Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, July 2, 2011

இருபதாம் நூற்றாண்டின் சூரசம்ஹாரம்

சூரசம்ஹாரம்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. இந்தியர்களுக்குத் தாங்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகிக் கிடக்கிறோம் என்ற உணர்வை தேசபக்தர்கள் ஊட்டவேண்டியிருந்த நேரம். 1857இல் வட இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி இந்த நாட்டை வேட்டைக்காடாக மாற்றியிருந்த நேரத்தில் அவர்களிடம் வேலை செய்த இந்திய சிப்பாய்களுக்கு ஏற்பட்ட அவமானங்கள் காரணமாக அவர்கள் ஒரு பெரும் கிளர்ச்சியை உண்டாக்கினர். அந்தக் கிளர்ச்சி மிருகத்தனமாக அடக்கப்பட்ட போதிலும், அதன் விளைவாக இந்திய மக்கள் சிலர் உள்ளத்தில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியது. பலர் இந்த தேசத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். சுதேசி உணர்வு துளிர்விடலாயிற்று. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எண்ணம் பரவலாக இளைஞர்கள் மனதில் வேர்விடலாயிற்று.

அப்படி தேசபக்தி கொண்ட இளைஞர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாததோடு அவர்களை திசை தவறும் இளைஞர்கள் என்றார்கள். சமூக விரோதிகள் என்றுகூடச் சொன்னார்கள். ஆனால் சரியான கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது அவர்கள் தேசபக்தர்களாகவும், இந்த நாட்டை அடிமைத் தளையினின்றும் விடுவிக்க சர்வபரித்தியாகத்துக்குத் தயாராக இருப்பவர்களாகவும் தோன்றினார்கள். தேசிய சிந்தனைகளின் காரணமாக தேசியத் தொழில்கள் தொடங்கின. சுதேசி கம்பெனிகள் தோன்றின. சுதேசி கல்வித் தாபனங்கள் தோன்றின. ஆன்மிக மறுமலர்ச்சிக்காகத் தோன்றிய இயக்கங்கள்கூட தேசபக்தியின் காரணமாக இந்திய சுதந்திர எண்ணத்தை வளர்த்தன. இளைஞர்கள் ஒன்றுகூடுவதற்காக பல சங்கங்கள், இயக்கங்கள் தோற்றுவிக்கப் பட்டன. அப்படிப்பட்ட இயக்கங்களில் ஒன்றுதான் அபிநவபாரதம் எனும் சங்கம்.

தொடக்கத்தில் சொன்னபடி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் தெந்தமிழ் நாட்டில் ஒரு சுதந்திர வெடிச்சத்தம் முதன்முதலாக ஒலித்தது. எப்போதும் அமைதி தவழும் தமிழ்நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்தது வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்துக்கு ஒரு பேரிடியாக அமைந்தது; தேசபக்தர்களுக்கோ, ஓ! மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சிதான் என்ன? இப்போது பார்ப்போம்.

தென் தமிழகத்தில் கடலோர நகரமான தூத்துக்குடியில் I.C.S. எனப்படும் இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரி ஒரு ஆங்கிலேயர் இருந்தார். அவர் பெயர் ராபர்ட் டபிள்யு.டி.ஈ.ஆஷ் என்பதாகும். தூத்துக்குடியில் சப் கலெக்டராக பணியாற்றி வந்தார். இந்த ஆஷ் பெருமகனாருக்கு இந்தியர்கள் என்றாலே கசப்பு. இந்திய மக்களை அறவே பிடிக்காது. அதிலும் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த தூத்துக்குடியில் இருந்த ஒரு தேசியத்   தலைவரான வ.உ.சிதம்பரம் பிள்ளையைக் கண்டால் அவருக்கு வெறுப்பு.

நெல்லை மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்து, திருச்சியில் சட்டம் பயின்று தூத்துக்குடியில் ப்ளீடர் எனும் வக்கீல் தொழில் செய்து வந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.

ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் உறுதுணையாக இருந்து வந்தார். அவர்களுக்காக வாதாடி பல வழக்குகளிலும் வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார். இந்தக் காரணங்களால் அவர் மக்கள் தலைவராக விளங்கினார். அப்போது வேகமாகப் பரவிவந்த தேசிய உணர்வு, சுதந்திர உணர்வு வ.உ.சி.யிடம் பற்றிக் கொண்டதால், அவர் தேச சுதந்திர இயக்கத்திலும் தீவிரமாக கவனம் செலுத்தத் தொடங்கினார். தேசத்தையும், தேச சுதந்திரத்தைப் பற்றியும் சிந்தித்துப் பாடுபடுபவர்கள் 'சுதேசிகள்' என்று அறியப்பட்டனர். அப்படிப்பட்ட பல சுதேசிகளில் மரியாதைக்குரியவராக விளங்கினார் வ.உ.சிதம்பரம் பிள்ளை. அவரும், சுப்பிரமணிய சிவாவும் அன்றைய நாளில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊர்தோறும் சென்று தேசபக்திப் பிரச்சாரம் செய்து வந்தமையால் அவரை மக்களும், ஆளும் வர்க்கமும் நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள்.
                                                            V.O.Chidambaram Pillai

அன்றைய காலகட்டத்தில் நாட்டில் பரவி வந்த சுதேசி இயக்கம் அந்நிய துணிகளை பகிஷ்காரம் செய்யும் போராட்டம் நடத்தி வந்தது. அதில் வ.உ.சி.தீவிரம் காட்டினார். அவரும் சிவாவும் அனல்கக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை ஊட்டி வந்தனர். அந்நியப் பொருட்களை வாங்காமல் உள்நாட்டில் உற்பத்தியாகும் சுதேசிப் பொருட்களை வாங்கும்படி மக்களை ஊக்குவித்தனர். போதாத குறைக்கு அப்போது தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு கடல்வழி வியாபாரத்துக்கு ஆங்கில கம்பெனியாரின் கப்பல்களைத்தான் நம்ப வேண்டியிருந்தது. அவர்கள் விதித்த கட்டணம்தான், அதற்கு போட்டியே கிடையாது. அந்த சூழ்நிலையில் மிகக் கஷ்டப்பட்டு, பல ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு, பல பெருந்தனக்காரர்களிடம் பங்குகள் பெற்று ஒரு சுதேசி கம்பல் கம்பெனியை அரும்பாடுபட்டு வ.உ.சி.தோற்றுவித்தார்.

இந்த சுதேசி கம்பெனி கப்பலோடு போட்டிபோட முடியாமல் ஆங்கில கம்பெனி தடுமாறியது. தங்கள் பயணக் கட்டணத்தையும், சர்க்கு கொண்டு செல்லும் கட்டணத்தையும் குறைத்தும் பல வழிகளில் சுதேசி கப்பலைத் தோற்கடிக்க முயன்றும் முடியவில்லை. ஆளும் வர்க்கம், ஆங்கில வர்க்கம், சுதேசி என்ற பெயரில் ஒரு உள்ளூர் வக்கீல் இப்படியெல்லாம் தங்களுக்குப் போட்டியாக இருக்கிறாரே என்ற எரிச்சல், இவையெல்லாம் வ.உ.சி.யின் மீது அவர்களுக்கு கோபம் அளவு கடந்திருந்தது. வியாபாரம் செய்வதே தொழிலாகக் கொண்ட ஆங்கிலேயர், வியாபாரம் செய்ய வந்து நாடுபிடித்து ஆளத் தொடங்கிய ஆங்கிலேயர், கேவலம் ஒரு இந்தியர் தங்களை எதிர்த்து போட்டியிடுவதாவது, அதிலும் அவர் வெற்றி பெறுவதாவது என்ற பொறாமை, இவையெல்லாம் அவர் மீது போர் தொடுக்கக் காரணம் தேடி அலைந்தனர்.

