Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, September 14, 2011

பாரதியின் வேண்டுதல்.

பாரதியின் வேண்டுதல்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி
வாடித் துன்ப மிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?"


இது பாரதி பராசக்தியிடம் விடுக்கும் சவால்.

மனிதன் பிறக்கிறான்; வளர்கிறான்; படிக்கிறான்; பிழைப்புக்கு வழி தேடி அலைகிறான்; வசதிகளைச் சேர்த்துக் கொள்கிறான்; சேர்த்ததை வைத்து சுகமாக வாழ்கிறான் -- இதுதான் வாழ்க்கை.

இதோடு வாழ்க்கை முடிந்து விட்டதா? இப்பெரும் உலகில் நாம் தனி மரம் அல்ல. நம்மைச் சுற்றியுள்ள ஒரு சமுதாயக் காட்டில் நாமும் ஒரு மரம்.

நாம் வாழ்ந்தால் போதும் என நினைத்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன கதியானாலும் சரிதான் என்கிற எண்ணம் சரியா?

சமூகத்தைப் பற்றி கவி கா.மு.ஷெரீப் ஒரு பாடல் இயற்றியிருக்கிறார். அது: "வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா" என்பது அந்தப் பாடல்.

நீ வாழ்ந்தாலும் பிறர் பொறுக்க மாட்டார்கள், நம் அன்பிற்குரியவர்கள் தவிர. தாழ்ந்தாலும் கைகொட்டி மகிழ்வார்கள் நம் சுற்றத்தார் தவிர. இந்த நிலைமை ஏன்? சிந்திக்க வேண்டாமா?

வாழ்ந்த காலத்தில் நாம் நம்மை மட்டுமே நினைத்து வாழ்ந்தோம். பிறர் நம் சிந்தையில் படவேயில்லை. தாழ்ந்த காலத்தில் பிறர் கரங்களை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காத்திருக்கிறோம், அவர்கள் நமக்குக் கை கொடுப்பார்கள் என்று. வாழும்போது ஒரு நிலை, தாழ்ந்த பின் பிரிதொரு நிலையா? சிந்திக்க வேண்டும்.

உலகம் நம்மை எப்போதும் ஒரே மாதிரியாக, வாழும் போதும் சரி, சறுக்கி விழுந்த போதும் சரி, உதவிக் கரம் நீட்டி, உபசார வார்த்தைகள் பேசி, ஆதரவுக் கரம் நீட்டும் அன்புச் சுற்றமாக இருதல் வேண்டுமென்றால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

நம் பெரியோர்கள் என்னென்னவோ சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சொற்கள் எல்லாம் நம் காதுகளில் பட்டனவே தவிர, அவை நம் நெஞ்சத்தில் சென்று தங்கவில்லையே என்ன செய்வது. செல்வமும், சுகமும், செல்வாக்கும் இருக்கும் போது நாம் அறிவுசால் நண்பர்களின், பெரியோர்களின் சொற்களை செவிமடுப்பதில்லையே.

இறைவனிடம் சென்று இறைஞ்சுகின்றோம். அதுவும் கெட்ட பின்பு, ஞானியாக ஆன பின்பு. வாழ்ந்த காலத்தில் அந்த இறைவன் நம் நினைவுக்கு வருவதில்லை. நாத்தழும்பேற நாத்திகனாக இருப்பவன் கூட தனக்கு ஒரு துன்பம் என்கின்ற போது இறைவைனை நினைக்க முயல்கிறான்.

இறைவனுக்கு ஆத்திகனும் ஒன்றுதான், நாத்திகனும் ஒன்றுதான். விருப்பு, வெறுப்பு அற்றவன் இறைவன். அவன் படைத்த ஜீவன்களிடமெல்லாம் அவனுக்கு அக்கறை உண்டு. அவரவர் செய்த பலன்களுக்குத் தக்க வினைகளை அவரவர் அனுபவிக்க விட்டு அவன் வேடிக்கை பார்க்கிறான் என்கிறார்கள் ஞானிகள்.

நாம் நம்மை ஞானிகளாக அல்ல, அறிஞர்களாக அல்ல, அசடர்களாகவே எண்ணிக் கொள்வோம். நமக்கு இறைவன் என்ன பணித்திருக்கிறான்?

நான் என்ன செய்யப் போகிறேன், எப்படி வாழப் போகிறேன், பிறருக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்பதற்கு நம்மிடம் ஏதாவது திட்டங்கள் உண்டா?

அன்றன்று வருவதை அப்போதைக்கப்போது எதிர்நோக்கி வாழ்க்கையை கடமையாகச் செய்து முடிப்பது வாழ்க்கையா? சுயநலமும், தன்னைப் பற்றிய சிந்தனை, அக்கறை மட்டும் கொண்டு வாழ்வது இதுதான் வாழ்க்கையா? இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டு மகாகவி பாரதியை என் வழிகாட்டியாக எண்ணி, என் வினாக்களையெல்லாம் அந்த மகாகவியிடம் வெளியிட்டேன்.

