Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, July 13, 2011

திருநெல்வேலி சதி வழக்கு"

"திருநெல்வேலி சதி வழக்கு"
என் அனுபவங்கள் - நீலகண்ட பிரம்மச்சாரி

(நீலகண்ட பிரம்மச்சாரி என்றும் சாது ஓம்கார் என்றும் அறியப்பட்ட இந்தப் புரட்சிக்காரரைப் பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவர் வரலாற்றை முழுமையாக எழுதி வெளியிட வேண்டும். இங்கு அவரே தன் வரலாற்றின் ஒரு பகுதியைச் சொல்ல அரியலூர் தியாகி சபாபதி அவர்கள் எழுதி "திருச்சி மாவட்ட தியாகிகள் மலரில்" வெளியிட்டிருக்கிறார். படிப்போம்.) நன்றி: அரியலூர் தியாகி சபாபதி.

"1907ஆம் வருஷம் மே மாதம் வங்கம் தந்த சிங்கம் பிபின் சந்திர பால் சென்னைக்கு விஜயம் செய்தார். நான் அப்போது சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு அப்போது வயது 18 இருக்கும். நானும் அவர் கூட்டத்துக்குச் சென்று அவருடைய அனல் கக்கும் சொற்பொழிவைக் கேட்டேன். அவருடையெ பேச்சு என் மனதில் புரட்சிக்கான வித்தை ஊன்றியது. தேசத்துக்காக நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற தாகம் உண்டாகியது. ஏதாவது செய்யத் துடித்தேன்; என்ன செய்வது எப்படி செய்வது என்று புரியவில்லை. மனக் குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

வீட்டிலும் நிம்மதி ஏற்படவில்லை. ஏதாவது செய்தே தீரவேண்டுமென்கிற வெறி. பிபின் சந்த்ர பாலைத் தனிமையில் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் பீட்டர்ஸ் சாலையிலுள்ள கோவிந்ததாஸ் என்பவர் பங்களாவில் தங்கி இருந்தார். அவரோடு இருந்த குஞ்சு பானர்ஜி என்பவருடன் எனக்குத் பழக்கம் ஏற்பட்டது. இந்திய புரட்சியாளர் அமைப்பில் அவர் ஒரு உறுப்பினர். அவருடன் பேசியதில் என் மனம் புரட்சியில் ஈடுபட துடித்தது.

1907இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை சூரத் காங்கிரசுக்குச் செல்வதற்காக வழியில் சென்னை வந்து தங்கினார். கவிச்சக்கரவர்த்தி பாரதியார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிள்ளை அவர்கள் என்னை தூத்துக்குடி வந்து சுதேசி கப்பல் கம்பெனியில் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டார். வ.உ.சி.யும் பாரதியாரும் சூரத் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் என்றிருந்தபோது அங்கு வங்கத்தின் புரட்சி வீரர் சந்திரகாந்த் சக்கரவர்த்தியைச் சந்தித்தனர். தென் இந்தியாவில் தங்கள் புரட்சித் திட்டத்தைப் பரப்ப வேகமும், துணிவும் மிக்க ஓர் இளைஞன் வேண்டும் என்று அவர் கேட்டார். அப்படிப்பட்ட இளைஞர் ஒருவர் இருக்கிறார், சென்னை வந்தால் அறிமுகப் படுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு வந்தனர். இந்த விவரம் எனக்கு அப்போது தெரியாது.

1908ஆம் வருஷம் ஜனவர் மாதம் 4 அல்லது 5 தேதியொன்றில் நான் சென்னை 'இந்தியா' பத்திரிகை அலுவலகத்துக்கு பாரதியாரைப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன். பாரதியாரை நான் அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். நான் போகவில்லையானால் அவர் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடுவார், அந்த அளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய பழக்கம்.

நான் அங்கு போனபோது கல்கத்தாவிலிருந்து சந்திரகாந்த் சக்கரவர்த்தி அங்கு வந்திருந்தார். பாரதியார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சூரத் காங்கிரசின் போது நான் குறிப்பிட்டது இந்த இளைஞரைத்தான் என்று அவரிடம் சொன்னார் பாரதியார். அப்போது சூரத்தில் அவர்களுக்குள் நடந்த பேச்சு பற்றியும் என்னிடம் பாரதி கூறினார். எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அப்போது பாரதியார், தான் ஒரு கவிஞன், எழுத்தாளன், இரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாது, எதையும் பளிச்சென்று சொல்லிவிடும் பழக்கம் உண்டு ஆகையால் நீங்கள் இருவரும் தனிமையில் பேசுங்கள் என்று எங்களை அனுப்பிவிட்டார்.

