திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
தஞ்சாவூர் வெ.கோபாலன்
அன்புடையீர்!
மகாகவி பாரதி ஓர் சகாப்தம். அந்த யுகபுருஷனின் படைப்புகளனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக திருவையாறு பாரதி இயக்கத்தின் இலக்கிய அங்கமான பாரதி இலக்கியப் பயிலகம் 16-1-2002 பொங்கல் தினத்தில் தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பாரதி இயக்கத்தின் இந்தப் புதிய அமைப்பினை வழிநடத்திச் செல்ல என்னைப் பணித்தனர். இவ்வமைப்பின் சார்பாக ஒவ்வோராண்டும் மாணவ மாணவியருக்குக் கோடைக்காலப் பயிற்சி முகாமொன்றினை நடத்தி வருகிறோம். அதுதவிர இளையோருக்கான கலைவிழா, இலக்கிய விழா, போட்டிகள் நடத்திப் பரிசுகள் தருகிறோம். முக்கியமான பணியாக பாரதியின் இலக்கியங்களை மாதந்தோறும் பாடங்களாக்கி பொதுமக்கள் படித்துப் பயன்பெறும் வகையில் இலவசமாக அஞ்சல் வழிக் கல்வித் திட்டத்தை நடத்தி வருகிறோம்.
எங்களது குறிக்கோள்:-
நாட்டுக்குழைத்த நல்லோர்களை நினைவு கூர்தல்
தியாகச் செம்மல்களின் தியாகங்களுக்கு தலைவணங்கி மரியாதை செய்தல்
தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களைப் பாராட்டி மகிழ்தல்
பாரதியின் அரிய கருத்துக்களை கூட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், விழாக்கள் அஞ்சல் வழியில் பாடம் நடத்துதல் போன்ற வகைகளில் பரப்பிடுதல்
பாரதி குறித்த ஆய்வுகளுக்குத் துணை புரிதல்
பற்பல சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தொண்டாற்றுதல்
2004ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, மகாகவியின் நினைவு நாளன்று எமது அஞ்சல் வழிக் கல்வி மூலம் முதல் பாடம் வெளியிடப்பட்டது. இந்தப் பாடங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று புத்தகமாக அச்சிடப்பட்டு பத்திரிகை செய்திகளைப் பார்த்து விண்ணப்பித்தவர்களுக்கும், பாரதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பாரதி அன்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 11-9-2004ல் தொடங்கிய இந்தத் திட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஒவ்வொரு மாத பாடத்திலும் சில கேள்விகள் கேட்கப்படும். பாடங்களைப் படிப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு விடைகளை எழுதி எமக்கு அனுப்ப வேண்டும். அவற்றை தக்கவர் ஒருவரிடம் கொடுத்து மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கொடுத்து, மறுமாத பாடப் புத்தகத்தில் சிறப்பாக விடையெழுதிய பத்துப் பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் ஆண்டின் நிறைவில் அந்த ஆண்டு முழுவதிலுமாக முதல் பத்து சிறப்பிடம் பெற்றவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், மற்றவர்களுக்கு பாரதியின் நூல் ஒன்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முதலாண்டு பாடங்களின் தலைப்புகள்:-
1. பாரதியின் வாழ்க்கை வரலாறு
2. மகாகவி பாரதியின் புதுவை வாழ்க்கை
3. மகாகவியின் குயிலும், கண்ணனும்
4. பாஞ்சாலி சபதமும், தேசபக்திப் பாடல்களும்
5. மகாகவி எழுதிய கட்டுரைகள்
6. மகாகவி எழுதிய கதைகள்
7. மகாகவி பாரதியின் நகைச்சுவை உணர்வு
8. நண்பர்கள் பார்வையில் பாரதி
9. பாரதிதாசன் கவிதைகளில் பாரதியார்
10. பாரதியின் சொல்லும் கருத்தும்
அஞ்சல் வழிப் பயிற்சித் திட்டத்தின் அடுத்த கட்டம் 11-9-2007 பாரதியின் நினைவு நாளன்று துவங்கியது. இந்தத் திட்டத்தில் சுமார் 350 பேர் கலந்து கொண்டு பாரதியைப் பற்றி அறிந்து கொண்டனர். முதல் திட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலரும், மற்றவர்கள் புதியவர்களாகவும் இந்தத் திட்டத்தில் பலனடைந்தனர். இந்தத் திட்டத்தில் மொத்தம் 12 பாடங்கள் வெளியிடப்பட்டன. அவை வருமாறு:-
1. எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு எழுதிய "சென்று போன நாட்கள்"
2. மகாகவி பாரதியின் பாடல்கள் ஓர் அறிமுகம்
3. மகாகவி பாரதியின் "குயில்பாட்டு" - திரு கு.ராஜவேலு
4. மகாகவியின் முதல் பத்திரிகை "சக்கரவர்த்தினி"
