Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, October 16, 2011

"புது நெறி காட்டிய பாரதி"


"அச்சம் தவிர்!"
("புது நெறி காட்டிய பாரதி" எனும் நூலில் தோழர் ஆர்.கே.கண்ணன் எழுதியது)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உள்ளுக்குள்ளே குமுறலும் புகைச்சலுமாக இருந்த போதிலும் -- 1857ஆம் ஆண்டில் துவங்கிய இந்திய விடுதலைப் போர் (சிப்பாய் கலகம் என்று ஏகாதிபத்தியச் சார்புள்ள வரலாற்றாசிரியர்கள் இதனைக் குறிப்பிடுவர்) தோற்றுப்போன பின்னணி இங்கு நினைவுகூரத்தக்கது -- வெளியே மொத்தத்தில் அடிமை இந்தியா மனமொடிந்து, செயல் திறனிழந்து, சிந்தனை சாம்பிப் போய், அந்நிய ஆட்சிக்குப் பயந்து வாழ்ந்து வந்தது. பழமைப் புலம்பலுக்கோ, போலி விருப்புக்கோ இடந்தராமல், உள்ளது உள்ளபடியே இந்நிலைமையை "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்கிற பாட்டில் பாரதி கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறான். புண்ணைக் கீறிக் கிளறிப் பார்த்த பிறகன்றோ நோயின் தன்மை தெரியும், மருத்துவம் செய்ய முடியும்? "இந்த நிலைகெட்ட மனிதரை" பாரதி எவ்வாறு வர்ணிக்கிறான் என்று பாருங்கள்.

"அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே"

என்று அச்சப் பேயை முதலில், எடுத்த எடுப்பிலே குறிக்கிறான். இந்த அச்சத்தின் மிக முக்கியமான, மிகப் பரவலான வெளியீடு எது?

"தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்"

என்ற அரசுபால் மக்கள் காட்டும் பயத்தை முதலில் சுட்டுகிறான். கேவலம் மக்கள் தரும் வரிப்பணத்தை நம்பி இயங்குகின்ற ஒரு அரசைக் கண்டு அதே மக்கள் பயங்கொள்வதா? இதைக் காட்டிலும் அபத்தமான, பைத்தியக்காரத்தனமான அச்சம் வேறொன்று இருக்க முடியுமா என்பது கவிஞனின் மிகமிக எளிமையான, ஆனால் மிகமிக முக்கியமான கேள்வி.

அடுத்து, இந்த அச்சத்திற்குப் பிறப்பிடம், மூலகாரணம் எது என்று எடுத்துக் காட்டுகிறான் பாரதி.

"கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?"

என்று ஓகாரத்தில் கவிஞனின் திகைப்பு முற்றளவாக வெளிப்படுகிறது. ஒற்றுமையின்மையை இரண்டாவதாக இவ்வாறு வைத்த பாரதி அதன் காரணத்தை இனி விளக்க முற்படுகிறான்.

"சாத்திரங்கள் ஒன்றுங் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூது செய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்."

என்று தத்துவப் பார்வை பிழையை, கேட்டை, மூன்றாவதாக வைக்கிறான். விழி கெட்டால் வழிகெடும் அல்லவா?

இந்தத் தத்துவப் பார்வைக் கேடு பிரிவினைகளை வளர்த்தது மட்டுமின்றி மற்றொரு தீங்கும் விளைத்தது என்று அடுத்து வரும் வரிகளில் சுட்டிக் காட்டுகிறான்.

"கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்"

என்று பிரிவினைகள் வளர்ந்தது மட்டுமின்றி, தீது சூதுவாதுகளின் காரணங்களைக் காணும் அறிவும் அற்றுப் போயினர். ஜனக்கட்டு நலிய அறிவுக்கண் மங்கியது என்று இதை நான்காவதாக வைக்கிறான். சமுதாயத்தின் ஒன்ற்றுமை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அந்தச் சமுதாயத்தின் அறிவும் ஆற்றலும் வெளிப்பட்டு இயங்கும் என்று அவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பாரதி சுட்டிக்காட்டுவது ஒரு மாபெரும் உண்மையாகும். கல்லணை கட்டிய அந்தக் காலமாயினும் சரி, எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையல்லவா இது? "ஒற்றுமைக்குள் உய்யவே நாடெல்லாம் - ஒரு பெரும் செயல் செய்வாய், வா! வா! வா!" என்ற வரியின் ஆழமும் விரிவும் சிந்தித்து அறியத்தக்கன.

இவற்றின் விளைவென்ன?

"கண்ணில்லாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்"

என்று மிக எளிமையாக விளக்கி விடுகிறான் பாரதி. குழந்தைகளின் இயல்பான பேதைமையோடு பாரதி ஒப்பிடவில்லை. எந்தக் குழந்தையும் பிறர் காட்டிய வழியிற் சென்று முதலில் பார்க்கத்தான் செய்யும்; எனினும் வெகு தூரம் சென்று மாட்டிக் கொள்ளாது; தனக்குப் பழக்கமில்லாத பாதையில் போகத் தயங்கும். சுற்றுமுற்றும் பார்க்கும், நின்று அழும். ஆனால் அந்தக் குழந்தைக்குக் கண்ணும் இல்லை என்றால்? அந்தப் பேதைக் குழந்தைக்குத் தனக்குப் பழக்கப்பட்ட பாதை எது பழக்கப்படாத பாதை எது என்று கண்டறியக் கண்ணும் இல்லாத ஒரு நிலையிலே 'பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்ளும்'. எளிய உவமை "கண்ணில்லாக் குழந்தைகள்" நல்ல வழி சொன்னாலும், அதிலே நேராக நடக்க இயலாத குழந்தைகள். நல்லவழி காட்டுகிறவனும் குழந்தையைக் கையோடு கூட்டிக் கொண்டு வழி நடந்தால்தான் உண்டு முன்னேற்றம்.

இந்தக் குழந்தைகள் ஒரு காலத்தில் இருந்த உச்சநிலை எங்கே? வீழ்ந்துள்ள பள்ளம் எங்கே? என்பதைக் கடைசியிலே ஐந்தாஅகச் சுட்டிக்காட்டிச் சித்திரத்தின் பயங்கரமான சோகத்தை வெளியிடுகிறான்.

"நண்ணிய பெருங் கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகல் போல வாழ்வார்."

கடைசி வரியிலே கடைசிச் சொல்லிலே சித்திரத்தின் கசப்பு அத்தனையும் கொட்டி விடுகிறான் பாரதி. "பொறியற்ற விலங்குகள்" என்று வருணித்து விட்டதோடல்லாமல் அவற்றைப் போல் இவர்கள் "வாழ்வார்களாம்!". இது வாழ்வா? மனிதனுக்குரிய வாழ்வா? இந்தப் புண்ணிய நாட்டினிலே இதுவும் ஒரு வாழ்வா? என்கிற பொருட் தொனிகள், உணர்ச்சித் தொனிகள், நெஞ்சிலே சிந்தியவாறு முடிகிறது இந்த நொண்டிச் சிந்து.

