Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, July 30, 2011

கட்டுரைப் போட்டி



மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள்
கருத்தரங்கக் கட்டுரைப் போட்டி


பாரதி அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு:

மகாகவி பாரதியாரின் 90ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புவோர் கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து கருத்தரங்கில் படிக்க ஏற்பாடு செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா திருவையாற்றில் 2011 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும்.

விதிமுறைகள்:
1. கட்டுரை சுமார் பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடிக்கும்படி A/4 அளவுள்ள காகிதத்தில் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2. கட்டுரை பாரதி பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது தலைப்பு பற்றி மட்டும் இருக்க வேண்டும்.

3. போட்டியின் விதிமுறைகளுக்கு பாரதி இயக்கத்தின் முடிவே இறுதியானது.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

1. மின்னஞ்சல் முகவரி:- privarsh@gmail.com 

2. அஞ்சல் முகவரி: தலைவர், பாரதி இயக்கம், 19, வடக்கு வீதி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் 613204



இன்று தேவர்களை அழைக்கிறோம்.


கலைகள்

(மகாகவி பாரதியார் "கலைகள்" எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கின்றோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனைகள் முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். அங்கு சொல்லப்பட்ட மந்திரங்கள் என்ன சொல்கின்றன. வேதங்களைக் கற்றவர்கள் சொல்லலாம். பாமரனுக்குத் தெரியாது. பரவாயில்லை. இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களைமூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கினன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் 'ரிக் வேதத்தில்' பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்பதும், 'ரிக் வேதம்" பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்பதும் பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. ரிக் வேதம் பயின்ற அன்பர்கள்தான் சொல்ல வேண்டும். அன்பர்கள் பாரதியின் இந்தக் கட்டுரையைப் படித்தபின் அது குறித்துத் தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்)

இன்று ......................
(ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.

கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும் பொருட்டாக.

இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்து தரும் பொருட்டு எமது குற்றங்களையெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி, எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டு.

எமதறிவையே தேனாக்கிக் கொடுக்கிறோம். இந்தத் தேனை தேவர்கள் உண்டு களிபெறுக. எமது மந்திரங்கள் தேவருடைய திருவடியைப் பற்றுக. அவர்களை இந்த வேள்வியிலே கொண்டு தருக. எமதுடலையும், உயிரையும், அறிவையும் அவர்களுக்குக் கோயிலாக்குகிறோம். எமதுடைமைகள் எல்லாம் அவர்களைச் சார்ந்தன; எமது மனைவி மக்கள் அவர்களுக்குச் சேவகர்; எமது வீடு, வாசல், மாடு, கழனியெல்லாம் அவர்களுக்குரியன. எமது தொழில் அவர்களுடையது. எமது நினைப்புக்களெல்லாம் ஆசைகளெல்லாம் விருப்பங்கள் எல்லாம், இன்பங்கள் எல்லாம் தேவர் முன்பு வைக்கிறோம்; அவை அவர்கள் உணவாகுக.

வானவரே! வந்து சுவை கொள்ளுவீர்.

அன்பே வா, மித்ரா; உன்னைப் பணிகின்றோம். உன்னாலே காக்கப்பட்டவன் அழிவதில்லை; தோல்வி பெறுவதில்லை. இவனை இங்கிருந்தேனும், தொலைவில் இருந்தேனும் தீங்கு வந்து தீண்டுவதில்லை என்று எமது முன்னோர் கண்டனர். நாமும் அங்ஙனமே காண்கிறோம்.

அனைத்தையும் ஆழ்ந்து நிற்கும் அநந்த நிலையே, வருக, வருணா! எல்லையற்ற நினதாண்மை, இந்த எமதறிவாகிய யாகஸ்தலத்திலே நிறுத்தி, எமது கட்டுகளை எல்லாம் வெட்டிவிடு வலிமையே. நினது வரவு நல்வரவு. உன்னை மிகவும் வேண்டுகிறோம். அர்யமந், எமக்கு வலிமை தருதல் வேண்டும்.

இன்பமே வா! வா! வா! பகதேவா, எப்போதும் எம்மோடு கூடி வாழ்ந்திரு. உனது முகம் மிகவும் அழகுடையது. அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். எமதுள்ளம் நிறைந்திருக்கும். உனது உதயதேவி முன்னமே வந்துவிட்டாள். இளையவள், செந்நிறமுடையவள், என்றும் விழிப்பவள். இவளைத் தீ கொணர்ந்து கொடுத்தான். தீ எம்மிடத்தே வளர்கிறான். தீ வலியவன். அவன் உண்மையையுடைய கடவுள். உள்ளத்தை அவனுக்கு விறகாகக் கொடுத்தோம். அதில் என்றும் எரிவான்; அவிந்து போக மாட்டான். நீ எமது தலைவன். அவனை முப்போதும் சரணமடைகின்றோம்.

இன்று இப்போது தேவர்களை அழைக்கிறோம். வா சூர்யா, தெய்வ ஒளியே, ஞானச் சுடரே, அமிர்த ஊற்றே, வலிமையின் தந்தையே, வானவர் வழியே, அநந்தவிரிவே, ஆக்கமே, புகழே, வெற்றியே, எமதரசே, நின்வரவு நன்று மிகவும் நன்று.

மருத்துக்களே, புயற் காற்றுக்களே, மனதின் அசைவுகளே, மதிகளே, ஒளிமிகுந்தீர், வலிமையுடையீர், வானத்தையும் மண்ணையும் வலிமைக் களியிலே குமுறும்படி செய்வீர். மேகங்களைப் புடைத்து நல்ல மின்னல் காட்டுவீர். மருத்துக்களே, வாரீர். மனதிலே நேரும் சோர்வுகளை யெல்லாம் உங்கள் வீரத்தினாலே தீர்த்து விடுக. நீங்கள் வாயு மண்டலத்தைப் புனிதப் படுத்துகிறீர்கள். வானத்திலிருந்து மழை பொழியச் செய்கிறீர்கள். வருக.

இன்று தேவர்களை அழைக்கின்றோம்.

காற்றே வா! இங்கேயே இரு எப்போதும்; திரும்பியே போகாதே. நீ உயிர், உன்னை வரிக்கின்றோம். அசுவினி தேவர் உயிர்ப்பரிகளிலே ஏறி வருகின்றனர். அவர் நோய்களைத் தீர்ப்போர். அவரை எம்முள்ளே பதியும்படி செய்கின்றோம்.
**************

தியானங்களும் மந்திரங்களும்
(விடுதலைக்கு வழி)

என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப் போலவே சிந்தனை செய்ய வல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்.

நான் இவ்வுலகத்துப் பொருள்களின் மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக் கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன்.

நான் வேண்டிக்கரையத் தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேனா? ருஷ்ய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்? அன்றி, நான் செல்வத்தை வேண்டி அழுங்குவேனா? செல்வம் என்ன பயன் தரும்? நோவின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளைக்கும்; பகையின்றிக் காக்குமோ? அன்று; பகையைப் பெருக்கும்; கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமோ? அன்று; அவற்றை மிகுதிப்படுத்தும்; மரணமின்றிக் காக்குமோ? காக்காது. எனில், அதனை வேண்டு அழுங்குதல் பெரும் பேதமையன்றோ?

இரப்போன் தன்னைத்தானே விலைப்படுத்திக் கொள்கிறான். பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்று கூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவமானம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்க மாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன்.

ஆரோக்கியம் ஸம்பந்தமான மந்திரங்கள்

நான் நோயற்றேன். நால் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?

ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத் தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன்.

என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை கால்கள் -- இவையெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன. நோயற்றன; நோயுறத் தகாதன; எக்காலும் நோயுற மாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் தாக்கப்படாதன.

நோய்களையும், அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டும் வராதபடி அவற்றை சூன்யத்திற்குள்ளே வீழ்த்தி விட்டேன்.

நானே ஆரோக்கியக்; நான் தேவன்!

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன்! எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.

நான் கடவுள்! ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் எப்போதும் வீர்யமுடையேன்; ஜாக்கிரதையுடையேன்; எப்பொதும் தொழில் செய்வேன்; எப்போதும் காதல் செய்வேன்; அதனால் சாதல் இல்லேன்.

நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே? நான் தேவனாதலால்.

நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும் தீராத மாறாத இளமையுடையேன். மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர், நான் அதனை வேண்டேன். ஏனென்றால், இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை. நான் ஸதாகாலம் துன்பமின்றி வாழும் வாழ்க்கையை விரும்புகிறேன். அதனை நான் எய்தி விட்டேன். தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்? நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன். எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.






Thursday, July 28, 2011

'சித்தக் கடல்'


சித்தக் கடல்

(பழநியப்பா பிரதர்ஸின் வெளியீடான "புதுவையில் பாரதி" எனும் நூலில் திரு ப.கோதண்டராமன் எழுதிய பகுதி இது. ஆசிரியருக்கும் வெளியீட்டார்களுக்கும் நமது நன்றியறிதலை உரித்தாக்குகிறோம்)
**

'சித்தக் கடல்' என்னும் சிறு நூலில், 1915ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி என்று தேதியிட்டுப் பாரதியார் எழுதுகிறார்.

'இந்த மனமாகிய கடலை வென்று விடுவேன். பல நாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும் பாடு தேவர்களுக்குத்தான் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வ பக்திக் குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய சம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.

சலோ! தெய்வமுண்டு. அது அறிவு மயம். அந்த அறிவுக் கடலில் நான் என்பது ஒரு திவலை. அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும்.
***

புகையிலைச் சாற்றினால் தலை கிறுக்கிறது. 20 தரம் புகையிலையை நிறுத்தி விடுவதாகப் ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை. ஸம்ஸ்காரம் எத்தனை பெரிய விலங்கு பார்த்தாயா? மகனே! ஸ்ம்ஸ்காரங்களைச் சக்தியினால் வென்றுவிடு!
***

உடல் படுத்துக் கொண்டது. உடலை வைரம் போல இலாகவமுடையதாகவும், சிங்கத்தைப் போல வலியுடையதாகவும் செய்ய வேணும். உடனே வசப்படாவிட்டல் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந்துன்பந்தான். உடம்பே, எழுந்து உட்காரு! உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிட வேண்டும்.
***

வயிறு வேதனை செய்கிறது, உஷ்ண மிகுதியால். நோயற்று இருப்பதற்குச் சக்தியை ஓயாமல் வேண்டிக்கொள். நோயில்லையென்று மனத்தை உறுதி செய். மனம் போல உடல்.

மகனே! உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது எந்திரம், நீ எந்திரி.

ஜூலை 2

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப் பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன. 'செ' வழக்கம் போல் வந்தான். பரமேஸ்வரி, மகாசக்தி -- உன்னிடத்தில் அமரத்தன்மை கேட்கிறேன். என்னை மனக் கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். உன்னை எப்போதும் சிந்தனை செய்து கொண்டும், உனது மஹா அற்புதமான உலகத்தை எப்போதும் கண்டு தீரா மகிழ்ச்சியடைந்து கொண்டும், தர்மங்களை இடைவிடாமல் நடத்திக் கொண்டும் வருந்திறமை எனக்கு அருள் செய்ய வேண்டும்.

மனமாகிய குரங்கு செய்வதையெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக்கிரமத்தில் அதை வசப்படுத்தி விடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்து முன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால் அதன் தன்மை முழுவதையும் அறிய ஹேதுவுண்டாகு மென்பது என்னுடைய தீர்மானம்.

பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மையில்லாமலும் வஞ்சகமில்லாமலும் எழுதுவதற்கு எனக்குத் தைரியம் கொடுக்க வேண்டும்.

நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடும் என்று கருதி நமது துர்ப்பலங்களை எழுத லஜ்ஜையுண்டாகிறது. பராசக்தீ! என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும்.

பாரதியினுடைய மன நடைகளை எழுதப்போகிறேன். நான் வேறு, அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்தில் கட்டுண்ட சிறு ஜந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப் படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாகாதபடி அருள் செய்ய வேண்டும்.

எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ! அதைக்காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்று இல்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது -- ஜடம், உயிர், அறிவு என இவை தம்முட் கலந்தன. அறிவுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள்.

