் புரியும். பின்னர் சிந்தியுங்கள். அதில் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்று. அப்படியும் முடியவில்லையானால், பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதற்கான விளக்கத்தினை வேறொரு பாடத்தில் கொடுக்க முயற்சிக்கிறோம்.

வினாக்கள்.

1. மேனாட்டு அறிஞர்கள் கவிதைகளை எத்தனை வகையாகப் பிரித்தார்கள்? அவை என்னென்ன?
2. புதுவை கடற்கரையில் காலை இளம் பரிதி வீசும் கதிர்கள் காட்டும் அழகிய காட்சிகளை விளக்குக.
3. கவிஞரிடம் குயில் நான்காம் நாள் வரச்சொல்லி வழிஅனுப்பும் வார்த்தைகள் எவை?
4. குரங்கினிடம் குயில் பேசும் பசப்பு மொழிகள் எவை?
5. காளையிடம் குயில் பேசும் மயக்கு மொழிகள் எவை?
6. உங்கள் கருத்துக்கேற்ப குயில் பாட்டின் மூலம் பாரதி என்ன வேதாந்தக் கருத்தைச் சொல்ல வருகிறார் என்பதை ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரையாக எழுதுக.

(குறிப்பு: குயில் பாட்டின்' உட்கருத்தை வேதாந்தமாகப் பொருளுரைக்க சில குறிப்புகளை உங்களுக்குத் தருகிறோம். இதுதான் பாரதி சொல்ல விரும்பிய வேதாந்தக் கருத்து என்று நாம் சொல்ல வரவில்லை. இப்படியும் பொருள் கொள்ளலாமோ என்ற ஆலோசனையைத்தான் வழங்குகிறோம். மாணிக்கவாசக சுவாமிகள் ஜீவாத்மாக்களை குயிலாக வருணிக்கிறார். பூமியில் பிறந்த ஜீவாத்மா பரமாத்மாவை அடைதலே நோக்கமென்றால், அதற்கு இடையூறாக இருப்பவை பலப்பல. மனித மனத்தைக் குரங்கோடு ஒப்பிடுவார்கள். குரங்கு ஓரிடத்தினின்றும் வேறிடம் தாவும் பண்புபோல மனமும் தாவும் தன்மையுடையது. மனிதன் தனது Ego அதாவது ஆணவ மலத்தினாலும் உண்மை உணராமல் போகலாம். காளை மாட்டின் முரட்டுத்தனமும் பலமும் ஆணவத்தோடு ஒப்பிடலாம் அல்லவா?
ஐம்பொறிகளின் ஆதிக்கத்தினின்றும் விடுபட்டு பரமாத்மாவை உணரும் தன்மை வாய்க்கப் பெற்றால் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் ஏற்படும். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் எனும் 'சிலப்பதிகார' நீதியின்படி பிறவிகள்தோறும் செய்த வினை தொடரும். இதுபோன்ற கருத்துக்களை மனதில் கொண்டு 'குயில் பாட்டு'க்கு வேதாந்த விளக்கம் அளிக்க முயலுங்கள். இதுதான் அறுதியான கருத்து என்பதில்லை, இது ஒரு வழிகாட்டும் முயற்சியே. இனி தொடருங்கள், கட்டுரை வரைய.)

1 comment:

  1. அற்புதமான விளக்கம்.
    நெஞ்சை உருக வைக்கிறது.

    ReplyDelete

You can send your comments