Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, August 27, 2011

வல்லிக்கண்ணன்


மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதி
வல்லிக்கண்ணன் 'தாமரை'யில் 1982இல் எழுதியது

பழமைச் சிக்கல்கள், சம்பிரதாயத் தளைகள், மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக விளங்கிய பல்வேறு பிடிப்புகளிலுமிருந்து தமிழ் மொழியை விடுவித்து, ஒளியும், மணமும் திகழக்கூடிய மறுமலர்ச்சிக்கு வித்திட முதல்வன் மகாகவி பாரதியார்.

தமிழ் இலக்கியத்தின் புது விடியலுக்கு ஒளிகாட்டிய வெள்ளி முளைப்புக் கவிஞன் பாரதி.

புதுயுக எழுத்தாளர்களின் தலைவன், பின்வந்த (வருகின்ற) எழுத்தாளர் பலருக்கும் வழிகாட்டும் படைப்புகளை ஆக்கித் தந்த மேலோன், மனித வாழ்வு மேம்பட வழிகாட்டும் ஒளிச்சுடராகவும் அவர் விளங்குகிறார்.

'நமக்குத் தொழில் கவிதை -- நாட்டிற்கு உழைத்தல் -- இமைப் பொழுதும் சோராதிருத்தல்' என்று கொள்கை வகுத்துக் கொண்ட இலட்சியவாதி அவர்.

மகாசக்தியை நினைத்து பாரதியார் வேண்டுகின்ற இடம் ஒன்றில் இவை வருகின்றன ---

"அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக.
நமக்குச் செய்கை இயல்பாகுக.
ரஸமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை,
வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை,
விளையும் செய்கை, பரவும் செய்கை,
கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை,
நமக்கு மகாசக்தி அருள் செய்க.

கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்,
மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்
இச்செயல்கள் நமக்கு மகாசக்தி அருள்புரிக.
அன்பு நீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது
சாத்திரங்களை போக்கி, வேதப் பயிர் செய்து
இன்பப் பயனறிந்து தின்பதற்கு
மகாசக்தியின் துணை வேண்டுகிறோம்."

பலவிதமான செய்கைகளிலும் ஈடுபட்டு, உழைப்பில் இன்பம் கண்டு, உண்டு வாழ்வதே வாழ்க்கையின் பயனாதல் வேண்டும் என்று பாரதியார் தமது கவிதைகளில் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

அறிவில் வளர்ச்சி, சிந்தையில் தெளிவு, எண்ணத்தில் உறுதி, உள்ளத்தில் அன்பு, உழைப்பில் ஆர்வம், மனிதருக்குத் தேவை. இதையும் பாரதியார் எடுத்துச் சொல்லத் தவறவில்லை.

"அன்பென்று கொட்டு முரசே! அதில்
யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம் பெற்று வாழ்வார்,
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்."

நாட்டின் விடுதலைக்காக எழுச்சிக் கவிதைகள் முழக்கிய பாரதியார், மக்களின் வாழ்க்கை வளம்பெற வேண்டும், எல்லோரும் சந்தோஷமாகவும் நலமாகவும் வாழ வழி பிறக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழிவகைகளை அங்கங்கே சுட்டிக்காட்டியிருக்கிறார் தமது எழுத்துக்களில்.

'மதிமூடும் பொய்மையிருள் முற்றும் விட்டகல வேண்டும்' என்றும் 'ஐயம் தீர்ந்துவிடல் வேண்டும் -- புலை அச்சம் போயொழிதல் வேண்டும் என்றும் கூறும் பாரதியார், மனிதர் வாழ்வில் புத்துயிர்ப்பும், புதிய வீறும் சேர்வதற்கு வழிகாட்டும் முறையில் 'புதிய ஆத்திசூடி'யை இயற்றியுள்ளார்.

'அச்சம் தவிர்', 'ஆண்மை தவறேல்', அதற்காக 'உடலினை உறுதிசெய்', உடலுறுதி பெறுவதற்காக 'ஊண்மிக விரும்பு' என்று கூறுகிறார். 'கூடித் தொழில் செய்', 'கைத்தொழில் போற்று', 'நாளெல்லாம் வினைசெய்' என்று வலியுறுத்துகிறார்.

