Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Thursday, January 10, 2013

'பகவத் கீதை' உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை.


தன்னுடைய 'பகவத் கீதை' உரைக்கு
மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை.

"புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு, நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது"
-- பகவத் கீதை 2ஆம் அத்தியாயம் 50ஆவது ஸ்லோகம்.

இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்கெல்லாம் அடிப்படையாகும். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருந்தல். தெளிந்த புத்தியே மேற்படி ஸ்லோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறுத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புக்களும், அவற்றுக்காதாரமான பாவநினைப்புக்களுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

'நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்தமாட்டீர்கள்' என்று ஏசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்தைக் கொண்டுதான்.

'குழந்தைகளைப் போலாய்விடுங்கள்' என்றால், 'உங்களுடைய லெளகீக அனுபவங்களையெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைப் போலே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேச்வுந் தொடங்குங்கள்; என்பது கொள்கையன்று. 'ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போலே நிஷ்களங்கமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்' என்பது கருத்து.

ஹிருதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலை ஏற்படும்வரை, புத்தி இடையிடையே தெளிந்தாலும், மீண்டும் மீண்டும் குழம்பிப் போய்விடும்.

ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறான்: "அந்த அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா" என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே. மனம்போனபடி இருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச்செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்கு புத்தி தெளிந்துவிட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப்படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.

இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி, 'நற்செய்கை தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்துவிட்டு, அர்ஜுனா, நீ எப்போதும் தூங்கிக் கொண்டேயிரு' என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.

ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாயத்தில் பின்வருமாறு சொல்லுகிறார்: "மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றி இருத்தல் இயலாது. எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன" என.

ஆதலால் மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது. அவனுக்குக்கூட ஆறு மாஸகாலம் விழிப்பு உண்டு. ஆனால் நீ தொழில் செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யாதே. ஸ்ரீபகவான் சொல்லுகிறான்; "அர்ஜுனா! உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரமுண்டு, பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை" என.

ஆதலால், கடவுள் சொல்லுகிறார், "கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி; அவனே யோகி" என்று.

அறிவுத் தெளிவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதைகளெல்லாம், நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைகளெல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதின்றி மனத்தாற் செய்யப்படுவன அன்றோ?

அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே!

அப்பால், "யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில் யோகமே செய்கைகளில் திறமையாவது" என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லுகிறான்.

தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம். "ஸமத்துவம் யோக உச்யதே" அதாவது, பிறிதொரு பொருள கவனிக்குமிடத்து, அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும், சலிப்பேனும், பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுதையும் அதனுடன் லயப்படுத்தி கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

"யோகஸ்த: குரு கர்மாணி" என்று கடவுள் சொல்லுகிறார். "யோகத்தில் நின்று தொழில்களைச் செய்" என.

யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கம் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய்விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது.

எனவே, அவன் கடவுள் எங்கும் இருப்பதைக் காண்கிறான்.

(இதன் இரண்டாம் பகுதி தொடர்ந்து வெளியாகும்)


Saturday, January 5, 2013


வேண்டுகோள்!

என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயிலகம், இலக்கிய பயிலகம், தமிழ் நாடு சுதந்திரப் போர் தியாகிகள் தவிர கம்பராமாயணம் உரை நடை ஆகியவற்றை எனது வலைப்பூக்களில் படித்துவரும் அன்பர்களே! உங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன். என்னுடைய கீழ்கண்ட வலைப்பூக்களுக்கு விஜயம் செய்யுங்கள். படித்தபின் தங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். அவை எனக்கு மேலும் ஊக்கத்தையும், ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதால் தங்களது கருத்துக்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

எனது வலைப்பூக்கள் விவரம் இதோ:--

1.http//www.bharathipayilagam.blogspot.com
2.http//www.ilakkiyapayilagam.blogspot.com
3.http//www.tamilnadythyagigal.blogspot.com
4.http//www.kambaramayanam-thanjavooraan.blogspot.com


நன்றி நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்!
தஞ்சை வெ.கோபாலன்

Friday, January 4, 2013

தமிழ்நாட்டு மாதருக்கு.

