Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, October 1, 2011

காந்தி ஜெயந்தி விழா


காந்தி ஜெயந்தி விழா
2-10-2011

1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.

மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!

1 comment:

 1. கலியுக வரதர் கண்கண்ட மகாபுருஷர் -ஆன்ம
  வலிமையில் இமயம் வென்றவர் நமது மகாத்மா அவர்களின் பிறந்த
  இந்நாள் என்றும் நமக்கெல்லாம் பொன்னாள்.
  இந்த சத்தியம் பெற்ற நித்தியக் குழந்தையை
  புத்தியில் கொண்டே புனைவேன் ஒருப் பாடலை....

  அன்பெனும் பேரொளியின் அற்புதக் குழந்தை
  மண்ணுயிரெல்லாம் மாண்புற மாதவம் புரிந்தே
  விண்ணவர்போற்ற விந்தைகள் செய்தார் - மகாத்மா
  மண்ணுலகம் வந்த மாதவனே!.

  செயற்கரிய செய்தார், செவ்வனே செய்தார்
  செய்யும் யாவிலும் சத்தியம் கொண்டார்
  அஹிம்சையெனும் யாகம் வளர்த்தே -அதிலே
  அடிமை தளைகளை ஆகுதியாக்கி -அழகிய
  விடுதலை வேள்வி, எங்கும் நடத்தியே
  ஊமைமக்களை உரிமை முழக்கமிடச் செய்த
  உலகம் போற்றும் உன்னதத் தலைவர்
  மனிதநேய மகாபுருஷன்; பாரதம் ஈன்ற
  தவப்புதல்வன், கத்தியும் ரத்தமும் இன்றியே
  யுத்தம் செய்யும் புத்தம் புதிய கலையை
  பூமியில் படைத்த கலியுக பிரம்மா
  ஜீவமுக்தி பெற்ற ஸ்ரீராமபக்தர் -எங்கள்
  அண்ணல் மகாத்மா வான் புகழ்
  வாழிய! வாழிய!! வாழியவே!!!

  அன்புடன்,
  ஆலாசியம் கோ.
  வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்.

  ReplyDelete

You can send your comments