அவ்வூரில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியாக இருந்த சப் கலெக்டர் ஆஷ் துரைக்கு இவரை எப்படியாவது தண்டித்து இவரது கப்பல் கம்பெனியை அழித்துவிட வேண்டுமென்கிற வேகம். பார்த்தார் ஆஷ்! என்ன செய்யலாம் என்று. வ.உ.சி. ஊர் ஊராகச் சென்று பேசுகிறார், அங்கெல்லாம் 'வந்தேமாதரம்' எனும் தேசிய கோஷத்தை எழுப்புகிறார். அந்த மந்திரச்சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் இந்தியர்கள் தேசபக்தி கொண்டு கோஷிக்கிறார்கள். இதையே ஒரு காரணமாக வைத்து வ.உ.சி.யை ஆங்கில ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறார், இவர் ஒரு தேச விரோதி என்று சொல்லி வழக்கு தொடர்ந்தார்.

ஆஷ் வகித்த பதவி, ஆங்கில அரசின் பலம் இவைகளைக் கொண்டு வ.உ.சி.க்குத் தண்டனையும், கப்பல் கம்பெனியை அழிக்கவும் ஏற்பாடு செய்தார். வ.உ.சி.யை சிறைக்கு அனுப்பவும், கப்பல் கம்பெனி உடையவும் காரணமாக இருந்த ஆஷ் பதவி உயர்வு பெற்றார். மாவட்ட கலெக்டராகவும், மாஜிஸ்டிரேட்டாகவும் உயர்ந்தார். திருநெல்வேலி மாவட்டத்துக்கே கலெக்டராக பதவி உயர்வு பெற்று பதவியில் அமர்ந்தார். இந்த ஆஷினுடைய தூத்துக்குடி நடவடிக்கைகளும், சுதேசிகளுக்கு எதிராக அவர் கையாண்ட அடக்குமுறை, அராஜகம் இவற்றின் காரணமாகவும் மக்களிடம் இவர் விரோதத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டார். அதிலும் குறிப்பாக சுதேசி இயக்கத்து இளைஞர்கள் இவரை வெறுத்தனர். சமயம் பார்த்துக் கொண்டிருந்தனர் இந்த அராஜக அதிகாரிக்குத் தக்கத் தண்டனை கொடுக்க. கிடைத்தது வாய்ப்பு!

எப்படி? பார்ப்போம்.

1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் நாள். வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஆங்கில அதிகார வர்க்கத்துக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் நடந்த நாள். ஆம்! அன்றுதான் இந்த அராஜகக் கலெக்டர் ஆஷுக்கு ஒரு சுதேசி இளைஞர் தக்கப் பாடம் கற்பித்த தினம். கலெக்டர் ஆஷ் கொடைக்கானலில் படித்து வந்த தனது மக்களைக் காண ரயிலில் புறப்பட்டு திருநெல்வேலியிலிருந்து  மணியாச்சி ஜங்ஷனுக்கு வந்து மாற்று ரயிலுக்காக முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார். உடன் அவரது மனைவியும் இருந்தார்.

முதல் வகுப்பில் கலெக்டர் ஆஷ் ஆனந்தமாக மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார். வண்டி நின்றிருந்தது. அப்போது ஒரு தமிழ் இளைஞன் அந்தப் பெட்டியில் ஏறினான். கையில் ஒரு ரிவால்வரை ஏந்தியிருந்தான். அவன் ஆஷை நெருங்கி நேருக்கு நேராக அவனை அந்தத் துப்பாக்கியால் சுட்டான். குண்டடி பட்டும் ஆஷ் அந்த இளைஞனைப் பிடிக்க முயன்றான். அவன் மனைவி தடுத்தாள். அதற்குள் அந்த இளைஞன் பெட்டியிலிருந்து இறங்கினான். கலெக்டருடைய ஆட்கள் அவனைப் பிடிக்கத் துரத்தினர். ஆனால், அவன் அருகில் இருந்த கழிவறைக்குள் சென்றான். பிடிக்க வந்தவர்கள் தயங்கி, பயந்து சற்று வெளியில் தாமதித்தார்கள். அப்போது உள்ளேயிருந்து ஒரு வெடிச்சத்தம் கேட்டது. உள்ளே போய் பார்த்தபோது அவ்விளைஞன் தன் வாயில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தன்முகம் சிதையும்படியாக, தன்னை யார் என்று அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தான்.

