Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Friday, July 8, 2011

'வெல்லச்சு' செட்டியார்

பாரதியின் புதுச்சேரி நண்பர் 'வெல்லச்சு' செட்டியார்

பாரதி புதுவையில் வாழ்ந்த நாட்கள் பயனுள்ள நாட்கள். பாரதியின் கவிதா வளம் பெருக்கெடுத்த நாட்கள். நண்பர்கள் குழாம் மிக அதிகமாக இருந்த நாட்கள். அவர் முகம் பார்த்து உதவி செய்ய காத்திருந்த அன்பர்கள் அதிகம் இருந்த நாட்கள் அவை. பாரதி வாழ்ந்த உலகம் தனியானது. ஆனால் தினப்படி வாழ்க்கைக்கு அவருக்குப் பணம் தேவைப்பட்டது. அதைப் பற்றி சிறிதுகூட சிந்தனையில்லாமல் தனது கற்பனா உலகில் சஞ்சரித்து வந்த நாட்கள் அவை.

அப்படிப்பட்ட காலங்களில் அவர் கேட்காமலே அவருக்கு உதவி செய்ய நண்பர்கள் காத்திருந்தார்கள். ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் குடியிருந்தபோது அண்டை வீட்டில் இருந்த பெருந்தனக்காரர் பொன்னு முருகேசம் பிள்ளை, பாரதிக்குத் தேவை என்ன என்பதை உணர்ந்து அவரும் அறியாமல் அவர் வீட்டில் கொண்டு சேர்க்கும் வள்ளலாக இருந்திருக்கிறார். அவர் மனைவியோ, பாரதி வீட்டில் எப்போதெல்லாம் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஒருவரும் அறியாமல் மறைத்துப் பாத்திரத்தில் எடுத்து வந்து வைத்துவிட்டுப் போகும் வள்ளன்மை வாய்ந்தவர். இப்படிப் பலர். அவர்களில் ஒருவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

புதுவையை அடுத்த முத்தியால்பேட்டை எனும் இடத்தில் வசித்து வந்த அன்பர் வெ.கிருஷ்ணசாமி செட்டியார்தான் அந்த வள்ளல். இப்படி அவர் பெயரை சொன்னால் உங்களுக்குத் தெரியாமல் போகலாம், அவருக்கு பாரதி வைத்த செல்லப் பெயர் கொண்டு எழுதினால் ஒருக்கால் புரியலாம். இவரை 'வெல்லச்சு'ச் செட்டியார் என்றுதான் அழைப்பார் பாரதியார். இவருக்கு ஏன் இந்தப் பெயர் ஏற்பட்டது?

இவர் சற்று குள்ளமானவர். உடல் நல்ல பருமனான கெட்டியான சரீரம். அவர் உடலாலோ, அல்லது மனத்தாலோ சோர்வாக இருந்து யாரும் பார்த்ததில்லை. அவருடைய தோற்றம் குறித்தும், இனிமையான உள்ளம் குறித்தும் 'வெல்லச்சு' என்ற செல்லப் பெயரை பாரதி வைத்திருக்கலாம்.

இவர் நெசவுத் தொழில் செய்து வந்தவர். தொழிலும் நன்றாக இருந்தது, அதோடு நிலபுலன்களும் இவருக்கு ஓரளவுக்கு உண்டு. துணி வியாபாரத்தில் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. பாரதியாரிடம் பக்தி கலந்த நட்பு இருந்தது இவருக்கு. அடிக்கடி இவர் பாரதியாரின் இல்லத்துக்கு வந்து விடுவார். அங்கு பாரதியார் யாருடனாவது பேசிக் கொண்டிருந்தாலும், இவர் பாட்டிலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு அங்கு அமர்ந்திருப்பார். வீட்டுக்கு வந்தவுடன் பாரதியாரைப் பார்த்து "சுவாமி" என்று அழைத்துவிட்டு அமர்ந்தாரானால் அப்புறம் அவர் வாயைத் திறக்க மாட்டார். அமைதியின் திருவுருவமாக உட்கார்ந்திருப்பார்.