இவற்றுள் ஜடத்துக்கு உயிரும், உயிருக்கு அறிவும் காரணமாமென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மூலப் பொருளாய், இவையனைத்தையும் தனது உறுப்புகளாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர்நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் தியானம் செய்வதால் உனது குறைகள் எல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவுதான் பெருமையடைகிறது.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியை த்யானம் செய்யுமானால் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு.
***

பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண்டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது. வெற்றிலை போடுவதைக் குறைக்க வேண்டும். பணமில்லாததைப் பற்றிக் கவலைப் படலாமா? மூடா, மூடா, மூடா, நாம் சுத்த அறிவல்லவா? உலக வ்யவஹாரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆணவக் காட்டிலே அகப்பட்ட சித்தத்தின் விருப்பப்படி இந்த உலகில் ஏதாவது நடக்கிறதா? சாகாத ஜந்து உண்டா? எல்லா ஜந்துக்களும் உயிரை ஓயாமல் காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே ஜீவனுடைய வசமில்லாத போது வேறெதைப் பற்றிக் கவலைப் படுவதிலேயும் என்ன பயன்? பராசக்தியின் கட்டளைப்படி உலகம் நடக்கிறது. உனக்கு வேண்டிய இன்பங்களை அவளிடம் வேண்டிக்கொள். அவள் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு சுகமாக இரு.

எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

"உத்தியோகினம் புருஷஸிம்ஹ முபைதி லக்ஷ்மீ"

பராசக்தியைத் தியானம் செய்துகொண்டேயிருந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும். உடலும் உயிரும் ஒளி பெற்று வாழும். நூறு வயதுக்குக் குறைவில்லை. இது ஸத்தியம். நூறு வயது நிச்சயமாக வாழ்வாய். மனிதனுக்கு இயற்கையிலே நூறாண்டு ஏற்பட்டது. இயற்கை தவறாமல் மூடக் கவலைகளில்லாமல் இருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம். மகனே, அச்சத்தைப் போக்கு.

மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்? பராசக்தீ! எனது கருவி கரணங்களிலே நீ பரிபூரணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்க வேண்டும்.

இன்பமில்லையா?

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆத்மா நீ!

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா?

முதலாவது எனக்கு என் மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாகிவிட்டது. இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழு துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை. இருவருக்கும் எப்போதும் சஞ்சலம். பயம், பயம், பயம்! சக்தி உன்னை நம்பித்தான் இருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய், உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம் -- தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ! ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்கள் எல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி எனது குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிர விதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிவப்பும், பொருட்பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் -- உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்லுவதில் பயனில்லை. அவளும் உன் சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறாள். இயன்றவரை உண்மையோடுதான் இருக்கிறாள். அவளையும் நீ சம்ரக்ஷணை செய்ய வேண்டும்.

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை, பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் எற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும். (நமது குறிப்பு: காசியில் இருந்த குழந்தை தங்கம்மா, அவருடன் இருந்த இளைய மகள் சகுந்தலா)

எனது குடும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்ந்தது. தாயே, ஸம்மதந்தானா?

மஹா சக்தீ! என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு.

ஓயாமல் வியாதி பயங்கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! தூ! கோழை!

புகையிலை வழக்கம் தொலைந்துவிட்டது, பராசக்தியின் அருளால். இனிக் 'கஸரத்' (உடற்பயிற்சி) வழக்கம் ஏற்பட வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு, வலிமையுடையதாக வேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி நன்றாக ஓடி, உடலை நன்கு காத்துக் கொண்டிருக்க வேணும் -- பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா, பொய் வாயிதா, பொய் வாயிதா -- தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

மஹாசக்தீ, நீயிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் -- சரி இப்போது உன்னை வையமாட்டானா? என்னைக் காப்பாற்று, உன்னைப் போற்றுகிறேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்கூட நீ தண்டனை செய்து கொள். எனக்கு அதிலே சந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளை நீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைகிறேன்.

"சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி
வெல்க பராசக்தி, வெல்க!!"
***

சித்தக்கடல் என்னும் சிறுநூலில் பாரதி தம் உள்ளத்தின் நிலையை விவரித்துக் கூறுகிறார். நோய், அச்சம், கடன்காரர் தொல்லை, குடிக்கூலிக்காக, வீட்டுக்காரன் கொடுக்கும் தொல்லை முதலிய தொல்லைகள் எல்லாவற்றையும் கூறி பராசக்தி அன்னை இவற்றைத் தீர்க்கும்படி அவள் அருளை வேண்டுகிறார். மேலும் "ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா?" உலகில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.








Tuesday, July 26, 2011

ஊழிக்கூத்து


ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண்டி, கங்காளீ!

அன்னை அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

ஐந்துறு பூதம் சிந்திப்போ யொன்றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய், அடு தீ சொரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் "ஓஹோ ஹோ" வென்றலைய - வெறித்
துறுமித் திரிவாய், செறுவெங் கூத்தே புரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

சத்திப் பேய்தாந் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங் கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போயெட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகுங் காலம்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

காலத் தொடு நிர்மூலம் படுமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆநந்தக் கூத்திடுவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

இதுதான் பாரதியாரின் "ஊழிக்கூத்து" பாடல். இந்தப் பாடல் குறித்து பிரபல பொதுவுடைமை வாதியும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளர் ஜெயகாந்தனால் மதிக்கப்பட்டவருமான ஆர்.கே.கண்ணன் தான் எழுதியுள்ள "புது நெறி காட்டிய பாரதி" எனும் நியு செஞ்சுரி புத்தக நிலையத்தார் வெளியிட்டிருக்கும் நூலில் ஊழிக்கூத்து பாடல் பற்றித் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார். ஒரு பொதுவுடைமை வாதியின் நோக்கில் அமைந்துள்ள அவரது கட்டுரையின் உட்கருத்தை இப்போது பார்க்கலாமா?

"நாதப் பிரம்மத்தி9 சூட்சும நிலைக்குள் கலந்து வெளிப்பட்ட ஒரு ஒலிச் சித்திரம் ஊழிக்கூத்து.

பரணியை ஜெயம்கொண்ட ஜெயங்கொண்டாரையும் ஜெயங்கொண்டு விட்டிருக்கிறான் பாரதி.

பாரதி வேறு கவிதை யொன்றும் எழுதாமல் இந்த ஒன்றை மட்டும் எழுதிவிட்டு மறைந்திருந்தாலும் இந்த ஒரு கவிதையே அவர் மகாகவி என்று உலகுக்குப் பறை சாற்றும்.

ஏனெனில் தமிழ்க் கவிதைச் சமூகத்துக்கு, உலகக் கவிதைச் சமூஊகத்துக்கு, இது தேவை. அவற்றில் இதுகாறும் காணக்கிடைக்காத தொன்று. தமிழ் மொழியின் வெற்றி இது - பொதுவாகவே மனித மொழியின் மகத்தான வெற்றி இது.

காட்சியின் பல அழகுகளை சிந்தனையின் பல நுட்பமான நெகிழ்ச்சிகளை, ஒலியின் உள்ளிசைவுகளை, முடிந்தவரைக்கும் வர்ணித்துப் பார்த்துவிட்டு மகாகவிகள் கூட ஒரு நிலையை எட்டியதும் "இது சொல்லில் அகப்படுமா?" என்று பெரு மூச்சுவிட்டு நிறுத்திக் கொள்வதை நாம் அறிவோம். புற அக அனுபவங்கள் அசல்; அவை பெரிது; மனித மொழி எத்துணை வளர்ச்சி கண்டிருந்தாலும் அது ஒரு செயற்கை சாதனம்; நிறைவை நோக்கித் தாவித் தாவிச் சென்று கொண்டேயிருக்க வேண்டியது. இந்த நிலையில், உலகத்தில் எந்த ஒரு கவிஞனாவது அதுவரை சாதிக்காத சாதனையாக ஒரு புதிய ஒலி உலகத்தை, காட்சி உலகத்தை, அனுபவத்தை, கவிதையிலே படைத்துத் தந்தால் அவனுக்கு உலகம் கோவில் கட்டிக் கும்பிடும்; மனித மொழியின் மாபெரும் வெற்றி என்று ஏற்றிப் போற்றும்.

பாரதியின் 'ஊழிக்கூத்து' அவ்வகைப்பட்டது. அது தமிழ்மொழிக்கு மட்டும் உரியதல்ல.

அதுபோல் பிறிதொரு கவிதை உலகக் கவிதையில் இல்லை.

கவிதையிலே எடுத்தாளும் பொருளுக்குப் பொருத்தமாக இசைவாக நாதசுகம் தருகிற சில கவிதைகள் இங்கு என் நினைவுக்கு வருகின்றன.

கடல்மீது தோனியிலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து கடல் ஜுரம் (Sea Fever) என்கிற ஒரு கவிதையை ஆங்கிலக் கவிஞன் ஜான் மேஸ்பீல்ட் (John Masefield) எழுதியிருக்கிறான். "கட்டு மரங்கள்" என்று தலைப்பிட்டு மீனவர்களின் அனுபவத்தைச் சித்தரித்து இந்தியக் கவிக்குயில் சரோஜினி தேவியார் ஆங்கிலக் கவிதையொன்று புனைந்திருக்கிறார். அவை இனிமை சொட்டும் கவிதைகளே; எனினும் பாரதியின் ஊழிக்கூத்துடன் ஒப்பிடுகையில், அவற்றைப் பொதியமலைத் தென்றலாகத்தான் கொள்ள முடியும்.

வரப்போகும் ருஷ்யப்புரட்சியை (1905) உருவகமாகக் கொண்டு லெனின் கட்சியினரை ஒரு பயமறியாத கடற்பறவைக்கு உவமையாக்கி, "கடற்பறவையின் கீதம்" (Song of the stormy petrel) என்று மாக்ஸிம் கார்க்கி ஒரு எழுச்சி மிக்க கவிதை பாடியுள்ளார். புயல் வீசத் தொடங்கினால் மற்ற பறவைகள் அனைத்தும் தரை நோக்கிப் பறந்தோடிவிடும். ஆனால் கடற் பறவையோ, புயலின் வேகம் அதிகமாக அதிகமாக, கடலின் நடுவே சென்று உறுமிக் கவ்வும் வானத்துக்கும் சீறிப் பாயும் அலைகளுக்கும் நடுவே அச்சமின்றிச் சுழன்று சுழன்று பறக்கும். போல்ஷெவிக்குகளைப் பற்றிய ருஷ்யப் புரட்சியைப் பற்றிய இந்தக் கவிதை மனித மொழிக்கு ஒரு அற்புதமான வெற்றியாகும்.

எனினும், அது ஒரு கடற் புயல்தான்.

பாரதியினுடையதோ அசல் ஊழிக்கூத்து!

"வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட ...."

என்று பாடத் தொடங்கியதும் தரைமேலிருந்த கால்கள் அப்படியே தலைகீழாக வாரிவிடப்பட்டு ஊழிக்கூத்திலே நாம் விழுந்து சுழலத் தொடங்கி விடுகிறோம்.

சங்கீதம் ஒன்றுதான் பாரதியின் "ஊழிக்கூத்து"க்கு இணையாக -- ஊழிக்கூத்தையும் விஞ்சி -- சாதனை புரிந்திருக்கிறது என்பது என் கருத்து. அதுவும் நம் சங்கீதமல்ல, ஐரோப்பிய சங்கீதம் என்பது என் கருத்து. ஊழிக்கூத்தின் நாத உலகில் நுழையும் போது ஜெர்மன் நாட்டு இசை மேதைகளாகிய பீதோவனுடைய (Beethoven) வாக்னருடைய (Wagner) சில சங்கீதப் படைப்புகளுக்குள் கலந்து விடுகிறேன். "ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாகப் பின்னர் அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக" வுமான ஒலிச்சித்திரங்களை அவர்கள் படைத்திருக்கிறார்கள். பாரதியின் ஊழிக் கூத்துக்காக இந்த ஐரோப்பிய சங்கீதத்தை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். பீதோவனுடைய மூன்றாவது, ஐந்தாவது அல்லது ஒன்பதாவது சிம்பொனி (symphony) யையோ, வாக்னரின் Seigfried Tannhauser, opera (இசை நாடகம்) வையோ கேட்டுப் பாருங்கள்.

சங்கீதம் கவிதையை விஞ்சுகிறது; பாரதியைப் பீதோவன் விஞ்சுகிறார் என்றால் மோசமில்லை. யாரும் தாபமடையத் தேவையில்லை. சங்கீதம் எல்லாக் கலைகளுக்கும் ராணி; மொழியைவிட ஏழிசை ஆற்றல் நிறந்தது. பிறப்பிலும் ஒலி முந்தி, மொழி பிந்தி. எனவே இசை என்றும் கவிதையை முந்திக் கொண்டு வளரும். இசையும் லயமும் (கூத்தும்) குரலோடு உடலோடு இயல்பாக ஒட்டிக்கொண்டு வருவன. மற்ற கலைகள் அனைத்தும் செயற்கையாக மனிதன் ஓரளவுக்கு அறிவுநிலை எய்தியபின் வருவன. குழந்தைகள் இதற்குச் சாட்சி; முதன்முதலாகக் குழந்தைகள் தன்னியல்பாக வெளியிடும் கலை இசைக்கலைதான். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே அமைந்த இயல்பான முதல் பந்தம் உழைப்பும் இசையும்தான். மொழி, கவிதை, இலக்கியம், சிற்பம், ஓவியம், சாத்திரம் முதலான பிற யாவும் பின்னர் வருபவையே.

