பாரதி ஏழையல்ல! கர்ணனே!!
எழுதியவர்: வ.வெ.சு.ஐயரின் மனைவி திருமதி பாக்யலட்சுமி அம்மாள்.
(புதுச்சேரியில் பாரதியார் வசித்தவந்த போது அவரது குடும்பத்திற்கும் வ.வெ.சு.ஐயர் குடும்பத்திற்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. வ.வெ.சு.ஐயரின் மனையார் திருமதி பாக்கியலட்சுமி அம்மாளை பாரதியார் "தங்கச்சியம்மா" என்று அன்புடன் அழைப்பார். பாரதியார் தம் இல்லத்திற்கு வரும் பொழுதெல்லாம் பாக்யலட்சுமி அம்மையார் அவரை நன்கு உபசரித்திருக்கிறார். பாரதியார் புதுவையில் நடத்திய பெண்கள் முன்னேற்ற சங்கத்தில் இவர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். பாரதியாரின் குணங்களை இந்தக் கட்டுரையில் பாக்யலட்சுமி அம்மாள் எழுதியிருக்கிறார்.)
=============
ஸ்ரீ பாரதியை நான் 1910 நவம்பரில் முதன்முதலில் பார்த்தேன். அன்று அவர் எங்கள் வீட்டிற்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் போனபிறகு அவர் யாரென ஐயரைக் (கணவர் வ.வெ.சு.ஐயரை) கேட்டேன். அவர்தான் சுப்ரமண்ய ஐயர் என்று அவர் பதில் சொன்னார். நான் ஜி.சுப்பிரமணிய ஐயரைப் படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தில் இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறதே என ஐயரை மறுபடி கேட்டேன். அதற்கு அவர், 'அவர் ஜி.சுப்பிரமணிய ஐயர், இவர் ஸி.சுப்பிரமணிய பாரதி. இருவரும் வேறு வேறு" என்றார் ஐயர்.
பாரதி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர் மனைவி செல்லம்மாளும் எங்களுக்குப் பழக்கமான பிறகு, பாரதி, ஸ்ரீநிவாசாச்சாரியார், ஐயர் மூன்று வீட்டுக்காரர்களும் ஒரு குடும்பம் போலப் பழகி வந்தோம். பாரதி களங்கமற்ற ஒரு சின்னக் குழந்தை போல இருப்பார். எப்பொழுதும் வீரம் நிறைந்த தொனியோடு பேசுவார். எப்போதும் ஒரே குதூகலமாக இருப்பார்.
பார்த்த அளவில், எண்ணின மாத்திரத்தில் கவி கட்டும் திறமை அவருக்கு உண்டு. யோசித்துத்தான் எழுத வேண்டுமென்பதில்லை. அநேக நாட்களில் எங்கள் வீட்டில் பேசிக்கொண்டு ஐயரோடு எதையேனும் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு பாட்டு அவர் உள்ளத்தில் தோன்றிவிடும். உடனே எழுதிவிடுவார். தன் மனதில் எழுந்த அந்தப் பாட்டின் சுவையைத் தானே அனுபவித்து, தன்னையும் மறந்து இரைந்து பாடிக் கொண்டே குதிப்பார்.
அவர் கபடமற்ற குணமுடையவர். மனதில் எண்ணங்களை வைத்துக் கொள்ளத் தெரியாது. தான் எத்தனை வறுமையோடு இருந்த போதிலும் அதற்காக அவர் சற்றும் வருந்தினவரல்ல.
