Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Friday, July 8, 2011

மகாகவி புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி

மகாகவி வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.

மகாகவி வாழ்க்கையில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய முப்பெரும் பாடல்கள் உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவர் உயிர் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது. இந்தியா பத்திரிகையைத் தொடங்கி சென்னையில் நடத்திய மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தனது பத்திரிகையை புதுச்சேரிக்கே கொண்டு சென்று, அதன் மூலம் பாரதியின் குரல் உலகம் முழுவதும் கேட்கும்படி செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டது. அவர் குறிப்பறிந்து உதவ பல உத்தமர்கள் கிடைத்தார்கள். ஆகையால் பாரதியின் புதுவை வாசம் அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத முக்கிய சம்பவம் ஆகும்.

மகாகவி பாரதி சென்னையில் 'சுதேசமித்திரனில்' பணிக்கமர்ந்து பின்னர் அங்கிருந்து மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் தொடங்கிய 'இந்தியா' பத்திரிகையில் பணிபுரிந்த சமயம். 'இந்தியா' பத்திரிகைக்கு ஆசிரியர் பணி முழுவதையும் பாரதியே செய்து வந்தாலும் என்.ஸ்ரீநிவாசன் என்பவர் பெயர்தான் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1908ஆம் வருஷம் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் ஆங்கில அரசின் கோபத்தைக் கிளறுவதாக அமைந்திருந்தன. 'இந்தியா' பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. சந்தர்ப்பங்கள் அதன் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ரீநிவாசனின் கைதில் போய் முடிந்தது. உண்மையில் அரசாங்கம் கைது செய்ய நினைத்தது பாரதியாரைத்தான்.

ஆசிரியர் ஸ்ரீநிவாசன் கைது செய்யப்பட்டு விட்டார்; ஆனால் அரசு தேடுவதோ பாரதியாரை என்று அறிந்து கொண்ட அவரது நண்பர்கள் வக்கீல் துரைசாமி ஐயர் உட்பட பலர் பாரதியார் கைது செய்யப்பட்டால் சிறைக் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது என்பதை உணர்ந்தார்கள். பாரதியாருக்கு மிகவும் வேண்டியவர்களான வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் சிறையில் படும் கஷ்டங்களை பாரதி மட்டுமல்ல, நண்பர்களும் அறிந்தே இருந்தார்கள். ஆனாலும் அந்தச் சிறைக் கொடுமைகளுக்குப் பாரதி பயப்படவில்லை, ஆனால் நண்பர்கள் மன வருத்தம் அடைந்தார்கள். அவரைப் பொறுத்த வரை பாரதி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். எந்த சூழ்நிலையிலும் இருந்து தாக்குப் பிடிக்கக் கூடியவர். வயிறு நிரம்ப உணவு உண்ணும் பழக்கமும் அவரிடம் கிடையாது. கிடைத்தால் உண்பார், இல்லையேல் பட்டினியாய்ப் படுத்து உறங்கிவிடுவார். எந்த செயற்கையான கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காதவர் பாரதி. இப்படிக் கூறுபவர் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர்கள் தன்னுடைய கட்டுரையில்.

பாரதியின் நண்பர்களான வக்கீல் துரைசாமி ஐயர் முதலானோர், பாரதியால் சிறைக் கொடுமைகளை இவரால் தாங்க முடியுமா? அவர் ஒரு சுதந்திரப் பறவை, அவரைக் கூண்டில் அடைத்தால் அவரால் தாக்குப் பிடிக்க முடியுமா? அங்கு சட்டதிட்டங்கள் மிக கடுமையானவை, அவர்கள் கொடுக்கும் உடலுழைப்பைக் கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டுமென்றெல்லாம் வற்புறுத்துவார்களே, அவற்றை இவரால் செய்யமுடியுமா? என்றெல்லாம் கவலைப் பட்டார்கள்.