1905ஆம் வருஷம் வைசிராயாக இருந்த லார்டு கர்சான் வங்களாத்தை இரண்டாகப் பிரித்தார். இந்து முஸ்லீம்களைப் பிரித்து வைத்து ஆளவேண்டுமென்கிற தீய நோக்கம் அவருக்கு இருந்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து அப்போது நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. வங்கத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. படித்த இளைஞர்கள் களம் இறங்கி போராடினர். அதைப் போல தென்னாட்டிலும் புரட்சி இயக்கம் ஒன்றை உருவாக்க சந்திரகாந்த் சக்கரவர்த்தி இங்கு வந்திருந்தார்.

அவரோடு பேசிய பின் எனக்குத் திருப்தி ஏற்பட்டது. தென்னாட்டில் புரட்சி இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதன் பின் தொடர்ந்து நான் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திருவிதாங்கூர் முதலான இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் சுதேசிப் பிரச்சாரம் செய்து கொண்டே, புரட்சி இயக்கத்துக்கு ஏற்ற இளைஞர்களைத் தேடினேன். அப்படிக் கிடைத்த இளைஞர்களை ஆங்காங்கே சிறு குழுக்களாகப் பிரித்து புரட்சிக்கான வேலைகளில் ஈடுபட வைத்தேன். ரகசியக் கூட்டங்கள் நடைபெற்றன. புரட்சிக்கான திட்டங்களும் வகுக்கப் பட்டன. அந்த ரகசியக் கூட்டங்களில் புரட்சி திட்டங்கள் விளக்கப்பட்டன. காளியின் திருவுருவம் ஒன்றை வைத்து அதன் முன் விபூதி குங்குமம் ஆகியவைகளை வைத்து எந்த நிலையிலும் ரகசியங்களைக் காப்பேன், எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும் உறுதி தளரமாட்டேன், எல்லா தியாகங்களுக்கும் உடன்படுவேன் என்று ரத்தத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வைத்தோம்.

1914ஆம் வருஷம், ஜெர்மனி யுத்தத்தைத் துவங்கியது. முதல் உலகப் போர் ஆரம்பமானது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க ஜெர்மனி இந்திய புரட்சியாளர்களுக்கு உதவ முன்வந்தது. கப்பல்கள் மூலம் ஆயுதங்களை புரட்சியாளர்களுக்கு அனுப்ப ஜெர்மனி ஏற்பாடு செய்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு புரட்சியாளர்கள் கையில் ஆயுதம் கிடைத்தவுடன் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் ஆணை பிறப்பித்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து நாட்டைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது திட்டம். ஆங்காங்கே புரட்சியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், ஆணை பிறந்ததும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் இரத்தக் களரியாக வேண்டும் என்பதுதான் புரட்சியின் நோக்கம்.

மேடம் காமா அம்மையார், எம்.வி.திருமலாச்சாரியார் போன்ற புரட்சி இயக்கத் தலைவர்கள் ஜெர்மனியில் தங்கியிருந்தனர். புதுச்சேரிக்கு வந்து சேர்ந்த மண்டையம் குடும்பத்தைச் சேர்ந்தவர் புரட்சியாளர் திருமலாச்சாரியார். உலக முழுவதுமுள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பு இருந்தது எங்களுக்கு. பரோடா மகாராஜா சாயாஜி ராவ் கெயிக்வாட் புரட்சியாளர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார். பம்பாய், பரோடா, கல்கத்தா, காசி, டெல்லி, புதுச்சேரி, லாஹூர் முதலான இடங்களில் எங்கள் புரட்சி இயக்கப் பணி தீவிரமாக நடந்து வந்தது. நான் மேற்சொன்ன ஊர்களுக்கெல்லாம் சென்று ரகசியத் தொடர்பு வைத்துக் கொண்டேன்.

1908ஆம் வருஷம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் பிள்ளை வீட்டில் சென்று சில நாட்கள் தங்கினேன். அங்கு சுப்பிரமணிய சிவாவை சந்தித்தேன். அவருடைய தோற்றம், பேச்சு, பாட்டு, அனல் கக்கும் சொற்பொழிவுகள் இவை என்னைக் கவர்ந்தன. வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு அந்தப் பகுதிகளில் நல்ல செல்வாக்கும் ஆதரவும் இருந்தது.