5. மகாகவி பாரதியாரின் நண்பர்கள்
6. பாரதி போற்றிய புரட்சி வீரர்கள்
7. பாரதி ஆசிரியராக இருந்த தினப்பத்திரிகை "விஜயா" கட்டுரைகள்
8. தமிழிலக்கிய மரபில் வந்த கவிஞர் பாரதியார்
9. பாரதியின் அறிவியல் பார்வை
10. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள்
11. இளசை மணியனின் பாரதி வழி
12. பாரதியும் சமூகமும் - தேசியக் கல்வி
இதன் மூன்றாம் ஆண்டு அஞ்சல் வழிப்பயிற்சி இம்முறை 11-12-2008 பாரதியார் பிறந்த தினத்தில், அவர் பிறந்த எட்டயபுரம் பாரதியான் வீட்டில் தொடங்கப்பட்டது. இளசை மணியன் இதனை துவக்கி வைத்தார். பாரதியார் இல்லத்திலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை மரியாதைகள் செய்தபின் இதன் முதல் பாடம் வெளியிடப்பட்டது. இந்தப் பாடத் திட்டத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட பாடங்களைப் படித்து அதிலுள்ள வினாக்களுக்கு விடைகளும் எழுதி வந்தனர். இதில் அடங்கிய பாடங்களாவன:-
1. கண்ணன் பாட்டு - உரையும் விளக்கமும்
2. பாஞ்சாலி சபதம் - முதல் பகுதி உரைநடையில்
3. பாஞ்சாலி சபதம் - இரண்டாம் பகுதி உரைநடையில்
4. தேசபக்திப் பாடல்களும் விளக்கங்களும்
5. தி.சா.ராஜுவின் "கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்"
6. பத்திரிகையாளர் பாரதி
7. பாரதியார் கட்டுரைகள் - "காமதேனு"
8. பாரதியார் கட்டுரைகள் - இரண்டாம் பாகம்
9. பாரதியார் எழுதிய "சங்கீத விஷயம்"
10. "என் தந்தை" பாரதி பற்றி சகுந்தலா பாரதி
11. பாரதியின் விஸ்வரூப தரிசனம்
12. எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் எழுந்த வரலாறு
இந்த வெவ்வேறு மூன்று பாடத் திட்டங்களிலும் இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என்று பலரும் பங்கு பெற்றனர். குறிப்பாக பாரதி அறிஞரும், சிறந்த கவிஞரும், 74வயது இளைஞருமான இளசை அருணா, 80 வயதைக் கடந்த சென்னை பாரதி சுராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் வேறு சில கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வாளர்களும், சென்னை பல்கலைக் கழகத்திலிருந்து முனைவர் பட்ட ஆய்வாளர்கள் சுமார் 17 பேரும் கலந்து கொண்டனர். திருவாரூரிலிருந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கல் பலரும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் பங்கு கொண்டது சிறப்பானது. திருக்காட்டுப் பள்ளி சிவசாமி அய்யர் பள்ளி மாணவன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கலந்து கொண்டது பாராட்டத் தகுந்தது.
மகாகவி பாரதியார் பற்றி பல்வேறு அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய நூல்களிலிருந்தும், கட்டுரைகளிலிருந்தும் பல பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருவாளர்கள் பெ.தூரன், தொ.மு.சி.ரகுநாதன், ரா.அ.பத்மநாபன், ப.ஜீவானந்தம், பெ.சு.மணி, முனைவர் தி.ந.ராமச்சந்திரன், இளசை மணியன், எழுத்தாளர் தி.சா.ராஜு, தா.பாண்டியன், இராமானுஜுலு நாயுடு, கு.ராஜவேலு, சகுந்தலா பாரதி, யதுகிரி அம்மாள், கவிஞர் பாரதிதாசன், முனைவர் ரா.மணிகண்டன், முனைவர் இரா.கலியபெருமாள், நல்லி குப்புசாமி செட்டி போன்ற பல தமிழறிஞர்களின் கட்டுரைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டது இந்தப் பாடங்கள். பாஞ்சாலி சபதத்தை உரைநடையில் கொடுத்தது மட்டும் ஆசிரியரின் கைவண்ணம்.
வரும் 18-4-2010 அன்று திருவையாறு ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் நடைபெறவிருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் 3ம் பாடத்திட்ட நிறைவு விழாவில் இனி தொடர வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.
இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களைப் படியுங்கள், உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். மேலும் மகாகவி பற்றி எழுதவும், வெளியிடவும் நீங்கள் கொடுக்கும் ஆதரவு உற்சாகத்தைத் தரும். நன்றி. வணக்கம்.
தஞ்சாவூர்/1-4-2010 வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்