அவன் தான் மறைந்து போய் 90 ஆண்டுகள் ஓடிவிட்டனவே. அவன் வந்து என்ன வழி சொல்லப் போகிறான். ஆனால் என் நம்பிக்கை வீண் போகவில்லை. மகனே! நான் எழுதி வைத்திருக்கும் கருத்துக்களையெல்லாம் ஒழுங்காகப் படி. அதன்படி நட. உன் சந்தேகங்கள் விலகும். அறிவில் தெளிவு உண்டாகும். வாழ்க்கை பிரகாசமாக அமையும், போ! அவற்றைப் படி என்றான்.

பாரதி என் குரு. பாரதி என் தெய்வம். பாரதி என் வழிகாட்டி, பாரதி என் மன வருத்தங்களுக்கெல்லாம் மருந்து. அவன் சொன்னதைச் செய்யாமல் இருக்க முடியுமா? படிக்கத் தொடங்கினேன்.

இன்னமும் படிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். பாரதியை முழுமையாக யாராவது படித்து முடித்து விட முடியுமா? எனக்குத் தெரிந்து இல்லை.

கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளர். மன்னார்குடியில் ஆசிரியராக இருந்த நாராயணசாமி என்பவர். அவர் ஒரு பாரதி அறிஞர். பாரதியைக் கரைத்துக் குடித்தவர். அவர் ஒரு முறை திருலோக சீதாராம் அவர்களிடம் சென்று, ஐயா! நான் பாரதியை முழுமையாகப் படித்து விட்டேன். இனி என்ன செய்யலாம்? என்றார்.

திருலோகம் சொன்னார், "பாரதியைப் படி" என்றார். கரிச்சான் குஞ்சுவுக்கு விளங்கவில்லை. பாரதியைப் படித்துவிட்டேன் என்கிறேன், இவர் பாரதியைப் படி என்கிறாரே என்று.

திருலோகம் மேலும் விளக்கினார். "நாராயணசாமி! பாரதியின் எழுத்துக்களை நீ படித்து முடித்து விட்டாய். எனக்கும் புரிகிறது. ஆனால், அவன் அந்த எழுத்துக்கள் மூலம் என்ன சொல்ல வந்தான், என்ன சொல்லியிருக்கிறான், அவற்றை ஏற்றுக் கொள்வதால், அல்லது புரிந்து கொண்டு நடப்பதால் என்ன பயன் என்பதையெல்லாம் மீண்டும் மீண்டும் படித்துத் தெளிந்தால்தான் அடுத்த கட்டம் பற்றி சொல்ல முடியும். கரைகாண முடியாத கருத்துக் குவியல்கள், கடல் போன்ற அகன்ற பரந்த அறிவுப் பெட்டகம், அதனை ஒருவன் வாழ்க்கை காலத்தில் படித்து முடித்து விட்டதாகவோ, புரிந்து கொண்டதாகவோ எப்படி கருத முடியும்? நீ படி. மீண்டும் படி. புதிய புதிய செய்திகள், புதிய புதிய கருத்துக்கள் உனக்குத் தெளிவாகும். அப்போது வா" என்றார் திருலோகம்.

பாரதி புகழ்பரப்பிய பலரில் இவரும் ஒருவர். பாரதி புகழ் பரப்பிய ஜீவா, தொ.மு.சி.ர., வ.ரா., கல்கி, ராஜாஜி, ம.பொ.சி., பாரதிதாசன் ஆகியோர் வரிசையில் பெருமைக்குரியவராக விளங்கியவர் திருலோகம். இவர் திருவையாற்றில் லோகநாதன் என்பவரின் மகன். பாரதி அன்பர். "சிவாஜி" எனும் பத்திரிகை ஆசிரியர். சிறந்த கவிஞர்.

அந்த பாரதி அன்பர் சொல்லை கரிச்சான்குஞ்சுக்கு மட்டும் சொன்னதாக நினைக்கவில்லை. நமக்கும் அதுதானே பதில். எனவே பாரதியை மறுபடியும் எடுத்துப் படிக்கலாம் என்று எண்ணி படிக்கத் தொடங்கினேன்.

பாரதியின் தேசியப் பாடல்களைப் பாடி மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. வந்தேமாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் என்று குதித்துக் குதித்துப் பாடிய காலம் உண்டு. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" என்று மூவண்ண தேசியக் கொடியைப் பார்த்து ஏங்கிய காலம் ஒன்று உண்டு.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே" என்று இந்த புண்ணிய பூமியைத் தொட்டு வணங்கி மகிழந்த காலம் ஒன்று உண்டு. எந்தையும், பாட்டனும், முப்பாட்டனும், அதற்கு முன்பாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நமது முன்னோர்கள் வாழ்ந்து, வளர்ந்து, மகிழ்ந்து முடிந்தது இந்த புண்ணிய பூமியில்தான். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே, காற்றோடு காற்றாக மறைந்து போனார்களா. அல்லது வானிலிருந்து இறங்கி வந்த புஷ்பக விமானத்தில் பறந்து சென்று விட்டார்களா. இல்லை இல்லை.