                                              தமிழ்நாட்டு மாதருக்கு......1

இந்தியா தேசத்து ஸ்திரீகள் இங்குள்ள ஆண் மக்களால் நன்கு மதிக்கப்படுவதற்குள்ள பல உபாயங்களில் வெளிநாட்டாரின் மதிப்பைப் பெற முயல்வதும் ஒரு உபாயமாம். திருஷ்டாந்தமாக, சில வருஷங்களுக்கு முன்பு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'இந்தியா நாகரீகக் குறைவான தேசம்' என்ற எண்ணம் வெகு சாதாரணமாகப் பரவியிருந்தது. மேற்றிசையோர்களுக்குள்ளே சில விசேஷ பண்டிதர்கள் மட்டும் நம்முடைய வேதங்கள், உபநிஷத்துக்கள், ஸாங்கியம், யோகம் முதலிய தர்சனங்கள் (அதாவது ஞான சாஸ்திரங்கள்) காளிதாஸன் முதலிய மஹா கவிகளின் காவியங்கள், ராமாயணம், பாரதம், பஞ்ச தந்திரம் முதலிய நீதி நூல்கள் -- இவற்றை மூலத்திலும், மொழிபெயர்ப்புக்களின் வழியாகவும் கற்றுணர்ந்தோராய் அதிலிருந்து ஹிந்துக்கள் பரம்பரையாகவே நிகரற்ற ஞாத் தெளிவும் நாகரிகமும் உடைய ஜனங்கள் என்பதை அறிந்திருந்தனர்.

Rabindranath Tagore

இங்ஙனம் மேற்கு தேசங்களில் பதினாயிரம் அல்லது லக்ஷத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் ஒருவாறு நமது மேன்மையை அங்கீகாரம் செய்தனர். எனினும், அந்நாடுகளிலே பொது ஜனங்களின் மனதில் 'இந்தியா தேசத்தார் ஏறக்குறைய காட்டு மனிதரின் நிலையிலுள்ளோர்' என்ற பொய் கொள்கையே குடிகொண்டிருந்தது. அப்பால், ஸ்வாமி விவேகானந்தரும், பின்னிட்டு ரவீந்திரநாத் தாகூர், ஜகதீச சந்திர வஸு முதலிய மஹான்களும் மேற்றிசையில் விஸ்தாரமான யாத்திரைகள் செய்து தம்முடைய அபார சக்திகளைக் காண்பித்த பின்னரே, மேற்றிசைவாசிகளில் பலர், 'அடா! ஹிந்துக்கள் நாகரிகத்திலும், அறிவிலும் இவ்வளவு மேம்பட்டவர்களா?' என்று வியப்பெய்தினர்.

தவிரவும், மேற்கத்தியார் நம்மைக் குறைவாக நினைக்கிறார்கள் என்பதை அவ்விடத்துப் பத்திரிகைகளின் மூலமாகவும் புஸ்தகங்களின் மூலமாகவும் தெரிந்து கொண்டவர்களால் நமது தேசத்துக் கல்விப் பெருமையால் இந்தியாவின் உண்மையான மாட்சியை அறியாது நின்ற இங்கிலிஷ் படிப்பாளியாகிய நம்மவரின் பலரும் வெளி நாட்டாரின் எண்ணத்தையோ உண்மையெனக் கருதி மயங்கி விட்டனர். காலச் சக்கரத்தின் மாறுதலால், இந்நாட்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் மேற்படி இங்கிலிஷ் படிப்பாளிகளே தலைமை வகிக்கும்படி நேர்ந்து விட்டதினின்றும், இந்தியா தன் மாண்பை முற்றிலும் மறந்துபோய் அதோகதியில் விழுந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய நிலைமை அநேகமாய் ஏற்படலாயிற்று.
Swamy Vivekanandar

