Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

பாரதி நினைவுகள்

திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் பாரதி அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம் பாரதி நினைவுகள்
திருமதி யதுகிரி அம்மாள்

(மகாகவி பாரதியார் புதுவையில் வசித்து வந்த காலகட்டத்தில், பாரதியாரின் அபிமான புத்திரியாகவும், சிஷ்யையாகவும் விளங்கியவர் யதுகிரி. பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் சிறுமி. புதுவையில் அக்காலத்தில் வசித்து வந்த தேசபக்த குழுவினருக்கு 'சுதேசிகள்' என்று பெயர் வழங்கி வந்தது. அப்படிப்பட்ட சுதேசிகளுக்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்து வந்த குடும்பம்தான் மண்டையம் குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார். சுதேசிகளில் மகாகவி பாரதியார், வ.வெ.சு.அய்யர், அரவிந்தர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். "இந்தியா" பத்திரிகையைத் தொடங்கி பாரதியாரை அதற்கு ஆசிரியராகவும் நியமித்த ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்களுடைய குமாரிதான் இந்த யதுகிரி. மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் குடும்பமும், பாரதியார் குடும்பமும் நெருங்கிப் பழகி வந்த நாட்கள் அவை. புதுவை வாசத்தின் போது மகாகவி அடிக்கடி மண்டையம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் இல்லத்திற்குச் செல்வார். (கர்நாடக மாநிலத்தில் மைசூருக்கருகில் உள்ளது மாண்டியா எனும் ஊர். இந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான் தங்கள் பெயருக்கு முன் 'மண்டையம்' என்று போட்டுக் கொள்கிறார்கள்.) தான் இயற்றிய எந்த பாட்டானாலும் அவற்றை அங்கு சென்று அனைவர் மத்தியிலும் பாடிக்காட்டி ஆனந்தப் படுவார். அப்படி பாரதியாரிடம் இளமைப் பருவத்திலேயே பழகி, அவருடைய பாடல்களை அவரே பாடக்கேட்டு, எந்த சந்தர்ப்பங்களில் எந்த பாடல் உதயமாகியது என்பது போன்ற பல அரிய செய்திகளை திருமதி யதுகிரி அம்மாள் தனது "பாரதி நினைவுகள்" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். யதுகிரி பருவமடைந்த காலத்தில் எப்போதும் போல பாரதி அவரைத் தேடிச்சென்று தன் கவிதையைப் பாட முனைந்த போது, அவர் வீட்டார் இனி முன்போல் அவளோடு தாங்கள் பழகமுடியாது என்று கூறியதும், அவர்களுடைய பத்தாம் பசலித்தனத்துக்காக பாரதி மிகவும் வருத்தப்பட்டதாகவும் செய்திகள் உண்டு. அப்படிப்பட்ட நெருங்கிய சீடர் தன் அன்பிற்கினிய குருவான பாரதி பற்றி எழுதிய இந்த நூலில் பல சம்பவங்களை நேரடியாகக் கண்டு அனுபவித்து சுவைபட எழுதியிருக்கிறார்கள். இந்த நூல் வேண்டுவோர் 'சந்தியா பதிப்பகம்', 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நகர், அசோக் நகர், சென்னை 83 எனும் விலாசத்திற்குத் தொடர்பு கொண்டு வாங்கிப் படிக்கலாம். (தொலை பேசி: 044 - 489968) சந்தியா பதிப்பகத்தாருக்கு எமது உளமார்ந்த நன்றி)

"பாரதி நினைவுகள்"
விட்டுவிடுதலையாகி:
'ஓரு வெள்ளிக்கிழமை சாயங்கால வேளையில் சுவாமிநாத தீட்சிதரின் பெண் மீனாவும் நானும் ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவில் இருக்கும் பாரதியாரின் வீட்டிற்குப் போனோம். எப்பொழுதும்போல் செல்லம்மாள் கலகலப்பாக இருக்கவில்லை. மாதக் கடைசி. நாங்கள் எல்லோரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம். மணி ஆறு ஆனதும் மீனா வீட்டிற்குப் போய்விட்டாள். பின்னர் பாரதியாரும் வெளியே போய்விட்டார். வீட்டில் இருந்தவர்கள் நானும் செல்லம்மாவுமே. இருவரும் சிறிது நேரம் பேசாமலே இருந்தோம். ஐந்து நிமிஷம் பொறுத்துப் பேச ஆரம்பித்தேன். எங்களுக்குள் நடந்த உரையாடல் இதோ:-

"செல்லம்மா! உடம்பு சரியாக இல்லையா? எப்படியோ இருக்கிறீரே!"