துணிச்சலாக, காலத்துக்கேற்ற கருத்துகளை முன்வைக்க அவர் தயங்கவில்லை.

'சோதிடந்தனை இகழ்', 'நேர்படப் பேசு', 'நையப் புடை', 'பணத்தினைப் பெருக்கு', 'புதியன விரும்பு', 'பெரிதினும் பெரிது கேள்' -- இவை பாரதியாரின் புதுமை உபதேசங்கள்.

மனிதர் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பு அற்புதமான விஷயம். வாழ்க்கைக்கு அர்த்தமும் மாண்பும் அளிப்பது அன்பு. மக்கள் சமுதாயத்தை வாழ்விக்க உதவுவது அன்பு. பாரதியார் சொல்கிறார் --

'வையத்தில்
அன்புல் சிறந்த தவமில்லை; அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு;

சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக்
கொள்ளுதிர் பாரிலுள்ளீர்!

முயலும் வினைகள் செழிக்கும்.

வாழ்க்கை துன்பமயமானது என்ற நினைப்பை அகற்றும்படி அறிவுறுத்துகிறார் அவர்.

'துன்பமே யியற்கை யெனும்
சொல்லை மறந்திடுவோம்
இன்பமே வேண்டி நிற்போம்'

இந்நிலை பெறுவதற்கு மனித மனதில் உறைந்து கிடக்கும் ஆசையும், அச்சமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பொய்யை அழித்தாக வேண்டும் என்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.

நாடு வளம் பெறுவதற்கு தனிமனிதர் வாழ்வு செம்மையுற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் சில கடமைகளை கைக்கொள்ள வேண்டும். (கடமையாவன: தன்னைக் கட்டுதல்; பிறர் துயர் தீர்த்தல்; பிறர் நலம் வேண்டுதல்) இவ்வகையில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகளை பாரதியின் கவிதைகள் நன்கு சுட்டுகின்றன. அவர் திரும்பத் திரும்ப எடுத்துக் கூறுவது --

'ஓய்ந்து சோம்பி இருக்காமல் உழைக்க வேண்டும். உண்மைகள் சொல்லி, ஊருக்கு நல்லது செய்ய வேண்டும். அறந்தன்னைக் காக்கும் திறனைப் போற்றி வளர்க்க வேண்டும்.'

'ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம்,
உண்மைகள் சொல்வோம், பல வண்மைகள் செய்வோம்' என்றும்

'இன்னல்கள் வந்துற்றிடும் போது அதற்கு அஞ்சோம்'

மனித நலனுக்காகவும், மனிதகுல வளர்ச்சிக்காகவும் இவை வேண்டும் என்று பாரதியார் கோருகிறார்.

'மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்'

நல்வாழ்வு வாழவும், நல்ல காரியங்கள் செய்து முடிக்கவும், 'அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனி அரசாணை, உண்மை மீது பற்றுதல் தேவை' என்று மகாகவி மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

மனிதரிடம் இவை இல்லாததனால்தான் சமூக வாழ்வில் சீர்கேடுகளும் சிதைவுகளும், நாட்டின் நிலையில் குழப்பங்களும் சீரழிவுகளும் மணிடிப் பெருகுகின்றன.

பாரதியின் கருத்துக்களை உணர்ந்து, பாரதி வழியைப் பின்பற்றுகிறவர்கள் அதிகம் அதிகமாகத் தோன்ற வேண்டும்.

2 comments:

  1. திருவாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் கட்டுரை அருமை...

    "அவள் நம்மை கர்மயோகத்தில் நாட்டுக.
    நமக்குச் செய்கை இயல்பாகுக.
    ரஸமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை,
    வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை,
    விளையும் செய்கை, பரவும் செய்கை,
    கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை,
    நமக்கு மகாசக்தி அருள் செய்க.

    கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்,
    மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்
    இச்செயல்கள் நமக்கு மகாசக்தி அருள்புரிக.
    அன்பு நீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது
    சாத்திரங்களை போக்கி, வேதப் பயிர் செய்து
    இன்பப் பயனறிந்து தின்பதற்கு
    மகாசக்தியின் துணை வேண்டுகிறோம்."

