Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

தேசபக்திப் பாடல்கள்


திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
இணைந்து வழங்கும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி -
பாடம்
தேசபக்திப் பாடல்கள்

(சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் சென்னையில் 1980ம் வருஷம் செப்டம்பர் மாதம் தொடங்கி 1982 செப்டம்பர் மாதம் வரையில் மயிலை இலக்கிய வட்டமும், பாரதிய வித்யா பவனத்தின் மயிலை கிளையும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த மகாகவி பற்றிய தொடர் சொற்பொழிவில் ஆற்றிய உரையிலிருந்து ஒரு சிறு பகுதியை உங்களுக்கு இந்த மாதப் பாடமாகக் கொடுக்கிறோம். அவருடைய சொற்பொழிவுகள் அனைத்தையும் படிக்க விரும்புவோர் சென்னை, பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ள "பாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை" எனும் நூலை வாங்கிப் படியுங்கள். வெளியீடு:-- "பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை 600004, தொலைபேசி: 044 - 24943074. விலை ரூ. 200/=)

அபிமானம் பலவகை
அபிமானம் என்பது பலவகைப்பட்டது. சாதியபிமானம், மதாபிமானம், தேசாபிமானம், மனிதாபிமானம், ஜீவாபிமானம் என்றெல்லாம் பல்வேறு அபிமானங்களுக்கு மனிதன் அடிமைப் பட்டிருக்கிறான். இந்த அபிமானங்களிலே சாதியபிமானத்தைப் பாரதியார் வெறுத்தார். அதிலும் ஏற்றத் தாழ்வுடைய சாதிப்பாகுபாட்டை ஒழிக்க விரும்பினார். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடி, பாப்பாவிலிருந்து தோன்றும் புதிய சமுதாயத்தைச் சாதி வேற்றுமையற்றதாகச் செய்ய முயன்றார். 'குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்று கூறி, ஒருகால், தொழில் வேறுபாடு காரணமாக வேறுபாடு தேவைப்படினும், அவற்றிடையே உயர்வு, தாழ்வு - அதாவது - இழிவு, சிறப்பு இருத்தல் கூடாது என்று கூறினார்.

பாரதியார் மதாபிமானத்தை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். ஆம்; 'எம்மதமும் சம்மதம்' என்ற நிபந்தனையோடு! தனது சொந்த மதமான இந்து மதத்திடமும் அவருக்குப் பற்று இருந்தது. ஆயினும், பிற மதங்களிடம் அவர் பகைமை காட்டவில்லை. கிறித்துவ மதத்தார் போற்றும் ஏசு பெருமானைப் புகழ்ந்து பாடினார். இஸ்லாமியர் வழிபடும் அல்லா மீதும் பாடி, அவரை வழிபட்டார். 'தியானத்தை ஏற்பார்களானால், நாத்திகர்களும் நம்மவர்களே' என்னும் கருத்தை உரைநடைக் கட்டுரையொன்றிலே வெளிப்படுத்தினார்.

பாரதியார் தேசாபிமானத்தை மதமாகக் கொண்டிருந்தார்.

'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே'

என்று அவர் இயற்றியுள்ள சூத்திரம் அவர் பின்பற்றிய தேசாபிமான மதத்தின் மந்திரம் ஆகும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்!'

என்பது தமிழனத்தாரின் மதாபிமானக் கொள்கை. இதற்குட்பட்டதே பாரதிக்கு இருந்த தேசாபிமானம்.

அவர் தேசாபிமானியாக இருந்தது குறுகிய உணர்வாலன்று; பிற தேசத்தின் ஆதிக்கத்திலிருந்து தன் தேசத்தை விடுவிக்க வேண்டுமென்ற விருப்பத்தாலாகும். அவர் காலத்திலே, ஆறு லட்சம் வெள்ளையர்கள் முப்பது கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்களே, அந்தக் கொடுமையை அழிக்கத்தான் மனிதாபிமானியான பாரதியார் தேசாபிமானியாகவும் வாழ்ந்தார். ஒவ்வொரு இந்தியனையும் தேசாபிமானியாக்கப் பாடுபட்டார்.

'பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு'

என்று தமது தாய்நாட்டைப் பெருமிதத்துடன் போற்றினார். 'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்றும் பாடி, தன் தாயகத்தின் எல்லையிலுள்ள இமயத்தின் பெருமையை இதய எழுச்சியோடு கூறினார். தேசாபிமானம் இல்லாதவனுக்கு மனிதாபிமானமும் இருக்காது என்பது பாரதியின் சித்தாந்தம். தேசாபிமானமின்றிப் பரதேசிகளாக வந்த வெள்ளைப் பரங்கியர்களிடம் உத்தியோகம் பெற்று வயிறு வளர்த்தவர்களைப் பார்த்து, 'நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' என்று சாடினார்.

'இந்தியா'வும் 'பாரத'மும்
பாரதியாரின் தேசாபிமானம் தன்மானத்தையும் தழுவியதாகும். தனது தேசத்தின் பழம் பெருமைகளைக் காப்பதிலேயும் வளர்ப்பதிலேயும் அவர் கண்ணுங் கருத்துமாக இருந்தார். நமது தாய்நாடு இந்தியா என்றும் அழைக்கப்படுகிறது. இது, நமது முன்னோரால் வைக்கப்பட்ட பெயர் அன்று. இயற்கையாக வந்ததும் அன்று. இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்த அன்னியன் எவனோ சிந்து நதியை நினைத்துக்கொண்டு அதைச் சரிவரச் சொல்ல முடியாமல் உளறினான். அதுவே 'இந்தியா' என்று திரிந்துவிட்டது. இந்தப் பெயர் பாரதியைக் கவரவில்லை. தன் பாடல்களிலே மூன்றே பாடல்களில் - ஆறே இடங்களில் - இந்தியா என்னும் பெயரைப் பாரதியார் பயன்படுத்தியிருக்கிறார். அந்த மூன்று பாடல்களும் அவர் தன் வாழ்நாளின் கடைசிக் காலத்தில் பாடியவை. 'விடுதலை' என்னும் பாட்டிலே

'ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை, சாதியில்
இழிவுகொண்ட மனிதரென்பர்
இந்தியாவில் இல்லையே!'

என்று பாடியிருக்கிறார். கவிதைகளாலான "நவரத்தின மாலை" யொன்றை பாரத மாதாவுக்கு அணிவித்திருக்கிறார் பாரதியார். அதிலே

'திறமிக்க நல்வயிரச் சீர்திகழு மேனி
அறமிக்க சிந்தை; அறிவுபிற - நலங்கள்
எண்ணற்றன பெறுவார் 'இந்தியா' என்ற நின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்'

என வரும் வெண்பாவிலேயும், 'இந்தியா' என்ற பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்.

பாரதியார் தம் வாழ்க்கையின் முடிவிலே, திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலே "பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற பாடலைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது. அதிலே


'எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்' என்றும்

'எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்'

என்றும் பாடியுள்ள வரிகளிலே, நான்கு இடங்களில் 'இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

இவை தவிர எண்ணற்ற கவிதைகளிலே - நூற்றுக்கு மேற்பட்ட இடங்களிலே தன் தாய்நாட்டை, பாரதம், பாரத நாடு, பாரத தேசம், பாரத பூமி, ஆரிய நாடு, ஆரிய தேசம், ஆரிய பூமி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறார். தனது தாயகத்தை அன்னையாகக் கற்பனை செய்து வருணிக்கும் இடங்களிலேயும், பாரததேவி, பாரதராணி, பாரதநாயகி, ஆரியதேவி, ஆரியராணி என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறார்.