நண்பர்கள் பாரதியை வற்புறுத்தினார்கள். 'பாரதி, உனக்காக இல்லாவிட்டாலும், உன் குடும்பத்தின் நலனுக்காக யோசித்துப் பார். நீ சிறையில் அடைபட்டு வருந்துவதனால் என்ன ஆகப் போகிறது. உன் எழுத்துக்கள் முடக்கப்படும். உன் குடும்பத்தார் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிறைக் கொடுமை உன் உயிருக்கும் ஆபத்தாகலாம். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலுள்ள சென்னையிலிருந்து, பிரெஞ்சு ஆதிக்கத்திலுள்ள புதுச்சேரிக்கு நீ செல்வாயானால், அங்கு உனக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க முடியும். நீயும் சுதந்திரப் பறவையாக இருந்து எழுதிக் கொண்டு, சுதந்திர வேள்வியில் உன் பங்கைச் செலுத்த முடியும். நாடும், மக்களும் பயன்பெறுவர், என்ன சொல்கிறாய்? உடனே புறப்படு என்று சொல்லி அவரைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு துரைசாமி ஐயர் பாரதியை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அழைத்துச் சென்று புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார் என்கிறது வரலாறு.

புதுவை சென்றடைந்த பாரதியின் கையில் நண்பர் ஒருவர் சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்பவருக்குக் கொடுத்திருந்த அறிமுகக் கடிதம் ஒன்றுதான் இருந்தது. எங்கு செல்வது, எங்கு தங்குவது, பிழைப்புக்கு என்ன வழி என்றெல்லாம் குழப்பம் நிலவியது பாரதியின் மனத்தில். புதுச்சேரி ஊரும் பாரதிக்குப் புதிது. கடன் வாங்கிவிட்டுத் திரும்பக் கொடுக்க முடியாதவர்கள் தப்பிச்சென்று தலைமறைவாக இருக்கும் இடம்தான் புதுச்சேரி என்கிற செய்தி ஒன்று உண்டு. அவர் அப்படியொன்றும் கடன் வாங்கி தலைமறைவாக வந்தவர் இல்லையே! இந்த பாரத புண்ணிய பூமியின் சுதந்திரத்துக்காக எழுதிய குற்றத்துக்காக சிறையில் தள்ள நினைக்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமைக்கு எதிராக அல்லவா இங்கு வர நேர்ந்து விட்டது. ஆனால் பாரதி சென்ற நேரமோ என்னவோ, கடன் வாங்கியோரின் புகலிடம் என்ற கெட்ட பெயர் அந்த ஊருக்கு மாறிவிட்டது. இந்திய தேசபக்தர்களின் புகலிடம் என்ற பெயர் உண்டாகிவிட்டது. பாரதி சென்ற பிறகல்லவா, மகான் அரவிந்தர் அங்கு வந்தார். வ.வெ.சு.ஐயர் வந்து சேர்ந்தார். நெல்லை மாடசாமி பிள்ளை வந்து சேர்ந்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தேசபக்தர்கள் இவர்களைப் பார்ப்பதற்காக வந்து செல்லும் இடமாக அல்லவா புதுச்சேரி மாறிவிட்டது. இந்திய சுதந்திரத்துக்கு உதவி செய்த சிறப்பும் இந்த ஊருக்கு உண்டு.

'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் சென்னையிலிருந்து புதுச்சேரி சென்று விட்டார் என்கிற செய்தி சென்னையிலிருந்த ஆங்கில அரசின் போலீசாருக்கு சில நாட்கள் கழிந்த பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் நீதிமன்றத்தில் இந்தியா ஆசிரியர் மீது வழக்கு நடந்து கொண்டிருந்த போதும், அவர் புதுச்சேரி சென்று விட்டார் என்கிற செய்தியை போலீசார் மறைத்து விட்டார்கள். ஏன்? ஆங்கில அரசாங்க போலீசிடமிருந்து தப்பிக்க இப்படியொரு வழி இருக்கிறதென்று எல்லா போராளிகளும் தெரிந்து கொண்டுவிட்டால் ஆபத்து அல்லவா? அதனால்தான். ஆனால், பாரதி பெயர் தெரியாத பேர்வழி அல்லவே! அவரை தமிழகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கிறதே. செய்தி வெளிவராமல் இருக்குமா. மக்களுக்குத் தெரிந்துவிட்டது. பிரிட்டிஷ் போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து பாரதி தப்பி புதுச்சேரி சென்றுவிட்டார் என்பதை மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்.

