Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

மகாகவி பாரதியாரின் நண்பர்கள்



திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் பாரதி பற்றிய அஞ்சல் வழிப்பயிற்சிப் பாடம் மகாகவி பாரதியாரின் நண்பர்கள்

(மகாகவி பாரதியார் பலரைப் போற்றி பாராட்டி எழுதியிருக்கிறார். அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் பலர் உண்டு. முதல் வகையினரைப் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரைகளிலிருந்தே சில பகுதிகளையும், அவருடைய நண்பர்கள் வாழ்க்கை குறித்த சிறு குறிப்புகளையும் இந்தப் பாடத்தில் கொடுத்திருக்கிறோம். பாரதியாரால் பாராட்டி எழுதப்பட்ட பலரில் ஒரு சிலரைப் பற்றிய குறிப்புகளை இந்தப் பாடத்தில் காணலாம். நமது முன்னோர்களில் சிறந்தவர்களையும், சாதனையாளர்களையும் வியந்து பாராட்டும் குணம் பாரதியாரிடம் இருந்தது. அத்தகையோரின் சாதனைகளைப் பின்பற்றி தானும் சாதனை படைக்க முயன்றதும் உண்டு. அவர் சொல்கிறார், "அறிவுடையோரையும், லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும் வீரமும் மங்கிப் போகும்". அத்தகையோரின் வரலாறு வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும், பாடமாகவும் விளங்க வேண்டுமென்று பாரதி விரும்பினார். அந்த காரணம் தொட்டே இந்த பாடத்தில் அவர் போற்றிய சிலரையும், அவர் நண்பர்கள் சிலரையும் பற்றி கொடுத்திருக்கிறோம். படியுங்கள். படித்த பின் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.)

1. 'தி ஹிந்து', 'சுதேசமித்திரன்' அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர்:
மகாகவி பாரதி என்றொரு மாமனிதனைப் பற்றி இன்று உலகத் தமிழரெல்லோரும் போற்றி வழிபடுகின்றோம் என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர் - அவரை உருவாக் கியவர், அவரை அரசியல், இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்தான். இவர் தஞ்சையை அடுத்த திருவையாற்றில் 152 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர். மகாகவி பாரதியார் மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பதினேழரை ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த காலத்தில் அவரது ஆற்றலை உணர்ந்து அழைத்துக் கொண்டு போய் 'சுதேசமித்திரனில்' உதவி ஆசிரியராகச் சேர்த்து, பத்திரிகைத் துறைக்கும், அரசியலுக்கும், சமூக சீர்திருத்தங்களுக்கும் அறிமுகம் செய்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் விடுதலை, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தங்கள் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருந்து பாடுபட்டவர் இவர் மட்டுமே என்பது பலரது கருத்து. பேச்சிலும், எழுத்திலும், மற்றவர்க்கு உபதேசம் செய்வதில் மட்டுமல்ல, செயலில் இவர் புரட்சிகரமான சீர்திருத்தங்களைச் செய்து காட்டியவர். இவருக்கு ஏற்பட்ட தோல் சம்பந்தப்பட்ட வியாதி காரணமாக இவரது இறுதி நாட்கள் துன்பம் நிறைந்த நாட்களாகவே இருந்தன. மாகாத்மா காந்தியடிகள் இந்த மாமனிதரைச் சந்தித்து இவர் வியாதியால் அவதிப்படுவதைக் கண்டு மனம் வருந்தி அவர் உடலில் வழியும் துர்நீரைத் தன் மேலாடையால் துடைத்து ஆறுதல் கூறியிருக்கிறார். அவர் பிறந்த திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் இவர் பிறந்த வீட்டினருகில், இவரது 150ஆவது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நமது பாரதி இயக்கம் சார்பில் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்திய செய்தியையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அவர் காலஞ்சென்ற போது பாரதி எழுதிய ஒரு சிறு கட்டுரையை இப்போது படியுங்கள்.

"காலஞ்சென்ற 'சுதேசமித்திரன்' சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமிழ்நாட்டின் உயர்வுக்கு முக்கிய சாதனங்களாக அவர் என்னென்ன விஷயங்களைக் கருதினாரென்று எனக்கு நன்றாகத் தெரியும். அவருடைய உள்ளத்திலிருந்த மூல தர்மங்கள் எனக்கு ஞாபகமுள்ள வரை இங்கெழுதுகிறேன்.

1. தமிழ் நாட்டார் விசேஷ அவசரங்கள் நேரிட்டாலொழிய மற்றப்படி எப்போதும் தமிழே பேசவும், எழுதவும் வேண்டும். கற்கும் கலைகளெல்லாம் தமிழ் வழியாலே கற்க வேண்டும்.

2. ஜாதி பேதங்கள் பாராட்டி நமக்குள்ளே அர்த்தமில்லாத உயர்வு - தாழ்வுகள் கற்பிக்கலாகாது.

3. ஸ்திரீகளைக் கஷ்டப்படுத்தலாகாது. அவர்களுக்கு மேலான அறிவு தந்து மேன்மைப்படுத்த வேண்டும்.

4. வைஷ்ணவம், சைவம் முதலிய மத பேதங்களாலும், வடகலை - தென்கலை போன்ற உட்பிரிவுகளாலும் நமது ஜனங்களுக்குள் விரோதம் பாராட்டுதல் நியாயமில்லை. நாமெல்லோரும் ஹிந்துஸ்தானத்தின் குமாரர். அவரவர் கொள்கை அவரவருக்கு. மதப்பிரிவுகள் காரணமாகத் தீராத வியாஜ்யங்கள் செய்வதும், கலகங்கள் நடத்துவதும் அறிவில்லாதோர் செய்கையாகும்.

5. உடை, உணவு முதலிய செளகரியங்களுக் கெல்லாம் நமது நாட்டுப் பொருள் கிடைக்கும்போது அன்னியர் பொருளை வாங்கக்கூடாது.

6. எப்போதும் ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபட வேண்டும்.

