முனைவர் திருமதி பி.பார்வதி, எம்.ஏ.,எம்.பிஃல்,பி.எச்டி.,
தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.
(மகாகவி பாரதியின் 125ஆவது பிறந்த நாளையொட்டி, புதுவை பல்கலைக் கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் சென்னையில் ஆண்டுதோறும், மகாகவியின் பிறந்த நாளை அவரது நினைவகத்தில் சிறப்பாகக் கொண்டாடிவரும் வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கொன்றை புதுவை பல்கலைக் கழக வளாகத்தில் 2007 செப்டம்பர் 21 முதல் 23 வரை மிகச் சிறப்பாக "பாரதி 125" பன்னாட்டுக் கருத்தரங்கம்" எனும் பெயரில் நடத்தின. இதில் சுமார் 140 கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். இதன் பதிப்பாசிரியர்களாக முனைவர் அ.அறிவுநம்பி (புதுவைப் பல்கலைக் கழகம்) அவர்களும், சென்னை வானவில் பண்பாட்டுக் கழக நிறுவனர் வழக்குரைஞர் கே.இரவி அவர்களும் செயல்பட்டு சிறப்பான நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் உள்ள அத்தனை கட்டுரைகளும் சிறப்பானவை. அவற்றில், புதுமையான கண்ணோட்டத்தோடும், பயனுள்ள பல நல்ல செய்திகளொடும் காணப்படும் 'பாரதியின் அறிவியல் பார்வை' எனும் கட்டுரை நமது கவனத்தை ஈர்த்தது. அதனை குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திருமதி பி.பார்வதி, எம்.ஏ.,எம்.பிஃல்.,பி.எச்டி., அவர்கள் எழுதியிருக் கிறார்கள். முனைவர் பார்வதி அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் கல்விப் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர். 57 வயதாகும் இந்தப் பேராசிரியரின் தமிழார்வமும், குறிப்பாக மகாகவி பாரதியின்பால் கொண்டுள்ள பக்தியையும் இந்த கட்டுரையிலிருந்து அறிந்துகொள்ள முடியும். இளைய தலைமுறையினருக்கு நமது பூர்வீக மஹான்கள் தந்துவிட்டுச் சென்றிருக்கிற அறிவியல் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற தாகத்தால் விளைந்தது இந்தக் கட்டுரை. நமது அஞ்சல் வழிப் பாடத்தில் அந்த கட்டுரையைப் பாடமாகக் கொடுப்பதின் மூலம் அதிலுள்ள செய்தி மேலும் பரவும் என்ற நோக்கத்தில், அந்த கட்டுரையை இந்த மாதப் பாடமாகக் கொடுத்திருக்கிறோம். படியுங்கள். புத்தக வெளியீட்டாளர்களுக்கும், பதிப்பாசிரியர்களுக்கும், கட்டுரை ஆசிரியருக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறோம். பாரதி பணியில் இந்த தலைப்பிலான கட்டுரை ஓர் புதிய மைல் கல். படிப்போம்; பயன்பெறுவோம்)
பாரதியின் அறிவியல் பார்வை
மகாகவி என்றும் தேசியகவி என்றும் போற்றப்படும் பாரதி தமது 39 வயதிற்குள் கவித்திறமையாலும், தேச பக்தியாலும் தமிழ்நாட்டைத் தன் வசப்படுத்தினார். சிறு வயது முதற்கொண்டே தேசபக்தியுடையவராய், விடுதலை உணர்வைத் தமிழ் மக்களுக்கு ஊட்டிச் சுதந்திரப்பள்ளு பாடியவர்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். மரணமில்லா பெருவாழ்வைப் பெற்ற பாரதி தேசபக்தியில், இறை நம்பிக்கையில், தேச விடுதலையில், பத்திரிகை தொழிலில் தோய்ந்திருந்தாலும் அறிவியல் பார்வையுடையவராகவும் திகழ்ந்திருக்கிறார். இக்கட்டுரை பாரதியின் அறிவியல் அறிவை எடுத்துரைக்கிறது.
மேலை நாடுகளின் தொழிற்புரட்சி அறிவியல் தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கக் காரணமானது. இதனால் மின்சாரம், தந்தி, தொலைபேசி, வானொலி போன்ற கருவிகள் 1830-1900 கால இடைவெளியில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலை கீழை நாடுகளில் நடந்து வரும் போராட்டங்களையும், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியையும் உலகியல் கண்ணோட்டம் கொண்ட பாரதி கவனித்து வந்தார். எனவே, தமது இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் செய்திகளைப் பதிவு செய்து வைத்துள்ளார். இச்செய்திகளை வளர்ந்து வரும் தொழில் நுட்பம், வானியல் என்ற இரண்டு தலைப்புகளில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. பாரதியின் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் செய்திகள் இவண் பேசப்படுகின்றன.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம்.