இந்தச் சங்கீதத்தையும், "ஊழிக்கூத்தை"யும் அனுபவிக்கிறபோது, "பேய்ப் பயங்கரத்தின் மடியிலே துஞ்சும் அழகுத் தெய்வம்" (Beauty lying on the lap of Terror) என்று வால்டர் ஸ்காட் பயின்ற ஒரு சொற்றொடரும், அதனையொட்டிய காட்சியும் நினைவுக்கு வருகின்றன. "பெர்த் நகரின் அழகி" (Fair Maid of Perth) என்கிற நாவலில் ஸ்காட்லாந்து நாட்டு மலைகளின் அடர்ந்த காடுகளின் பயங்கரமான - அதே நேரத்தில் அழகான - காட்சிகளைப் பக்கம் பக்கமாக வர்ணித்தும் திருப்தி கொள்ள முடியாமற்போய் அவர் பயின்ற சொற்றொடர் இது.

பயங்கரமே ஒரு அழகுதான். பயங்கரமும் அழகும் நம்முள் பிரிக்க முடியாத ஒரு தோற்றம்; ஒரு அனுபவம். உண்மையின் ஒரு நிலை, அழகின் ஒரு சுவை - பயங்கரம் என்பது.

விண்வெளியிற் சுழன்ற ககாரினும், விண்வெளியில் நீந்திய போபாவிச்சும் ஒப்புக் கொள்வார்கள்.

சிவபெருமானைச் சுடலையிலும், கயிலையிலும் வைத்துக் காட்டும் காட்சித் தத்துவம் (பிற தத்துவங்கள் ஒரு புறமிருக்க) இனியது அல்லவா?

"ஆம்" என்று தலையாட்டுகிறீர்களா? புரிந்து கொண்டு தலையாட்டுங்கள்.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்சத்தின் அழிவை "காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகின்" காட்சியைச் சித்தரிக்கிறது என்று நினைக்கிறிர்களா?

உங்கள் நினைப்பு முழு உண்மையல்ல! அது அரை உண்மையே!

அரையுண்மை என்றால் அது பொய் ஆகும்!

பயங்கரத்துக்குள்ளே அழகு ஊடுருவி நிற்கிறது. அழிவுக்குள்ளே சிருஷ்டி ஊடுருவி நிற்கிறது. இரண்டையும் ஒரே நிலையில் பார்ப்பதுதான் முழுமெய் ஆகும். ஏனெனில் இயக்கம்தான் நிரந்தரமானது; உண்மையானது; அழிவு பிறப்பு என்பதெல்லாம் பருப்பொருளின் உணர்வின் பல வடிவ மாற்றங்களே, நிலை மாற்றங்களே. எதுவும் பிறப்பதில்லை, எதுவும் இறப்பதில்லை. இயக்க மாற்றங்கள் வழியே மேல் நிலைக்குச் சென்ற வண்ணம் இருக்கின்றன.

"காலத் தொடு நிர்மூலம் படு மூவுலகும்" என்று சிந்திக்கிறீர்களா? அதோ, பாருங்கள்! அடுத்த வரியில் வரும் காட்சியை.

".............................. அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலரும் - சிவன்
கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும்"

அழிவுக்கிடையே, ஊழிக்கூத்துக்கு நடுவே, காளியின் சினம் விலகுகிறது! பிறகு நடப்பதென்ன?

"............................. சிவன் கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்!"

சும்மா தொடவில்லையாம்! சிவனைச் சக்தி கொஞ்சித் தொடுகிறாளாம்! தொட்டுவிட்டு ஆனந்தக் கூத்தாடுகிறாளாம்! இன்னொரு பிரபஞ்சம் அங்கே "பிறந்து" விட்டது - என்று இதற்குப் பொருள். அழிவின் நடுவே, ஊழிக் கூத்தின் நடுவே, சிவனும் சக்தியும் தொட்டு ஒரு புதிய பிரபஞ்சம் உருவெடுக்கிறது. அழிவிலிருந்து புத்துயிர் பெற்றெழும் புதிய பிரபஞ்சம்!

எனவே, "ஊழிக்கூத்து" எனும் பாரதி சித்திரம் உலகின் முடிவா? அல்லது உலகின் முதலா? என்கிற கேள்வி எழுப்பி மயங்காதீர்கள்.

அது அழிவு எனும் இயக்கத்தின் வடிவமா? அல்லது படைப்பு எனும் இயக்கத்தின் வடிவமா? என்று வினா எழுப்பி வியப்பில் ஆழ்ந்து போகாதீர்கள்.

சூரியனின் ஒளி மையத்தில் அடுதீ சொரியும் (Cosmic Radiation) கருவுக்குள் நின்ற கிரேக்க புராண புருஷன் பிராமதேயசின் முயற்சி இது! இக்கவிதையை நீங்கள் பாடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சூரியனின் எரி சுழற்சியில் ஒரு பகுதி சரிந்து பிரிந்து விண்வெளியில் எறியப்பட்டு அது பல கோளங்களுடன் முட்டி மோதிச் சிதறி பஞ்ச பூதங்களின் ஒரு கூத்துக்கு (என்ன வலிவான விஞ்ஞானச் சொல்) உட்பட்டு பிறகு மெல்ல மெல்லக் குளிர்ந்து பூமி என்று சொல்லும் இந்த மண்ணுலகம் பல கோடி ஆண்டுகள் கழித்து உருவாகிறதாகச் சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது ஊழிக்கூத்து என்பது அழிவு படைப்பு என்கிற இரு போக்கும் ஊடுருவி உட்கலந்து தம்முள் மோதிக் கொள்ளும் இயக்கத்தின் வடிவத்தையே சித்திரமாகக் காட்டுவதாக ஒப்புக் கொள்வீர்கள்.

இந்த உண்மையான நிலையிலே நின்று (அல்லது சில வாசகர்கள் நான் சொல்வதை ஏற்காவிட்டால் இந்தப் பிரமையிலே, பாவனையிலே நின்று) ஊழிக்கூத்தைப் பாடிப் பாருங்கள். உள்ளத்திற்கும், கற்பனைக்கும் அளக்கவொண்ணா விவரிக்கவொண்ணா வலிமை சேருவதை உணர்வீர்கள்.

மனிதனின் சிந்தைக்கும், கற்பனைக்கும், தோளுக்கும் வலிமை சேர்க்கப் பாடியவன் பாரதி என்பதையும் மறக்காதீர்கள். அழிவின் காட்சி அவன் குறியாக இருக்க முடியாது. அழிவிலே உருவாகி வரும் படைப்பின் சித்திரமே அவன் குறியாக இருக்க முடியும்.

எனவேதான் ஊழிக்கூத்தை நாம் முற்றாகப் பாடிவிட்டு,

"அன்னை, அன்னை, ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!" என்று பாரதியோடு நாமும் ஆர்ப்பரித்தெழுகிறோம். ஒரு சக்தி மயமான உலகிலே புகுந்து கூத்து நடத்திவிட்டு உள்ளம் நிறைந்த சக்தியின் தேசுடன் வெளிவருகிறோம். (நன்றி: ஆர்.கே.கண்ணன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

Monday, July 25, 2011

"இந்தியா" பத்திரிகை.


"இந்தியா" பத்திரிகை.

எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் என்பவர் பாரதியார் காலத்திலேயே "சுதேசமித்திரனில்" துணை ஆசிரியராக இருந்தவர். சிறந்த எழுத்தாளர். தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட கால வரலாறு இவற்றைப் பற்றி பல நூல்களை எழுதியவர். அவர் "சுப்பிரமணிய பாரதியார்" என்று நூலொன்றை எழுதி 1955இல் வெளியிட்டார். அந்த நூலின் முன்னுரையில் அவர் எழுதிய முன்னுரையிலிருந்து:-

"கம்பனும் காளமேகமும் முன்னம் கவி மழை பொழிந்து நம்மைக் களிப்பித்தனர். அண்மையிலோ சுப்பிரமணிய பாரதியார் கவியமுதம் சொரிந்து நமக்குப் பரவசம் ஊட்டினார்.

பழம் புலவர்களின் கவிதையை உணர, அகராதியும் ஆசானும் வேண்டும். பாரதியாரின் பாடலை உணர நமக்கு மனமிருந்தால் போதும்; மகிழ்ச்சி எய்தலாம்; தெளிவும் கொள்ளலாம்."

பாரதியாரின் பாப்பா பாட்டும், முரசும், சிறுவர் சிறுமியருக்கே அன்றி முதியோருக்கும் முதுமொழி புகட்டும். புதிய ஆத்திசூடியோ புத்தியை வளர்க்கும்.

புதுயுகக் கவிஞர் பாரதியார். அவர் போன்ற கவிஞர் இன்றளவும் தோன்றவில்லை. உலக மகா கவிகளுள் அவர் ஒருவர். அவர் சரிதம் சுவை மிக்கது. இளைஞர் படித்து இன்புறலாம்."

மேற்படி நூலில் எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் பாரதியின் பல பரிமாணங்களை விரிவாக எடுத்துரைக்கிறார். அப்படி அவர் எழுதியவற்றுள் "இந்தியா" எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இப்போது பார்க்கலாம்.

"சுதேசமித்திரனில் பாரதியாருக்கு எழுத்துச் சுதந்திரம் இல்லை. அது பற்றியே சொந்தமான பத்திரிகை வேண்டுமென்று விரும்பி நின்றார் அவர். அச்சமயம் சென்னை நகரிலே வேதாந்தப் பத்திரிகை ஒன்று நடந்து வந்தது. அதன் பெயர் "பிரதிவாதி" என்பதாம்.

அழகிய சிங்கர் என்பார் அதனை நடத்தி வந்தார். அவர் உறவினரான திருமலாச்சாரியார் அப்பத்திரிகைக்கு ஆசிரியராய் இருந்து வந்தார். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவது சிலர் வழக்கம். அப்போது நடந்து வந்த சுதேசிய இயக்கம் அவரை ஆட்கொண்டது.

ஆதலினால், தமிழகத்தைத் தட்டி எழுப்ப, ஒரு தமிழ்ப் பத்திரிகை நடத்த அவர் தயாரானார். அப் பத்திரிகைக்கு "இந்தியா" என்று பெயர் சூட்டப் பெற்றது. அதற்கு நம் பாரதியார் ஆசிரியராய் வாய்த்தார். 1907ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த வாரப் பத்திரிகை எழுந்தது.

பாரதியாரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகையோ, அவரது உள்ளம், உணர்ச்சி, உயர்வு, உற்சாகம் முதலிய குணங்கள் அனைத்தையும் கொண்டு குலவியது. கட்டுரைகள் வீரக் கனல் தெறிக்கும்; தேசப்பற்று என்னும் நெருப்பைக் கக்கும்.

"இந்தியா" பத்திரிகையை எல்லோரும் விரும்பி வாங்கினர். ஒரு மாதத்திற்குள் நாலாயிரம் சந்தாதாரர்கள் சேர்ந்தார்கள். அந்நாளில் பலருக்கும் "இந்தியா"வைப் படிப்பது ஒரு கடமையாய் இருந்தது. பத்திரிகையில் எழுதுவதுடன் பாரதியார் நிற்கவில்லை. திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டிப் பேசுவார், பாடுவார்.
                                                        G.Subramania Iyer
சென்னை மாநகரிலும், சுதேசிய இயக்கம் தலை தூக்கியது. அதனை மேலும் வளர்க்க, வங்காளத்திலிருந்து விபின் சந்திரபாலர் வந்தார். திருவல்லிக்கேணிக் கடற்கரையில் சொல்மாரி பொழிந்தார். ஜி.சுப்பிரமணிய ஐயர் தலைமை தாங்கி நின்றார். பாலருடைய சொற்பொழிவுகள் தேச ஆவேசத்தை எழுப்பியது; புதிய உணர்ச்சியையும் ஊட்டியது.

பாலரின் சொல்மாரி ஆங்கிலத்தில் அமைந்தது. பாரதியார் அதனை "இந்தியா" பத்திரிகையில் சுவை கெடாமல் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். ஆங்கிலம் அறியாதாருக்கு அம்மொழி பெயர்ப்பு நல்லுதவி புரிந்தது. பாலரின் வாசகம் மணிவாசகமே யாகும்.