இந்த புண்ணிய பூமியில்தான் அவர்கள் பூந்துகளாக மாறி மண்ணோடு மண்ணாக, நாம் நடக்கும் பாதைகளில் எல்லாம் அவர்களது பூந்துகள்கள் சிந்திக் கிடக்கக் காண்கிறோம். அத்தகைய புண்ணீய பூமி இது. இதனை 'வந்தேமாதரம்' வந்தேமாதரம் என்று வாயாற வணங்கி வாழ்த்துதல் என் கடமை அல்லவா?

பின்னர் அவனது தனிப் பாடல்கள். கண்ணன் பாடல்கள். பாஞ்சாலி செய்த சபதம். குயில் பாட்டு இப்படி எத்தனை எத்தனை பாடல்களைப் படித்து, ரசித்து, மீண்டும் மீண்டும் சொல்லி பாராட்டி வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.

பாரதி குறித்து பேசுபவர்கள் எல்லாம் பாரதி அவன் காலத்தில் வறுமையில் வாடினான், பிரிட்டிஷ் போலீசுக்குப் பயந்து புதுச்சேரியில் பதுங்கி வாழ்ந்தான் என்றேல்லாம், அரை குறை ஞானத்தை வெளிப்படுத்தும் போது மனம் வேதனைப் பட்டது.

அந்த வானளாவிய புகழ் படைத்தவனை குறுகிய சாதி, சமய சம்புடங்களில் அடைத்து வைத்து வெறுக்கவோ, விரும்பவோ செய்யும் அறியாமையை எண்ணி மனம் வாடிய காலம் ஒன்று உண்டு.

அவன் தனது வறுமையை நீக்கிக் கொள்ள விரும்பவே இல்லையா? ஏன் இல்லை. அவனுக்கு வறுமை செய்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல. அதற்காக அவன் பராசக்தியிடம் சென்று முறையிட்டு, பராசக்தி, என்னை உப்புக்கும், புளிக்கும் சங்கடப் படுத்துவாயானால் நான் உன்னைப் பாட மாட்டேன். நான் ஒரு நாத்திகனாக மாறிவிடுவேன். அப்படி நான் மாறாமல் இருந்து, உன்னை சதா சர்வ காலமும் பாட வேண்டுமானால் என் கவலைகளையெல்லாம் போக்கிவிடு என்று வேண்டினான்.

அப்போதும் எனக்கு எல்லா செல்வங்களையும் கொடுத்துவிடு. நான் மகிழ்ச்சியோடு என் பிள்ளைகளோடும் மனைவியோடும் வாழ்ந்து கொள்கிறேன் என்று கேட்டானா? இல்லயே.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய். வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்றுதான் வேண்டினான்.

தான் சுகமாக வாழ்வது எதற்காக? தடங்கல் இல்லாமல் பராசக்தியை பொழுதெல்லாம் பாடுவதற்காக. பாரதியின் வேண்டுதல்கள் எல்லாம் தனக்காக இல்லை. தனக்கு எவையெல்லாம் வேண்டும் என்று கேட்கிறானோ, அவையெல்லாம் தான்ம் இந்த நாடும் மக்களும் நல்வாழ்வு வாழ பாடுபட வேண்டுமென்பதற்காக என்கிறான்.

இதைத்தான் நான் இன்று உங்களிடம் ஒரு சில வார்த்தைகள் பேசவிருக்கிறேன்.

நாமெல்லாம் இறைவனிடம் சென்று வேண்டுகிறோம். இறைவா, என்னையும், என் குடும்பத்தையும் நன்றாக வைத்திரு. எங்களின் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய். மாறாக நான் உனக்கு அபிஷேகம் செய்கிறேன். நெய்யும், பாலும், களிதேனும் வைத்து படைக்கிறேன். இது வியாபாரம். பக்தி அல்ல.

பின்னர் இறைவனிடம் எப்படி வேண்டுவது. இந்த சந்தேகம் எழுவதும் இயல்புதானே. நம் முன்னோர்கள் எந்த சடங்கினைச் செய்தாலும், இறைவழிபாட்டின் நிறைவாக சமஸ்கிருத மந்திரம் ஒன்றினைச் சொல்வார்கள். அது, "சர்வே ஜன: ஸுகினோ பவந்து" இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களும் இன்புற்று வாழ அருள் செய்வாயாக! என்பது அது.