மேலை நாடுகளில் தொழிற்புரட்சி, தகவல்களை விரைவாக பரிமாறிக் கொள்ளக்கூடிய கட்டாய நிலையை உருவாக்கியது. எனவே, தகவல் பரிமாற்றத்திற்குரிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தனர். தகவல் பரிமாற்றத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தந்தியும், தொலைபேசியும் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்ட ஐந்தாவது ஆண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. 1901-இல் மார்க்கோனி என்ற அறிஞர் வானொலியைக் கண்டுபிடித்தார். இதன் பயன்பாடு தந்தி, தொலைபேசியைவிடச் சிறப்பாக இருப்பதை பாரதி தமது உலகியல் கண்ணோட்டத்தின் வழி அறிந்தார். இத்தொழில்நுட்பம் பற்றிய கருத்துக்கள் தமிழகத்திலும் பேசப்பட்டன.
தேசவிடுதலையை அடிநாதமாகக் கொண்ட பாரதிக்கு மக்களிடையே விழிப்புணர்வை, விடுதலை உணர்வைப் பரப்ப வானொலி பயன்படும் எனக் கருதினார். எனவே, தன் எண்ணத்தை 'பாரத தேசம்' என்ற பாடலில்,
'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்'
என வெளிப்படுத்தினார். தீவிர விடுதலைப் போராட்ட வீரராகிய பாரதி ஆங்கிலேயரை வெல்ல ஆயுதங்கள் செய்வோம் என்றார். இதழியலாளர் என்ற முறையில் பத்திரிகை வழி மக்களிடையே விடுதலை உணர்வைப் பரப்பிய பாரதி பத்திரிகைக்குரிய காகித ஆலையை உருவாக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார். ஆயுதங்கள் செய்வதற்கும், காகிதத்தை உற்பத்தி செய்வதற்கும் தொழிற்சாலை தேவை. இதனை நிர்வகித்து நடத்த கல்வி வேண்டும். எனவேதான் பாரதி, ஆயுதம் செய்வோம், காகிதச்சாலை அமைப்போம், கல்விச் சாலைகளை வைப்போம் என வரிசைப் படுத்திக் கூறியுள்ளார் எனலாம்.
வெளிநாட்டுத் தொழில்நுட்பக் கருத்துகளை கவிதை வழி வெளியிட்ட பாரதி, உள்நாட்டு அறிவியல் வளர்ச்சியைக் கட்டுரை வழி எடுத்துரைத்துள்ளார். பாரதியின் காலத்தில் இந்திய நாட்டின் விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழந்தவர் ஜகதீச சந்திர போஸ். இவர் மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்பதைச் செய்முறைப் பயிற்சி வாயிலாக நிரூபித்தார். இந்நிகழ்வை பாரதி 'உயிரின் ஒலி' என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். 'செடியின் நாடியுணர்ச்சிக்கும் இதர மனுஷ்ய மிருக ஜாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பதைத் தமது அற்புதமான பரீட்சைகளினால் உலகத்தின் உயிரொலியை நமக்குத் தெரியும்படிச் செய்தவர்' (பாரதி நூல்கள், ப.66) என ஜகதீச சந்திர போஸைப் பாராட்டுகிறார் பாரதி. இதன் வழி தனது காலத்தில் இந்திய நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்பில் அறிஞர்கள் முனைந்து செயல்பட்டு புதிய அறிவியல் கருத்துகளை உலகிற்கு எடுத்துரைத்த பாரதி போற்றுகிறார். தொழில்நுட்பக் கருத்துகளைக் கூறிய பாரதியின் படைப்புகளில் வானியல் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.
வானியல் அறிவு.
சூரியக் குடும்பத்தையும், பால்வெளிவீதியையும் (Milkyway) ஆராயும் அறிவை வானியல் அறிவு என்பர். இந்தியர்கள் பழங்காலம் தொட்டே வானியல் அறிவுடையவர்களாக விளங்கியதை வேதங்களும், உபநிடதங்களும் எடுத்துரைக்கின்றன. தமிழர்களும் வானியலில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் நிலை நாட்டுகின்றன. காலந்தோறும் எழுந்த தமிழ் இலக்கியங்கள் தமிழர்தம் வானியல் அறிவை, வானவெளியை ஆராய்ந்த விதத்தை எடுத்துரைக்கின்றன. பாரதியும் கவியில் வல்லவராக இருப்பதோடு வானியல் அறிவு பெற்றவராகவும் விளங்கியுள்ளார் என்பதை அவர்தம் படைப்புகள் எடுத்துரைக்கின்றன.