அப்போது வடக்கே கல்கத்தா நகரில், 'வந்தேமாதரம்' என்னும் ஆங்கில தினசரி நடந்து வந்தது. அதன் ஆசிரியர் பாபு அரவிந்த கோஷ். அரவிந்தரின் எழுத்தும் ஆவேசமாய் இருக்கும். அவர் திலகருக்கு வலக்கை போன்று இருந்தவர். சுதேச பக்தியைத் தூண்டியதில் தலை சிறந்தவர். சுயராஜ்யமே வேண்டுமென்று சாதித்தவர்.
                                                             Bala Gangadar Tilak
பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர், லாலா லஜபதிராய், பாபு அரவிந்த கோஷ் இவர்கள் ஒரு கட்சி. அன்னிய ஆட்சி அகல வேண்டுமென்று வாதிடுபவர்கள். சுய ராஜ்யமே வேண்டும் என்று சுடச்சுடப் பேசுவார்கள். இவர்கள் 'தீவிரக் கட்சியார்' என அழைக்கப்பட்டார்கள்.
                                                                     Gokhale
கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, சென்னை வி.கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் 'மிதவாதக் கட்சியார்' எனப்படுபவர்கள். ஆங்கில அதிகாரிகளை அண்டி நின்று, நயந்து பேசி, நாளடைவில் சுயராஜ்யம் கொள்ளலாம் என்பதே இந்த மிதவாதக் கட்சியாரின் நோக்கம்.

தீவிரக் கட்சியார், மிதவாதக் கட்சியார், இருவரும் கொண்டது அன்றைய காங்கிரஸ் மகாசபை. ஆயினும் அச்சபையில் மிதவாதிகளே அதிகம். அவர்களுக்குச் செல்வாக்கு மிகுதி. தீவிரக் கட்சியாருக்கோ, அச்சபையில் புதிய உணர்ச்சியைப் புகுத்த வேண்டும் என்பதே கருத்து. அதிகாரிகளை அண்டி நிற்பதிலும் மனம் இல்லை.

அந்த நிலையில் 1907ஆம் வருஷத்தின் இறுதியில், சூரத் நகரத்தில் காங்கிரஸ் மகாசபை கூடியது. மிதவாதக் குழுவைச் சேர்ந்த ராஷ்பிகாரி கோஷ் என்பார் தலைவராய் இருந்தார். அதில் திலகரின் கோஷ்டிக்கு விருப்பம் இல்லை. நம் சென்னையிலிருந்து திலகரை ஆதரிக்கப் பலர் சென்றனர்.

அவ்விதம் சென்றவர்களுள் பாரதியாரும் ஒருவர். அரச வாழ்த்து முழங்க அந்த சூரத் நகரில் மகாசபை க்கூடியது. (அதாவது கூட்டம் துவங்குமுன் இங்கிலாந்து அரசருக்கு வாழ்த்துப்பா பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் காங்கிரசில்) ராஷ்பிகாரி கோஷ் தமது பிரசங்கத்தைப் படிக்க வாய் திறந்தார். உடனே சபையில் சந்தடி கிளம்பியது. தலைவரின் பேச்சைக் கேட்கப் பலருக்கு ஆவல் இல்லை. அது பற்றியே எழுந்தது சந்தடி.
                                                         Dada Bai Naoroji
பால கங்காதர திலகர் கம்பீரமான புருஷர். சிங்க நோக்கு உடையவர். அவர் பெருமிதமாக எழுந்தார். "இந்தத் தலைவர் வேண்டாம்" என்றார். மிதவாதக் குழுவினர் அது கேட்டு ஆத்திரம் அடைந்தனர். திலகரைப் பார்த்து, "நீர் பேசுவது ஒழுங்கு அன்று" என்று கோபமாகக் கத்தினர்.

"நான் ஒரு பிரதிநிதி. சபையில் பேச எனக்கு உரிமை உண்டு" என்று திலகர் கர்ஜித்தார். இதற்குள் செருப்பு ஒன்று பறந்து வந்து மேடை மீதிருந்த சுரேந்திரநாத் பானர்ஜியின் கன்னத்தைத் தடவிக்கொண்டு விழுந்தது. அவ்வளவுதான், சபையில் நாற்காலிகள் நொறுங்கின. வசவும் திட்டும் ஓங்கின. தடியடியும் உண்டாயிற்று. உடனே போலீசார் தோன்றி எல்லோரையும் வெளியே அனுப்பினர்.

சூரத் காங்கிரஸ் அவ்விதம் குலைந்து கலைந்தது. திலகர் கட்சியார், அரவிந்தரின் தலைமையில் கூடினர். சுதேசிய விரதத்தை வற்புறுத்தினர். அன்னிய ஆடை விலக்கையும் சபதமாகக் கொண்டனர். அச்சமயம் திலகரை நேரில் தரிசித்தார் பாரதியார். "வாழ்க திலகர் நாமம்" என்ற பாடலை ஆவேசமாகப் பாடினார்.

வாழ்க திலகன் நாமம் வாழ்க வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை வீழ்க வீழ்கவே!!

நாலு திசையும் ஸ்வாதந்த்ரிய நாதம் எழுகவே
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே
ஏலு மனிதர் அறிவை யடர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே.

கல்வி யென்னும் வலிமை கொண்ட கோட்டை கட்டினான் - நல்ல
கருத்தினால் அதனைச் சூழ்ந்தொர் அகழி வெட்டினான்
சொல் விளக்கம் என்று அதனிடைக் கோயிலாக்கினான்
ஸ்வாதந்த்ர்யம் என்றதன் மேற் கொடியைத் தூக்கினான்.

துன்பம் எனும் கடலைக் கடக்கும் தோணி அவன் பெயர்
சோர்வு எனும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர்
அன்பு எனும் தேன் ஊறித் ததும்பும் புதுமலர் அவன் பேர்
ஆண்மை எனும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பேர்."

சூரத் நகரிலிருந்து திரும்பியதும் பாரதியார் சென்னை நகரிலே மேளதாளங்களுடன் பெரிய ஊர்வலம் நடத்தினார். மாபெரும் கூட்டமும் கூட்டினார். நகரிலே சுதேசியக் கிளர்ச்சி வலுத்தது. "பாரத் பந்தர்" என்னும் சுதேசியக் கடையொன்று ஏற்பட்டது. நாட்டுப் பொருள்களையே நம்மவர் வாங்க வேண்டும்; அன்னிய ஆடைகளை விலக்க வேண்டும் என்று பாரதியாரும், சிதம்பரம் பிள்ளையும் பிரசாரம் செய்தனர்.

புதிய தேசியக் கட்சிக்குப் பேரிகை போல ஆனார் பாரதியார். மிதவாதக் குழுவினை மிகவும் சுவையாக நையாண்டி செய்தார். ஆங்கில அதிகாரிகளோ, புதிய தேசியக் கட்சியின் மீது சீற்றம் மிகுந்தனர். அக்கட்சியாரில் பலரையும் அடக்கி ஒடுக்க முயன்றனர்.

வங்கத்திலே சுதேசிய வீரர் எழுவர் நாடு கடத்தப்பட்டனர். வந்தேமாதர கோஷம் கூடாது என்று அதிகாரிகள் ஆணையிட்டார்கள். அது கண்டு பாரதியார் பொறுக்கவில்லை. படபடப்பாக எழுதியும் பேசியும் வந்தார். அதனால் "இந்தியா" பத்திரிகையின் மீதும் அதிகார அம்பு பாய்ந்தது.

பாரதியாரின் மீதும் அந்த அம்பு வந்து பாயும் என்று நகர் எங்கும் பேச்சு எழுந்தது. அந்நாளிலே அதிகாரிகள் கோபத்துக்கு ஆளானால் கடும் சிறை கிட்டும். மனைவி மக்களைத் துறந்து அந்தமான் தீவில் சிறை கிடக்க வேண்டும். 'இதோ வாரண்ட் வந்துவிட்டது' என்று பாரதியாருக்கு அன்பர் உரைத்தனர். புதுச்சேரிக்குப் போய்விடவும் சொல்லினர்.

சிறை புகப் பாரதியாருக்கு மனமில்லை. ஏன்? சிறையில் கிடந்தால், எழுத்தினாலும், பேச்சினாலும் தேச ஊழியம் புரிய முடியாது. மக்களைத் தட்டி எழுப்ப இயலாது. பெட்டிப் பாம்பு போல பதுங்கி பயந்து சுருண்டு கிடக்க வேண்டும். மேலும் வரகவியாக உள்ளவர், கட்டுப்பட்டிருக்க ஒப்புவாரோ?

ஆதலினால், அதிகாரிகளின் கண்ணில் படாமலும், ஒற்றரின் நோக்கில் விழாமலும் புதுச்சேரிக்குப் போகத் துணிந்தார் அவர். புதுச்சேரி அன்று பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தம். கடன் தொல்லை தாங்காமல் பலர் புதுச்சேரியில் புகுந்து கொள்வர்.
                                                                         C.R.Das
அதிகாரிகளின் தொல்லைக்கு அஞ்சுவோரும் அங்கே புகுந்து வசிப்பதுண்டு. ஆங்கில அதிகாரிகள் அன்னாரைச் சிறை செய்ய அங்கே வரக்கூடாது என்று பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் ஓர் ஒப்பந்தம் உண்டு. அதனை அறிவார் பாரதியார்.

மாயமாக மறைந்து போல அவர் உறுதி கொண்டார். அவ்வாறு அவர் நடந்து கொண்டதை அடுத்த கட்டுரையில் விரித்து உரைப்போம்.

Wednesday, July 13, 2011

திருநெல்வேலி சதி வழக்கு"

"திருநெல்வேலி சதி வழக்கு"
என் அனுபவங்கள் - நீலகண்ட பிரம்மச்சாரி

(நீலகண்ட பிரம்மச்சாரி என்றும் சாது ஓம்கார் என்றும் அறியப்பட்ட இந்தப் புரட்சிக்காரரைப் பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவர் வரலாற்றை முழுமையாக எழுதி வெளியிட வேண்டும். இங்கு அவரே தன் வரலாற்றின் ஒரு பகுதியைச் சொல்ல அரியலூர் தியாகி சபாபதி அவர்கள் எழுதி "திருச்சி மாவட்ட தியாகிகள் மலரில்" வெளியிட்டிருக்கிறார். படிப்போம்.) நன்றி: அரியலூர் தியாகி சபாபதி.

"1907ஆம் வருஷம் மே மாதம் வங்கம் தந்த சிங்கம் பிபின் சந்திர பால் சென்னைக்கு விஜயம் செய்தார். நான் அப்போது சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு அப்போது வயது 18 இருக்கும். நானும் அவர் கூட்டத்துக்குச் சென்று அவருடைய அனல் கக்கும் சொற்பொழிவைக் கேட்டேன். அவருடையெ பேச்சு என் மனதில் புரட்சிக்கான வித்தை ஊன்றியது. தேசத்துக்காக நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற தாகம் உண்டாகியது. ஏதாவது செய்யத் துடித்தேன்; என்ன செய்வது எப்படி செய்வது என்று புரியவில்லை. மனக் குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

வீட்டிலும் நிம்மதி ஏற்படவில்லை. ஏதாவது செய்தே தீரவேண்டுமென்கிற வெறி. பிபின் சந்த்ர பாலைத் தனிமையில் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் பீட்டர்ஸ் சாலையிலுள்ள கோவிந்ததாஸ் என்பவர் பங்களாவில் தங்கி இருந்தார். அவரோடு இருந்த குஞ்சு பானர்ஜி என்பவருடன் எனக்குத் பழக்கம் ஏற்பட்டது. இந்திய புரட்சியாளர் அமைப்பில் அவர் ஒரு உறுப்பினர். அவருடன் பேசியதில் என் மனம் புரட்சியில் ஈடுபட துடித்தது.

1907இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை சூரத் காங்கிரசுக்குச் செல்வதற்காக வழியில் சென்னை வந்து தங்கினார். கவிச்சக்கரவர்த்தி பாரதியார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிள்ளை அவர்கள் என்னை தூத்துக்குடி வந்து சுதேசி கப்பல் கம்பெனியில் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் பாரதியாரும் சூரத் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் என்றிருந்தபோது அங்கு வங்கத்தின் புரட்சி வீரர் சந்திரகாந்த் சக்கரவர்த்தியைச் சந்தித்தனர். தென் இந்தியாவில் தங்கள் புரட்சித் திட்டத்தைப் பரப்ப வேகமும், துணிவும் மிக்க ஓர் இளைஞன் வேண்டும் என்று அவர் கேட்டார். அப்படிப்பட்ட இளைஞர் ஒருவர் இருக்கிறார், சென்னை வந்தால் அறிமுகப் படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தனர். இந்த விவரம் எனக்கு அப்போது தெரியாது.