எவனோ வைத்த பெயரைச் சொல்லித் தன் தாயகத்தை அழைப்பது இழிவு என்று அவர் எண்ணினார். அதனாற்றான், அன்னியன் வைத்த 'இந்தியா' என்ற பெயர் அவரது உள்ளத்தைத் தொடவில்லை. பாரதியார் நடத்திய வாரப்பத்திரிகைக்கு "இந்தியா" என்றுதான் பெயர். அதனை நான் மறந்துவிடவில்லை. அந்தப் பத்திரிகையிலேயே ஒரு இதழில் எழுதியிருக்கிறார், முதலில் 'வந்தேமாதரம்' என்ற பெயரையே வைக்க நினைத்ததாக.

இந்தியா என்னும் பெயரை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் சொந்தப் பெயரை மறந்துவிட்டு, வந்தவன் வைத்த பெயருக்கே வாழ்வளிக்க எனக்குள்ள தேசாபிமானம் என்னை அனுமதிக்கவில்லை. இதே தன்மான - தேசாபிமான உணர்ச்சியுடன்தான் தமிழ் வழங்கும் மாநிலத்திற்குப் பரங்கியர் வைத்த 'மெட்ராஸ் ஸ்டேட்' என்னும் பெயர் நீடிப்பதை - நிலைபெறுவதை நான் எதிர்த்தேன்.

பாரதியாரின் தேசாபிமானம் உலகம் தழுவிய மனிதாபிமானத்திற் குட்பட்டதுதான். தேசபக்தி நல்லதுதான் என்றாலும் அதுகூடத் தடிப்பேறி விடக்கூடாதுதானே! பழுத்த தேசாபிமானியான பாரதி மனிதாபிமானத்தையும் கொண்டிருந்தார். தேசபக்தி என்னும் மதத்தின் சார்பில் தோன்றிய தேசாபிமானத்தை வளர்ப்பதற்கென்றே கடவுளால் அனுப்பப்பட்ட - தேசியக் கவிஞர்தான் என்றாலும் மனிதாபிமானத்திலே தலை சிறந்து விளங்கினார்.

விடுதலை வேட்கையுடைய தேசபக்தன்
பாரதியாரின் பாடல்களிலுள்ள இலக்கிய நயங்களையோ, சொற்சுவையையோ, பொருட்செறிவையோ விளக்குவது மட்டும் எனது குறிக்கோள் அல்ல. அப்படிப் பேசினால் அது ஓர் இலக்கியப் பேச்சாகத்தான் இருக்கும். பாரதி, வெறும் இலக்கியப் புலவர் மட்டுமல்ல; அவர் விடுதலை வேட்கையுடைய தேசபக்தர். விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைபுகுந்த தியாகி! நாடுகடத்தப்பட்ட நிலையிலே தமிழ் நாட்டுக்கு வெளியே பிரெஞ்ச் இந்தியப் பிரதேசமான பாண்டிச்சேரியில் பத்தாண்டுக் காலம் வனவாச வாழ்க்கையை நடத்தியவர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்து பாரதியையோ, பாரதியிடமிருந்து விடுதலைப் போராட்ட வரலாற்றையோ பிரித்துப் பார்க்க முடியாது. விடுதலைப் போர் வேறு; பாரதியார் வேறு அல்ல. விடுதலைப் போரிலே அவர் இரண்டறக் கலந்தவர். அதனால், விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு பாரதியாரின் தேசிய கீதங்களை யான் விமர்சிக்கிறேன்.

டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் (இவர் ஜவஹர்லால் நேரு அமைத்த மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த தமிழகத்து அறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இருந்தவர்) ஒரு சமயம் சொன்னார், "பாரதியார் தோன்றித் தேசிய கீதங்களைப் பாடியில்லையானால் நாடு விடுதலை பெறுவது இன்னும் பல ஆண்டுகளுக்குத் தள்ளிப் போயிருக்கும்" என்று. அது முற்றிலும் உண்மை. ஆகவே, பாரதியாரின் தேசிய கீதங்களிலே எங்கெல்லாம் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கின்றன என்பதை யான் எடுத்துக் காட்டிப் பேசுகிறேன்.

எனது முதற் சொற்பொழிவை என்னுடைய தொடர் சொற்பொழிவு என்னும் காப்பியத்திற்கான பதிகம் என்று முன்னர் கூறினேன். ஒரு காப்பியத்திலே பதிகத்தை அடுத்து வருவது 'பாயிரம்' ஆகத்தான் இருக்கும். இன்றைய எனது பேச்சும் பாயிரம் போன்றதுதான். பாயிரம் என்பது, காப்பியப் புலவன் நிகழ்த்தும் கடவுள் வழிபாட்டுடன் கலந்ததாகும். நான் எந்தக் கவிஞரைப் பற்றிப் பேசி வருகின்றேனோ, அந்தக் கவிஞர் ஒரு புதிய தெய்வத்தைப் பாடினார். அந்தத் தெய்வத்தின் பெயர் 'பாரத மாதா'.

தேசபக்த மதத்தாரின் தெய்வம்
ஒவ்வொரு மதத்தாரும் தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தை வாழ்த்தி வழிபடுவதைப் பார்க்கிறோம். இந்துக்களிலே சைவர்கள் சிவனையும், வைணவர்கள் திருமாலையும், இந்துக் களல்லாத இஸ்லாமியர் அல்லாவையும், கிறிஸ்தவர்கள் கர்த்தரையும் வழிபட்டு வருவதைப் பார்க்கிறோம்.

எல்லா சுபங்களுக்கும் ஆதாரமான சுபகிருது ஆண்டில் தோன்றிய தேசபக்த மதத்தாருக்கும் ஒரு கடவுள் வேண்டுந்தானே! அந்தக் கடவுள்தான் பாரதமாதா. விடுதலைப் போர்க்களத்திலே தேசபக்த மதத்தாரின் தெய்வமாக பாரதமாதாவைத் தேர்ந்தெடுத்தது யார் என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை. பாரதமாதா வழிபாடு முதலில் வடக்கில் தோன்றி, பின்னர் தென்னவர் அதனை ஏற்றிருந்தாலும் இருக்கலாம். ஆனால், நான் அறிந்தவரை தமிழ் மொழியிலே பாரதமாதா மீது பதிகம் பாடிய முதற் கவிஞர் பாரதியார்தான். இதனை நான் உறுதியாகச் சொல்லுவேன்.

சிவனும் விஷ்ணுவும் அல்லாவும் கர்த்தரும் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு முக்தி கொடுக்கும் தெய்வங்கள் எனலாம். ஆனால் தேசபக்த மதத்தார் விடுதலைப் போர்க்களத்தில் வழிபட்ட புதிய தெய்வமான பாரதமாதா முக்தி கொடுக்கும் தெய்வம் அல்ல. அப்படிப் பாரதி சொல்லவும் இல்லை. ஆனால், பக்குவப்பட்ட பாரத மக்களுக்கு அரசியல் விடுதலை தரும் தெய்வமாகும். அப்படித்தான் பாரத மாதாவை அறிமுகப்படுத்தினார் பாரதியார். ஆன்ம முக்தி வேறு; அரசியல் விடுதலை வேறுதானே!