பாரதியார் கூறும் வானியல் செய்திகளை 1. அண்டவெளியின் தன்மை 2. சூரியகுடும்பம் 3. சக்தி அழிவில்லாதது 4. பூமியின் சுழற்சி 5. காற்றின் இன்றியமையாமை 6. சோதிடம் எனும் ஆறு தலைப்புகளில் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. இக்கருத்துகளில் சோதிடம் தவிர்ந்த ஐந்து தலைப்புகளுக்கு உரிய கருத்துகள் வசன கவிதையில் இடம்பெற்றுள்ளன.
அண்ட வெளியின் தன்மை.
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. ஆனால், பால்வெளிவீதியாகிய அண்ட பகிரண்டம் ஒளி, ஆகாயம் என்ற இரண்டை மட்டுமே கொண்டிருக்கிறது. இதனை பாரதி தமது வசன கவிதைகள் வழி எடுத்துரைக்கிறார். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் என்ற இரண்டு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஆய்வுக் கூடத்திலிருந்து மீண்டும் பூமிக்கு வர ஏற்பட்ட பிரச்சினைகள் நாடறிந்ததே. திரும்பி வந்த விண்வெளி ஓடம் பூமியின் மேற்பகுதியில் உள்ள காற்றுப் பகுதிக்குள் நுழைந்தவுடன் ஏற்பட்ட உராய்வினால் தீப்பிடித்ததால் கல்பனா சாவ்லா என்ற இந்திய விஞ்ஞானி மரணமடைந்தார். சுனிதா வில்லியம்ஸ் திரும்பி வரவேண்டிய விண்வெளி ஓடத்திலும் இத்தகு பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற ஐயமும் பயமும் அமெரிக்கர்களையும் இந்தியர்களையும் மட்டுமல்ல, உலகமக்கள் அனைவரிடமும் காணப்பட்டதை நாம் அறிவோம். கடவுள் புண்ணியத்தால் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் சுனிதா வில்லியம்ஸ் தரை இறங்கியதை உலகமே கொண்டாடியது. இதன் வழி ஒளி, ஆகாயம் என்ற இரண்டு பூதங்களைக் கொண்ட பரவெளியிலிருந்து ஐம்பூதங்களைக் கொண்ட பூமிக்குத் திரும்ப வேண்டுமென்றால் காற்று மண்டலத்தைக் கடந்துதான் வரவேண்டும் என்பதை இன்று யாவரும் அறிந்துள்ளனர். அதற்கு இன்றைய கால தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சி, செயற்கைக்கோள், இணையதளம் போன்றவையே காரணங்களாகும். ஆனால், இத்தகைய எந்த தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வாழ்ந்த பாரதி இதனை அறிந்துள்ளார். மிகச் சிறந்த வசன கவிதை வழி எல்லோருக்கும் புரியும் வகையில் அக்கருத்தை எடுத்துரைத்துள்ளார்.
'வானவெளி என்னும் பெண்ணை ஒளியெனும் தேவன் மணந்திருக்கிறான்
அவர்களுடைய கூட்டம் இனிது.
இதனை காற்றுத் தேவன் கண்டான்
காற்று வலிமையுடையவன்
இவன் வானவெளியைக் கலக்க விரும்பினான்
ஒளியை விரும்புவது போல வானவெளி இவனை விரும்பவில்லை
இவன் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுப்பொல் கலந்தன
காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்
அவன் அமைதியின்றி உழலுகின்றான்
அவன் சீறுகின்றான், புடைக்கின்றான், குமுறுகின்றான்,
ஓலமிடுகின்றான், எழுகின்றான், நிலையின்றிக் கலங்குகின்றான்,
வெளியும் ஒளியும் மோனத்தில் கலந்து நகை செய்கின்றன.
காற்றுத் தேவன் வலிமையுடையவன்
அவன் புகழ் பெரிது. அப்புகழ் நன்று.
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
அவை மோனத்திலே கலந்து சித்தம் இன்புறுவன
அவை வெற்றி யுடையன
ஞாயிறே, நீதான் ஒளித் தெய்வம்.
நின்னையே வெளிப்பெண் நன்கு காதல் செய்கின்றாள்.
உங்கள் கூட்டம் மிக இனிது. நீவிர் வாழ்க.'