இப்படிப்பட்ட பயங்கரமான சமயத்தில் ஸ்வாமி விவேகானந்தர் முதலாயினோர் தம்முடைய ஞானபராக்கிரமத்தால் மேற்றிசை நாடுகளில் திக்விஜயம் பண்ணி மீண்டனர். இதினின்றும், இங்குள்ள இங்கிலிஷ் படித்த சுதேச தூஷணைக்காரர் தமது மடமை நீங்கி ஹிந்து நாகரிகத்தில் நம்பிக்கை செலுத்துவாராயினர். மேற்றிசையோர் எது சொன்னாலும் அதை வேதமாகக் கருதிவிடும் இயல்பு வாய்ந்த நம்மவர், முன்பு இந்தியாவை அந்த அந்நியர் பழித்துக் கொண்டிருந்த போது தாமும் பழித்தவாறே, இந்தியாவை அவர்கள் புகழத் தொடங்கியபோது தாமும் சுதேசப் புகழ்ச்சி கூறலாயினர்.

விவேகானந்தர் முதலானவர்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களால் போற்றப்படுவதன் முன்பு அம் மஹான்களை நம்மவர் கவனிக்கவேயில்லை. அப்பெரியோர் மேற்றிசையில் வெற்றி பெற்று மீண்ட மாத்திரத்தில், அவர்களை நம்மவர் தெய்வத்துக் கொப்பாக எண்ணி வந்தனை வழிபாடுகள் செய்யத் தலைப்பட்டனர். இந்த விஷயத்தை நம்முடைய மாதர்கள் நன்றாக கவனித்தறிந்து கொள்ளுதல் நன்று.

அறிவின் வலிமையே வலிமை. அறிவினால் உயர்ந்தோர்களை மற்றொர் இழிவாக நினைப்பதும் அடிமைகளாக நடத்துவதும் ஸாத்யப்படமாட்டா. அறிவின் மேன்மையால் வெளித் தேசங்களில் உயர்ந்த கீர்த்தி படைத்து மீள்வோரை அதன் பிறகு இந்தத் தேசத்தார் கட்டாயம் போற்றுவார்கள். சில ஹிந்து ஸ்திரீகள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்ந்த கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வர்வார்களாயின்; அதினின்றும் இங்குள்ள ஸ்திரிKஅளுக்கெல்லாம் மதிப்பு உயர்ந்து விடும். இந்த விஷயத்தை ஏற்கனவே நம்முடைய மாதர் சிலர் அறிந்து வேலை செய்து வருகிறார்கள்.
Sarojini Naidu

வங்காளத்துப் பிராமண குலத்தில் பிறந்து ஹைதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமதி ஸரோஜினி நாயுடு என்ற ஸ்திரீ இங்கிலீஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் போற்றும்படியாக இங்கிலீஷில் கவிதை எழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப் படுகின்றன. மேலும், இந்த ஸ்திரி இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்து முன்னேற்றத்தையொட்டி அற்புதமான பிரஸங்கங்கள் செய்து சிறந்த கீர்த்தியடைந்திருக்கிறார். மேலும், வங்காளி பாஷையிலே கவிதை எழுதுவோராகிய ஸ்ரீமதி காமினி ராய், ஸ்ரீமதி மனகுமாரி தேவி, ஸ்ரீமதி அனங்கமோஹின் தேவி என்ற மூன்று ஸ்திரிகளுடைய பாட்டுக்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அமெரிக்காவிலுள்ள பத்திரிகையொன்று புகழ்ச்சியுரைகளுடன் சிறிது காலத்துக்கு முன்பு பிரசுரம் செய்திருப்பதினின்றும் இம்மாதர்களுக்கு அமெரிக்காவில் நல்ல கீர்த்தி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

(பாரதியின் இந்தக் கட்டுரை தொடரும்.....)

பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?


பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?
(மகாகவி பாரதியார் எழுதி அவருடைய பெண் தங்கம்மாவால் புதுச்சேரியில் ஒரு கூட்டத்தில் படிக்கப்பட்டது)

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு; ஆணுக்கு மட்டுமன்று, பெண்ணுக்கும் அப்படியே.