ஞாபகச் சின்னம்:- ஒரு லக்ஷம் பேரிடம் ஒவ்வொரு ரூபாயாக லக்ஷ ரூபாய் சேர்த்து ஒரு பிரசங்க மண்டபமும், வாசிப்புக் கூடமும் கட்டவேண்டுமென்பது 'ஹிந்து'வில் எழுதிய ஸ்ரீ வியாசராவினுடைய கருத்து. என் மனதிலும் இது யுக்தமாகவே தோன்றுகிறது. இந்தக் காரியத்துக்குத் தலைமை வகித்து நடத்தக் கூடியவர் 'சுதேசமித்திரன்' பத்திராதிபர் ஒருவரே.

தவிரவும் காலஞ்சென்ற ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரின் ஆத்மாவைத் திருப்தி செய்ய விரும்புவோர் கைக்கொள்ள வேண்டிய விரதம் ஒன்றுண்டு. அதாவது: சுதேசிய விரதம், சுதேசியக் கைத்தொழில், சுதேசிய வியாபாரம், சுதேசியக் கல்வி, சுதேசிய வாழ்க்கை - இவற்றுக்கு யார் யார் ஒரு காசு கொடுக்கிறார்களோ, அவர்களெல்லாம் சுப்பிரமணிய ஐயருடைய ஆத்மாவுக்குச் சந்தோஷ முண்டாக்குவார்கள்.

2. 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரம் பிள்ளை:
'கப்பலோட்டிய தமிழன்' என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட தூத்துக்குடி வக்கீல், ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளையின் வரலாறு தமிழக சுதந்திரப் போராட்டத்தின் அஸ்திவாரக் கல்லாக அமைந்தது. தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலிச் சீமையில் முதன்முதலாக விடுதலை முழக்கத்தை எழுப்பி, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியர்களின் வாழ்வு மேம்பட சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் ஓட்டிக் காட்டிய தீரர் சிதம்பரம் பிள்ளை. திருநெல்வேலி சதி வழக்கு என்ற ஒரு போலி நாடகத்தை அரங்கேற்றி இவருக்கு இரண்டு தீவாந்தர தண்டனையை வாங்கிக் கொடுக்கக் காரணமாக இருந்தவன் தூத்துக்குடி சப் கலெக்டர் ஆஷ். இவன் பின்னர் வாஞ்சிநாதன் என்ற தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். வ.உ.சி.யின் தண்டனையும் மேல் நீதிமன்ற அப்பீலில் குறைக்கப்பட்டது. சிறையில் அந்த மாவீரன் அனுபவித்த கொடுமைகள் ஏராளம்! ஏராளம்! செக்கிழுத்தார், கல்லுடைத்தார். இவரது நெருங்கிய தோழரும், எவருக்கு இவர் அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காக ஒரு ஆயுள் தண்டனை பெற்றாரோ அந்த சுப்பிரமணிய சிவம், சிறையில் தொழு நோய் பாதிக்கப்பட்டு, இறுதி வரை அதன் கொடுமையோடு வாழ்ந்து உயிர் நீத்தார் என்பதும் வரலாற்றுச் செய்திகள். "நான் கண்ட பாரதி" என்று வ.உ.சி. அவர்கள் பாரதியார் பற்றிய ஓர் நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழிக்கு நல்ல பல நூல்களை எழுதி பணியாற்றியிருக்கிறார். அவர் குறித்த செய்திகளை பாரதியார் எழுதியுள்ள கட்டுரை வாயிலாக இப்போது அறிந்து கொள்வோம்.

"கர்ம வீரர்" என்றும் "பிரதம ஆரிய புருஷர்" என்றும், உயர்ந்த பரித்தியாகி என்றும் அரவிந்த கோஷ் முதலிய பெரியோர்களாலே பாராட்டப்பட்ட ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் பெருந்தன்மையையும், தேசப் பற்றையும் உத்தேசித்து நமது தமிழ்நாட்டார் அவர் விஷயத்தில் எம்மட்டுச் சிரத்தை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறார்களோ, அம்மட்டுச் சிரத்தை பாராட்டாம லிருப்பது தவறென்பதாகவே நினைக்கிறோம்.

ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை யார் பொருட்டு இரவு பகலாக உழைத்தாரோ, அவர்கள் கூடப் பயத்தினாலோ அல்லது சோம்பரினாலோ மூச்சுக்காட்டாமல் பின்வாங்கி நிற்கிறார்கள். சுதேசிய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையையே பிதாவென்று கூறுதல் தகும். மேற்படி கம்பெனியார் இப்போது இன்னும் பலமான அபிவிருத்திகள் செய்வதற்குரிய பிரயத்தனங்கள் நடத்தி வருகிறார்களென்று கேட்டுச் சந்தோஷிக்கிறோம். ஆனால் இவர்கள் சிதம்பரம் பிள்ளைக்குத் தக்கவாறு நன்றிக் கடமை செலுத்தாவிட்டால் இவர்களுடைய முயற்சிகளின் மீது தரும தேவதைக்குச் சினம் பிறக்கும். "என்பிலதனை வெயில் போலக் காயுமே, அன்பிலதனை அறம்".

மேற்படி கம்பெனிப் பங்காளிகளில் ஒவ்வொருவரும் தலைக்கு 4 அணா வீதம் போட்டல் எவ்வளவோ பெரிய நிதி சேர்க்கலாம். இவ்விஷயம் அவசியம் நடத்தித் தீர்வதற்குரியது. கம்பெனியின் அனுகூலத்துக்கும், க்ஷேமத்துக்கும் இது இன்றியமையாததாகும். இதில் கம்பெனியின் பெருத்த பங்காளி எவரேனும் இந்த விஷயத்தில் முற்பட்டு நின்று பாடுபடுவார்களென்று நம்புகிறோம்.

ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை தாம் இத்தனை பெரிய கஷ்ட தசையிலிருக்கும் போதுகூட, உலகத்தார் படும் கஷ்டங்களைப் பார்த்து நெஞ்சிரங்குதலாகிய அவருடைய இயற்கை எப்போது மிருந்தது போலவே, சிறிதேனும் அளவு குறையாம லிருக்கிறது. கோயமுத்தூர் சிறைச்சாலையின் நிலைமையைப் போலவே தான், பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள மற்றெல்லாச் சிறைச் சாலைகளிலும் இருக்கக் கூடுமென்று நாம் ஊஹிப்பது தவறாக மாட்டாது. அந்தச் சாக்ஷியத்திலே சொல்லப்பட்டிருக்கும் விவரங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு உண்மையான பாரத வாஸியினுடைய நெஞ்சமும் கொதிப்படையத்தக்கதா யிருக்கின்றது.