பாரதியார் புதுச்சேரி சென்றடைந்து அறிமுகக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சிட்டி குப்புசாமி அய்யங்கார் வீட்டை விசாரித்துக் கொண்டு அங்கு போய்ச்சேர்ந்தார். அங்கு சென்றடைந்ததும் பயணக் களைப்பு போகும்வரை அன்று தூங்கினார். அங்கு இரண்டு நாட்களைக் கழித்தார் பாரதி. எப்படியும் சென்னை போலீசார் தன்னைத் தேடி கண்டுபிடித்துக் கொண்டுபோக புதுச்சேரி வருவார்கள் என்ற எண்ணமும் பாரதிக்கு இருந்தது. அவர் எதிர்பார்த்தது போலவே சென்னை போலீசாரின் வேவுபார்ப்பவர்கள் புதுவைக்கு வந்து நோட்டமிடத் தொடங்கினார்கள். பாரதியாரையும் மற்ற தேசபக்தர்களையும் வேவு பார்க்கவென்றே சென்னை மாகாண சர்க்கார் ஒரு வேவுகார படையை புதுச்சேரியில் அமைத்திருந்தது. இந்த உளவுப் படையினரால் பாரதி பட்ட தொல்லைகள் ஏராளம். பல வேடமிட்டு வருவார்கள், நல்லவர்கள் போல் நடிப்பார்கள், இவர் வாயைக் கிளறி ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள். இவர்கள் எல்லோரையும் பாரதி விழுங்கி ஏப்பமிட்டுவிட்டார் என்று சொல்லலாம். இவர்கள் விரித்த வலையில் பாரதி சிக்கவேயில்லை.

பாரதிக்குத் தங்க இடம் கொடுத்திருந்த சிட்டி குப்புசாமி அய்யங்காரை மட்டும் விட்டு வைப்பார்களா உளவுக்காரர்கள். அவரை அச்சுறுத்தினார்கள். அவர் ஒரு பயங்கரவாதி, அவருக்கு இடம் கொடுத்தால் அய்யங்காரும் சிறை செல்ல நேருமென்றெல்லாம் சொல்லி அவரை மிரட்டினார்கள். பிரெஞ்சு போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய கையாட்களாக இருந்து இந்த அச்சுறுத்தலை நடத்த உதவினார்கள்.

குப்புசாமி அய்யங்கார் அரசியல் அறிந்தவருமல்ல; பெரும் செல்வந்தருமல்ல. அவர் ஒரு வியாபாரியிடம் கணக்கெழுதிக் கொண்டிருந்தவர். அவரைப் பற்றி மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியர் கூறும் செய்திகள்:- அவர் சங்கீதத்தில் ஞானமுள்ளவர், நன்றாகப் பாடவும் செய்வார். வைதீக ஆசாரசீலர். அவருக்குத் தமிழ் தவிர பிரெஞ்சு மொழியும், ஆங்கிலமும் தெரியும். பயந்த சுபாவமுடையவர். போலீஸ் என்று சொன்னால் பயம் கொள்ளக்கூடியவர். அப்பேற்பட்டவரிடம் ஆங்கிலேய, பிரெஞ்சு போலீஸ் அதிகாரிகள் போய் மிரட்டினால் என்ன செய்வார் பாவம்! நமக்கேன் இந்த வம்பு என்று மிரண்டு போனார். அவரிடம் அதிகாரிகள் பாரதியை எப்படித் தெரியும்? அவரை ஏன் வீட்டில் தங்க வைத்திருக்கிறீர்? என்றும் மிரட்டியதில் அவர் பாரதியைத் தனக்குத் தெரியாதென்றும், ஒரு நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரை வீட்டில் தங்க வைத்ததாகவும் சொல்லி வைத்தார்.

