Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Thursday, September 1, 2011


எப்போதும் இங்கிலீஷ் பேச்சா?
"இங்கிலீஷ் படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூட வாத்தியார்களும் தமது நீதி ஸ்தலங்களையும், பள்ளிக்கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும் .......எங்கும், எப்போதும் இந்தப் பண்டிதர்கள் ங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால் உடனே தேசம் மாறுதலடையும். கூடிய வரை இவர்கள் தமிழில் ழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.                          
தமிழின் நிலை' எனும் கட்டுரையில் பாரதி.

 நம் குறிப்பு:-- 

அந்த நாளில், அதாவது நூறு ஆண்டுகளுக்கு முன்பு வக்கீல்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களும்தான் தங்கள் பணியிடத்திலிருந்து வெளிவந்த பின்னும் ஒருவரோடொருவர் பேசுவதற்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைக்கண்டே பொறாத பாரதி, இவர்கள் தாய் மொழியில் பேச என்ன தடை? இப்படி ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்தினாலே நாடு முன்னேறும் என்கிறான். இன்றைய தமிழனின் நிலைமையை பாரதி பார்த்திருந்தால் என்ன சொல்வான்? இன்றைய தொலைக்காட்சியில் பேசுவோர், நிகழ்ச்சிகளை நடத்துவோர், நேர்முகத்தில் தங்கள் கருத்துக்களைச் சொல்வோர், குறிப்பாகப் பள்ளிக்கூட மாணவ, மாணவியர், கல்லூரி மாணவ மாணவியர், திரைப்பட, சின்னத்திரை நடிக நடிகைகள், அவ்வளவு ஏன், படிக்காத பாமர மக்கள்கூட தங்கள் பேச்சில் கால் பாகத்துக்கும் குறைவாகத் தமிழ்ச் சொற்களையும், மீதமுள்ளவற்றை ஆங்கிலத்திலும் அளக்கும் அழகைக் காணும் பேறு பாரதிக்குக் கிடைத்தால், நாம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அறிவுரைகளைத் தமிழன் காற்றில் விட்டுவிட்டதோடு, இன்னம் அதிகமாகத் தமிழைக் கொலை செய்கிறானே! தமிழ் இனம் உருப்படவா போகிறது என்று கவலை கொள்வானா? அல்லது அவனுக்கே உரிய நம்பிக்கையில் இப்போதும் ஒன்றும் குடி முழுகிவிடவில்லை, இந்த நிலையிலாவது மேற்சொன்ன மக்கள் தங்களது கலப்பட மொழிப் பேச்சை விட்டுவிட்டுத் தமிழில் பேச முன்வரமாட்டார்களா என்று ஏங்குவான்! அவனும், அவனைப் போன்ற மொழிப் பற்றாளர்களும் சொன்ன, சொல்லிய அறிவுறைகள் நம் செவிகளில் ஏறுமா? தமிழ் மொழி கலப்படமின்றி பேசப்படுமா? தமிழன் தலை நிமிர்ந்து பெருமை கொள்ளும் காலம் வருமா? பாரதி! நீ மறுபடி இந்த மண்ணில் வந்து பிறப்பெடு! உன் அக்னிச் சொற்களை எங்களைப் போன்ற அரைவேக்காடுகளுக்கு அள்ளி இடு! அப்போதாவது நாங்கள் திருந்த மாட்டோமா பார்க்கிறோம்.
!மேலே கண்ட துணுக்குச் செய்தியைப் பார்த்துவிட்டு சிலர் 'தமிழின் நிலை' என்று குறிப்பிடப்படும் மகாகவியின் அந்தக் கட்டுரையின் முழுப்பகுதியையும் வெளியிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆகையால் அந்தப் பகுதியைக் கீழே கொடுத்திருக்கிறேன்.


தமிழின் நிலை

கல்கத்தாவில் "ஸாஹித்ய பரிஷத்" (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச்சங்கத்தார் செய்யும் காரியங்களைப் பற்றி 'ஹிந்து' பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார். மேற்படி பரிஷத்தின் நிலைமையையும், காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்நாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப் படுகிறார். தெலுங்கர், மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப் பெருங்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அவற்றால் விளையும் பயன் நமது சங்கத்தாரின் காரியங்களால் தமிழ் நாட்டிற்கு விளையவில்லை. வங்காளத்திலுள்ள 'ஸாஹித்ய பரிஷத்'தின் நோக்கமென்னவென்றால், 'எல்லா விதமான உயர்தரப் படிப்புகளும் வங்காளப் பிள்ளைகளுக்கு வங்காளி பாஷையில் கற்றுக் கொடுக்கும் காலத்தை விரைவில் கொண்டு வந்து விடவேண்டும்' என்பது. 'விரைவாகவே இந்த நோக்கத்தை அவர்கள் நிறைவேற்றி விடுவார்கள்' என்பது பல அடையாளங்களினால் நிச்சயமாகத் தோன்றுகிறது என்று அந்த லிகிதக்காரர் சொல்லுகிறார்.

