இலக்கியச் சூரியன் "பாரதி"
நன்றி:
("தாமரை" பாரதி நூற்றாண்டுச் சிறப்பிதழில் கவிஞர் சிற்பி)
அவன்
எழுத்துக்களுக்கு
நெற்றிக் கண் கொடுத்த
எட்டையபுரத்து
இலக்கியச் சூரியன்
அழகிய சொல் தேடி
அலைந்த அகராதிப் புரட்டர்கள்
வேல் விழிக்கும்
தேன் மொழிக்கும்
விலாசம் விற்ற பண்டிதர்கள்
நாக பந்த யமக
நலிவுச் சிறைக்குள்ளே
சாகாத் தமிழ் மொழியின்
சரித்திரத்தைப் பூட்டி விட்டு
சாவியினை இடுப்பில்
அந்தரங்கமாய்ச் செருகும்
ஆஸ்தான வித்வான்கள்
முகம் சந்திர பிம்பம்
மார்பு கனக கும்பம்
கால்கள் வாழைக்கம்பம்
என்று
கவிதைப் பெண்ணைத்
துகிலுரிந்த துச்சாதனர்கள்--
இந்தக்
குருடர்களின் சொர்க்கத்தில்
அவன்
விழி திறந்த அசுர விதை
நுனிப்புல் மேயும்
வெட்டுக் கிளிகளுக்கு மத்தியில்
வாழ்க்கை வேதனைகளைக்
கிழி கிழியென்று கிழித்த
வேங்கைப் புலி
தொட்டால் சிணுங்கிகளுக்கு
நடுவே
தொட முடியாமல் நிமிர்ந்த
தொடுவானம்
ஜோதிப் பிரகாச வைகறைகளின்
பிரசவக் கூடமான
தொடு வானம்.
தண்ணீரில் கிடந்தாலும்
சாயம் போகாத தாமரைபோல்
எண்ணங்களைக் கலையாத
வண்ணங்களில் தோய்த்து
வடித்த கலை மேதை
அவனது
சிந்தனைச் செறிவில்
தேர்ந்த பேனாமுனை
திசை தடுமாறிய
தேசக் கப்பலுக்கு
நன்னம்பிக்கை முனை
யானது சரித்திரம்..........
புரட்சி இளஞ் சிவப்புப்
பூசிய படைக் கலங்களோடு
காலம் கட்டியம் கூற
அவன்
கவிதைப் பட்டாளம்
காலடி வைத்ததும்
செய்யுள் கூடுகள்
செத்து விழுந்தன
காவிரி வெற்றிலைத்
தாம்பாளம் ஏந்தி
கங்கைக் கரைக்
கோதுமை அறுவடை
அரிவாள் சுமந்து.....
சிந்து நதி அலைகளில்
படகுப் பாய் விரித்து
கேரளத்துப் பெண்ணின்
கெண்டை விழி மையழகு பார்த்து...
தெலுங்குத் தேனில்
உதடு நனைத்து
கன்னடத் தங்கப் பதக்கங்களை
ராஜ புதானத்து
மறவர் மார்பில் அணிவித்து
மராட்டியக் கவிதைக்கு
மேற்கு மலை யானைத்
தந்தங்கள் பரிசாகத்
தந்து சிலிர்த்தவை
அவன்
ஒருமைப்பாட்டு ஓவிய
உரிமைப் பாட்டு வரிகள்!
வெண்பா விருத்தப்பா
அகவற் பா என
விளையாட்டாக அவன்
பாடியிருந்தும்
பிழைப் பா என்றனர்
பெரும் பண்டிதர்கள்
ஆமாம்-----
அவன் கவிதையில்
பிழைகள் இருந்தன
அவை
இலக்கணப் பிழைகளல்ல
இலக்கணம் பிழைத்த
இந்தச் சமுதாயப் பிழைகள்
எழு என்று சொல்லவே
அவன் எழுத்துக்கள்
சீரழிவு தடுக்கவே
அவன் பாடலின் சீர்கள்
தளைகள் அறுக்கவே
அவன் கவிதையில் தளைகள்
துயரத் தொகுப்பை
அடித்து நொறுக்கவே
அவன் பாடலின் அடிகள்!
கவிதை அவனுக்குப்
புதிய சமுதாயம்
சமைக்கும் பட்டறை
அழுது கொண்டிருக்கும்
வங்கக் கடலோரம்
அறுபதாண்டுகள் முன்
பசி தீராத ஒரு மயானம்
ஒரு பிடி சாம்பலால்
முடிவுமை எழுதிற்று
இக் கருவிகளின் உடலுக்கு....
சாம்பலை உதறிய
சத்தியப் பறவை
பூமிக்குத் தன் சிறகு விசாலப்
போர்வை விரித்தபடி
அலகினில் புதுயுகப்
பூக்களைக் கொத்திப்
பறக்கிறது இன்றைக்கு
'நோவு வேண்டேன்
நூறாண்டு வேண்டினேன்'
என்று
பாடியவன் இல்லாமல்
நூற்றாண்டு வருகிறது
எனினும்
அவன் இருக்கிறான்
சத்திய ஆவேசம்
கொழுந்துவிடும்
கவிதைகளில்...