பாரதியார் வடபுலத்துத் தேசபக்தர்களிடமிருந்து வந்தேமாதரம் என்னும் மந்திரச் சொல்லை ஏற்றுக் கொண்டார். விடுதலைப் போராட்ட காலத்திலே அந்த மகா மந்திரத்திற்குத்தான் என்ன மதிப்பு. அதிலே யான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அந்த மந்திரத்தை எனது நாவால் யான் இன்று உச்சரித்தாலும் என் உடல் சிலிர்க்கிறது; மயிர்க் கூச்செரிகிறது. என் உள்ளத்திலிருந்து ஏதோ ஒரு தெய்விக உணர்ச்சி எழுவதை நான் உணர்கிறேன். 'வந்தே மாதரம்' என்று இன்று நான் சொல்லக் கேட்டு, உங்களுக்கு, எனக்கு ஏற்படும் உணர்ச்சி உண்டாகிறதோ இல்லையோ - உண்டாகாதுதான். வந்தேமாதரம் என்னும் மந்திரத்தைப் பற்றிய அனுபவம் எல்லாம் பொய்யாய், கனவாய், பழங்கதையாப் போய்விட்டனவே.

மந்திரச்சொல் 'வந்தேமாதரம்'
நண்பர்களே! நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நம்புங்கள்! உண்மை உணர்வோடு சொல்கிறேன், நம்புங்கள்! சத்தியம் செய்து சொல்லுகிறேன், நம்புங்கள்! சைவர்களுக்கு 'ஓம் நமசிவாய' என்னும் மந்திரம் எப்படியோ, வைணவர்களுக்கு 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரம் எப்படியோ அப்படிப்பட்டதுதான் விடுதலைப் போராட்ட காலத்திலே தேசபக்த மதத்தாருக்கு 'வந்தேமாதரம்' என்னும் சொல்! இந்த மந்திரத்தை எத்தனையோ பாடல்களுக்குத் தலைப்பாக்கி விட்டார் பாரதி. அவர் பாடிய முதல் பாடலின் தலைப்பே 'வந்தே மாதரம்' தான். அவர் அளவுக்கு வந்தேமாதரம் என்னும் மந்திரச் சொல்லை வைத்துத் தேசிய கீதங்களைப் புனைந்த கவிஞர் வேங்கடத்திற்கு வடகே பிறந்திருப்பாரா என்பது ஐயப்பாடுதான்.

நண்பர்களே! விடுதலைப் போராட்டக் காலத்திலே தேசபக்தர்கள் இருவர் சந்தித்தால் பரஸ்பரம் 'வந்தேமாதரம்' என்று சொல்லிக்கொள்வது வழக்கமாக இருந்தது. இன்று படித்த இருவர் சந்தித்தால் 'குட்மார்னிங்' என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே, அதுபோல! ஒரு தேசபக்தனுக்குத் திருமணம் நடந்தால், தாலி அணிவிக்கும் சடங்கின் போது திருமண அரங்கிலே 'வந்தேமாதரம்' என்னும் மந்திரப் பேரொலி பலமுறை எழும்.

ஒரு தேசபக்தன் இன்னொரு தேசபக்தனுக்குக் கடிதம் எழுதினால், அந்தக் கடிதத்தின் தலைப்பில் இந்துக்களின் வழக்கப்படிப் பிள்ளையார் சுழி போடுமிடத்திலே 'வந்தேமாதரம்' பொறிக்கப்படும். சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டியிலுள்ள நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றை யான் பார்த்திருக்கிறேன். அவற்றுள் சிலவற்றில் பிள்ளையார் சுழிக்குப் பதில் 'வந்தேமாதரம்' பொறிக்கப்பட்டுள்ளது. வேறு சில கடிதங்களிலே பிள்ைளையார் சுழியையும், 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தையும் அடுத்து 'வந்தேமாதரம்' என்னும் தேசபக்த மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

வலி தெரியாது
நண்பர்களே! இன்று நினைத்தாலும் எனது நெஞ்சத்தை உருக்குகின்ற ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அந்நாளிலே தேசபக்தர்கள் சட்டத்தை மீறி ஊர்வலம் செல்வார்கள். ஐந்து பேருக்கு மேல் கூடிச் சென்றால் அது சட்டவிரோத ஊர்வலம். ஊர்வலத்தினர், பாரதியாரின் 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்ற வழிநடைப் பாட்டை ஆவேசத்துடன் பாடிக்கொண்டு செல்வார்கள். 'பாரத சமுதாயம் வாழ்கவே!' என்ற பாடலையும் பாடிச் செல்வார்கள். 'ஜெய பேரிகை கொட்டடா!' என்றும் இசைத்துச் செல்வதுண்டு.

இப்படிப் பாடிச் செல்லும் ஊர்வலத்தின் இருமருங்கிலும் கைகளில் குண்டாந் தடிகளுடன் போலீஸ் வீரர்கள் தங்கள் கால்களில் அணிந்துள்ள பூட்சுகள் பயங்கர ஒலி எழுப்ப நடைபோட்டுக்கொண்டு வருவார்கள். தடை செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை ஊர்வலம் தொடுகிற போது திடீரென போலீஸ் வீரர்கள் தொண்டர்கள் மீது பாய்ந்து குண்டாந்தடிகளால் அடித்து நொறுக்குவார்கள். அவர்களிடம் அடிபட்ட அனுபவம் அடியேனுக்கும் உண்டு. போலீசார் தங்கள் கைகளிலுள்ள தடிகளை உயர்த்தியதுமே தோண்டர்கள், 'வந்தேமாதரம்', 'வந்தேமாதரம்' என்று மிகுந்த உணர்ச்சியோடு தங்களை மறந்து ஒலி எழுப்புவார்கள். அப்போது போலீசாரின் குண்டாந்தடி அந்தத் தேசபக்த வீரர்களின் உடம்பில் உருண்டு உருண்டு விளையாடும் என்றாலும் அவர்களுக்கு வலி தெரியாது. ஆம்; 'வந்தேமாதரம்' என்று கோஷித்துக் கொண்டிருக்கும் வரை வலி தெரியவே தெரியாது.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு அறுக்க வேண்டிய இடத்திலே 'கொக்கெயின்' இஞ்செக்ஷன் போடுகிறார்கள். ஆம்; அறுக்கும் போது வலி தெரியாமலிருக்க. அதுபோல போலீசார் அடிக்கத் தொடங்கியதுமே தேசபக்தர்கள் தங்களுக்குத் தாங்களே 'வந்தேமாதரம்' என்ற கொக்கெயின் இஞ்செக்ஷனைப் போட்டுக் கொள்வார்கள். டயாபிடிக் பேஷண்டுகள் செல்ப் இஞ்செக்ஷன் போட்டுக் கொள்வது போல!

பாரதியார் மக்கள் மத்தியிலே சங்கீத வித்வான்கள் பயன்படுத்தி வரும் சந்தங்களில் மட்டுமின்றி, பாமர மக்கள் பயன்படுத்தி வரும் சந்தங்களிலும் பாக்கள் புனைந்தார். அது அவருடைய கொள்கையாகவும் இருந்தது.