உணர்ச்சிப் பிழம்பான இந்தப் பாடலில், கருத்துக்கள் எவ்வளவு ஒழுங்காக, சீராக வைக்கப்படுகின்றன. கவனியுங்கள். "ஞானமும் பொய்க்க நசிக்கு மோர் சாதி" என்று தத்துவப் பார்வையின் இன்றியமையாத் தன்மையை உணர்ந்த கவிஞன் பாடலில் அதை முதன்மைப்படுத்தவில்லை. அச்சத்தையே முதலில் வைத்தான். காரணம்? அலிக்கு இன்பம் இல்லை; கோழைக்குத் தர்மம் இல்லை. கோழைக்குத் தர்மம் கோழைத்தனம் ஒன்றுதான்! கோழைத்தனம் குடிகொண்டுவிட்ட நாட்டில் ஞானம் இருந்தென்ன போயென்ன? இரண்டும் ஒன்றுதான்! எனவெதான் "அச்சம் தவிர்" என்று புதிய ஆத்திசூடியில் துவக்கிச் சமயம் வரும் போதெல்லாமே பாடல்களிலும், கட்டுரைகளிலும் அச்சம் என்கிற முதற் பகைமையை, மூலப் பகையை, உட்பகையை முதலில் வேரறுக்கச் சொல்கிறான். புரட்சி செய்வதற்கு முதல் தேவையாக "நெஞ்சத்துணிவு வேண்டும்"; மேலும் துணிவு வேண்டும்; மேலும் மேலும் துணிவு வேண்டும்" என்று பிரெஞ்சுப் புரட்சியின் கலையைப் பயின்ற டாண்டன் (Danton) போதிக்கிற சொற்கள் இங்கு நினைவுக்கு வருகின்றன.

இவ்வாறு கருத்துக்களை ஆய்ந்து தேர்ந்து அளந்து வரிசைப்படுத்தி ஒவ்வொரு பாட்டிலும் கோவையாக அழகு தமிழிலே அமைப்பது பாரதியின் கவிதைக்குரிய முக்கிய இலக்கணங்களில் ஒன்றாகும். பாரதி சீரிய சிந்தனையாளன்; வெறும் வார்த்தை ஜாலங்கள் செய்யும் கவிஞனும் அல்ல; நல்ல முற்போக்கான கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை முழு வடிவத்திலே கண்டு தேர்ந்து ஒழுங்குபடுத்திச் சொல்ல இயலாமல் உள் சமநிலையற்ற உள்ளடக்கத்தோடு பாட்டிசைக்கும் கவிஞனும் அல்ல.

பாரதியின் பாப்பா பாட்டைப் பாருங்கள். பாப்பாவுக்குப் பழக்கமான எளிய சொற்களை மட்டுமே கையாள்வதிலே எத்துணை அக்கறையும் விழிப்பும் காட்டினானோ அதே போல் எந்தெந்தக் கருத்துக்களை -- ஆதாரக் கருத்துக்களை -- எப்படிச் சொல்வது என்பதிலும் மிகுந்த விழிப்பும் அக்கறையும் பாரதி காட்டி இருக்கிறான். உயர்திரு ரா.அ.பத்மநாபன் அவர்களின் "சித்திர பாரதி"யிலே இதற்குச் சான்று கிடைத்திருக்கிறது.

பாப்பா பாட்டை முதலில் பாடியபோது பாரதி எழுதிய சில வரிகள் பின்வருமாறு:

"சாதிப் பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்
நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய உடையவர்கள் மேலோர்."

இதைத்தானே மறுபடியும் சிந்தித்துப் பார்த்துவிட்டு பாரதி தன்னைத்தானே திருத்திக் கொள்கிறான்! சுயவிமர்சனம் தன்னியல்பாக வருகிறது - எந்தப் பாப்பாவும் கேட்காமலே, எந்தத் தாத்தாவும் கேட்காமலே!

"சாதிப் பெருமையில்லை பாப்பா" என்பதை "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று மாற்றுகிறான்.

எவ்வளவு பொருள் நிறைந்த மாற்றம்? சாதிகள் இருக்கலாம், ஆனால் அவை பற்றிப் பெருமை பாராட்டி நடக்காதே என்பது முதல் வரிகள். இப்போது, அந்தக் கருத்தும் தவறு என்று தீர்மானித்து "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று சாதிப்பேயின் மண்டையில் ஓங்கியடித்து விடுகிறான்.

அடுத்து ..........