1908ஆம் வருஷம் ஜனவர் மாதம் 4 அல்லது 5 தேதியொன்றில் நான் சென்னை 'இந்தியா' பத்திரிகை அலுவலகத்துக்கு பாரதியாரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன். பாரதியாரை நான் அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். நான் போகவில்லையானால் அவர் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுவார், அந்த அளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய பழக்கம்.

நான் அங்கு போனபோது கல்கத்தாவிலிருந்து சந்திரகாந்த் சக்கரவர்த்தி அங்கு வந்திருந்தார். பாரதியார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சூரத் காங்கிரசின் போது நான் குறிப்பிட்டது இந்த இளைஞரைத்தான் என்று அவரிடம் சொன்னார் பாரதியார். அப்போது சூரத்தில் அவர்களுக்குள் நடந்த பேச்சு பற்றியும் என்னிடம் பாரதி கூறினார். எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அப்போது பாரதியார், தான் ஒரு கவிஞன், எழுத்தாளன், இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாது, எதையும் பளிச்சென்று சொல்லிவிடும் பழக்கம் உண்டு ஆகையால் நீங்கள் இருவரும் தனிமையில் பேசுங்கள் என்று எங்களை அனுப்பிவிட்டார்.

1905ஆம் வருஷம் வைசிராயாக இருந்த லார்டு கர்சான் வங்களாத்தை இரண்டாகப் பிரித்தார். இந்து முஸ்லீம்களைப் பிரித்து வைத்து ஆளவேண்டுமென்கிற தீய நோக்கம் அவருக்கு இருந்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து அப்போது நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. வங்கத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. படித்த இளைஞர்கள் களம் இறங்கி போராடினர். அதைப் போல தென்னாட்டிலும் புரட்சி இயக்கம் ஒன்றை உருவாக்க சந்திரகாந்த் சக்கரவர்த்தி இங்கு வந்திருந்தார்.

அவரோடு பேசிய பின் எனக்குத் திருப்தி ஏற்பட்டது. தென்னாட்டில் புரட்சி இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதன் பின் தொடர்ந்து நான் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திருவிதாங்கூர் முதலான இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் சுதேசிப் பிரச்சாரம் செய்து கொண்டே, புரட்சி இயக்கத்துக்கு ஏற்ற இளைஞர்களைத் தேடினேன். அப்படிக் கிடைத்த இளைஞர்களை ஆங்காங்கே சிறு குழுக்களாகப் பிரித்து புரட்சிக்கான வேலைகளில் ஈடுபட வைத்தேன். ரகசியக் கூட்டங்கள் நடைபெற்றன. புரட்சிக்கான திட்டங்களும் வகுக்கப் பட்டன. அந்த ரகசியக் கூட்டங்களில் புரட்சி திட்டங்கள் விளக்கப்பட்டன. காளியின் திருவுருவம் ஒன்றை வைத்து அதன் முன் விபூதி குங்குமம் ஆகியவைகளை வைத்து எந்த நிலையிலும் ரகசியங்களைக் காப்பேன், எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் உறுதி தளரமாட்டேன், எல்லா தியாகங்களுக்கும் உடன்படுவேன் என்று ரத்தத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வைத்தோம்.

1914ஆம் வருஷம், ஜெர்மனி யுத்தத்தைத் துவங்கியது. முதல் உலகப் போர் ஆரம்பமானது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க ஜெர்மனி இந்திய புரட்சியாளர்களுக்கு உதவ முன்வந்தது. கப்பல்கள் மூலம் ஆயுதங்களை புரட்சியாளர்களுக்கு அனுப்ப ஜெர்மனி ஏற்பாடு செய்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு புரட்சியாளர்கள் கையில் ஆயுதம் கிடைத்தவுடன் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் ஆணை பிறப்பித்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து நாட்டைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது திட்டம். ஆங்காங்கே புரட்சியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், ஆணை பிறந்ததும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் இரத்தக் களரியாக வேண்டும் என்பதுதான் புரட்சியின் நோக்கம்.

மேடம் காமா அம்மையார், எம்.வி.திருமலாச்சாரியார் போன்ற புரட்சி இயக்கத் தலைவர்கள் ஜெர்மனியில் தங்கியிருந்தனர். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த மண்டையம் குடும்பத்தைச் சேர்ந்தவர் புரட்சியாளர் திருமலாச்சாரியார். உலக முழுவதுமுள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பு இருந்தது எங்களுக்கு. பரோடா மகாராஜா சாயாஜி ராவ் கெயிக்வாட் புரட்சியாளர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார். பம்பாய், பரோடா, கல்கத்தா, காசி, டெல்லி, புதுச்சேரி, லாஹூர் முதலான இடங்களில் எங்கள் புரட்சி இயக்கப் பணி தீவிரமாக நடந்து வந்தது. நான் மேற்சொன்ன ஊர்களுக்கெல்லாம் சென்று ரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டேன்.

1908ஆம் வருஷம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் பிள்ளை வீட்டில் சென்று சில நாட்கள் தங்கினேன். அங்கு சுப்பிரமணிய சிவாவை சந்தித்தேன். அவருடைய தோற்றம், பேச்சு, பாட்டு, அனல் கக்கும் சொற்பொழிவுகள் இவை என்னைக் கவர்ந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு அந்தப் பகுதிகளில் நல்ல செல்வாக்கும் ஆதரவும் இருந்தது.

பாஞ்சாலங்குறிச்சி சென்றேன். அங்கு சிதம்பரம் பிள்ளையின் அறிமுகத்தோடு பல இளைஞர்களைத் தொடர்பு கொண்டு புரட்சிக்குத் தயார் செய்தேன். கட்டபொம்மு நாயக்கர், ஊமைத்துரை அவர்களுடைய சந்ததிகள் செக்காக்குடியிலும், ஆதனூரிலும் வசித்து வந்தனர். ஆதனூரில் மாப்பிள்ளை சாமி மூலம் புரட்சிக்கு இருபதாயிரம் வீரர்களைத் தர அவ்வூர் நாட்டாண்மைக்காரர்கள் ஒப்புக் கொண்டார்கள். இவர்கள் அனைவரும் 'கம்பளத்தார்' எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். மரவங்குறிச்சியைச் சேர்ந்த பிச்சாண்டித் தேவர் மூவாயிரம் வீரர்களையும், நடுவப்பட்டி வெள்ளையத் தேவர் ஆறாயிரம் வீரர்களையும், பெரியசாமித் தேவர் ஆயிரக்கணக்கான வீரர்களையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர். புரட்சிப் படை தயார். ஆனால் அவர்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல தளபதிகள் வேண்டுமே! அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகளில் இறங்கினேன்.

சங்கரகிருஷ்ணன் என்பவர் எனது செயலாளர். உண்மையில் பற்றும் சுறுசுறுப்பும் உள்ளவர். 'இந்தியா' பத்திரிகையில் சென்னையிலும் பின்னர் புதுவையில் பணியாற்றியவர். மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரையும் அழைத்துக் கொண்டு 1910ஆம் வருஷம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த புனலூர் எனும் ஊருக்குச் சென்றேன். அங்கு காட்டிலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த 23 வயதான வாஞ்சிநாதன் எனும் இளைஞரைப் பார்த்துப் பேசினோம். சங்கரகிருஷ்ணனின் மருமான் இவர். வாஞ்சிநாதன் ஒரு துடிப்புள்ள இளைஞன். எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர். சிறிதுகூட தயக்கமின்றி புரட்சி இயக்கத்தில் சேர சம்மதம் தெரிவித்தார். அதன் பின் தொடர்ந்து நேரிலும், கடிதம் மூலமும் அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன்.

ஒட்டப்பிடாரம் எனும் ஊரைச் சேர்ந்த மாடசாமி எனும் இளைஞர் எங்கள் புரட்சிப் படையில் தீரமிக்கவர். மகா வீரர், சூரர். இவரைப் போல உறுதியும், தைரியமும் உள்ளவர்களைக் காண்பது அரிது. இவர் ஒரு சகலகலா வல்லவர். எந்த நேரத்திலும் எந்த வேஷத்தையும் போடும் திறமை படைத்தவர். போலீசாரை பல முறை ஏமாற்றி தப்பியிருக்கிறார். மிக நெருக்கமான நண்பர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் எல்லா தியாகங்களுக்கும் உட்பட்டுப் பணியாற்றி வந்தார்.

போலீசார் கண்களை மறைக்க நாங்கள் புனைபெயரில் நடமாடி வந்தோம். நீலகண்டன் என்பது பிரம்மச்சாரி என்றாகியது. நாராயணன் துபே என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவார். சங்கரகிருஷ்ணன் ஹரி என்று அறியப்பட்டார். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை கோவிந்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். இப்படி அனைவரும் புரட்சிப் பணியில் ஈடுபட்டோம்.

அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா? அடக்குமுறைகளை ஏவிவிட்டது. தேசபக்தரும் தி ஹிந்து பத்திரிகை ஆசிரியருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் மீது வழக்குப் போட்டது. இந்தியா பத்திரிகைக்கு ஆபத்து வந்தது. புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றது இந்தியா. தொடர்ந்து பாரதியாரும் புதுச்சேரிக்கு வந்தார். நானும் சங்கரகிருஷ்ணனும் அவரைத் தொடர்ந்து புதுச்சேரி வந்தோம். "சூரியோதயம்" எனும் பத்திரிகைக்கு நான் ஆசிரியர் ஆனேன்.

'இந்தியா' "சூரியோதயம்" ஆகிய இரு பத்திரிகைகளும் பிரிட்டிஷ் இந்தியா பகுதிகளில் தடைசெய்யப்பட்டன. விற்பனை தடைபட்டதால் பத்திரிகைகள் நின்று போயின. அரவிந்தரும், வ.வெ.சு.ஐயரும் புதுச்சேரி வந்து சேர்ந்தனர். புரட்சிக் காரர்கள் ஒன்று சேர்ந்த இடமாக புதுவை மாறிப் போயிற்று. பாரதி ஒரு புரட்சிக் கவி. தீவிர தேசியவாதி. ஞான ரதத்தில் ஏறி சர்வ லோகத்தையும் சுற்றி வந்தவர். கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர். அரசியலில் தீவிரமாக இருந்தும், தீவிரமாக எழுதியும் வந்தாலும் ஒரு சிறு எறும்பிற்குக்கூட தீங்கு செய்யத் துணியாதவர். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடி எல்லா உயிர்களையும் நேசித்தவர். எங்கள் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்காக எதிர்ப்பதும் இல்லை.

அரவிந்தர் ஓர் பயங்கரவாதியாக இருந்து, அதிலிருந்து விலகி ஆன்மீகத்திற்கு வந்தவர். மக்களின் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்பினால் நாடு தானாக விடுதலை பெறும் என்பது அவரது தீர்க்கமான நம்பிக்கை. ஆகவே அவர் தனது கவனம் முழுவதையும் ஆன்மீகத்தில் திருப்பினார்.

வரகநேரி வெ.சுப்பிரமனிய ஐயர் ஓர் மகா மேதை. அதிகம் படித்தவர். தமிழில் பெரும் பாண்டித்தியம் உள்ளவர். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் படித்தவர். புரட்சிக்காரர் சவார்க்கருடன் நட்பு கொண்டவர். இங்கிலாந்தில் திங்க்ராவைத் தூண்டி இந்தியர்களுக்கு எதிரானவரான கர்சான் வில்லி எனும் ஆங்கிலேயனைச் சுட்டுக் கொல்ல வழி வகுத்தவர். ஆண்மையும், தைரியமும், வீரமும் ஒருங்கே பெற்றவர். புதுச்சேரி வந்து சேர்ந்த பின்னும் தனது புரட்சி எண்ணத்தில் இருந்தவர்.

எந்தவொரு தனிப்பட்ட ஆங்கிலேயனின் ரத்தத்தையும் சிந்தும் ஆர்வம் எங்களுக்கு இல்லை. தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லை. தேசவிடுதலைக்காக ஒரே நேரத்தில் நடத்தத் தயாராக ஓர் ஆயுதப் புரட்சிக்கானப் பாதையைத் தான் தேர்ந்தெடுத்தோம். மற்றபடி தனிநபர் கொலைகளை நாங்கள் நம்பவுமில்லை, ஊக்குவிக்கவுமில்லை.