இனி, ஜெயில் வார்டர் ஒருவன் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையைச் சிறிது அவமதிப்பாக நடத்த ஆரம்பித்த பொழுது, அவனுக்கு அவர் கொடுத்த எச்சரிக்கையும், கோர்ட்டிலே, ஸர்க்கார் வக்கீல் சொல்லிய சில அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளுக்குப் பிள்ளையவர்கள் கொடுத்த மறுமொழியும், "அரைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது, உருக்கினுஞ் செம்பொன் தன் சுடர் குன்றாது" என்ற பெரியோர் வசனங்களுக்குத் தக்க திருஷ்டாந்தமாகின்றன. ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை கைதியாயிருக்கும்போதுகூட, அவர் கொண்டிருக்கும் மனநிலைமையுடன், நம் போலிகளின் மன நிலையை ஒப்பிட்டு நோக்குமிடத்து நமக்குப் பின்வரும் தாயுமானவர் பாடல் நினைப்பிற்கு வருகின்றது.

"கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர்
கடவுளுனைக் காணவே காயமாதி
புலங்காணார், நானொருவன் ஞானம் பேசிப்
பொய்க்கூடு காத்ததென்ன புதுமை கண்டாய்".

3. சுப்பிரமணிய சிவா:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் வலது கரமாக இருந்து செயல்பட்டவரும், வீரத் துறவிக் கோலத்தில் நாடெங்கும் தனது அனல் பறக்கும் பேச்சால் தேசாவேசத்தை உண்டாக்கியவரும், வ.உ.சியுடன் தானும் சிறைத் தண்டனை பெற்று, சேலம் சிறையில் தொழு நோய்க்கு ஆளானவரும், சேலம் ஜில்லா பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு ஓர் ஆலயம் எழுப்ப அஸ்திவாரம் போட்டு அது நிறைவேறாமலேயே மடிந்துபோன தேசபக்தர் சிவா. இவருக்கு தொழு நோய் என்பதால் இவர் ரயில் வண்டிகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டது. எனவே இவர் மதுரையிலிருந்து தொண்டர்கள் புடைசூழ சேலம் பாப்பாரப்பட்டிக்கு நடந்தே சென்றார்.

மகாகவியின் மரணத்தின்போது சுப்பிரமணிய சிவம் காரைக்குடியில் இருந்தார். பாரதி மறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு 15ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பாரதியின் மறைவிற்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. பாரதி மறைந்த ஏழாம் நாள் 17-11-1921இல் காரைக்குடியில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இரண்டாம் முறை கடுங்காவல் தண்டனை அனுபவித்துவிட்டு விடுதலை பெற்ற சிவம், சேலம் அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்க 22-6-1923 அன்று வங்கத்தின் புகழ் பூத்த தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டினார். இவர் பற்றி பாரதியார் எழுதியுள்ள கட்டுரையை இப்போது பார்ப்போம்.

"திருநெல்வேலியிலே ராஜநிந்தனைக் கேஸில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சிவனுக்கு இப்போது வயது 26க்கு மேல் ஆகவில்லை. இவர் சுமார் 6 வருஷங்களுக்கு முன் அதிபாலியத்திலேயே சிவகாசி சப்டிவிஷன் ஆபீஸிலே 'முச்சி' என்ற தணிந்த(தாழ்ந்த) உத்தியோகம் பார்த்து வந்தாராம். ஆனால் சரீர செளக்கியம் போதாதென்று இவரை அந்த வேலையினின்றும் விலக்கி விட்டார்களாம். இந்த விஷயத்தை திருநெல்வேலிப் போலீஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் சாக்ஷி கூறும் சமயத்தில் மிக இகழ்ச்சியோடு சொல்லுகிறார்கள்.

காலஞ்சென்ற ஜட்ஜ் முத்துசாமி அய்யர் பாலியத்தில் ஓர் கிராமக் கணக்குப் பிள்ளையின்கீழ் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் சம்பளத்தில் அமர்ந்ததின் பொருட்டு இந்தப் போலீஸ்காரர்கள் அவரைப் பற்றித் தாழ்ந்த நோக்கம் கொண்டிருப்பார்களென்று சந்தேகிக்கிறோம்.

இன்னுமொரு போலீஸ்காரர் ஸ்ரீ சிவன் தூத்துக்குடியிலே ஸ்ரீ சிதம்பரம் பிள்ளையோடு ஒரே வீட்டில் வாசம் செய்து கொண்டிருந்தாரென்றும் இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமென்றும், இதன் பொருட்டு ஸ்ரீ சிவன் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவா ரென்றும் சொல்லி யிருக்கிறார்.

ஓர் போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில் இவ்வளவு தூரம் ஆழமான ஞானமிருப்பதுபற்றி சந்தோஷ மடைகிறோம்! அதிவர்ணாசிரமியாக ஸந்யாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாதென்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது போலும். போலீஸ் மனு நீதியில் மேற்படி விஷயம் சொல்லப்படவில்லை யென்று தோன்றுகிறது.

பிராமண ஜன்மமெடுத்துப் போலீஸ் உடை தரித்துக் கொண்டு ஓர் மிலேச்ச (அதாவது அநாரிய தேசத்தினின்று வந்த) அதிகாரியின் கீழ் கைகட்டி நின்று காவல் வேலை செய்வது சாஸ்திரோக்தம் தானா? இதைப் பற்றி இந்த வேங்கடவரதாச்சாரியார் என்ற போலீஸ்காரர் படித்திருக்கும் மனு தர்ம சாஸ்திரத்திலே என்ன சொல்லியிருக்கிறதென்று அறிய விரும்பு கிறோம்.

மேற்படி சம்பந்தத்தையொட்டி, நமது சுதந்திர முயற்சியிலே கணக்கற்ற சந்நியாசிகள் சேர்ந்திருப்பதைக் குறித்து ஓரிரண்டு வார்த்தைகள் சொல்ல விரும்புகிறோம்.

