Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, August 28, 2011

இலக்கியச் சூரியன் "பாரதி"


இலக்கியச் சூரியன் "பாரதி"
நன்றி:
("தாமரை" பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழில் கவிஞர் சிற்பி)

அவன்
எழுத்துக்களுக்கு
நெற்றிக் கண் கொடுத்த
எட்டையபுரத்து
இலக்கியச் சூரியன்

அழகிய சொல் தேடி
அலைந்த அகராதிப் புரட்டர்கள்
வேல் விழிக்கும்
தேன் மொழிக்கும்
விலாசம் விற்ற பண்டிதர்கள்
நாக பந்த யமக
நலிவுச் சிறைக்குள்ளே
சாகாத் தமிழ் மொழியின்
சரித்திரத்தைப் பூட்டி விட்டு
சாவியினை இடுப்பில்
அந்தரங்கமாய்ச் செருகும்
ஆஸ்தான வித்வான்கள்

முகம் சந்திர பிம்பம்
மார்பு கனக கும்பம்
கால்கள் வாழைக்கம்பம்
என்று
கவிதைப் பெண்ணைத்
துகிலுரிந்த துச்சாதனர்கள்--
இந்தக்
குருடர்களின் சொர்க்கத்தில்
அவன்
விழி திறந்த அசுர விதை

நுனிப்புல் மேயும்
வெட்டுக் கிளிகளுக்கு மத்தியில்
வாழ்க்கை வேதனைகளைக்
கிழி கிழியென்று கிழித்த
வேங்கைப் புலி

தொட்டால் சிணுங்கிகளுக்கு
நடுவே
தொட முடியாமல் நிமிர்ந்த
தொடுவானம்
ஜோதிப் பிரகாச வைகறைகளின்
பிரசவக் கூடமான
தொடு வானம்.

தண்ணீரில் கிடந்தாலும்
சாயம் போகாத தாமரைபோல்
எண்ணங்களைக் கலையாத
வண்ணங்களில் தோய்த்து
வடித்த கலை மேதை

அவனது
சிந்தனைச் செறிவில்
தேர்ந்த பேனாமுனை
திசை தடுமாறிய
தேசக் கப்பலுக்கு
நன்னம்பிக்கை முனை
யானது சரித்திரம்..........

புரட்சி இளஞ் சிவப்புப்
பூசிய படைக் கலங்களோடு
காலம் கட்டியம் கூற
அவன்
கவிதைப் பட்டாளம்
காலடி வைத்ததும்
செய்யுள் கூடுகள்
செத்து விழுந்தன

காவிரி வெற்றிலைத்
தாம்பாளம் ஏந்தி
கங்கைக் கரைக்
கோதுமை அறுவடை
அரிவாள் சுமந்து.....

சிந்து நதி அலைகளில்
படகுப் பாய் விரித்து
கேரளத்துப் பெண்ணின்

கெண்டை விழி மையழகு பார்த்து...
தெலுங்குத் தேனில்
உதடு நனைத்து
கன்னடத் தங்கப் பதக்கங்களை
ராஜ புதானத்து
மறவர் மார்பில் அணிவித்து
மராட்டியக் கவிதைக்கு
மேற்கு மலை யானைத்
தந்தங்கள் பரிசாகத்
தந்து சிலிர்த்தவை
அவன்
ஒருமைப்பாட்டு ஓவிய
உரிமைப் பாட்டு வரிகள்!

வெண்பா விருத்தப்பா
அகவற் பா என
விளையாட்டாக அவன்
பாடியிருந்தும்
பிழைப் பா என்றனர்
பெரும் பண்டிதர்கள்

ஆமாம்-----
அவன் கவிதையில்
பிழைகள் இருந்தன

அவை
இலக்கணப் பிழைகளல்ல
இலக்கணம் பிழைத்த
இந்தச் சமுதாயப் பிழைகள்

எழு என்று சொல்லவே
அவன் எழுத்துக்கள்
சீரழிவு தடுக்கவே
அவன் பாடலின் சீர்கள்
தளைகள் அறுக்கவே
அவன் கவிதையில் தளைகள்
துயரத் தொகுப்பை
அடித்து நொறுக்கவே
அவன் பாடலின் அடிகள்!
கவிதை அவனுக்குப்

புதிய சமுதாயம்
சமைக்கும் பட்டறை

அழுது கொண்டிருக்கும்
வங்கக் கடலோரம்
அறுபதாண்டுகள் முன்
பசி தீராத ஒரு மயானம்
ஒரு பிடி சாம்பலால்
முடிவுமை எழுதிற்று
இக் கருவிகளின் உடலுக்கு....

சாம்பலை உதறிய
சத்தியப் பறவை
பூமிக்குத் தன் சிறகு விசாலப்
போர்வை விரித்தபடி
அலகினில் புதுயுகப்
பூக்களைக் கொத்திப்
பறக்கிறது இன்றைக்கு

'நோவு வேண்டேன்
நூறாண்டு வேண்டினேன்'
என்று
பாடியவன் இல்லாமல்
நூற்றாண்டு வருகிறது
எனினும்

அவன் இருக்கிறான்
சத்திய ஆவேசம்
கொழுந்துவிடும்
கவிதைகளில்...

புதுயுகம் சமைக்கப்
புறப்படும் இளைஞனின்
சக்தி பிறக்கும்

மூச்சுக் காற்றில்...
இளைய பாரதம்
எடுத்து வைக்கின்ற
கம்பீரமான
காலடிச் சுவட்டில்....

அவன்
இருக்கிறான்

என்றும் இருப்பவன்
இன்றும் இருக்கிறான்
நேற்றின் நடவாய்
இன்றின் பயிராய்
நாளையின் மாணிக்க
விளைச்சல் கதிராய்....!

பூபேந்திரர்


பூபேந்திரர்

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின் வந்தோன்
விண்ணவர் தம் உலகை ஆள் ப்ர
தாபேந்திரன் கோபமுறினும் அதற்கு
அஞ்சி அறம் தவிர்கிலாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரத நாட்
டிற்கடிமை பூண்டு வாழ்வோன்.

வீழ்த்தல் பெறத் தருமமெலாம், மறமனைத்துங்
கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்த தமர் முன்னோங்க நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ் சென்று மற்றொருதம்
அருகில் வரும் பான்மை தோன்றக்
காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின்
நினையினிது காட்டி நின்றான்.

மண்ணாளும் மன்னரவன் தனைச் சிறைசெய்
திட்டாலும் மாந்தரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழேந்தி
வாழ்த்தி மனங் களிக்கின்றாரால்
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
சிலர் உலகில் இருப்பர் அன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
இருளினது விரும்பல் போன்றே!

இன்னாத பிறர்க்கெண்ணான் பாரத நாட்
டிற்கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
ஓருயிரென்று உணர்ந்த ஞானி
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
பெருமையெதும் அறிகிலாதார்
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே?

பூபேந்திரநாத் தத் என்பவர் சுவாமி விவேகானந்தரின் இளவல். இவர் வங்காளத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த தேசபக்தர். புரட்சிக்காரர் என்று அறியப்பட்டவர். இவரை ஆங்கிலேய அரசு 1907இல் கைது செய்து ராஜதுரோகக் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தது.

இவர் குறித்து பாரதியார் எழுதிய பாட்டில் 'பாழ்த்த கலியுகம் சென்று, மற்றோர் யுகம் அருகில் வரும் பான்மை தோன்றக் காழ்த்த மனவீரமுடன் யுகாந்தரத்தின் நிலை இனிது காட்டி நின்றான்' என்கிறார். கலியுகம் முடிந்து மற்றோர் யுகம் தோன்றுதல் போல், பூபேந்திரரின் பத்திரிகையான "யுகாந்தர்" எனும் பத்திரிகையில் எழுதியமைக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் விளைவாக, இருண்ட காலம் போய் மக்களுக்கு விடிவு காலம் வராதா, கலி முடிந்து மற்றோர் யுகம் தோன்றாதா என்பது போல, அவரது பத்திரிகையின் பெயரான 'யுகாந்தர்' என்பதை இங்கு சிலேடையாகப் பயன்படுத்தி யிருக்கிறார் பாரதி.

பூபேந்திரநாதர் குறித்து தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் பூபேந்திரர் குறித்தும், அவர் சார்ந்திருந்த இயக்கத்தைக் குறித்தும் நமக்குச் சில விஷயங்களை நினைவூட்டுகிறார்.

நாடு முழுவதும் சுதந்திர தாகம் ஏற்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டு வந்த நேரத்தில் வங்காளத்தில் புரட்சி இயக்கத்தின் வேட்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சுவாமி விவேகானந்தர் இந்தியர்களுக்குச் சுதந்திர தாகத்தை உண்டாக்கினார். அவரது சகோதரரான பூபேந்திரர் அந்த சுதந்திரத்தைப் பெறும் வழிமுறைக்கு ஆயுதம் தாங்கிப் போராடத் துணிந்தார்.

தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவருக்கு ஒரு இயக்கம் தேவைப்பட்டது. ஆகவே 1902இல் அவர் ஒரு புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அந்த நேரத்தில் அரவிந்த கோஷ், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா தேவியார் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்து குறிக்கோளை எட்ட இளைஞர்களின் ஆதரவினைத் திரட்ட "யுகாந்தர்' எனும் பத்திரிகையை 1906இல் தொடங்கினார்.

இந்த "யுகாந்தர்" ஆயுதப் புரட்சியை ஆதரித்து வந்தது. இந்த பத்திரிகையோடு தொடர்புடைய இளைஞர்கள் பலரும் இந்த நாட்டுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருந்தனர். ஆயுதப் புரட்சியின் மூலம் இந்திய விடுதலையை அடைந்துவிட முடியும் என்று நம்பியிருந்தனர்.

1907இல் கைதாகி சிறை சென்ற பூபேந்திரர் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். அங்கிருந்து விடுதலையாகி வெளியே வந்தபின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்குச் சென்றார். அங்கெல்லாம் இருந்த புரட்சிகர இயக்கத்தாருடன் தொடர்பு கொண்டார். அங்கிருந்து அவர் சோவியத் யூனியனுக்கு 1921இல் சென்றார். அங்கு சோவியத் நாட்டின் பெருந்தலைவர் லெனினைச் சந்தித்துவிட்டு இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய பின் இவர் நாட்டின் சுதந்திரப் போரில் ஈடுபட வசதியாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1929இல் இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்காளப் பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகப் போராட இவர் 'கிசான்' அமைப்புகளில் தீவிரம் காட்டினார். தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசிலும் தலைவராக இருந்து பணியாற்றினார். இவர் 1955இல் காலமானார்.






Saturday, August 27, 2011

வல்லிக்கண்ணன்


மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதி
வல்லிக்கண்ணன் 'தாமரை'யில் 1982இல் எழுதியது

பழமைச் சிக்கல்கள், சம்பிரதாயத் தளைகள், மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக விளங்கிய பல்வேறு பிடிப்புகளிலுமிருந்து தமிழ் மொழியை விடுவித்து, ஒளியும், மணமும் திகழக்கூடிய மறுமலர்ச்சிக்கு வித்திட முதல்வன் மகாகவி பாரதியார்.

தமிழ் இலக்கியத்தின் புது விடியலுக்கு ஒளிகாட்டிய வெள்ளி முளைப்புக் கவிஞன் பாரதி.

புதுயுக எழுத்தாளர்களின் தலைவன், பின்வந்த (வருகின்ற) எழுத்தாளர் பலருக்கும் வழிகாட்டும் படைப்புகளை ஆக்கித் தந்த மேலோன், மனித வாழ்வு மேம்பட வழிகாட்டும் ஒளிச்சுடராகவும் அவர் விளங்குகிறார்.

'நமக்குத் தொழில் கவிதை -- நாட்டிற்கு உழைத்தல் -- இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று கொள்கை வகுத்துக் கொண்ட இலட்சியவாதி அவர்.

மகாசக்தியை நினைத்து பாரதியார் வேண்டுகின்ற இடம் ஒன்றில் இவை வருகின்றன ---

"அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக.
நமக்குச் செய்கை இயல்பாகுக.
ரஸமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை,
வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை,
விளையும் செய்கை, பரவும் செய்கை,
கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை,
நமக்கு மகாசக்தி அருள் செய்க.

கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்,
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்
இச்செயல்கள் நமக்கு மகாசக்தி அருள்புரிக.
அன்பு நீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது
சாத்திரங்களை போக்கி, வேதப் பயிர் செய்து
இன்பப் பயனறிந்து தின்பதற்கு
மகாசக்தியின் துணை வேண்டுகிறோம்."

பலவிதமான செய்கைகளிலும் ஈடுபட்டு, உழைப்பில் இன்பம் கண்டு, உண்டு வாழ்வதே வாழ்க்கையின் பயனாதல் வேண்டும் என்று பாரதியார் தமது கவிதைகளில் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

அறிவில் வளர்ச்சி, சிந்தையில் தெளிவு, எண்ணத்தில் உறுதி, உள்ளத்தில் அன்பு, உழைப்பில் ஆர்வம், மனிதருக்குத் தேவை. இதையும் பாரதியார் எடுத்துச் சொல்லத் தவறவில்லை.

"அன்பென்று கொட்டு முரசே! அதில்
யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்,
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்."

நாட்டின் விடுதலைக்காக எழுச்சிக் கவிதைகள் முழக்கிய பாரதியார், மக்களின் வாழ்க்கை வளம்பெற வேண்டும், எல்லோரும் சந்தோஷமாகவும் நலமாகவும் வாழ வழி பிறக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழிவகைகளை அங்கங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார் தமது எழுத்துக்களில்.