நிற்க, பத்திரிகை வாயிலாக மக்களைத் தூண்டும் பணி நின்று போனதால், ஜெர்மனியிலிருந்து புரட்சிக்கான உதவி வரும் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இருந்தோம். வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டு விட்டனர். சிதம்பரம் பிள்ளைக்கு நாற்பது ஆண்டுகள் (இரண்டு ஜென்ம தண்டனை)யும் சிவாவுக்கு பத்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் கிடைத்தன. பிள்ளை சிறையில் செக்கு இழுத்தார். கல் உடைத்தார். அவரது தகுதி, கல்வி போன்றவற்றைக் கவனிக்காமல் அவரை ஈவு இரக்கமின்றி நடத்தினர். சட்டம் படித்தவர் செக்கிழுத்தார், கல் உடைத்தார். மேடைகள் தோறும் சுதந்திர முழக்கம் செய்த சிவாவுக்கும் கல் உடைக்கும் வேலை.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார்:--

கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச் செக்கிழுத்து
மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்ற - ஐயன்
சிதம்பரம் அன்று சிறை சென்றிலனேல், இன்று
சுதந்திரம் காண்பாயோ? சொல்.

அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப்பேன் என்று
வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் - விஞ்சுபுகழ்ச்
செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப் பேரண்ணலை நாம்
வந்தனை செய்வோம் மகிழ்ந்து.

கப்பலை ஓட்டிக் கடுங்காவற்கு ஆளாகி
உப்பிலாக் கூழ் உண்டு உடல் மெலிந்தோன் - ஒப்பிலாத்
தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்
நன் நாமம் வாழ்த்துக என் நா.

சிதம்பரம் பிள்ளை அனுபவித்த சிறைக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமானவர் ஆஷ் எனும் ஆங்கில துரை. ஆளப் பிறந்தவன் எனும் ஆணவம். இதனை அறிய மக்களும் தேசபக்தர்களும் கொதிப்படைந்தனர். கம்பளத்தார்களில் சிலர் என்னை அணுகி ஆஷ் துரையைப் பழிவாங்குவது குறித்து என்னைக் கலந்து ஆலோசித்தபோது, அத்தகைய கொலைச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்று தடுத்து விட்டேன்.

நான் ஊரில் இல்லாத சமயம் வாஞ்சிநாதன் என்னைப் பார்க்கப் புதுச்சேரி வந்தார். நான் இல்லை என்றதும் வ.வெ.சு.ஐயரைச் சென்று பார்த்திருக்கிறார். அவர் இவரது துணிச்சலையும், உணர்ச்சி வேகத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆஷ் துரையை பழிவாங்குவதற்கு தூண்டிவிட்டார். அதற்கான திட்டமொன்றையும் வகுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து, அவருக்கென்று ஒரு துப்பாக்கியையும் கொடுத்து ஊருக்கு அனுப்பி விட்டர்.

1911ஆம் வருஷம் ஜுன் மாதம்17ஆம் தேதி, திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்குத் தன் மனைவியுடன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் ரயில் மூலம் புறப்பட்டார். மணியாச்சி சந்திப்பில் ரயில் நின்றது. வீரன் வாஞ்சிநாதன் அவர் பெட்டியில் திடீரென்று நுழைந்து மூன்றுமுறை தன் கைத் துப்பாக்கியால் ஆஷைக் குறிபார்த்து சுட்டார். இரத்த வெள்ளத்தில் விழுந்தான்  ஆஷ். அவர் மனைவி பயத்துடன் நடுங்கிக் கொண்டு கூச்சலிட்டார். அப்போது வாஞ்சி, "பயப்படாதே! வீரத் தமிழன் ஒரு பெண்ணைத் தொடமாட்டான். எங்கள் அனுபுத் தலைவருக்கு இழைத்த கொடுமைகளுக்காக இவனைப் பழிவாங்கி விட்டேன், என் லட்சியம் நிறைவேறிவிட்டது" என்று சொல்லி பெட்டியிலிருந்து கீழே குதித்தார். அப்போது சிலர் வாஞ்சியைப் பிடிக்க ஓடிவந்தார்கள். தப்பிக்க வேறு வழியின்றி வாஞ்சிநாதன் அருகிலிருந்து கழிவறைக்குள் புகுந்து தன் வாயில் துப்பாக்கியை வைத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார்.

தேச விடுதலைப் புரட்சிக்காக என்னால் உருவாக்கப்பட்ட என் சீடன் ஒருவன் வாழ்வு, தவறான வழியில் செலுத்தப்பட்டால் முடிந்து போயிற்று. என் வாழ்வில் அது ஒரு சோகம் நிறைந்த அத்தியாயம். அந்தோ! வீரவாஞ்சி, உன்னையும் உன் வீரத்தையும் நினைக்க நினைக்க என் மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன. தப்பிப் பிழைக்க முடியாத நிலையில், வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டால், குறி தவற வாய்ப்பில்லை என்று வ.வெ.சு.ஐயர் சொல்லிக்கொடுத்த பாடத்தை வாஞ்சி மறந்துவிடவில்லை.

இந்த சம்பவம் நடந்தபோது நான் காசியில் இருந்தேன். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் இந்தச் செய்தி வெளிவந்தது. இதைக் கேள்விப்பட்ட ஒவ்வொரு ஆங்கில அதிகாரிக்கும் பெரும் அதிர்ச்சியும், பீதியும், பயமும் ஏற்பட்டது. லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்களையும் இந்த நிகழ்ச்சி ஆட்டி வைத்துவிட்டது. இந்தக் கொலையில் என்னையும் சம்பந்தப்படுத்தி எனக்கெதிராக வாரண்ட் பிறப்பித்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

நான் கல்கத்தா சென்று இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டுமென்று கலந்து ஆலோசித்தேன். எனக்கு மூன்று வழிகள் புலப்பட்டன. அவை.

1. வெளி நாட்டிற்கு தப்பிச் சென்று மறைந்து வாழ்வது.
2. உள் நாட்டிலேயே தலைமறைவாகி புரட்சி வேலைகளில் ஈடுபடுவது.
3. ஆஷ் கொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு எந்தவித தொடர்பும் இல்லையாதலால் போலீசாரிடம் சரண் அடைந்து நீதிமன்றத்தை அணுகுவது.

இதில் முதல் வழியைப் பின்பற்றினால் சிறைக்குப் போவதிலிருந்து தப்பிவிடலாம். ஆனால், நாட்டையும் புரட்சியையும் மறந்துவிட வேண்டும். நாடு சுதந்திரம் அடையும் வரையில் தாய்நாட்டைப் பார்க்க முடியாது. இரண்டாவது வழியைப் பின்பற்றினால் தேசசேவையைத் தொடரமுடியுமே தவிர எப்போது வேண்டுமானாலும் கைதாகி விடலாம். எத்தனை காலம்தான் கோழை போல மறைந்து வாழ்வது. மூன்றாவது வழியில் ஆபத்து அதிகம் இல்லை. கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் நீதிமன்றத்தில் நான் விடுதலை பெற வாய்ப்பிருக்கிறது.

வாஞ்சிநாதன் வீட்டைச் சோதனையிட்ட போது அவனுக்கு நான் எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் கிடைத்திருக்கிறது. அவன் வன இலாகாவில் பணி புரிந்து கொண்டிருந்ததால் எனக்கு ஒரு புலித்தோல் இருந்தால் அனுப்பும்படி எழுதியிருந்த கடிதம் அது. அந்தக் கடிதம் எனக்கு ஒன்றும் பெரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க வாய்ப்பில்லை, ஆகையால் சரண் அடைந்துவிட முடிவெடுத்தேன்.

நான் கல்கத்தா போலீசுக்குத் தெரிவித்து என்னைக் கைது செய்து கொண்டு போகுமாறு அறிவித்து விட்டேன். போலீஸ் எனக்குத் தொந்தரவு கொடுப்பார்கள் என்று நான் பயப்படவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தினாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற உறுதி எனக்கு இருந்தது. கல்கத்தா கமிஷனருக்கு தகவல் தெரிவிக்க அவர் வந்து என்னைக் கைது செய்து மணியாச்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

அங்கு என்னை 60 போலீசார் அழைத்துக் கொண்டு போய் கலெக்டர் முன் நிறுத்தினார்கள். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி என்னை அதிகாரத் திமிருடன் "Walk up to the Jail" என்று உத்தரவிட்டார். அதற்கு நானும் ஆங்கிலத்தில் "No, I wont walk" என்று கத்தினேன். அவர் மூன்று முறை உத்தரவிட்டும் நான் மறுத்தேன். நானே முன்வந்து போலீசிடம் சரண் அடைந்தவன். அப்படியிருக்க 60 போலீசாரும், நீட்டிய துப்பாக்கிகளும் எதற்கு? நான் தப்பி ஓடுவதற்காகவா கல்கத்தா கமிஷணர் முன்பு சரணடைந்தேன். வலிய உங்களிடம் வந்த சரணடைந்த எனக்கெதிராக எதற்கு இந்த ஜபர்தஸ்து என்றேன்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த கலெக்டர் தம்பித்துரை ஐ.சி.எஸ். என்னைப் பார்த்து, "Calm yourself Mr.Neelakandan" கல்கத்தாவிலிருந்து மிகுந்த கஷ்டப்பட்டு பயணம் செய்து வந்துள்ளீர்கள். போய் முதலில் முகத்தைக் கழுவிக் கொண்டு வாருங்கள். காபி சாப்பிடலாம்" என்று அன்போடும், பண்போடும் என்னை உபசரித்தார். ஒரு குதிரை வண்டி கொண்டுவரச் சொல்லி அதில் அழைத்துப் போகுமாறு 3 ஜவான்கள் மட்டும் கூடப் போகும்படி உத்தரவிட்டார். இந்த நல்ல மனதுடைய அதிகாரி பிற்காலத்தில் எனக்கு சீடராகி அடிக்கடி என்னிடம் வந்து தங்கிப் போவதுண்டு. பல உதவிகளையும் எனக்குச் செய்து கொடுத்திருக்கிறார். அந்த உத்தமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தனது 87ஆம் வயதில் சென்னையில் காலமானார் என்பதை அறிய நான் பெரிதும் வருந்தினேன்.

நிற்க, என் நண்பர்கள் அனைவரும் கைதாகி மணியாச்சி மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப் பட்டது. சென்னை மாகாணம் முழுவதும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டது. "திருநெல்வேலி சதி வழக்கு" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டது. எங்கள் மீதான வழக்கு விவரம். "சர்க்காருக்கு எதிராக சதி செய்து மன்னருக்கு எதிராக யுத்தம் தொடுத்ததாக" செக்ஷன் 121 (A) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப் பட்டிருந்தோம். எண்பது நாட்கள் விசாரணை நடைபெற்றது. அரசாங்கத் தரப்பில் 280 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். குற்றம்சாட்டப் பட்டவர்கள் சார்பில் 200 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். அரசாங்கத்துக்கு 3 வக்கீல்களும், எங்களுக்காக ஆந்திர கேசரி டி.பிரகாசம், தேவதாஸ் பிள்ளை, என்.கே.ராமசாமி ஐயர், எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்காரின் ஜூனியர் ஜே.சி.ஆதம் என்கிற ஆங்கிலேயர் ஆகியோர் ஆஜராயினர்.

முடிவில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நான் தான் முதல் எதிரி, எனக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல், 2ஆவது எதிரி சங்கரகிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளைக்கு 4 ஆண்டு கடுங்காவல், ஆறுமுகம், ஹரிஹர அய்யர், சோமசுந்தரம் பிள்ளை முதலான 5 பேருக்கும் தலா ஓர் ஆண்டு சிறையும் அளித்து 1912 பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பு 400 பக்கங்கள் அடங்கியதாக இருந்தது.

என் அன்பிற்குரிய சீடன் மாடசாமி பிள்ளை போலீசில் சிக்கவேயில்லை. அவர்மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் இல்லாமலே விசாரணை நடந்தது. ஆனால் மாடசாமி என்ன ஆனார் என்கிற விவரமே தெரியாமல் போய்விட்டது.

1914இல் முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது. என்னுடைய புரட்சிக்கான ஆயத்தங்கள் நான் சிறைப்பட்டதனால் எல்லாம் முடங்கிப் போய்விட்டது. வாஞ்சிநாதன் அவசரப்பட்டு செய்த ஒரு விவேகமற்ற காரியத்தால் எல்லாம் கெட்டுவிட்டது. தானும் மாண்டுபோய், நடக்க விருந்த புரட்சியையும் முடக்கிப் போடும் நிலைக்கு ஆனது வாஞ்சிநாதனால். மன உளைச்சல் காரணமாக என்ன செய்வது என்று தெரியவில்லை. மன உறுதியுடன் மறுபடி வெளியே வந்து புரட்சி வேலைகளில் ஈடுபட மனம் துடித்தது. 1914, பெல்லாரி சிறையில் இருந்தேன். அங்கு சிறைக் கம்பிகளை அறுத்துக் கொண்டு சிறையிலிருந்து தப்பி விட்டேன்.

