Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, July 30, 2011

இன்று தேவர்களை அழைக்கிறோம்.


கலைகள்

(மகாகவி பாரதியார் "கலைகள்" எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கின்றோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனைகள் முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். அங்கு சொல்லப்பட்ட மந்திரங்கள் என்ன சொல்கின்றன. வேதங்களைக் கற்றவர்கள் சொல்லலாம். பாமரனுக்குத் தெரியாது. பரவாயில்லை. இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களைமூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கினன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் 'ரிக் வேதத்தில்' பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்பதும், 'ரிக் வேதம்" பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்பதும் பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. ரிக் வேதம் பயின்ற அன்பர்கள்தான் சொல்ல வேண்டும். அன்பர்கள் பாரதியின் இந்தக் கட்டுரையைப் படித்தபின் அது குறித்துத் தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்)

இன்று ......................
(ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.

கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும் பொருட்டாக.

இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்து தரும் பொருட்டு எமது குற்றங்களையெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி, எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டு.

எமதறிவையே தேனாக்கிக் கொடுக்கிறோம். இந்தத் தேனை தேவர்கள் உண்டு களிபெறுக. எமது மந்திரங்கள் தேவருடைய திருவடியைப் பற்றுக. அவர்களை இந்த வேள்வியிலே கொண்டு தருக. எமதுடலையும், உயிரையும், அறிவையும் அவர்களுக்குக் கோயிலாக்குகிறோம். எமதுடைமைகள் எல்லாம் அவர்களைச் சார்ந்தன; எமது மனைவி மக்கள் அவர்களுக்குச் சேவகர்; எமது வீடு, வாசல், மாடு, கழனியெல்லாம் அவர்களுக்குரியன. எமது தொழில் அவர்களுடையது. எமது நினைப்புக்களெல்லாம் ஆசைகளெல்லாம் விருப்பங்கள் எல்லாம், இன்பங்கள் எல்லாம் தேவர் முன்பு வைக்கிறோம்; அவை அவர்கள் உணவாகுக.

வானவரே! வந்து சுவை கொள்ளுவீர்.

அன்பே வா, மித்ரா; உன்னைப் பணிகின்றோம். உன்னாலே காக்கப்பட்டவன் அழிவதில்லை; தோல்வி பெறுவதில்லை. இவனை இங்கிருந்தேனும், தொலைவில் இருந்தேனும் தீங்கு வந்து தீண்டுவதில்லை என்று எமது முன்னோர் கண்டனர். நாமும் அங்ஙனமே காண்கிறோம்.

அனைத்தையும் ஆழ்ந்து நிற்கும் அநந்த நிலையே, வருக, வருணா! எல்லையற்ற நினதாண்மை, இந்த எமதறிவாகிய யாகஸ்தலத்திலே நிறுத்தி, எமது கட்டுகளை எல்லாம் வெட்டிவிடு வலிமையே. நினது வரவு நல்வரவு. உன்னை மிகவும் வேண்டுகிறோம். அர்யமந், எமக்கு வலிமை தருதல் வேண்டும்.

இன்பமே வா! வா! வா! பகதேவா, எப்போதும் எம்மோடு கூடி வாழ்ந்திரு. உனது முகம் மிகவும் அழகுடையது. அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். எமதுள்ளம் நிறைந்திருக்கும். உனது உதயதேவி முன்னமே வந்துவிட்டாள். இளையவள், செந்நிறமுடையவள், என்றும் விழிப்பவள். இவளைத் தீ கொணர்ந்து கொடுத்தான். தீ எம்மிடத்தே வளர்கிறான். தீ வலியவன். அவன் உண்மையையுடைய கடவுள். உள்ளத்தை அவனுக்கு விறகாகக் கொடுத்தோம். அதில் என்றும் எரிவான்; அவிந்து போக மாட்டான். நீ எமது தலைவன். அவனை முப்போதும் சரணமடைகின்றோம்.

இன்று இப்போது தேவர்களை அழைக்கிறோம். வா சூர்யா, தெய்வ ஒளியே, ஞானச் சுடரே, அமிர்த ஊற்றே, வலிமையின் தந்தையே, வானவர் வழியே, அநந்தவிரிவே, ஆக்கமே, புகழே, வெற்றியே, எமதரசே, நின்வரவு நன்று மிகவும் நன்று.