"அதில் தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்" என்கிற வரியை "குலத் தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்" என்று திருத்துகிறான். முன்னே வந்த திருத்தத்தை யொட்டி இங்கே வினையின் தன்மையையும் நேராக்குகிறான். முன்பு "சாதிகள் இருந்தாலும் சாதியிலே பெருமையில்லை, எனவே தாழ்ச்சி யுயர்ச்சி செய்யாதே என்றான்; இப்போது சாதிகளே இல்லை என்று ஓர்ந்ததினாலே தாழ்ச்சியுயர்ச்சி சொல்வதே பாவம் என்று திருத்தத்தின் மூலம் கருத்துக்கு வலுவேற்றுகிறான்.

"நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய உடையவர்கள் மேலோர்"

என்கிற வரையைப் பார்க்கிறான். "தெளிந்த மதி" என்பதை விட "உயர்ந்த மதி" எனக் குறித்தல் சிறப்பு என்று உணர்கிறான். "உயர்ந்த மதி" என்று சொல்வதிலேயே தெளிவும் தொக்கி நிற்கிறது என்று காண்கிறான். பிறகு பாப்பாவுக்காகப் பாட்டுப் பாடப்படுகிறது என்பதைத் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்கிறான். பாப்பாவுக்கு இந்த நீதி, மதி எல்லாம் எப்படிக் கிடைக்கும்? கல்வியை மறந்து விட்டது எவ்வளவு பெரிய தவறு? என்று உணர்கிறான். குழந்தைக்குக் கல்வி இன்றியமையாததாயிற்றே! அதைப் பாட்டிலே செருகி விடுகிறான். எத்துணை விழிப்போடு, பொறுப்பு உணர்ச்சியோடு, பாப்பாக்களிடம் இந்த மகாகவி நடந்து கொள்கிறான்! வரிகள் பின்வருமாறு திருத்தப் பெறுகின்றன.

"நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"

இப்போது பாரதிக்கு "உடம்பு நேராச்சு; பாட்டும் நேராச்சு!"

இவை மட்டுமா? இந்தச் செய்யுளுக்கு முன் சென்ற இரு செய்யுளிலும் முக்கியமான திருத்தங்கள் செய்திருக்கிறான் பாரதி.

"அமிழ்தில் இனியதடி பாப்பா - எங்கள்
ஆரிய தேசமடி பாப்பா"

என்கிற, தான் முதலில் எழுதிப் பதிப்பித்த வரிகளை மறுபடியும் ஆராய்கிறான். குற்றம் கண்ணுக்குப் புலப்படுகிறது! குழந்தைக்கு ஆரியன், திராவிடன் என்றால் என்ன தெரியும். எது விளங்கும்? பிறர் ஒரு அர்த்தத்தில் அவற்றைப் பயில, இரண்டுக்கும் நடுவே பாப்பா சிக்கிக்கொண்டு இடர்ப்பட இடம் வைக்கலாமோ? கூடாது என்று தீர்மானிக்கிறான் பாரதி. பாப்பாவுக்குச் சங்கடமில்லாதவாறு வரியைத் திருத்த முற்படுகிறான். இதோ:--

"அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா"

இப்போது விஷயம் நேராகி விட்டது; உயர்வாகவும் அமைந்துவிட்டது. அதிலே பாரதிக்கு மனப்பூரிப்புத் தாங்கவில்லை -- குழந்தைகளோடு ஒட்டிக் கொள்கிறான். "எங்கள்" என்ற சொல்லுக்குப் பதிலாக குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாகச் சேர்ந்து கொண்டு "நம்" ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! என்று திருத்துகிறான்.

அதே போல்: "செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தெய்வமென்று கொண்டாடு பாப்பா!"

என்பதில் கடைசி வரியை "தினமும் புகழ்ந்திடடி பாப்பா" என்று திருத்துகிறான். திருத்திய பிறகு குழந்தைக்கு இந்த விளக்கத்தின் பயனைத் தரவேண்டிப் புதிதாக இரண்டு செய்யுட்களைப் பாப்பா பாட்டில் சேர்க்கிறான். அவை:

"வடக்கில் இயமமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!
வேதமுடைய திந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேத மில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!"