என்ற பாரதியின் வசன கவிதை வரிகள் பூமியின் மேற்பரப்பில் காற்றும், அது புகமுடியாத உயரத்தில் வானமும், ஒளியும் இருப்பதை கவிதை நயத்துடன் எடுத்தியம்புகின்றன. அண்டபகிரண்டத்தில் காற்று இல்லை என்ற வானவியல் தன்மையை பாரதி உணர்ந்திருந்தான் என்பதை இதன் வழி அறிந்து கொள்ள முடிகிறது.
சூரிய குடும்பம்.
சங்கப் புலவர்களும் அவர்களுக்குப் பின் வந்த தமிழ் இலக்கியவாதிகளும் சூரிய குடும்பம் என்றால் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, ராகு, கேது என்ற ஒன்பதைக் குறிக்கின்றனர். தொலைநோக்கியைக் கண்டுபிடித்த பின்புதான் யுரேனஸ், நெப்டியூன் என்ற இரண்டு கோள்களையும் சூரிய குடும்பத்தின் கோள்களாக ஐரோப்பியர் கொண்டனர். பாரதியும் ஐரோப்பியர்களின் கருத்துகளை ஏற்றுக் கொண்டார் என்பதை
'ஞாயிறே நின்முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றன,
பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் முதலியன பல நூறு வீடுகள்
இவையெல்லாம் நின்கதிர்பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல, இவையெல்லாம்
ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டனவென்பர்'
என்ற வசன கவிதையின் பாடல் வரிகள் உணர்த்துகின்றன. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் சூரியன் ஒளிபட்டுத்தான் வெளியே தெரிகின்றன என்பதும், சூரியனிலிருந்து வெடித்து வெளிப்பட்டவை என மேனாட்டார் கூறிய செய்திகளையும் இவ்வரிகள் வழி எடுத்துரைக்கிறார். மேலும் சூரிய குடும்பத்தைச் சார்ந்த கோள்கள் ஒவ்வொன்றும் சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக தங்களது வரைகடவாது சுழல்கின்றன என்ற அறிவியல் செய்தியை
'செவ்வாய் புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன
அவன் மந்திரத்திலே கட்டுண்டு வரை கடவாது சுழல்கின்றன
அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்ல மாட்டா
அவன் எப்போதும் இவற்றை நோக்கியே இருக்கிறான்'
என்ற அடிகள் வழி எடுத்துரைக்கிறார்.
தூமகேது.
வானத்தில் அதிகாலைப் பொழுதில் தோன்றும் வால்நட்சத்திரத்தைத் தூமகேது என்று அழைப்பர். வால் நட்சத்திரம் வானத்தில் தோன்றினால் நாட்டில் மிகப் பெரிய கேடு நிகழும் எனக் கூறுவர். இந்த வால் நட்சத்திரம் எவ்வாறு தோன்றுகிறது? அதன் தன்மைகள் என்ன? அதனால் விளையும் செயல்கள் என்னென்ன என்பதை 'சாதாரண வருஷத்து தூமகேது' என்ற பாடல் வழி பாரதி எடுத்துரைக்கிறார்.
தினை என்பது மிகவும் சிறிய தானியம். பனை என்பது மிக உயர்ந்த மரம். ஒரு தினையின் மீது பனை நிற்பது போன்று ஒரு சிறிய விண்மீன் மிகப் பெரிய ஒளி மிகுந்த வாலினைக் கொண்டிருக்கும் என்பதோடு அது கீழ்த்திசையில் இருக்கின்ற வெள்ளி மீனோடு தோன்றும் என்றும் கூறுகிறார். மேலும் இந்த ஒளி மிகுந்த வால் வாயு நிறைந்தது என்பதை
'எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை யின்றதோர் வாயுவால்
புனைந்த நன்னெடு வால் போவதென்கிறார்' (சாதாரண வருஷத்து தூமகேது)
என்ற வரிகள் வழி எடுத்துரைக்கிறார். இந்தச் செய்தியை பாரத நாட்டு பழைய நூல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளன. ஆனால், இன்றைய காலத்தில் மேனாட்டார்தான் இதன் தன்மையை அறிந்துரைத்ததாக பாரத நாட்டினர் நம்புகின்றனர் எனக் கூறும் பாரதி இவ்வால் நட்சத்திரம் 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என அதன் வரவை எடுத்துரைக்கிறார். சாதாரண வருஷத்தில் வந்த தூமகேதுவால் கேடுகள் விளையாது பல நன்மைகள் விளையும் என வானியல் அறிஞர்கள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு, பாரதி தூமகேதுவிடம் தொல்புவியதனைத் துயர்கடல் ஆழ்த்துவாயா? புவியினைப் புனிதமாகப் புனைவதற்கா? எண்ணிலா புதுமைகள் விளையும் என்கிறார்களே அது உண்மையா? நின் வரவால் பலவும் விளையுமா? என்றெல்லாம் கேட்டு தூமகேது வருவதால் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் எவையெவை என்பதை எடுத்துரைக்கிறார்.