பாஞ்சாலங்குறிச்சி சென்றேன். அங்கு சிதம்பரம் பிள்ளையின் அறிமுகத்தோடு பல இளைஞர்களைத் தொடர்பு கொண்டு புரட்சிக்குத் தயார் செய்தேன். கட்டபொம்மு நாயக்கர், ஊமைத்துரை அவர்களுடைய சந்ததிகள் செக்காக்குடியிலும், ஆதனூரிலும் வசித்து வந்தனர். ஆதனூரில் மாப்பிள்ளை சாமி மூலம் புரட்சிக்கு இருபதாயிரம் வீரர்களைத் தர அவ்வூர் நாட்டாண்மைக்காரர்கள் ஒப்புக் கொண்டார்கள். இவர்கள் அனைவரும் 'கம்பளத்தார்' எனும் பிரிவைச் சேர்ந்தவர்கள். மரவங்குறிச்சியைச் சேர்ந்த பிச்சாண்டித் தேவர் மூவாயிரம் வீரர்களையும், நடுவப்பட்டி வெள்ளையத் தேவர் ஆறாயிரம் வீரர்களையும், பெரியசாமித் தேவர் ஆயிரக்கணக்கான வீரர்களையும் தருவதாக வாக்குறுதி அளித்தனர். புரட்சிப் படை தயார். ஆனால் அவர்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல தளபதிகள் வேண்டுமே! அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகளில் இறங்கினேன்.

சங்கரகிருஷ்ணன் என்பவர் எனது செயலாளர். உண்மையில் பற்றும் சுறுசுறுப்பும் உள்ளவர். 'இந்தியா' பத்திரிகையில் சென்னையிலும் பின்னர் புதுவையில் பணியாற்றியவர். மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரையும் அழைத்துக் கொண்டு 1910ஆம் வருஷம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்த புனலூர் எனும் ஊருக்குச் சென்றேன். அங்கு காட்டிலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்த 23 வயதான வாஞ்சிநாதன் எனும் இளைஞரைப் பார்த்துப் பேசினோம். சங்கரகிருஷ்ணனின் மருமான் இவர். வாஞ்சிநாதன் ஒரு துடிப்புள்ள இளைஞன். எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர். சிறிதுகூட தயக்கமின்றி புரட்சி இயக்கத்தில் சேர சம்மதம் தெரிவித்தார். அதன் பின் தொடர்ந்து நேரிலும், கடிதம் மூலமும் அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன்.

ஒட்டப்பிடாரம் எனும் ஊரைச் சேர்ந்த மாடசாமி எனும் இளைஞர் எங்கள் புரட்சிப் படையில் தீரமிக்கவர். மகா வீரர், சூரர். இவரைப் போல உறுதியும், தைரியமும் உள்ளவர்களைக் காண்பது அரிது. இவர் ஒரு சகலகலா வல்லவர். எந்த நேரத்திலும் எந்த வேஷத்தையும் போடும் திறமை படைத்தவர். போலீசாரை பல முறை ஏமாற்றி தப்பியிருக்கிறார். மிக நெருக்கமான நண்பர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் எல்லா தியாகங்களுக்கும் உட்பட்டுப் பணியாற்றி வந்தார்.

போலீசார் கண்களை மறைக்க நாங்கள் புனைபெயரில் நடமாடி வந்தோம். நீலகண்டன் என்பது பிரம்மச்சாரி என்றாகியது. நாராயணன் துபே என்ற பெயரைச் சேர்த்துக் கொண்டு பொதுக்கூட்டங்களில் பேசுவார். சங்கரகிருஷ்ணன் ஹரி என்று அறியப்பட்டார். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை கோவிந்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். இப்படி அனைவரும் புரட்சிப் பணியில் ஈடுபட்டோம்.

அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்குமா? அடக்குமுறைகளை ஏவிவிட்டது. தேசபக்தரும் தி ஹிந்து பத்திரிகை ஆசிரியருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் மீது வழக்குப் போட்டது. இந்தியா பத்திரிகைக்கு ஆபத்து வந்தது. புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றது இந்தியா. தொடர்ந்து பாரதியாரும் புதுச்சேரிக்கு வந்தார். நானும் சங்கரகிருஷ்ணனும் அவரைத் தொடர்ந்து புதுச்சேரி வந்தோம். "சூரியோதயம்" எனும் பத்திரிகைக்கு நான் ஆசிரியர் ஆனேன்.

'இந்தியா' "சூரியோதயம்" ஆகிய இரு பத்திரிகைகளும் பிரிட்டிஷ் இந்தியா பகுதிகளில் தடைசெய்யப்பட்டன. விற்பனை தடைபட்டதால் பத்திரிகைகள் நின்று போயின. அரவிந்தரும், வ.வெ.சு.ஐயரும் புதுச்சேரி வந்து சேர்ந்தனர். புரட்சிக் காரர்கள் ஒன்று சேர்ந்த இடமாக புதுவை மாறிப் போயிற்று. பாரதி ஒரு புரட்சிக் கவி. தீவிர தேசியவாதி. ஞான ரதத்தில் ஏறி சர்வ லோகத்தையும் சுற்றி வந்தவர். கள்ளம் கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர். அரசியலில் தீவிரமாக இருந்தும், தீவிரமாக எழுதியும் வந்தாலும் ஒரு சிறு எறும்பிற்குக்கூட தீங்கு செய்யத் துணியாதவர். காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடி எல்லா உயிர்களையும் நேசித்தவர். எங்கள் கொள்கைகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதற்காக எதிர்ப்பதும் இல்லை.