நாம் ஒன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைத்து விடுகிறார். தர்மாவரம் ரயில் நிலையத்தில் நான் இறங்கி வெளியேறும் சமயத்தில் என்னை கவனித்து விட்டு, "அதோ நீலகண்டன், அதோ நீலகண்டன்!" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். போலீஸ் என்னை அப்படியே அமுக்கிப் பிடித்து விட்டது. என்ன நடந்தது என்றால், சிறையில் இருந்த ஒரு கேடி விடுதலையாகி வெளியே இருந்தவன் என்னை அடையாளம் கண்டுகொண்டு போலீசிடம் சத்தம் போட்டுக் காட்டிக் கொடுத்து விட்டான். சிறையிலிருந்து தப்பிச் சென்றதற்காக மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை உபரியாகக் கிடைத்தது. இரண்டு வருஷங்களாக சிறையில் கிடைத்த நன்னடத்தை சலுகைகளையெல்லாம் இழந்தேன்.

தண்டனைக் காலம் 7வருஷம் 6 மாதத்தையும் சென்னை, பாளையங்கோட்டை, பெல்லாரி, கண்ணனூர், கோவை, ராஜமகேந்திரபுரம், விசாகப்பட்டினம் ஆகிய சென்னை மாகாண சிறைகளில் கழித்துவிட்டு 1919ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் விசாகப் பட்டினம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். விடுதலையாகி சென்னைக்கு ரயிலில் புறப்பட்டேன். அங்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் என்னுடைய தந்தை வந்திருந்து என்னை மாயவரம் அழைத்துச் சென்றார். 4 மாத காலம் அவருடன் தங்கியிருந்துவிட்டு மீண்டும் சென்னை வந்து சேர்ந்தேன்.

நான் தான் என் வீட்டிற்கு மூத்த பிள்ளை. அதனால் என் தந்தை என்னிடம் தனி பாசமும் வாஞ்சையும் வைத்திருந்தார். எங்கள் மீது நடைபெற்ற வழக்கில் என் தந்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 13ஆவது சாட்சி. நீதிபதி சாட்சிக் கூண்டில் நின்ற என் தந்தையிடம், "உங்களுடைய வயதான காலத்தில் சம்பாதித்து உங்களுடைய குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய உங்கள் ஜேஷ்ட புத்திரன் அரசாங்கத்துக்கு விரோதமாகச் செயல்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? ஏன் தடுக்கவில்லை?" என்று கேட்கப் பட்டது.

அதற்கு என் தந்தை சொன்னார், "சமையல் வேலை செய்பவன்கூட மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கிறான். என் மகன் சம்பாத்தியம் எனக்கு ஒன்றும் பெரிதல்ல. அவனுடைய தேசத் தொண்டை நான் பெரிதாக மதிக்கிறேன். அதனால் பெருமையும் அடைகிறேன்" என்றார். அப்படிப்பட்ட தேசபக்தர் என் தந்தை.

சென்னையில் 566, பைக்கிராப்ட்ஸ் சாலையில் ஒரு வாடகை இடத்தில் தங்கிக் கொண்டு, வாயப் பிள்ளைத் தெருவில் 8ஆம் எண் கட்டடத்தில் இருந்த காசி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 1921-22ஆம் ஆண்டில் நான் உண்ண உணவின்றியும் கையில் காசில்லாமலும் கஷ்டப்பட்ட நாட்கள் பல உண்டு. சில சமயம் ஒருவரும் அறியாமல் இரவில் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு பகலில் சுதேசி பிரச்சாரமும் செய்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் கையில் காசு இல்லை. அதனால் சாப்பிடவில்லை. பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. பசியின் கொடுமையைத் தாள முடியாமல் சோர்வுற்றிருந்த சமயம் மகாகவி பாரதியாரின் ஞாபகம் வந்தது. மெதுவாக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னைக் குதூகலமாக வரவேற்றுப் பேசினார். அவருடைய அன்புப் பிடியில் சிக்கிய நான் அவரிடம் என் துன்ப நிலையைச் சொல்ல மனம் வராமல் தவித்தேன். பசி என் வயிற்றைக் கிள்ளுகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி அவரிடம், "ஒரு நாலணா இருக்குமா?" என்று கேட்டுவிட்டேன்.

அவர் திடுக்கிட்டு, "ஏன்? ஏன்?" என்றார். நான் அன்று முழுவதும் கொலை பட்டினி என்று சொன்னதும் பதறிப்போய் நாலணா கொண்டு வந்து கொடுத்து, "பாண்டியா, உடனே போய் சாப்பிட்டுவிட்டு வாரும்" என்றார். அப்போது அவர் பாடிய பாட்டுதான் "தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்பது. என்னால், என் நிலைமைக்காக கவியின் உள்ளத்தில் சுரந்த கவி ஊற்றுதான் அந்த ஆவேசம் நிறைந்த பாட்டு. ஆகா! எத்தனை அன்பு, எத்தனை பாசம், அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ். இந்த ஏழையால் அவருக்கு என்ன கைமாறு செய்யமுடியும்? அந்தப் புரட்சிக் கவிஞர், அகால மரணம் எய்திய போது உடனிருந்து, அவரது மயான யாத்திரைக்குத் தோள் கொடுத்த நால்வரில் நானும் ஒருவன். அவரது உயிரற்ற உடலை சுமக்கும் பாக்கியமாவது என் தோளுக்குக் கிடைத்ததே என்று நான் பெருமைப் படுவதுண்டு.

(இதன் பின் நடந்தவற்றையும் நீலகண்டர் எழுதியிருக்கிறார். அதை பின்பு மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்)

நன்றி: -- "மலரும் மாலையும்" கவிதையில் கவிமணி தேசிக விநாயகம் எழுதிய பாடல் வரிகள்:--

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்
சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு
நேயம் கொண்ட நெறியோர்க்கு
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?

உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்
பள்ளம் உயர் மேடாகாதோ?
பாறை பொடியாய்ப் போகாதோ?

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞான மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

Sunday, July 10, 2011

பாரதி ஏழையல்ல! கர்ணனே!!

பாரதி ஏழையல்ல! கர்ணனே!!
எழுதியவர்: வ.வெ.சு.ஐயரின் மனைவி திருமதி பாக்யலட்சுமி அம்மாள்.

(புதுச்சேரியில் பாரதியார் வசித்தவந்த போது அவரது குடும்பத்திற்கும் வ.வெ.சு.ஐயர் குடும்பத்திற்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. வ.வெ.சு.ஐயரின் மனையார் திருமதி பாக்கியலட்சுமி அம்மாளை பாரதியார் "தங்கச்சியம்மா" என்று அன்புடன் அழைப்பார். பாரதியார் தம் இல்லத்திற்கு வரும் பொழுதெல்லாம் பாக்யலட்சுமி அம்மையார் அவரை நன்கு உபசரித்திருக்கிறார். பாரதியார் புதுவையில் நடத்திய பெண்கள் முன்னேற்ற சங்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். பாரதியாரின் குணங்களை இந்தக் கட்டுரையில் பாக்யலட்சுமி அம்மாள் எழுதியிருக்கிறார்.)
=============

ஸ்ரீ பாரதியை நான் 1910 நவம்பரில் முதன்முதலில் பார்த்தேன். அன்று அவர் எங்கள் வீட்டிற்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் போனபிறகு அவர் யாரென ஐயரைக் (கணவர் வ.வெ.சு.ஐயரை) கேட்டேன். அவர்தான் சுப்ரமண்ய ஐயர் என்று அவர் பதில் சொன்னார். நான் ஜி.சுப்பிரமணிய ஐயரைப் படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தில் இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறதே என ஐயரை மறுபடி கேட்டேன். அதற்கு அவர், 'அவர் ஜி.சுப்பிரமணிய ஐயர், இவர் ஸி.சுப்பிரமணிய பாரதி. இருவரும் வேறு வேறு" என்றார் ஐயர்.

பாரதி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர் மனைவி செல்லம்மாளும் எங்களுக்குப் பழக்கமான பிறகு, பாரதி, ஸ்ரீநிவாசாச்சாரியார், ஐயர் மூன்று வீட்டுக்காரர்களும் ஒரு குடும்பம் போலப் பழகி வந்தோம். பாரதி களங்கமற்ற ஒரு சின்னக் குழந்தை போல இருப்பார். எப்பொழுதும் வீரம் நிறைந்த தொனியோடு பேசுவார். எப்போதும் ஒரே குதூகலமாக இருப்பார்.

பார்த்த அளவில், எண்ணின மாத்திரத்தில் கவி கட்டும் திறமை அவருக்கு உண்டு. யோசித்துத்தான் எழுத வேண்டுமென்பதில்லை. அநேக நாட்களில் எங்கள் வீட்டில் பேசிக்கொண்டு ஐயரோடு எதையேனும் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு பாட்டு அவர் உள்ளத்தில் தோன்றிவிடும். உடனே எழுதிவிடுவார். தன் மனதில் எழுந்த அந்தப் பாட்டின் சுவையைத் தானே அனுபவித்து, தன்னையும் மறந்து இரைந்து பாடிக் கொண்டே குதிப்பார்.

அவர் கபடமற்ற குணமுடையவர். மனதில் எண்ணங்களை வைத்துக் கொள்ளத் தெரியாது. தான் எத்தனை வறுமையோடு இருந்த போதிலும் அதற்காக அவர் சற்றும் வருந்தினவரல்ல.

பாரதி எல்லோரையும் ஒன்றாகப் பாவிப்பார். வித்தியாசம் பார்க்கத் தெரியாது. ஒவ்வொரு நாள் எங்கள் வீட்டிற்கு வரும் போது, கோட் ஸ்டாண்டில் இருக்கும் துணிகளில் ஏதேனும் தனக்கு வேண்டுமென்று ஆசை உண்டானால், அதை எடுத்து, தான் அணிந்து கண்ணாடி முன்னால் நின்று பார்த்துக் கொண்டு, "ஐயரே! இது எனக்கு நான்றாயிருக்கிறது - எனக்கு நன்றாயிருக்கிறது - எனக்குத்தான், கொடுக்க மாட்டேன்" என்று சொல்லி விடுவார். அவருடைய மனோபாவத்தை அறியும் சக்தி உள்ளவர்கள், அவரை ஓர் சகோதரனாக பாவித்து, உரிமையோடு எடுத்துச் செல்வதற்கு சந்தோஷப் படுவார்களே தவிர, அவரைக் கோபிக்க மாட்டார்கள்.

பாரதியை ஏழை என்று சொல்வது தகாது. அதற்கு மாறாக அவரைக் கர்ணன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அத்தனை ஆசையோடு எடுத்துச் சென்றதைக்கூடத் தனக்கு வேண்டுமென வைத்துக் கொள்ள மாட்டார். லங்கோடு, வேஷ்டி, ஷர்ட்டு, கோட்டு, தலைப்பாகை இத்தனை தரித்துக் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்படுவார். வீடு திரும்பும்போது, அத்தனையையும் அணிந்திருப்பாரா என்பது சந்தேகமே. எவனாவது வழியில் வேஷ்டி இல்லை என்பான், இவர் தலைபாகையை எடுத்து அவனுக்குக் கொடுத்து விடுவார். இன்னும் கொஞ்ச தூரம் போகையில், குளிர் தாங்க முடியவில்லை என்பான் இன்னொருவன், போட்டிருக்கும் கோட்டு அவனுக்குப் போய்விடும். இவ்விதமாக ஒருநாள் வெறும் லங்கோடோடு வீடு போய்ச் சேர்ந்ததாக பாரதியே ஒரு முறை ஐயரிடம் சொல்லியிருக்கிறார்.

அந்த கஷ்டமான காலங்களில்கூட ஒவ்வொரு சமயம் யாரேனும் சிநேகிதர், வீட்டுக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு சாப்பாட்டைப் பங்கிட்டுக் கொடுப்பார். பாரதிக்கு ஈகை, கவிதா சக்தி போலவே அவருடைய பிறவிக் குணம். பாரதி போன்ற நிஷ்களங்கமான, இரக்கமுள்ள ஹிருதயம் காண்பது அரிது.

நாங்கள் எல்லோரும் அனேகமாக தினம் கடற்கரைக்குப் போவோம். பாரதி அங்கு கடலையும், வானத்தையும் கண்டு, தன்னை மறந்து பாட ஆரம்பித்து விடுவார். அவர் தீரமான குரல் இப்பொழுதும் காதில் கேட்கிறது. அவருடைய பாட்டுக்களை எத்தனையோ பேர் பாடுகிறார்கள். ஆனால் அவைகளுக்கு இருக்கும் பொருள் நயத்தை அனுபவித்துப் பாடுகிறவர்கள் சிலரே.

