Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, August 28, 2011

பூபேந்திரர்


பூபேந்திரர்

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின் வந்தோன்
விண்ணவர் தம் உலகை ஆள் ப்ர
தாபேந்திரன் கோபமுறினும் அதற்கு
அஞ்சி அறம் தவிர்கிலாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரத நாட்
டிற்கடிமை பூண்டு வாழ்வோன்.

வீழ்த்தல் பெறத் தருமமெலாம், மறமனைத்துங்
கிளைத்துவர மேலோர் தம்மைத்
தாழ்த்த தமர் முன்னோங்க நிலைபுரண்டு
பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்த கலியுகஞ் சென்று மற்றொருதம்
அருகில் வரும் பான்மை தோன்றக்
காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின்
நினையினிது காட்டி நின்றான்.

மண்ணாளும் மன்னரவன் தனைச் சிறைசெய்
திட்டாலும் மாந்தரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழேந்தி
வாழ்த்தி மனங் களிக்கின்றாரால்
எண்ணாது நற்பொருளைத் தீதென்பார்
சிலர் உலகில் இருப்பர் அன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
இருளினது விரும்பல் போன்றே!

இன்னாத பிறர்க்கெண்ணான் பாரத நாட்
டிற்கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
ஓருயிரென்று உணர்ந்த ஞானி
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
பெருமையெதும் அறிகிலாதார்
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
தெனப் பெரியோர் மொழிந்தா ரன்றே?

பூபேந்திரநாத் தத் என்பவர் சுவாமி விவேகானந்தரின் இளவல். இவர் வங்காளத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த தேசபக்தர். புரட்சிக்காரர் என்று அறியப்பட்டவர். இவரை ஆங்கிலேய அரசு 1907இல் கைது செய்து ராஜதுரோகக் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தது.

இவர் குறித்து பாரதியார் எழுதிய பாட்டில் 'பாழ்த்த கலியுகம் சென்று, மற்றோர் யுகம் அருகில் வரும் பான்மை தோன்றக் காழ்த்த மனவீரமுடன் யுகாந்தரத்தின் நிலை இனிது காட்டி நின்றான்' என்கிறார். கலியுகம் முடிந்து மற்றோர் யுகம் தோன்றுதல் போல், பூபேந்திரரின் பத்திரிகையான "யுகாந்தர்" எனும் பத்திரிகையில் எழுதியமைக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் விளைவாக, இருண்ட காலம் போய் மக்களுக்கு விடிவு காலம் வராதா, கலி முடிந்து மற்றோர் யுகம் தோன்றாதா என்பது போல, அவரது பத்திரிகையின் பெயரான 'யுகாந்தர்' என்பதை இங்கு சிலேடையாகப் பயன்படுத்தி யிருக்கிறார் பாரதி.

பூபேந்திரநாதர் குறித்து தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் பூபேந்திரர் குறித்தும், அவர் சார்ந்திருந்த இயக்கத்தைக் குறித்தும் நமக்குச் சில விஷயங்களை நினைவூட்டுகிறார்.

நாடு முழுவதும் சுதந்திர தாகம் ஏற்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டு வந்த நேரத்தில் வங்காளத்தில் புரட்சி இயக்கத்தின் வேட்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியது. சுவாமி விவேகானந்தர் இந்தியர்களுக்குச் சுதந்திர தாகத்தை உண்டாக்கினார். அவரது சகோதரரான பூபேந்திரர் அந்த சுதந்திரத்தைப் பெறும் வழிமுறைக்கு ஆயுதம் தாங்கிப் போராடத் துணிந்தார்.

தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவருக்கு ஒரு இயக்கம் தேவைப்பட்டது. ஆகவே 1902இல் அவர் ஒரு புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார். அந்த நேரத்தில் அரவிந்த கோஷ், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா தேவியார் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்து குறிக்கோளை எட்ட இளைஞர்களின் ஆதரவினைத் திரட்ட "யுகாந்தர்' எனும் பத்திரிகையை 1906இல் தொடங்கினார்.

இந்த "யுகாந்தர்" ஆயுதப் புரட்சியை ஆதரித்து வந்தது. இந்த பத்திரிகையோடு தொடர்புடைய இளைஞர்கள் பலரும் இந்த நாட்டுக்காக எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருந்தனர். ஆயுதப் புரட்சியின் மூலம் இந்திய விடுதலையை அடைந்துவிட முடியும் என்று நம்பியிருந்தனர்.

1907இல் கைதாகி சிறை சென்ற பூபேந்திரர் ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். அங்கிருந்து விடுதலையாகி வெளியே வந்தபின் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்குச் சென்றார். அங்கெல்லாம் இருந்த புரட்சிகர இயக்கத்தாருடன் தொடர்பு கொண்டார். அங்கிருந்து அவர் சோவியத் யூனியனுக்கு 1921இல் சென்றார். அங்கு சோவியத் நாட்டின் பெருந்தலைவர் லெனினைச் சந்தித்துவிட்டு இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய பின் இவர் நாட்டின் சுதந்திரப் போரில் ஈடுபட வசதியாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1929இல் இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வங்காளப் பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காகப் போராட இவர் 'கிசான்' அமைப்புகளில் தீவிரம் காட்டினார். தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசிலும் தலைவராக இருந்து பணியாற்றினார். இவர் 1955இல் காலமானார்.