பிரமஞானியாகிய ஸ்ரீ கிருஷ்ண பகவான் மஹாபாரதப் போரிலே சேர்ந்தது போலவும், ஸர்வ பந்தங்களையும் துறந்த ராமதாஸ் முனிவர் மஹாராஜா சிவாஜிக்கு ராஜ தந்திரங்கள் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேக துறவிகள் நமது சுதேசிய முயற்சியிலே சேர்ந்திருக்கிறார்கள்.

காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ஸ மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவ ரென்பதை உலகறியும். இப்போதும் அவருடைய சிஷ்யர்களிலே பலர் சுதேசியத்திலே மிகவும் பாடுபட்டு வருகிறார்கள். "யுகாந்தர்" பத்திரிகை நடத்தி இப்போது சிறையிடப்பட்டிருக்கும் பூபேந்திர நாதர் என்ற பிரம்மச்சாரி சுவாமி விவேகானந்தருடைய சொந்த சகோதரர்.

"ஸந்தியா" பத்திராதிபராயிருந்து, பெங்காளத்து சுதேசியஸ்தர்களுக்குள்ளே தலைமை வகித்து, அதிகாரிகள் கேஸ் கொண்டு வந்த சமயத்தில் அவர்கள் கைவசப்படாமல் பரகதி அடைந்தவரான பிரமபாந்தவரும் ஒரு ஸந்நியாசியே. இப்படி ஆயிரக் கணக்கான மஹான்கள் இன்னும் நமது நாட்டிலே உழைத்து வருகிறார்கள்.

இவர்களெல்லாரும் உலக போகங்களைத் துறந்து இந்திரியங்களுடன் போர்புரிந்து வென்று, பரிபூரண சமாதியை இச்சிக்கும் பருவத்திலே, சுதேசியமாகிய லெளகிக முயற்சியிலே பிரவேசித்து விபத்துகளுக் குள்ளாவதன் முகாந்தர மென்னவென்று பலர் ஆச்சரியமடைகிறார்கள்.

அப்படி வியப்படைபவர்கள் கிருஷ்ண பகவான், வேத வியாஸர், ராமதாஸ் முதலியவர்களின் திருஷ்டாந்தங்களைக் கவனிக்க வேண்டும். பகவத் கீதை முதலிய ஞான நூல்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்போது ஸந்நியாசிகளுக்கும் சுதேசியத்துக்குமுள்ள சம்பந்தம் தெளிவாகும்.

ஞானி தனது சொந்த நலத்தைக் கருதி உழைக்கக் கூடாதேயொழிய உலக கர்மங்களை முற்றிலும் விட்டுவிட வேண்டுமென்பது சாஸ்திரக் கருத்தன்று. தன்மட்டில் யாதொரு பலனையும் கருதாமலும், ஈசனுக்கும் ஈசுவர வடிவமாகிய மனித சமூகத்திற்கும் தனது செய்கைகளின் பலன்களை ஸமர்ப்பணம் செய்துவிட்டு, தான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்பதே பெரியோர்களின் சித்தாந்தம்.

அப்படியில்லாவிட்டால் பிரமஞானிகளாகிய முனிவர்கள் ஏன் சாஸ்திரங்கள் எழுதி வைக்க வேண்டும்? மூச்சைப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல் உலக நன்மையின் பொருட்டு ஞான வழிகள் கற்பித்த ரிஷிகளை நாம் லெளகீகர்களென்று கூறத்தகுமா? அதுபோலவேதான் இக் காலத்திலும் உண்மையான ஸன்னியாஸிகளாக இருப்போரும் அந்த நிலையை அடைய விரும்புவோரும் தம்மை மறந்து தேச க்ஷேமத்தையும் சுயாதீன நிலைமையையும் அடையும் பொருட்டாக முயற்சிகள் செய்துவருகிறார்கள். விரிக்கிற் பெருகும்."

4. வ.வே.சு.ஐயர்:
"பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகள்" எனும் நூலில் பெ.சு.மணி அவர்கள் எழுதிய பகுதி.
“சங்க இலக்கியம் முதல் பாரதி இலக்கியம் வரையில் தமிழ் இலக்கியப் பரப்பின் வரம்புகளைத் தேர்ந்து தெளிந்தவர் புரட்சிவீரர் வ.வே.சு.ஐயர். தமிழிலக்கியம் மட்டுமல்லாமல், உலகச் செம்மொழிகளின் பழங்கால இலக்கியங்களையும் நவீன ஐரோப்பிய ஆங்கில மொழி இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்ற இலக்கிய மாமேதை வ.வே.சு.ஐயர். அரசியல் இலக்கியம் இரண்டிலும் புரட்சி வீரராகத் திகழ்ந்த வரகனேரி வேங்கடசுப்பிரமணிய ஐயர் எனும் திருப்பெயர் கொண்ட வ.வே.சு.ஐயர், தமது யாத்த நண்பர் பாரதியாரைப் பற்றிய சிறந்த மதிப்பீடுகளை பாரதியார் காலத்திலேயே வெளியிட்டார்.

வ.வே.சு.ஐயர் லண்டனில் பாரிஸ்டர் எனும் வழக்கறிஞர் படிப்பில் ஈடுபட்டு, ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா, வீர சாவர்க்கர் ஆகியோர் தொடர்பால் இந்தியா ஹவுஸ் எனும் புரட்சி இயக்கக் களத்தில் அரசியல் புரட்சிப் பாடங்களைக் கற்ற காலத்தில், புதுச்சேரியில் இருந்து வெளிவந்த 'இந்தியா' பத்திரிகையில் எழுதிவந்தார். இதன் வழியே 'இந்தியா' ஆசிரியர் பாரதியாருடன் நெருங்கிய தோழமை மலர்ந்தது.

1910இல் பல புரட்சிகர சாதனைகளுக்குப் பிறகு வ.வே.சு.ஐயர் புதுச்சேரியில் குடியேறி, பாரதியாரின் குடும்ப நண்பரானார். பாரதியின் முதன்மைச் சிறப்பை 1919இல் பரலி சு.நெல்லையப்ப பிள்ளை வெளியிட்ட "கண்ணன் பாட்டு" நூலுக்கு எழுதிய முன்னுரையில் வ.வே.சு.ஐயர் இவ்வாறு கூறுகிறார்:- "நம் காலத்துத் தமிழ்க் கவிகளுள் பிரதம ஸ்தானத்தை வகிக்கும் ஸ்ரீமான் ஸுப்ரஹ்மண்ய பாரதியின் நூல்களுக்கு முன்னுரை வேண்டுவதே இல்லை".