அரவிந்தர் ஓர் பயங்கரவாதியாக இருந்து, அதிலிருந்து விலகி ஆன்மீகத்திற்கு வந்தவர். மக்களின் ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்பினால் நாடு தானாக விடுதலை பெறும் என்பது அவரது தீர்க்கமான நம்பிக்கை. ஆகவே அவர் தனது கவனம் முழுவதையும் ஆன்மீகத்தில் திருப்பினார்.

வரகநேரி வெ.சுப்பிரமனிய ஐயர் ஓர் மகா மேதை. அதிகம் படித்தவர். தமிழில் பெரும் பாண்டித்தியம் உள்ளவர். இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் படித்தவர். புரட்சிக்காரர் சவார்க்கருடன் நட்பு கொண்டவர். இங்கிலாந்தில் திங்க்ராவைத் தூண்டி இந்தியர்களுக்கு எதிரானவரான கர்சான் வில்லி எனும் ஆங்கிலேயனைச் சுட்டுக் கொல்ல வழி வகுத்தவர். ஆண்மையும், தைரியமும், வீரமும் ஒருங்கே பெற்றவர். புதுச்சேரி வந்து சேர்ந்த பின்னும் தனது புரட்சி எண்ணத்தில் இருந்தவர்.

எந்தவொரு தனிப்பட்ட ஆங்கிலேயனின் ரத்தத்தையும் சிந்தும் ஆர்வம் எங்களுக்கு இல்லை. தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லை. தேசவிடுதலைக்காக ஒரே நேரத்தில் நடத்தத் தயாராக ஓர் ஆயுதப் புரட்சிக்கானப் பாதையைத் தான் தேர்ந்தெடுத்தோம். மற்றபடி தனிநபர் கொலைகளை நாங்கள் நம்பவுமில்லை, ஊக்குவிக்கவுமில்லை.

நிற்க, பத்திரிகை வாயிலாக மக்களைத் தூண்டும் பணி நின்று போனதால், ஜெர்மனியிலிருந்து புரட்சிக்கான உதவி வரும் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் இருந்தோம். வ.உ.சி.யும் சிவாவும் கைது செய்யப்பட்டு விட்டனர். சிதம்பரம் பிள்ளைக்கு நாற்பது ஆண்டுகள் (இரண்டு ஜென்ம தண்டனை)யும் சிவாவுக்கு பத்து ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும் கிடைத்தன. பிள்ளை சிறையில் செக்கு இழுத்தார். கல் உடைத்தார். அவரது தகுதி, கல்வி போன்றவற்றைக் கவனிக்காமல் அவரை ஈவு இரக்கமின்றி நடத்தினர். சட்டம் படித்தவர் செக்கிழுத்தார், கல் உடைத்தார். மேடைகள் தோறும் சுதந்திர முழக்கம் செய்த சிவாவுக்கும் கல் உடைக்கும் வேலை.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார்:--

கைநோவக் கால்நோவக் கல்லுடைத்துச் செக்கிழுத்து
மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாது நின்ற - ஐயன்
சிதம்பரம் அன்று சிறை சென்றிலனேல், இன்று
சுதந்திரம் காண்பாயோ? சொல்.

அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப்பேன் என்று
வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் - விஞ்சுபுகழ்ச்
செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப் பேரண்ணலை நாம்
வந்தனை செய்வோம் மகிழ்ந்து.

கப்பலை ஓட்டிக் கடுங்காவற்கு ஆளாகி
உப்பிலாக் கூழ் உண்டு உடல் மெலிந்தோன் - ஒப்பிலாத்
தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்
நன் நாமம் வாழ்த்துக என் நா.

சிதம்பரம் பிள்ளை அனுபவித்த சிறைக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமானவர் ஆஷ் எனும் ஆங்கில துரை. ஆளப் பிறந்தவன் எனும் ஆணவம். இதனை அறிய மக்களும் தேசபக்தர்களும் கொதிப்படைந்தனர். கம்பளத்தார்களில் சிலர் என்னை அணுகி ஆஷ் துரையைப் பழிவாங்குவது குறித்து என்னைக் கலந்து ஆலோசித்தபோது, அத்தகைய கொலைச் செயல்களில் ஈடுபடவேண்டாமென்று தடுத்து விட்டேன்.