'மதிமூடும் பொய்மையிருள் முற்றும் விட்டகல வேண்டும்' என்றும் 'ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை அச்சம் போயொழிதல் வேண்டும் என்றும் கூறும் பாரதியார், மனிதர் வாழ்வில் புத்துயிர்ப்பும், புதிய வீறும் சேர்வதற்கு வழிகாட்டும் முறையில் 'புதிய ஆத்திசூடி'யை இயற்றியுள்ளார்.

'அச்சம் தவிர்', 'ஆண்மை தவறேல்', அதற்காக 'உடலினை உறுதிசெய்', உடலுறுதி பெறுவதற்காக 'ஊண்மிக விரும்பு' என்று கூறுகிறார். 'கூடித் தொழில் செய்', 'கைத்தொழில் போற்று', 'நாளெல்லாம் வினைசெய்' என்று வலியுறுத்துகிறார்.

துணிச்சலாக, காலத்துக்கேற்ற கருத்துகளை முன்வைக்க அவர் தயங்கவில்லை.

'சோதிடந்தனை இகழ்', 'நேர்படப் பேசு', 'நையப் புடை', 'பணத்தினைப் பெருக்கு', 'புதியன விரும்பு', 'பெரிதினும் பெரிது கேள்' -- இவை பாரதியாரின் புதுமை உபதேசங்கள்.

மனிதர் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பு அற்புதமான விஷயம். வாழ்க்கைக்கு அர்த்தமும் மாண்பும் அளிப்பது அன்பு. மக்கள் சமுதாயத்தை வாழ்விக்க உதவுவது அன்பு. பாரதியார் சொல்கிறார் --

'வையத்தில்
அன்புல் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு;

சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக்
கொள்ளுதிர் பாரிலுள்ளீர்!

முயலும் வினைகள் செழிக்கும்.

வாழ்க்கை துன்பமயமானது என்ற நினைப்பை அகற்றும்படி அறிவுறுத்துகிறார் அவர்.

'துன்பமே யியற்கை யெனும்
சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்'

இந்நிலை பெறுவதற்கு மனித மனதில் உறைந்து கிடக்கும் ஆசையும், அச்சமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பொய்யை அழித்தாக வேண்டும் என்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

நாடு வளம் பெறுவதற்கு தனிமனிதர் வாழ்வு செம்மையுற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் சில கடமைகளை கைக்கொள்ள வேண்டும். (கடமையாவன: தன்னைக் கட்டுதல்; பிறர் துயர் தீர்த்தல்; பிறர் நலம் வேண்டுதல்) இவ்வகையில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகளை பாரதியின் கவிதைகள் நன்கு சுட்டுகின்றன. அவர் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறுவது --

'ஓய்ந்து சோம்பி இருக்காமல் உழைக்க வேண்டும். உண்மைகள் சொல்லி, ஊருக்கு நல்லது செய்ய வேண்டும். அறந்தன்னைக் காக்கும் திறனைப் போற்றி வளர்க்க வேண்டும்.'

'ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம்,
உண்மைகள் சொல்வோம், பல வண்மைகள் செய்வோம்' என்றும்

'இன்னல்கள் வந்துற்றிடும் போது அதற்கு அஞ்சோம்'

மனித நலனுக்காகவும், மனிதகுல வளர்ச்சிக்காகவும் இவை வேண்டும் என்று பாரதியார் கோருகிறார்.

'மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்'

நல்வாழ்வு வாழவும், நல்ல காரியங்கள் செய்து முடிக்கவும், 'அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனி அரசாணை, உண்மை மீது பற்றுதல் தேவை' என்று மகாகவி மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

மனிதரிடம் இவை இல்லாததனால்தான் சமூக வாழ்வில் சீர்கேடுகளும் சிதைவுகளும், நாட்டின் நிலையில் குழப்பங்களும் சீரழிவுகளும் மணிடிப் பெருகுகின்றன.

பாரதியின் கருத்துக்களை உணர்ந்து, பாரதி வழியைப் பின்பற்றுகிறவர்கள் அதிகம் அதிகமாகத் தோன்ற வேண்டும்.

LOVE THINE ENEMY - பகைவனுக் கருள்வாய்



LOVE THINE ENEMY
(September, 22, 1915)


Love thine enemy, heart of mine, Oh!
Love thine enemy.


Hast thou not seen the shining flame
Amidst the darkening smoke?
In foeman's soul lives Krishna, whom
As Love the wise invoke.


Oft we have preached to men that God
In all that is doth shine
Why, then, my heart, 'tis God that stands
Arrayed as foemen's line.


Dost know that limpid pearls are found
Within the oyster vile?
Hast seen on dunghill, too, sometimes
The starry blossom smile?


The heart that fans its wrath, shall it
The Inner Peace possess?
The honey poison-mixed, shall it
Be wholesome nevertheless?


Shall we who strive for Life and Growth,
Lend thought to Sad Decay?
'Thine evil thoughts recoil on thee',
So do the wise ones say.


When Arjun fought, 'twas Krishna whom
He faced disguised as foes;
'Twas Krishna, too, that drove his car
In charioteering pose.


Strike not the tiger threatening thee,
But love it, straight and true;
The Mother of All hath donned that garb,
Salute her there, there, too.


Love thine enemy, heart of mine, Oh!
Love thine enemy.

இந்த ஆங்கில பாடலின் பொருள் நமக்கு மிகவும் தெரிந்த தமிழ்ப் பாட்டொன்றை நினைவு படுத்துகிறதா? அது இதுதானா? படித்துப் பாருங்கள். பாரதியே ஆங்கிலத்தில் அப்படியும், தமிழில் இப்படியும் பாடியிருக்கிறான்.

பகைவனுக்கு அருள்வாய்

பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்.

புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியில் கண்டோமே - நன்னெஞ்சே!
பூமியில் கண்டோமே.
பகை நடுவினில் அன்புரு வான நம்
பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தி யறியாயோ? - நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ? - நன்னெஞ்சே!

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ - நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? - நன்னெஞ்சே!

வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ? - நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரம் கேளாயோ? - நன்னெஞ்சே!

போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவன் தானுமவன் - நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ? - நன்னெஞ்சே!

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் - நன்னெஞ்சே!



LAKSHMI (The Goddess of Wealth)
An Affirmation

Come, let us affirm the Energy of Vishnu, the Jewel of the Crimson Flower, and end this want,
Where the mind ever struggles in the fumes of paltriness,
And Reason so faints that the noblest truths do but vex her
We can endure this no more.

So let us take refuge in the feet of the Mother, Lakshmi
The discourtesies of the low, the kinship with those who have failed;
The extinction of endeavours like lamps that are drowned in a well;
The denial of fruits even when the seven seas are crossed;
To such things does want subject us, this worst of Earth's tyrannies;
Down with it.

She is born of the inner Ocean of Milk;
She is sweet like the nectar of Heaven, twin-born with here
And her shining feet repose aptly on lotus petals,
Multiple riches she holds in her hands, which are four, the Goddess whose eyes are gleaming azure;
Ruddy her form and verdant is her love,
Seated beside Love, in Heaven, on the bosom of Vishnu Himself, on the Earth her dwellings are many.

We find her revealed
In the festooned halls of marriage;
Amind flocks, and in jewelled palaces;
In the hero's arm, in the sweating toil of labour,
And, ay! on the crown of knowledge,
Extending the light of her bounties.

Come, let us sing her praises, bless her feet, and climb the heights of power;
Behold her in gold and in gems, in flower and incense;
In the lamp and the virgin's smile;
In luxuriant woodlands, groves and fields,
In the Will that dares,
And in royal lineaments.

And firm let us seat her in our minds and speech,
Her who is revealed
In underground mines,
And the slopes of the hills, ad depths of the seas,
In the righteous sacrifice;
In fame, and in talent, and novelty;
In statue and portraint, in song and in dance.

Dedicate unto her grace all knowledge that you have;
Attain to her splendours, and vanquish dire want;
Rise high in the world by joyous affirmation of Lakshmi who is revealed
In conquering armies and the traffic of the far-sighted.
In self-control, and ay! in the harmonious lays of her poet votaries.

Come, let us affirm the Energy of Vishnu, the Jewel of the Crimson Flower!

திருமகளைச் சரண் புகுதல்

மாதவன் சக்தியினைச் - செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்
போதுமிவ் வறுமையெலாம் - எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும் - உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை - அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம்.

கீழ்களின் அவமதிப்பும் - தொழில்
கெட்டவ ரிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப்போல் - செய்யும்
முயற்சியெல் லாங்கெட்டு முடிவதுவிம்
ஏழ்கட லோடியுமோர் - பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்
வீழ்கைக்கொடு நோய்தான் - வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ?

பாற்கட லிடைப் பிறேஅந்தான் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்.

நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும் - உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்.

பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் உயர்'
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.

வெற்றிகொள் படையினிலும் - பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் - அல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்,
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்,
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
கருணைநல் லொளி பெறக் கலிதவிர்ப்போம்.

Friday, August 26, 2011


 MAHA KAVI  BHARATHIYAR’S  ENGLISH ESSAYS  &  POEMS.


Have you read the english writings of Mahakavi Bharathi? If not, please go through a small example, an article written by him in English. About his writings Navalar S.Somasundara Bharathi, a close associate of Mahakavi from his childhood and later a Professor in Annamalai University writes as follows:--


“These contributions in English afford luminous proof of Bharathi’s candour of his perfervid humanitarian sympathies and of his highly emotional and spiritual ecstacies. His mysticism is not of the opaque hue. On the contrary, clarity and perspicacity are as much in evidence as reasoned faith and abiding Dharmic outlook on life enhance their value. His intense longing for the divine joy and faith in life eternal give a new charm to his writings in English, where, if we miss the racy radiant brilliance of his Tamil writings, we meet with more daring and a wider range of speculative thought, directly bearing upon the modern life of mankind, rare to be found to the same extent  in his Tamil writings. They reveal the inward workings of the poet’s mind in all its ramifications.”


With the above credentials, we now see one essay and one poem for sample and try to give more articles in the days to come:-
                                               
 “New Birth”


Ring all the temple bells. For India is born again.


Her new name is the one that she had long, long ago – the Bharata-land. Great is her thirst for new things. But, after all, the new things are really older than the old. The world is a cycle.


Ring all the temple bells. The re-born Mother has begun to speak, to sing and to dance. She plays, the infant Devi, daughter of old Himalaya and the pre-destined bride of Mahadeva, the Great God; and her play is the working of miracles. Her speech and her song send a thrill of joy into the core of the world.


Ring all the temple bells. The baby mother opens her Veda and reads. The mighty chantings of her ancient seers, intoxicated with love and illumined by the knowing of the Eternal, those old songs of sacrifice and immortality – she reads them greedily once again; and once again, she understands them rightly. For she has met her Guru, Maha Deva himself.


Oh, ring all the temple bells. Make feasts and festivals. The Mother is gaining secular knowledge. She is learning arts, sciences, trades. Behold her excelling her astonished teachers in all things. Behold how she teaches under the pretence of being taught.


Oh, ring, ring, ring all the temple bells. Make feasts and festivals. Pour out songs of praise and thanksgiving to the high Heavens. Proclaim universal joy. For the Mother has realised her destiny. She has met the Great Divine – as her Lover.





                                                      PEACE

                          (Written during Christmas 1916)

My heart loves Peace.
But once I fought against God. I raised my head like a tower.
My arms were of steel, of fire.
My pride was great, for folly hath pride.
And I hurt the weak for pleasure.
I preached that woman was a slave.
For I knew brother man was the same.
I cast small stones at birds, for joy of breaking wings.
I deemed it no stealth to steal from the shrine.
For I deemed that this God was but stone.
But no, but no.
This God is real, for He smote at pride.
And the proverb says, “The fear of God is the beginning of wisdom”.

மகாகவியின் 90ஆவது நினைவு நாள்

                                                                            பாரதி
பாரதி விழா

அருமை பாரதி அன்பர்களே!

வருகிற 11-9-2011 ஞாயிறன்று மகாகவியின் 90ஆவது நினைவு நாள். அன்று திருவையாறு சரஸ்வதி அம்பாள் பள்ளியில் நமது பாரதி இயக்கத்தின் சார்பில் ஓர் கருத்தரங்கம் நடைபெறவிருக்கிறது. அதில் பாரதி அன்பர்கள், கல்லூரி மாணவர்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கவிருக்கிறார்கள். திருவையாறு இசைக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் பாரதி பாடலிசை வழங்குகிறார்கள்.  1956இல் சென்னை பாரதி சங்கத்தில் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரையினை இங்கு படிக்கத் தருகின்றோம். எந்தக் காலத்துக்கும் ஏற்ற உரை அது. படியுங்கள். நன்றி.

இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம் - திருவையாறு பாரதி இயக்கம்.
=============

(1956 செப்டம்பர் 11 சென்னை பாரதி சங்கத்தின் சார்பில் சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் நடைபெற்ற பாரதியார் விழாவில் தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரை - நன்றி "பாரதி சங்கம்", சென்னை)

 நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை

அன்பர்களே!

வணக்கம். அமரனாகி விட்டதால் கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் நம்முடைய கருத்தில் நின்று காட்சியளிக்கும் தேசிய மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு நாமனைவரும் முதலில் அஞ்சலி செய்வோம். பாரதியை நாம் மறந்து விடாமல், அவர் பாடித் தந்த அறவொழுக்கங்களை வாழ்க்கையில் மேற்கொள்ள நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கவே இந்த பாரதி சங்கத்தை ஏற்படுத்தித் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் அரும்பெரும் சேவைகள் செய்து அமரராகிவிட்ட 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம்.