பாரதி ஆங்கில சர்க்காருக்கு எதிரானவர். சென்னையில் புரட்சியைத் தூண்டிவிட்டுவிட்டு இங்கு வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட புரட்சிக்காரருக்கு இடம் கொடுத்ததால் உமக்குத்தான் வம்பு. அதிலிருந்து தப்ப வேண்டுமானால் அவரை உடனடியாக வெளியே அனுப்புவது நல்லது என்று யோசனை கூறினார்கள். குப்புசாமி ஐயங்காருக்கு தர்ம சங்கடம். பாரதியாரோ மரியாதைக்குரியவர். தகுந்த அறிமுகத்துடன் வந்திருப்பவர், வெளியே போகச்சொன்னால் எங்கே போவார்? அய்யங்காருக்கு போலீசிடமும் பயம், பாரதியாரை வெளியே போகச் சொல்லவும் தயக்கம்.

பாரதியாரிடம் மெல்ல விஷயத்தைச் சொன்னார். தனக்கு ஒரே குழப்பமாக இருப்பதாகவும் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும், முடிந்தால் பாரதியாரை வேறு இடம் பார்த்துக் கொள்ளும்படியும் தயங்கியபடி சொன்னார். பாரதியாரின் குணத்தை மண்டையம் மிக துல்லியமாக எடைபோட்டு எழுதியிருக்கிறார். ஏதாவது ஒரு சிக்கல் ஏற்பட்டால் பாரதி முதலில் சிறிது கவலைப்படுவாராம், பின்னர் நன்கு ஆழ்ந்து யோசித்த பின் மனதை தைரியப்படுத்திக் கொண்டு செயல்படுவாராம். பிறகு எந்தவித தயக்கத்துக்கும் இடம் கொடுக்க மாட்டாராம். முதலில் அந்த குறைந்த நேரத்தில் அவர் படும் மனவேதனை சொல்லி முடியாது என்கிறார்.

சொந்த நாட்டுக்கு சுதந்திரம் வேண்டி போராடுகின்ற காரணத்தால், அடுத்த நாட்டிலும் தங்க இடமில்லாமல் போய்விடுமா என்ன? தனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை எண்ணி மிக அதிகமாக மனவேதனை பட்டாராம். ஆத்திரப் பட்டாராம். என்றாலும் உடனடியாக குப்புசாமி அய்யங்காருக்கு பதில் சொல்ல மனமில்லை, "இன்னும் ஓரிரண்டு நாட்களில் ஏதாவது ஏற்பாடு செய்துகொண்டு வெளியேறி விடுகிறேன்" என்று பதில் சொல்லி முடித்துக் கொண்டாராம்.

சொன்னபடி அடுத்த இரண்டு நாட்களும் அவர் பட்ட வேதனை, மனக்கஷ்டம் சொல்லி மாளாது. ஊர் புதிது, என்ன செய்வது, யாரைப் போய்க் கேட்பது என்ற தயக்கம். தெரிந்தவர் என்று சொல்லிக்கொள்ள ஒருவரும் கிடையாது. என்ன செய்வது? குப்புசாமி அய்யங்கார் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வது போல பாரதி உணர்ந்தார். தம்மை யாருக்காவது பிடிக்கவில்லையென்றால் அடுத்த நொடி அங்கிருந்து போய்விடும் குணம் உள்ள பாரதிக்கு இக்கட்டான நிலை. பெரிய பெரிய மனிதர்களைக் கூட தூக்கி எறிந்துவிட்டு வந்தவர் பாரதி. இங்குவந்து இப்படி வாழும் நிலை வந்ததை எண்ணி மனம் புழுங்கினார். கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு, இப்போது கோபம் முக்கியமல்ல, இருக்க ஒரு இடம் வேண்டும் அதுதான் முக்கியம் என்று எண்ணத் தொடங்கினார். குப்புசாமி அய்யங்கார் மீது கோபம் வந்தாலும், பாவம் அவரும்தான் என்ன செய்வார், பயந்த மனிதன். தனக்கு முதலில் இடம் கொடுத்தவரும் அவர்தானே. இப்போது சந்தர்ப்பம் அப்படி, நம்மை வெளியே போகச் சொல்லுகிறார் என்று வருந்தினார்.