நமது முன்னோர்களும், "எல்லோரும் இன்புற்று வாழ்வதே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்று தாயுமானவ சுவாமிகள் பாடியிருப்பதை நாம் அறிவோம்.

பாரதி பல்வேறு சந்தர்ப்பங்களில் பராசக்தியிடம் வேண்டுதலைச் சமர்ப்பிக்கிறான். அந்த வேண்டுதல்கள் எல்லாம் தனக்காக அல்ல. அப்படிப்பட்ட சில வேண்டுதல்களை இப்போது பார்ப்போம்.

இறை வழிபாட்டை விநாயகரிடமிருந்துதான் தொடங்குகிறோம். நாமும் அந்த விநாயகரிடமிருந்தே தொடங்கலாம்.

பாரதி விநாயகப் பெருமானிடம் சென்று துதிக்கிறான்.

"கற்பக விநாயகக் கடவுளே போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!"

இப்படி விநாயகரை முகஸ்துதி செய்து தன் வேண்டுதலைத் தொடங்குகிறான். முகஸ்துதி செய்தவுடன் தன் வேண்டுகோளை வைத்தால் அவர் புரிந்து கொள்ள மாட்டாரா? இவன் சுயநலத்தோடு என்னிடம் வந்திருக்கிறான் என்று. ஆகையால் பின்னும் சில சொல்லுகிறான். விநாயகன் யார்?

"படைப்புக்கு இறை அவன். பண்ணவர் நாயகன்
இந்திர குரு என இதயத்து ஒளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைத் கருத்திடை வைப்போம்."

கணபதி தாளைக் கருத்திடை வைத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்? அவற்றையும் அவனே சொல்கிறான். கேட்போம்.

"குணம் அதிற் பலவாம், கூறக் கேளீர்
உட்செவி திறக்கும்; அகக் கண் ஒளிதரும்
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்;
*கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
(கண்ணே செவி - பாம்புக்கு)
விடத்தையும் நோவையும் வெம்பகை அதனையும்
துச்ச மென்றெண்ணித் துயரிலாது இங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;
அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மையும் எய்தவும்
இங்கு நாம் பெறலாம்; இஃதுணர்வீரே!"

இந்த புகழ்ச்சிகளுக்கெல்லாம் கணபதி இரங்கவில்லை போலும். பாரதி மேலும் துதி பாடி அவன் மனதைக் குளிர்விக்கிறார். தனக்காக அல்ல, நமக்காக. இந்த உணர்வோடேயே இவை அத்தனையையும் நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். இங்கு அல்லலுறும் அறியாமையில் உழலும் மக்களுக்காக இவை அத்தனையையும் பாரதி பாடுகிறான். கணபதியின் கால்களை இறுகப் பிடித்துக் கொள்கிறான். கணபதிக்கு ஒருக்கால் குனிது காலைப் பார்க்க முடியாமல் அவன் பெரு வயிறு தடுத்ததோ என்னவோ, பாரதி நான் உன் கால்களைப் பிடித்துக் கொண்டேன் என்று கணபதிக்குத் தெரிவிக்கிறான்.

"காலைப் பிடித்தேன் கணபதி, நின் பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனம் எனும் நாட்டி நிறுத்தல் குறியெனக்கே."

என் மனம் எனும் நாடு இருக்கிறதே, அதில் உன்னுடைய செங்கோல்தான் ஆட்சி புரிய வேண்டும் என்பதே என் குறி என்கிறான் பாரதி. அதற்காக விநாயகனின் காலைப் பிடித்தான், அவன் பாதங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பல நூல்களைச் சமைத்தான். நொடிப்பொழுதும் அவனுடைய வேலையில் தவறு நிகழாமல் நல்ல செயல்களை மட்டுமே செய்து, அந்த விநாயகப் பெருமானின் ராஜ்யம் தன் மனசாம்ராஜ்யத்தில் கோலோச்ச வேண்டும் என்று வேண்டுகோளை முன் வைக்கிறான்.

இனிதான் அவனுடைய வேண்டுகோள்கள் என்ன வென்று விநாயகரிடம் சொல்லுகிறான்.

"எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்திற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலை வந்திட நீ செயல் வேண்டும்.
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!"

இத்துடன் முடிந்துவிடவில்லை பாரதியின் வேண்டுகோள். தன்னிலை விளக்கங்கள் சில கொடுக்கத் தொடங்குகிறான். தனக்குச் சில கடமைகள் இருக்கிறதாம். அவை எவை?

"கடமை யாவன தன்னைக் கட்டுதல்,*"
(ஐம்பொறிகளின் சுய கட்டுப்பாடு) இது முதலாவது கடமை.
பிறர் துயர் தீர்த்தல்; இது இரண்டாவது கடமை
பிறர் நலம் வேண்டுதல்; இது மூன்றாம் கடமை
நான்காவதாக ஒன்று, அது அதி முக்கியமானது, அதுதான் பரம்பொருளை வேண்டுதல். பரம்பொருள் என்றால் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவர் அல்லவா? அவரவர்க்குரிய தெய்வங்களை வழிபடுதல் நான்காவது கடமை. அதிலும் எத்தனை பெருந்தன்மை, பரந்த மனப்பான்மை.