தாலாட்டுப் பாடாததேன்?
பாரதிக்கு முன் தோன்றிய புலவர்களும் அவர் காலத்திலேயே வாழ்ந்த கவிஞர்களும் உறங்க வைக்கத் தாலாட்டுப் பாடலும், விழிக்க வைக்கப் பள்ளியெழுச்சிப் பாடலும் பாடினர்.

வைணவ ஆழ்வாராதியரிலே குலசேகரப் பெருமாள் திருமாலைக் குழந்தையாக்கி, அக் குழந்தையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடினார். பாரதி காலத்தவரான கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரும் தாலாட்டுப் பாடல்கள் பாடியுள்ளனர்.

கவிஞர் குலம் வழிவழி கடைப்பிடித்து வந்த மரபைப் பாரதியார் புறக்கணித்து விட்டார். அந்த மகாகவி எது எதைப்பற்றியெல்லாம் பாடினார் என்பதை விடவும் எது எதைப் பற்றியெல்லாம் பாடாமல் விட்டார் என்பது சுவையான செய்தியாகும். பாரதியார் தாலாட்டுப் பாடவில்லை. மாறாக உறங்குவோரை எழுப்புகின்ற பள்ளியெழுச்சி பாடியுள்ளார். மாணிக்க வாசகர் இறைவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடினார். பாரதியார் பாரத தேசத்திற்கு திருப்பள்ளியெழுச்சி பாடினார்.

பாரதியார் பாடிய திருப்பள்ளியெழுச்சி
"மகாகவி பாரதியார் தோன்றிய காலத்தில் பாரத சமுதாயம் முழுவதும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தூங்கிக் கிடந்த சமுதாயத்தைத் துயிலெழுப்பத் தோன்றியவராதலால், அவருக்குத் தாலாட்டுச் சந்தம் தேவைப்படவில்லை. அதனால், அவர் தாலாட்டுப் பாடவில்லை. பாரதியாரின் உள்ளத்தை அறிந்த பாவேந்தர் பாரதிதாசன் 'நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று வருணிக்கிறார்.

துயில் பலவகைப்பட்டது. அவற்றுள் ஒன்று, அறிதுயில் இன்னொன்று நீடுதுயில். அறிதுயில் என்பது ஆண்டவனுக்குரியது. அது, தூங்காமல் தூங்குவதாம். அப்படித்தான் தூங்குகிறார் திருவரங்கத்திலே அரங்கநாதர்! தாயுமானவரும் 'தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்' என்கிறார்.

நீடுதுயில் என்பது, எழவேண்டிய நேரத்திலும் எழாமல் தூங்குவதாம். இது, அடிமைப்பட்ட சமுதாயத்தின் தூக்கம். இதனாற்றான் 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்கிறார் பாரதிதாசன்.

பாரதி பாடிய பள்ளியெழுச்சியிலே யான் ஒரு புதுமையைக் காண்கிறேன். தேசம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் மக்கள் உறங்கிக் கிடப்பது இயற்கை. அது, அடிமைப்பட்டதன் விளைவு. ஆனால், விடுதலை பெற்றுவிட்ட பின்னரும் தேசம் விழித்தெழாமல் உறங்குவது விதியின் விளையாட்டாகும். மழை நெடு நாட்கள் பெய்து விட்டால், அது நின்ற பிறகும் நிலத்தில் ஈரம் உலர்வதற்கு நாளாகும். அதுபோல இருநூறு ஆண்டுகாலம் அன்னியரான ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த பாரத தேசம், வெள்ளையன் வெளியேறிவிட்ட பிறகும் விழித்தெழாமல் உறங்கி விடலாம் என்று பாரதியார் ஐயுற்றார். அதனால், சுதந்திர பாரதத்திற்குப் பள்ளியெழுச்சி பாடுகிறார்.

"பொழுது புலரந்தது; யாம்செய்த தவத்தால்
புன்மை இருட் கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே!"

இந்தப் பாடல் சுதந்திர பாரதத்தைப் பற்றியதுதான் என்பதற்கு,

"பரிதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்!"

என்னும் வரிகள் சான்றாகும்.

தேசம் என்பதற்கு முப்பது கோடி மக்கள் என்றே இங்கு கவிஞர் பொருள் கொண்டார். நாடு பெறுகின்ற சுதந்திரம் சமுதாயத்திலுள்ள மேட்டுக்குடி மக்களின் கைகளுக்குப் போய்விடுமோ? என்று அந்த மகாகவி ஐயுற்றார். அப்படிப் போனாலும், அந்த ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடாமல், சமுதாயத்தின் அடித்தளத்து மக்கள் நீடுதுயில் கொண்டு விடுவார்களோ என்றும் ஐயுற்றார். அதனாற்றான், நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள மக்கள் விழிப்போடிருக்க வேண்டும்; அப்போதுதான் பெற்ற விடுதலை பறையருக்கும், தீயருக்கும், புலையருக்கும் போய்ச்சேரும் என்ற உண்மையை உணர்த்த சுதந்திர பாரதத்திற்கே பள்ளியெழுச்சி பாடினார்.

தேசிய பஜனை
விடுதலைப் பாராட்ட காலத்திலே மார்கழித் திங்களில் விடியற் காலையில் எழுந்து பாரதியாரின் இந்த பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சிப் பாடலைப் பாடிக்கொண்டு வீதிவலம் செல்வோம். சுப்பிரமணிய சிவா இதற்கென்று ஒரு பஜனை கோஷ்டியையே படைத்தார். மார்கழியிலே வைணவர்கள் ஆண்டாள் புனைந்த திருப்பாவையையும், சைவர்கள் மணிவாசகர் இயற்றிய திருவெம்பாவையையும் திருப்பள்ளியெழுச்சியையும் பாடியும் விடியற் காலை நேரத்திலே வீதிவலம் செல்கிறார்கள் அல்லவா! அதுபோல, பாரதியார் புனைந்த பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியைப் பாடி, அந்நாளிலே தேச பக்தர்கள் விடியற்காலை நேரத்தில் வீதிவலம் சென்றனர். இது தமிழ் நாட்டிலுள்ள பிரதான நகரந்தோறும் நடந்ததெனலாம்.

பாரதமாதா மீது பதிகம்
பாரதமாதா மீது பாரதியார் பதிகம் பாடினார். ஒன்றா, இரண்டா, பத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடினார்.

'வந்தேமாதரம்' என்னுந் தலைப்புத் தந்து இரண்டு பாடல்களைப் பாடினார். 'நாட்டு வணக்கம்', 'எங்கள் நாடு', 'பாரத நாடு', 'பாரத தேசம்', 'ஜெய பாரத' என்னுந் தலைப்புக்களிலே பாரதியார் பாடி வைத்துப் போயுள்ள பாடல்களெல்லாம் பாரத மாதா பற்றியவையாகும். இந்தப் பாடல்களெல்லாம் அவரே பாடியுள்ள தெய்வபக்திப் பாடல்களை விஞ்சி நிற்கின்றன. ஆம்; 'பாரதியாரிடம் விஞ்சி நிற்பது தேசபக்தியா? தெய்வ பக்தியா? என்று வினா எழுந்தால், யான் 'தேசபக்தி' என்றே விடையளிப்பேன்.