1 comment:

  1. "பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
    விவேகானந்தப் பரமன் ஞான
    ரூபேந்திரன்"
    தனக்குப் பின் வந்தோன்

    அவனுக்கு பின் வந்தவன் (ஆம் பிறந்தவன் அல்ல சீர் திருத்த வந்தவன்)

    "விண்ணவர் தம் உலகை ஆள் ப்ர
    தாபேந்திரன் கோபமுறினும் அதற்கு
    அஞ்சி அறம் தவிர்கிலாதான்"

    இந்த உலகமே தன்னுள் /தானாக கொண்ட ஆண்டவனே கோபமுற்று ஆணை இட்டாலும் அறம் பிழைக்காதவன்..

    'பூபேந்திரப் பெயரோன் பாரத நாட்
    டிற்கடிமை பூண்டு வாழ்வோன்"

    இப்பேர் பட்ட சத்தியவான்...பாரதனாட்டிற்கே தன்னை அடிமையாக்கி வாழ்பவன்....
    எத்தனைத் திறம்!!! அவன் தான் பாரதி...

    "வீழ்த்தல் பெறத் தருமமெலாம், மறமனைத்துங்
    கிளைத்துவர மேலோர் தம்மைத்
    தாழ்த்த தமர் முன்னோங்க நிலைபுரண்டு
    பாதகமே ததும்பி நிற்கும்
    பாழ்த்த கலி"

    இங்கே பாரதி கலியுகத்தின் கொடுமையை அதன் காட்சியை கூறியிருக்கிறார்.... இன்னொரு சமயத்தில் அதன் கொடுமை இன்னும் விரிவாக எப்படி இந்த புவியோருக்கு கேடுரும் என்பதையும் எழுதியுள்ளார்.

    கலியுக முடிவு!

    "மிகப் பொன்னுடையோன், மிக அதைச்சிதறுவோன்
    அவனே வலியனாய் ஆணைதான் செலுத்துவன்
    பாத்திரம் தவறிப் பைம்பொன் வழங்கலே
    தவமென முடியும் தையலார் நாணிலாது
    ஆட்சியை விரும்புவர், அவனியை ஆள்வோர்

    குடிகளின் உடைமையைக் கொள்ளையிட்டு அழிப்பர்
    பொய்யுரை கூறி வணிகர் தம் பொருளைக்
    கவர்வர், இவ்வுலகத் திறுதியின் கண்ணே
    மக்களின் அரண் (அறமெலாம்) எலாம்மயங்கி நின்றிடுமால்
    பொருட் காப்பென்பது போய்ப் பெருங்கேடுரும்"

    இது தான் இன்று நடக்கிறது....

    இப்படிப்பட்ட கலியை வெல்லவே வேதமென்னும் நெறி படைக்கப் பட்டது... அதுவே மூவா மருந்து என்பதையே ரிஷிகள் தொட்டு அனைவரும் இந்த உலகிற்கு சொல்லி வந்தார்கள் அவ்வழியே பாரதியும் அவர்களின் கருத்தை எளிமை படுத்தி பாமரனுக்கும் கூறினான்... இவை நாமறிந்தாலும்... அது போன்ற நல்ல காரியம் உலகில் எங்கு நடந்தாலும், அதை யார் செய்தாலும் அதைக் கொண்டாடினான் அவர்களைப் பாராட்டினான்...அது இவன் மேற்கொண்ட முயற்சிக்கு உரமாகும் என்பதை அறிந்தே மகிழ்ந்தான் என்பதற்கு இதுவும் சான்று பகர்கிறது..

    ருஷ்ய புரட்சியைப் பாடும் பொது கூட "ஆஹா, கலி என்னும் சுவர் இடிந்து வீழ்ந்தது" என்றேப் பாடினான்...

    "பாழ்த்த கலியுகஞ் சென்று மற்றொருதம்
    அருகில் வரும் பான்மை தோன்றக்
    காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின்
    நினையினிது காட்டி நின்றான்"

    அப்பேற்பட்ட கலியை அழிக்க உலகம் அமரத்துவம் பெற இந்த பூபேந்திரரின் செயலும் சரியே என அவரின் புகழ் பாடுகிறான்...

    பாரதியின் கிருத யுக வேட்கையை, அவனது அந்தப் பார்வையை விளக்கும் பாடல்.... கிருத யுகம் பற்றிய அறிவை எங்கும் பரப்புவது... அது தானே அவனின் அவதார நோக்கம்.

    நன்றிகள் ஐயா!
    வாழ்க வளர்க பாரதி பயிலகம்.

    ReplyDelete

You can send your comments