"விநாயகன் என்றும், வேலினைத் தாங்கும் குமரக் கடவுளாகவும்;
பாற்கடலில் பள்ளி கொள்ளும் நாராயணனாகவும்;
கங்கை நதியைச் சடையில் அணிந்த சிவபெருமானாகவும்,
பிற நாடுகளில் இறைவனை பல பெயர்களில் வழிபடுகிறார்களே
அல்லா என்றும், யெஹோவா என்றும் தொழுது அன்புறும் தேவர்களாயும்;
திருமகள், பாரதி, உமை எனும் தேவியர்களாகவும்;
இந்த உலகைக் காக்கும் ஒருவனைப் போற்றுதல் - நான்காவது கடமை.

எனக்குச் சில சமர்த்துக்களை அருள வேண்டும். அவை, அறம், பொருள், இன்பம், வீடு எனும் இவை நான்கையும் அடையும் வழியினைக் காட்ட வேண்டும்.

இவை அனைத்தையும் எங்கு வீற்றிருக்கும் விநாயகப் பெருமானிடம் வேண்டுகிறார் தெரியுமா? புதுவையில் புகழ் பெற்று விளங்கும் மணக்குள விநாயகரிடம்.

"மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா
நான் தனைத் தான் ஆளும் வல்லமை பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தானே எய்தும்.

அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி நின் இரு தாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே." என்கிறார் பாரதி கணபதியிடம்.

மேலும் தான் எப்படி இருக்க வேண்டும் என்பதை, "யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய், யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பினேன்" என்கிறார்.

கணபதி அருள் செய்தான். விநாயகப் பெருமானின் அருள் செய்த மாயம் என்ன? பாரதிக்கு என்ன நேர்ந்தது. சாதாரண மனிதன் வாழும், உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையைப் போல வாழ்ந்தானா? இல்லையே.

"அச்சம் இல்லை; அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை; நாணுதல் இல்லை
பாவம் இல்லை; பதுங்குதல் இல்லை
ஏது நேரினும் இடர்ப்பட மாட்டோம்"

அப்பர் பெருமான் சொன்னது போல:

"நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம்
நடலை இல்லோம்; ஏமாப்போம், பிணியறியோம்
பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும் துன்பமில்லை;"

என்பது போன்ற நிலையினை அடைந்தான் பாரதி. அது மட்டுமா?

"அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்
எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்
வானம் உண்டு; மாரி உண்டு
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும், அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும்; சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டும் காண நல் உலகும்
களித்து உரை செய்யக் கணபதி பெயரும்
என்றும் இங்கு உளவாம்; சலித்திடாய், ஏழை
நெஞ்சே, வாழி, நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக்கு இடம் கொடேல் மன்னோ!
தஞ்சம் உண்டு, சொன்னேன்
செஞ் சுடர்த் தேவன் சேவடி நமக்கே!"

இறைவனின் பாதார விந்தங்கள் இருக்கும் போது கவலைகள் ஏன். அவனை தஞ்சம் என்று அடைந்தால் போதும். வாராததெல்லாம் கிடைக்கும். இந்த வரங்கள் எல்லாம் கிடைத்து விட்ட பிறகு பாரதி! நீ என்ன செய்யப் போகிறாய்? அவனே பதிலும் சொல்லுகிறான்.

"நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே, இம் மூன்றும் செய்!"

தன் உள்ளத்துக்கு, சிந்தைக்கு உத்தரவு பிறப்பித்து விட்டான். முத்தொழிலை விடாமல் செய்து வா என்று. அவை கவிதை, நாட்டுக் குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்.

இப்படிப்பட்ட பக்தியினால் உனக்குக் கிடைப்பதென்ன? நீ அடையப் போகும் பயன்கள் என்ன?

"பக்தி உடையார் காரியத்தில் பதறார்;
மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்ல செய்து பயனடைவார்"

கணபதியிடம் பெற்ற வரங்களைக் கொண்டு பாரதி! நீ என்னவெல்லாம் செய்யத் துணிந்தாய்? சொல்!

"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள். புல், பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும் தேவ தேவா!
ஞானாகாசாத்து நடுவே நின்று கொண்டு நான்
பூமண்டலத்தில் அன்பும், பொறையும்
விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல் உயிரெல்லாம்
இன்புற்று வாழ்க! என்பேன். இதனை நீ
திருச்செவி கொண்டு, திருவுள்ளம் இரங்கி
'அங்ஙனே ஆகுக!' என்பாய், ஐயனே!

