நெல்லை ஜெபமணி
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு குற்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது. சுதந்திரப் போரில் பங்கு பெற்ற தியாகியும், சுதந்திரத்துக்குப் பிறகும் ஊழல், சர்வாதிகாரம், அரசியலில் நாணயமின்மை ஆகியவற்றை எதிர்த்து மேடைதோறும் முழங்கியவரும், இந்திரா காந்தியின் நெருக்கடிநிலை பிரகடனத்தை எதிர்த்து போராடியவரும், ஜனதா கட்சி தொடங்கியபோது அதில் பிரதானமான தலைவராக இருந்தவருமான நெல்லை ஜெபமணி பற்றி எழுதாமல் விட்டது ஒரு மனக்குறையாகவே இருந்து வந்தது.
"விஜயபாரதம்" இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் அந்தத் தியாகத் திருமகனின் நேர்காணல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அவரது வாழ்க்கைக் குறிப்பை நாம் அறிந்து கொள்வதைக் காட்டிலும், சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் கழிந்தபின் அந்த பெரியவரின் மனநிலையை இந்த நேர்காணல் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அந்த நேர்காணல்:--
தேசியத்திலும், தெய்வீகத்திலும் பழுத்தபழம் என்று இவரைப் பற்றி "விஜயபாரதம்" பெருமைப் படுத்துகிறது. அவர் எதைப் பற்றி பேசினாலும் முடிவில் "உண்மையே வெல்லும்" என்றுதான் பேசுவார் என்று அந்த நேர்காணலின் முன்னுரையில் பேட்டி கண்டவர் எழுதுகிறார்.
கேள்வி:- சுதந்திரப் போராட்டத்தில் உங்கள் பங்கு என்னவென்று சொல்லுங்களேன்!
ஜெபமணி:- என் ஊரு தூத்துக்குடி ஜில்லாவில் குறுங்கனி என்கிற கிராமம். அங்கே சாமிநாதன் என்பவர் கதர்க்கடை வைத்திருந்தார். அவர் காந்தி படத்தை வைத்துக் கொண்டு, பாரதியார் பாடல்களைப் பாடிக் கொண்டு கிராமம் கிராமமாகப் போவார். அப்போது எனக்கு இளம் வயது. நானும் அவரோடு ஊர்வலத்தில் பாரதியார் பாட்டைப் பாடிக்கொண்டு போவேன். அதுவே காந்தியின் மேல் எனக்கு ஓர் ஈர்ப்பை உருவாக்கியது.
அதனால் திருப்பூர் வந்து காந்திஜியின் நிர்மாணத் திட்டத்தினைக் கற்க பஜாஜ் வித்யாலயத்தில் சேர்ந்தேன். இரண்டு வருடப் படிப்பு அது. அங்கிருந்து திருபத்தூர் கிறுஸ்துவ ஆசிரமத்திற்கு நூற்பு ஆசிரியராக அனுப்பி வைத்தார்கள். அந்த நேரத்தில் தீரர் சத்தியமூர்த்தி காலமாகிவிட்டார். அப்போது வித்யாலயத்தின் முதல்வராய் இருந்த சிவகுருநாதன் எங்களை 1943இல் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொன்னார். நானும் மற்ற மாணவர்களும் முதலில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போய் மறியலில் ஈடுபட்டோம். அடுத்த நாள் மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் முன்னால் மறியல் நடத்தினோம். போலீசார் எங்களைக் கைது செய்தார்கள். விசாரணை நடந்து முதல் நாள் மறியல் செய்தமைக்காக 18 மாதங்கள் சிறை தண்டனையும், இரண்டாம் நாள் மறியல் செய்தமைக்காக 10 மாதம் என 28 மாத சிறை தண்டனை கொடுத்தார்கள். தண்டனையை பெங்களூர் கண்டோன்மெண்ட் ஜெயிலில் அனுபவித்தேன்.