நான் ஊரில் இல்லாத சமயம் வாஞ்சிநாதன் என்னைப் பார்க்கப் புதுச்சேரி வந்தார். நான் இல்லை என்றதும் வ.வெ.சு.ஐயரைச் சென்று பார்த்திருக்கிறார். அவர் இவரது துணிச்சலையும், உணர்ச்சி வேகத்தையும் பயன்படுத்திக் கொண்டு ஆஷ் துரையை பழிவாங்குவதற்கு தூண்டிவிட்டார். அதற்கான திட்டமொன்றையும் வகுத்து, துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்து, அவருக்கென்று ஒரு துப்பாக்கியையும் கொடுத்து ஊருக்கு அனுப்பி விட்டர்.

1911ஆம் வருஷம் ஜுன் மாதம்17ஆம் தேதி, திருநெல்வேலியிலிருந்து கொடைக்கானலுக்குத் தன் மனைவியுடன் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் ரயில் மூலம் புறப்பட்டார். மணியாச்சி சந்திப்பில் ரயில் நின்றது. வீரன் வாஞ்சிநாதன் அவர் பெட்டியில் திடீரென்று நுழைந்து மூன்றுமுறை தன் கைத் துப்பாக்கியால் ஆஷைக் குறிபார்த்து சுட்டார். இரத்த வெள்ளத்தில் விழுந்தான்  ஆஷ். அவர் மனைவி பயத்துடன் நடுங்கிக் கொண்டு கூச்சலிட்டார். அப்போது வாஞ்சி, "பயப்படாதே! வீரத் தமிழன் ஒரு பெண்ணைத் தொடமாட்டான். எங்கள் அனுபுத் தலைவருக்கு இழைத்த கொடுமைகளுக்காக இவனைப் பழிவாங்கி விட்டேன், என் லட்சியம் நிறைவேறிவிட்டது" என்று சொல்லி பெட்டியிலிருந்து கீழே குதித்தார். அப்போது சிலர் வாஞ்சியைப் பிடிக்க ஓடிவந்தார்கள். தப்பிக்க வேறு வழியின்றி வாஞ்சிநாதன் அருகிலிருந்து கழிவறைக்குள் புகுந்து தன் வாயில் துப்பாக்கியை வைத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார்.

தேச விடுதலைப் புரட்சிக்காக என்னால் உருவாக்கப்பட்ட என் சீடன் ஒருவன் வாழ்வு, தவறான வழியில் செலுத்தப்பட்டால் முடிந்து போயிற்று. என் வாழ்வில் அது ஒரு சோகம் நிறைந்த அத்தியாயம். அந்தோ! வீரவாஞ்சி, உன்னையும் உன் வீரத்தையும் நினைக்க நினைக்க என் மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன. தப்பிப் பிழைக்க முடியாத நிலையில், வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டால், குறி தவற வாய்ப்பில்லை என்று வ.வெ.சு.ஐயர் சொல்லிக்கொடுத்த பாடத்தை வாஞ்சி மறந்துவிடவில்லை.

இந்த சம்பவம் நடந்தபோது நான் காசியில் இருந்தேன். பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் இந்தச் செய்தி வெளிவந்தது. இதைக் கேள்விப்பட்ட ஒவ்வொரு ஆங்கில அதிகாரிக்கும் பெரும் அதிர்ச்சியும், பீதியும், பயமும் ஏற்பட்டது. லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்களையும் இந்த நிகழ்ச்சி ஆட்டி வைத்துவிட்டது. இந்தக் கொலையில் என்னையும் சம்பந்தப்படுத்தி எனக்கெதிராக வாரண்ட் பிறப்பித்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

நான் கல்கத்தா சென்று இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டுமென்று கலந்து ஆலோசித்தேன். எனக்கு மூன்று வழிகள் புலப்பட்டன. அவை.

1. வெளி நாட்டிற்கு தப்பிச் சென்று மறைந்து வாழ்வது.
2. உள் நாட்டிலேயே தலைமறைவாகி புரட்சி வேலைகளில் ஈடுபடுவது.
3. ஆஷ் கொலையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு எந்தவித தொடர்பும் இல்லையாதலால் போலீசாரிடம் சரண் அடைந்து நீதிமன்றத்தை அணுகுவது.

இதில் முதல் வழியைப் பின்பற்றினால் சிறைக்குப் போவதிலிருந்து தப்பிவிடலாம். ஆனால், நாட்டையும் புரட்சியையும் மறந்துவிட வேண்டும். நாடு சுதந்திரம் அடையும் வரையில் தாய்நாட்டைப் பார்க்க முடியாது. இரண்டாவது வழியைப் பின்பற்றினால் தேசசேவையைத் தொடரமுடியுமே தவிர எப்போது வேண்டுமானாலும் கைதாகி விடலாம். எத்தனை காலம்தான் கோழை போல மறைந்து வாழ்வது. மூன்றாவது வழியில் ஆபத்து அதிகம் இல்லை. கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் நீதிமன்றத்தில் நான் விடுதலை பெற வாய்ப்பிருக்கிறது.