(பெரியோர்கள் உலக மக்கள் அனைவரும் நலம்பெற்று வாழ்க என்பதை
'சர்வே ஜன: ஸுகினோ பவந்து' என்று சொல்லும்போது சுற்றிலும் உள்ளவர்கள்
'ததாஸ்து' என்பார்கள். ததாஸ்து என்றால் "அங்ஙனமே ஆகுக' என்பது பொருள்
அதைத்தான் பாரதி இங்கு தான் உலகம் வாழ பிரார்த்திக்கும் போது இறைவன்
ததாஸ்து சொல்ல வேண்டுமென்கிறான்)

"இந்நாள், இப்பொழுது எனக்கு இவ்வரத்தினை
அருள்வாய்: ஆதி மூலமே! அனந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலி!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம்! சரணம்! சரணம் இங்குனக்கே!"

இப்படி விநாயகப் பெருமானிடம் தன் வேண்டுகோளை முன்வைத்த பின் மனதில் ஓர் உறுதி எடுத்துக் கொள்கிறான். அது பிற உயிர்களுக்காக, உலகத்து நன்மைக்காக தவம் புரிதல் என்பது.

"செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு."

இப்படியெல்லாம் செய்து என்ன சாதிக்கப் போகிறாய் பாரதி. உன் குறிக்கோள் தான் என்ன? நீ செய்யும் தவத்தின் பலன் தான் என்ன" சொல்லேன் என்று கேட்டால் சொல்கிறான்.

"பொய்க்கும் கவலைப் பகை போக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன்: தெய்வ விதி இஃதே!"

பொய்க்கும் கலியைக் கொன்று கிருத யுகத்தைக் கொணர்வானாம். தெய்வ விதி இஃதாம். மனத்தில்தான் எத்தனை உறுதி, எத்தனை திடம்! கலி வீழ்ந்ததா, கிருத யுகம் எழுந்ததா? தீர்ப்பு எழுத நாம் தான் முயல வேண்டும். அது நம் கைகளில்தான் இருக்கிறது. கலியில் விழுந்து கிடப்போமா, கிருத யுகத்தைத் தட்டி எழுப்புவோமா என்பது.

கணபதியிடம் வேண்டி நின்ற பாரதி பராசக்தியிடம் செல்கிறான். அவளிடம் சென்று 'நீயே சரணம்' என்று கூவுகிறான்.

"நீயே சரணம் என்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி
தாயே எனக்கு மிக நிதியும் - அறம்
தன்னைக் காக்கும் ஒரு திறமும் - தரு
வாயே யென்று பணிந்து ஏத்திப் - பல
வாறா நினது புகழ் பாடி - வாய்
ஓயே னால் அது உணராயோ? - நின
துண்மை தவறுவதொ ரழகோ?"

அம்பிகை பாரதியைக் கருணையுடன் பார்க்கிறாள். மகனே, நான் உண்மை தவறவில்லை. நீ எப்போதும் என் புகழ் பாடி வாய் ஓயாமல் பாடுகிறாய்; தெரியும். உனக்கு என்ன வேண்டும் கேள்" என்கிறாள். பாரதி சொல்கிறார்.

"நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீய வினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயிராக்கி - எனக்
கேதும் கவலை யறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
ஸந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!" பிறகு?

"தோளை வலியுடைய தாக்கி - உடற்
சோர்வும் பிணி பலவும் போக்கி - அரி
வாளைக் கொண்டு பிளந்தாலும் - கட்டு
மாறா வுடலுறுதி தந்து - சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி
நண்ணித் திகழ் முகம் தந்து - மத
வேளை வெல்லும் முறை கூறித் - தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்." சரி! வேறு என்ன வேண்டும்?

"எண்ணும் காரியங்க ளெல்லாம் - வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்
பண்ணப் பெரு நிதியம் வேண்டும் - அதில்
பல்லோர் துணை புரிதல் வேண்டும் - சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக
நன்றா யுளத் தழுந்தல் வேண்டும் - பல
பண்ணிற் கோடி வகை யின்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்." என்னவெல்லாம் வேண்டும் சொல்!

"கல்லை வயிரமணி ஆக்கல் - செம்பைக்
கட்டித் தங்க மெனச் செய்தல் - வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் - பன்றிப்
போத்தைச் சிங்க வேறாக்கல் - மண்ணை
வெல்லத் தினிப்பு வரச் செய்தல் - என
விந்தை தோன்றிட இந் நாட்டை - நான்
தொல்லை தீர்த்து உயர்வு, கல்வி - வெற்றி
சூழும் வீரம் அறிவு ஆண்மை"

"கூடும் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளும் கோடி வகைத் தொழில்கள் - இவை
நாடும் படிக்கு வினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தி யெங்கும் ஓங்கக் - கலி
சாடும் திறன் எனக்குத் தருவாய் - அடி
தாயே! உனக்கு அரியது உண்டோ? - மதி
மூடும் பொய்மை இருள் எல்லாம் - எனை
முற்றும் விட்டு அகல வேண்டும்." ஆகா! போதுமா? வேறு ஏதும் வேண்டுமா?

