Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, September 4, 2011

எப்போ?


வித்வான் மா.சுப்பையா எழுதி
"தாமரை" பாரதி நூற்றாண்டு விழா மலரில்
வெளியான கவிதைகளிலிருந்து
சில பகுதிகள்.
*****
பாட்டுக்கொரு புலவன் பாரதி - கவி
பாடும் புலவருக்குச் சாரதி
காட்டும் வழியதனைச் சிந்திப்போம் - நன்கு
கருத்தில் இருத்தி அதை வந்திப்போம்!

****
பாஞ்சாலிகள் சபதம் பலிக்கிறது எப்போ?
பத்தினியர் விரித்த குழல் முடிக்கிறது எப்போ?
பூஞ்சோலையைக் கிருமி அழிக்குதடாஇப்போ!
பூச்சி மருந்தைக் கரைத்துத் தெளிக்கிறது எப்போ?
துரியோத னாதியர்கள் தொலைவதுவும் எப்போ?
துச்சாதனர் கூட்டம் அழிவதும் எப்போ?
பெரியோரை அரியணையில் இருத்துவது எப்போ?
பீடைகளை இனங்கண்டு துரத்துவது எப்போ?
உலகத்தில் திருடர்கள் சரிபாதி யப்பா!
ஊமைகள் குருடர்கள் மறுபாதி யப்பா!
கலகத்தில் பிறக்கிறது தான் நீதி யப்பா!
கலகங்கள் நீதிக்குப் பிறக்கிறது எப்போ?
பாரதியின் சிந்தனைகள் பலிக்கிறது எப்போ?
பாட்டாளிகள் தூங்கி விழிக்கிறது எப்போ?
வேரதிரக் கொதிக்கின்ற வெந்நீரை விட்டே
விஷப் பூண்டைப் பூண்டோடு அழிக்கிறது எப்போ?
எல்லோரும் அமரநிலை எய்துவது எப்போ?
இந்தியா புவித் தலைமை ஏற்பதுவும் எப்போ?
இல்லாமை இல்லாமல் விலகுவதும் எப்போ?
இனிதான சமதர்மம் மலருவதும் எப்போ?

****
கருமேகக் கூட்டங்கள் கலையத்தான் போகிறது!
கதிரவனின் செங்கிரணம் பரவத்தான் போகிறது!
உருமாறி உலகங்கள் தத்தளித்துக் கொதிக்கிறது
உழைப்பாளி வர்க்கத்தின் முத்திரையைப் பதிக்கிறது!
உண்மை வெளியாகித் தீரத்தான் போகிறது!
உள்ளம் தெளிவாகி மாறத்தான் போகிறது!
பொறுமை புலியாகிச் சீறத்தான் போகிறது!
பொய்யும் புனைசுருட்டும் நாறத்தான் போகிறது!

நன்றி: "தாமரை" பாரதி நூற்றாண்டு மலர்.

1 comment:

  1. "உலகத்தில் திருடர்கள் சரிபாதி யப்பா!
    ஊமைகள் குருடர்கள் மறுபாதி யப்பா!
    கலகத்தில் பிறக்கிறது தான் நீதி யப்பா!
    கலகங்கள் நீதிக்குப் பிறக்கிறது எப்போ?
    பாரதியின் சிந்தனைகள் பலிக்கிறது எப்போ?"

    எப்போ? எப்போ? எப்போ? என்பீரே!
    பெண்கல்வி கற்பதனால் அப்போ - சமூகம்
    பேரறிவு படைத்துவிடும் அப்போவீ டோடு
    ஊரும், நாடும் உயர்ந்தோங்கி நிற்கும் - அப்போ
    இந்தியா தான் பெற்ற பேரொளியை
    இந்நாநிலத் திற்கே யளிக்கும்அப்போ.

    வித்வான் மா.சுப்பையா அவர்களின் கவிதை அருமை...
    அவரின் நம்பிக்கை அதனிலும் அருமை.

    நன்றிகள் ஐயா!

    வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

    ReplyDelete

You can send your comments