மருத்துக்களே, புயற் காற்றுக்களே, மனதின் அசைவுகளே, மதிகளே, ஒளிமிகுந்தீர், வலிமையுடையீர், வானத்தையும் மண்ணையும் வலிமைக் களியிலே குமுறும்படி செய்வீர். மேகங்களைப் புடைத்து நல்ல மின்னல் காட்டுவீர். மருத்துக்களே, வாரீர். மனதிலே நேரும் சோர்வுகளை யெல்லாம் உங்கள் வீரத்தினாலே தீர்த்து விடுக. நீங்கள் வாயு மண்டலத்தைப் புனிதப் படுத்துகிறீர்கள். வானத்திலிருந்து மழை பொழியச் செய்கிறீர்கள். வருக.

இன்று தேவர்களை அழைக்கின்றோம்.

காற்றே வா! இங்கேயே இரு எப்போதும்; திரும்பியே போகாதே. நீ உயிர், உன்னை வரிக்கின்றோம். அசுவினி தேவர் உயிர்ப்பரிகளிலே ஏறி வருகின்றனர். அவர் நோய்களைத் தீர்ப்போர். அவரை எம்முள்ளே பதியும்படி செய்கின்றோம்.
**************

தியானங்களும் மந்திரங்களும்
(விடுதலைக்கு வழி)

என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப் போலவே சிந்தனை செய்ய வல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்.

நான் இவ்வுலகத்துப் பொருள்களின் மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக் கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன்.

நான் வேண்டிக்கரையத் தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேனா? ருஷ்ய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்? அன்றி, நான் செல்வத்தை வேண்டி அழுங்குவேனா? செல்வம் என்ன பயன் தரும்? நோவின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளைக்கும்; பகையின்றிக் காக்குமோ? அன்று; பகையைப் பெருக்கும்; கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமோ? அன்று; அவற்றை மிகுதிப்படுத்தும்; மரணமின்றிக் காக்குமோ? காக்காது. எனில், அதனை வேண்டு அழுங்குதல் பெரும் பேதமையன்றோ?

இரப்போன் தன்னைத்தானே விலைப்படுத்திக் கொள்கிறான். பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்று கூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவமானம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்க மாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன்.

ஆரோக்கியம் ஸம்பந்தமான மந்திரங்கள்

நான் நோயற்றேன். நால் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?

ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத் தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன்.

என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை கால்கள் -- இவையெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன. நோயற்றன; நோயுறத் தகாதன; எக்காலும் நோயுற மாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் தாக்கப்படாதன.

நோய்களையும், அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டும் வராதபடி அவற்றை சூன்யத்திற்குள்ளே வீழ்த்தி விட்டேன்.

நானே ஆரோக்கியக்; நான் தேவன்!

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன்! எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.

நான் கடவுள்! ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் எப்போதும் வீர்யமுடையேன்; ஜாக்கிரதையுடையேன்; எப்பொதும் தொழில் செய்வேன்; எப்போதும் காதல் செய்வேன்; அதனால் சாதல் இல்லேன்.

நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே? நான் தேவனாதலால்.

நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும் தீராத மாறாத இளமையுடையேன். மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர், நான் அதனை வேண்டேன். ஏனென்றால், இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை. நான் ஸதாகாலம் துன்பமின்றி வாழும் வாழ்க்கையை விரும்புகிறேன். அதனை நான் எய்தி விட்டேன். தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்? நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன். எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.