"உய்யக் கொண்டருள வேண்டும் - அடி
உன்னைக் கோடி முறை தொழுதேன் - இனி
வையத் தலைமை எனக்கு அருள்வாய் - அன்னை
வாழீ, நின்ன தருள் வாழி.

"ஓ காளி, வலிய சாமுண்டி - ஓங்காரத் தலைவி என் னிராணி"

என்ன விளைந்தது. கலி விழுந்தது. கிருத யுகம் மலர்ந்தது. வெற்றி, வெற்றி, வெற்றி எங்கும் காண்!

"எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேனுக்கு அருளினள் காளி
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாரும் மானுட மாயினும், அஃதை
படுத்து மாய்ப்பள் அருட் பெருங் காளி
பாரில் வெற்றி எனக்குறு மாறே!

"எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி
கண்ணு மாருயிரு மென நின்றாள்
காளித் தாயிங் கெனக்கருள் செய்தாள்
மண்ணும் காற்றும் புனலும் மனலும்
வானும் வந்து வணங்கி நில்லாவோ?
விண்ணுளோர் பணிந்து ஏவல் செய்யாரோ
வெல்க காளி பதங்களென் பார்க்கே?"

சில சொற்களுக்கு பாரதி தரும் விளக்கம் சிந்தனைக்கு உரியன. அவற்றில் சிலவற்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

முதலில் மேலோர் எனப்படுவோர் யார் என்பதற்கு பாரதி சொல்லும் விளக்கம்.

"வையகம் காப்பவரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய் அகலத் தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்" என்கிறான்.

எது சிறந்த தவம் எனும் கேள்விக்கு பாரதி தரும் பதில்.

"உற்றவர், நட்டவர், ஊரார் - இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் - இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை."

யோகி என்பவன் யார்? எனும் கேள்விக்கு பாரதி சொல்கிறார்.

"பக்கத்தில் இருப்பவர் துன்பம் - தனைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி
ஒக்கத் திருத்தி உலகோர் - நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி"

யோகம் என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன?

"ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் - உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ் ஞானம்."

நிறைவாக பாரதி சொன்ன அதே கருத்தை உங்கள் முன்பு நானும் வைக்கிறேன்.

"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமை யென்றோதும்
மூன்றில் எது வருமேனும் - களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி"

பாரதி புகழ் ஓங்குக! நன்றி! வணக்கம்!!




















4 comments:

  1. ஆஹா! அருமை!! அற்புதம்!!!...

    இந்த சொற்பொழிவை அச்சிட்டு எடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் கிழக்குக் கடற்கரையில் நின்று கொண்டு மகாகவியை மனதில் நினைத்துக் கொண்டு அவன் எனதருகே, அருகிலே சிம்மாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு... அவன் முன்னே அவனைப் போல் பாடுவதாக கூறி ஏற்ற இரக்கத்தோடு உரக்கப் பாட வேண்டும்.. அப்போது கிடைக்கும் ஆனந்தம் தான் அந்த பேரானந்தம்....

    வழக்கமாக பாரதியின் பாடல்களை அவனின் பாணியிலே நெஞ்சை நிமிர்த்துக் கொண்டும், நேர்கொண்ட பார்வையில் முகத்தை சற்று உயர்த்திக் கொண்டும் விண்ணைப் பார்த்தவாறு பாடி பரவச மடைந்தால் தான் முழுவதுமாக அனுபவித்த திருப்தி கிடைக்கும்.

    "வேதம் புதுமை செய்" என்றான் அவனே அதை செய்தான்... ஆக, அவன் படைத்த அந்த புதுமையான வேதத்தைப் புரிந்து கொள்ள பராசக்தியின் அருள் நிச்சயம் வேண்டும். பெரும்பாலும் அவன் யோக நிலையில் நின்றே அவனின் தொழில் செய்து இருக்கிறான்... அதைதானே அவனும் வலியுறுத்துகிறான்... அப்படி இருக்க அந்த தொழிலில் எத்தனை அற்புதம் புரிந்திருப்பான்... அதை எத்தனை காரண காரியங்களை புகுத்தி இருப்பான்... உண்மையில் சான்றோர்கள் கூறுவது போல்... தோண்ட தோண்ட புதிய பொருள் கிடைக்கும் அறிவுச் சுரங்கம் அவனது கவிகள்.

    அவன் வேறு அவன் படைப்பு வேறு என்று இருந்ததே இல்லை... அவனின் ஆக்கம் தான் அவனின் சுய சரிதை. தோன்றினான், எண்ணி விரும்பினான், வேண்டினான், உழைத்தான், பெரிதிலும் பெரிதே வேண்டினான் அதன் படியே அவதார நோக்கத்தையும் கூறி பேரொளியில் கலந்திருக்கிறான்.