ஆதலால் உயிருள்ளவரை இன்பத்துடன் வாழ விரும்புதல் மனுஷ்ய ஜீவனுடைய கடமை. இன்பத்துக்கு முதல் அவசியம் விடுதலை. அடிமைக்கு இன்பம் கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் ஹிந்து தேசத்தார் படுங்கஷ்டங்களைக் குறித்து 1896-ம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடிய பன்னிரண்டாம் ஜனசபைக் (காங்கிரஸ்) கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானமொன்றை ஆதரித்துப் பேசுகையில் வித்வான் ஸ்ரீ பரமேச்வரன் பிள்ளை பின்வருமாறு கூறினார்:-

"மிகவும் உழைப்பாளிகளாகிய ஹிந்து தேசத்தார் அந்த நாட்டில் பரம்பரை முறியடிமைகளாக வாழும்படி நேர்ந்திருக்கிறது. அங்கு நம்மவர் உத்திரவு சீட்டில்லாமல் யாத்திரை செய்யக் கூடாது. இரவு வேளையில் வெளியே சஞ்சரிக்கக் கூடாது. நகரங்களுக்கு நடுவே குடியிருக்கக் கூடாது. ஒதுக்கமாக நமக்கென்று கட்டப்பட்டிருக்கும் சேரிகளில் வசிக்க வேண்டும்.

ரயில் வண்டியில் மூன்றாவது வகுப்பிலேதான் ஏறலாம்; முதலிரண்டு வகுப்புகளில் ஏறக்கூடாது. நம்மை டிராம் வண்டியிலிருந்து துரத்துகிறார்கள். ஒற்றையடிப் பாதையினின்று கீழே தள்ளுகிறார்கள். ஹோட்டல்களில் நுழையக்கூடாதென்கிறார்கள். பொது ரஸ்தாக்களில் நடக்கக் கூடாதென்று தடுக்கிறார்கள். நம்மைக் கண்டால் காறி உமிழ்கிறார்கள். "ஹூஸ்" என்று சித்காரம் பண்ணுகிறார்கள். நம்மை வைகிறார்கள். சபிக்கிறார்கள். மணுஷ்ய ஜந்துக்களினால் சகிக்கக்கூடாத இன்னும் எத்தனையோ அவமானங்களுக்கு நம்மை உட்படுத்துகிறார்கள். ஆகையால் நம்மவர் இந்த நாட்டிலேயே இருந்து பஞ்சத்திலும் கொள்ளை நோயிலும் அழிந்திட்டாலும் அன்னியர் காலின்கீழ் போட்டு மிதிக்காதபடி ராஜாங்கத்தாரால் நம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால், நம்மவர் வேற்று நாடுகளுக்குக் குடியேறிப் போகாமல் இங்கிருந்து மடிதலே நன்று" என்றார். என்ன கொடுமையான நிலை பார்த்தீர்களா?

ஆனால் சகோதரிகளே! தென் ஆப்பிரிக்காவில் மாத்திரமே இவ்விதமான கொடுமைகள் நடக்கின்றன என்று நினைத்து விடாதீர்கள்!

சகோதரிகளே! ஒளவையார் பிறந்தது தமிழ் நாட்டில்; மதுரை மீனாக்ஷியும், அல்லி அரசாணியும் நேற்று மங்கம்மாளும் அரசு புரிந்த தமிழ் நாட்டிலே நம்முடைய நிலைமை தென்னாப்பிரிக்காவில் ஹிந்து தேசக் கூலிகளுடைய நிலைமையைக் காட்டிலும் கேடு கெட்டிருக்கிறதா? இல்லையா? உங்களுடைய அனுபவத்திலிருந்து நீங்களே யோசனை பண்ணிச் சொல்லுங்கள்.

