Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, December 22, 2012

மகாகவி பாரதியாரின் இசைக்கோட்பாடுகள்


மகாகவி பாரதியாரின் இசைக்கோட்பாடுகள்

முன்னுரை:

மகாகவி பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர். தினந்தினம் 'உண்டு உறங்கி பிறருக்கு இடர்செயும் கலக மானுடப் பூச்சிகள்' போலன்றி அவன் தனித்துவங்களுடன் வாழ்ந்தவன். அவனுடைய சிந்தனைகள் மிகவும் உன்னதமான வைகள். தான் உயர்ந்த அளவுக்குப் பிறரும் உயரவேண்டும் எனும் கருத்துடையவன் பாரதி. அவன் எழுதிய ஒவ்வொரு எழுத்தும், அவனது கவிதைகள், கட்டுரைகள், கதைகள், பத்திரிகைக் குறிப்புகள் என அத்தனையும் அமரத்துவம் வாய்ந்தவை.

"தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி
கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"

என்று இறைவனிடம் எக்காளமிட்டவன். பொதுவாகக் கவிஞர்கள் ஏதேனுமொரு அமர காப்பியத்தைப் படைத்து அதனால் புகழ் பெறுவார்கள். ஆனால் பாரதியோ அவன் வாழ்ந்த காலத்தின் கண்ணாடியாக இருந்தான். அவன் வாழ்ந்த காலத்திய சமூகம் எப்படியிருந்தது; அரசியல் எப்படி இருந்தது; மனிதர்கள் எப்படி இருந்தார்கள்; அவர்தம் மனோபாவம் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இவன் படைப்புகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் அவன் இன்றைக்கும் போற்றிப் புகழப்படுகிறான்.

மகாகவி பாரதிக்குப் பல துறைகளில் நல்ல புலமை இருந்தது. இசையும் கவிதையும் அவனது மூச்சுக் காற்றாக விளங்கியது. இசையின் நுணுக்கங்களை நன்குணர்ந்த இசை மேதை பாரதி. அவன் குரலைக் கேட்கும் பாக்கியம் நம் தலைமுறையினருக்குக் கிடைக்க வில்லையாயினும், வீரக்கனல் வ.வெ.சு.ஐயர் ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரையில் சொல்லு கிறார், "புதுச்சேரி கடற்கரையில் பாரதி தனது கவிதைகளைத் தேனினும் இனிய அவனது அற்புதக் குரலெடுத்து உரத்தக் குரலில் பாடுகின்றபோது கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் புண்ணியவான்கள்" என்கிறார் அவர். இனி மகாகவியின் இசைக் கோட்பாடுகள் குறித்த சில செய்திகளைப் பார்க்கலாம்.

குயிலின் இசை:

மகாகவி இயற்றிய முப்பெரும் காப்பியங்களில் "குயில் பாட்டும்" ஒன்று. இந்த குயில்பாட்டு அரிய பல செய்திகளை உள்ளடக்கியது. புதுவை கடற்கரையில் அலைகள் எழுப்பும் ஓசை கவிஞருக்கு இசையாக, அதிலும் வேதப் பொருளை எடுத்துரைக்கும் இசையாக வந்து காதில் கேட்கிறது. அருகேயுள்ள மாந்தோப்பிலிருந்து தேவகானம் இசைக்கும் குயிலின் இசை அவரது சிந்தைக்கு அரிய பொருளையெல்லாம் எடுத்து இயம்புகிறது. அப்படி அந்தக் குயிலின் இசை சொன்ன வரலாற்றைத்தான் குயில் பாட்டாக அவர் தந்திருக்கிறார்.

புதுவை கடற்கரையில் காலை இளம்பரிதியின் கதிர்வீச்சில் காணப்படும் விந்தைகளை யெல்லாம் அடுக்கடுக்காக இசையால் எடுத்தியம்புகிறார் பாரதியார். அவர் சொற்களைச் சிறிது செவி மடுப்போம் வாரீர்.

"காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்
தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?"

எழுஞாயிறின் வண்ணக் கதிர்களும், அவைகளின் தங்க நிற காட்சிகளும் கவிஞர் நெஞ்சில் கவிதையாக மட்டுமல்ல இசை வெள்ளமாகவும் வந்து பாய்கிறது. குயிலின் இன்னிசைக் குரல் தேவலோகத்து அமுதமாக ருசிக்கிறது கவிஞருக்கு. அவர் சொல்கிறார்.

"இன்னமுதைக் காற்றினிடை எங்கும் கலந்ததுபோல்
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகைனிதாய் வந்து பரவுதல் போல்"

மின்னலுக்குச் சுவையுண்டா? அமுதத்தைக் காற்றில் கலந்துவிட்டால், அந்தக் காற்றிலெழும் ஓசையும் இனித்திடுமா? ஆம், பாரதிக்கு இனிக்கிறது அந்த இசை. இந்த இசைதான் எத்தனை வகை? அவற்றில் மயங்காதார் யார்? மனிதன் மட்டுமா இசைக்கு இணங்குகிறான், இல்லையில்லை. "காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்றுரைப்பார்" என்கிறார். இந்த மேற்கோள் ஒரு சம்ஸ்கிருத வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு. புதுவை நகர் மாந்தோப்பில் வேடர் வராத விருந்துத் திருநாளில் ஒருநாள், மரக்கிளை ஒன்றில் அமர்ந்திருந்த குயில் தன் இனிய குரலெடுத்துப் பாடுகிறது. மின்னலின் சுவை என்று முன்பு சொன்ன பாரதி இங்கு நெருப்புச்சுவை மிகுந்த பாடல் என்கிறார். காதல் அப்படி சுடுகிறதாம். அந்தக் குயில் எழுப்பும் நாதக் கனலிலே நம் உயிரைப் போக்கிடலாம் என்றுகூட எண்ணத் தலைப்படுகிறார் கவிஞர். இப்படி இசையின் இனிய பெட்டகமாகத் தன் குயில் பாட்டைப் பாடியிருக்கிறார் பாரதியார்.

இசையுணர்வு:

இந்த பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்குள், இசையின் மூலம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் இயல்பு மனிதனுக்கு மட்டும்தான் இருக்கிறது. பறவைகளும் அவைகளுக்குரித்தான குரலில் இனிய இசையை வெளிப்படுத்துகிறது. அவற்றின் குரல் களில்தான் எத்தனை எத்தனை உணர்வுகள். ஆடி மாதம் தொடங்கிய நேரத்தில் 'அக்கா'க் குருவிகள் "அக்கோ" என்று இனிய குரலெழுப்ப, மற்றொரு குரிவியும் அதற்கு பதிலளித்து அக்கோ குரல் எழுப்புவதைக் கேட்கதார் யார்? மிருகங்களுக்கு இல்லாத இந்த இசை ஞானம் பறவைகளுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டிருக்கும். இந்த பூமியிலிருந்து வெகு தூரம் மேலே மேலே சென்று பறந்து வரும்போது இவ்வுலகம் கனவுலகம் போலத் தெரிகின்றதோ? அந்த மகிழ்ச்சியில் விட்டுவிடுதலையாகி நிற்கும் உணர்வில்தான் இசை பிறக்கிறதோ? இருக்கலாம். வானம்பாடி, குயில் போன்ற பறவைகள் இயல்பில் வானவெளியில் பறக்க முடிகிறது. மனிதனுக்கு அப்படி பறக்க இயலாமல் போனாலும், உணர்வால், மனத்தால் வான வெளியில் பறந்து திரிகிறான். அதனால் அவன் மனத்திலும் இயல்பாக உணர்ச்சிகளை வெளிப் படுத்தும் விதமாக இசை வெளிவருகிறது.