'எங்கள் தாய்', 'வெறி கொண்ட தாய்', 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி', 'பாரதமாதா நவரத்தின மாலை', 'பாரத தேவியின் திருத்தசாங்கம்', 'மாதாவின் துவஜம்' என்னுந் தலைப்புக்கள் தந்து அவர் பாடியுள்ளவை யெல்லாமும் பாரத மாதா வழிபாடேயாகும்.

சுதந்திரம் என்னும் உரிமை வாழ்வைக்கூடத் தேவி வடிவத்தில் கண்டு, 'சுதந்திர தேவியின் துதி' என்னும் தலைப்பில் ஒரு பாடலைப் பாடி வைத்துள்ளார்.

சொர்க்கமா, சொந்த தேசமா?
பாரத தேவியையே யன்றி அந்தத் தேவியின் பக்தனையும் பாட விரும்பிப் 'பாரத தேவியின் அடிமை' என்ற தலைப்பிலும் ஒரு கவிதையைத் தந்துள்ளார்.

அடிமைப்பட்டுள்ள ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தேசபக்தனுக்குச் சுதந்திர வாழ்வை விடவும் சொர்க்க வாழ்வு பெரிதல்லதானே! அவரே சொல்கிறார், "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே" என்று. ஆம்; சொர்க்கத்தைவிடச் சிறந்தது சொந்த நாடு என்பது அவரது சித்தாந்தம். இதிலே பாரதியார் விவேகானந்தரையே பின்பற்றினார் எனலாம். விவேகானந்தர் சொல்லுகிறார்:--

"இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த மகத்தான தாய்நாட்டைப் பற்றியே நாம் நினைக்க வேண்டும். அது ஒன்றே நமது தேசிய வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோளாகும். இக்காலத்தில் மற்றெல்லாத் தெய்வங்களும் நம் மனத்தைவிட்டு அகலட்டும். நமது தேசம், நமது மக்கள் இவைகள் தாம் உயிருள்ள தெய்வங்கள். இத் தெய்வத்தின் கைகளும் கால்களும் சமூகம் முழுவதும் நாடு முழுவதும் எங்கும் பரவியிருக்கின்றன. மற்ற தெய்வங்கள் அனைத்தும் இப்பொழுது உறங்கிக் கொண்டிருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் பரவி, எங்கும் திகழ்ந்து கொண்டிருக்கும் இவ்விராட சக்தியை வழிபடுவதை விடுத்து, நாம் வேறு தெய்வங்களை நாடிச் செல்ல வேண்டுமா? இந்தத் தெய்வத்தை நாம் முதலில் வழிபடுவோமாக!"

வந்தேமாதரம் என்போம்!
பாரதியார் விவேகானந்தரின் உபதேசப்படிதான் பாரத தேசத்தைத் தெய்வமாக்கி, அந்தத் தெய்வத்திற்குப் 'பாரத மாதா' எனப் பெயர் தந்து, அந்த மாதாவை வழிபடப் பாடல்களைப் புனைந்தளித்தார்.

பாரதியரின் பாடல் தொகுப்பிலுள்ள முதல் பாடலிலே 'வந்தேமாதரம் என்போம்' என்று இருக்கிறது. இதனை 'வந்தேமாதரம் என்று சொல்லுவோம்' என்று கொண்டால், இந்த வாசகம் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. அந்த நாளிலே வந்தேமாதரம் என்று சொல்வதை அரசு வெறுத்திருக்கிறது; அதிகார வர்க்கம் தடை செய்திருக்கிறது. அதனால், 'வந்தேமாதரம்' என்று குரல் கொடுக்க மக்கள் அஞ்சி நடுங்கினர். அவர்களைக் கூட்டி வைத்து, "வந்தேமாதரம்" என்று சொல்லுங்கள் எனப் பாரதி கூறியிருக்கிறார். பாரதியார் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேசபக்தர்கள் 'வந்தேமாதரம்' என்று கோஷிக்கும்படி அதாவது அரசுக்கு அஞ்சாது, அதிகார வர்க்கத்துக்கு நடுங்காது, பாரதத் தாயை வாழ்த்தி வணங்குமாறு வற்புறுத்தி யிருக்கின்றனர்.

தமிழ்நாட்டிலே, தமிழிலே, பாரதி, 'வந்தேமாதரம் என்போம்' என்று சொன்னது போல, வடபுலத்திலே, 'போலோ வந்தேமாதரம்' என்று பொதுமக்களைக் கூட்டி தேசபக்தர்கள் கோஷித்திருக்கின்றனர். 'போலோ' என்றால், 'சொல்லு' என்று பொருள்.

வ.உ.சியே முன்னோடி!
பாரதியாரின் பாடல்கள் கிடைப்பதற்கு முன்பு தமிழ் நாட்டிலும் தேசபக்தர்கள் 'போலோ, வந்தேமாதரம்' என்றுதான் கோஷித்துக் கொண்டிருந்தார்கள். ஆம்; அதன் பொருளைத் தெரிந்து கொள்ளாமலே! அவர்களைப் பார்த்து

"வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்"

என்று பாடினார் பாரதியார்.

வந்தேமாதரம் என்றால் தமிழிலே 'தாயை வணங்குகிறோம்' என்று பொருள். தேசாவேசத்திலே - தேசபக்தி வெறியிலே தமிழர் மீது பிறமொழி ஆதிக்கம் ஏற்பட்டு விடுமோ என்று பாரதிக்கு அச்சம்; அதனால், 'போலோ வந்தேமாதரம்' என்று வடபுலத்தார் சொல்வதைத் தமிழரும் பொருளறியாமலே வடவரைப் பின்பற்றி உளறுவதைத் தவிர்க்க, தூய தமிழிலே 'எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்' என்று மொழிபெயர்த்துக் கொடுத்தார்.

தமிழும் தேசியமும்
பாரதியார் தமிழைக் கொண்டு தேசபக்தியை வளர்த்தார்; தேசபக்தியைக் கொண்டு தமிழை வளர்த்தார். அவர், தமிழ்ப் பற்று காரணமாக தேசபக்திக்குப் பகையாகி விடவில்லை. அதுபோல தேசப்பற்றுக் காரணமாகத் தமிழ் பக்தியை வெறுத்து விடவில்லை. தமிழ் மொழிப் பற்றையும், பாரதநாட்டுப் பற்றையும் பிணைத்த முதல் கவிஞர் பாரதியார்தான். இன்றுள்ள தேசபக்தர்களுக்கு - என் சகோதர தேசிய வாதிகளுக்குச் சொல்கிறேன், தேசியம் இல்லாமல் தமிழ் வாழ முடியும்; வளரவும் முடியும். ஆனால், தமிழ் மண்ணிலே தமிழ் இல்லாமல் தேசியம் வாழாது; வாழ்ந்தாலும் வளராது! இது நான் தரும் சாபமல்ல; சரித்திரம் போதிக்கும் பாடம்!

சிதம்பரம் பிள்ளையை அவர் கப்பல் கம்பெனி நடத்திய காலத்திலேலே, 'வந்தே மாதரம் பிள்ளை' என்றுதான் மக்கள் அழைத்தார்கள். பாரதியார் 'வந்தேமாதரம் என்போம்' என்ற பாடலைப் புனைவதற்கு முன்பே சிதம்பரனார் நெல்லை மாவட்டத்திலே ஊருக்கு ஊர் - தூத்துக்குடி நகரிலே தெருவுக்குத் தெரு - கூட்டம் போட்டு, மக்களைக் கூட்டி வைத்து 'வந்தேமாதரம்' என்று கோஷிக்குமாறு தூண்டினார்.