இனி, பாரதிப் புலவனை நினைவிற் கொள்ளுவோம். பாரதி எதற்காகத் தோன்றினார்? என்ன செய்தார்? அவர் பாடித்தந்த பாட்டுகளின் குறிக்கோள் என்ன? இப்போதுள்ள சூழ்நிலையில் அவருடைய பாடல்கள் நமக்கு எவ்வளவு பயனளிக்கக் கூடியவை என்பனவற்றைச் சிறிது சிந்தனை செய்வோம்.

அடிமைத் தனத்தால் நமக்குள் வளர்ந்திருந்த அன்னிய மோகங்களால் மங்கிக் கிடந்த தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி தந்தவன் பாரதிப் புலவன். தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்ப் பண்புகளின் நன்மைகளையும் முற்றிலும் மறந்து கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பிப் புத்துயிர் கொடுத்துப் பழந்தமிழில் நிறைந்து கிடக்கும் நல்லறிவுகளுக்குப் புது மெருகு கொடுத்தவன் பாரதிப் புலவன். தெய்வ நம்பிக்கைக்கும் தினசரி வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேசப்பட்டு வந்த திண்ணை வேதாந்தத்தைத் திணறச் செய்தவன் பாரதிப் புலவன். தெய்வத்தைக் காணவேண்டுமானால் இல்வாழ்க்கையை வெறுக்க வேண்டும் என்றும், மனைவியையும், மக்களையும் மறக்க வேண்டும் என்றும், சுக போகங்களைத் துறக்க வேண்டும் என்றும் பொது அறிவாகப் போதிப்பது தமிழறிவுக்குப் பொருந்தாது என்பதைச் சொல்லிலும் பாட்டிலும் வாழ்க்கையிலும் வற்புறுத்திக் காட்டியவன் பாரதிப் புலவன்.

ஆங்கில ஆட்சியின் அடக்கு முறையின் காரணமாக மிகத் தீவிரமுள்ள தேசபக்தரான பாரதி, நிச்சயமான வருவாய்க்கு வழியில்லாமல் புதுச்சேரியில் புகுந்திருக்க நேர்ந்தது. அங்கே வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் இல்லாமல் பல நாள் பட்டினி கிடக்கவும் நேரிட்டது. அப்படியிருந்தும் அவர் எழுதியதும் பாடியதும் என்ன? வாழ்க்கையை வெறுத்தாரா? மனைவி மக்களைத் துறந்தாரா? உலகத்தை நிந்தித்தாரா? இல்லை. தனக்கும் தன்னைப் போலவே எல்லா மனிதர்களுக்கும் நல்ல உணவு, நல்ல உடை, நல்ல இருப்பிடம் முதலியன கிடைக்க வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிப் பாடினார். எல்லா மக்களும் இல்லறத்தைச் சரியாக நடத்தி உலக இன்பங்களையெல்லாம் நல்ல முறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் அப்படி அனுபவிக்கும் போதே, அதற்கென்று வேறு முயற்சியில்லாமல் எல்லாச் செயல்களிலும், எல்லாப் பொருள்களிலும் ஈசனை உணர வேண்டும் என்றே பாடினார். மொத்தத்தில் தமிழ் நாட்டின் தேசியப் பரம்பரையான நல்ல பண்புகளுக்கெல்லாம் புதுவாழ்வு காட்டியவன் பாரதி புலவன்.

மேலே சொன்ன குறிப்புகளின் உண்மையை பாரதியின் பாடல்களில் பார்ப்போம்.

தமிழ்மொழி

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்" - என்கிறார்.

"தெள்ளுற்றத் தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்" - என்கிறார்.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா" - என்கிறார்.

தமிழ் மொழியைப் போன்ற இனிய மொழி உலகத்தில் எங்குமில்லை என்று சொல்லுகிறாரே! தெளிவான அறிவு தரும் தமிழ் மொழி என்ற அமிர்தத்தின் சாரத்தைக் கண்டவர்கள் இந்த உலகத்திலேயே தேவலோகத்தின் சிறப்புகளை அடைந்தவர்களாவார்கள் என்கிறாரே! மொழிகளிலெல்லாம் உயர்ந்த மொழி தமிழ் மொழிதான், அதைத் தொழுது படிக்க வேண்டும் என்று சொல்லுகிறாரே! தமிழ் தம்முடைய தாய் மொழி என்பதற்காக மொழி வெறியினால் இப்படிச் சொல்லுகிறாரா?

பாரதியார் தமிழை மட்டும் படித்தறிந்த தனித்தமிழ்ப் பண்டிதரல்லர். வடமொழியிலும் ஆழ்ந்த படிப்புள்ளவர். அதற்கென்றே காசிக்குச் சென்று வடமொழிக் கலாசாலையில் சேர்ந்து முறைப்படி வடமொழியைக் கற்றுணர்ந்தார். அத்துடன் ஆங்கில மொழியிலும் நல்ல பயிற்சியுடையவர். மேலும் ப்ரெஞ்சு, இந்தி, வங்காளி முதலிய பிற மொழிகளையும் விரும்பிக் கற்றவர். மற்ற மொழிகளில் எவ்வளவு தேர்ச்சியுடையவர் என்பதைச் சொல்ல முடியாதென்றாலும் வடமொழியிலும், ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சியுள்ளவர். ஆங்கிலத்தையும் விலக்கி விட்டாலும் வடமொழியில் ஆழ்ந்த கல்வியுள்ளவர் என்பதில் ஐயமில்லை. வடமொழி மிகச் சிறந்த இலக்கியங்கள் உள்ளது. உலகத்துக்கெல்லாம் மெய்ஞ்ஞான ஒளி கொடுப்பது வடமொழி. அதைப் பாரதியார் அறியாதவர் அல்லர். அப்படியிருக்க, அந்த வடமொழியையும் சேர்த்து "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்று அவ்வளவு அழுத்தமாகச் சொல்லுகிறாரே! ஏன்? வடமொழியைக் குறைத்துப் பேசவா? அல்லவே அல்ல. பின் ஏன்? வடமொழியிலுள்ள வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை முதலிய தலைசிறந்த இலக்கியங்களிலுள்ள எல்லா நல்லறிவுகளும் பாரதி தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே தமிழில் வடித்துக் கொடுக்கப்பட்டு விட்டன. வடமொழியிலுள்ள எல்லா இலக்கியங்களும் மொழிபெயர்ப்பாகவோ, வழி நூலாகவோ, சார்பு நூலாகவோ ஏற்கனவே தமிழில் இருந்ததோடு தமிழில் முதனூல்களாகிய ஐம்பெருங் காப்பியங்களும், சங்க நூல்களும், திருக்குறளும், கம்பன் இயற்றிய அற்புதக் காவியமும் இருப்பதைக் கண்டார் பாரதி. கம்பனுடைய இராமாயணமும், திருவள்ளுவருடைய திருக்குறளும் வடமொழி இலக்கியங்களிலுள்ள அறிவைத் தெள்ளி எடுத்துச் சேர்க்கப்பட்ட இலக்கியங்கள். அதனால்தான் பாரதி வடமொழியையும் உள்ளடக்கித் "தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார்.

இந்தக் கருத்தை வலியுறுத்த "யாமறிந்த புலவரிலே, கம்பனைப் போல், வள்ளூவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை" என்கிறார்.

கம்பருடைய காவியம் இராம கதையைச் சொல்லுவதுதான் என்றாலும் வடமொழியிலுள்ள மெய்ஞ்ஞான தத்துவங்களை மிகவும் தெளிவான முறையில் விளக்கி நிற்கும் அறிவுக் களஞ்சியம். திருக்குறலோ உலகத்திலுள்ள எல்லா மனிதர்களுக்கும் எக்காலத்துக்கும் உதவக்கூடிய ஒப்பரிய அறநூல். அதுவும் வடமொழியிலிருந்து தெள்ளி எடுக்கப்பட்ட அறிவுகள் அடங்கியது. சிலப்பதிகாரமும் வடமொழிக் காவியங்களை அங்கங்கே சுட்டிக்காட்டி மிகச் சிறந்த நீதிகளைப் புகட்டி நிற்பது. அதனால்தான் பாரதியார் "உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும், "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு" என்றும் பாடினார். தெள்ளிய நல்லறிவுகளைப் புகட்டி நிற்கும் இந்தத் தமிழ் நூல்களைப் படித்து அவற்றிலுள்ள சாரத்தை உணர்ந்தால் போதும் என்ற கருத்தில்தான்

"தெள்ளுற்றத் தமிழ் அமுதின் சுவை கண்டார்
இங்கு அமரர் சிறப்பு கண்டார்" என்று பாடினார்.

ஆனால் இப்படித் தமிழ் அமுதின் சுவை கண்டால் மட்டும் போதுமா? தமிழ் இலக்கியங்களில் விஞ்ஞான அறிவுகளைத் தரக்கூடிய நூல்கள் இல்லையே. வாழ்க்கைக்கு வசதிகள் உண்டாக்கி இன்பமூட்டக் கூடிய எந்திர தந்திரங்களை இயற்றக்கூடிய அறிவு சொல்லும் நூல்கள் இல்லையே என்ற கேள்விகள் பிறக்கலாம். அவை மிகவும் நியாயமான கேள்விகளே. ஆனால் எந்திர தந்திரங்களெல்லாம் உண்டாக்கக் கூடிய விஞ்ஞானம் உடலுக்கு மட்டும் இன்பந்தரக்கூடிய கருவிகளைக்தான் தரமுடியுமே யல்லாமல் அறிவுக்கு அமைதி தரக்கூடிய கருத்துக்களைக் கொடுக்க முடியாது. மெய்ஞான உணர்ச்சிதான் மக்களுக்குள் அன்பைப் பெருக்கிச் சமரசத்தை நினைப்பூட்டும். அதுதான் சமுதாயத்தில் சமாதானம் நிலவச் செய்து, சந்தோஷம் தரக்கூடியது. விஞ்ஞானம் இல்லாமல் மனித சமுதாயம் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் வாழமுடியும். ஆனால் மெய்ஞான உணர்ச்சி இல்லாமல் சமுதாயத்தில் சமாதானமும் இருக்க முடியாது; சந்தோஷமும் இருக்க முடியாது. அதனால்தான் பாரதியார் தமிழிலக்கியங்கலில் பொதிந்துள்ள மெய்ஞ்ஞான அறிவுக்கு முதலிடம் கொடுத்தார். அதைத்தான் "தெள்ளுற்ற தமிழ் அமுது? என்றார்.
                                       One of the Founders of Bharathi Sangam T.K.Shanmugham

ஆனாலும் பாரதியார் விஞ்ஞான அறிவைப் புறக்கணித்து விடவில்லை. தமிழ் மொழியில் விஞ்ஞான நூல்கள் அனைத்தும் இருக்க வேண்டுமென்று ஆர்வம் கொள்ளத் தூண்டுகின்றார். அதைப் பார்ப்போம்!

தமிழ்த்தாய் தன்னுடைய மக்களைப் பார்த்துச் சொல்லுகின்றாள்: "மக்களே! என்னை ஆதி சிவன் பெற்றெடுத்தான். அகத்தியன் என்ற வேதியன் எனக்கு இலக்கணம் கற்பித்தான். சேர, சோழ, பாண்டியராகிய மூவேந்தரும் என்னை மிகவும் அன்போடு வளர்த்தார்கள். மிகச் சிறந்த மொழியாகிய வடமொழிக்குச் சமானமாக வாழ்ந்தேன். தேனைப் போன்ற இனிமையும், தீயைப் போன்ற தூய்மையும், காற்றைப் போன்ற வேகமும், வான வெளியைப் போன்ற விரிந்த நோக்கமும் உள்ள காவியங்களைத் தெள்ளிய அறிவுடைய பல புலவர்கள் செய்து கொடுத்தார்கள். பல சாத்திரங்களையும் செய்தார்கள். அதனால் உலகமெல்லாம் என்னைப் புகழும்படியாக வாழ்ந்தேன். என்னுடைய இளம் பருவத்தில் என் காதில் விழுந்த எத்தனையோ மொழிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. ஆண்டவன் அருளினாலும், மிகச் சிறந்த காவியங்களையும் சாத்திரங்களையும் இயற்றிய அந்தப் புலவர்களின் தவ வலிமையினாலும் நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் குறைவின்று வாழ்ந்து வருகிறேன். ஆனால் ....

"இன்று ஒரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன் எனது ஆருயிர் மக்காள்!
கொன்றிடல் போல் ஒரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை;
மெல்லத் தமிழ் இனிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்.

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்தவசை எனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

தந்தை அருள் வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும் பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

இதனால், மெய்ஞ்ஞான அறிவையே முதன்மையாகக் கொண்டு, விஞ்ஞான வசதிகளையும் சேர்த்துக் கொண்டு, நல் வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது பாரதி நமக்குத் தரும் படிப்பினை.

தமிழர் வாழ்க்கை

'எத்திசையில் எம்மொழியில் எவர்வாய்ச் சொல்லில்
எப்படியாய் வரும் கதைகள் எதுவானாலும்
சத்தியத்தின் வழி காட்டும் அறிவையெல்லாம்
தனதாக்கிக் கலை வளர்த்த தமிழன்'

என்றபடி, வடமொழியிலுள்ள நல்லறிவுகளை யெல்லாம் தமிழர்கள் தம்முடைய இலக்கியங்களில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், வாழ்க்கையின், சோக்கத்தில் வடமொழி வசக்குக்கும் தமிழ் வழக்குக்கும் சில வேற்றுமைகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது வீடு பெறும் நம்பிக்கைக்கான மார்க்கம். வடமொழி வழக்குப் பிரகாரம் கடவுளை உணர்வதற்கு ஒவ்வொரு மனிதனும் மனைவி மக்களைத் துறந்து, வீட்டை விட்டுக் காட்டுக்குச் சென்று தவம் புரியத்தான் வேண்டும் என்பது. ஆனால் முக்தி பெறுவதற்கு மனைவி மக்களைத் துறந்து வனத்துக்குப் போக வேண்டியதில்லை; இல்லறத்திலேயே வீடு பெறலாம் என்பது தமிழ் வழக்கு.