பாரதி உயிரோடு இருந்தபோது அவர் புகழ் பரவவில்லையே என வருத்தமுற்றார் வ.வே.சு.ஐயர். பாரதி மறைந்த பிறகு அவர் புகழ் நினைவில் நிற்க 1924 அக்டோபரில் "பால பாரதி" எனும் ஓர் இலக்கிய இதழைத் தொடங்கினார். 1925 ஜூன் முதல் அவர் காலமாகும் வரை அதன் ஆசிரியராகத் திகழ்ந்தார். தமிழுக்குப் புத்துணர்ச்சியும், புதிய வழியும் காட்டத் துடித்த வ.வே.சு.ஐயர் 1925 ஜூன் 3இல் அகால மரணமடைந்தார். அவர் உயிரோடிருந்து "பால பாரதி" தொடர்ந்து வெளிவந்திருந்தால், பாரதி இலக்கியத்தின் விமர்சனமும், விரிவாக எழுதப் பெற்று பாரதி புகழ் பரவ வாய்ப்பேற்பட்டிருக்கும்."

5. பாரதிதாசன்.
'பாரதிதாசன்' எனும் புனைபெயர் கொள்வதற்கு முன்னமேயே பாரதியாரை நேரில் பார்ப்பதற்கு முன்பே, பாரதியாரின் தேசியப் பாடல்களில் மனம் பறிகொடுத்தவர் பாரதிதாசன். பாரதியின் கவிதைகளில் மட்டுமல்லாமல் அவர் ஆசிரியராக இருந்த 'இந்தியா' இதழிலும் மனம் பறிகொடுத்தவர். தமது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இதழாசிரியர் பாரதியையும், தேசிய கவி பாரதியையும் பற்றி பாரதிதாசனே தமது 'குயில்' இதழில் (10-6-1967) பின்வருமாறு கூறுகிறார்.

"(இந்தியா பத்திரிகையில்) சித்திர விளக்கம் தெளிவாக எழுதியிருக்கும். படங்கள் ராஜீய சம்பந்தமானவை. அர்த்தபுஷ்டியுள்ளவை. பத்திரிகை வெளிவருவதை வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். படத்தை வெட்டி அட்டையில் ஒட்டி வீட்டுச் சுவரில் தொங்கவிட்டு வைப்பார்கள். ஒவ்வொரு படமும் இங்கிலீஷ்காரனுக்கும் இந்தியனுக்கும் உள்ள சம்பந்தத்தை - இங்கிலீஷ்காரனிடம் இந்தியன் அனுபவிப்பதைக் குத்தலாக எடுத்துக் காட்டுவதுதான் அந்தப் பத்திரிகையிலேயே சுவையான பகுதி. அந்தச் சித்திரம்தான் முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரம் என்னை இன்னானென்று எனக்குக் கூறிற்று ....

புதுச்சேரியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் (1909இல்) புதுவை கனக சுப்புரத்தினமாக, பாரதிதாசன், பாரதியாரை நேரில் கண்டார். "வீர சுதந்திரம் வேண்டி நின்றார்", "தொன்று நிகழ்ந்த தனைத்தும்" எனும் பாரதியார் பாடல்களை இயற்றியவர் தம் முன்னே இருக்கிறார் என்று அறியாத நிலையில், அந்த பாடல்களை பாரதிதாசன் பாடினார். பாரதியின் நண்பர் வேணு நாயக்கர் வீட்டுத் திருமணம் அது. வேணு நாயக்கர் பாரதிதாசனின் உடற்பயிற்சி ஆசிரியர். அவரது அறிமுகத்துடன் பாரதிதாசன் பாரதியாரின் நட்பைப் பெற்றார்.

பாரதியார் தமது தராசு கட்டுரையொன்றில் பாரதிதாசன் பெயரைக் குறிப்பிடாமல், அவர் சந்திப்பை உரையாடற்பாங்கில் சுவைபட பின்வருமாறு வருணித்துள்ளார்:-

"இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க்கவிராயர் வந்தார். கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன். இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. "இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?" என்று தராசு கேட்டது..

"எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன்; அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்" என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார். "மாதிரி சொல்லும்" என்றது தராசு. புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

"காளை யொருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அம்மை
தோளசைத் தங்கு நடம் புரிவாள் - இவன்
தொல்லறி வாளர் திறம் பெறுவான்,
ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! - தம்பி!
ஏழு கடலவள் மேனியடா!
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - எங்கள்
தாயின் கைப் பந்தென வோடுமடா!
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ?
மங்கை நகைத்த ஒலியதுவாம் - அவள்
வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை. இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்".

தராசு: "சரிதான், ஆரம்பம் குற்றமில்லை. விடாமுயற்சியும், தெய்வ பக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலியேறும். பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை, இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்".

அப்போது புலவர் தராசை நோக்கி, "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு: "எழுக! நீ புலவன்!" என்றது.

பாரதிதாசன் என்ற புனைபெயரை பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே பாரதிதாசன் கொள்ளவில்லை, என்றாலும் பாரதியார் மறைந்த அடுத்த ஆண்டிலேயே 1922இல் அந்த புனைபெயரை ஏற்றதாக அறிகிறோம். பாரதிதாசன் எனும் புனைபெயர் கொண்டாலும், பாரதியார் போற்றிய கொள்கைகள் பலவற்றிற்கு நேர் எதிராக பாரதிதாசன் நின்ற பொழுது அந்தப் புனைபெயரைத் துறந்துவிடப் பலர் வற்புறுத்தியும் அவர் ஏற்கவில்லை, அதனால் பல எதிர்ப்புகளையும் சந்தித்ததாக அவர் எழுதுகிறார்.