தேசமே தேவி
பாரதியாருக்கு பாரத தேசம் வேறு, பாரத தேவி வேறு அல்ல; தேசமே தேவி; தேவியே தேசம்! சுவாமி விவேகானந்தர் கூறியது போல பழைய தெய்வங்களெல்லாம் பாரத தேசத்திற்கு விடுதலை தேடச் சக்தியற்று விட்டன என்று பாரதியார் கருதினார் போலும்! அதனால், பாரத மாதா என்ற புதிய தெய்வத்தைப் படைத்தார் - பாடினார்!

பாரதி தேசபக்த மதத்தாருக்கு ஒரு புதியதெய்வத்தைத் தந்து, அதனை வழிபட்டு உய்யுமாறு வற்புறுத்தினாரென்றால்; அறிவுக்குப் புறம்பாக அல்ல; அறிவுக்குப் பொருந்தக்கூடிய வகையில்தான்! அவன் தந்த பாரதமாதா சூன்யத்திலிருந்து பிறந்த கற்பனைத் தெய்வமல்ல; நாம் கண்ணெதிரே காண்கிற பாரத தேசந்தான்! அந்தத் தெய்வந்தான் அடிமைப்பட்ட சமுதாயத்திற்கு விடுதலையைத் தந்தது! சாதி, மத, மொழி, குல வேறுபாடுகளால் பிளவுபட்டுக் கிடந்த பாரத சமுதாயத்தை ஒரே வடிவத்தில் - அதையும் அன்னை வடிவத்தில் காணச் செய்து, அந்த விராட சொரூபத்தை 'வந்தே மாதரம்' என்னும் மந்திரத்தால் பாரதி வழிபட வைத்தார்.

தேசியம் அழியாது
பாரதியார் வாழ்ந்த காலத்தில் பலர் அடங்கிய கூட்டத்திலே 'வந்தேமாதரம்' என்று உணர்ச்சியோடு கோஷிக்கத் துணிவு தேவைப்பட்டது. சிறை செல்லத் துணிந்தவந்தான் அப்படிச் சொல்ல முடியும் என்ற நிலைமையும் இருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் மக்களைப் பார்த்து 'வந்தேமாதரம் என்போம்' என்று பாடுகின்றார் பாரதியார்.

'கூட்டங்கூடி வந்தேமாதரம் என்று கோஷித்தாய்; எமைத் தூஷித்தாய்' என்று கலெக்டர் விஞ்ச் துரை சினங்கொண்டு கூறியபோது, 'வந்தேமாதரம் என்று உயிர்போம் வரை வாழ்த்துவோம்; சிரம் தாழ்த்துவோம்' என்று வ.உ.சி. பதிலளித்தார்.

பாரதியார் பாடியும் கப்பலோட்டிய தமிழர் பாடுபட்டும் வளர்த்த தேசியம் - தேசபக்தி - தமிழ் மண்ணில் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். அழியாது - அழிய விட மாட்டார்கள் தமிழர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன்.

"பாரதியார் பாடியுள்ள தேசபக்திப் பாடல்களிலே தலை சிறந்தது எது?" என்று என்னை ஒருவர் கேட்டால், 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி' என்று தொடங்குகின்றதே, அந்தப் பாடல்தான்" என்று தயக்கமின்றிப் பதிலளிப்பேன்.

"எந்தையும் தாயும் ....."
பாரத தேசத்தைத் தேவி வடிவத்தில் கற்பனை செய்து பாரதியார் புனைந்துள்ள பாடல்களிலே ' எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது மிந்நாடே' என்று தொடங்கும் பாடலே தலை சிறந்ததாகும். இதற்கு 'நாட்டு வணக்கம்' என்று தலைப்புத் தந்திருக்கிறார். மூன்று செய்யுட்களைக் கொண்டது இப்பாடல்.

இதிலே பாரதியார் ஊனக் கண்களை மூடிக்கொண்டு ஞானக் கண்களால் பாரத நாட்டைப் பார்க்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, இந்நாட்டில் வாழ்ந்த மக்களை யெல்லாம் காண்கின்றார். அவர்களுடைய அரும் பெரும் சாதனைகளை யெல்லாம் கண்டு நமக்கும் காட்டுகின்றார். இதோ, ஒரு செய்யுளைப் பார்ப்போம்:

"எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே - அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே - இதை
வந்தனை கூறி மனதி லிறுத்தி யென்
வாயுற வாழ்த்தேனோ - இதை,
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ!"

"என் தந்தையும் தாயும் வாழ்வாங்கு வாழ்ந்த வீடு - தங்கள் காதற் பருவத்திலே அவர்கள் கலந்து மகிழ்ந்த பள்ளியறை - ஓய்ந்த நேரங்களிலே ஓடியாடிய பூங்கா இந்தப் பாரதப் பெருநாடே!" என்கிறார் பாரதியார்.

"என் தாய் தந்தையர் மட்டுமா? அவர்களுடைய முந்தையரும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிவழி தோன்றி வாழ்ந்து மறைந்ததும் இந்தப் பாரத திருநாட்டிலேதான்" என்றும் அந்த மகாகவி பெருமிதத்தோடு பேசுகின்றார்.

கற்பனையில் கண்ட பாரதம்
"எந்தையரும் முந்தையரும் வெந்ததைத் தின்று வாழ்ந்து, சாவு வந்தபோது செத்தொழிந்த மானுடப் பூச்சிகளா? இல்லை, இல்லை, இல்லை; அவர்களுடைய சிந்தையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வளர்ந்தன. ஆம்; மெய்ப்பொருளைப் பற்றிய உண்மைகளை யெலாம் கண்டார்கள். பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு ஆகியவற்றைப் பற்றிய அற்புதங்களை யெல்லாம் ஆய்ந்து அறிந்தார்கள். அறிந்த வழி வேதாந்த சித்தாந்த சாத்திரங்களைத் தந்தார்கள். இராமாயண, பாரத, சிலப்பதிகாரக் காப்பியங்களைப் படைத்தார்கள். மனு தருமம், திருக்குறள் போன்ற நீதி நூல்கள் யாத்தளித்தார்கள். இதனால், மனித சமுதாயத்தின் முன்பு பாரத சாதி தலை நிமிர்ந்து நிற்கச் செய்தார்கள்" என்கிறார் பாரதியார்.

"அசோகனும் கரிகாலனும் இராசராசனும் தோன்றி சாம்ராஜ்யங்களைக் கண்ட சரித்திரமெல்லாம் நம்முடைய முந்தையோரின் சாதனைகள்தானே!" என்றும் பாரதியார் தமது நெஞ்சை நிமிர்த்திக் கூறுகின்றார்.