இது மட்டுமன்றி துறவறத்தைக் காட்டிலும் இல்லறந்தான் சிறப்பும் பொறுப்பும் உள்ளது; அதனால் மக்கள் மேற்கொள்ள வேண்டியது இல்லறம்தான் என்பது தமிழ் மரபு. தமிழர்கள் துறவறத்தை அவமதிப்பவர்களல்லர். துறவிகளைத் தமிழர்கள் வணங்கிப் போற்றியே வந்திருக்கிறார்கல். ஆனாலும் இல்லறம்தான் மனிதருக்கு இயல்பானதும் சிறப்புடையதும் என்பதே தமிழரின் கொள்கை. இதைத் திருக்குறல் உறுதிப் படுத்துகிறது. அறம், பொருள், இன்பம், வீடு (தர்ம, அர்த்த, காம, மோக்ஷம்) என்ற நான்கு உறுதிப் பொருள்களில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை மட்டும் விரித்துச் சொல்லி "வீடு" என்பதைத் திருவள்ளுவர் சொல்லாமல் விட்டுவிட்டதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று ஊகிக்கவும் இடமிருக்கிறது.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று."

என்கிறார் திருவள்ளுவர். இதன் பொருள், "மனிதருக்கு தர்மம் என்று சொல்லப்பட்டதே இல்லற தர்மம்தான். ஆனாலும் இல்லறத்தானுக்குப் பிறன் ஆகிய துறவறத்தானை இகழாமல் இருப்பது நல்லது" என்பது.

"ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து."

என்கிறார். இதன் பொருள், "நடத்த வேண்டிய ஒழுங்குடன் நடத்தி, தருமங்களில் தவறாமல் செய்யப் படுகிற குடும்ப வாழ்க்கை, துறவறம் பூண்டு தவம் செய்கிறவர்களைக் காட்டிலும் பொறுப்பும், சகிப்புத் தன்மையும் உள்ளது" என்பது. மேலும்

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஓய்ப் பெறுவது எவன்?"

என்கிறார். இதன் பொருள், "தர்ம மார்க்கத்தில் இல் வாழ்க்கையை நடத்தினால் துறவு பூண்டு வனத்துக்குச் சென்று அடையக் கூடியது என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை" என்பது. கடைசியாக

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"

என்கிறார். இதன் பொருள், "உலகத்தில் இல்லறம் நடத்தி வாழ வேண்டிய முறையில் வாழ்கின்றவன், அவன் வேறு முயற்சி ஒன்றும் செய்யாமலேயே வானத்திலுள்ள தெய்வத்தோடு இரண்டறக் கலந்துவிடும்படி சேர்த்து விடப்படுவான்" என்பது. அதாவது வீடு பெறுவான் என்பது கருத்து.

இந்தக் கருத்துகலைப் பின்பற்றியேதான் பாரதியார், உலகத்தைப் பொய் என்றும் மனைவி மக்களைத் துறந்தால்தான் தெய்வத்தை அணுகலாம் என்றும் சொல்லப்படுவதைக் கண்டித்து, அறம், பொருள், இன்பத்துடன் இல்லறம் நடத்த வேண்டியதே மக்களுடைய கடமை என்று உலகத்தில் காணப்படுகிற பொருள்களை நோக்கி அவர் பாடியுள்ள பாட்டிற்கு முன்னுரையாக வசன நடையில் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறார். அது என்னவென்றால்?

"இந்த உலகமே பொய்" என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. சந்நியாசிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும், அதைப் பற்றி இந்த நிமிஷம் எனக்குள் வருத்தமில்லை. குடும்பத்தில் இருப்போருக்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலைபோல நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக் கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன், குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?

வீடு கட்டிக் குடித்தனம் பண்ணுவோருக்கு மேற்படி சாஸ்திரம் பயன்படாது. நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, சோயில்லாமை, அறிவு, செல்வம் என்ற நான்கும். இவற்றைத் தரும்படி தம்தம் குலதெய்வங்களை மன்றாடிக் கேட்க வேண்டும். எல்லா தெய்வங்களும் ஒன்று. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிலும் தெய்வ ஒளி காண வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால், நான்காம் நிலையாகிய வீடு (மோக்ஷம்) தானே கிடைக்கும்" -- இது பாரதியின் வாக்கு. இது மேலே சொல்லப்பட்ட குறள்களிலுள்ள கருத்தை முற்றிலும் ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் மக்கள் மறந்து விட்டிருந்த பரம்பரைப் பண்புகளை நினைப்பூட்டி நம்மைத் தட்டி எழுப்பினவர் பாரதி என்று ஆரம்பத்தில் சொன்னது இதனால்தான்.

இப்படித் தமிழ் மொழிக்கும் தமிழ்ப் பண்புகளுக்கும் உள்ள தனிச் சிறப்புகளை மிகுந்த ஆர்வத்தோடு பாடியிருக்கிறார் என்றாலும் வடமொழியையும் அது தந்த மெய்ஞ்ஞானத்தையும் தமிழருக்கும் சொந்தமானவைகளாகவே சொல்லுகின்றார். இந்திய நாடு முழுவதும் ஒரே கலாசாரமுள்ள ஒரு குடும்பம் என்றே போற்றுகின்றார். தமிழ் நாட்டையும், தமிழையும் தனிப்படப் போற்றும் போதும், இந்தியா முழுவதும் ஒன்று என்பதை அவர் மறந்து விடுவதில்லை. இதை அவருடைய பாடல்களில் பட இடங்கலில் பார்க்கலாம். உதாரணம் காட்ட "பாப்பா பாட்டு" ஒன்று போதும்.

"தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தின் இனியதடி பாப்பா - நம்
ஆன்றொர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.
வேதம் உடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

இதில் "வேதம் உடையது இந்த நாடு" என்பதால் வடமொழி மெய்ஞ்ஞானம் நம்முடையது என்கிறார். இமயம் முதல் குமரி முனை வரைக்கும் உள்ளது நம்முடைய நாடு என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாகத் "தமிழ் திருநாட்டைப் பெற்ற தாய் என்று கும்பிடச்" சொன்ன பாரதி, "ஹிந்துஸ்தானத்தை தெய்வமென்று" கும்பிடச் சொல்கிறார். இந்த உபமானங்களின் சிறப்பை ஊன்றிப் பார்த்து உட்மொருளை உணர வேண்டும். இன வெறியாலும் மொழி வெறியாலும் இந்திய மக்களின் ஒற்றுமை சீரழிக்கப்பட்டு வரும் இந்தச் சமயத்தில் இது மிகவும் சிந்திக்கத் தக்கது. பாரதியின் இந்தப் பாடல்களுக்கு மதிப்புக் கொடுத்ததே போல், இந்த மாகாணப் பிரிவினையில் தமிழ் மக்களுக்குக் குறை இருந்தும், அவர்கள் இன வெறியோ மொழி வெறியோ இல்லாமலிருப்பது மிகவும் பெருமைக்குரியது.
                                            Founder of Chennai Bharathi Sangam Kalki Krishnamurthy

   மாபெரும் கவிஞன்

பாரதியை 'தேசியக் கவிஞர்' என்றும் அவர் பாடிய கவிகளைத் 'தேசிய கீதம்' என்றும் சொல்லுவது வழக்கம். அப்படிச் சொல்லுகிறவர்கள் பெரும்பாலோரும், அவர் இந்திய நாடு அன்னிய நாட்டிற்கு அடிமைப் பட்டிருப்பதினின்றும் விடுதலை யடைய வேண்டும் என்பதற்காகப் பாடிய தேச பக்திப் பாட்டுகளை மனதிற் கொண்டுதான் சொல்லுகிறார்கள். ஆம்! அவர் அதி தீவிரமுள்ள தேச பக்தர்தாம். அடிமை வாழ்வு நீங்கி சுதந்திரம் அடைய 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்று ஆவேசத்துடன் பல தேசபக்திப் பாடல்களை இயற்றி அவற்றைத் தெருத் தெருவாகத் தாமே பாடிப் பஜனை செய்தவர்தாம். அவர் பாடல்களைக் கேட்டு விடுதலை வேட்கை கொண்ட தமிழர்கள் எண்ணிறந்தவர்கள். தமிழ்நாடு அவரை ஒரு மிகச் சிறந்த கவிஞர் என்று மதிக்கச் செய்தது அந்த தேசபக்திப் பாடல்கள் தாம். அந்தக் காலத்தில் அமிதவாதி என்று அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர் பெருமானுடைய கட்சியைச் சேர்ந்து, கனல் பறக்கும் தேச பக்திப் பாட்டுகளைப் பாடித் தமிழ் நாட்டுத் தேச பக்தர்களுக்கு இணையற்ற வீரராக பாரதி விளங்கினார் என்பதும் உண்மைதான். அவருடைய தேச பக்திப் பாடல்களால் தூண்டப் பெற்று விடுதலைக்குத் துடிதுடித்த இளைஞர்கள் ஏராளம். இளைஞர்கள் மட்டுந்தானா?

"படித்தறியா ஏழைக் கிழவனேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பானாகில்
துடித் தெழுந்து ஹன் மெலிந்த தோளைக் கொட்டித்
தொளைமிகுந்த கந்தல் உடை சுருக்கிக் கட்டி
எடுத்தெறிய வேண்டும் இந்த அடிமை வாழ்வை
இப்பொழுதே இக்கணமே என்றென்று ஆர்த்து
அடித்துரைத்து ஆவேசம் கொள்வான் என்றால்
அப்பாட்டின் மகிமை சொல்ல யாரே வல்லார்?"

என்றபடி, படிப்பில்லாத பாமரக் கிழவர்களையும் அவருடைய பாட்டுக்கள் தேசபக்தி ஆவேசம் கொள்ளச் செய்தன என்பது மிகையல்ல. பாரதியின் பாடல்களில் திளைத்துத் தேச பக்தியில் தீவிரம் அடைந்திருந்ததால் தான் காந்தியடிகளுடைய போராட்டத்தில் கணக்கற்ற தமிழ் மக்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் உண்மையே.

ஆனாலும் பாரதி வெறும் தேச்பக்திப் பாட்டுகளைப் பாடிவிட்ட புலவர் அல்லர். அவர் தேசபக்திப் பாடல்களைப் பாடி சுதந்திர ஆர்வத்தைத் தூண்டிவிட நேரிட்டதும் வெறும் சந்தர்ப்பச் சூழ்நிலையே. அவர் பாடிய தேசபக்திப் பாடல்கள் மற்றப் பாடல்களைவிட எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவைதாம். அவற்றிலும் வெறும் அரசியல் சுதந்திரத்தை மட்டும் குறிக்கின்ற பாட்டுகள் வெகு சிலவே. அந்தச் சிலவும் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் உதவக் கூடியனவேயன்றி எக்காலத்துக்கும் எல்லாருக்கும் உதவக் கூடியவையல்ல.

பாரதி வெறும் தேசபக்திப் பாடல்களைப் பாடவந்த புலவனல்ல. அவர் மனித சமுதாயத்துக்கு எப்போதும் உதவக் கூடிய நித்தியமான சத்திய ஞானத்தையும் அதைச் சேர்ந்த அறவொழுக்கங்களையும் பாடிய மகா கவிஞர். அவருடைய பாடல்களில் பெரும் பகுதியும் மெய்ஞான போதனை. அவர் கவிதை சான்றோர் கவிதை. சான்றோர் கவிதை என்றால் என்ன? அதற்குக் கல்வியிற் சிறந்த கம்பர் சொல்லும் இலக்கணம் என்னவென்றால்....

'புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி
அவிசுகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவியுறத் தெளிந்து தண் என்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி' எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.

பாரதியின் கவி வெறும் தேசபக்திப் பாடல் அல்ல. அது புவியினுக்கு அணியாய் விளங்கி மக்களுக்கு மெய்யறிவை நினைப்பூட்டிக் கொண்டிருக்கும் சான்றோர் கவி.

பயன்

பாரதியின் பாடல்களைப் படிப்பதனாலும் பாரதி விழாக் கொண்டாடுவதாலும் நாம் அடையக் கூடிய பயன் என்ன? பாரதியை வீரத்தைப் புகட்டிய புலவன் என்றும், போர்முரசு கொட்டிய புலவன் என்றும், அவரை பலாத்கார எண்ணங்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுகின்றவர்கள் உண்டு. அது முற்றிலும் தவறு. அப்படிப் பேசுவது எதைப் போலவென்றால் கிருஷ்ண பகவான் போதித்த பகவத் கீதை, கொலை செய்யத் தூண்டும் இலக்கியம் என்று சொல்வதை ஒக்கும்.

பாரதி வீரத்தைப் புகழ்ந்தார்; வெற்றியை விரும்பினார்; ஜெயபேரிகை கொட்டினார்; அச்சத்தை ஓட்டினார்; ஆண்மையை ஊட்டினார்; உண்மைதான். அதனாலென்ன? அவர் பலாத்காரத்தைச் செய்யும்படி எங்கே பாடியிருக்கிறார்? கொன்று விடுவேன் என்று சொன்னவனுக்கும் தானும் அப்படிக் கொல்ல முடியும் என்று கூடப் பதில் சொல்லவில்லையே! இதற்கு உதாரணம், ஆங்கிலேயன் ஒரு தேசபக்தனைப் பயமுறுத்துவதாக அவர் பாடிய பாடல்களில் கடைசி பாட்டாக


'சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவோர் உண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்'

என்பதாகப் பாடினார். இந்தப் பயமுறுத்தலுக்குப் பதிலாக தேசபக்தன் சொன்னதாக அவர் பாடியிருப்பதைப் பாருங்கள்.

