Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, November 6, 2011

ஊழிக்கூத்து


ஊழிக்கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம்பாடப் - பாட்டின்
அடிபடு பொருளுன் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண்டி, கங்காளீ!

அன்னை அன்னை,
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

ஐந்துறு பூதம் சிந்திப்போ யொன்றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறு மொளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய், அடு தீ சொரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய் மெய் குலையச் - சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
ஊழாம் பேய்தான் "ஓஹோ ஹோ" வென்றலைய - வெறித்
துறுமித் திரிவாய், செறுவெங் கூத்தே புரிவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

சத்திப் பேய்தாந் தலையொடு தலைகள் முட்டிச் - சட்டச்
சடசட சட்டென் றுடைபடு தாளங் கொட்டி - அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போயெட்டித் - தானே
எரியுங் கோலங் கண்டே சாகுங் காலம்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

காலத் தொடு நிர்மூலம் படுமூ வுலகும் - அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும் - சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய், ஆநந்தக் கூத்திடுவாய்!

அன்னை, அன்னை
ஆடுங் கூத்தை நாடச் செய்தா யென்னை.

இதுதான் பாரதியாரின் "ஊழிக்கூத்து" பாடல். இந்தப் பாடல் குறித்து பிரபல பொதுவுடைமை வாதியும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளர் ஜெயகாந்தனால் மதிக்கப்பட்டவருமான ஆர்.கே.கண்ணன் தான் எழுதியுள்ள "புது நெறி காட்டிய பாரதி" எனும் நியு செஞ்சுரி புத்தக நிலையத்தார் வெளியிட்டிருக்கும் நூலில் ஊழிக்கூத்து பாடல் பற்றித் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார். ஒரு பொதுவுடைமை வாதியின் நோக்கில் அமைந்துள்ள அவரது கட்டுரையின் உட்கருத்தை இப்போது பார்க்கலாமா?

"நாதப் பிரம்மத்தி9 சூட்சும நிலைக்குள் கலந்து வெளிப்பட்ட ஒரு ஒலிச் சித்திரம் ஊழிக்கூத்து.

பரணியை ஜெயம்கொண்ட ஜெயங்கொண்டாரையும் ஜெயங்கொண்டு விட்டிருக்கிறான் பாரதி.

பாரதி வேறு கவிதை யொன்றும் எழுதாமல் இந்த ஒன்றை மட்டும் எழுதிவிட்டு மறைந்திருந்தாலும் இந்த ஒரு கவிதையே அவர் மகாகவி என்று உலகுக்குப் பறை சாற்றும்.

ஏனெனில் தமிழ்க் கவிதைச் சமூகத்துக்கு, உலகக் கவிதைச் சமூஊகத்துக்கு, இது தேவை. அவற்றில் இதுகாறும் காணக்கிடைக்காத தொன்று. தமிழ் மொழியின் வெற்றி இது - பொதுவாகவே மனித மொழியின் மகத்தான வெற்றி இது.

காட்சியின் பல அழகுகளை சிந்தனையின் பல நுட்பமான நெகிழ்ச்சிகளை, ஒலியின் உள்ளிசைவுகளை, முடிந்தவரைக்கும் வர்ணித்துப் பார்த்துவிட்டு மகாகவிகள் கூட ஒரு நிலையை எட்டியதும் "இது சொல்லில் அகப்படுமா?" என்று பெரு மூச்சுவிட்டு நிறுத்திக் கொள்வதை நாம் அறிவோம். புற அக அனுபவங்கள் அசல்; அவை பெரிது; மனித மொழி எத்துணை வளர்ச்சி கண்டிருந்தாலும் அது ஒரு செயற்கை சாதனம்; நிறைவை நோக்கித் தாவித் தாவிச் சென்று கொண்டேயிருக்க வேண்டியது. இந்த நிலையில், உலகத்தில் எந்த ஒரு கவிஞனாவது அதுவரை சாதிக்காத சாதனையாக ஒரு புதிய ஒலி உலகத்தை, காட்சி உலகத்தை, அனுபவத்தை, கவிதையிலே படைத்துத் தந்தால் அவனுக்கு உலகம் கோவில் கட்டிக் கும்பிடும்; மனித மொழியின் மாபெரும் வெற்றி என்று ஏற்றிப் போற்றும்.

பாரதியின் 'ஊழிக்கூத்து' அவ்வகைப்பட்டது. அது தமிழ்மொழிக்கு மட்டும் உரியதல்ல.