வங்காளிகளின் விஷயம் இப்படியிருக்க, மைலாப்பூரில் சிறிது காலத்திற்கு முன்னே நடந்த ஸ்ரீ வைஷ்ணவ சபைக் கூட்டத்தில் பெரும்பான்மையோர் இங்கிலீஷ் தெரியாத வைதீக பிராமணராய் இருந்தும் அதிலே சில இங்கிலீஷ் உபந்நியாஸங்கள் நடந்ததை எடுத்துக் காட்டி மேற்படி லிகிதக்காரர் பரிதாபப் படுகிறார். 'நமது ஜனத் தலைவர்கள் இங்கிலீஷில் யோசிப்பதையும், பேசுவதையும் நிறுத்தினாலொழிய நமது பாஷை மேன்மைப்பட இடமில்லை' என்று அவர் வறுபுறுத்திச் சொல்லுகிறார்.

மேற்படி லிகிதக்காரர், தமது கருத்துக்களை இங்கிலீஷ் பாஷையில் எழுதி வெளியிட்டிருப்பது போலவே தமிழில் எழுதித் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். சபைகள், சங்கங்கள், பொதுக் கூட்டங்கள், வருஷோத்ஸவங்கள், பழஞ்சுவடிகள் சேர்த்து வைத்தல், அவற்றை அச்சிடல் இவையெல்லாம் பாஷை வளர்ச்சிக்கு நல்ல கருவிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ் மக்கள் தமது மொழியை மேன்மைப்படுத்த விரும்பினால் அதற்கு முதலாவது செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது கால விசேஷத்தால் நமது தேசத்திலே விசாலமான லெளகீக ஞானமும் அதனைப் பிறருக்கு உபயோகப்படும்படி செய்வதற்கு வேண்டிய அவகாசம் பதவி முதலிய ஸெளகரியங்களும் படைத்திருப்பவராகிய இங்கிலீஷ் படித்த வக்கீல்களும், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்து வாத்தியார்களும், நமது நீதி ஸ்தலங்களையும், பள்ளிக்கூடங்களையும் விட்டு வெளியேறியவுடனே இங்கிலீஷ் பேச்சை விட்டுத் தாம் தமிழரென்பதை அறிந்து நடக்க வேண்டும். பந்தாடும்போதும், சீட்டாடும்போதும் ஆசாரத் திருத்த ஸபைகளிலும், வர்ணாஸ்ரீம ஸபைகளிலும், எங்கும், எப்போதும் இந்தப் 'பண்டிதர்கள்' இங்கிலீஷ் பேசும் வழக்கத்தை நிறுத்தினால், உடனே தேசம் மாறுதலடையும். கூடியவரை இவர்கள் தமிழ் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் அத்தனை பேரும் தமிழ் பத்திரிகைகளில் லிகிதங்களாகவும், இவர்கள் எழுதுகிற கதை, காவியம் விளையாட்டு வார்த்தை, வினை வார்த்தை, சாஸ்திர விசாரணை, ராஜ்ய நீதி எல்லாவற்றையும் தமிழில் எழுத வேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் நடத்துவோர் இப்போது படும் கஷ்டம் சொல்லுந்தரம் அல்ல. வெளியூர் வர்த்தமானங்களைத் தவிர மற்றபடி எல்லா விஷயங்களும் பத்திராதிபர்கள் தாமே எழுதித் தீரவேண்டியிருக்கிறது. வெளியூர்களிலுள்ள 'ஜனத் தலைவரும்' ஆங்கில பண்டித 'சிகாமணிகளும்' தமிழ்ப் பத்திரிகைகளைச் சரியானபடி கவனிப்பதில்லை. அந்தந்த ஊரில் நடக்கும் பொதுக் காரியங்களையும் அவரவர் மனதில் படும் புது யோசனைகளையும் தெளிந்த தமிழிலே எழுதி தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அனுப்புதல் மிகவும் ஸுலபமான காரியம். ஜனத் தலைவர்களால் இக்காரியம் செய்ய முடியாத பக்ஷத்தில் பிறருக்குச் சம்பளம் கொடுத்தாவது செய்யவிக்க வேண்டும். 

3 comments:

 1. எங்கே எல்லா அழகும், அறிவும், திறமையும், உலகிற்கு முன்னோடியாக விளங்க கூடிய சக்திக் கொண்ட தமிழன்னை ஊமையாகி விடுவாளோ!? என்ற ஆதங்கம் மகா கவியிடம் வந்திருக்கிறது.. அதன் வெளிப்பாடே அந்தக் கட்டுரையின் சாரம்..