மகாகவி பாரதி 'சங்கீத விஷயம்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் சங்கீதம் எனும் இசை பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார். இசையைப் பற்றி அறிந்த அனைவருமே படிக்க வேண்டிய அரிய கட்டுரை அது. அதில் 'நவரஸங்களை'ப் பற்றி விளக்கு கிறார். மனித உணர்வுகள் வெளிவரும்போது அதில் இந்த நவரஸங்களில் ஏதாவதொன்று இருந்தே ஆகவேண்டும். அவை:-

1. வீரம் 2. ரெளத்ரம் (கோபம்) 3. அத்புதம் (ஆச்சர்யம்) 4. சாந்தம் (அமைதி) 5. பயாநகம் (பயம்) 6. பீபத்ஸம் (வெறுப்பு) 7. ஹாஸ்யம் (நகைச்சுவை) 8. கருணை, சோகம் (துயரம் அல்லது அவலம்) நிறைவாக 9. சிருங்காரம் (காதல்)

இந்த ஒன்பது உணர்வுகளும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் இசை வடிவில் பாடலாக அது வெளிவரும் போது அந்தந்த பாடலின் கருத்து மட்டுமல்ல, அந்தந்த ராகங்களேகூட இந்த ரஸங்களில் ஏதாவதொன்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நல்ல கவிஞன் இந்த ரஸங்களை உணர்ந்தவனாக இருப்பான் என்கிறார் பாரதி. அவர் சொல்கிறார், பிறர் துன்பம் கண்டு பொறாத 'புண்ணியமூர்த்தி' ஒருவனையும், மற்றவர் உணர்வுகளை மதிக்காத ஒருவனையும் கவிதை எழுதச் சொன்னால், முதலவன் எழுதுவது கவிதையாக இருக்கும், மற்றவனுடையது சொற்களைப் பின்னிய எழுத்து வடிவங்களாக இருக்குமென்கிறார் பாரதி.

ரஸஞானம்.

எந்தவொரு பாடலிலும் ரஸஞானம் இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடு. அப்படி ரஸஞானமில்லாதபடி பாடல்களைப் பாடுவோர் யாராயினும், அவர்கள் சங்கீதத்தின் உயிரைநீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தை மட்டும் காட்டுகிறார்கள் என்று கடுமையாகச் சொல்கிறார். ஆகவே சங்கீதம் பாடுவோர் இந்த ரஸ உணர்வு படைத்த வர்களாக இருத்தல் வேண்டுமென்பது அவரது கூற்று.

பற்பல மகான்களுடைய பாடல்களைப் பாடுவதால் மட்டுமே ஒருவன் நல்ல சங்கீத வித்வானாக ஆவதில்லை. அந்தப் பாடல்களில் அவற்றை இயற்றிய மகான்கள் புகுத்தியிருக்கும் ரஸம் வெளிப்படும்படி பாடவேண்டுமென்பது பாரதியின் கட்சி. எந்த இசை நிகழ்ச்சிக்குப் போனாலும் குறிப்பிட்ட ஒருசில பாடல்களை மட்டும்தான் வித்வான்கள் பாடுகிறார்கள் என்று பாரதி குறைப்பட்டுக் கொள்கிறார். புதிய புதிய பாடல்களை உருவாக்க வேண்டும். அதற்காக பூர்வீக மகான்களின் பாடல்களை மறக்கச் சொல்லவில்லை. அவற்றையும் பொருள் புரிந்து பாட வேண்டும், அதோடு புதிய பாடல்களை இயற்ற முயற்சி செய்தல் வேண்டும் என்கிறார் பாரதி.

பூர்வ காலத்து மகான்களுக்குத் தெய்வ அனுக்கிரகம் இருந்தது, எங்களுக்கில்லையே என்று சாக்கு போக்கு சொல்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நீயும் பக்தியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும் இடைவிடாத உழைப்பினாலும் அப்படி அமரத்துவம் வாய்ந்த ரஸம் மிகுந்த பாடல்களை இயற்ற முடியும் என்கிறார் பாரதி. முற்காலத்தில் அரசர்களும், செல்வந்தர்களும் இருந்தார்கள் பாடகர்களை ஆதரிக்க. இப்போது நம் நாட்டில் மக்கள்தான் ராஜாக்கள். அவர்கள் இசைக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டுமென்பது பாரதியின் கருத்து.