அதுபோல் பிறிதொரு கவிதை உலகக் கவிதையில் இல்லை.

கவிதையிலே எடுத்தாளும் பொருளுக்குப் பொருத்தமாக இசைவாக நாதசுகம் தருகிற சில கவிதைகள் இங்கு என் நினைவுக்கு வருகின்றன.

கடல்மீது தோனியிலே சென்று அனுபவிக்கும் அனுபவத்தை வைத்து கடல் ஜுரம் (Sea Fever) என்கிற ஒரு கவிதையை ஆங்கிலக் கவிஞன் ஜான் மேஸ்பீல்ட் (John Masefield) எழுதியிருக்கிறான். "கட்டு மரங்கள்" என்று தலைப்பிட்டு மீனவர்களின் அனுபவத்தைச் சித்தரித்து இந்தியக் கவிக்குயில் சரோஜினி தேவியார் ஆங்கிலக் கவிதையொன்று புனைந்திருக்கிறார். அவை இனிமை சொட்டும் கவிதைகளே; எனினும் பாரதியின் ஊழிக்கூத்துடன் ஒப்பிடுகையில், அவற்றைப் பொதியமலைத் தென்றலாகத்தான் கொள்ள முடியும்.

வரப்போகும் ருஷ்யப்புரட்சியை (1905) உருவகமாகக் கொண்டு லெனின் கட்சியினரை ஒரு பயமறியாத கடற்பறவைக்கு உவமையாக்கி, "கடற்பறவையின் கீதம்" (Song of the stormy petrel) என்று மாக்ஸிம் கார்க்கி ஒரு எழுச்சி மிக்க கவிதை பாடியுள்ளார். புயல் வீசத் தொடங்கினால் மற்ற பறவைகள் அனைத்தும் தரை நோக்கிப் பறந்தோடிவிடும். ஆனால் கடற் பறவையோ, புயலின் வேகம் அதிகமாக அதிகமாக, கடலின் நடுவே சென்று உறுமிக் கவ்வும் வானத்துக்கும் சீறிப் பாயும் அலைகளுக்கும் நடுவே அச்சமின்றிச் சுழன்று சுழன்று பறக்கும். போல்ஷெவிக்குகளைப் பற்றிய ருஷ்யப் புரட்சியைப் பற்றிய இந்தக் கவிதை மனித மொழிக்கு ஒரு அற்புதமான வெற்றியாகும்.

எனினும், அது ஒரு கடற் புயல்தான்.

பாரதியினுடையதோ அசல் ஊழிக்கூத்து!

"வெடிபடு மண்டத் திடிபல தாளம்போட ...."

என்று பாடத் தொடங்கியதும் தரைமேலிருந்த கால்கள் அப்படியே தலைகீழாக வாரிவிடப்பட்டு ஊழிக்கூத்திலே நாம் விழுந்து சுழலத் தொடங்கி விடுகிறோம்.

சங்கீதம் ஒன்றுதான் பாரதியின் "ஊழிக்கூத்து"க்கு இணையாக -- ஊழிக்கூத்தையும் விஞ்சி -- சாதனை புரிந்திருக்கிறது என்பது என் கருத்து. அதுவும் நம் சங்கீதமல்ல, ஐரோப்பிய சங்கீதம் என்பது என் கருத்து. ஊழிக்கூத்தின் நாத உலகில் நுழையும் போது ஜெர்மன் நாட்டு இசை மேதைகளாகிய பீதோவனுடைய (Beethoven) வாக்னருடைய (Wagner) சில சங்கீதப் படைப்புகளுக்குள் கலந்து விடுகிறேன். "ஐந்துறு பூதம் சிந்திப் போயொன்றாகப் பின்னர் அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப்போக" வுமான ஒலிச்சித்திரங்களை அவர்கள் படைத்திருக்கிறார்கள். பாரதியின் ஊழிக் கூத்துக்காக இந்த ஐரோப்பிய சங்கீதத்தை ஒரு தடவை கேட்டுப் பாருங்கள். பீதோவனுடைய மூன்றாவது, ஐந்தாவது அல்லது ஒன்பதாவது சிம்பொனி (symphony) யையோ, வாக்னரின் Seigfried Tannhauser, opera (இசை நாடகம்) வையோ கேட்டுப் பாருங்கள்.