உணர்ச்சி மேலிட்டு, "வீரமுடைய நெஞ்சம் வேணும்" என்று மார்பை உயர்த்திக் கொண்டு பாரதி பாடுவார். அப்போது அவரைப் பார்த்தால் கோழைக்கும் வீரமூட்டும் சக்தி அவருக்கு இருப்பதாகத் தோன்றும். எவ்விதமான கஷ்ட நிலையிலும் அவர் உள்ளத்தில் உற்சாகம் மாத்திரம் குறையவே குறையாது.

பாரதி பெரிய வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் தங்கவே மாட்டார். ஒரு நாள் ஐயர், "நீங்கள்தான் வீட்டிலேயே இருப்பதில்லையே, எதற்கு அத்தனை பெரிய வீடு?" என்று கேட்டார்.

அதற்கு பாரதி, "சிறிய வீடு எனக்குப் பிடிப்பதில்லை. வீட்டுக்கார 'விளக்கெண்ணெய் செட்டிக்கோ வாயிதா எட்டு மாதம்வரை சொல்லலாம்" என்பார்.

அதற்கு ஐயர், "வீட்டிலாவது சுகமாக இருக்கக் கூடாதா? ஏன் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?" என்பார்.

பாரதி "வீட்டில் இருக்கலாம், ஆனால் மூட்டைப் பூச்சிக் கடி, ஈக்கடி, எறும்புக்கடி" என்று அடுக்கிக் கொண்டே போனார்.

ஐயர், "அதோடு கடன்காரர் கடியும் சேர்ந்ததுதானோ?" என்று கேலியாகக் கேட்டார். அதற்கு பாரதி உரத்த குரலில் சிரித்துவிட்டு, "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்று பாடினார்.

பாரதி சிறந்த கவி என்பது அவர் பாட்டுக்களைப் படித்து ஐயர் அறிவார்கள். ஆனால் அவருடைய உயர்ந்த குணத்தையும் உணர்ச்சிகளின் மேன்மையையும் அறிந்தவர் மிகவும் குறைவு. பாரதி உயிருடன் இருந்த காலத்தில் அவரைப் போற்றாமல் இருந்ததால் பாரதிக்கு சிறிதும் நஷ்டமில்லை. தமிழ்நாடுதான் நஷ்டம் அடைந்தது.

"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் பெருமை என்றோதும்
மூன்றில் எதுவருமேனும் களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி" (பாரதி)

Friday, July 8, 2011

'வெல்லச்சு' செட்டியார்

பாரதியின் புதுச்சேரி நண்பர் 'வெல்லச்சு' செட்டியார்

பாரதி புதுவையில் வாழ்ந்த நாட்கள் பயனுள்ள நாட்கள். பாரதியின் கவிதா வளம் பெருக்கெடுத்த நாட்கள். நண்பர்கள் குழாம் மிக அதிகமாக இருந்த நாட்கள். அவர் முகம் பார்த்து உதவி செய்ய காத்திருந்த அன்பர்கள் அதிகம் இருந்த நாட்கள் அவை. பாரதி வாழ்ந்த உலகம் தனியானது. ஆனால் தினப்படி வாழ்க்கைக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அதைப் பற்றி சிறிதுகூட சிந்தனையில்லாமல் தனது கற்பனா உலகில் சஞ்சரித்து வந்த நாட்கள் அவை.

அப்படிப்பட்ட காலங்களில் அவர் கேட்காமலே அவருக்கு உதவி செய்ய நண்பர்கள் காத்திருந்தார்கள். ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்தபோது அண்டை வீட்டில் இருந்த பெருந்தனக்காரர் பொன்னு முருகேசம் பிள்ளை, பாரதிக்குத் தேவை என்ன என்பதை உணர்ந்து அவரும் அறியாமல் அவர் வீட்டில் கொண்டு சேர்க்கும் வள்ளலாக இருந்திருக்கிறார். அவர் மனைவியோ, பாரதி வீட்டில் எப்போதெல்லாம் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒருவரும் அறியாமல் மறைத்துப் பாத்திரத்தில் எடுத்து வந்து வைத்துவிட்டுப் போகும் வள்ளன்மை வாய்ந்தவர். இப்படிப் பலர். அவர்களில் ஒருவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

புதுவையை அடுத்த முத்தியால்பேட்டை எனும் இடத்தில் வசித்து வந்த அன்பர் வெ.கிருஷ்ணசாமி செட்டியார்தான் அந்த வள்ளல். இப்படி அவர் பெயரை சொன்னால் உங்களுக்குத் தெரியாமல் போகலாம், அவருக்கு பாரதி வைத்த செல்லப் பெயர் கொண்டு எழுதினால் ஒருக்கால் புரியலாம். இவரை 'வெல்லச்சு'ச் செட்டியார் என்றுதான் அழைப்பார் பாரதியார். இவருக்கு ஏன் இந்தப் பெயர் ஏற்பட்டது?

இவர் சற்று குள்ளமானவர். உடல் நல்ல பருமனான கெட்டியான சரீரம். அவர் உடலாலோ, அல்லது மனத்தாலோ சோர்வாக இருந்து யாரும் பார்த்ததில்லை. அவருடைய தோற்றம் குறித்தும், இனிமையான உள்ளம் குறித்தும் 'வெல்லச்சு' என்ற செல்லப் பெயரை பாரதி வைத்திருக்கலாம்.

இவர் நெசவுத் தொழில் செய்து வந்தவர். தொழிலும் நன்றாக இருந்தது, அதோடு நிலபுலன்களும் இவருக்கு ஓரளவுக்கு உண்டு. துணி வியாபாரத்தில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. பாரதியாரிடம் பக்தி கலந்த நட்பு இருந்தது இவருக்கு. அடிக்கடி இவர் பாரதியாரின் இல்லத்துக்கு வந்து விடுவார். அங்கு பாரதியார் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தாலும், இவர் பாட்டிலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு அங்கு அமர்ந்திருப்பார். வீட்டுக்கு வந்தவுடன் பாரதியாரைப் பார்த்து "சுவாமி" என்று அழைத்துவிட்டு அமர்ந்தாரானால் அப்புறம் அவர் வாயைத் திறக்க மாட்டார். அமைதியின் திருவுருவமாக உட்கார்ந்திருப்பார்.

அவரைக் கண்டால் பாரதிக்கு மிகவும் பிடிக்கும். தாம் இயற்றிய புதுப் பாடல்களை 'வெல்லச்சு' செட்டியாருக்குப் பாடிக் காண்பிப்பார். பாரதி எத்தனைக்கெத்தனை ஆர்வத்தோடு புதிய பாடல்களைப் பாடிக் காட்டுகிறாரோ அந்த அளவுக்கு அவர் புரிந்து கொண்டதாகவோ, ரசித்ததாகவோ அவருடைய முக பாகம் காட்டாது. அது 1910-11 ஆம் வருடம். அப்போது செட்டியாருக்கு வயது 20 இருக்கலாம்.

இது என்ன இந்த மனிதர், ரசனை என்பதே இல்லாத இந்த வெல்லச்சு செட்டியாருக்குப் போய் இவ்வளவு அன்போடு தனது பாடல்களைப் பாடிக் காட்டுகிறாரே, அவர் இதனை ரசிக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியவில்லையே என்று, கூடஇருந்த அன்பர்கள் நினைப்பார்கள். ஆனால் பாரதியார் ஏதாவது நகைச்சுவையாகச் சொன்னார் அனைவருக்கும் முந்தி வெல்லச்சு செட்டியார்தன் முதலில் உரத்த குரலில் சிரிப்பார். ஏதாவது சோக ரசமான நிகழ்வை பாரதி சொன்னால், இவர் அழுதுவிடுவாரோ எனும்படி முகத்தை சோகமாக வைத்திருப்பார். அத்தனை ரசிகர்.

இவர் தோற்றத்தைப் பார்த்து இவரை எடை போட வேண்டாம், எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ யார் கண்டது என்பார் பாரதியார். நண்பர்கள் கூடியிருக்கிற நேரங்களில் பாரதியார் பல கதைகளைச் சொல்லுவார். அந்தக் கதைகளுக்கிடையே அவரைக் கிண்டல் அடித்தும், கேலியாகவும் பாரதியார் மறைமுகமாகக் குறிப்பிடுவார். பாரதி சொல்லும் கதைகளில் கேலி அதிகம் இருக்கும். ஒரு முறை பாரதி சொன்ன கதை இது:

"காட்டுப் பாதையொன்றில் இரண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவர் குடியானவன், மற்றவர் செட்டியார். அந்தப் பகுதிகளில் திருடர்கள் அதிகம். வழிப்பறி நடப்பது வழக்கம். பகல் பொழுது கழிந்து இருள் கவிவதற்குள் காட்டைக் கடந்து விட வேண்டுமென்று வேகமாக நடந்தார்கள். ஆனால் முடியவில்லை. பொழுது நன்றாக இருண்டு விட்டது. இந்த இடத்தில் பாரதியார் கதையை நிறுத்திவிட்டு வெல்லச்சு செட்டியாரைப் பார்த்துக் கேட்பார், "என்ன செட்டியாரே! கதை ஒழுங்காகச் சொல்ல வேண்டுமானால் இந்த இடத்தில் திருடர்கள் வரலாமா அல்லது இன்னும் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வ்ரலாமா?" என்பார்.

அதற்கு செட்டியார் சொல்லுவார், "எந்த சமயத்தில் வந்தால் என்ன? நான் பாரதியாரோடு வழிப்பயணம் செய்கிறவன். எனக்கு என்ன பயம்?" என்பார். "அச்சா, அப்படிச் சொல்லப்பா, என் தங்கமே!~" என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பாராம். கூட இருந்தவர்களும் சிரிப்பில் கலந்து கொள்வார்களாம்.

திருடர்கள் வழிப்பயணம் வந்து கொண்டிருந்த குடியானவனை நன்கு அடித்து, அவனிடமிருந்தவைகளைப் பிடுங்கிக் கொண்டார்களாம். கூட பயணம் செய்துகொண்டிருந்த செட்டியார் பார்த்தார், மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு ஓசைப்படாமல் கீழே படுத்துக் கொண்டுவிட்டாராம். திருடர்கள் கீழே விழுந்து கிடக்கும் செட்டியாரைக் குச்சியால் தட்டிப் பார்த்துவிட்டு, "அட! கட்டை கிடக்கிறது" என்றார்களாம்.

உடனே கீழே கடந்த செட்டியார் ரோஷத்தோடு எழுந்து, "உங்க வீட்டுக் கட்டை பத்து ரூபாய் பணத்தை மடியில் கட்டுக்கொண்டுதான் விழுந்து கிடக்குமோ?" என்றாராம். உடனே பாரதியார் கதையை நிறுத்திவிட்டு வெல்லச்சு செட்டியாரைப் பார்த்து, "என்ன செட்டியாரே, கதை சரிதானே?" என்பாராம். உடனே செட்டியார், "கதை எப்படியிருந்தால் என்ன, அதுதான் முடிந்து விட்டதே" என்று சொல்லிக் கொண்டே மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து பாரதியாரிடம் கொடுத்து விடுவாராம்.

பாரதியார் உரக்கச் சிரித்துக் கொண்டே, "கதையில் பணம் பிடுங்கியது திருடர்கள், இங்கே நான் பகல் கொள்ளைக்காரன்" என்பாராம். செட்டியாரும் பாரதியார் சிரிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருப்பாராம். அவரைப் போல பாரதியாரிடம் பக்தி பாராட்டியவர்கள் வேறு யாரும் கிடையாது என்பார்கள்.

வெல்லச்சு செட்டியார் பாரதி சொன்ன கதை, வெறும் கதை மட்டுமல்ல, அவருடைய தேவையைக் குறிப்பாகச் சொன்னது என்பதை புரிந்துகொண்டு மடியில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தது என்பார்கள் நண்பர்கள். மால நேரங்களில் நண்பர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க வேண்டுமென்பது பாரதியாரின் ஆசை. அத்தகைய சந்தர்ப்பங்களில் கிருஷ்ணசாமி செட்டியார் அங்கு இருப்பார். அப்போது பாரதி தன்னிடம் உள்ள ஒரு செல்லாத காசை எடுத்துக் காட்டி, "இது செல்லுமா பாருங்கள்" என்பாராம். நண்பர்கள் செல்லாது என்று சொல்வார்கள். உடனே பாரதி, அதனால் என்ன செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறாரே என்று அவரைக் கை காட்டிவிடுவாராம். குறிப்பறிந்து செயல்படும் செட்டியார் சும்மா இருப்பாரா, பாரதியிடம் இருக்கும் பணத்தைக் கொடுத்து விடுவார். இது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை. அப்போது பாரதியாருக்கு அமைந்த நண்பர்கள் அப்படி. இன்று! பெருமூச்சுதான் வரும்.