'சதையைத் துண்டு துண்டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ? ஜீவன் - ஓயுமோ?
இதையத் துள்ளே இலங்கும் மகாபக்தி
ஏகுமோ? - நெஞ்சம் - வேகுமோ?

என்பது. இது வெறும் தேசபக்திப் பாட்டாகவா இருக்கிறது? நீ என் தேகத்தை என்ன வேண்டுமானாலும் செய்துகொள். என் ஆன்மாவையும் பக்தியையும் உன்னால் அழித்துவிட முடியாது என்ற பகவத் கீதை அறிவல்லவா இது.

பாரதியின் கொள்கை என்ன? அவர் போதிப்பது என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அவருடைய கொள்கை அவர் பாடியுள்ள எல்லாப் பாட்டுகலிலும் ஒரு மணியாரத்தின் மத்தியில் ஓடும் நூல்வடம் போல் இருக்கிறது. சுருக்கமாவும், மிகத் தெளிவாகவும் அவருடைய கொள்கையை அறிந்து கொள்ள

'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்
வயிரமுடைய நெஞ்சு வேண்டும் - இது
வாழும் முறைமையடி பாப்பா'

என்ற ஒரு பாட்டே போதும். ஜீவகாருண்யம், தெய்வ நம்பிக்கை, வைராக்கியம் என்ற மூன்றும் சேர்ந்த வாழ்க்கைதான் நல் வாழ்க்கை என்பது பாரதியின் கொள்கை. இந்த மூன்றுக்குள் மற்ற எல்லா அறங்களும் அடங்கும்.

இந்தக்கொள்கையில் திடமான நம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்திய பாரதி, தீவிரம் மிகுந்த தேச பக்தராகவும் இருந்தார். இந்தக் கொள்கைக்குப் பங்கமில்லாமல் தேசபக்தியைக் கொண்டு செலுத்தி, வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து எப்படி விடுதலை அடைவது? கொலை புரிவதோ கொள்கைக்கு விரோதம். கொள்கையையும் விட்டுவிட்டு ஆயுத பலத்தால் வெள்ளைக்காரனை வெளியேற்றலாம் என்பதற்கு, ஆங்கிலேயரை வெல்லக்கூடிய ஆயுத பலம் அடைவது அசாத்தியத்திலும் அசாத்தியம். வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார் பாரதி.

அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தி தமது 'ஒத்துழையாமை திட்டத்தை' வெளிப்படுத்தினார். உடனே பளிச்சென்று வழி துலங்கிவிட்டது பாரதிக்கு. சென்னைக்கு வந்திருந்த மகாத்மாவைத் தரிசித்து, ஒத்துழையாமை திட்டத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளப் பாரதி மகாத்மாவுடன் அளவளாவினார். ஒத்துழையாமை திட்டத்தில் தமக்கிருந்த சந்தேகங்கள் தீர்ந்து தெளிவு கொண்டார்.

உடனே அந்தத் திட்டத்தை வரவேற்றுக் காந்தியடிகளின் மீது பஞ்சகம் பாடினார். இந்தப் பஞ்சகமே பாரதியார் நமக்குச் சொன்ன நல்லறிவு. அவர் நெடுங் காலமாகப் பாடிவந்த பாட்டுக்களின் சாரமெல்லாம் சேர்ந்தது இந்தப் பஞ்சகம். அவருடைய கொள்கைக்கு முத்தாய்ப்பு இந்தப் பஞ்சகம்.

'வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வற்மை மிஞ்சி விடுதலைத் தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க!

அடிமை வாழ்வு அகன்று இந்நாட்டார் விடுதலை ஆர்ந்து செல்வம்
குடிமையில் உயர்வு, கல்வி, நானமும் கூடி ஓங்கிப்
படிமிசைத் தலைமை எய்தும்படிக் கொரு சூழ்ச்சி செய்தாய்;
முடிவிலாக் கீர்த்தி பெற்றாய் புவிக்குளே முதன்மை யுற்றாய்!

கொடிய வெம் நாகபாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தவன் என்கோ?
இடிமின்னல் காக்கும் குடைசெய்தான் என்கோ? என்சொலிப் புகழ்வது இங்கு உனையே?
விடிவிலாத் துன்பம் செயும் பராதீன வெம்பிணி அகற்றிடும் வண்ணம்
படிமிசை புதிதாச் சாலவும் எளிதாம்படிக்கொரு சூழ்ச்சி நீ படைத்தாய்!

தன்னுயிர் போலத் தனக்கு அழிவெண்ணும் பிறனுயிர் தன்னையும் கணித்தல்;
மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம் கடவுளின் மக்கள் என்றுணர்தல்;
இன்ன மெய்ஞானத் துணிவினை, மற்று ஆங்கு இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியல் அதனில் பிணைத்திடத் துணிந்தனை பெருமான்!

பெரும் கொலைவழியாம் போர்வழி இகழ்ந்தாய்; அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங் கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள் அறவழியொன்று நீ அறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் 'ஒத்துழையாமை' நெறியினால் இந்தியாவுக்கு
வரும்கதி கண்டு பகைத்திறம் மறந்து, வையகம் வாழ்க நல் அறத்தே!

கல்வியினாலும், கவிதையினாலும் நாம் அடைய வேண்டிய நல்லறிவுகள் பலவும் இந்தப் பாட்டுகளில் அடங்கியுள்ளன. கடைசிப் பாட்டு தீர்க்க தரிசனம் அமைந்தது. அதன் கருத்து: 'இது வரையிலும் எல்லா நாட்டவரும் தமக்குள் உண்டாகும் விவகாரங்களைத் தீர்த்துக் கொள்ள பெருங்கொலை வழியான ஆயுதப் போர்களைத்தான் அறிந்திருந்தார்கள். அந்த முறையை இகழ்ந்துவிட்டு, அதைக் காட்டினும் வலிமை மிகுந்ததும், தீமை இல்லாததுமான தர்ம மார்க்கத்தை நீதான் கண்டறிந்தாய். அதுதான் ஞானிகளும் உண்மையான தெய்வத் தொண்டர்களும் போற்றக் கூடிய மார்க்கம். அந்த மார்க்கம் நெருங்கிய பல நல்ல பயன்களைத் தரக்கூடியது. அந்த ஒத்துழையாமை மார்க்கத்தால் நிச்சயமாக இந்தியாவுக்கு வரப்போகிற சிறந்த நிலைமையினால் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவதை விட்டுவிட்டு, நேசமாக வாழ்வார்கள்' என்பது.

காந்திய வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததைக் கண்டு, மற்ற நாடுகளெல்லாம் காந்தியத்தைப் புகழ்ந்து இந்தியாவுக்குப் பெரும் மதிப்பளிக்கிறார்கள். அந்தக் காந்திய முறையில் ஜவஹர்லால் நேரு அவர்கள் கையாளும் அயல் நாட்டுக் கொள்கையினால் பல நாடுகளுக்குள் இந்த பகைமை குறைந்து வருவது கண்கூடு. அந்த நல்ல பலனைத்தான் தீர்க்கதரிசனம் போல பாரதி முன்னாலேயே பாடியிருக்கிறார்.

ஆதலால் பாரதியின் பாடல்களால் நாம் அடைய வேண்டிய பயன்கள் காந்தியத்தில் அடங்கியுள்ள தெய்வ நம்பிக்கையும், உயிர்களிடத்தில் அன்பும், சாந்தமும், சத்தியமும், அவற்றை வாழ்க்கையில் மேற்கொள்ள -- வயிரமுடைய நெஞ்சும் ஆகிய இவைகள் தாம். சுருங்கச் சொன்னால் காந்தியம்தான் மக்களுக்குச் சன்மார்க்கம் என்பதே பாரதி கடைசியாகப் பாடிச் சொன்ன படிப்பினையாகும். அதைப் பின்பற்றி வாழ்வோம்.

'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!'



















Tuesday, August 16, 2011

"தாமரை" பாரதி நூற்றாண்டு சிறப்பிதழ்


பாரெங்கும் புகழ் பரப்பிப் பல்லூழி வாழ்க!
("தாமரை" பாரதி நூற்றாண்டு சிறப்பிதழின் தலையங்கம் இது. தாமரைக்கு நன்றி தெரிவித்து இதனை வெளியிடுகிறோம்.)

"பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்!"
என்று பாடிச் சென்றான் பாரதி.

அவனது திருவாக்கு பொய்க்கவில்லை. அவன் அமரனாகி அறுபது (இப்போது 90) ஆண்டுகள் ஆன பிறகும், அவனது புகழ் இமயம் போல் வளர்ந்தோங்கி, எழுகடல்போல் பரந்து விரிந்து வருகிறது. அவனது பிறந்த தின நூற்றாண்டு விழா தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்லாது சோஷலிசத் தாயகமான சோவியத் பூமி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் பாரதியின் புகழுக்கும் பெருமைக்கும் ஏற்பட்ட தடை முடைகள் கொஞ்சமல்ல.

பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் அன்றைய அன்னிய ஆட்சி அவனது குரலை ஒடுக்கப் பல வழிகளிலும் முயன்றது; அவனது பாடல்களையும் பத்திரிகையையும் தடை செய்தது; அவனைச் சிறை செய்ய முற்பட்டது; பத்தாண்டுக் காலம் பாண்டிச்சேரியில் அடைந்து கிடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியது. எனினும் இவற்றையும் மீறி அவனது பாடல்கள் நமது விடுதலைப் போரில் நமக்குப் படைக்கலங்களாக உதவின. அன்றைய அடக்குமுறையையும் மீறி அவனது பாடல்கள் விடுதலை வேட்கை கொண்டோரின் நாவிலும் நரம்பிலும் குடிகொண்டன.

நாடு விடுதலையடைந்த பின்னரும் பாரதிக்குப் பல்வேறு எதிர்ப்புக்கள் இருந்தன. அவன் பண்டாரப்பாட்டுக்கள் பாடிய பாமரக் கவிஞன் தானே, மகாகவியா என்று பழிக்கத் துணிந்த பண்டிதர்களும் இருந்தனர். அவனைப் பார்ப்பனீயக்கவி என்று பழிதூற்ற முற்பட்ட பகுத்தறிவுச் சிங்கங்களும் இருந்தன. தேசம் விடுதலை பெற்றபின் பாரதியின் தேசியப் பாடல்களுக்கு வேலையில்லை என்று புரட்டு வாதம் செய்து, பாரதியை வேதாந்தச் சிமிழில் சிறை செய்யப் பாடுபட்ட வித்தகர்களும் இருந்தனர்.

ஆயினும் இத்தனை எதிர்ப்புக்களையும் வெற்றி கொண்டு, இன்று அவனது புகழ் அகிலமெல்லாம் கொண்டாடும் அளவுக்குக் கொடி கட்டிப் பறப்பதற்கு என்ன காரணம்?

பாரதி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான். அதிலும் நாம் இன்று அவனைப் போற்றுவதற்குக் காரணமான பாடல்களையெல்லாம் எழுதிக் குவித்த அவனது இலக்கியப் படைப்புக் காலம் 16 ஆண்டுகள் மட்டுமே. இந்தப் பதினாறு ஆண்டுகளில் அவன் படைத்த படைப்புக்கள்தான் அவனைப் பல்லாண்டுகள் வாழச் செய்திருக்கின்றன. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் அவனைப் புகழ் மங்காது வாழ வைக்கவும் போகின்றன.

இதற்கு முதற்பெரும் காரணம் அவன் தேசிய கவியாக விளங்கினான் என்பதேயாகும். அடிமைப்பட்டுக் கிடந்த பாரதத்தின் விலங்குகளைத் தறிக்க அவன் தனது பாடல்களால் நமக்கு ஆயுதங்களை உருவாக்கித் தந்தான். ஆனாலும் பாரதி வேட்கை கொண்ட விடுதலை அன்னியரிடமிருந்து விடுபடும் அரசியல் சுதந்திரமாக மட்டும் இருக்கவில்லை. இந்தப் பாரத சமுதாயம் அரசியல் அடிமைத் தளையிலிருந்து மட்டுமல்லாமல், சாதிக் கொடுமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள் முதலிய சமூகக் கொடுமைகளிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், மொழியையும் நாகரிகத்தையும் கலாச்சாரத்தையும் முடமாக்கும் கலாச்சார அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை பெறுவதே, நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் நல்வாழ்வு மலரச் செய்வதே ஆனந்த சுதந்திரமாக விளங்க முடியும் என்ற உறுதியோடும் உத்வேகத்தோடும் பாடியவன் அவன்.

ஆயினும் அவன் மொழியின் பெயரால் வெறியனாகவும் மாறிவிடவில்லை. பாரதம் என்ற பெயரால் குறுகிய தேசிய வெறிவாதியாகவும் மாறிவிடவில்லை. மாறாக, அவன் மனிதகுலம் அனைத்தையும் நேசிக்கும் மனிதாபிமானியாக, சர்வஜன சமூகத்தின் விடுதலையையும் விரும்பிய புரட்சிவாதியாக, உலகனைத்தையும் ஒருங்கு நோக்கிய சர்வதேசியவாதியாக வாழ்ந்தான். இதன் காரணமாக அவன் பார்வை உலகனைத்தும் பரந்து நின்றது; அவன் ஏகாதிபத்தியத் தாக்குதலால் வீழ்ந்துபட்ட பெல்ஜியத்தையும், வாழ்த்தினான்; ஏகாதிபத்தியத்தை வென்று கொடிநாட்டிய சோவியத் சோசலிசப் புரட்சியையும் வாழ்த்தி வரவேற்றுப் பாடினான். இத்தகைய விரிந்து பரந்த, தொலைநோக்குமிக்க தீர்க்கமும், தெளிவும் குடிகொண்ட பார்வையின் பயனாகவே அவன் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்ச்சியான அக்டோபர் புரட்சியை முதன்முதலில் வரவேற்றுப் பாடிய இந்தியக் கவிஞனாகவும் விளங்கினான்.