நாமும் ஸ்வேச்சைப்படி வெளியே சஞ்சரிக்கக்கூடாது. நம்மைச் சேரிகளில் அடைக்காமல் சிறைகளில் அடைத்து வைக்க முயற்சி செய்கிறார்கள். ரயில் வண்டிகளில் நமக்கென்று தனிப்பகுதி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். நம்மைக் கண்டாலும் ஆண் மக்கள் நிஷ்காரணமாய் சீறி விழுகிறார்கள். காறி உமிழ்கிறார்கள்; வைகிறார்கள்; அடிக்கிறார்கள்; நாம் நமதிஷ்டப்படி பிறருடன் பேசக்கூடாதென்று தடை செய்கிறார்கள். மிருகங்களை விற்பதுபோல, நம்மை விலைக்கு விற்கிறார்கள். நம்முடைய நூல்களிலும் ஸம்பாஷணைகளிலும் ஓயாமல் நம்மைத் தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கத்தால் நாம் இத்தனை பாடுக்கும் ஒருவாறு ஜீவன் மிஞ்சியிருக்கிறொ மெனினும், இந்த நிலைமிக, இழிதானதென்பதிலும், கூடிய சீக்கிரத்தில் மாற்றித் தீரவேண்டியதென்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மருந்தென்ன?

தென் அப்பிரிக்காவில் ஹிந்து தேசத்துக் கூலியாட்களுக்கு ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்த் காந்தி எந்த வழி காட்டினாரோ, அதுவே நமக்கும் வழி. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையரை ஹிந்துக்கள் ஆயுத பலத்தால் எதிர்க்கவில்லை. கைத்துப்பாக்கி, வெடிகுண்டு முதலியவற்றை உபயோகிக்க விரும்பினர். சில இளைஞரைக்கூட அது செய்யலாகாதென்று மஹாத்மா காந்தி தடுத்து விட்டார். "அநியாயத்தை அநியாயத்தால் எதிர்த்தலென்பது அவசியமில்லை. அதர்மத்தை அதர்மத்தால்தான் கொல்ல வேண்டுமென்பது அவசியமன்று. நாம் அநியாயத்தை நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்" என்று காந்தி சொன்னார்.

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத் தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனாராகவும், கணவர் காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும் போது என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜுனனுடைய மனது திகைத்தது போல திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம் அதுபற்றியே, 'சாத்வீக எதிர்ப்பி'னால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று நான் சொல்கிறேன்.

'அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸமத்வமாக நடத்தினாலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும்போம்' என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, அதினின்றும், அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல்லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு அந்தக் காலமே சரியான காலம் இந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸமே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள். இந்த முஹீர்த்தமே தகுந்த முஹுர்த்தம்.

சகோதரிகளே! இப்போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்களுக்குள்ளே கொடியவனாய் ஹிரண்யனைப் போல ஐரோப்பாவின் கிழக்கே பெரும் பகுதியையும் ஆசியாவின் வடக்கே பெரும் பகுதியையும் ஆண்ட ட்ஸார் சக்ரவர்த்தி இப்போது ஸைபீரியாவில் சிறைபட்டுக் கிடக்கிறான். 'பாரத நாட்டைக் காப்பதிலே எனக்குத் துணை புரிய வாருங்கள்' என்று ஆங்கிலேயன் ஹிந்துக்களைக் கூப்பிடுகிறான். விடுதலைக் காற்று 'விர், விர்' என்று வேகமாக வீசுகிறது.

ஒரு ஸ்திரியானவள் இந்த ஸாத்வீக எதிர்ப்பு முறையை அனுசரிக்க விரும்பினால் தனது கணவனிடம் சொல்லத் தக்கது யாதெனில்:-

"நான் எல்லாவகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லாவிட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போடமாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன்" என்று கண்டிப்பாகச் சொல்லி விடவும் வேண்டும். இங்ஙனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணை முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும், நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக்கூடாது. "சிறிது, சிறிதாக, படிப்படியாக ஞானத்தை ஏற்படுத்திக் கொள்வோம்" என்னும் கோழை நிதானக் கட்சியாரின் மூடத்தனத்தை நாம் கைக்கொள்ளக் கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும்.