"இந்தப் பெருமைகளை யெல்லாம் மனதிலிறுத்தி, இவற்றைச் சாதித்த எந்தை யோருக்கும் முந்தையோருக்கும் வந்தனம் செலுத்தி, அவர்களையெலாம் தந்த பாரதப் பெருநாடு வாழ்க என்று வாயார வாழ்த்துவோம்!" என்று சொல்லிவிட்டு, 'வந்தேமாதரம்', 'வந்தேமாதரம்' என்று இதய எழுச்சியோடு கோஷித்து, தனக்குக் காட்சியளித்த பாரதத்தாயை வணங்குகின்றார்.

இது, முதலாவது செய்யுள் தரும் புதை பொருளாகும். இனி, இரண்டாவது செய்யுளையும் பார்ப்போம்:

"இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தருள்
ஈந்தது மிந்நாடே - எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினில் ஆடிக்
களித்தது மிந்நாடே! - தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளையாடி, இல்
போந்தது மிந்நாடே - இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ!"

"கல்தோன்றி மண் தோன்றிய காலத்தையடுத்து ஓரறிவுடைய தாவரத்திலிருந்து ஆறறிவுடைய மக்கள் வரை அடுக்கடுக்காக உயிர்க்குலங்கள் முதன் முதலில் தோன்றியது இந்தப் பாரதத்தில்தான்! ஆம்! ஆதி மனிதன் தோன்றியது இந்தப் புனித பூமியில்தான்! அந்த உயிர்க் குலத்திலே எங்கள் அன்னையர் தோன்றி, அவர்கள் மழலை பேசி மகிழ்ந்ததும் இந்தப் புனித பூமியில்தான்! எங்கள் அன்னையர் தங்கள் மழலைப் பருவம் தீர்ந்து, கன்னிப் பருவத்தை எய்தியபோது, எழுநிலை மாடங்கள் கொண்ட மாளிகைகளிலே ஏழாவதான வேயா மாடத்தில் அமர்ந்து, தங்கள் காதலருடன் உரையாடி மகிழ்ந்ததும் இந்தப் பாரத நாட்டில்தான்!"

"காதல் வாழ்க்கையிலே இரவைக் கழித்தபின், விடியற் காலையிலே எழுந்து கங்கையிலே - காவிரியிலே - வைகையிலே நீராடித் தங்கள் இல்லம் திரும்பியதும் இந்த நாட்டிலேதான்!"

இப்படி எங்கள் அன்னையர் குலம் வாழ்வாங்கு வாழ்ந்து அருமை பெருமைகளை யெல்லாம் தனது ஆதிவரலாறாகக் கொண்ட இப் புனித நாட்டை - எந்தன் தாய்நாட்டை - தந்தையர் பூமியை, 'வந்தே மாதரம்', 'வந்தே மாதரம்' என்று வாயாரச் சொல்லி தலையார வணங்கேனோ!" இது, இரண்டாவது செய்யுளில் புதைந்துள்ள பொருளாகும். இறுதியாகவுள்ள மூன்றாவது செய்யுளைப் பார்ப்போம்.

"மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்தது மிந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்தது மிந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்தது மிந்நாடே - இதை
'வந்தே மாதரம், 'வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ!"

"எங்கள் அன்னையர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் மழலை பேசிப் பின், கன்னிப் பருவத்தில் நதிகளிலே நீர்விளையாடி, அதற்குப்பின் மங்கைப் பருவத்தை எய்தியபோது காதலொருவனைக் கைப்பிடித்து இல்லறம் நடத்தி, சரித்திரத்திற்கு முற்பட்ட வேதகாலத்திலே முனிவர்களையும், பின்னர் மகாவீரர், புத்தர் போன்ற ஞானியரையும், சரித்திர காலத்திலே ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், துளசிதாசர், ஆண்டாள், மீராபாய் போன்ற தங்க மதலைகளை ஈன்று அமுதூட்டி வளர்த்ததும் இந்த நாட்டில்தான்!"

"இப்படி, வழிவழி தோன்றி வந்த ஆன்றோரும் சான்றொரும் சமயக் குரவர்களும் மாய்ந்து மாய்ந்து மறைய மறைய அவர்களுடைய புனித அஸ்திகளெல்லாம் கலந்தது இந்தப் பாரத நாட்டில்தான்!" என்று கூறி, "நாட்டு வணக்கப்" பாடலை பாரதியார் முடிக்கிறார்.

தமிழா, பார்த்து நட!
இந்தப் பாடலைத் தேசபக்தியோடு பாடிப் பார்த்தால் பாரதியார் கண்ட பழம் பெரும் பாரதத்தை நம்மில் ஒவ்வொருவரும் பார்க்க முடியும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் அந்தந்த நூற்றாண்டிலே ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றித் தோன்றி வாழ்ந்து அற்புதங்கள் செய்து மறைந்த சான்றொர்களின் புனித அஸ்திகள் இந்த மண்ணிலே கலந்திருத்தலால், தமிழ் மகனே, பார்த்து நட! உன் காலடிபட்டு நமது முன்னோரின் அஸ்தி அழிந்து போகாதபடி, பயபக்தியோடு அடியெடுத்து வை!

தமிழ் மகனே! நம்முடைய மூதாதையரான சரித்திர நாயகர்கெளெல்லாம் - சமயத் தலைவர்களெல்லாம் மூடர்கள்; நாம்தான் பகுத்தறிவாளன் என்னும் ஆணவத்தோடு பாரத மண்ணில் அடியெடுத்து வைத்தால், நமது முன்னோரின் புனித அஸ்தி அழிந்துவிடும்.

தமிழ் மகனே! உன் வாழ்க்கையிலே ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தேசபக்தியும், தெய்வ பக்தியும் மணக்கட்டும்! என்றெல்லாம் பாரதியார் சொல்லாமல் சொல்லுகிறார்.

பாரதியாரின் நாட்டு வணக்கப் பாடலிலே வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் புதைந்து கிடக்கும் பொருள்களையே இங்கு விளக்குகிறேன். பாரதியார்

"அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்"

என்று பாடியிருக்கிறார். "பாரதியாரின் பாடல்களிலே "சொல்லுக்குச் சொல் அழகு தோன்றும்" என்கிறார் கவிமணி.

"எங்கள் தாய்" என்னும் பாட்டிலே பாரதத் தாயின் விசுவரூபத்தை வருணிக்கிறார். அதிலே

"முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"

என்ற வரிகளிலே, பாரத தேசத்தையே தேவி வடிவத்தில் காட்டுகின்றார். இது, பகுத்தறிவுக்கு மாறுபட்ட கற்பனையன்று. பகுத்தறிவாளரும் போற்றும் வள்ளுவரும் நிலத்தை 'நல்லாள்' என்னும் சொல்லால் பெண் வடிவில் காட்டுகின்றார். பகுத்தறிவாளர் ஆட்சியிலே, தமிழைத் தாய் வடிவில் வாழ்த்தி வழிபடச் செய்ய 'நீராருங் கடலுடுத்த' என்னும் பாடலை அரசாங்கக் கீதமாகச் செய்திருப்பதைப் பார்க்கிறோமல்லவா!

பகுத்தறிவும் கற்பனையும்
சாக்ரடீஸ் என்ற கிரேக்க ஞானி பகுத்தறிவு வாதிதான். 'நாத்திகன்' என்று ஏதென்ஸ் நாட்டவரால் குற்றஞ் சாட்டப்பட்டவனுமாவான். அவன்கூட, ஏதென்ஸ் நகரைத் தாயாகக் கற்பனை செய்திருக்கிறான்.