மேலும், மக்களுக்காக இலக்கியம் படைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட இலக்கிய கர்த்தாக்களுக்கும் அவன் தலை சிறந்த லட்சியமாகவும், வழிகாட்டியாகவும் விளங்கினான். பழமையிலிருந்து எதையெல்லாம் உதறித் தள்ளுவது என்பதற்கும் அவன் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தான். பழங்காலத்தைத் தெரிந்து கொண்டு, நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு, வருங்காலத்துக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதற்கும் ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கினான்.

இந்தப் பெருமைகள் எல்லாம் சேர்ந்துதான் பாரதியை இலக்கிய உலகம் என்றென்றும் போற்றி வணங்கக் கூடிய அமர கவிஞனாக ஆக்கியுள்ளன.

அத்தகைய கவிஞனுக்கு முதல் நூற்றாண்டு விழாக் காணும் காலத்தில் வாழும் நாம் பாக்கியசாலிகள். பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று விரதம் பூண்டு பாட்டுக்களைப் பாடிக் குவித்த அந்த மகாகவிக்குத் "தாமரை"யும் தனது இதயாஞ்சலியைச் செலுத்தி இந்த மலரை மகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறது.

வாழ்க பாரதியின் புகழ்!

=தாமரை ஆசிரியர் குழு.
நிறுவனர்: ப.ஜீவானந்தம்.

'பாரதி' சில நினைவுகள்


'புதுச்சேரியில் பாரதி' சில நினைவுகள்
புதுவை பொதுவுடமைக் கட்சித் தலைவர் தோழர் வ.சுப்பையா

V Subbiah is considered as doyen of the trade unionist movement in Puducherry(Pondicherry), He is a veteran Communist leader and freedom fighter. Subbiah started his political career as a supporter of the Indian National Congress. A great orator, he mobilized the student and labor communities against the French rule in the Union Territory and was also imprisoned several times for his efforts in organising anti-French and anti-British protests.The greatness of Subbiah was the fact that he was sensitive towards the poor and the marginalized in society. Constant harassment by the French rulers did not affect his determination and he emerged above petty politics in the struggle for freedom. V.Narayanasamy (Union Minister of State for Parliamentary Affairs ) released a commemorative Indian stamp on 7th Feb 2011 to mark the birth centenary of veteran Communist leader and freedom fighter V. Subbiah.

(தோழர் ப.ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பொதுவுடமைப் பத்திரிகை "தாமரை". பாரதி நூற்றாண்டு விழாவின் போது டிசம்பர் 1981இல் "தாமரை" ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. அதில் பல அறிஞர்கள் பாரதி பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். அதில் புதுச்சேரி வ.சுப்பையா அவர்களின் கட்டுரையை இப்போது படியுங்கள். இவர் பாரதி புதுவையில் இருந்த காலத்தில் அவரோடு பழகியவர்)

பாரதி புதுவைக்கு 1908ம் ஆண்டு வந்து 1918ம் ஆண்டு நவம்பர் வரை தங்கியிருந்த காலையில்தான் அவரது கவிதைகளில் பெரும்பகுதி எழுதப் பட்டன எனலாம். சென்னையில் அவரை ஆசிரியராய்க் கொண்டு வெளியான "இந்தியா" என்ற வார ஏட்டினை பாரதி புதுவையில் வெளியிட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் அரசியல் அடக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல் கொள்ளை இவைகளைக் கடுமையாக விமர்சித்திட்ட விறுவிறுப்பான கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் பிரசுரிக்கப்பட்டன. பாரதியின் உரைநடையும், கவிதைகளைப் போலவே எளியனதாகவும், உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் வேகமுடையதாகவும் இருந்தது. அவர் இயற்றிய கவிதைகளைப் போல் இரு மடங்கு இருக்கும் அவரது உரைநடை இலக்கியங்கள். பாரதி ஆங்கில இலக்கியமும் நன்கு பயின்றவர். கர்மயோகி என்ற ஆங்கில மாதப் பத்திரிகையை வெளியிட்டார். பாரதி 'பொன்வால் நரி' (A fox with golden tail) என்கிற ஆங்கில கதை நூல் ஒன்றை எழுதி பிரசுரித்தார்.

பாரதி இயற்றிய கவிதையில் பல அரசியல் நிகழ்ச்சிகளையொட்டி அவரது சிந்தனையில் தோன்றிய செறிவுடைய கருத்துக்களின் வடிவங்களாக அமைந்திட்டன. பாரதி புதுவையில் வாழ்ந்த போது நான் சிறுவன். அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் என் வீட்டு வழியாக அங்கிருந்த அவரது நண்பர் கருணாநிதி கிருஷ்ணசாமிப் பிள்ளை அவர்களின் இல்லத்திற்குப் போகும்போது என்னுடன் இருந்த பையன்கள் பாரதியைக் காட்டி 'இதோ சுதேசி ஐயர் போகிறார்' என்பார்கள். ஆனால் சில ஆண்டுகள் கடந்தபின் பாரதியின் பணிகளுக்குத் துணையாக இருந்து செயல்பட்ட பல நண்பர்களிடமிருந்து, அவர் அப்போது இயற்றிய கவிதையினையும், அவைகளை யொட்டிய சில நிகழ்ச்சிகளையும் அவர்கள் வாய் வழியாகக் கேட்டறிந்தேன். குறிப்பாக, பாரதியோடு சில காலம் புதுவையிலிருந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் வ.ரா. சென்னையில் 1933ஆம் ஆண்டு 'மணிக்கொடி' வாரப்பத்திரிகை நடத்திய போதும், அதைத் தொடர்ந்து அவர் இலங்கையில் 'வீரகேசரி' பத்திரிகை ஆசிரியராயிருந்து செயலாற்றிய போதும், சென்னைக்குத் திரும்பியதும் அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தது. அவர் என்னோடு சீரிய நட்பு முறையில் பழகியவர். அவரும் பாரதியின் மனைவி செல்லம்மாள் இருவரும் சேர்ந்து 1934ஆம் ஆண்டு புதுவையில் என்னுடைய இல்லத்துக்கு வந்தார்கள். வ.ரா. அவர்கள் பாரதியார் இயற்றிய சில கவிதைகளைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும் பாரதியாருடன் நெருங்கி அவரது பணிகளில் பங்கெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் (மறைந்த) முத்துக்குமாரசாமி பிள்ளை அவர்களும், சிவா, ஜெயராம பிள்ளை இவர்கள் சொல்ல சில தகவல்களை அறிந்தேன். அவற்றுள் பயனுள்ள பொருத்தமான சில நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கும் சொல்லி பகிருந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
                                                              Sri Aravindhar

ஒரு நாள் காலை பாரதி வெள்ளாளர் வீதியிலிருந்த கிருஷ்ணசாமிப் பிள்ளை வீட்டில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது மாடியின் தளத்தில் அவரது பெண் குழந்தை தடதடவென்று ஓடியது. இந்த சத்தம் கேட்டதும் கிருஷ்ணசாமி பிள்ளை சிறிது அதிர்ச்சியடைந்து, 'ஓடாதே பாப்பா, விழுந்திடுவே' என்று குரல் கொடுத்தார். 'காக்கா ஆப்பத்தைப் பிடுங்குது' என்றது குழந்தை. உடனே பாரதி, "ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா, எத்தித் திருடும் அந்தக் காக்கை, அதற்கு இரக்கப்பட வேணும் பாப்பா" என்று சொல்லிவிட்டு பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்தாராம்.

சிறுவர்களைக் கண்டால் பாரதிக்கு இளைய பாரதம் எப்படியிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் துடிக்குமாம். புதுவை ஈஸ்வரன் கோயில் தெருவில் அவர் குடியிருந்த வீட்டுக்கு வெளி குறட்டில் ஒரு நாள் அவர் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது தெருவில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் வளைந்து குனிந்து நடந்து போவதைப் பார்த்தார். உடனே அவனை அழைத்தார். அவன் முதுகை நிமிர்த்தி வைத்து, அருகில் குப்பை மேட்டில் நின்றிருந்த சேவலைக் காட்டி, "அதோ பார்! அந்தச் சேவலைப் போல் நீ நிமிர்ந்து நட!" என்றார் என என்னிடம் ஒரு நண்பர் கூறினார்.

ஒரு நாள் பாரதியின் சிந்தனையில் வெண் பரிதிகள் பூட்டிய ரதம் வேகமாக ஓடத் தொடங்கியது. பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை கவிதையாகப் புனைந்திட அவர் உள்ளத்திலே கருத்தோவியத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு வெளியிலிருந்து ஒரு புஷ் வண்டிக்காரனை அழைத்தார்; ஏறி அமர்ந்தார் வண்டியில், முன்னிருந்த சுக்கானைக் கையிலே பிடித்தார். ஓட்டடா இரதத்தை என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார். புஷ் வண்டிக்காரன் பின் புறத்திலிருந்த கைப்பிடியை வலுவாகப் பிடித்துக் கொண்டு, தள்ளிக்கொண்டே ஓடினான். பாரதி, "ஓட்டடா, ரதத்தை! ஓட்டடா ரதத்தை! ஓட்டடா ரதத்தை!" என்று பாடிக்கொண்டே புதுவையின் பல தெருக்களைச் சுற்றிவிட்டு வீடு திரும்பியதும், பாஞ்சாலி சபதம் என்ற செய்யுள் காவியத்தை எழுதினார் என்று இந்த நிகழ்ச்சியை என்னிடம் நண்பர்கள் சொன்னார்கள்.
                                                              V.Ve.Su.Ayyar

புஷ் வண்டி என்பது புதுவையிலே அக்காலத்திலிருந்த ஒரு மாதிரியான அமைப்பைக் கொண்டது. புதுவை நகரத்திலிருந்த பிரமுகர்கள் வீட்டுக்கு ஒரு வண்டி இருக்கும். வண்டிக்கு பின்னால் நீண்ட பிடியிருக்கும் வண்டிக்குள் இருவர் உட்கார வசதியான இருக்கை உண்டு. உட்காருகிறவர்கள் கையில் ஒரு சுக்கான் பிடித்துக் கொண்டு வழி திருப்பிச் செல்ல வேண்டும். அந்த வண்டிக்கு நான்கு சக்கரங்கள் உண்டு. சுக்கான் முன் இரு சிறிய சக்கரங்களோடு இணைத்திட்ட ஒரு இரும்பு சுழல் வட்டத்தோடு இணைந்திருக்கும். உட்காருவோர் காலடியில் ஒரு மணியின் பொத்தான் இருக்கும். அதைக் காலால் தட்டியதும் மணியோசை எழும். இந்த வண்டியில் சவாரி செய்வது வெகு ஜோராயிருக்கும் அந்தக் காலத்தில்.

தலைவர்களைக் கைது செய்திட ஏகாதிபத்திய சதி.

பாரதி புதுவையில் 1908ஆம் ஆண்டிலிருந்து 1918 வரை தங்கியிருந்ததாகச் சொன்னேன் அல்லவா? அப்போது அவரையும் வ.வெ.சு.ஐயரையும், அரவிந்தரையும் எப்படியாவது பிரெஞ்சு அரசு புதுவையிலிருந்து கைது செய்து கொண்டு போக இணங்க வேண்டும் என்று பல உத்திகளைக் கையாண்டது. புதுவைக்கு மூன்று முதல் பத்து கி.மீ.ட்டரில் பிரிட்டிஷ் எல்லை இருந்தது. இவர்கள் புதுவையின் எல்லையை ஆரம்பத்தில் சரியாக அறிந்திருக்க முடியாது அல்லவா? இவர்களோடு சிலரை இணக்கமாக பழகச் செய்து பிரிட்டிஷ் எல்லைக்குள் இவர்கள் அறியாமலே நுழையச் செய்து விட்டால் கைது செய்வது எளிதாயிருக்கும் என்று பிரிட்டிஷ் வெவுகாரர்கள் முயன்றார்கள்.

அல்லது குதிரை அல்லது புஷ் வண்டிகளில் பாரதி உட்கார்ந்து எந்த நண்பர் வீட்டுக்காவது போகச் சொன்னால், அப்போது எல்லையைக் கடந்து சென்றுவிட வேண்டுமென்றும் மற்றொரு முயற்சி. எனவேதான் அப்போது பாரதியாரோடு எப்போதும் உள்ளூர் நண்பர்கள் துணையாக இருப்பது வழக்கம். பலாத்காரச் செயல்கொண்டு அவரைக் கடத்திச் செல்ல முயன்றாலும், அதற்கு ஈடு கொடுக்க வல்லவர்களும் தயாராகவே இருந்தார்கள்.

பாரதி வெளியிட்ட 'இந்தியா' பத்திரிகையின் பிரதிகளை ரகசியமாகத் தலையில் சுமந்து பிரிட்டிஷ் எல்லைக்குள் பல ஊர்களுக்குச் சென்று அங்கிருந்த நண்பர்களிடம் கொடுத்துவரும் தொண்டினைச் செய்திட சில இளைஞர்கள் அக்காலை பாரதிக்கு உதவிவந்தார்கள். அத்தகையோர் பிறர் பிற்காலத்தில் எனக்கு நண்பர்களாய் புதுவையில் நான் துவங்கிய பிரஞ்சு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் என்னுடன் சேர்ந்து போராடினார்கள். அத்தகைய நண்பர்களில் சிலர் அரசு ஊழியர்களாயும் அப்போது பணியாற்றியவர்கள்.