இந்த நிலையில் போலீஸ் குப்புசாமி அய்யங்காரைக் கூப்பிட்டு மறுபடி மிரட்டியது. மிரண்டு போய் வீடு திரும்பிய அய்யங்காரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது பாரதியாருக்கு. தமிழகத்தில் தம்மைத் தெரிந்தவர் அனேகர் இருக்க, இங்கு வந்து இப்படி யாரையும் தெரியாமல் அல்லல் பட நேர்ந்ததே! 'இந்தியா' பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கமுள்ளவர் யாராவது இங்கு இருந்தால் நல்லது. அப்படிப்பட்டவர்கள் யார் இங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லையே. அப்படி யாராவது 'இந்தியா' பத்திரிகை சந்தாதாரர் இருந்தால் நலமாக இருக்குமே என்று சிந்தித்தார். இந்த சிந்தனையோடு அன்றிரவு வீட்டின் வெளித் திண்ணையில் கவலை தோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருந்தார்.

அந்த நேரம் குப்புசாமி அய்யங்காரின் வீட்டுக்கருகில் இருந்த தனது சகோதரியின் வீட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிய குவளை கிருஷ்ணமாச்சாரியார் என்பவரின் கண்களில் அடுத்த வீட்டுத் திண்ணையில் ஒரு புதிய மனிதர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. யார் அந்தப் புதியவர்? தெரிந்து கொள்ளும் ஆவலில் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் அவரிடம் சென்று, 'சுவாமி, தாங்கள் யார்? அடுத்த வீட்டில் என் சகோதரி இருக்கிறாள். அவளைப் பார்க்க வந்துவிட்டுத் திரும்பும்போது, தங்களைக் கவனித்தேன். புதியவராக இருப்பதால் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன்' என்றார்.

பாரதிக்கு புத்துயிர் வந்தது போல் இருந்தது. ஆகா, இறைவன் வழிகாட்டிவிட்டான். இந்த குள்ள மனிதன் நிச்சயம் தனக்கு உதவி செய்வான் என்று தோன்றியது. என்றாலும் தான் யார், என்ன என்பதைப் பற்றியெல்லாம் பாரதி வாய் திறக்கவில்லை. குவளைக் கிருஷ்ணமாச்சாரி எனும் அந்த குவளைக் கண்ணனிடம் கேட்டார், 'இங்கு 'இந்தியா' பத்திரிகை வாங்கிப் படிப்பவர் யாரையாவது உமக்குத் தெரியுமா?' என்று.

கண்ணன் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார், 'ஆமாம், சுந்தரேச ஐயர் என்று ஒருவர், அவருக்கு 'இந்தியா' பத்திரிகை வருகிறது. அவர் படித்ததும் நான் வாங்கிக் கொண்டு போய் படிப்பது வழக்கம்' என்றா.

'அப்படியா? நல்லது. அந்த சுந்தரேசய்யரிடம் என்னை அழைத்துப் போக முடியுமா?' என்று கேட்டார் பாரதி.