6-5-1963இல் "தினத்தந்தி" இதழில் எழுதிய ஓர் கட்டுரையில் கூறுகிறார். "சென்னையில் பாரதி இறந்தார். ஆனால் என்னுள் வளர்ந்து வந்த பாரதி அன்பு இறந்ததா? இல்லை. பாரதியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறத் தயங்குவதில்லை. அதனால் ஒரு சாராரின் எதிர்ப்பு இன்று வரை நீங்கியதில்லை. இதற்காக நான் அஞ்சியதும் இல்லை. அஞ்சப்போவதும் இல்லை. பாரதி பற்றிப் பேச எனக்குத்தான் தெரியும். அவரைப் பற்றிப் பேச என்னை விடத் தகுதி இந்த நாட்டில் எவனுக்கும் இல்லை."

ஸ்ரீ சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம் எனும் மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவர் எழுதினார்: "நூற்றுக்கணக்கான பாரதிகள் நமது கவிதா மண்டலத்தில் தோன்ற வேண்டும்"என்று. தன் குருநாதரின்பால் அவர் கொண்டிருந்த மரியாதைக்கு இது ஒரு சான்று.

6. பரலி சு. நெல்லையப்ப பிள்ளை:
பாரதியின் அன்பிற்கு பாத்திரராகி, தம்பி! என பாரதியாரால் அன்போடு அழைக்கப்பட்டவர் பரலி சு.நெல்லையப்பர். அவரது பெருமைக்கு முதற்காரணம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்த காலத்தில் 1917லேயே பாரதியாரின் பாடல்களை இவர் துணிவோடு பிரசுரம் செய்தார். வருங்காலத்தில் பாரதியார் உலகம் போற்றும் மகாகவிகளுள் ஒருவராக விளங்குவார் என்று சரியாக மதிப்பிட்டு அதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி மகிழ்ந்தவர். திருநெல்வேலி சுதேசி இயக்கத்தின் வந்தேமாதர கோஷம் வ.உ.சி.மூலமாக இவரை பாரதியிடம் அறிமுகம் செய்து வைத்தது. 'வந்தேமாதரம்' எனும் கோஷம் இவரை மட்டுமல்ல இவரது உடன் பிறப்புகளான பரலி சு.சண்முகசுந்தரம் பிள்ளை, குழந்தை வேலாயுதம் பிள்ளை ஆகியோரையும் பிடித்துக் கொண்டது.

வ.உ.சி. நடத்திய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியில் இவர் வேலை பார்த்தார். 1908இல் சிதம்பரனாருடன் இவரும் சிறை சென்றார். பாரதியார் வ.உ.சி.யைச் சந்திக்க தூத்துக்குடி வந்தபோது அவர் வீட்டில் முதன்முறையாக சந்தித்தார். எனினும் அவரோடு நெருங்கிப் பழகும் பாக்கியம் இவருக்கு புதுச்சேரியில்தான் கிடைத்தது. புரட்சி வீரர் நீலகண்ட பிரம்மச்சாரியின் அழைப்பின் பேரில் இவர் புதுச்சேரி சென்றபோது 1910இல் நெல்லையப்பர் - பாரதி நட்பு உறுதிப்பட்டது.

அங்கு இவர் 'சூரியோதயம்', 'இந்தியா', 'விஜயா', 'கர்மயோகி', ஆகிய பத்திரிகைகளில் பாரதியாருடன் சேர்ந்து பத்திரிகைப் பணியாற்றினார். இந்த பத்திரிகைகள் யாவும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறையினால் நின்று போன பின்பு பத்திரிகை தொழில் தேடி இவர் சென்னை சென்றார். அப்போது பாரதியார் இவருக்குக் கொடுத்தனுப்பிய நற்சான்றிதழ் இதோ:-

ஓம்
நன்கு மதிப்பு
சக்தி துணை. புதுச்சேரி, ராக்ஷஸ வருஷம், ஐப்பசி 25.

தமிழ்ப் பத்திரிகை நடத்தும் தொழிலில் ஸ்ரீ ப.சு.நெல்லையப்ப பிள்ளை நல்ல திறமையுடையவர் என்பதை நானறிவேன். இவரை உதவியாகக் கொண்டு நடத்தப்படும் பத்திரிகையை ஜனங்கள் மிகவும் ஆதரிப்பார்களாதலால், அதற்கு நல்ல புகழும் லாபமும் உண்டாகுமென்பது என்னுடைய நம்பிக்கை.
சி.சுப்பிரமணிய பாரதி.

பிறகு இவர் சென்னை வந்து சதாவதானம் இருஷ்ணசாமி பாவலர் நடத்திய "பாரதி", சுப்பிரமணிய சிவாவின் "ஞானபானு", திரு வி.க. வ.வே.சு.ஐயர் பணியாற்றிய "தேசபக்தன்" முதலான பத்திரிகைகளில் பணியாற்றி தொடர்ந்து பாரதி புகழ் பரப்பும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

7. அறிஞர் வ.ரா எனும் திருப்பழனம் வ.ராமசாமி.
அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய விரும்பி அவரிடம் நேரில் சென்று கேட்டுவருமாறு கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்த ஓர் இளைஞரை புதுச்சேரிக்கு அனுப்புகிறார். அவர்தான் வ.ராமசாமி. அவர் புதுச்சேரி சென்றதும் அங்கு 'புஷ்' வண்டிக்காரனிடம் பாரதியார் விலாசம் விசாரிக்க, அவன் "பட்டணத்து எஜமான், பாட்டுப் பாடற எஜமான், மீசை வச்சிருக்காங்களே, அவுங்க வீடுதானே" என்று சொல்லி இவரை பாரதியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றதை இவர் சுவைபட எழுதுகிறார். அங்கு சென்று பாரதியாரிடம் நமஸ்காரம் செய்ய, அவர் "நமஸ்காரம் வேண்டாம் நீர் யார்? வந்த காரியத்தைச் சொல்லும்" என்றார். இவர் யார் என்பதை ஆங்கிலத்தில் சொல்ல, அவர் குறும்பாக "அடே! பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா! அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லை" என்று உரக்கக் கத்தினார். ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்? என்று வருத்தக் குரலுடன் பாரதியார் கேட்க, வ.ரா.வுக்கு அழுகை வந்ததாம். அப்படித்தான் அறிமுகமானார் பாரதியிடம் வ.ரா.