வாஞ்சிநாதன் வீட்டைச் சோதனையிட்ட போது அவனுக்கு நான் எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் கிடைத்திருக்கிறது. அவன் வன இலாகாவில் பணி புரிந்து கொண்டிருந்ததால் எனக்கு ஒரு புலித்தோல் இருந்தால் அனுப்பும்படி எழுதியிருந்த கடிதம் அது. அந்தக் கடிதம் எனக்கு ஒன்றும் பெரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க வாய்ப்பில்லை, ஆகையால் சரண் அடைந்துவிட முடிவெடுத்தேன்.

நான் கல்கத்தா போலீசுக்குத் தெரிவித்து என்னைக் கைது செய்து கொண்டு போகுமாறு அறிவித்து விட்டேன். போலீஸ் எனக்குத் தொந்தரவு கொடுப்பார்கள் என்று நான் பயப்படவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தினாலும் என்னால் சமாளிக்க முடியும் என்ற உறுதி எனக்கு இருந்தது. கல்கத்தா கமிஷனருக்கு தகவல் தெரிவிக்க அவர் வந்து என்னைக் கைது செய்து மணியாச்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

அங்கு என்னை 60 போலீசார் அழைத்துக் கொண்டு போய் கலெக்டர் முன் நிறுத்தினார்கள். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி என்னை அதிகாரத் திமிருடன் "Walk up to the Jail" என்று உத்தரவிட்டார். அதற்கு நானும் ஆங்கிலத்தில் "No, I wont walk" என்று கத்தினேன். அவர் மூன்று முறை உத்தரவிட்டும் நான் மறுத்தேன். நானே முன்வந்து போலீசிடம் சரண் அடைந்தவன். அப்படியிருக்க 60 போலீசாரும், நீட்டிய துப்பாக்கிகளும் எதற்கு? நான் தப்பி ஓடுவதற்காகவா கல்கத்தா கமிஷணர் முன்பு சரணடைந்தேன். வலிய உங்களிடம் வந்த சரணடைந்த எனக்கெதிராக எதற்கு இந்த ஜபர்தஸ்து என்றேன்.

இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த கலெக்டர் தம்பித்துரை ஐ.சி.எஸ். என்னைப் பார்த்து, "Calm yourself Mr.Neelakandan" கல்கத்தாவிலிருந்து மிகுந்த கஷ்டப்பட்டு பயணம் செய்து வந்துள்ளீர்கள். போய் முதலில் முகத்தைக் கழுவிக் கொண்டு வாருங்கள். காபி சாப்பிடலாம்" என்று அன்போடும், பண்போடும் என்னை உபசரித்தார். ஒரு குதிரை வண்டி கொண்டுவரச் சொல்லி அதில் அழைத்துப் போகுமாறு 3 ஜவான்கள் மட்டும் கூடப் போகும்படி உத்தரவிட்டார். இந்த நல்ல மனதுடைய அதிகாரி பிற்காலத்தில் எனக்கு சீடராகி அடிக்கடி என்னிடம் வந்து தங்கிப் போவதுண்டு. பல உதவிகளையும் எனக்குச் செய்து கொடுத்திருக்கிறார். அந்த உத்தமர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தனது 87ஆம் வயதில் சென்னையில் காலமானார் என்பதை அறிய நான் பெரிதும் வருந்தினேன்.

நிற்க, என் நண்பர்கள் அனைவரும் கைதாகி மணியாச்சி மாஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பப் பட்டது. சென்னை மாகாணம் முழுவதும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டது. "திருநெல்வேலி சதி வழக்கு" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டது. எங்கள் மீதான வழக்கு விவரம். "சர்க்காருக்கு எதிராக சதி செய்து மன்னருக்கு எதிராக யுத்தம் தொடுத்ததாக" செக்ஷன் 121 (A) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப் பட்டிருந்தோம். எண்பது நாட்கள் விசாரணை நடைபெற்றது. அரசாங்கத் தரப்பில் 280 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். குற்றம்சாட்டப் பட்டவர்கள் சார்பில் 200 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். அரசாங்கத்துக்கு 3 வக்கீல்களும், எங்களுக்காக ஆந்திர கேசரி டி.பிரகாசம், தேவதாஸ் பிள்ளை, என்.கே.ராமசாமி ஐயர், எஸ்.ஸ்ரீநிவாச ஐயங்காரின் ஜூனியர் ஜே.சி.ஆதம் என்கிற ஆங்கிலேயர் ஆகியோர் ஆஜராயினர்.