சக்தி அழிவில்லாதது.
சக்தியை அழிக்க முடியாது. ஒரு சக்தி மற்றொரு சக்தியாக மாறும் என்பது அறிவியல் கண்டுபிடிப்புக்களுள் ஒன்றாகும். இந்த அறிவியல் செய்தியை பாரதியார் அவருக்கே உரிய பாணியில் வசன கவிதையாக வெளியிட்டுள்ளார்.
'உடலைக் கட்டு உயிரைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு சக்தியைக் கட்டலாம்
அறிந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை'
எனக்கூறிய பின் அதனை விளக்க தலையணையைச் சான்றாகக் கூறுகிறார். ஒரு பஞ்சுத் தலையணைக்கு வடிவம், நியமம் இருக்கிறது. ஏதோ ஒரு சக்தி அதன் பின்னே நின்று காத்துக் கொண்டிருக்கிறது. காலங்கள் மாற அந்தத் தலையணையின் வடிவத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் அந்த வடிவத்தில் சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கவில்லை என்றால் அது அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணையாக மாறுகிறது. அப்பொழுது அந்தத் தலையணையில் உள்ள பஞ்சை எடுத்துக்கொண்டு மேலுறையைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய துணியில் அப்பஞ்சை அடைக்கும்போது புதிய வடிவம் வந்துவிடுகிறது. இந்த சான்றை எடுத்துரைத்த பாரதி
'வடிவத்தைக் காத்தலால்
சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை,
எங்கும் எதனிலும், எப்போதும் எல்லாவிதத்
தொழில்களும் காட்டுவது சக்தி'
என்று கூறுகிறார். இதன் வழி சக்தியை அழிக்க முடியாது. ஆனால், அச்சக்தி வடிவத்தை மாற்றிக் கொண்டிருக்கும் என்ற அறிவியல் கருத்தை மிகச் சிறந்த சான்று வாயிலாக எடுத்துரைத்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
சக்தி எது என்பதை 'அனந்தசக்தி' என்ற கட்டுரையில் பாரதியார் விளக்குகிறார். "எறும்பு இறந்துபோன புழுவை இழுத்துச் செல்கிறது. எதனால்? சக்தியினால். தூமகேது எழுபத்தைந்து வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னை சுற்றிவரும்படி சூரிய கோளம் நியமித்திருக்கிறது எதனால்? சக்தியால்" எனக்கூறி சக்திக்கு விளக்கம் தருகிறார்.
பூமியின் சுழற்சி.
'சக்திதான் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம். சக்திக்கடலிலே ஞாயிறு ஓர் நுரை. சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழி. சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம். மகாசக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்' என்றெல்லாம் ஞாயிறையும், காற்றையும் சக்தியின் படைப்புகள் என்று கூறும் பாரதியார் உலகச் சுழற்சிக்கும் இச்சக்தியே காரணம் என்கிறார்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. இச்சுழற்சிக்கு பூமியின் ஈர்ப்பு சக்திதான் காரணம் என்ற அறிவியல் செய்தியை மிக அழகாக தமது வசன கவிதையில் பாரதி எடுத்துரைத்துள்ளார். பூமியின் மேற்பகுதியில் காணப்படும் பள்ளங்களில் கடல் நீர் இருக்கிறது. பூமி வேகமாகச் சுழலும் போது இந்த தண்ணீர் கீழே கவிழுவதில்லை. வீடுகள், மலைகள் புரளவில்லை. இதற்குக் காரணம் ஆகர்ஷண சக்திதான் என்கிறார் பாரதி. இதனை.
'பராசக்தியின் ஆணை
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்
அது பொருள்களை நிலைப்படுத்துகிறது
மலை நமது தலைமேலே புரளவில்லை
கடல் நமது தலைமேலே கவிழவில்லை
ஊர்கள் கலைந்து போகவில்லை
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்' (வசன கவிதை)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஆகர்ஷண சக்தியைப் போற்றிய பாரதி உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத காற்றின் தன்மையையும் மிக அழகாக எடுத்துரைத்துள்ளார்.
காற்றின் இன்றியமையாமை.