  "புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
  மெத்த வளருது மேற்கே - அந்த
  மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
  சொல்லவும் கூடுதில்லை - அவை
  சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை
  மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
  என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
  இந்த வசையெனக் கெய்திடலாமோ?
  சென்றுடுவீர் எட்டுத் திக்கும்- கலைச்
  செல்வங்கள் யாவும்
  கொணர்திங்கு சேர்ப்பீர்"
  என்று ஆணை இட்டான் மகாகவி பாரதி...

  எந்த மொழியில் வந்த பொருளதனைத்தையும் அதன் ஜீவன் சாகாமல் தமிழிலே நமக்கு அறியதென்பதை ஆக்கிக் கொள்ளும் சக்தி நம் மொழிக்கு உண்டு என்பதை அறிந்தவன் பாரதி அதனாலே அப்படிச் சொன்னான். வேதம் நமது நாட்டில் பண்டைய மொழியில் வடக்கே பிறந்தாலும் அதன் சாரத்தைக் கொண்டே எத்தனை ஞானிகள் எத்தனை ஆக்கங்கள் தமிழிலே அளித்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

  அணுவை துளைத்து எழுகடலைப் புகட்டி
  குறுகத் தரித்தக் குறள்.

  "எல்லை யொன்றின்மை எனும்
  பொருள் அதனைக் கம்பன்
  காட்டிட முயலும்" முயற்சியைக் கண்ட கம்பன் தமிழ்.

  இப்படி பல சான்றுகளைக் கூறினாலும்... இன்றும் பலரும் விதண்டாவாதம் செய்வது! இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கு தமிழ் உதவுமா? என்னும் அர்த்தமற்றக் கேள்வியே... வல்லரசுகளான பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யா, ஜப்பான், சீனா இவைகள் எந்த மொழியில் தனது அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் பெருக்கின என்பதை அறியாரோ?... ஆங்கிலம் ஒன்றும் அறிவியல் மொழியல்ல.. அதற்கும் மேலும் ஜெர்மானிய மொழியும் படிக்கவே வேண்டும்... அது தான் ஐரோப்பாவின் மூளை என்கிறார்கள்.

  கோடான கோடி மக்களின் மூளைகள் அந்நிய மொழியைப் படிப்பதற்கே செலவழிக்கப் பட்டால்... அவைகள் எப்படி அந்த பொன்னான நேரங்களை வீணாக செலவழித்தால்.. எப்படி அறிவியலை வளர்க்க முடியும் புதியதைக் கண்டுபிடிக்க முடியும்... நாம் மற்றவன் கண்டு பிடித்ததையே தூக்கித் திரியவேண்டியது தான்... நாம் விஞ்ஞானிகளை உருவாக்கினால் (தமிழ் உருவாக்கும் அப்படி செய்தால் அந்நியன் அருந்த தமிழைக் கற்கும் நிலை வரும்) அப்படி வரும் போது... விஞ்ஞானத்தோடு மெஞ்ஞானமும் கற்றுக் கொள்வான்.. உலகம் உய்யும். கலி வீழ்ந்து கிருத யுகம் மலரும்.

  ReplyDelete
 2. ஆங்கில மோகம் என்றும் இந்திய அதிலும் தமிழனின் தலையில் பித்தேறி போயிருக்கிறது.... அவன் ஆங்கிலத்தில் பேசினால் உயர்வென்று தான் உயர்ந்தவன் என்று இறுமாப்புக் கொள்கிறான்... அப்படிப் பேசுபவனை மற்றத் தமிழனும் வாயில் கொசு போவது தெரியாமல் பார்க்கிறான்.. பாவம் இங்கிலாந்தில் உள்ள அடிமுட்டாள் கூட இவனை விட அருமையான ஆங்கிலம் பேசுவான் என்பதை அறியாத கூமுட்டைகள் தாம் இவை.

  இன்னும் சொல்லப் போனால்... அன்று நுனி நாக்கு ஆங்கிலம் பேசிய ராஜாஜி, எல்.எஸ்.முதலியார், சர்.சி.பி.ஆர்.ஐயர் போன்றோருடன்... இந்தியின் மீதுள்ளக் வெறுப்பால் / இல்லை பயத்தால் அண்ணாவும், நெடுஞ்செளியனும், அன்பழகனும் கூட ஆங்கில வழி தான் அறிவியல் கல்வி என்றும் வாதிட்டு இருப்பதாக அறிகிறோம்... இதில் பல பேர் இந்த தனது தூயத் தமிழ் பெயருக்கு பதில் ஆங்கிலப் பெயர்களையே புனைத்து கொண்டிருந்தனர் என்பதை மா.போ.சி. அவர்கள் கூறு அதன் வழியும் அறிகிறோம்.

