Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Friday, January 4, 2013

தமிழ்நாட்டு மாதருக்கு.

                                              தமிழ்நாட்டு மாதருக்கு......1

இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண் மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளிநாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒரு உபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்) காளிதாஸன் முதலிய மஹா கவிகளின் காவியங்கள், ராமாயணம், பாரதம், பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் -- இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய் அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞாத் தெளிவும் நாகரிகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர்.

Rabindranath Tagore

இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந்நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் 'இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்' என்ற பொய் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும், பின்னிட்டு ரவீந்திரநாத் தாகூர், ஜகதீச சந்திர வஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், 'அடா! ஹிந்துக்கள் நாகரிகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா?' என்று வியப்பெய்தினர்.

தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலிஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையோ உண்மையெனக் கருதி மயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால், இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலிஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்து விட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று.
Swamy Vivekanandar

இப்படிப்பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞானபராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலிஷ் படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரிகத்தில் நம்பிக்கை செலுத்துவாராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக் கொண்டிருந்த போது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கியபோது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர்.

விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் மஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப்பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று.

அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றொர் இழிவாக நினைப்பதும் அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்தி படைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வர்வார்களாயின்; அதினின்றும் இங்குள்ள ஸ்திரிKஅளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்து விடும். இந்த விஷயத்தை ஏற்கனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள்.
Sarojini Naidu

வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதை எழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப் படுகின்றன. மேலும், இந்த ஸ்திரி இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தையொட்டி அற்புதமான பிரஸங்கங்கள் செய்து சிறந்த கீர்த்தியடைந்திருக்கிறார். மேலும், வங்காளி பாஷையிலே கவிதை எழுதுவோராகிய ஸ்ரீமதி காமினி ராய், ஸ்ரீமதி மனகுமாரி தேவி, ஸ்ரீமதி அனங்கமோஹின் தேவி என்ற மூன்று ஸ்திரிகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு பிரசுரம் செய்திருப்பதினின்றும் இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

(பாரதியின் இந்தக் கட்டுரை தொடரும்.....)

No comments:

Post a Comment

You can send your comments