என் தமிழ்நாட்டு இளைஞர்களை வேண்டுகிறேன்; பகுத்தறிவு வாதம் பேசி கற்பனா சக்தியை இழந்து விடாதீர்கள். பாரதியார் பாரத நாட்டை மாதா வடிவில் கண்டு வழிபடப் பாடல்கள் புனைந்தில்லையானால், சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்தியிருக்க முடியாது.

விடுதலைப் போராட்ட காலத்திலே பாரதமாதா படத்தை எடுத்துக் கொண்டு வீதியில் ஊர்வலமாகச் செல்வோம். அந்த மாதா, விரித்த கூந்தலுடனும், கை கால்களில் விலங்குகளுடனும், அழுத கண்ணீருடனும் காட்சியளிப்பாள். அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு 'சிறை வாயில்தனில் அழுதாள், பாரத மாதா!' என்ற யாரோ எழுதிய பாட்டைப் பாடிக்கொண்டு செல்வோம்.

வீடுதோறுமுள்ள ஆண்களும் பெண்களும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து நின்று பாரதமாதாவின் படத்தை வழிபடுவார்கள். அவள் அழுத கோலத்துடன் காட்சியளிப்பதைக் கண்டு, அவர்களும் கண்ணீர் வடிப்பார்கள். இப்படித்தான் எழுத்து வாசனையற்ற பாமர மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்த முடிந்தது அந்நாளிலே!

பாரதியார், பாரதப் பெருநாட்டைத் தாய் வடிவில் கற்பனை செய்து, அந்தத் தாயை வழிபடுவதற்குப் பதிகங்கள் படைப்பதற்கு முன்பு சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாதாரண மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியில் கொண்டு வர வழியில்லாமல் இருந்தது.

தேசத்தைத் தேவியாகக் கருதுவது வெறும் கற்பனைதான். ஆனால், அது பொய் அல்ல. அந்தக் கற்பனை மக்களை ஏமாற்றும் எண்ணத்திலிருந்து பிறந்ததல்ல. கற்பனை வேறு; பொய் வேறு. பொது நலனை யொட்டிப் பிறக்கும் கற்பனை பொய்யாகாது. தேசம் இருப்பது உண்மை. அந்தத் தேசத்திலே கோடிக்கணக்கான மக்கள் வாழ்வதும் உண்மை. அவர்கள் ஆங்கிலேய நாட்டாருக்கு அடிமைப்பட்டிருப்பதும் உண்மை. இந்த உண்மைகளைப் பாமர மக்களுக்கு உணர்த்துவதற்குப் பாரதமாதா வழிபாடு தேவைப்பட்டது. தேசம் விடுதலை பெற்றபின் பாரத மாதா வழிபாடு மறைந்துவிட்டது.

பரிகசித்த தமிழர்கள்
தமிழ் நாட்டுத் தேசபக்தர்கள் பாரதமாதாவை வழிபட்ட போது, இங்குள்ள சிலர் கேலி பேசினார்கள். "பாரதமாதாவுக்கு 30 கோடி மக்கள் என்றால், அவளுக்குக் கணவன்மார் எத்தனை பேரோ?" என்றுகூட வம்பளந்தார்கள். நீங்கள் சிரிக்கிறிர்கள்; ஆனால், அன்று எங்களால் சிரிக்க முடியவில்லை. எங்களைக் கேலி பேசியவர் மீது நாங்கள் சீறி விழவுமில்லை. எங்களுடைய சக்தி முழுவதையும் நாங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் ஈடுபடுத்தினோமாதலால், எங்களைக் கேலி பேசிய தமிழர்களை மன்னித்தோம்; மறந்தோம்!

விடுதலைப் போராட்ட காலத்திலே தேச பக்தர்களின் தெய்வமான பாரத மாதாவுக்குக் கோயில்களெடுக்கவும் முயற்சிகள் நடந்தன. பாரதியாரே தமது கட்டுரையொன்றிலே, 'தமிழ் நாட்டில் கிராமந்தோறும் பாரத மாதாவுக்குக் கோயிலெடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பாரதியாரின் அத்தியந்த நண்பரான சுப்பிரமணிய சிவா, தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி கிராமத்திலே பாரதமாதா கோயிலொன்றை நிறுவத் திட்டமிட்டு, தேசபந்து சித்தரஞ்சன் தாசரை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார். சிவா அகால மரணமடைந்ததால், அவரது முயற்சி அடிக்கல்லோடு நின்றுவிட்டது.

பம்பாய் நகரில் காந்தியடிகளே பாரதமாதா கோயிலொன்றைத் திறந்து வைத்தா ரென்றால், தேசபக்தர்கள் பாரதமாதாவிடம், கொண்டிருந்த பக்திக்கு வேறு சான்றும் வேண்டுமோ.

விடுதலைப் போர் முடியும் வரையிலே காங்கிரஸ் கூட்டங்களிலும் ஊர்வலங்களிலும் மூன்று கோஷங்கள் எழுப்பப்பட்டன தேச பக்தர்களால். அவற்றுள் ஒன்று, 'வந்தே மாதரம்' மற்றொன்று 'பாரத மாதாவுக்கு ஜே' இன்னொன்று 'மகாத்மா காந்திக்கு ஜே'. தூக்கு மேடையில் ஏறிய புரட்சி வீரர்கள்கூட இந்த மந்திரங்களைக் கோஷித்து விட்டுத்தான் தூக்குக் கயிற்றைக் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள் அந்த நாளிலே!

பாரதமாதா வழிபாட்டை மக்கள் ஏற்கச் செய்ததன் மூலமும் பாரதி காலத்தை வென்ற கவிஞனாகி விட்டான்! சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாமான்யர்களை - ஆம்; படிப்பறியா மிக ஏழைகளை, பட்டி தொட்டிகளில் வாழும் மக்களை, ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஈடுபடுத்த வழிகண்டு விட்டான் பாரதி. இது ஒரு கவிஞனால்தான் முடியும்! வாழ்க மகாகவி பாரதியின் புகழ்!


வினாக்கள்.

1. 'இந்தியா' எனும் பெயர் பாரதியைக் கவரவில்லை என்பதற்கு ம.பொ.சி.கூறும் காரணம் என்ன?
எத்தனை பாடல்களில் பாரதியார் 'இந்தியா' எனும் பெயரைச் சொல்லுகிறார்?
2. தேசபக்தர்களுடைய தெய்வமாக 'பாரத மாதா'வை பாரதி உருவகப் படுத்தியதன் நோக்கம் என்ன?
அதனால் விளைந்த பயன் என்ன?
3. பிரிட்டிஷ் போலீசாரிடம் தேசபக்தர்கள் அடிபடும்போது வலியை மறக்க என்ன செய்தார்கள்?
4. தாலாட்டுப் பாடலைப் பாரதி பாடாதது ஏன்? அவன் திருப்பள்ளியெழுச்சி யாரைத் தட்டி எழுப்ப?
5. 'வந்தேமாதரம்' என்போம் என்று பாரதி கூறக் காரணங்கள் எவை என ம.பொ.சி. கூறுகிறார்"
6. பாரத தேசத்தை 'பாரதமாதா' என பாரதி கருதிய காரணங்களை ஒரு கட்டுரையில் தருக

3 comments:

You can send your comments