அவரைக் கண்டால் பாரதிக்கு மிகவும் பிடிக்கும். தாம் இயற்றிய புதுப் பாடல்களை 'வெல்லச்சு' செட்டியாருக்குப் பாடிக் காண்பிப்பார். பாரதி எத்தனைக்கெத்தனை ஆர்வத்தோடு புதிய பாடல்களைப் பாடிக் காட்டுகிறாரோ அந்த அளவுக்கு அவர் புரிந்து கொண்டதாகவோ, ரசித்ததாகவோ அவருடைய முக பாகம் காட்டாது. அது 1910-11 ஆம் வருடம். அப்போது செட்டியாருக்கு வயது 20 இருக்கலாம்.

இது என்ன இந்த மனிதர், ரசனை என்பதே இல்லாத இந்த வெல்லச்சு செட்டியாருக்குப் போய் இவ்வளவு அன்போடு தனது பாடல்களைப் பாடிக் காட்டுகிறாரே, அவர் இதனை ரசிக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியவில்லையே என்று, கூடஇருந்த அன்பர்கள் நினைப்பார்கள். ஆனால் பாரதியார் ஏதாவது நகைச்சுவையாகச் சொன்னார் அனைவருக்கும் முந்தி வெல்லச்சு செட்டியார்தன் முதலில் உரத்த குரலில் சிரிப்பார். ஏதாவது சோக ரசமான நிகழ்வை பாரதி சொன்னால், இவர் அழுதுவிடுவாரோ எனும்படி முகத்தை சோகமாக வைத்திருப்பார். அத்தனை ரசிகர்.

இவர் தோற்றத்தைப் பார்த்து இவரை எடை போட வேண்டாம், எந்தப் புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ யார் கண்டது என்பார் பாரதியார். நண்பர்கள் கூடியிருக்கிற நேரங்களில் பாரதியார் பல கதைகளைச் சொல்லுவார். அந்தக் கதைகளுக்கிடையே அவரைக் கிண்டல் அடித்தும், கேலியாகவும் பாரதியார் மறைமுகமாகக் குறிப்பிடுவார். பாரதி சொல்லும் கதைகளில் கேலி அதிகம் இருக்கும். ஒரு முறை பாரதி சொன்ன கதை இது:

"காட்டுப் பாதையொன்றில் இரண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருவர் குடியானவன், மற்றவர் செட்டியார். அந்தப் பகுதிகளில் திருடர்கள் அதிகம். வழிப்பறி நடப்பது வழக்கம். பகல் பொழுது கழிந்து இருள் கவிவதற்குள் காட்டைக் கடந்து விட வேண்டுமென்று வேகமாக நடந்தார்கள். ஆனால் முடியவில்லை. பொழுது நன்றாக இருண்டு விட்டது. இந்த இடத்தில் பாரதியார் கதையை நிறுத்திவிட்டு வெல்லச்சு செட்டியாரைப் பார்த்துக் கேட்பார், "என்ன செட்டியாரே! கதை ஒழுங்காகச் சொல்ல வேண்டுமானால் இந்த இடத்தில் திருடர்கள் வரலாமா அல்லது இன்னும் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு வ்ரலாமா?" என்பார்.

அதற்கு செட்டியார் சொல்லுவார், "எந்த சமயத்தில் வந்தால் என்ன? நான் பாரதியாரோடு வழிப்பயணம் செய்கிறவன். எனக்கு என்ன பயம்?" என்பார். "அச்சா, அப்படிச் சொல்லப்பா, என் தங்கமே!~" என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பாராம். கூட இருந்தவர்களும் சிரிப்பில் கலந்து கொள்வார்களாம்.

திருடர்கள் வழிப்பயணம் வந்து கொண்டிருந்த குடியானவனை நன்கு அடித்து, அவனிடமிருந்தவைகளைப் பிடுங்கிக் கொண்டார்களாம். கூட பயணம் செய்துகொண்டிருந்த செட்டியார் பார்த்தார், மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு ஓசைப்படாமல் கீழே படுத்துக் கொண்டுவிட்டாராம். திருடர்கள் கீழே விழுந்து கிடக்கும் செட்டியாரைக் குச்சியால் தட்டிப் பார்த்துவிட்டு, "அட! கட்டை கிடக்கிறது" என்றார்களாம்.

