Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Thursday, January 3, 2013

"வழி வழி பாரதி"


"வழி வழி பாரதி"

தஞ்சை நகரம் தமிழகத்துக்கு அளித்த பெரும் புலவர்களில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் ஒருவர். நல்லதொரு குடும்பத்தின் வாரிசு. தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர். பாரதியை முழுமையாக மொழியாக்கம் செய்தவர். மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக நாநிலம் போற்றும் வகையில் மொழிபெயர்ப்புச் செய்தவர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 'முதுமுனைவர்' எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். பாரதி அறிஞர், கவிஞர் திருலோக சீத்தாராம் அவர்களின் ஞானச் சீடர். பழகுதற்கு இனியர். நடமாடும் பல்கலைக் கழகம். பல நூறு முனைவர்கள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். அவர் பாரதி குறித்து "வழி வழி பாரதி" என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதியை இப்போது தருகிறேன். பாரதி உலகக் கவிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவனா, அல்லது நம் உடன் பிறந்தவர்களாலேயே குறைவாக மதிப்பிடப்பட வேண்டியவனா என்பதை இந்தப் பகுதி ஆணி அறைந்தாற்போல அறிவிக்கும். தமிழ்நாடு செய்த தவப் பயன் பாரதி இங்கு வந்து பிறந்தான். அவன் புகழை அறியாதோரைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அறிந்தோர் மேலும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.

இனி "வழி வழி பாரதி"யிலிருந்து:--

..."பாரதிதாசன் கூறியதைக் கேளீர்: "என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துக்களுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்." பாரதியாரின் தொடர்பே தம் பழக்க வழக்கங்களிலும் சிந்தனையிலும், தாமே அறியாதவாறு சில மாற்றங்களைச் செய்தது என்றும் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுவுடமை வாதி. நல்ல கவிஞர். அவர் சொல்லுகிறார்:--

"பாரதிக்கு நிகர் பாரதியே மண்ணில்
யார் எதிர்த்தாலும் மக்கள்
சீர் உயர்த்தும் பணியில்
பாரதிக்கு நிகர் பாரதியே."

பாரதியார் வேதத்தைப் போற்றியவர். வேதம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளாத, அறிந்து கொள்ள விரும்பாத அன்பர்களே, அதைப் பழித்தும், தெழித்தும், இழித்தும் பேசத் தலைப்படுகின்றனர். வேதம் காட்டும் ஆயிரமாயிரமாம் அறிவியற் செய்திகளை உணர்ந்து, மேலை நாட்டோர் இன்றும் அடைந்து வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

வேதம் என்றால் அறிவு, அறிதல் என்று பொருள்.

ஞானம் வேண்டாம் என்று கூறலாமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பர். பாரதி "வேதம் புதுமை செய்" என்று ஆணையிடுகிறார். அப்படியென்றால் என்ன பொருள்? பழைய உண்மைகளுக்குப் புதிய துலக்கங்கள் தருதல் வேண்டும் என்பதே. வேதமறிந்தவன் பார்ப்பான். பார்ப்பான் வேதமறிந்தவன் என்று கூறவில்லை. நன்றாகக் கவனியுங்கள். வேதம் அறிந்தவன் பார்ப்பான், அதாவது யார் வேதம் அறிந்திருந்தாலும் அவன் அந்தணன். ஆக, பாரதி வேதம் புதுமை செய்தார். வேதம் சொன்னபடி 'பார்ப்பான்' என்றால் யார் என்பதை எடுத்துக் காட்டினார்.

"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."

எவையெல்லாம் வேதம் அல்ல என்பதையும் அவர் காட்டுகிறார்.

"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ஓதிடும் வேதங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்."

உலகில் பற்பல வேதங்கள் உள. தெய்வம் என்று ஒன்று கிடையாது என்று சாற்றிடும் மீமாஞ்சகர் வேதம், வேதம் இல்லை என்கிறார் பாரதி. ஸ்மிருதிகள் மாறிப் பயிலும் இயல்பின என்கிறார் அவர். யார் மேலோர் என்பதற்கு அவர் தரும் விடை.

"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்"

தவம் என்றால் என்ன? இதற்கு பாரதி தரும் விடை.

"உற்றவர் நட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை."

'யோகி' என்பவன் யார்? கேளுங்கள், அதற்கு பாரதி தந்த விடை.

"பக்கத் திருப்பவர் துன்பம் தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒகத் திருந்தி உலகோர் நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி."

'யோகம்', 'யாகம்', 'ஞானம்' இவற்றை விளக்குக என்றால் பாரதி தந்த விடை:

"ஊருக்குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்."

'முக்தி' என்கிறார்களே அப்படியென்றால் என்ன? அதற்கு பாரதியின் பதில்.

"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி."

"நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்ற வினாவுக்கு பாரதி தரும் விடை.

"நன்றே செயல் வேண்டும் - அதை
நாளை செய்வோம் என்று போக்காமே
இன்றே செயல் வேண்டும் - அதை
இப்பொழுதே செய்திடல் வேண்டும்
அன்றிப் புன் சோம்பரினால் - இதை
ஆற்றுவம் நாளை என்றிருப்பீரேல்
கொன்றுமை நாளைக்கே - நமன்
கொண்டு சென்றால் பின்னர் ஏது செய்வீர்!"

செய்கின்ற தொழில்களில் எந்தத் தொழில் நல்ல தொழில்?

"யாதானும் தொழில் செய்வாம்
யாதும் அவள் தொழிலாம்."

செய்யும் தொழிலில் இழிவு கிடையாதா?

"தொழில் சோம்பரைப் போல் இழிவு இல்லை."

பாரதியிடம் போய் "உங்களுடைய தொழில் என்ன?" என்று கேட்டால்

"நமக்குத் தொழில் கவிதை" என்றார்.

சரி! கடமைதான் யாது?

"கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நட்டிருப்போர் பெயர் பலகூறி
அல்லா, யெனோவா எனத் தொழுது அன்புறும்
தேவரும் தானாய், திருமகள், பாரதி
உமை யெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்......"

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பாரதியாரிடம் நாம் கற்க வேண்டியவை. தமிழ்ப் பற்று, தாய்மொழிப் பற்று, பிறமொழிப் பயிற்சி, தமிழ்நாட்டுப் பற்று, பாரத தேசப் பற்று, உலக நேயம்.

"நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"

இந்நாள் வரை நான் சரியாக வாழவில்லையே. கவலைகள் என் மனத்தை மொய்க்கின்றனவே. என்ன செய்ய?

"சென்றது இனி மீளாது, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டா,

எழு, விழி, உணர்வு உறு!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று, விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

"செத்த பின் சிவலோகம், வைகுந்தம் சென்றிடலாம் என்று எண்ணாதே இத்தரை மீதினிலே இந்த நாளினிலே, இப்பொழுதே முத்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையில் களித்திடு, ஏங்கும் மனத்தை இளைப்பாற்றச் செய்" இவைதான் பாரதி நமக்களித்த அறிவுச் செல்வம். வேதம் புதுமை செய்தது.

No comments:

Post a Comment

You can send your comments