பாரதி எல்லோரையும் ஒன்றாகப் பாவிப்பார். வித்தியாசம் பார்க்கத் தெரியாது. ஒவ்வொரு நாள் எங்கள் வீட்டிற்கு வரும் போது, கோட் ஸ்டாண்டில் இருக்கும் துணிகளில் ஏதேனும் தனக்கு வேண்டுமென்று ஆசை உண்டானால், அதை எடுத்து, தான் அணிந்து கண்ணாடி முன்னால் நின்று பார்த்துக் கொண்டு, "ஐயரே! இது எனக்கு நான்றாயிருக்கிறது - எனக்கு நன்றாயிருக்கிறது - எனக்குத்தான், கொடுக்க மாட்டேன்" என்று சொல்லி விடுவார். அவருடைய மனோபாவத்தை அறியும் சக்தி உள்ளவர்கள், அவரை ஓர் சகோதரனாக பாவித்து, உரிமையோடு எடுத்துச் செல்வதற்கு சந்தோஷப் படுவார்களே தவிர, அவரைக் கோபிக்க மாட்டார்கள்.
பாரதியை ஏழை என்று சொல்வது தகாது. அதற்கு மாறாக அவரைக் கர்ணன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அத்தனை ஆசையோடு எடுத்துச் சென்றதைக்கூடத் தனக்கு வேண்டுமென வைத்துக் கொள்ள மாட்டார். லங்கோடு, வேஷ்டி, ஷர்ட்டு, கோட்டு, தலைப்பாகை இத்தனை தரித்துக் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்படுவார். வீடு திரும்பும்போது, அத்தனையையும் அணிந்திருப்பாரா என்பது சந்தேகமே. எவனாவது வழியில் வேஷ்டி இல்லை என்பான், இவர் தலைபாகையை எடுத்து அவனுக்குக் கொடுத்து விடுவார். இன்னும் கொஞ்ச தூரம் போகையில், குளிர் தாங்க முடியவில்லை என்பான் இன்னொருவன், போட்டிருக்கும் கோட்டு அவனுக்குப் போய்விடும். இவ்விதமாக ஒருநாள் வெறும் லங்கோடோடு வீடு போய்ச் சேர்ந்ததாக பாரதியே ஒரு முறை ஐயரிடம் சொல்லியிருக்கிறார்.
அந்த கஷ்டமான காலங்களில்கூட ஒவ்வொரு சமயம் யாரேனும் சிநேகிதர், வீட்டுக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு சாப்பாட்டைப் பங்கிட்டுக் கொடுப்பார். பாரதிக்கு ஈகை, கவிதா சக்தி போலவே அவருடைய பிறவிக் குணம். பாரதி போன்ற நிஷ்களங்கமான, இரக்கமுள்ள ஹிருதயம் காண்பது அரிது.
நாங்கள் எல்லோரும் அனேகமாக தினம் கடற்கரைக்குப் போவோம். பாரதி அங்கு கடலையும், வானத்தையும் கண்டு, தன்னை மறந்து பாட ஆரம்பித்து விடுவார். அவர் தீரமான குரல் இப்பொழுதும் காதில் கேட்கிறது. அவருடைய பாட்டுக்களை எத்தனையோ பேர் பாடுகிறார்கள். ஆனால் அவைகளுக்கு இருக்கும் பொருள் நயத்தை அனுபவித்துப் பாடுகிறவர்கள் சிலரே.
உணர்ச்சி மேலிட்டு, "வீரமுடைய நெஞ்சம் வேணும்" என்று மார்பை உயர்த்திக் கொண்டு பாரதி பாடுவார். அப்போது அவரைப் பார்த்தால் கோழைக்கும் வீரமூட்டும் சக்தி அவருக்கு இருப்பதாகத் தோன்றும். எவ்விதமான கஷ்ட நிலையிலும் அவர் உள்ளத்தில் உற்சாகம் மாத்திரம் குறையவே குறையாது.
பாரதி பெரிய வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் தங்கவே மாட்டார். ஒரு நாள் ஐயர், "நீங்கள்தான் வீட்டிலேயே இருப்பதில்லையே, எதற்கு அத்தனை பெரிய வீடு?" என்று கேட்டார்.
அதற்கு பாரதி, "சிறிய வீடு எனக்குப் பிடிப்பதில்லை. வீட்டுக்கார 'விளக்கெண்ணெய் செட்டிக்கோ வாயிதா எட்டு மாதம்வரை சொல்லலாம்" என்பார்.