கேள்வி:- ஜெயிலிலிருந்து வந்த பிறகு என்ன செய்தீர்கள்?
ஜெபமணி:- திருப்பூர் கதர்க் கடையிலும், திருநெல்வேலி கதர்க் கடையிலும் வேலை பார்த்தேன். காங்கிரஸ் கூட்டத்திலே மகாத்மா காந்தி நிர்மாணப் பணிகளைப் பிரச்சாரம் செய்யும் வேலையை மேற்கொண்டேன். 1947இல் நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர்தான் எனக்குத் திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் கதர்த் திருமணம். என் மனைவிக்கு 15 ரூபாய் எட்டரை அணாவுக்கு கதர் புடவை, எனக்கு இரண்டு ரூபாய் முக்காலணாவுக்கு கதர் வேஷ்டி. அப்படி மிக எளிமையாக நடந்தத் திருமணம் அது.
கேள்வி:- சுதந்திரம் அடைந்த நாளில் உங்கள் மனம் எப்படி இருந்தது?
ஜெபமணி:- ரேடியோவில் சுதந்திர தினச் செய்திகளைக் கேட்டபோது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. நாங்கள் திருநெல்வேலியில் அதை விழாவாகக் கொண்டாடினோம். தியாகி சைலப் பிள்ளை கொடியேற்றி வைத்தார். பாரதியாரின் மகள் லலிதா பாரதி தேசிய கீதம் பாடினார். நான் அங்கு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.
பாரதி முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினானே, இப்போது நாம் நாற்பது கோடி மக்கள் இருக்கிறோமே என்று நினைத்தேன். ஆனால் பத்து கோடிப் பேர் பிரிந்து போய்விட்டார்கள். பாரதி கூறியது பலித்துவிட்டது என்று பேசினேன்.
கேள்வி:- சுதந்திரப் போரின் போது 'திராவிடம்' பேசியவர்கள் என்ன செய்தாங்க. அதைப் பற்றி சற்று சொல்லுங்களேன்.
ஜெபமணி:- அதை ஏன் இப்போது பேசவேண்டும். அவர்கள் போலியானவர்கள். கொள்கை கிடையாது. அவர்களுக்கென்று லட்சியம் எதுவும் கிடையாது. அவர்களைப் பற்றி பேசுவது 'வேஸ்ட்' என்பது என் எண்ணம். அண்ணாதுரை ஆங்கிலேயர்களிடம் மாதம் 800 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு யுத்த ஆதரவுப் பிரச்சாரம் பண்ணினார். 1944இல் நீதிக்கட்சிக் காரர்கள், காந்திஜியை எதிர்த்து பனியாக்கள் ஆள்வதைவிட பரங்கியர்கள் ஆண்டால் பிரச்சினையில்லை என்று தீர்மானம் போட்டார்கள். அவர்கள் செய்தது போலி அரசியல். சரக்கு இல்லாமல் கிடைத்ததை வாங்கி சந்தையில் வியாபாரம் பண்ணுகிற மாதிரி வியாபார அரசியல் நடத்தினார்கள். சரி! அதை விட்டுத் தள்ளுங்க.
கேள்வி:- சுதந்திரப் போராட்டத்தின் போது நடந்த உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுங்களேன்.
ஜெபமணி:- புதுக்கோட்டையைச் சேர்ந்த நடேசன் என்பவர் வித்யாலயாவில் என்னோடு படித்துக் கொண்டு இருந்த காலத்தில் கோயம்புத்தூரில் நடந்த மறியலில் கலந்துகொண்டு கைதானார். அப்போது போலீசார் செய்த அட்டூழியம் கொடுமையானது. அவர் தாடி வைத்திருந்தார். போலீஸ் அவருடைய தாடி மயிரை ஒன்றொன்றாக பிடுங்கி என்றிந்தது. பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் கண்ணீர் பெருகியது. ஆனால், அவர் அழவே இல்லை. போலீசுக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை. அவரைப் பார்த்து, "உனக்கு சொரணையே கிடையாதா?" என்றனர். அதற்கு அவர் கொஞ்சம் கூட பயப்படாமல், "நீ பிடுங்குகிற ஒவ்வொரு மயிரும் பக்கிங்காம் அரண்மனையின் செங்கல்லைப் பிடுங்குவதற்குச் சமம்" என்று பதில் சொன்னார். அந்த நிகழ்ச்சியையும், காட்சியையும் என்னால் மறக்க முடியவில்லை.