2 comments:

  1. கலைகள் அருமை...
    இதிலே முதலில் ஒரு ரிஷி குமாரன் எழுதுகிறான் என்று எழுதியது தான் சிறப்பு. இவனின் நோக்கமே வேதகாலத்திற்கு செல்லவேண்டும் என்பதே... அதாவது தீமை அழிந்து நன்மை பெருகினால் கிருதயுகம் கிடைக்கப் பெறும். ரிஷிகள் அமரத்துவம் பெற்று வாழ்ந்தவர்கள். நான் ரிஷிகுமாரன். நானும் அப்படியே, அது தான் என் நோக்கம். அதை அடைந்தே தீருவேன். என்பதை ஒரே ஒரு சொல்லில் உணர்த்திவிட்டான். செஞ்சொற்வேந்தன்.
    இப்படி ஆரம்பித்தவன்... இந்த அமரத்துவம்
    "மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.
    அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக."
    மனித சாதிக்கே வேண்டும் என்கிறான். அமரத்துவம் எப்படிக் கிட்டும், அதற்கான உபாயம் யாது.. அத்தனையும் உருட்டி திரட்டி மருந்தாக்கி அதை நமக்கு விருந்தாக்கி இருக்கிறான். இந்தக் கரும்பு சுவைக்க இனிமை... சுவைத்தால் சாகா வரம் தரும் என்பது திண்மை. உலகமே சக்திமயம் அவளிடம் காதல் கொள்வேன் அவள் மலர் நான் கருவண்டு. அவளிடம் காதல் கொள்.. புணர்சிக்கொள் அவள் மோகன மகா அனந்த வாழ்வை இந்த பூமியிலே உனக்கு அளித்து அமரத் தன்மை அடையச் செய்வாள் என்கிறான்.
    சக்தியோடு இரண்டறக் கலப்பதே வீடுபேறு... அப்படி பெறுற்றவன் மரணமில்லை... இந்த சக்தி யாரவள் அவளின் தன்மை என்ன அவள் எப்படிப்பட்டவள், அவளின் தோற்றம் மறைவு எப்படி இருக்கும் என்று பகுப்பவன்.... பரபிரமத்தின் உடலான இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களில் உண்டானது இவர்கள் தேவர்கள் இவர்கள் இயங்க சக்தியே காரணம்... ஆக, நாம் முதலில் தேவர்களைப் போற்றுவோம்... அது சக்தியைப் போற்றுவதாகும் என்றேத் துணிகிறான்.
    மேலும் பாரதி...
    "நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?"
    என்கிறான்....
    இந்த நான் யார்... அந்த சி.சுப்ரமனித பாரதியா? இல்லை, இந்த நான் தான் "தான் என்ற அகந்தையை சின்ன நானை வென்ற பிறகு" அவனின் காதலி மகா சக்தி அழித்துச் சென்று மூலத்தில் சேர்த்தாளே அந்த நான். ஆமாம் அந்தப் பெரிய "நான்"
    "வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
    மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
    கானில் வளரும் மரமெல்லாம் நான்
    காற்றும் புனலும் கடலுமே நான்
    ...........................................................
    நானென்னும் பொய்யெய் (சிறிய நான்) நடத்துவோன் நான்
    ஞானச்சுடர்வானில் செல்லுவோன் நான்
    ஆனா பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
    அறிவாய் விளங்கும் முதற் சோதிநான்" (அந்த மிகப் பெரிய நான்)'
    இந்த பித்தன், சித்தன், முக்தன், ஞானக் கிறுக்கன்... அநுபூதி நிலையிலே திரிந்தவன்..
    அதற்கானப் பயிற்சி சூழல் அவன் பிறப்பிலிருந்து அவன் உடல் இறப்பின் வரை இருந்திருக்கிறது....
    செயல்முறை வேதாந்தத்தின் தேவையை அதை நமது; வேதம் கொண்ட லோக குரு பாரத மாதா இந்த உலகிற்களிக்கும் என்பதே இந்த அனுபூதியின் தீர்க்கமான முடிவு... உலகம் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறது...
    அருமை கெளடதரிடம் புறப் பட்டு.... பாரதியிடம் வியாபித்து லோக மனித சாதியிடம் நிறைத்து நிற்கிறது... முப்போதும் இருக்கும் அற்புதம்...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    வணக்கம்,
    தமிழ் விரும்பி.