பாட்டும் பாடகர்களும்

ஒரு பாடலென்று எடுத்துக் கொண்டால், அந்தப் பாட்டுக்குத்தான் தாளம் அமைய வேண்டுமே தவிர தாளத்திற்கேற்ப பாடல் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் பாரதியார். திரைப்படங்களில் இப்போதெல்லாம் சொல்லும் வார்த்தைகள், 'மெட்டுக்குப் பாட்டு' என்பது. இது சுத்த அபத்தம் என்பது பாரதியாரின் எண்ணம். 'சக்கனி ராஜ மார்க்கமு' என்றொரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை. 'அகண்ட ராஜபாட்டைகள் இருக்கும்போது ராமா! என்னை சந்திலும் பொந்திலும் வரும்படி செய்யலாமா?' என்ற பொருளில் வரும் இந்தப் பாடலின் ராகத்தைப் பாடும்போது அந்த தொனி ராகத்தில் இருக்கும் என்கிறார் அவர்.

பாடகர்கள் தங்கள் குரல் வளத்தைப் பேணிக் காக்க வேண்டுமென்பது பாரதியாரின் அறிவுரை. அவர் சொல்கிறார்:--

"சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு (அவர் எழுதிய காலத்தில்) நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீகாசியில் வாசஞ்செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றபடி பொதுவாக வித்வான் களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பு உண்டாயிற்று. ஒன்றுபோல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயம் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப் பற்றி சில வித்வான்களிடம் கேட்டேன். 'வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள். புளியும், மிளகாயும் சேர்ப்ப தில்லை. இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலேதான் தொண்ட கெட்டுப் போகிறது' என்றனர். அது ஒரு சிறிது வாஸ்தவம்தான் என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும். சாஸ்திரப்படி ஆகார சாதனம் செய்யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவு பட்டிருக்கிறது."

நல்ல சங்கீதம் பழக, உள்ளத்திலே வீரம் இருக்க வேண்டுமென்கிறார் பாரதி. "உள்ளத்தில் 'சத்து' இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றி பேசவேண்டியதில்லை" என்கிறார் அவர்.

பாட்டு வகைகள்:

தமிழ் நாட்டில் பெண்கள் பாடுவதற்கு பல வகையான பாடல்கள் உண்டு. அவை கும்மி, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலுங்குப் பாட்டு, அம்மானை, தாலாட்டு முதலியன. தமிழ்ப் பெண்கள் பாடல்களுக்கு கையெடுத்துக் கும்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அவற்றில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் பல உண்டு என்கிறார் அவர்.

வாத்திய இசை கற்க விரும்பும் பெண்கள் வீணையைப் பழகவேண்டும் என்பது பாரதியின் விருப்பம். வீணை கற்பது சற்று சிரமம் என்றாலும் போகப் போக அது பழகிவிடும் என்கிறார். இந்தக் கருவியை வாசிக்கக் கற்றுவிட்டால் அதுதான் உண்மையான சங்கீத தேர்ச்சி என்கிறார் அவர்.

ஆணாயினும் பெண்ணாயினும் தங்களுக்கு அமைந்த தொண்ட குரல் வளத்தோடுதான் பாடவேண்டுமே தவிர பொய்த்தொண்டை எனும் குரல் மாற்றிப் பாடுவதை அவர் ஏற்கவில்லை. சங்கீதத்தில் ஆண்களுக்குப் பெண்களுக்கு என்று பல வசதியான பிரிவுகள் இருந்தபோதும், இருபாலரும் பாடத்தக்கப் பல பாடல்கள் உண்டு என்று பாரதி குறிக்கிறார். நமது வேதாந்தக் கருத்துக்களில் ஜீவாத்மா, பரமாத்மா கருத்துக்கள் உண்டு. அப்படி ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பக்தி மார்க்கப் பாடல்கள் பல உண்டு என்று சொல்லி அவற்றை அவர் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