உயிர்கள் வாழ காற்று அவசியம். இக்காற்றை வாயு என்றும் அழைப்பர். அறிவியல் யுகத்தில் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் செயற்கைக் கோள்களை அனுப்பி அங்கு நம்மைப் போன்ற உயிர்ப்பிராணிகள் எவையேனும் தென்படுகிறதா என விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். சந்திரனிலும், வியாழனிலும் காற்று இல்லை. எனவே, உயிர்ப்பிராணிகள் இல்லை என்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் தற்பொழுது செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளனர். இதன் வழி பூமியில் மட்டுமே உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான பிராணவாயு இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
பாரதியும் காற்று என்பது எது? அதன் இயல்பு என்ன? அதன் வகைகள் யாவை போன்ற பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அறிவியல் பூர்வமான பதிலையும் தந்துள்ளார். உயிருடையன எல்லாம் காற்றின் மக்கள் என்று வேதங்கள் கூறிய செய்தியை அடிப்படையாகக் கொண்டு,
'உயிர் பொருள், காற்று அதன் செய்கை
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள்
அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று
காற்றே உயிர்'
எனக் காற்றை விளக்கிய பாரதி, இக்காற்றை உலக மக்கள் வாயுதெய்வம் ஏறிவரும் தேர் என அழைக்கிறார் என்றும் கூறுகிறார். இக்காற்றின் இயல்புகளை
'பனிக்கட்டியிலே சூடேற்றினால், நீராக மாறிவிடுகிறது
நீரிலே சூடேற்றினால் 'வாயு' வாகிவிடுகிறது
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது
அத் திரவத்திலே சூடேற்றினால் வாயுவாகின்றது
இங்ஙனமே உலகத்துப் பொருள்களனைத்தையும் வாயு
நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம்
இந்த வாயு பெளதீகத்தூள்
இதனை ஊர்ந்து வரும் சக்தியையே நாம் காற்றுத்
தேவனென்று வணங்குகிறோம்'
என விளக்குகிறார். இக்காற்றுதான் மனிதனை இன்பமுடன் வாழவைக்கிறது. நம்மை நோயினின்றும் காக்கிறது. நல்ல மருந்தாக, நமக்கு உயிராக, அமுதமாக இருக்கிறது. இது சக்தியின் குமரன் என்றும், காற்றை அதன் சிறப்பை எடுத்துரைக்கும் பாரதியார் நம் உடலில் இருக்கும் காற்றின் வகைகளையும் எடுத்துரைக்கிறார்.
நம் உடலில் இருக்கும் காற்றினைப் பத்தாகக் கூறுவர். உயிர்வளி, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுக்காற்று, தும்மற் காற்று, விழிக்காற்று, கொட்டாவிக் காற்று, இமைக்காற்று, வீங்கற் காற்று என அவற்றை அழைப்பர். இவற்றுள் உயிர்வளியை பிராணன் என்றும் மலக்காற்றை அபானன் என்றும், தொழிற் காற்றை வியானன் என்றும், ஒலிக்காற்றை உதானன் என்றும், நிரவுக்காற்றை சமானன் என்றும் அழைப்பர். பாரதி இக்காற்றின் பெயர்களை அறிந்திருக்கிறார். இதனை
'ப்ராண வாயுவைத் தொழுகின்றோம்; அவன் நம்மைக் காத்திடுக;
அபாநனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
வ்யானனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
உதாநனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
ஸமாநனைத் தொழுகின்றோம், அவன் நம்மைக் காக்க;
காற்றின் செயல்களை யெல்லாம் பரவுகின்றோம்
உயிரை வணங்குகின்றோம், உயிர் வாழ்க!
என்ற வரிகள்வழி அறியமுடிகின்றது. இக்காற்றே இவ்வையகத்தின் உயிர் என்பதை
'சந்திரன் சுழல்கின்றது; ஞாயிறு சுழல்கின்றது
கோடி கோடி கோடி கோடி யோசனை தூரத்துக்கப்பாலும்
அதற்கப்பாலும், அதற்கப்பாலும் சிதறிக் கிடக்கும்
வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டேதானிருக்கிறது'
எனவே, இவ்வையகம் உயிருடையது/வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம் என்ற வரிகளில் எடுத்துரைக்கிறார்.