கேள்வி:- உங்க அரசியல் வாழ்க்கை பற்றி .....
ஜெபமணி:- மகாத்மா காந்திஜியின் பணிகளைச் செய்து கொண்டிருந்த என்னை கர்மவீரர் காமராஜ்தான் தீவிர அரசியலுக்கு இழுத்து வந்தார். காமராஜ் இருக்கும் வரை எல்லாம் நல்லபடியா நடந்து கொண்டிருந்தது. பின்னாளில் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்தேன். அரசியலில் எதுவும் சரியில்லாமல் இருந்ததால் ஜனதா கட்சியை தமிழகத்தில் ஆரம்பித்தேன்.
கேள்வி:- பொன்விழா காணும் சுதந்திர இந்தியா பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
ஜெபமணி:- சுதந்திர இந்தியாவில் வாழ்வதை நினைத்துப் பெருமைப் படுகிறேன். சுதந்திரப் போரில் இருந்த பல தியாகிகளை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்து நாட்டின் சொத்தை சூறையாடியதையும் பார்த்திருக்கிறேன். ஏதோ ஜனாதிபதியும், நீதிமன்றமும் நல்லா இருக்குது.
ஆனால் நான் எதுக்கும் கவலைப் படவில்லை. உண்மை கண்டிப்பாக வெற்றி பெறும். "நல்லோர், பெரியோர் எனும் காலம் வரும். நயவஞ்சகம் நாசம் ஆகும்" என பாரதி பாடினான். அந்த நல்ல காலம் வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
நன்றி: "விஜயபாரதம்" பொன்விழா மலர், சென்னை.
த்யாகி திரு.நெல்லை ஜெபமணி அவர்களை நினைவு கூர்ந்ததற்கு மிகவும் நன்றி.அவரைப்போல வெளிச்சத்திற்கு வராத {unsung heroes }வீரர்கள் தமிழ்நாட்டில் நிறையபேர் உள்ளனர்.
ReplyDelete////ரேடியோவில் சுதந்திர தினச் செய்திகளைக் கேட்டபோது மனம் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது. நாங்கள் திருநெல்வேலியில் அதை விழாவாகக் கொண்டாடினோம். தியாகி சைலப் பிள்ளை கொடியேற்றி வைத்தார். பாரதியாரின் மகள் லலிதா பாரதி தேசிய கீதம் பாடினார். நான் அங்கு பேசினேன். அப்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன்.////
ReplyDeleteஆகா, இது அற்புதமானத் தகவல்....
இது மகாகவிக்கு அம்மண் வழங்கிய
அழகிய மரியாதை....
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று ஏங்கி நின்ற அந்த ஆத்மா அப்போது ஆனந்தக் கூத்தாடி இருக்கும் என்பதை உணர முடிகிறது.
திராவிடம் பேசியவர்களின் செய்கைகளும் நீதிக் கட்சியின் முழக்கமும் மிகவும் மனிதத் தன்மையற்றதாகவே இருந்தும் இருக்கிறது.
புதுகை மண்ணில் இன்னும் ஒரு நடேசன் என்னும் ஒளி விளக்கு சுடர்விட்டிருந்ததை இப்போது தான் அறிகிறேன்.
தியாகி ஜெபமணி அவர்களின் பேட்டி பற்றிய பதிவு அருமை.
நன்றிகள் ஐயா!