    இவனது ஆக்கங்கள், சிந்தனைகள், செயல் பாடுகள் இவைகள் யாவும் சத்தியமானவை... இவன் ஞானத்தை மட்டுமே போற்றி, உலகம் ஒரு மாயை என்று கூரித்திரிந்தவனே இல்லை.... இங்கே பாருங்கள்..

    "அண்டம் சிதறினால் அஞ்ச மாட்டோம்
    கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
    யார்க்கும் அஞ்சோம்; எதற்கும் அஞ்சோம்
    எங்கும் அஞ்சோம்; எப்பொழுதும் அஞ்சோம்
    வானம் உண்டு; மாரி உண்டு
    ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்
    தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
    உடலும், அறிவும் உயிரும் உளவே;
    தின்னப் பொருளும்; சேர்ந்திடப் பெண்டும்
    கேட்கப் பாட்டும் காண நல் உலகும்
    களித்து உரை செய்யக் கணபதி பெயரும்
    என்றும் இங்கு உளவாம்; சலித்திடாய், ஏழை
    நெஞ்சே, வாழி, நேர்மையுடன் வாழி!
    ....................................."

    அப்படி இருக்க இவனை எப்படி? வேதாந்தி என்னும் பெட்டிக்குள் பூட்டி வைக்க, நினைக்க துணிந்தார்கள் என்று எண்ணும் போது தான்.... வேண்டுமென்றே ஒதுக்குகிறார்கள் என்ற வருத்தம் பெருகுகிறது....

    வேத உபநிடதங்களை எல்லாம் படித்து அதன் படி வாழ்ந்து மறைந்தவன்.

    "எவர்கள் அவித்யையை மட்டும் உபாஸிக் கிறார்களோ
    அவர்கள் காரிருளில் புகுகின்றனர்.
    எவர்கள் வித்யையில் மட்டும் ஆசை வைக்கிறார்களோ
    அவர்கள் இன்னும் அதிகமான இருளில் புகுகின்றனர்.
    அது அவித்யைக்கும் அப்பாற்பட்டது.
    அது வித்யைக்கும் அப்பாற்பட்டது.
    இது ஞாநிகளிடமிருந்து நாங்கள் கேட்டறிந்தது
    வித்யை அவித்யை - இரண்டும் இணைத்த வழியை அறிந்தவன்
    எவனோ, அவனே
    அவித்யை மூலம் மரணத்தை வெல்கிறான்
    வித்யை மூலம் அமரத்துவம் அடைகிறான்."

    இந்த ஈசா உபநிடதம் கூறும் இவைகளை தான் பாரதி தன் வாழ்நாளில் கொண்டு, மரணத்தை வென்று, அமரத்துவம் எய்தினான்.

    அருமையான சொற்பொழிவு (என்றே நினைக்கிறேன்)... அருமை. அருமை.
    நன்றிகள் ஐயா!

    வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

    ReplyDelete
  2. அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு நன்றி..
    உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..மிக்க நன்றி..
    விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..கிட்டத்தட்ட வகுப்பறையிலே http://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=5724424154129672542 இலே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..விளக்கம் பெற்றேன்..மீண்டும் நன்றி..

    ReplyDelete
  3. அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு நன்றி..
    உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..மிக்க நன்றி..
    விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..கிட்டத்தட்ட வகுப்பறையிலே http://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=5724424154129672542 இலே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..விளக்கம் பெற்றேன்..மீண்டும் நன்றி..

    ReplyDelete
  4. அய்யா கோபாலன் அவர்களுக்கு,தெளிவான விளக்கத்துக்கு நன்றி..
    உங்கள் பக்கத்துக்கு வந்து படித்தேன்..பாரதியின் வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றேன்..மிக்க நன்றி..
    விளக்கவுரை யாரும் எழுதாமலேயே படித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்திலான தமிழில்தான் பாரதி எழுதியிருக்கிறார் என்பது படிக்கும் ஆர்வத்துக்கு இடையூறாக இல்லாமல் இருக்கிறது..கிட்டத்தட்ட வகுப்பறையிலே http://www.blogger.com/comment.g?blogID=4586112903071555610&postID=5724424154129672542 இலே கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை பாரதியைப் பற்றி எதேச்சையாக மிக சமீபத்தில் நீங்கள் பதிவிட்டிருக்க அதனை படிக்கும் வாய்ப்பாக எனக்கு KMRK மூலமான கருத்துரையாடல் அமைந்தது..கொஞ்சம் பாரதி பற்றி அறிந்தேன்..விளக்கம் பெற்றேன்..மீண்டும் நன்றி..

    ReplyDelete

You can send your comments