சூரியன் கடலை வற்ற வைத்து இனிய மழையைத் தருகிறான். இம்மழையைப் பொழியும் மேகங்களைக் காற்றுதான் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே, மழை பொழிவதற்கு ஞாயிறும், காற்றும் காரணங்களாகின்றன. காற்று வெம்மை மிகுந்த பிரதேசங்களில் உருவாகும் மேகங்களை வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் கொண்டு வந்து மழையைப் பொழிவிக்கிறது என்பது அறிவியல் செய்தியாகும். கடல் மட்டத்திற்கு மேல் உள்ள காற்றின் அழுத்தம் குறைந்தால் அதனைக் காற்றழுத்தம் என வானியலாளர்கள் கூறுவர். குறைந்த காற்றழுத்தம் மழையைக் கொண்டு வரும். இதனை அவர்கள் 'காற்றுப்பள்ளம்' என்று அழைக்கின்றனர். இதனையே இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை என்று வானியலாளர்கள் கூறுகின்றனர். காற்றழுத்தம் மெதுவான சுழற்சி என்றால் புயல் என்பது அதிவேக சுழற்சியாகும். இத்தகைய அறிவியல் கருத்துக்களைப் பாரதி
'வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய
பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
கொண்டு வருகிறது;
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை
கடற் பாரிசங்களிலிருந்தே வருகின்றது;
காற்றே உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
மழை கொண்டு வா!
உனக்குத் தூப தீபங்கள் ஏற்றி வைக்கிறோம்'
எனக் காற்றை வணங்குகிறார். இங்கு கடற்பாரிசம் என்று பாரதி குறிப்பிடுவது காற்றழுத்த தாழ்வுநிலையைத்தான். இன்று செயற்கைக் கோள்கள் வந்த பின்புதான் காற்றழுத்த தாழ்வு நிலையே மழைக்குக் காரணம் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். எந்தவித தொழில்நுட்பமும் இல்லா அக்காலத்தில் வாழ்ந்த பாரதியார் பல நுட்பமான அறிவியல் கருத்துகளை அறிந்து வைத்துள்ளார் என்பதை அவரது வசன கவிதைகள் மிக அழகாக எடுத்துரைக்கின்றன. வானியல் அறிவு மட்டுமின்றி சோதிட அறிவு மிக்கவராகவும் பாரதி திகழ்ந்தார்.
சோதிட சாத்திரம்.
கோள்களின் சுழற்சியும் அதனால் பூமியில் ஏற்படும் மாற்றங்களும் கணித முறைப்படி கணக்கிட்டு கூறுவதை 'சோதிடம்' என்று கூறுவர். 'கிரகங்களின் சஞ்சாரஞ் சொன்ன கணித நூல்' என்று அபிதான சிந்தாமணி சோதிடத்திற்கு விளக்கம் தருகிறது. பாரதியாரும் சோதிட அறிவு மிக்கவராக விளங்கியுள்ளார். இதனை பருவ நினைப்பு என்ற கட்டுரை வழி அறிய முடிகிறது.
பாரதியார் காலத்தில் 'விவேக போதினி' என்ற பத்திரிகையில் திரு சாமிநாதய்யர் அன்றைய கால பஞ்சாங்கத்தில் உள்ள பிழைகளை, "ஒரு காலத்தில் வஸந்த விஷுவானது கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாசிமாதத்தில் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம், இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக் கப்பால், அந்த விஷு அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது" என்று சுட்டிக் காட்டியுள்ளார். இதனை ஆராய்ந்த பாரதி வசந்த விஷு மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தைமாதப் பிறப்பன்று தொடங்கியது. ஆனால், அயன விஷுக்களின் சலனம் ஏற்பட்டதை அறியாமலோ, அறிந்தும் கவனியாமலோ நமது முன்னோர்கள் இருந்து விட்டனர். 20-1/2 நிமிடங்கள் அதிகமாக வைத்து கணித்து விட்டபடியால் அயன விஷு காலங்கள் வருடம் ஒன்றிற்கு 20-1/2 நிமிடம் பிந்தி வருகிறது. 80 ஆண்டுகள் ஆகிவிட்டால் ஒரு முழு நாள் பிந்திவிடும். இந்த மாற்றங்கள் ஏற்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஒரு காலத்தில் சித்திரையும், வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதுவேனில் காலமென்றும் இருந்தது. மேற்கூறிய கணிதத் தவறால் பருவக் காலங்கள் மாறிவிட்டன என்று கூறுகின்றார்.
"இளவேனில் காலம் பங்குனி மாதம் எட்டாம் தேதியில் பிறந்து விடுகிறது" என்ற பாரதியின் கூற்று அவர் காலத்தில் அயன விஷு என்று பிறந்தது என்பதை எடுத்துரைக்கிறது. எனவே பாரதி, அயன விஷு காலங்களில் செய்யும் ஸ்நாநம், தானம் முதலிய வைதிகக் கிரியைகளும் புண்ணியக் காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து விடுகின்றன என்றும் கூறுகிறார். இது அவரது சோதிட அறிவைப் பறைசாற்றுகிறது எனலாம்.