வ.ரா. தஞ்சை மாவட்டம் திருப்பழனத்திற்கு அருகில் திங்களூர் எனும் சிற்றூரில் 1889இல் செப்டம்பர் 17ஆம் நாள் பிறந்தார். தந்தை வரதராஜ ஐயங்கார், தாயார் பொன்னம்மாள். இவரோடு உடன் பிறந்தார் எழுவர். வ.ரா.தான் மூத்தவர்.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த உத்தமதானபுரத்திலும், திங்களூரிலும், திருவையாறு செண்டிரல் உயர்நிலைப் பள்ளியிலும் (தற்போது சீனிவாசராவ் மேல் நிலைப் பள்ளி) பயின்று பின்னர் தஞ்சாவூர் புனித பீட்டர் கல்லூரியில் சேர்ந்து எஃப்.ஏ. பயின்றார். கல்கத்தா சென்று படிக்க முயன்று, முடியாமல் ஊர் திரும்பினார். இந்த நிலையில்தான் கொடியாலம் ரங்கசாமி ஐயங்காருடன் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டது. புதுச்சேரி சென்று அரவிந்தருடனும், மகாகவி பாரதியுடனும் தொடர்பு கொண்டார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து தன் வாழ் நாள் முழுவதும் உழைத்தார். புதுச்சேரியில் நீண்ட நாள் தங்கி பாரதியாருடன் நெருங்கிப் பழகினார். இவர் 1944இல் முதன் முதலில் மகாகவி பாரதியார் எனும் தலைப்பில் பாரதியார் வரலாற்றை நூலாக எழுதி வெளியிட்டார். இவர் ஒரு எழுத்தாளர். பல கதைகளை எழுதியிருக்கிறார். சில பத்திரிகைகளையும் நடத்தியிருக்கிறார். அதில் ஒன்று "சுதந்திரன்" எனும் இதழ் தஞ்சாவூரிலிருந்து வெளிவந்திருக்கிறது.

வ.ரா. அவர்களுக்கும், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குமிடையே "பாரதி மகாகவியா?" எனும் கருத்துப்போர் சுவாரசியமானது. இவ்விருவருக்குமிடையே பத்திரிகை வாயிலாக நடந்த கருத்து மோதல் பலருடைய கவனத்தையும் கவர்ந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இருவருமே பாரதியைப் போற்றுபவர்கள், எட்டயபுரம் மணிமண்டபம் எழுப்ப பாடுபட்டவர் கல்கி, எனினும், அவர் மகாகவியா என்பது பற்றி பலத்த வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பாரதி புகழ் பரப்பிய பல பாரதி நண்பர்களில் வ.ரா.வும் ஒருவர். இவர் 29-8-1951இல் காலமானார்.

8. கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார்:
கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் பாரதி மீது கொண்ட பக்தி பற்றி திரு.வி.க. கூறும்போது, "வை.சு.சண்முகம் செட்டியார் ஒரு பாரதி பித்தர். செட்டிநாட்டில் பாரதீயத்துக்குக் கால்கொண்டவர் அவரே" என்கிறார். பாரதியார் புதுச்சேரியில் இருந்த பொழுதே வை.சு.ச. அவர்கள் 1918இல் அவரோடு கடிதத் தொடர்பு கொண்டார். பிறகு பாரதியார் புதுவையை விட்டு நீங்கி கடலூர் சிறையில் அடைபட்டு பின்னர் கடையம் வந்தடைந்தபோது, 7-2-1919 அன்று செட்டியார் கடையம் சென்று பாரதியாரை நேரில் சந்தித்தார். அவருடன் 36 மணி நேரம் உண்டு, உறங்கி, உலாவி, உரையாடி வந்ததாகப் பின்னர் அவர் பெருமையாகச் சொல்லுகிறார்.

28-10-1919 அன்று வை.சு.ச.செட்டியாரின் அழைப்பை ஏற்று கானாடுகாத்தானில் செட்டியாரின் மாளிகையில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்தார் பாரதியார். அதற்குப் பிறகு மறுபடியும் 6-1-1920 முதல் 10-1-1920 வரையில் கானாடுகாத்தான் வந்து தங்கினார். பாரதியாரை நிரந்தரமாகவே குடும்பத்துடன் தனது மாளிகையில் வைத்துக் காப்பாற்றவும் திரு சண்முகம் செட்டியார் ஆசைப்பட்டார். இதைப் பற்றி அவர் கூறுவதாவது:-

"பாரதியார் குடும்பம் ஒதுக்கி வைக்கப் பெற்ற கடையத்தில் இனி இருக்க வேண்டாம்; இங்கேயே அவர் மனைவி மக்களை அழைத்து வந்து விடலாம்; என் மனைவியும் நானும் வசிக்கும் விதத்துக்கு சிறிதும் குறைவின்றி இங்கேயே இருந்து கவிதைகள் எழுதலாம் என்று 29-10-1919 அன்று கேட்டுக் கொண்டதற்கும் பாரதியார் இணங்கினார்".

ஆனால் செட்டியாரின் இந்த எண்ணம் ஈடேறவில்லை. செல்லம்மாவின் சகோதரர் அவர்களை கானாடுகாத்தான் அனுப்பி வைக்க சம்மதிக்கவில்லை. மனைவி இல்லாமல் கானாடுகாத்தான் சென்று தான் மட்டும் இருக்கவும் பாரதிக்கு மனமில்லை. பாரதியார் கானாடுகாத்தான் மாளிகையில் தங்கியிருந்த காலை அவர் மீது ஏழு பாக்கள் கொண்ட ஒரு கவிதையை இயற்றினார். பாரதியார் அமைதியற்று அலைபாயும் மனத்துடன் கட்டுப்பாடற்ற நிலையில் சிக்கித் தவித்த காரணத்தால் செட்டியாரின் புத்தக வெளியீட்டுத் திட்டங்கள் நிறைவேறாமல் போயிற்று. பாரதி பற்றி திரு வை.சு.சண்முகம் செட்டியார் அவர்கள் கூறும் செய்தி:-

"அப்போதையத் தமிழ் நாட்டின் தவப்பயன்; உள்ளத் துறவு பெற்ற சிறந்த வேதாந்தி; மாசு மறுவற்ற நாட்டன்பர்; இணையற்ற தமிழ்த் தொண்டர்; மனிதப் பிறவியில் உயர்வு தாழ்வு கூறுதல் ஐயத்துக்கு இடமில்லாத பாவமாகும் என்று துணிந்து கூறி அதன்படி வாழ்ந்து வழிகாட்டிய வீரர்; மங்கையர் முன்னேற்றத்தில் மட்டிலா ஆர்வங்கொண்ட மகான் பாரதியார்".