சங்கீதம் கவிதையை விஞ்சுகிறது; பாரதியைப் பீதோவன் விஞ்சுகிறார் என்றால் மோசமில்லை. யாரும் தாபமடையத் தேவையில்லை. சங்கீதம் எல்லாக் கலைகளுக்கும் ராணி; மொழியைவிட ஏழிசை ஆற்றல் நிறந்தது. பிறப்பிலும் ஒலி முந்தி, மொழி பிந்தி. எனவே இசை என்றும் கவிதையை முந்திக் கொண்டு வளரும். இசையும் லயமும் (கூத்தும்) குரலோடு உடலோடு இயல்பாக ஒட்டிக்கொண்டு வருவன. மற்ற கலைகள் அனைத்தும் செயற்கையாக மனிதன் ஓரளவுக்கு அறிவுநிலை எய்தியபின் வருவன. குழந்தைகள் இதற்குச் சாட்சி; முதன்முதலாகக் குழந்தைகள் தன்னியல்பாக வெளியிடும் கலை இசைக்கலைதான். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே அமைந்த இயல்பான முதல் பந்தம் உழைப்பும் இசையும்தான். மொழி, கவிதை, இலக்கியம், சிற்பம், ஓவியம், சாத்திரம் முதலான பிற யாவும் பின்னர் வருபவையே.

இந்தச் சங்கீதத்தையும், "ஊழிக்கூத்தை"யும் அனுபவிக்கிறபோது, "பேய்ப் பயங்கரத்தின் மடியிலே துஞ்சும் அழகுத் தெய்வம்" (Beauty lying on the lap of Terror) என்று வால்டர் ஸ்காட் பயின்ற ஒரு சொற்றொடரும், அதனையொட்டிய காட்சியும் நினைவுக்கு வருகின்றன. "பெர்த் நகரின் அழகி" (Fair Maid of Perth) என்கிற நாவலில் ஸ்காட்லாந்து நாட்டு மலைகளின் அடர்ந்த காடுகளின் பயங்கரமான - அதே நேரத்தில் அழகான - காட்சிகளைப் பக்கம் பக்கமாக வர்ணித்தும் திருப்தி கொள்ள முடியாமற்போய் அவர் பயின்ற சொற்றொடர் இது.

பயங்கரமே ஒரு அழகுதான். பயங்கரமும் அழகும் நம்முள் பிரிக்க முடியாத ஒரு தோற்றம்; ஒரு அனுபவம். உண்மையின் ஒரு நிலை, அழகின் ஒரு சுவை - பயங்கரம் என்பது.

விண்வெளியிற் சுழன்ற ககாரினும், விண்வெளியில் நீந்திய போபாவிச்சும் ஒப்புக் கொள்வார்கள்.

சிவபெருமானைச் சுடலையிலும், கயிலையிலும் வைத்துக் காட்டும் காட்சித் தத்துவம் (பிற தத்துவங்கள் ஒரு புறமிருக்க) இனியது அல்லவா?

"ஆம்" என்று தலையாட்டுகிறீர்களா? புரிந்து கொண்டு தலையாட்டுங்கள்.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்சத்தின் அழிவை "காலத்தொடு நிர்மூலம் படு மூவுலகின்" காட்சியைச் சித்தரிக்கிறது என்று நினைக்கிறிர்களா?

உங்கள் நினைப்பு முழு உண்மையல்ல! அது அரை உண்மையே!

அரையுண்மை என்றால் அது பொய் ஆகும்!

பயங்கரத்துக்குள்ளே அழகு ஊடுருவி நிற்கிறது. அழிவுக்குள்ளே சிருஷ்டி ஊடுருவி நிற்கிறது. இரண்டையும் ஒரே நிலையில் பார்ப்பதுதான் முழுமெய் ஆகும். ஏனெனில் இயக்கம்தான் நிரந்தரமானது; உண்மையானது; அழிவு பிறப்பு என்பதெல்லாம் பருப்பொருளின் உணர்வின் பல வடிவ மாற்றங்களே, நிலை மாற்றங்களே. எதுவும் பிறப்பதில்லை, எதுவும் இறப்பதில்லை. இயக்க மாற்றங்கள் வழியே மேல் நிலைக்குச் சென்ற வண்ணம் இருக்கின்றன.

"காலத் தொடு நிர்மூலம் படு மூவுலகும்" என்று சிந்திக்கிறீர்களா? அதோ, பாருங்கள்! அடுத்த வரியில் வரும் காட்சியை.

