Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, October 4, 2011

மகாகவி பாரதி அனைவருக்குமே சொந்தம்

மகாகவி பாரதி உலக மாந்தர்க்கெல்லாம் சொந்தமானவன்.

அமுதசுரபி மாத இதழில் 'பாரதி' எனும் பெயரைத் தன்னுடைய பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கும் சிலருக்குப் பிடித்தமான பாரதியின் வரிகள் எவை என்று கேட்டிருந்தனர். அதற்கு அவர்கள் கொடுத்த விடை அனைத்துமே மிக அருமையான வரிகள். நெஞ்சில் தைக்கக்கூடிய அழுத்தமான வரிகள். இதே கேள்வியை 'பாரதி' என்று பெயரில் இல்லாத பல பாரதி அன்பர்களிடம் கேட்டிருக்கலாம். அல்லது பாரதி பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடம் கேட்டிருக்கலாம். தன் பெயரில் பாரதி இல்லாமலே தங்கள் நெஞ்சில் பாரதியின் வரிகளைச் சுமக்கும் ஏராளமான பாரதி அன்பர்களைக் கண்டுபிடித்திருக்கலாம்.

இதில் இன்னொரு ஐயப்பாடு உண்டு. பாரதியின் வரிகளில் நமக்கு மிகவும் அதிகமாகப் பிடித்த வரிகள், அல்லது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாரதியின் வரிகளில் நம்முள் ஏற்படுத்திய தாக்கம், மனச்சோர்வடைந்த போது ஊக்கமூட்டிய வரிகள் என்றெல்லாம் கூட வகைப்படுத்திட முடியும். அப்படி அந்த வரிகள் அவர்களை எப்படி பாதித்தது என்பதையும் சொல்ல வைத்திருக்கலாம். எந்த வகையில் பார்த்தாலும், பாரதியின் சொற்கள் மனதுக்கு ஊக்கமளிக்கும் சக்தி கொண்டவையே என்பதில் ஐயமில்லை.

ஆண்டுதோறும் பாரதிக்கு பிறந்த நாளும், நினைவு நாளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நேரத்தில் பாரதியை நினைத்துக் கொள்வோர் ஏராளம். செப்டம்பர் 11க்கும், டிசம்பர் 11க்கும் பாரதிக்கு பத்திரிகைகள் அதீதமான முக்கியத்துவம் கொடுக்கும். வேறு என்ன செய்ய முடியும், ஆண்டு முழுவதுமா எழுதிக் கொண்டிருக்க முடியும்? மகாத்மா காந்திக்கு அக்டோபர் 2ஆம் தேதியிலும், இந்திய தேசியத்துக்கு ஆகஸ்ட் 15, ஜனவரி 26இல் கிடைக்கும் முக்கியத்துவமும் போலத்தான் இதுவும். அதுவாவது பரவாயில்லை. தொலைக்காட்சியில் இதுபோன்ற நாட்களில், அதில் சம்பந்தப் பட்டிருப்பவர்களைப் பற்றி நினைப்பதற்கு பதிலாக, திரைப்படங்கள், நடிக, நடிகைகள் பேட்டி என்று சம்பந்தமில்லாமல் கலக்குகிறார்கள்.

ஆனாலும் ஒன்று, பாரதியை விரும்பாதவர் யார்? பாரதியின் வரிகளைச் சொல்லாமல் மேடையில் யாராவது பேசுகிறார்களா? அது ஏன் அப்படி? இதனை யோசிக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது. அவன் நம் மொழியில் பேசினான். நம் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடினான். அவன் சாதாரண மக்களுக்குத் தோன்றாத பல புதிய கோணத்தில் பிரச்சினைகளை அணுகினான்.

சில இடங்களில் அவனது எழுத்துக்களைப் படிக்கையில் இவன் இது பற்றியெல்லாம் எப்போது படித்தான், எங்கு படித்தான் என்ற ஆச்சரியம் தோன்றத்தான் செய்கிறது. சில இடங்களில் அவன் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் புழக்கத்தில் இல்லாத, பழைய, ஆனால் பொருள் பொதிந்த சொற்கள் என்பது விளங்குகிறது. அகராதியை எடுத்துப் புரட்டும்போதுதான் அது புரிகிறது. சாதாரணமாக பாரதியின் எழுத்துக்கள் என்றால் எளிமையானது, எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடியது என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அப்படி அல்ல. அவன் ஆழங்காணமுடியாத அறிவுச் சுரங்கமாக சில இடங்களில் தோற்றமளிக்கிறான்.