இந்திய நாட்டின் விடுதலைக்காக தென்னகத்தில் ஒரு ரத்தத் தியாகம், துவக்கிய அந்த இளைஞன் பெயர் வாஞ்சிநாதன். காட்டிலாகாவில் வேலை பார்த்த இளைஞன். அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டை எனும் ஊரைச் சேர்ந்தவன். திருமணமான இளைஞன். அதன் பின்னர் போலீஸ் அவர்கள் முறையில் விசாரணை மேற்கொண்டனர். வாஞ்சியின் உடலில் கிடைத்த ஒரு கடிதம், அவரை இன்னார் என்று அடையாளம் காட்டியது. அதனைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டார்கள்.

வழக்கு புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே சம்பந்தப்பட்ட ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்கள். காணாமல் போய் எங்கோ கல்கத்தாவில் இருந்த நீலகண்ட பிரம்மச்சாரியைத் தேடி போலீஸ் அலைந்தது. இதனை அறிந்த நீலகண்டன் கல்கத்தா கமிஷனர் ஆஃப் போலீசிடம் சரணடைந்து, பின்னர் இங்கு கொண்டு வரப்பட்டார். வாஞ்சிநாதனிடமிருந்து கிடைத்த ஒரு கடிதம் போலீசுக்குத் துருப்புச் சீட்டாகப் பயன்பட்டது. அதில் "இந்திய இளைஞன் ஒவ்வொருவனும், மிலேச்சர்களான ஆங்கிலேயரை இந்த நாட்டைவிட்டுத் துரத்தத் தயாராகி விட்டனர். இந்த நாட்டின் தர்மத்தை நிலைநாட்ட நம் எதிரிகளான மிலேச்சர்களை விரட்டுவதை சபதமாக எடுத்துக் கொண்டுவிட்டனர். மதறாஸ் மாநிலத்தில் 3000 பேர் இந்தப் போரில் ஈடுபட உறுதி எடுத்துக் கொண்டுவிட்டோம். அதனை நம் எதிரிகளுக்குத் தெரிவிக்கும் விதமாக இந்தக் காரியம் செய்யப்பட்டது" என்று இருந்தது. போதாதா ஆங்கில அதிகாரிகளுக்கு வேட்டையாட.

வாஞ்சியின் வீடு சோதனையிடப்பட்டது. அங்கு மேலும் பல ஆதாரங்கள் போலீசுக்குக் கிடைத்தன. வாஞ்சிக்கு நெருக்கமாக இருந்த ஆறுமுகம் பிள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தைரியமில்லாத பலஹீனமான மனிதன் ஆகையால் இவரை அப்ரூவராக மாற்றினர். அவரைப் போலவே சோமசுந்தரம் என்று ஒருவர். அவரும் போலீசின் கைவரிசைக்கு அடிபணிந்தார் அப்ரூவராக ஆனார். மேற்கொண்டு நடந்த விசாரணை போலீசை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றது. இந்த கொலைக்கு அங்குதான் அஸ்திவாரமிடப்பட்டதாக வழக்கு விசாரணையின் போது வக்கீல் சி.எஃப்.நேப்பியர் வாதாடினார்.