  இன்றும் கூட நாம் பெரும் பாலும் காண்கிறோம்...இன்னும் சொல்லப் போனால் அவசியப் படாத இடத்தில் கூட ஆங்கிலம் பேசி அதுவும் அவனைவிட குறைவான ஆங்கில அறிவுள்ளவனிடம் பேசி தற்பெருமை கொள்வது தமிழனின் கொள்கையாகவே இருக்கிறது... இது பாரதி காலந்தொட்டே இருந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

  ஜே.சி.போஸ் கூட தனது கண்டுபிடிப்பை தாய்மொழியான வாங்க மொழியில் தான் எழுதினாராம்.... நம் விஞ்ஞானிகள் அன்றும் இன்றும் செய்வதில்லை.... காந்தி கூட செல்லும் இடமெல்லாம் பெரும்பாலானோர் மொழியிலே பேசினாராம்.. கற்றுக் கொள்ளவும் செய்தாராம்.. அவரி நோக்கம் தனது கருத்து பலரையும் சென்றடைய வேண்டும் என்று உயர்வானதாக இருந்தது... ஆனால் நமது அரைவேக்காடுகளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை... எத்தனை அருமையாக ஆங்கிலத்தை எழுதினாலும், பேசினாலும், அவனைப் போலவே நடை உடை பாவனைகள் கொண்டாலும்... அவன் இவனை இந்தியன் தமிழன் என்றே சொல்லுவான் என்பதை மறந்த பதறுகள் இவர்கள்..

  ReplyDelete
 3. செய்யும் தொழிலுக்கு ஆங்கிலம் துணையாக நிற்கிறது என்றால் அதை அங்கேயே விட்டு விட்டு வருவது தானே சரி அதை விட்டு எங்கும் பேசித் திரிவது என்பது... ஒரு வேற்று மொழி பேசும் தனது அலுவலகச் செயளாலப் பெண்ணை வீடு வரை அழைத்து வந்து... அழகும்,அறிவும், திறமையும் உள்ள தனது மனைவியை மறந்து அவளோடுக் குடுத்தனம் நடத்துவதை போல என்றே சொல்ல வேண்டும்... இதைவிட உரைக்கும் படி சொல்லவே முடியாது என்றே கருதுகிறேன்.

  ஆங்கிலம் கற்றுக் கொள்வதில், பேசுவதில் தவறில்லை அது அவசியப் பட்ட இடத்தில் வேற்று மொழியினரோடோ..அல்லது வேற்று மொழி பேசுபவர் நம்முடன் இருக்கும் போது நம்மவரோடோ பேச பயன் படுத்துவதே நாகரிகம்...

  அறிவுள்ளவர்கள் யாவரும் இதை அறியணும்... வெத்துப் பகட்டிற்குள் தன்னை சிக்கச் செய்து சிறுமை படுவதை ஒழிக்கணும்... தமிழை வளர்க்கணும்.. அறிவியலையும் அருந்தமிழால் கற்கவேண்டும்... பிறமொழி கலைச் கலைச் சொற்களை அப்படியே ஏற்கனும் அதுவே சிறப்பு... தமிழ் புலமை பெறுவோர் யாவரும் கணிப்பொறி கற்கணும்... அப்படி இவை யாவும் செய்யும் போது... மெஞ்ஞானம் கொண்ட தமிழ் விஞ்ஞானமும் பெரும் அப்போது அது உலகப் பொது மொழியுமாகும்.... கொஞ்சம் விஞ்ஞானம் மட்டுமே கொண்டதால் ஆங்கிலம் அந்த அளவு நிற்கையில் தமிழுக்கு என்னக் குறைச்சல்...

  தமிழர்களாகிய நாம் சிந்திப்போம் செயல் படுவோம்... மொழி வெறி வேண்டாம். மாறாக பற்றுக் கொள்வோம்.... நமது கலை கலாச் சாரத்தைக் காப்போம் அதோடு அறிவியலையும் வளர்ப்போம்.... தமிழனால் விஞ்ஞானத்தை இந்த உலகிற்குத் தர முடியும் என்று நிரூபிப்போம்... முக்கியமாக வெட்டி பகட்டிற்காக ஆங்கிலம் பேசும் நமது மாக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும்... தானாய் எல்லாம் மாறும்.

  நான் வாழும் இந்த சிங்கையிலே எனது அன்னைத் தமிழ், மற்ற மலாய்,சீன,ஆங்கில மொழிகளோடு; இவளும் ஆட்சி மொழி என்பதோடு அந்த அருந் தமிழை பாராளுமற்றத்திலே பேசலாம்.. பேசப் படுகிறது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்...
  நன்றி வணக்கம்,

  நன்றிகள் ஐயா!

  வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.

  ReplyDelete

You can send your comments