".............................. அங்கே கடவுள் மோனத் தொளியே தனியா யிலரும் - சிவன்
கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும்"

அழிவுக்கிடையே, ஊழிக்கூத்துக்கு நடுவே, காளியின் சினம் விலகுகிறது! பிறகு நடப்பதென்ன?

"............................. சிவன் கோலங் கண்டுன் கனல் செய் சினமும் விலகும் - கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக் கூத்திடுவாய்!"

சும்மா தொடவில்லையாம்! சிவனைச் சக்தி கொஞ்சித் தொடுகிறாளாம்! தொட்டுவிட்டு ஆனந்தக் கூத்தாடுகிறாளாம்! இன்னொரு பிரபஞ்சம் அங்கே "பிறந்து" விட்டது - என்று இதற்குப் பொருள். அழிவின் நடுவே, ஊழிக் கூத்தின் நடுவே, சிவனும் சக்தியும் தொட்டு ஒரு புதிய பிரபஞ்சம் உருவெடுக்கிறது. அழிவிலிருந்து புத்துயிர் பெற்றெழும் புதிய பிரபஞ்சம்!

எனவே, "ஊழிக்கூத்து" எனும் பாரதி சித்திரம் உலகின் முடிவா? அல்லது உலகின் முதலா? என்கிற கேள்வி எழுப்பி மயங்காதீர்கள்.

அது அழிவு எனும் இயக்கத்தின் வடிவமா? அல்லது படைப்பு எனும் இயக்கத்தின் வடிவமா? என்று வினா எழுப்பி வியப்பில் ஆழ்ந்து போகாதீர்கள். 

சூரியனின் ஒளி மையத்தில் அடுதீ சொரியும் (Cosmic Radiation) கருவுக்குள் நின்ற கிரேக்க புராண புருஷன் பிராமதேயசின் முயற்சி இது! இக்கவிதையை நீங்கள் பாடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சூரியனின் எரி சுழற்சியில் ஒரு பகுதி சரிந்து பிரிந்து விண்வெளியில் எறியப்பட்டு அது பல கோளங்களுடன் முட்டி மோதிச் சிதறி பஞ்ச பூதங்களின் ஒரு கூத்துக்கு (என்ன வலிவான விஞ்ஞானச் சொல்) உட்பட்டு பிறகு மெல்ல மெல்லக் குளிர்ந்து பூமி என்று சொல்லும் இந்த மண்ணுலகம் பல கோடி ஆண்டுகள் கழித்து உருவாகிறதாகச் சிந்தித்துப் பாருங்கள். அப்பொழுது ஊழிக்கூத்து என்பது அழிவு படைப்பு என்கிற இரு போக்கும் ஊடுருவி உட்கலந்து தம்முள் மோதிக் கொள்ளும் இயக்கத்தின் வடிவத்தையே சித்திரமாகக் காட்டுவதாக ஒப்புக் கொள்வீர்கள்.

இந்த உண்மையான நிலையிலே நின்று (அல்லது சில வாசகர்கள் நான் சொல்வதை ஏற்காவிட்டால் இந்தப் பிரமையிலே, பாவனையிலே நின்று) ஊழிக்கூத்தைப் பாடிப் பாருங்கள். உள்ளத்திற்கும், கற்பனைக்கும் அளக்கவொண்ணா விவரிக்கவொண்ணா வலிமை சேருவதை உணர்வீர்கள். 

மனிதனின் சிந்தைக்கும், கற்பனைக்கும், தோளுக்கும் வலிமை சேர்க்கப் பாடியவன் பாரதி என்பதையும் மறக்காதீர்கள். அழிவின் காட்சி அவன் குறியாக இருக்க முடியாது. அழிவிலே உருவாகி வரும் படைப்பின் சித்திரமே அவன் குறியாக இருக்க முடியும்.

எனவேதான் ஊழிக்கூத்தை நாம் முற்றாகப் பாடிவிட்டு,

"அன்னை, அன்னை, ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!" என்று பாரதியோடு நாமும் ஆர்ப்பரித்தெழுகிறோம். ஒரு சக்தி மயமான உலகிலே புகுந்து கூத்து நடத்திவிட்டு உள்ளம் நிறைந்த சக்தியின் தேசுடன் வெளிவருகிறோம். (நன்றி: ஆர்.கே.கண்ணன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ்)

1 comment:

  1. Fantastic piece.
    nanRi, nanRi!

    bhArathi perumai koLvAn.

    ReplyDelete

You can send your comments