கட்டுரையின் முடிவுகள்
1. மேனாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, தொழில்நுட்பம், தமிழ்நாட்டிற்குள் வரவேண்டுமென்ற எண்ணமுடையவர் பாரதி.
2. அவர் காலத்தில் காசியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின் கருத்துகள் உடனே தமிழகத்திற்குத் தெரிய வானொலி என்ற மேனாட்டார் கண்டுபிடிப்பு தமிழகத்திற்கு வரவேண்டும் என்று கூறுகிறார்.
3. தம் காலத்தில் நம் நாட்டில் வாழ்ந்த ஜெகதீச சந்திரபோஸ் என்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ளார்.
4. பாரதியின் வசனகவிதைகள் அறிவியல் செய்திகளின் களஞ்சியமாகத் திகழ்கிறது எனில் மிகையன்று.
5. வானியல் அறிவு மிக்கவராகப் பாரதி திகழ்ந்தார் என்பதை ஞாயிறு, சக்தி, கடல், காற்று எனும் தலைப்பில் உள்ள வசன கவிதைகள் நிரூபிக்கின்றன.
6. வானியல் அறிவுடன் சோதிட அறிவு மிக்கவராகவும் பாரதி திகழ்ந்துள்ளார்.
7. சூரியன் இயங்கும் வானவெளியில் ஒளியும், வெளியும் மட்டுமே உண்டு. காற்று கிடையாது என்பதை பாரதியார் அறிந்துள்ளார்.
8. பூமியின் சுழற்சியில் கடல், மலை, வீடுகள் நிலை தடுமாறாது இருப்பதற்கு ஆகர்ஷண சக்தியே காரணம் என்கிறார்.
9. சூரியனின் வெம்மையால் கடல்நீர் மேகமாகி காற்றின் உதவியால் மழையாகப் பொழிகிறது என்ற அறிவியல் கருத்தை அழகாக எடுத்துரைத்துள்ளார்.
10. சக்தியை அழிக்க முடியாது. ஒரு சக்தி மற்றொரு சக்தியாக மாறும் என்ற அறிவியல் உண்மையை எளிய உவமை வழி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.
11. தூமகேது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் என்பதையும், அதன் வால்பகுதி வாயுக்கள் நிறைந்தது என்பதையும் பாரதி தமது கவிதைகள், கட்டுரைகள் வழி எடுத்துரைக்கிறார்.
12. சூரிய குடும்பத்தைச் சார்ந்த கோள்கள் சூரியனின் ஈர்ப்பு விசையின் காரணமாக தங்களது வரைகடவாது சுழலுகின்றன என்ற அறிவியல் செய்தியை தமது கட்டுரையிலும், கவிதையிலும் பதிவு செய்துள்ளார்.
"பாரதியின் அறிவியல் பார்வை" -- வினாக்கள்.
1. மேலை நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால் பாரதத்தில் ஏற்பட்ட தாக்கம் என்ன? தொலைத் தொடர்பு வசதியைக் கருதி பாரதி விரும்பிய புதிய கருவி எது?
2. இந்திய விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ் கண்டுபிடிப்பின் சிறப்பு என்ன? அதனை பாரதி எங்ஙனம் போற்றுகிறார்?
3. வானியல் அறிவு என்பது எதனைப் பற்றியது? வானியல் அறிவு குறித்து பாரதி எழுத எடுத்துக்கொண்ட தலைப்புகள் எவை?
4. விண்வெளிக்குச் சென்று திரும்ப முயற்சித்த இரு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் யாவர்? அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எவை?
5. 'தூமகேது' என்பது என்ன? இந்த தூமகேது பற்றி பாரதி கூறும் கருத்துக்கள் என்ன?
6. காற்றின் இன்றியமையாமை குறித்து பாரதியின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி ஓர் சிறிய கட்டுரை வரைக.
அருமையான முயற்சி. அற்புதமான பதிவுகள். தமிழிலக்கிய மாணவர்களுக்கு பெரிதும் உதவும் கட்டுரைகள்.
ReplyDeleteNalloThor Veeenai Kanden
ReplyDeleteபாரதி இலக்கியப் பயிலகம் ஒரு அற்புதமான முயற்சி
ReplyDeleteகரும்பு தின்னக் காலமும் பல்லும் இல்லாத்தவர்களுக்கு கரும்புச்சாறாய் இந்த இலக்கியப் பயிலகம்
முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்