புதுச்சேரியில் அப்படி என்னதான் இருந்தது? பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்ட பல சுதந்திரப் போராளிகள் அங்குதான் தஞ்சம் புகுந்திருந்தனர். அரவிந்தர், பாரதியார், வ.வெ.சு.ஐயர் போன்ற பலர். அவர்களை வேட்டையாட பிரிட்டிஷ் அரசு ஆனமட்டிலும் முயற்சிகளை எடுத்து வந்தனர். இதில் வ.வெ.சு.ஐயர் லண்டனின் இந்தியா ஹவுஸ் எனப்படும் மாளிகையில் வீர சாவர்க்கர், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற பல சுதந்திரப் போர்வீரர்களுடன் இருந்தவர். மகா தைரியசாலி, செயல்வீரர். பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்ற இவர் புரட்சிக்காரராக திரும்பியிருந்தார். அவரும் புதுச்சேரியில் வந்து சேர்ந்தார். மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போருக்குத் தலைமை ஏற்க வராத காலம்.

அப்போது இருந்த சூழ்நிலையில் பின்னாளில் கையாண்ட அஹிம்சை, சத்தியாக்கிரகம் போன்றவைகள் அறிமுகமாகாத நேரம். ஆகவே புரட்சி இயக்கங்களுக்கு ஆதரவும், புரட்சியாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. வெள்ளைக்கார ஆதரவு இந்திய போலீஸ் இந்த வழக்கில் 14 பேர்களை வளைத்துப் பிடித்தனர். அவர்களுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள். இங்கிலாந்து மன்னருக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டியதாகக் குற்றச்சாட்டு.
                                                                            V.V.S.Iyer

அதில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டோர் முறையே 1. நீலகண்ட பிரம்மச்சாரி 21 வயதான அபிநவ பாரத உறுப்பினர், புரட்சிக்காரர், இயக்கத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தவர் 2. சங்கரகிருஷ்ண ஐயர் எனும் இளைஞர், விவசாயி 3. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை 4. முத்துக்குமாரசாமி பிள்ளை 5. சுப்பையா பிள்ளை எனும் வக்கீல் குமாஸ்தா 6. சமையல்காரர் ஜெகநாத ஐயங்கார் 7. ஹரிஹர ஐயர் 8. பாப்புப் பிள்ளை 9. தேசிகாச்சாரி 10. வேம்பு ஐயர் 11. சாவடி அருணாசலம் பிள்ளை 12. அழகப்ப பிள்ளை 13. வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர் எனும் ஆசிரியர் 14. பிச்சுமணி ஐயர். இவர்கள் அனைவருமே இருபது வயதும் அதற்கு மேல் ஓரிரண்டு வயது அதிகம் ஆன இளைஞர்கள்.
                                                           Collector Ash & family

பொதுவாக இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படும். ஆனால் வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதியும், கொலையுண்டவர் மாவட்ட கலெக்டர் அதிலும் ஒரு வெள்ளைக்காரர் என்பதால் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பெஞ்சில் மூன்று நீதிபதிகள் தலைமை நீதிபதி சர் அர்னால்டு ஒயிட், நீதிபதி ஏலிங் நீதிபதி சி.சங்கரன் நாயர் ஆகியோர் இருந்தனர். இந்த வழக்கை உலகெங்கும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆஷைச் சுட்ட நபர் தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்து போய்விட்டார். ஆனால் சதி குறித்து இந்த வழக்கை விவரமாக விசாரித்து வந்தனர். பப்ளிக் பிராசிகியூட்டர் முன்பே சொன்னபடி நேப்பியர். இவருக்கு டி.ரிச்மாண்டு எனும் ஆங்கிலேயரும், ஏ.சுந்தர சாஸ்திரி என்பவரும் துணை புரிந்தனர். முதல் எதிரி நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஆங்கிலேயரான பாரிஸ்டர் ஜே.சி.ஆதம் என்பவரும், சங்கரகிருஷ்ணனுக்கும் மற்ற மூவருக்கும் அரசியல் வானில் பின்னாளில் வலம் வந்த சென்னை மாகாண முதல்வராகவும் இருந்த ஆந்திரகேசரி டி.பிரகாசம் ஆஜரானார்.

இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த நீலகண்ட பிரம்மச்சாரியைப் பற்றிய பூர்வொத்தரம் முழுமையாக கோர்ட்டில் விவாதிக்கப்பட்டது. சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் அப்போதைய ஆங்கில சர்க்காரால் ஒரு பயங்கரவாதியாகக் கருதப்பட்டார். சுமார் மூன்று மாத காலம் இந்த வழக்கு நடந்தது. 1911 செப்டம்பரில் தொடங்கி 1912 ஜனவரி வரை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கின் முடிவில் மூன்று நீதிபதிகளும் ஒத்த கருத்துடைய தீர்ப்பை வழங்கவில்லை. நீதிபதி சர் அர்நால்டு ஒயிட்டும் நீதிபதி ஏலிங்கும் ஒரு தீர்ப்பும், நீதிபதி சங்கரன் நாயர் மற்றொரு தீர்ப்பும் வழங்கினர்.
                                          Ash's grandson writes to Vachinathan's successors

இதில் நீதிபதி சங்கரன் நாயர் இந்திய சுதேசிகளின் போராட்டம் பற்றியும், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" பாடலை மொழிபெயர்த்தும் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். எனினும் நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பையொட்டி நீலகண்ட பிரம்மச்சாரிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், சங்கரகிருஷ்ணனுக்கு நான்காண்டு தண்டனையும் வழங்கியது. மற்றவர்களுக்குப் பலதரப்பட்ட தண்டனைகள் வழங்கப்பட்டன.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. முடிவில் முந்தைய தீர்ப்பே உறுதி செய்யப்பட்டது.
                                                Nilakanta Brahmachari (Swamy Omkarnath)

ஆஷைக் கொன்றுவிட்டுத் தன்னையும் மாய்த்துக் கொண்டு வீரன் வாஞ்சி சுதந்திர இந்தியாவில் தியாகியாகப் போற்றப்படுகிறார். இவர் நினைவாக மணியாச்சி ரயில் நிலையம் வாஞ்சி மணியாச்சி என்று வழங்கப்படுகிறது. நீலகண்ட பிரம்மச்சாரி பின்னாளில் ஒரு துறவியாக மாறி ஓம்கார்நாத் சுவாமி என்ற பெயருடன் கர்நாடக மாநிலத்தில் நந்தி ஹில்ஸில் இருந்து முதிர்ந்த வயதில் காலமானார். அரசியலில் இருந்து ஒதுங்கி ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டுத் தன் காலத்தைக் கழித்தார் நீலகண்ட பிரம்மச்சாரி. வாழ்க தியாகிகளின் புகழ்!

Collector Ashe was murdered by Vanchinatha iyer on June 17, 1911. Hundred years have gone by after that fateful day. Immediately after that tragedy, Mrs.Ashe went back to her country with her 4 children-2 daughters and 2 sons. Thanks to the initiative, enthusiasm and intellectual curiosity of Prof. A R Venkatachalapathy---a very perceptive historian--- we have come to know that Robert Ashe, a grandson of Collector ashe of Tirunelveli and Maniachi fame now lives in Ireland. Robert Ashe has sent a letter through email to Prof. A R Venkatachalapathy which states as follows:

"On this day of sad but proud remembrance, we, the grandchildren and great grandchildren of Robert William Ashe would like to extend to the family of Vanchi Iyer, a message of reconciliation and friendship. Vanchi was an idealist political campaigner whose zeal for the freedom of his beloved India sent Robert to his early grave. Moments later, he took his own young life. All who act fervently in the political arena, both ruler and oppressed, risk making mortal mistakes, and we who are fortunate enough to live on, must forgive and live in peace together."

The mail also makes it clear that the above message was proof-read by one grandson, one granddaughter, the wife of one grandson and one great-grand-daughter, who were all present at the residence of grandson Robert Ashe on the evening of, 15 June, 2011.

4 comments:

  1. I read KMR's comments in Classroom 2007. I think my comment box is working now. Hope to get more comments on this article. Thank you all.

    ReplyDelete
  2. JAIHINDH DEDICATION IS REAL HISTORY VALUE

    ReplyDelete

You can send your comments