"உடம்புக்கு ஒன்றுமில்லை யதுகிரி! மனத்திலே புழு அரிப்பதைப் போல் அரிக்கிறது. யாரிடமாவது சொன்னால்தான் இம்சை தீரும் போல் இருக்கிறது. நீ குழந்தை, உன்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்?"

"பரவாயில்லை என்னவென்று சொல்லுங்களேன், நான் பாரதியாரைக் கேட்கிறேன். 'பெண்கள் விடுதலையை வாயால் கொண்டாடுகிறீரே, காரியத்தில் இப்படிப் பண்ணலாமா?' என்று கேட்டுவிடுகிறேன்.

"ஐயோ, குழந்தை! உன் உள்ளம் ஒன்றும் அறியாது. இப்போ மாதக் கடைசி. போன மாசப் பாக்கியைப் பால்காரனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அவன் நேற்று வந்து கேட்டான். வருகிற மாசம் கொடுப்பதாகச் சொன்னேன். அவன் முடியாது என்றான். நான் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பினேன். இவர் பார்! இன்றைக்குச் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்பவே இல்லை. அவன் எப்படிப் பணம் அனுப்புவான்? இன்று காலையிலே குளித்து, காப்பி குடித்துவிட்டு, வெற்றிலை பாக்கு எல்லாம் கிரமமாக ஆனபிறகு எவ்வளவோ சொல்லி மேஜைமேல் காகிதம் பேனா, இங்கி புட்டி எல்லாவற்றையும் கொண்டுபோய் வைத்துவிட்டு அரிசியைப் பொறுக்கி வைத்தேன். பிறகு மடி உடுத்திக் கொள்ள போனேன். இவருக்கு எழுத முடியவில்லை. முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை எடுத்து முற்றத்தில் இறைத்துவிட்டு அதைத் தின்ன வரும் குருவிகளைக் கண்டு பாடிக் கொண்டிருந்தார். அரிசியைக் களைந்து உலையில் போடுவதற்காக வெளியில் வந்து பார்க்கிறேன்; அரிசியில் கால் பங்கு இல்லை. எனக்கு அழுகை வந்துவிட்டது. இதைப் பார்த்த அவர், 'வா! செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன! நாமும் அதைப்போல் ஏன் இருக்கக்கூடாது? நீயும் சதா தொந்தரவு செய்கிறாய்; நானும் எப்போழுதும் எரிந்து விழுகிறேன். நமக்கு இந்தக் குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன. நாம் அதைக் கவனியாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறோம். நம்மைக் காட்டிலும் மூடர்கள் உண்டா?' என்றார்.

"எனக்குப் பொறுக்கவில்லை. என் கோபத்தை ஏன் கிளப்புகிறீர்கள்? குழந்தைகள் அண்ணியம்மா (பாரதியாரின் அடுத்த வீட்டுக்காரரான செல்வந்தர் பொன்னு முருகேசம் பிள்ளையின் மனைவி - பாரதியாரின் குழந்தைகள் அவர்கள் வீட்டிலேயே அதிக நேரம் விளையாடுவார்கள்) வீட்டிலிருந்து வருகிற வேளைக்குச் சமைத்து விடலாம் என்று அடுப்பை மூட்டினால் பொறுக்கின அரிசியைக் குருவிக்குப் போட்டு விட்டீர்களே! திரும்பப் பொறுக்கப் பத்து நிமிஷம் ஆகும். உங்களுக்குப் பணம் வர இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ! நீங்களோ இன்னும் கட்டுரை எழுதியாகவில்லை. பால்காரன் மானத்தை வாங்குகிறான். வேலைக்காரி இரண்டு நாளாய் வரவே இல்லை. நீங்கள் இதை யோசிக்க வேண்டாமா? என்னைக் குருவியைப்போல் சந்தோஷமாக இரு என்கிறீர்களே, கடவுளுக்குக் கண்ணே இல்லை. இந்தக் குழந்தைகளைக் கொடுத்து வதைக்கிறார்' என்று சொல்லிக்கொண்டே போய் ஒருவிதமாகச் சமையல் வேலையைச் செய்து முடித்தேன்.