அதற்கு ஐயர், "வீட்டிலாவது சுகமாக இருக்கக் கூடாதா? ஏன் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?" என்பார்.
பாரதி "வீட்டில் இருக்கலாம், ஆனால் மூட்டைப் பூச்சிக் கடி, ஈக்கடி, எறும்புக்கடி" என்று அடுக்கிக் கொண்டே போனார்.
ஐயர், "அதோடு கடன்காரர் கடியும் சேர்ந்ததுதானோ?" என்று கேலியாகக் கேட்டார். அதற்கு பாரதி உரத்த குரலில் சிரித்துவிட்டு, "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே" என்று பாடினார்.
பாரதி சிறந்த கவி என்பது அவர் பாட்டுக்களைப் படித்து ஐயர் அறிவார்கள். ஆனால் அவருடைய உயர்ந்த குணத்தையும் உணர்ச்சிகளின் மேன்மையையும் அறிந்தவர் மிகவும் குறைவு. பாரதி உயிருடன் இருந்த காலத்தில் அவரைப் போற்றாமல் இருந்ததால் பாரதிக்கு சிறிதும் நஷ்டமில்லை. தமிழ்நாடுதான் நஷ்டம் அடைந்தது.
"தோன்றி அழிவது வாழ்க்கை - இதில்
துன்பத்தோடு இன்பம் பெருமை என்றோதும்
மூன்றில் எதுவருமேனும் களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி" (பாரதி)
இந்தக் கட்டுரை மகாகவியின் கனிந்த உள்ளத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது...
ReplyDeleteஅற்புதம்.
"பாரதியை ஏழை என்று சொல்வது தகாது. அதற்கு மாறாக அவரைக் கர்ணன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் அத்தனை ஆசையோடு எடுத்துச் சென்றதைக்கூடத் தனக்கு வேண்டுமென வைத்துக் கொள்ள மாட்டார். லங்கோடு, வேஷ்டி, ஷர்ட்டு, கோட்டு, தலைப்பாகை இத்தனை தரித்துக் கொண்டு வீட்டைவிட்டுப் புறப்படுவார். வீடு திரும்பும்போது, அத்தனையையும் அணிந்திருப்பாரா என்பது சந்தேகமே. எவனாவது வழியில் வேஷ்டி இல்லை என்பான், இவர் தலைபாகையை எடுத்து அவனுக்குக் கொடுத்து விடுவார். இன்னும் கொஞ்ச தூரம் போகையில், குளிர் தாங்க முடியவில்லை என்பான் இன்னொருவன், போட்டிருக்கும் கோட்டு அவனுக்குப் போய்விடும். இவ்விதமாக ஒருநாள் வெறும் லங்கோடோடு வீடு போய்ச் சேர்ந்ததாக பாரதியே ஒரு முறை ஐயரிடம் சொல்லியிருக்கிறார்."
இப்படி ஒரு அற்புத மனிதரைக் காப்பாற்றாமல் விட்டு விட்டதே இந்த தமிழுலகம் என்று நினைக்கையில் உண்மையில் கண்கள் குளமாகிறது...
தான் வாழ்ந்த வாழ்க்கையைத் தான் பாடலாகப் பாடியுள்ளான் இந்த மகாகவி.
இப்படித் தான் கானாடுகாத்தான் வந்திருந்த சமயத்தில் அங்கு பாரதியின் நண்பர் திருவாளர் சண்முகம் செட்டியார் அவர்கள் பாரதிக்கு அன்பளிப்பாக கொடுத்த கறுப்புக் கோட்டை ஊருக்குப் போகும் வழியிலே திருப்பத்தூர் பேரூந்து நிலையத்தில் குளிரில் சட்டையில்லாமல் நின்ற ஒருவருக்கு கொடுத்து விட்டு சென்றானாம். கர்ண மகா பிரபு அவன். சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை யைப் போற்றியவனல்லவா.
வாழ்க பாரதி புகழ். நன்றி.