புதுயுகம் சமைக்கப்
புறப்படும் இளைஞனின்
சக்தி பிறக்கும்
மூச்சுக் காற்றில்...
இளைய பாரதம்
எடுத்து வைக்கின்ற
கம்பீரமான
காலடிச் சுவட்டில்....
அவன்
இருக்கிறான்
என்றும் இருப்பவன்
இன்றும் இருக்கிறான்
நேற்றின் நடவாய்
இன்றின் பயிராய்
நாளையின் மாணிக்க
விளைச்சல் கதிராய்....!
இலக்கியச் சூரியன் பாரதி - ஆம்
ReplyDeleteஇல(ங்)கு தமிழ் கவிதைகளில்
இமயம் போல் உயர்ந்தவன்
உலகம் உய்ய உபாயம் உதிர்த்தவன்
ஊமை சனங்களை உரிமைகீதம்
பாடச் செய்தவன்.....
கருணையின் ஊற்று -ஆம்
கவிகளின் அமூதூற்றவன்
'வேதம் புதுமை செய்'ய வேண்டியவன் - ஆம்
விடுதலை என்னும் வேள்விக்கு
வெந்தீயை மூட்டியவன்....
சாதீயம் சாடியவன் சலித்துப் போன
சமயப் பொய்களை சவுக்கால் அடிக்க
சலிக்காமல் ஓடியவன்...
உண்மையையே உயிராகக் கொண்டவன்
உண்மையல்லா அத்தனையும்
சுட்டெரித்த சூரியனவன்....
பழைமைப் பொய்களைப் பழித்தவன்
பழைய மரப் பொந்துகளிலே
அக்னிக் குஞ்சுகளை வைத்தே
அவைகள் வெந்துதனியக் கண்டு
தனது சிந்தை யெல்லாம்
மகிழவே சிந்து பாடியவன்....
இனத்தையும் மொழியையும் தான்
பிறந்த நாட்டையும் அல்லாது இந்த
உலகத்தையே உள்ளங்கையிலே
ஏந்தியவன் பாரதி....
விடுதலை வேண்டியவன் -ஆம்
விடுதலை வேண்டியவன்...
நாட்டிற்கு விடுதலை - நாயாய்
நடத்தப் படும் நங்கையருக்கும் விடுதலை
பாட்டுக்கு விடுதலை - மனப்
பேயென்னும் பயத்திற்கு விடுதலை
'சிட்டுக் குருவி போலவே
விட்டு விடுதலை யாகி நிற்பீர்' என்றே
சீர்மேவிய கவி பாடி விடு தளை என்றே
வேண்டியே நின்றும்.....
இன்னும் சொல்வான் இவன்,
இவையாவும் இப்போதே நடந்து
இந்தியர் யாவரும் பெறப்போகும்
அறிவென்னும் அமரத்துவேமே!...
உண்மையான தேவையான விடுதலை என்றே...
கலியை கொன்றே களியாட
அழிவில்லா பெருநிலை - அந்த
அற்புத பெருநிலையின் வழியை
இந்தியா உலகிற்கே தந்து
இந்த மண்ணிலே கிருத யுகம்
படைக்கும்...
ஆம்... ஆம், ஆம்... ஆம்,ஆம்,ஆம்
இந்த ஞானக் கிறுக்கன் - எப்போதும்
மோனத்திலே நின்ற முக்தி மூர்க்கன்
இவன் சக்தியின் காதலன் -ஆம்
அவளைக் காதலித்தே
அவளின் கரம்பிடித்தே பேரொளியில்
மூழ்கிய இவன் அமர கவி...
பாரெல்லாம் நித்திய சுதந்திரம் பெற
தன் கவிதை என்னும் கழனியிலே
வேதமென்னு விதை தெளித்து
உபநிடத அறுவடை செய்தே
பாமரனும் பரமனை சேர
பாங்குடனே வழிகூரிய
உலக மகாகவி இவன் - இந்த
மானிடம் உய்ய மருந்து தந்த
மகா புருஷன் எழுப்பிய சங்க நாதம்!
ஊழிவரை ஒலித்துக் கொண்டிருக்கும்...
வேத நெறிகளை தன்னுள்ளே
வேள்வியாய் வளர்த்தவன்
சாதல் இல்லா பெரு வாழ்வை
சாமானியனும் அறியும்
வகை செய்தவன் - அதற்கு
இயற்கை என்னும் சக்தியை
காதல் கொள் என்றே வேண்டியவன்....
இலக்கியச் சூரியன் மட்டும் அல்ல
இந்த பாரதி....
கலியை சுட்டெரிக்க உதித்த
இன்னொருச் சூரியன் - ஆம்
அருவமாய் கவிதையின் உருவமாய்
அமரத்துவம் பெற்று பூமியை வலம் வரும்
ஈஸ்வரனே இந்த பாரதி.
நன்றிகள் ஐயா... சிற்பியின் கவிதை வரிகள் என்னுள் ஒளிரும் பாரதி என்னும் விளக்கில், எண்ணெய் வார்த்து என்னையும் தூண்டியது....
வாழ்க வளர்க பாரதி பயிலகம்.