முடிவில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நான் தான் முதல் எதிரி, எனக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல், 2ஆவது எதிரி சங்கரகிருஷ்ணனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளைக்கு 4 ஆண்டு கடுங்காவல், ஆறுமுகம், ஹரிஹர அய்யர், சோமசுந்தரம் பிள்ளை முதலான 5 பேருக்கும் தலா ஓர் ஆண்டு சிறையும் அளித்து 1912 பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கப் பட்டது. தீர்ப்பு 400 பக்கங்கள் அடங்கியதாக இருந்தது.

என் அன்பிற்குரிய சீடன் மாடசாமி பிள்ளை போலீசில் சிக்கவேயில்லை. அவர்மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் இல்லாமலே விசாரணை நடந்தது. ஆனால் மாடசாமி என்ன ஆனார் என்கிற விவரமே தெரியாமல் போய்விட்டது.

1914இல் முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது. என்னுடைய புரட்சிக்கான ஆயத்தங்கள் நான் சிறைப்பட்டதனால் எல்லாம் முடங்கிப் போய்விட்டது. வாஞ்சிநாதன் அவசரப்பட்டு செய்த ஒரு விவேகமற்ற காரியத்தால் எல்லாம் கெட்டுவிட்டது. தானும் மாண்டுபோய், நடக்க விருந்த புரட்சியையும் முடக்கிப் போடும் நிலைக்கு ஆனது வாஞ்சிநாதனால். மன உளைச்சல் காரணமாக என்ன செய்வது என்று தெரியவில்லை. மன உறுதியுடன் மறுபடி வெளியே வந்து புரட்சி வேலைகளில் ஈடுபட மனம் துடித்தது. 1914, பெல்லாரி சிறையில் இருந்தேன். அங்கு சிறைக் கம்பிகளை அறுத்துக் கொண்டு சிறையிலிருந்து தப்பி விட்டேன்.

நாம் ஒன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைத்து விடுகிறார். தர்மாவரம் ரயில் நிலையத்தில் நான் இறங்கி வெளியேறும் சமயத்தில் என்னை கவனித்து விட்டு, "அதோ நீலகண்டன், அதோ நீலகண்டன்!" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். போலீஸ் என்னை அப்படியே அமுக்கிப் பிடித்து விட்டது. என்ன நடந்தது என்றால், சிறையில் இருந்த ஒரு கேடி விடுதலையாகி வெளியே இருந்தவன் என்னை அடையாளம் கண்டுகொண்டு போலீசிடம் சத்தம் போட்டுக் காட்டிக் கொடுத்து விட்டான். சிறையிலிருந்து தப்பிச் சென்றதற்காக மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை உபரியாகக் கிடைத்தது. இரண்டு வருஷங்களாக சிறையில் கிடைத்த நன்னடத்தை சலுகைகளையெல்லாம் இழந்தேன்.

தண்டனைக் காலம் 7வருஷம் 6 மாதத்தையும் சென்னை, பாளையங்கோட்டை, பெல்லாரி, கண்ணனூர், கோவை, ராஜமகேந்திரபுரம், விசாகப்பட்டினம் ஆகிய சென்னை மாகாண சிறைகளில் கழித்துவிட்டு 1919ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் விசாகப் பட்டினம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். விடுதலையாகி சென்னைக்கு ரயிலில் புறப்பட்டேன். அங்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் என்னுடைய தந்தை வந்திருந்து என்னை மாயவரம் அழைத்துச் சென்றார். 4 மாத காலம் அவருடன் தங்கியிருந்துவிட்டு மீண்டும் சென்னை வந்து சேர்ந்தேன்.

நான் தான் என் வீட்டிற்கு மூத்த பிள்ளை. அதனால் என் தந்தை என்னிடம் தனி பாசமும் வாஞ்சையும் வைத்திருந்தார். எங்கள் மீது நடைபெற்ற வழக்கில் என் தந்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 13ஆவது சாட்சி. நீதிபதி சாட்சிக் கூண்டில் நின்ற என் தந்தையிடம், "உங்களுடைய வயதான காலத்தில் சம்பாதித்து உங்களுடைய குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய உங்கள் ஜேஷ்ட புத்திரன் அரசாங்கத்துக்கு விரோதமாகச் செயல்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? ஏன் தடுக்கவில்லை?" என்று கேட்கப் பட்டது.