முதல் மகா யுத்த ஆரம்பகாலத்தில் பிரெஞ்சுக்கும் பிரிட்டனுக்கும் நெருங்கிய உறவு வளர்ந்தது. அந்த நிலையைப் பயன்படுத்தி பாரதி, அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் மூவரையும் கைது செய்து பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க பிரெஞ்சு அரசு ஒரு வழியைக் கண்டறிந்தது. பிரெஞ்சிந்திய அரசின் நிர்வாகக் கவர்னருக்கு ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று இருந்தது. அதில் மூவர் இந்திய பிரமுகர்கள், மூவர் பிரெஞ்சு அரசு அதிகாரிகள். இது ஒரு பொம்மைக் குழு. இதற்கு பிரிவி கவுன்சில் என்று பெயர். இக்குழுவின் ஒப்புதலை எளிதில் பெற்று நிறைவேற்றிவிடலாம் என்று பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டது.

இச்செய்தியை அறிந்த பாரதி, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் மூவரும் இதிலிருந்து தப்பிக்க வழி என்ன என்று கலந்து பேசினர். பிரிட்டிஷ் இந்திய அரசின் சூழ்ச்சிக்கு பிரெஞ்சு அரசு இணங்கி விடுமோ என்ற ஐயப்பாடு இந்தத் தலைவர்களுக்கு இருந்தது. அதனால் மூவரும் ஒரு படகில் ஏறி கடலில் பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஆட்சி அதிகாரத்துக்கு அப்பால் எட்டி உள்ள கடல் பகுதியில் படகில் தங்கியிருப்பதென்றும் பிறகு பிரான்சிலுள்ள அரசிடம் ஊரிலுள்ள பெரியவர்கள் முறையிட்டு நடவடிக்கை எடுப்பது என்றும் இவர்கள் முடிவு செய்தார்கள்.

இந்த நாட்களில் பாரதி ஒரு நாள் வைசியாள் வீதியிலுள்ள சங்கர செட்டியார் வீட்டுக்குச் சென்றார். செட்டியார் பாரதியாரிடம் பெரிதும் மதிப்புடையவர். அவருடைய வீட்டில்தான் பாரதி, அரவிந்தர் புதுவைக்கு வந்ததும் சில நாட்கள் தங்க வைத்தார்.

செட்டியார் வீட்டுக் கூடத்தில் ஊஞ்சல் பலகை இருந்தது. பாரதி எப்போதும் போல் அதில் போய் அமர்ந்தார். செட்டியார் எங்கோ செல்ல ஆடை அணிந்து கொண்டிருந்தார். பாரதியை நோக்கிய செட்டியார், "என்ன பாரதி! ஏதோ சோகமாய் இருக்கீங்களே?" என்று கேட்டார். பாரதி உடனே பிரச்சனையை விளக்கிவிட்டு, பிரிவி கவுன்சில் உறுப்பினர்கள் இன்று கூடி முடிவு எடுக்கப் போகிறார்களாம் என்று பாரதி சொல்லி முடிப்பதற்கும், செட்டியார் உடனே குறுக்கிட்டு "இதென்ன பெரிய காரியம் பாரதி; நானும் அந்த பிரிவி கவுன்சில் உறுப்பினர்தான். அதற்காகத்தான் புறப்படுகிறேன், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொன்னார்.

அப்போது பாரதிக்கு உள்ளத்தில் எழுந்த வேகம் ஊஞ்சலில் உட்கார்ந்தபடி தரையில் உதைத்து ஊஞ்சலை வேகமாக ஆடச் செய்து கொண்டே பாடினாராம்:

"ஜெயமுண்டு பயமில்லை மனமே - இந்த
ஜன்மத்திலே விடுதலை உண்டு, நிலையுண்டு"

இந்தப் பாட்டை பாரதி அங்கேயே எழுதி முடித்தார் என்று அவரது நண்பர் எனக்குச் சொல்லித் தெரிந்தது.

பாரதியின் மெய்ப்பாடு உணர்வுகள் ஒவ்வொரு நிகழ்ச்சியிலிருந்து எழுந்த சிந்தனையின் சிலம்பாகக் கவிதைகளில் ஒலிக்கிறது.

பாரதமாதாவுக்கு சிலை.

பாரத தேவி, பாரத மாதா, பாரத மாதேவி, வந்தேமாதரம், தாயை வணங்குவோம் என்றெல்லாம் பாரதியின் தேசிய கீதங்களில் வருகின்றன. இந்தத் தாய்க்கு ஓர் உருவம் வேண்டாமா? என்று பாரதி எண்ணினார். பாரத நாட்டுக்கு ஓர் அன்னை வடிவம் அளித்து, அதை வடித்திடச் செய்து அதற்கு பாரதமாதா என்று பெயர் சூட்டிப் பெருமை தந்தவர் பாரதி என்பதைத் தமிழ் மக்கள் அறிவது அவசியம். புதுவையிலிருந்தபோது பாரதியும் வ.வெ.சு.ஐயரும் ஒரு நாள் பாரதமாதாவுக்கு ஒரு உருவம் தரவேண்டும் என்று எண்ணினார்கள். அப்போது ஓவியக் கலையில் சிறந்ததோர் மேதை பேத்ரீஸ் என்றொருவர் பிரெஞ்சுக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரைச் சந்தித்து பாரதமாதாவின் உருவப் படம் ஒன்று வரைய வேண்டும், அதன் அமைப்புகள் எப்படியிருக்க வேண்டும் என்று விவாதித்தார்கள். பாரதமாதா இந்தியாவின் நில அமைப்பு அப்படியே பாரததேவியின் உருவாகக் காட்சியளிக்க வேண்டும். தலைமேல் ஒரு தங்க கிரீடம், தலைமுடி இருபக்கமும் விரிந்து, இமய பர்வதத்தையும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் ஓடிப் போய்வது போலவும், இலங்கையை ஒரு தாமரை போலவும் அமைத்திட வேண்டும் என்பது போன்ற பாரதமாதாவின் உருவ அமைப்பின் கருத்துக்களை ஓவியமாக வரைய திரு பேத்ரீஸ் அவர்களிடம் விளக்கினார்கள். அவர் ஒரு சில நாட்களில் பாரததேவியின் ஓவியத்தை எழுதி முடித்தார்.

பாரதமாதாவின் உருவ அமைப்பைப் பற்றி வ.வெ.சு. ஐயரும் பாரதியும் விவாதித்த போது ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. வ.வெ.சு. ஐயர் பாரதமாதாவுக்கு ஆபரணங்கள் வேண்டாம், வெள்ளையன் நாட்டைக் கொள்ளை கொண்டு வறுமை நிலையில் வைத்துள்ளான் என்றார். பாரதி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, இல்லை இல்லை, நமது நாட்டில் இன்னும் செல்வங்கள் ஏராளமாக உள்ளன. எனவே பாரதமாதா சர்வாலங்காரபூஷிதையாகவே காட்சி தரவேண்டும் என்றார். அதன்படி பின்னர் படத்தில் திருத்தங்கள் செய்து நகைகள் அணிவிக்கப் பட்டன.

பின் இதை மண்ணில் சிலையாக உரிய வண்ணங்களோடு வடித்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அக்காலத்தில் புதுவையில் குயவர்பாளையம் என்ற ஊரில் பொம்மைகள் செய்வதில் சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் வடித்தெடுக்கும் பொம்மைகள் எழில் மிகுந்தவை. வெளிநாடுகளுக்கு அப்போது எடுத்துச் செல்வார்கள். ஓவியக்காரர் பேத்ரீஸ் அவர்கள் எழுதிய பாரதமாதாவின் ஓவியத்தைப் போல களிப்பு மண்ணினால் சிலையை வடித்து, வண்ணங்களைத் தீட்டிக் கொடுத்தார்கள். குயவர்பாளையம் சிற்பக் கலைஞர்கள் சிறிதும் பெரியதுமாக இரு அளவுகளில் செய்தார்கள். அதில் பெரிய அளவிலுள்ள ஒன்று இப்போது அரசின் பூங்காவில் வைக்கப் பட்டுள்ளது.

நான் அமைச்சராக இருந்தபோதுதான், இந்தச் சிலை அரசுப் பூங்காவில் தனியிடம் ஒதுக்கி நிறுவப்பட்டது. அதற்கொரு சிறு விழாவும் நடத்தப் பட்டது.

இந்தச் சிலையில் பாரதமாதா கால்களில் விலங்குகள் இட்ட நிலையில் காட்சியளிக்கிறாள். அவளது வலதுகரம் முகவாய்க்கட்டில் ஊன்றிய நிலையில் உள்ளது. பாரதியின் யோசனையின் பேரிலேயே இவ்வாறு செய்யப்பட்டது. 'என் அன்னை சிந்தனையில் இருக்கிறாள்' என்பதே பாரதி இதற்குக் கூறிய விளக்கம்.

மற்றொரு சிறிய சிலை அதன் உள்பாகம் குடவாயிருக்கும். வாஞ்சிநாதன், மாடசாமி இருவரும் புதுவைக்கு வந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று திரும்பும் போது அந்தச் சிலைக்குள் கைத்துப்பாக்கியை வைத்து பொம்மை எடுத்துச் செல்வது போல மறைத்து எடுத்துப் போனார்கள். அந்தக் கைத் துப்பாக்கியைக் கொண்டுதான் 1911ஆம் ஆண்டு மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற கெலெக்டரை வாஞ்சிநாதன் சுட்டது என்று அப்போது பாரதியுடன் இருந்த நண்பர்கள் என்னிடம் கூறினர்.

குயில் பாட்டு.

புதுவையில் எழில் மிக்கதோர் இயற்கைக் காட்சியைக் கண்டதும் பாரதியின் உள்ளத்திலிருந்து எழுந்த 'குயில் பாட்டு' அவரது கவிதைப் படைப்பில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றது.

"செந்தமிழில் தென்புதுவை யெனுந்திரு நகரில்
மேற்கே சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை"

என்று பாரதி குயில்பாட்டில் குறிப்பிட்டுள்ள மாஞ்சோலை, தென்னை தோப்பு, நீர் ஊற்று கொப்பளித்து எழும் மடு. பசுமை நிறைந்த நிலவளம், மயில் கூட்டம், கொஞ்சி இசை மீட்டும் இனிமையான இயற்கை எழில் நிறைந்ததோர் இடம். பாரதி அடிக்கடி இந்தத் தோப்புக்குச் செல்வார்.

காணி நிலம் வேண்டும் என்ற பாட்டையும் பாரதி அங்கிருந்துதான் பாடினார் என்று சொல்லப் படுகிறது. பாரதி காணி நிலம் வேண்டும் என்று அவரது சிந்தனையில் எழுப்பிக் கேட்டது அவருக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக் குடிமகன் இந்த இயற்கை வளங்களையும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த சிந்தனையிலிருந்து எழுந்த கருத்துக்கள்.

பாரதி ஆதிதிராவிட மக்களோடு நெருங்கிப் பழகுவார். அவர்கள் வீட்டுக்குச் சென்று உணவருந்துவார்; அவர் வீட்டுக்கு ஆதிதிராவிட நண்பர்களை அழைத்து, செல்லம்மாளை உணவு அளிக்கச் சொல்லுவார். ஒரு நாள் கனகலிங்கம் என்ற ஒரு ஆதிதிராவிட இளைஞனை பாரதி வீட்டுக்கு அழைத்து வந்து அவனுக்குப் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திரோபதேசமும் செய்து வைத்தார். கனகலிங்கம் புதுவையில் இருந்தபோது என்னிடம் இந்த நிகழ்ச்சியை அவரே கூறினார்.

புதுவை நகரோடு தென் பாகத்திலுள்ள உப்பளம் என்ற கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள நண்பர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். அந்த முத்து மாரியம்மனைப் பற்றியும் பாரதி பாட்டு எழுதியுள்ளார்.

பாரதி புதுவையில் வாழ்ந்த போது சில சமயங்களில் வாழ்க்கை நடத்த முடியாத வறுமை நிலையிலும் இருந்தார். அவர் குடியிருந்த வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாது. அந்த வீட்டுக்காரன் ஒரு செட்டியார். புதுவை முத்தியால்பேட்டையிலிருந்து வாடகை கேட்டு வாங்குவதற்கு பாரதியிடம் வருவார். அவரை பாரதியார் விளக்கெண்ணை செட்டியார் என்று அழைப்பார். செட்டியார் பாரதியை வந்து பார்ப்பார், ஆனால் வாடகை என்று வாய் திறந்து கேட்க மாட்டார். பாரதி அவரைப் பார்த்து பணமில்லை என்பாராம். 'அதுக்கென்ன சாமி' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

ஒரு நாள் பாரதி 'நான் சுதேசி வங்கி செக்கு தருகிறேன்; வாங்கிக் கொள்ளுங்கள்' என்றாராம். செட்டியார் 'அதுக்கென்ன சாமி, உங்க செக்கு எங்கும் செல்லும்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.

வறுமை நிலையிலுள்ள பாரதிக்கு, அவர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரைகளுக்காக மணியார்டர் வருமாம். தபால்காரன் அதைக் கொண்டு வரும்போது பாரதியைப் பார்க்க வந்திருந்த நண்பர் அவருடைய வாழ்க்கை நெருக்கடியைப் பற்றி சற்று நேரத்துக்கு முன் வெளியிட்டிருந்தார். பாரதி மணியார்டர் பணத்தை வாங்கி அந்த நண்பருக்குக் கொடுத்து, 'எடுத்துக்கொண்டு போ' என்பாராம்.