    ReplyDelete
  2. (ஐயா!..சென்ற பின்னூட்டத்தில் உள்ள எழுத்துக்களைத் திருத்தி மீண்டும் இடுகிறேன்)

    கலைகள் அருமை...
    இதிலே முதலில் ஒரு ரிஷி குமாரன் எழுதுகிறான் என்று எழுதியது தான் சிறப்பு. இவனின் நோக்கமே வேதகாலத்திற்கு செல்லவேண்டும் என்பதே... அதாவது தீமை அழிந்து நன்மை பெருகினால் கிருதயுகம் கிடைக்கப் பெறும். ரிஷிகள் அமரத்துவம் பெற்று வாழ்ந்தவர்கள். நான் ரிஷிகுமாரன். நானும் அப்படியே, அது தான் என் நோக்கம். அதை அடைந்தே தீருவேன். என்பதை ஒரே ஒரு சொல்லில் உணர்த்திவிட்டான். செஞ்சொற்வேந்தன்.
    இப்படி ஆரம்பித்தவன்... இந்த அமரத்துவம்
    "மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.
    அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக."
    மனித சாதிக்கே வேண்டும் என்கிறான். அமரத்துவம் எப்படிக் கிட்டும், அதற்கான உபாயம் யாது.. அத்தனையும் உருட்டி திரட்டி மருந்தாக்கி அதை நமக்கு விருந்தாக்கி இருக்கிறான். இந்தக் கரும்பு சுவைக்க இனிமை... சுவைத்தால் சாகா வரம் தரும் என்பது திண்மை. உலகமே சக்திமயம் அவளிடம் காதல் கொள்வேன் அவள் மலர் நான் கருவண்டு. அவளிடம் காதல் கொள்.. புணர்சிக்கொள் அவள் மோகன மகா அனந்த வாழ்வை இந்த பூமியிலே உனக்கு அளித்து அமரத் தன்மை அடையச் செய்வாள் என்கிறான்.
    சக்தியோடு இரண்டறக் கலப்பதே வீடுபேறு... அப்படி பேருற்றவனுக்கு மரணமில்லை... இந்த சக்தி யாரவள் அவளின் தன்மை என்ன அவள் எப்படிப்பட்டவள், அவளின் தோற்றம் மறைவு எப்படி இருக்கும் என்று பகுப்பவன்.... பரபிரமத்தின் உடலான இந்த பிரபஞ்சம் பஞ்சபூதங்களில் உண்டானது இவர்கள் தேவர்கள் இவர்கள் இயங்க சக்தியே காரணம்... ஆக, நாம் முதலில் தேவர்களைப் போற்றுவோம்... அது சக்தியைப் போற்றுவதாகும் என்றேத் துணிகிறான்.
    மேலும் பாரதி...
    "நான் நோயற்றேன். நான் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?"
    என்கிறான்....
    இந்த நான் யார்... அந்த சி.சுப்ரமணிய பாரதியா? இல்லை, இந்த நான் தான் "தான் என்ற அகந்தையை சின்ன நானை வென்ற பிறகு" அவனின் காதலி மகா சக்தி அழைத்துச் சென்று மூலத்தில் சேர்த்தாளே அந்த நான். ஆமாம் அந்தப் பெரிய "நான்"
    "வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
    மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
    கானில் வளரும் மரமெல்லாம் நான்
    காற்றும் புனலும் கடலுமே நான்
    ...........................................................
    நானென்னும் பொய்யை (சிறிய நான்) நடத்துவோன் நான்
    ஞானச்சுடர்வானில் செல்லுவோன் நான்
    ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
    அறிவாய் விளங்கும் முதற் சோதிநான்" (அந்த மிகப் பெரிய நான்)'
    இந்த பித்தன், சித்தன், முக்தன், ஞானக் கிறுக்கன்... அநுபூதி நிலையிலே திரிந்தவன்..
    அதற்கானப் பயிற்சி சூழல் அவன் பிறப்பிலிருந்து அவன் உடல் இறப்பின் வரை இருந்திருக்கிறது....
    செயல்முறை வேதாந்தத்தின் தேவையை அதை நமது; வேதம் கொண்ட லோக குரு பாரத மாதா இந்த உலகிற்களிக்கும் என்பதே இந்த அனுபூதியின் தீர்க்கமான முடிவு... உலகம் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறது...
    அருமை கெளடதரிடம் புறப் பட்டு.... பாரதியிடம் வியாபித்து லோக மனித சாதியிடம் நிறைத்து நிற்கிறது... முப்போதும் இருக்கும் அற்புதம்...
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    வணக்கம்,
    தமிழ் விரும்பி.

    ReplyDelete

You can send your comments