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானத்தைத் "தெய்வம்" என்று கொண்டாடு பாப்பா என்று சொல்வது பாரதிக்குச் சரியென்று படவில்லை. அதைத் "தினமும் புகழ்ந்திடடி" என்று திருத்திவிட்டான். பின் எதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா" என்று சொல்கிறான்? வேதமுடைய நாட்டை; வீரர் உள்ள நாட்டை! - இதைத் தெய்வமென்று கொண்டாடு என்கிறான்.

சொற்திருத்தங்கள் சிறியவையாயினும் பொருள் நிறைந்த திருத்தங்கள் அல்லவா? சொல்லின்பத்தைத் தெய்வமாகப் போற்றிய பாரதி கருத்து விஷயத்தில் - உள்ளடக்கத்தின் விஷயத்தில் - எவ்வளவு பிரமிக்கத்தக்க பொறுப்புணர்ச்சியும், ஆழ்ந்த சிந்தனையும் காட்டியிருக்கிறான்.

பாரதி மகாகவி என்பதற்கு இதுவும் ஒரு ஆணித்தரமான சான்றாகும்.

அகண்டாகாரமாக விரிந்து உயர்ந்து நிற்கும் வாழ்விலே ஏற்கனவே மனிதகுலம் சாதித்த சமுதாயச் சமன நிலைக்குரிய கருத்துக்களையும், பண்புகளையும், அவற்றிற்கிடையே இருக்கும் பரஸ்பர, ஆதார - இணைப்புக்களையும் பழுதறக் காக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி. அதோடு நில்லாமல் அந்த அகண்டாகாரமான வாழ்விலே இன்று காணவேண்டியிருக்கிற புதிய சமன நிலைக்கு அடிகோலக்கூடிய புதிய கருத்துக்களையும், பண்புகளையும், அவற்றிற்குரிய பரஸ்பர ஆதார இணைப்புக்களையும் ஒரே முழுமையாக (தத்துவமாகவும், செயல் திட்டமாகவும், செயலாகவும், கலையாகவும்) படைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சி; இவ்விரண்டு பொறுப்புணர்ச்சிகளும் மகாகவிகளின் சாதனையிலே வெளிப்படுவதைக் காண்கிறோம்.

உலக மகாகவி கத்தே தனது FAUST படைப்புக்கு இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். "போரும் அமைதியும்" என்கிற நவீன காலத்திய இதிகாசத்தை எழுத டால்ஸ்டாய் எட்டு ஆண்டுகள் செலவிட்டார் என்கிற பல செய்திகளின் அடியில் காணக்கிடக்கும் உண்மை இதுவன்றி வேறென்ன?

எனவேதான் அவர்களின் இலக்கியங்களை வெறும் இலக்கியங்கள் என்று மக்கள் கொள்வதில்லை; மனிதகுலத் தொன்மையின் தொடக்கப் புள்ளியிலிருந்து முன்னே தோன்றும் அடிவானம் வரைக்கும் ஓங்கி வளைந்த வானப் பாலங்கள், வான வளைவுகள், அவை என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள்.

நன்றி: ஆர்.கே.கண்ணன் "புது நெறி காட்டிய பாரதி. நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.




1 comment:

  1. //"அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
    அஞ்சாத பொருளில்லை அவனியிலே"//

    அதனால் தான் புதிய ஆத்திச்சூடியில் 'அச்சம் தவிர்' முதலில் வந்து நிற்கிறது.

    காந்திஜியின் முதல் பெரிய வேலை இந்த அச்சத்தினை மக்கள் மனதில் இருந்து போக்குவதாகவே இருந்துள்ளது.

    நல்ல ஆக்கம். அதனை எடுத்துத் தொகுத்தளித்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete

You can send your comments