மேற்குறிப்பிட்ட எண்மரைத் தவிர பாரதிக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். அவர் மறைவுக்குப் பின் பாரதி புகழ் பரப்பிய பணியில் பலர் ஈடுபட்டுச் சிறந்து நின்றார்கள். அவர்கள் அனைவரைப் பற்றியும் இங்கு குறிப்பிடுவது கட்டுரை விரியும் என்பதால் சிலரது பெயரை மட்டும் இங்கு நினைவு கூர்தல் தகும். பாரதி புதுவையில் வந்து தங்கிய நாட்களில் அரவிந்தரும் வந்து சேர்ந்தார். ரிக் வேதத்தில் நூறு பாடல்களை அவரிடமிருந்து பாரதி கற்றதுமட்டுமல்ல, அவரோடு பல தத்துவ விசாரங்களை விவாதிக்கவும் செய்திருக்கிறார். மண்டையம் ஸ்ரீனிவாசாச்சாரியார். இவர் மண்டையம் குடும்பத்தில் ஒருவர். இந்தியா பத்திரிகை நடத்தியவர். இவரது குமாரி யதுகிரி சிறு பெண்ணாயிருந்த காலந்தொட்டே பாரதி தான் பாடிய பாடல்களை அந்தப் பெண்ணுக்குப் பாடிக் காண்பிப்பார். இவர் பாரதி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். வக்கீல் துரைசாமி அய்யர். இவர் பாரதி சென்னை வந்த காலம் தொட்டே நண்பராகத் திகழ்ந்தவர். பாரதியை புதுச்சேரிக்குச் செல்லும்படி தூண்டி அவரைத் தமது காரிலேயே சைதாப்பேட்டை ரயில் நிலையம் அழைத்துச் சென்று ரயிலேற்றிவிட்டவர். பின்னர் பாரதி கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவரை விடுதலை செய்விக்க அரும்பாடுபட்டவர். 'சுதேசமித்திரன்' ஆசிரியர் ரங்கசாமி ஐயங்கார். இவரிடம் பாரதிக்கு நட்பு என்பதைக் காட்டிலும் மரியாதை, அன்பு, பாசம் எல்லாம் இருந்தது. இவரும் பாரதி கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்க ஏற்பாடுகளைச் செய்தவர். அதுமட்டுமல்ல, பாரதி புதுவையில் இருந்த நாட்களில் அவர் சுதேசமித்திரனுக்கு எழுதினாலும் எழுதாவிட்டாலும் மாதாமாதம் பணம் அனுப்பி வந்தார். குவளை கிருஷ்ணமாச்சாரி. குவளைக் கண்ணன் என்று அழைக்கப்பட்டவர். பாரதியின் பாதுகாவலன், நண்பன், சீடன் என பல அவதாரங்கள் இவருக்கு உண்டு. இவரது அன்னை கேட்டுக் கொண்டபடி பாரதி பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடியதாக வரலாறு. பாரதியை யானை அடித்துத் தள்ளியபோது, அதன் தடுப்பு வேலியைத் தாண்டிக் குதித்து அவரைத் தன் தோள்மீது சுமந்து வந்து காப்பாற்றியவர் இந்த குவளை கண்ணன். பொன்னு முருகேசம் பிள்ளை புதுவையில் பாரதியின் குடும்பம் ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் இருந்த நாட்களில் அவர்களுக்குத் தேவையான அரிசி, காய்கறி, பண்டங்களை கேட்காமலேயே கொடுத்து உதவிய தர்மவான் இவர். பாரதியின் குடும்பத்தினர் அனேகமாக இவர்கள் வீட்டிலேயே இருந்து வந்தனர். வாத்தியார் சுப்பிரமணிய ஐயர். தனது கட்டுரைகளில் பாரதியார் இவரை பிரமராய அய்யர் என்றே குறிப்பிடுவார். இவர் வீட்டுக்கு இடிப்பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்தார் பாரதியார். கல்லூரி ஆசிரியர் இவர். சுரேந்திரநாத் ஆர்யா. இவர் சிறைப் பட்டிருந்த நாட்களில் மிகவும் துன்பங்களுக்கு ஆளானார். இவர் மதம் மாறிய செய்தி கேட்டு பாரதி பெரிதும் வருந்தினார். பாரதி இறந்த போது அவர் உடலை தகனம் செய்ய எடுத்துச் சென்ற ஒரு சிலரில் இவரும் ஒருவர். இவர்கள் தவிர இன்னும் எவ்வளவோ நண்பர்கள் சென்னையிலும், புதுச்சேரியிலும். அவர்கள் எல்லோரையும் இந்த நேரத்தில் மனதால் வாழ்த்தி வணங்குவோம்!

- வினாக்கள்.

1) ஜி.சுப்பிரமணிய ஐயர் தமிழ் நாட்டின் உயர்வுக்கு எவையெவை முக்கிய சாதனங்கள் என்று கருதியதாக பாரதியார் கூறுகிறார்?
2) வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கஷ்டதசையைத் தீர்க்க பாரதி கூறும் உபாயம் என்ன?
3) சுப்பிரமணிய சிவாவுக்கு எதிரான வழக்கில் அவர்மீது போலீஸ்காரர்கள் எவ்வகை குறை பாடுகளைச் சுட்டிக்காட்டி சாட்சியமளித்தார்கள்?
4) "இந்தியா" பத்திரிகைகளில் வெளியான கார்ட்டூன்கள் பற்றி பாரதிதாசன் கூறும் சிறப்புக்கள் யாவை?
5) "ஒரு தமிழன் மற்றொரு தமிழனுடன் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேசவேண்டும்?" என்று பாரதி மனம் நொந்து கூறிய சந்தர்ப்பம் எது?
6) கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியாருக்கும், பாரதிக்கும் ஏற்பட்ட நட்பு பற்றி ஒரு சிறிய கட்டுரை வரைக.

No comments:

Post a Comment

You can send your comments