ஒரு நாள் ஜெர்மனியிலிருந்து ஒரு எழுத்தாளர் பாரதிக்கு அறுநூறு ரூபாய் மணியார்டர் அனுப்பி இருந்தார். பாரதி எழுதியிருந்த சில கவிதைகளை எடுத்து அவர் ஜெர்மன் மொழியில் பெயர்த்து எழுதி வெளியிட்டாராம். எனவே உரிமையாளருக்கென்று பாரதிக்கு அந்தப் பணத்தை அனுப்பினாராம். பாரதி அந்தப் பணத்தைக் கையில் பெற்றதும் அப்போதும் கூடவிருந்த சில நண்பர்களுக்கு அதில் கணிசமான தொகையை விநியோகித்துவிட்டாராம். இவ்வாறு பாரதி வறுமையில் இருந்தும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அவருக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து கொள்வதென்ற உயர்ந்த உள்ளம் படைத்திருந்தார்.

பண்டைய புலவர்கள் உலா, மடல், அந்தாதி முதலிய செய்யுட்களைப் பாடி செல்வந்தர்களைப் புகழ்ந்து பொருள் பெற்று வந்தார்கள். ஆனால் பாரதி அவ்வாறு காசுக்கு கவிதை பாடமாட்டார். எட்டையபுரத்து ராஜாவை அவர் புகழ்ந்து பாட இணங்காததால் பிணக்கு ஏற்பட்டு பாரதி அரசு அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.

அரவிந்தர் புதுவைக்கு 1910-ஆம் ஆண்டு வந்தபோது பாரதியும், அவரது நண்பர்களும் துறைமுகத்துக்குச் சென்று அரவிந்தரை அழைத்து வந்தார்கள்.

பாரதியின் நண்பர் சங்கரன் செட்டியார் வீட்டு மாடியில் ஒரு அறையில் பல நாள் தங்க வைத்தார்கள். ஒரு நாள் பாரதி அவரைப் பார்க்கச் சென்றிருந்த போது, அரவிந்தரைப் பார்க்க வந்த சிலர் அவரது காலில் வீழ்ந்து கும்பிடுவதை முதன்முறையாக அன்றுதான் பாரதி பார்த்தார். பாரதிக்கு இக்காட்சியைக் காண சகிக்கவில்லை. எரிச்சல்பட்டார். அரவிந்தரைப் பார்த்து, "இது என்ன, உங்கள் காலில் விழுந்து கும்பிடுவதை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்? நாம் அடிமை உணர்வை ஒழிக்க வேண்டும் என்கிறோம்; இது என்ன?" என்று பாரதி வினவ, அரவிந்தர் பாரதியைப் பார்த்து அவர்கள் என்னை வணங்கவில்லை, அவர்கள் உள்ளத்தில் ஆண்டனை எண்ணி செய்கிறார்கள் என்றாராம். பாரதி இந்த விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை. உடனே அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். அது முதல் பாரதி, அரவிந்தரைச் சந்திப்பதில்லை என்று அறிந்த நண்பர்கள் கூறினார்கள்.

பாரதி அடிமை உணர்வை வளர்த்திடும் எந்த நடவடிக்கையையும் கடுமையாக எதிர்த்திட்டவர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக் காட்டாக உள்ளது.

Tuesday, August 9, 2011

ஆவணி அவிட்டம்


ஆவணி அவிட்டம்

(வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் விஷயங்களைக் கதைபோல எழுதுவதில் பாரதியார் சமர்த்தர். நம் தமிழ்நாட்டுச் சமூகத்தின் உயர்வும் தாழ்வும் யாவும் இத்தகைய கதைகளில் பளிச்சென்று தெரிகின்றன எனும் முன்னுரையுடன் திரு ரா.அ.பத்மநாபன் இதனை "பாரதி புதையலில்" வெளியிட்டுள்ளார். இந்தக் கதை முதலில் 'சுதேசமித்திரனில்' வெளியாகியது. பின்னர் மித்திரன் காரியாலயம் வெளியிட்ட "கதாமாலிகா" எனும் நூலிலும் வெளிவந்தது - நன்றி:- திரு ரா.அ.பத்மநாபன் "பாரதி புதையல்".)

வேதபுரத்தில் அத்வைத சமாஜம் ஒன்றிருக்கிறது. இதில் பிராமணர் மட்டும்தான் சேர்ந்திருந்தார்கள். வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை தோறும் தண்டுல சாஸ்திரி என்பவர் அங்கே உபந்நியாசமோ கதையோ நடத்துகிறார். இந்த அத்வைத சமாஜத்துக்கும் கும்பகோணம் சங்கர மடத்துக்கும் ஸ்நேகம். சமாஜத்துக் காரியதரிசியின் பெயர் முத்துச்சாமி அய்யர். இவருக்கு நாற்பது வயதிருக்கும். இங்கிலீஷில் எம்.ஏ. பரீக்ஷை தேறி நூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு உச்சி குமாஸ்தா வேலை பார்க்கிறார். இவரகத்தில் குழந்தை குஞ்செல்லாம் எப்போதும் இங்கிலீஷ்தான் பேசும். மனுஷ்யன் நல்லவர், பெரிய சம்சாரி, கொஞ்சம் பயந்தவர்; அதிலே கொஞ்சம் லோகோபகார சிந்தை. வேதபுரத்து வைதிக லெளகிக பிரம்மணர்களை ஒன்று சேர்த்துத் தான் சொன்ன திதியில் ஆவணி அவிட்டம் வகையாராக்கள் நடத்தும்படியாகவும் தன்னை கும்பகோண மடத்தார் பொருள் தெரிந்து மதிக்கும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அந்தத் தொழிலையே லோகோபகாரமாகவும் நடத்தி வருகிறார்.

கொஞ்சம் ஆசார திருத்தக் கொள்கையுடையவர், ஆனால் அதிலும் பயக் கலப்பில் மெதுவாகத்தான் வேலை செய்துகொண்டு வருகிறார். பரபரப்புக் கிடையாது. பொறுமையுடையவர், நிற்க.

இன்று காலையில் நான் நம்முடைய ஸ்நேகிதராகிய இடிப்பள்ளிக்கூடம் பிரமராய வாத்தியாரைக் கண்டு, புரோஹிதர் வந்தால் என் வீட்டுக்கு ஆவணி அவிட்டம் பண்ணுவிக்கும் பொருட்டு அனுப்பும்படி சொன்னேன். பிரமராயர் சொன்னார், "பெரிய வாத்தியாருடைய தங்கைக்கு உடம்பு சரியில்லை; மிகவும் ஆபத்தான நிலையிலிருப்பதாகக் கேல்விப் பட்டேன். என்ன செய்யலாம்? ஐயோ பாவம்! கிழவி; அந்த அன்னிபெசண்ட் வயது இவளுக்கும் இருக்கும். அதனாலே அந்த வாத்தியார் இன்றைக்கு உபாகர்மா பண்ணிவைக்கக் கோயிலுக்கு வருவதே சந்தேகம். அவருடைய மருமகன் குமார சாஸ்திரி வருவான். நான் கோயிலுக்குத்தான் போவேன். ராமராயர் உங்களைப் போலே, உபாகர்மா உபநயன விஷயங்களை வீட்டுக்குள்ளேயே ரஹஸ்யமாக நடத்தி வருகிறார். அந்தக் குமார சாஸ்திரி என் வீட்டுப் பக்கமாக வருவான். நான் உங்கள் வீட்டுக்கு உடனே அனுப்புகிறேன்" என்று சொன்னார்.

நான் அவரிடம், "அதென்ன ஸ்வாமி! இந்தப் பிராமண ஸமூகத்தில் வருஷந்தோறும் இன்றைக்கு ஆவணி அவிட்டமா, நாளைக்கு ஆவணி அவிட்டமா என்கிற சண்டை நியதமாகவே நடந்து கொண்டு வருகிறதே, காரணமென்ன?" என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "ஹிந்துக்களிலே பத்தாயிரத்தில் ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் அபண்டிதர்கள். பஞ்சாங்கமே முழுவதும் தப்பிதம். உத்தராயண தக்ஷிணாயனக் கணக்கில் 22 நாள் தப்பிதம் போட்டிருக்கிறான் இருபத்திரண்டுக்கும் இருபத்திமூன்றுக்கும் நடுவிலே. அதாவது பஞ்சாங்கம் பிரயோசனமில்லை. நம்முடைய வருஷ மாஸம் தேதி எல்லாம் தப்பிதம். இதைக் கவனிக்க நாதனைக் காணோம். ஆவணி அவிட்டச் சண்டை நிர்த்தூளிபடுகிறது. அஹோ! அபண்டிதாஹ்" என்றார்.

"பத்திரிகைகளிலே நடக்கிறதே, அதைத் தவிர இந்த உள்ளூர்ப் பண்டிதர்களுக்குள்ளே வேறே லடாயிகள் உண்டோ?" என்று கேட்டேன்.

"அதை என்ன சொல்வேன், போம்! அத்வைத ஸமாஜமே மிகவும் த்வைத ஸ்திதியில் இருக்கிறது. உச்சி குமாஸ்தா முத்துஸாமி அய்யர் வியாழக்கிழமை தான் பூனூல் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற கக்ஷி. மணிலாக்கொட்டை மஹாதேவய்யர் வெள்ளிக்கிழமைக் கக்ஷி. வெங்காயக்கடை வெங்கு அய்யர் தெரியுமோ உமக்கு? அவருக்கு முத்துஸாமி அய்யரே திதி நக்ஷத்திரம் எல்லாம். யாராவது நம்மிடம் வந்து இன்றைக்குத் திதி என்ன என்று கேட்டால் நாம் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லுகிறேன் என்போமா மாட்டோமா? இந்த இடத்தில் அவர் முத்துசாமி அய்யரைப் பார்த்து வந்து சொல்கிறேன் என்பார். அவர்கூட இந்தத் தடமை ஸர்க்கார் ராஜா ஆவணி அவிட்டத்துக்காக வெள்ளிக்கிழமைதா லீவு விடுகிறார்களென்பதையும், அவருடைய மாப்பிள்ளை ஸர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாலும், அவருக்கு வியாழக்கிழமை ரஜா கிடையாதாகையாலும் வெள்ளிக்கிழமையன்று உபாகர்மா நடத்தினால்தான் மாப்பிள்ளையும் தானும் சேர்ந்து நடத்த முடியும் என்பதையும் உத்தேசித்து, இந்த நிலையில் முத்துச்சாமி அய்யரைக் காட்டிலும் கும்பகோணமே ப்ரமாணம் என்பதாகத் தீர்மானம் செய்து விட்டார். ருஷ்யாவிலே குழப்பம் எப்படியிருக்கிறது ஸ்வாமி?" என்று பிரம்மராயர் முடித்தார்.

"அது எக்கேடும் கெட்டுப் போகிறது, மேலே உபாகர்ம விஷயத்தைச் சொல்லும்" என்றேன்.

இந்த ஸமயத்தில் கோயில் தர்மகர்த்தா வீரப்ப முதலியாரும் அங்கே வந்து சேர்ந்தார். வந்தவர் என்னை நோக்கி, "இன்று கோயிலில் பிராமண அட்டஹாசம் அதிகமாக நடக்கும், நீங்கள் கோயிலிலே பூனூல் போட்டுக் கொள்ளுகிறீர்களா, வீட்டில்தானா?" என்று கேட்டார்.

ஆமென்றேன். வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினார்: - "பூனூலை எடுத்துப் போடுங்கள். இந்தியா முழுவதும் ஒரே ஜாதி, ஒரே ஆசாரம் என்று செய்துவிட வேண்டும். அதுவரை பிராமண சபை, அப்ராமண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை, முதலியார் சபை இந்த இழவெல்லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு; பூனூலென்ன, கீனூலென்ன! வீண் கதை!" எறோர்.

பிரமராயர் ஸமாதானப் படுத்தப் போனார். வீரப்ப முதலியார் சொல்லுகிறார், "எல்லாம் தெரியும், தெரியும். யாரோ ஒரு ராஜாவாம். அவன் பூனூலை ஒரு தட்டிலும் பொன்னை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தானாம். பூனூல் கீழே இழுத்ததாம். பொன் மேலே போய் விட்டதாம். இதென்ன மூட்டை! எல்லோரையும் சரிசமானமாக்கு. ஐரோப்பியர்களைப் போல நடப்போம். ஜப்பானிலே அப்படித்தான். ஜாதி வித்தியாசத்தை முதலிலே நீக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கத் தொடங்கினார்கள். ஜப்பானியரைப் போலே இருப்போம்" என்றார்.

"ஹிந்துக்களைப் போலவெ இருப்போம்" என்று நான் சொன்னேன்.

"எப்போதும் பிரிவும் சண்டையும் இருக்க வேண்டும் என்பது உம்முடைய கக்ஷியோ?" என்று வீரப்ப முதலியார் கேட்டார்.

"வேண்டியவர்களெல்லாம் பூனூல் போட்டுக் கொள்ளலாம். அது யாகத்துக்கு வெளியடையாளமாக அந்தக் காலத்தில் ஏற்பட்டது. இஷ்டமான ஹிந்துக்களெல்லாரும் பூனூல் போட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் சரிசமானமாக இருக்கலாம். பூனூல் இருந்தாலும் ஒன்று போலே; இல்லாவிட்டாலும் ஒன்று போலே. ஹிந்துக்களெல்லாம் ஒரே குடும்பம். அன்பு காப்பாற்றும், அன்பே தாரகம்" என்றேன்.

"அன்பே சிவம்" என்று பிரமராயர் சொன்னார். இவ்வளவுடன் காலை சபை கலைந்தது.