உடனே கீழே கடந்த செட்டியார் ரோஷத்தோடு எழுந்து, "உங்க வீட்டுக் கட்டை பத்து ரூபாய் பணத்தை மடியில் கட்டுக்கொண்டுதான் விழுந்து கிடக்குமோ?" என்றாராம். உடனே பாரதியார் கதையை நிறுத்திவிட்டு வெல்லச்சு செட்டியாரைப் பார்த்து, "என்ன செட்டியாரே, கதை சரிதானே?" என்பாராம். உடனே செட்டியார், "கதை எப்படியிருந்தால் என்ன, அதுதான் முடிந்து விட்டதே" என்று சொல்லிக் கொண்டே மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து பாரதியாரிடம் கொடுத்து விடுவாராம்.

பாரதியார் உரக்கச் சிரித்துக் கொண்டே, "கதையில் பணம் பிடுங்கியது திருடர்கள், இங்கே நான் பகல் கொள்ளைக்காரன்" என்பாராம். செட்டியாரும் பாரதியார் சிரிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருப்பாராம். அவரைப் போல பாரதியாரிடம் பக்தி பாராட்டியவர்கள் வேறு யாரும் கிடையாது என்பார்கள்.

வெல்லச்சு செட்டியார் பாரதி சொன்ன கதை, வெறும் கதை மட்டுமல்ல, அவருடைய தேவையைக் குறிப்பாகச் சொன்னது என்பதை புரிந்துகொண்டு மடியில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தது என்பார்கள் நண்பர்கள். மால நேரங்களில் நண்பர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருக்கும் போது அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க வேண்டுமென்பது பாரதியாரின் ஆசை. அத்தகைய சந்தர்ப்பங்களில் கிருஷ்ணசாமி செட்டியார் அங்கு இருப்பார். அப்போது பாரதி தன்னிடம் உள்ள ஒரு செல்லாத காசை எடுத்துக் காட்டி, "இது செல்லுமா பாருங்கள்" என்பாராம். நண்பர்கள் செல்லாது என்று சொல்வார்கள். உடனே பாரதி, அதனால் என்ன செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கிறாரே என்று அவரைக் கை காட்டிவிடுவாராம். குறிப்பறிந்து செயல்படும் செட்டியார் சும்மா இருப்பாரா, பாரதியிடம் இருக்கும் பணத்தைக் கொடுத்து விடுவார். இது நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை. அப்போது பாரதியாருக்கு அமைந்த நண்பர்கள் அப்படி. இன்று! பெருமூச்சுதான் வரும்.

1 comment:

  1. மிகவும் சுவையான வரலாற்று உண்மைகள்...
    இது போன்ற நண்பர்கள் அமைந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

    இந்தத் தகவல் எனது மேனிலைப் பள்ளி நாட்களை ஞாபகப் படுத்துகிறது. அது இருபத்தாறு வருடங்களுக்கு முந்தியது... நாங்கள் நண்பர்கள் விடுமுறையில் பள்ளியில் இருக்கும் திடலில் இருக்கும் பிள்ளையார் கோவில் மரத்தடியில் கூடுவது வழக்கம்... அப்போது எங்கள் குழுவில் எனது நண்பர் ஒருவர் எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியரின் பிள்ளை. அவரும் விளையாட்டில் மிகவும் நன்றாக செய்வார். படிப்பில் சுமார். ஆங்கில உயிர் மெய் எழுத்துக்களை சரியாகத் சொல்லத் தெரியாது,அதை சாக்காக வைத்துக் கொண்டு நாங்கள் எப்போதெல்லாம் தேநீர் அருந்த வேண்டும் என்று நினைக்கிறோமோ.. அப்போது பிழையில்லாமல் ஆங்கில உயிர் மெய் எழுத்துக்களை பிழை இல்லாமல் சொல்லும் போட்டி வைப்போம். பிறகு என்ன பாவம் எங்கள் அந்த நண்பர் தான் போட்டியில் தோற்று தேநீர் வாங்குவார்.

    பாரதியைப் பற்றிய இந்த சுவாரஸ்ய நினைவு அருமை.
    நன்றி.

    ReplyDelete

You can send your comments