    இதிலே கட்டுரையாளர் மேலோட்டமாகவே விளக்கி இருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது... பாரதி " கர்மயோகத்தில் நாட்டுக. நமக்கு செய்கை இயல்பாகுக" என்று கூறி பின்வரும் எட்டுவிதமான சார்புகளும் அந்த செய்கைகளின் குணமாக இருந்து அப்படிப் பட்ட ஒரு செய்கையே அவனுக்கு அன்னை பராசக்தி அருள வேண்டும் என்று வேண்டுவதாகவே தோன்றுகிறது.. தோன்றுகிறது என்ன? அப்படித்தான் அவன் கேட்பான்... கேட்டுள்ளான்...

    இரண்டாம் பாடலில் சொல்லியது போல் அந்த செய்கைகள் ஒவ்வொன்றிற்கு மேற்கூறிய எட்டு வித சார்பு (குணங்களும்) வேண்டிப் பெற்று அவனே தனது வாழ்வில் செய்தும் காட்டியுளான்.
    கவிதை படைத்தான்...
    விடுதலை (தளையறுக்கும்) உணர்வை ஊட்டினான்...
    அன்பையும் வீரத்தையும் வளர்த்தான்...
    சமூக கேடென்பன யாவையும் "மாசெடுத்தான்"...
    பிறர் வாழ தன்னால் முடித்த யாவையும் என் தனது இடுப்புத் துணியைக் கூட அவிழ்த்துக் கொடுத்தானே!!!...
    கருணையோடு ஒளியையே அனைவரிடமும்.... சாதி பேதம்.. ஆத்திக.. நாத்திக பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் பேய்தான்...
    இவன் பாடல்கள் யாவும் இவனது சுயசரிதை... அன்றாட வாழ்வின் நிகழ்வுகளே....

    பாரதியின் கட்டுரை படைக்கும் அன்பர்கள் யாவரும் அவனின் சிந்தனையை சற்று ஆழப்படுத்தியே பார்த்து சொல்லவேண்டும்... அது நமது கடமையாகிறது அது தான் அந்த மகாகவிக்கு நாம் செய்யும் நன்றி என்பதே எனது தாழ்மையானக் கருத்து.... இன்னும் சிலரோ மாற்றிக் கூட சொல்லுகிறார்கள்.. சமீபத்தில் நான் ஒருக் கட்டுரை படித்தேன்... அதில் "அறிவோன்றேத் தெய்வம்" என்பதையும்.... பாரதி கூருமரிவு எது என்பதை மாற்றியும்... அச்சமும், நாணமும், மடமும் வேண்டாதவள் புதுமைப் பெண் என்பதில் இவர்களாக.. பயிர்பும் வேண்டாம் என்கிறான் என்று எழுதியிருக்கிறார் ஒரு தமிழறிஞர்... எனது கருத்துக்களை பதிவிடும் எனது அன்பிற்குரிய திரு வெ. கோபாலன் ஐயாவிற்கும் எனது நன்றிகள்..

    நன்றிகள் ஐயா!
    வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

    ReplyDelete
  2. அன்புள்ள தொண்டு உள்ளம் கொண்டவர்களே :-
    நாங்கள் வருகின்ற 27 டிசம்பர் முதல் 31 வரை "எண்ணுவது துயர்வு " என்ற தலைப்பில் சுமார் 100 ஏழை குழந்தைகளுக்கு(படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் ) இலவச 4 நாள் முகாம் நடத்த உள்ளோம், எனவே தங்களுக்கு தெரிந்த இடத்தில் "புதிய ஆத்திச் சூடி" புத்தகம் மற்றும் விளக்ககதை கிடைத்தால் அதன் இல்லவச கோப்புகள் இருந்தால் கொஞ்சம் சொல்லவும்

    எங்கள் முகவரி
    மாபா அறக்கட்டளை
    16/19,2 ம் தளம், ஜெயலக்ஷ்மி புறம் முதல் தெரு,
    நுங்கம்பாக்கம், சென்னை-34.
    தொடர்புக்கு : வசந்தபாலா 9551088592

    ReplyDelete

You can send your comments