குவளைக் கண்ணன் பாரதியாரை அழைத்துக் கொண்டு போய் சுந்தரேசய்யரிடம் கொண்டு விட்டுவிட்டு, அவரை யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே, அவரைப் பிறகு சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சுந்தரேசய்யரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொண்டதும் அவருக்கும் மகிழ்ச்சி. அவர் மூலம் வேறொருவர் வீட்டில் பாரதியார் தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு புதிய இடத்தில் பாரதியார் தங்கத் தொடங்கிய சில நாட்களில் மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியாரும் சென்னையிலிருந்து புதுச்சேரி வந்து அங்கு பாரதியாரோடு சிலநாட்கள் தங்கினார். மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரி சிறுவயதில் புதுவையில் படித்தவர், அங்கு அவருக்குப் பலரைத் தெரியும். இந்த சூழ்நிலையில் பாரதியாருக்கு புதிய தெம்பு ஏற்பட்டது. சரியான துணை கிடைத்து விட்டது. இனி சமாளித்துக் கொள்ளலாம் என்று தைரியமடைந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சென்னையில் ராஜத்துவேஷ வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 'தி இந்து', 'சுதேசமித்திரன்' பத்திரிகைகளை தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர் சிலரது தலையீடு காரணமாக விடுதலை பெற்றிருந்தார். அதுபோல பாரதியாருக்கும் பிரிட்டிஷ் அரசிடம் மன்றாடி மன்னிப்பும், விடுதலையும் வாங்கிவிடலாம் என்று பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையும், வேறொருவரும் வந்து ஆலோசனை கேட்டனர். பாரதி கோபத்தோடு மறுத்து விட்டார். அப்படிப்பட்ட கேவலம் எனக்குத் தேவையில்லை என்று அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டார்.

பாரதியார் புதுச்சேரி வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குள் 'இந்தியா' பத்திரிகையின் உரிமையாளர் ந.திருமலாச்சாரியார் அங்கு வந்து சேர்ந்தார். சென்னையில் நடத்தி வந்த 'இந்தியா' பத்திரிகையை இனி புதுச்சேரியிலிருந்து நடத்துவது என்ற எண்ணத்தோடு வந்து சேர்ந்திருந்தார். அங்கு சென்னையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை எதிர்த்து எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும்? இங்கிருந்து நடத்தினால் பாரதியாரும் இங்கிருப்பதால் சிறப்பாகவும் தொல்லையில்லாமலும் நடத்த முடியும் என்பது அவரது எண்ணம். பாரதியாரிடம் தனது கருத்தைக் கூறினார். அவரும் அதற்குச் சம்மதித்தார். 'இந்தியா' புதுச்சேரியிலிருந்து உதயமாகி வெளிவரத் தொடங்கியது.

புதுச்சேரியில் 'இந்தியா' பத்திரிகை தவறாமல் வெளிவர பாரதியார் உதவியாக இருந்தார். இந்த நேரத்தில் சென்னையிலிருந்து எம்.பி.டி.ஆச்சார்யா புதுவை வந்து சேர்ந்தார். இவர் பின்னர் ஐரோப்பாவுக்குச் சென்று பெரும் புரட்சிக்காரராக மாறி பல ஐரோப்பிய நாடுகளில் புரட்சிக்கு வித்திட்டுவிட்டு பின்னர் இந்தியா திரும்பி பம்பாயில் தனது கடைசி காலத்தைக் கழித்தார் என்பது வரலாற்றுச் செய்தி. இந்த எம்.பி.டி.ஆச்சார்யா திருமலாச்சாரியாரின் சிறிய தாயாரின் மகன். தம்பி முறை ஆகவேண்டும். இவர் புதுவையிலிருந்து கொழும்பு வழியாக இங்கிலாந்து செல்ல முடிவெடுத்து அங்கு வந்திருந்தார்.

திருமலாச்சாரியார் புதுச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பத்திரிகை அலுவலகத்தைத் தொடங்கினார். பாரதியாருக்கு 'இந்தியா' வெளிவரத் தொடங்கிய பின்னர்தான் மன நிம்மதி ஏற்பட்டது. அதுமுதல் இந்தியா செய்த அதிசயங்கள் நாம் ஏற்கனவே படித்து அறிந்தவைதான். (நன்றி: மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் எழுதி வெளியிட்ட கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது)

1 comment:

  1. அறிய பல தகவல்கள் தாங்கிய அற்புதமானக் கட்டுரையைப் படிக்க வாய்ப்புத் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!

    ReplyDelete

You can send your comments