இங்ஙனம், 'பரிபூரண ஸமத்வமில்லாத இடத்திலே ஆண் மக்களுடன் நாம் வாழ மாட்டோம்' என்று சொல்வதனால், நமக்கு நம்முடைய புருஷர்களாலும் புருஷ சமூகத்தாராலும் ஏற்படக்கூடிய கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மையுடையனவாயினும் அவற்றால் நமக்கு மரணமே நேரிடினும், நாம் அஞ்சக்கூடாது. ஸஹோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஸாமான்ய ஜனங்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸஹோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்ம யுத்தம் தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம், நமக்கு மஹாசக்தி துணை செய்வாள். வந்தேமாதரம்!

Thursday, January 3, 2013

"வழி வழி பாரதி"


"வழி வழி பாரதி"

தஞ்சை நகரம் தமிழகத்துக்கு அளித்த பெரும் புலவர்களில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் ஒருவர். நல்லதொரு குடும்பத்தின் வாரிசு. தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர். பாரதியை முழுமையாக மொழியாக்கம் செய்தவர். மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக நாநிலம் போற்றும் வகையில் மொழிபெயர்ப்புச் செய்தவர். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 'முதுமுனைவர்' எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். பாரதி அறிஞர், கவிஞர் திருலோக சீத்தாராம் அவர்களின் ஞானச் சீடர். பழகுதற்கு இனியர். நடமாடும் பல்கலைக் கழகம். பல நூறு முனைவர்கள் உருவாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். அவர் பாரதி குறித்து "வழி வழி பாரதி" என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதியை இப்போது தருகிறேன். பாரதி உலகக் கவிஞர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவனா, அல்லது நம் உடன் பிறந்தவர்களாலேயே குறைவாக மதிப்பிடப்பட வேண்டியவனா என்பதை இந்தப் பகுதி ஆணி அறைந்தாற்போல அறிவிக்கும். தமிழ்நாடு செய்த தவப் பயன் பாரதி இங்கு வந்து பிறந்தான். அவன் புகழை அறியாதோரைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அறிந்தோர் மேலும் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.

இனி "வழி வழி பாரதி"யிலிருந்து:--

..."பாரதிதாசன் கூறியதைக் கேளீர்: "என்னுடைய கவிதைகளில் காணப்படுகிற முற்போக்குக் கருத்துக்களுக்குப் பாரதியாரே காரணம் ஆவார்." பாரதியாரின் தொடர்பே தம் பழக்க வழக்கங்களிலும் சிந்தனையிலும், தாமே அறியாதவாறு சில மாற்றங்களைச் செய்தது என்றும் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பொதுவுடமை வாதி. நல்ல கவிஞர். அவர் சொல்லுகிறார்:--

"பாரதிக்கு நிகர் பாரதியே மண்ணில்
யார் எதிர்த்தாலும் மக்கள்
சீர் உயர்த்தும் பணியில்
பாரதிக்கு நிகர் பாரதியே."

பாரதியார் வேதத்தைப் போற்றியவர். வேதம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளாத, அறிந்து கொள்ள விரும்பாத அன்பர்களே, அதைப் பழித்தும், தெழித்தும், இழித்தும் பேசத் தலைப்படுகின்றனர். வேதம் காட்டும் ஆயிரமாயிரமாம் அறிவியற் செய்திகளை உணர்ந்து, மேலை நாட்டோர் இன்றும் அடைந்து வரும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

வேதம் என்றால் அறிவு, அறிதல் என்று பொருள்.

ஞானம் வேண்டாம் என்று கூறலாமா? காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பர். பாரதி "வேதம் புதுமை செய்" என்று ஆணையிடுகிறார். அப்படியென்றால் என்ன பொருள்? பழைய உண்மைகளுக்குப் புதிய துலக்கங்கள் தருதல் வேண்டும் என்பதே. வேதமறிந்தவன் பார்ப்பான். பார்ப்பான் வேதமறிந்தவன் என்று கூறவில்லை. நன்றாகக் கவனியுங்கள். வேதம் அறிந்தவன் பார்ப்பான், அதாவது யார் வேதம் அறிந்திருந்தாலும் அவன் அந்தணன். ஆக, பாரதி வேதம் புதுமை செய்தார். வேதம் சொன்னபடி 'பார்ப்பான்' என்றால் யார் என்பதை எடுத்துக் காட்டினார்.

"நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் - இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்
எந்தக் குலத்தினரேனும் - உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்."

எவையெல்லாம் வேதம் அல்ல என்பதையும் அவர் காட்டுகிறார்.

"உண்மையின் பேர் தெய்வம் என்போம் - அன்றி
ஓதிடும் வேதங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம் - பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்."

உலகில் பற்பல வேதங்கள் உள. தெய்வம் என்று ஒன்று கிடையாது என்று சாற்றிடும் மீமாஞ்சகர் வேதம், வேதம் இல்லை என்கிறார் பாரதி. ஸ்மிருதிகள் மாறிப் பயிலும் இயல்பின என்கிறார் அவர். யார் மேலோர் என்பதற்கு அவர் தரும் விடை.

"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்"

தவம் என்றால் என்ன? இதற்கு பாரதி தரும் விடை.

"உற்றவர் நட்டவர் ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை."

'யோகி' என்பவன் யார்? கேளுங்கள், அதற்கு பாரதி தந்த விடை.

"பக்கத் திருப்பவர் துன்பம் தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒகத் திருந்தி உலகோர் நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி."

'யோகம்', 'யாகம்', 'ஞானம்' இவற்றை விளக்குக என்றால் பாரதி தந்த விடை:

"ஊருக்குழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ்ஞானம்."

'முக்தி' என்கிறார்களே அப்படியென்றால் என்ன? அதற்கு பாரதியின் பதில்.

"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் வெறுமை என்று ஓதும்
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி."

"நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்ற வினாவுக்கு பாரதி தரும் விடை.

"நன்றே செயல் வேண்டும் - அதை
நாளை செய்வோம் என்று போக்காமே
இன்றே செயல் வேண்டும் - அதை
இப்பொழுதே செய்திடல் வேண்டும்
அன்றிப் புன் சோம்பரினால் - இதை
ஆற்றுவம் நாளை என்றிருப்பீரேல்
கொன்றுமை நாளைக்கே - நமன்
கொண்டு சென்றால் பின்னர் ஏது செய்வீர்!"

செய்கின்ற தொழில்களில் எந்தத் தொழில் நல்ல தொழில்?

"யாதானும் தொழில் செய்வாம்
யாதும் அவள் தொழிலாம்."

செய்யும் தொழிலில் இழிவு கிடையாதா?

"தொழில் சோம்பரைப் போல் இழிவு இல்லை."

பாரதியிடம் போய் "உங்களுடைய தொழில் என்ன?" என்று கேட்டால்

"நமக்குத் தொழில் கவிதை" என்றார்.

சரி! கடமைதான் யாது?

"கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நட்டிருப்போர் பெயர் பலகூறி
அல்லா, யெனோவா எனத் தொழுது அன்புறும்
தேவரும் தானாய், திருமகள், பாரதி
உமை யெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்......"

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். பாரதியாரிடம் நாம் கற்க வேண்டியவை. தமிழ்ப் பற்று, தாய்மொழிப் பற்று, பிறமொழிப் பயிற்சி, தமிழ்நாட்டுப் பற்று, பாரத தேசப் பற்று, உலக நேயம்.

"நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"

இந்நாள் வரை நான் சரியாக வாழவில்லையே. கவலைகள் என் மனத்தை மொய்க்கின்றனவே. என்ன செய்ய?

"சென்றது இனி மீளாது, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டா,

எழு, விழி, உணர்வு உறு!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று, விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

"செத்த பின் சிவலோகம், வைகுந்தம் சென்றிடலாம் என்று எண்ணாதே இத்தரை மீதினிலே இந்த நாளினிலே, இப்பொழுதே முத்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையில் களித்திடு, ஏங்கும் மனத்தை இளைப்பாற்றச் செய்" இவைதான் பாரதி நமக்களித்த அறிவுச் செல்வம். வேதம் புதுமை செய்தது.