அதற்கு என் தந்தை சொன்னார், "சமையல் வேலை செய்பவன்கூட மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதிக்கிறான். என் மகன் சம்பாத்தியம் எனக்கு ஒன்றும் பெரிதல்ல. அவனுடைய தேசத் தொண்டை நான் பெரிதாக மதிக்கிறேன். அதனால் பெருமையும் அடைகிறேன்" என்றார். அப்படிப்பட்ட தேசபக்தர் என் தந்தை.

சென்னையில் 566, பைக்கிராப்ட்ஸ் சாலையில் ஒரு வாடகை இடத்தில் தங்கிக் கொண்டு, வாயப் பிள்ளைத் தெருவில் 8ஆம் எண் கட்டடத்தில் இருந்த காசி அய்யர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 1921-22ஆம் ஆண்டில் நான் உண்ண உணவின்றியும் கையில் காசில்லாமலும் கஷ்டப்பட்ட நாட்கள் பல உண்டு. சில சமயம் ஒருவரும் அறியாமல் இரவில் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு பகலில் சுதேசி பிரச்சாரமும் செய்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் கையில் காசு இல்லை. அதனால் சாப்பிடவில்லை. பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. பசியின் கொடுமையைத் தாள முடியாமல் சோர்வுற்றிருந்த சமயம் மகாகவி பாரதியாரின் ஞாபகம் வந்தது. மெதுவாக அவர் இருப்பிடம் சென்றேன். அவர் என்னைக் குதூகலமாக வரவேற்றுப் பேசினார். அவருடைய அன்புப் பிடியில் சிக்கிய நான் அவரிடம் என் துன்ப நிலையைச் சொல்ல மனம் வராமல் தவித்தேன். பசி என் வயிற்றைக் கிள்ளுகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி அவரிடம், "ஒரு நாலணா இருக்குமா?" என்று கேட்டுவிட்டேன்.

அவர் திடுக்கிட்டு, "ஏன்? ஏன்?" என்றார். நான் அன்று முழுவதும் கொலை பட்டினி என்று சொன்னதும் பதறிப்போய் நாலணா கொண்டு வந்து கொடுத்து, "பாண்டியா, உடனே போய் சாப்பிட்டுவிட்டு வாரும்" என்றார். அப்போது அவர் பாடிய பாட்டுதான் "தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என்பது. என்னால், என் நிலைமைக்காக கவியின் உள்ளத்தில் சுரந்த கவி ஊற்றுதான் அந்த ஆவேசம் நிறைந்த பாட்டு. ஆகா! எத்தனை அன்பு, எத்தனை பாசம், அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ். இந்த ஏழையால் அவருக்கு என்ன கைமாறு செய்யமுடியும்? அந்தப் புரட்சிக் கவிஞர், அகால மரணம் எய்திய போது உடனிருந்து, அவரது மயான யாத்திரைக்குத் தோள் கொடுத்த நால்வரில் நானும் ஒருவன். அவரது உயிரற்ற உடலை சுமக்கும் பாக்கியமாவது என் தோளுக்குக் கிடைத்ததே என்று நான் பெருமைப் படுவதுண்டு.

(இதன் பின் நடந்தவற்றையும் நீலகண்டர் எழுதியிருக்கிறார். அதை பின்பு மற்றுமொரு கட்டுரையில் பார்ப்போம்)

நன்றி: -- "மலரும் மாலையும்" கவிதையில் கவிமணி தேசிக விநாயகம் எழுதிய பாடல் வரிகள்:--

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்
சற்றும் இதற்கோர் ஐயமுண்டோ?

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு
நேயம் கொண்ட நெறியோர்க்கு
விஞ்சும் பொறுமை யுடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?

உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்
பள்ளம் உயர் மேடாகாதோ?
பாறை பொடியாய்ப் போகாதோ?

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞான மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

4 comments:

  1. அறிய பயனுள்ள அற்புதமான தகவல்கள் நிரம்பிய பதிவு, பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  2. ///1921-22ஆம் ஆண்டில் நான் உண்ண உணவின்றியும் கையில் காசில்லாமலும் கஷ்டப்பட்ட நாட்கள் பல உண்டு. சில சமயம் ஒருவரும் அறியாமல் இரவில் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு பகலில் சுதேசி பிரச்சாரமும் செய்து கொண்டிருந்தேன்.////

    "உண்மையிலே அழுதுவிட்டேன்"
    இத்தனைக் கொடுமைகளையும்
    அனுபவித்தும் தேச விடுதலைக்கு
    இந்த மகாத்மாக்கள் பட்ட பாடு தான்
    எத்தனை... எத்தனை...
    அறிய பலத் தகவல்கள் அறியத்
    தந்தைமக்கு நன்றிகள் பல ஐயா!

    ReplyDelete
  3. http://marupakkams.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

    ReplyDelete
  4. http://marupakkams.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/

    ReplyDelete

You can send your comments