பாரதியின் பாடலுக்கு ஒரு மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். தமிழில் கட்டுரை எழுதும் போது கூட ஒருவர் அந்தப் பாடலைப் பயன்படுத்தி இருந்தார். அதில் ஒரு வரி வருகிறது. "....அம்புக்கும், தீக்கும், விடத்துக்கும்" என்று. மொழிபெயர்த்தவரும் சரி, அந்தப் பாடலைத் தன் கட்டுரையில் பயன் படுத்தியவரும் சரி, இந்த அம்பு என்ற சொல்லுக்கு வில் அம்பு எனும் பொருளில் எழுதியிருந்தார்கள். இங்கு அம்பு என்பது நீர் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கவில்லை. சொல் பிரயோகத்தின்படி பார்த்தாலும், இங்கு அம்பு, தீ, விடம் என்று வருவதால் இது நீரைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அது போலவே ஒரு பெரியவர் என்னிடம் கேட்டார். புதிய பாரதத்தை வரவேற்று பாரதி ஒரு பாடலை எழுதியிருக்கிறான். அதில் "இளைய பாரதத்தினாய் வா! வா! வா!" என்று மிகமிக எளிமையாத் தொடங்கி எழுதுகிறான். அதில் கடைசி வரியில் "விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல் விழியினால் விளக்குவாய், வா! வா! வா!" என்கிறானே அது என்ன என்று கேட்டவுடன் கிட்டத்தட்ட அனைவருமே சிறிது யோசிக்கத் தொடங்கி விட்டனர். பார்த்தன் என்பது அர்ஜுனன் தெரிகிறது. அவன் எதை விழியினால் காட்டி வரப்போகும் மாண்பினை விளக்கினான் தெரியவில்லையே என்று யோசிக்கின்றனர். ஒரு தமிழறிஞர் சொன்னார், அது கண்ணன் சொன்ன கீதையை அர்ஜுனன் புரிந்து கொண்டதைத் தன் கண்களால் காட்டினான் என்றார். அது சரியாகப் படவில்லை. பிறகுதான் அதன் உட்பொருள் என்ன என்பது புரிந்தது.

மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் தனது மாணவர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். எதிரே ஒரு பெரிய மரத்தின் மேல் கிளையில் சில காய்ந்த சருகுகள் ஒரு பறவையின் தோற்றத்தில் காணப்பட்டன. அதில் கண் போன்ற பகுதியை குறிவைத்து அம்பு எய்ய ஆசிரியர் விளக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு மாணவனாகக் கூப்பிட்டு நீ வில்லில் அம்பைப் பூட்டித் தயாராக இருந்து கொள். நான் உன்னைச் சில கேள்விகள் கேட்பேன். அதற்கு நீ விடை அளித்த பின் 'விடு' என்பேன், நீ அம்பைச் செலுத்த வேண்டும் என்றார்.

முதலில் துரியோதனன் வந்தான். குறி பார்த்தான். ஆசிரியர் கேட்டார். நீ இப்போது என்னவெல்லாம் பார்க்கிறாய் என்றார். அவன் சொன்னான், மரம், அதில் கிளை, அதில் காய்ந்த சருகுகள், அதில் கண் போன்ற பகுதி, மரத்தின் எதிரில் நீங்கள் எல்லோரும் என்று. சரி, வேண்டாம், நீ ஒதுங்கிக் கொள் என்று அடுத்து ஒவ்வொருவராக அழைத்துக் குறி பார்க்கச் சொல்ல, அவர்களும் அவனைப் போலவே பதில் சொன்னார்கள். இறுதியில் அர்ஜுனனை அழைத்துக் குறி வைக்கச் சொன்னார். அவனும் அவர் சொன்னபடி செய்தான். அவனிடம் துரோணர் கேள்விகளைக் கேட்டார், அவன் முதல் கேள்விக்கு என் இலக்கு தெரிகிறது என்றான். நன்றாகப் பார், உனக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்றார், அவன் பதில் சொல்லவில்லை. ஆசிரியர் செலுத்து என்றார், அவனும் அம்பைச் செலுத்தினான், அது இலக்கைத் துளைத்தது.

ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால், தனது முழு ஈடுபாட்டையும், கவனத்தையும் அதில் செலுத்திவிட வேண்டும் அப்போதுதான் வெற்றி பெற முடியும், அப்படிப்பட்ட இளைஞர்களை வா, வா, வா என்று புதிய பாரதம் படைக்க அழைத்தான் பாரதி. பாரதியைப் படிப்போம். மீண்டும் படிப்போம். புதிய பல செய்திகளை அறிவோம். பாரதிக்கு அமுதசுரபி செய்திருக்கும் சேவை அபாரமானது. 'அமுதசுரபி' என் மனதில் உண்டாக்கிய எண்ண அலைகள் இவை. மகாகவி பாரதி அவன் பெயரை வைத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்து மாந்தர்கள் அனைவருக்குமே சொந்தம் தானே. என்ன? உங்கள் கருத்துக்களையும் சொல்லலாமே.

1 comment:

  1. படிக்கப் படிக்க பாரதி புதிய பரிமாணங்களில் வெளிவருகிறார்.

    பார்த்தன் பற்றிய செய்தி 'விழியினால் உணர்த்தியது' புதிய செய்திதான்.

    மீண்டும் பாரதி மஹாகவியா இல்லையா என்ற தர்க்கம் துவங்கியுள்ளது ஜெயமோகனின் பதிவைப் பாருங்கள்.

    ReplyDelete

You can send your comments