திருவாசகத்தில் எம்பாவை, அம்மானை, தும்பி, குயில், கிளி இவைகளின் தூது, தெள்ளேணம், சுண்ணம் இடித்தல், சாழல், உந்தி, பூவல்லி, தோணேக்கம், ஊசல், துயிலெழுப்புதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார். இவற்றில் தெள்ளேணம் என்பது நடுவில் ஒரு முரசை வைத்து பெண்கள் அதைச் சுற்றியிருந்து இரு கைகளிலும் கோல் வைத்துக் கொண்டு அதனைக் கொட்டி அந்தத் தாளத்துக் கேற்ப இசையமைத்துப் பாடுதல். பூவல்லி என்பது பூ தொடுத்துக் கொண்டே பாடுவது. தோணேக்கம் என்பது, பெண்கள் வட்டமாக நின்றுகொண்டு ஒருவர் தோள் மீது கைபோட்டுக் கொண்டு பாடுவது. இவையெல்லாம் காலவோட்டத்தில் இல்லாமலே போய்விட்டது வருந்துதற்குரியது. தோணேக்கம் என்பது இப்பொழுதும் வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் குறிப்பாக மேகாலயா, நாகாலாந்து போன்றவிடங்களில் ஆடப்படுகின்றன.

குழந்தைகளுக்குரிய தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பணி முதலிய பாடல்களையும் பாரதி குறிப்பிட்டுச் சொல்கிறார். குடும்பத்துப் பெண்கள் திருமணங்களில் நலுங்கு, பத்யம், ஊஞ்சல் போன்றவற்றையும், இளஞ்சிறார்கள் கும்மி, அம்மானை, தூது, மாலை, சோபனம் போன்றவற்றைப் பாடவேண்டுமென்கிறார்.

இசையை வளர்க்க பெண்கள் செய்ய வேண்டியவை.

பெண்கள் பொது இடங்களில் பாட நேரும்போது கூச்சப்பட்டுக் கொண்டு பாடாமல் இருந்துவிடக் கூடாது. இசை, நடனம் போன்ற வித்தைகளைக் கற்பதில் கூச்சத்திற்கு இடமில்லை. பெண்கள் கல்வியில் தேர்ச்சி அடைவதைப் போலவே நமது பாரம்பரியக் கலைகளிலும் தேர்ச்சியடைய வேண்டுமென்பது பாரதியின் விருப்பம். குறிப்பாக நம் தமிழ் நாட்டுப் பெண்களுக்காகவே அவர் ஒரு அறிவுரையைக் கூறியிருக்கிறார். அதனை பெண்கள் அனைவரும் தங்கள் மனங்களில் வாங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக அந்த அறிவுரையை அப்படியே தருகிறேன். அது:--

"தமிழ் நாட்டுப் பெண்கள், திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் ஆரத்தி எடுக்கும்போது பார்சி மெட்டில் பாடி ஆரத்தி எடுப்பது; இங்கிலீஷ் பாடி நலுங்கு நடத்துதல் முதலான கோரமான விவகாரங்களுக்குத் துணை செய்யக் கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையும் காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுகளை கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்துவிட்டால் பெரிய உபகாரம்".

இங்கு அவர் குறிப்பிடம் நாடகப் பாட்டுகள் என்பது அன்றைய தினம் திரைப்படம், தொலைக்காட்சி இவைகள் இல்லாத காரணத்தால்தான் இன்றைய சூழ்நிலையில் எவையெவையெல்லாம் இந்த வரையரையுள் வருகின்றன என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, பாரதியின் இசைக் கோட்பாடுகளைக் குறித்த சில உரத்த சிந்தனைகளை உங்கள் முன்பு வைக்கிறேன். நன்றி.
No comments:

Post a Comment

You can send your comments