"வெளியே வந்தால் இவர் சகுந்தலா பாப்பாவுக்கு "விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே!" என்று துவங்கும் பாட்டைப் பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறார். (சகுந்தலா பாப்பா என்பது பாரதியாரின் இளைய மகள்) குழந்தை சந்தோஷத்தில் குதிக்கிறாள்! இவர் பாட்டு ஆனந்தத்தில் மெய்ம்மறந்திருக்கிறார். குருவிகளோ அரிசியைக் கொத்தித் தின்ற வண்ணமாய் இருக்கின்றன. தங்கம்மா பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள் (தங்கம்மா என்பது பாரதியாரின் மூத்த மகள்)".

"இந்த வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது நம்மால் ஏன் நிம்மதி கெடவேணும்?" என்று நானும் உட்கார்ந்து விட்டேன். ஆட்டம், பாட்டு எல்லாம் முடியப் பன்னிரண்டு மணி ஆயிற்று. சகுந்தலா, 'அப்பா! பசிக்கிறது; வா சாப்பிடலாம்" என்றது. அவரும் எழுந்து வந்து பேசாமல் சாப்பிட உட்கார்ந்தார். என்னைப் பார்த்து, 'செல்லம்மா, இன்னும் கோபம் போகவில்லையா? இதோ பார், இந்தக் குருவிப் பாட்டையே அனுப்பப் போகிறேன். முதல் தேதி உன் கையில் பணம் வந்துவிடும், பயப்படாதே" என்றார்.

அவர் நல்லவர், கள்ளம் கபடு இல்லை. கையில் இருந்தால் வஞ்சம் இல்லை. ஆனால் அவர் சரியாகக் கட்டுரை அனுப்பாவிட்டால் பத்திரிகைக்காரன் சும்மா பணம் அனுப்புவானா? அதுதான் எனக்கும் பிடிக்கிறதில்லை".

நான் ஒரு பதிலும் சொல்லவில்லை. என்னால் என்ன சொல்ல முடியும்? ஆனாலும் சமாதானமாக, "இன்றைக்கு தபாலில் ஒன்று போயிருக்கிறதே! பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?" என்றேன்.

"நீயும் அவருக்குச் சரியான பெண்தான்! அவர் எதைச் செய்தாலும் சரி என்று சொல்வாய். உன்னிடம் சொல்லியதால் கொஞ்சம் இம்சை குறைந்தது, அதுவே போதும்" என்றார் அந்த உத்தமி. பாரதி வந்தார் ....

"யதுகிரி! இன்றைக்குப் புதிய பாட்டுப் பண்ணியிருக்கிறேன்; பார்த்தாயா?"

"இல்லை. செல்லம்மா சொன்னார். எங்கே காட்டுங்கள்?"

பாரதி மேஜையிலிருந்து பேப்பரை எடுத்தார் அப்போது செல்லம்மா "உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு பதத்தையும் யதுகிரி அப்படியே பொறுக்கி விடுகிறாள். உலகம் தெரியாத குழந்தை! காலையில் நடந்ததைச் சொன்னேன். 'பாட்டானால் என்ன கட்டுரையானால் என்ன' என்று கேட்கிறாள்."

பாரதி: "அவள் சொல்வது மிகவும் சரி! இப்போது நான் சொல்வது உனக்கு ருசிக்காது. இதோ பார், யதுகிரி, நான் பார்க்கிறேனோ இல்லையோ, நீ கட்டாயம் பார்ப்பாய். இந்தச் சின்னப் பாட்டுக்கள் எல்லோராலும் புகழப்படுவதையும், துதிக்கப்படுவதையும் நீ பார்க்கப் போகிறாய். இன்னும் தமிழுலகம் கண் திறக்கவில்லை. திறந்தாலும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது."

இப்படிச் சொல்லிவிட்டு, "இந்தா, பாட்டு எழுதிய காகிதம்!" என்று என்னிடம் காகிதத்தைக் கொடுத்துவிட்டு ஒருமுறை பாடியும் காண்பித்தார். இந்தப் பாட்டின் முதல் சரணத்தின் கடைசி அடி நான் மனனம் செய்தது "வான ஒளியின் மதுவின் சுவையுண்டு" என்று. அச்சில் வெளிவந்திருப்பதோ "வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு" என்று இருக்கிறது. ஒரு வேளை பாரதியே பிற்பாடு மாற்றியிருக்கலாம்.

உங்களுக்கென்று 'சிட்டுக்குருவி' பாடலை இங்கே கொடுத்திருக்கிறோம். அதில் பொதிந் திருக்கும் சிட்டுக்குருவிகளின் வாழ்வு பற்றிய அரிய செய்திகளைப் படித்து இன்புறுங்கள்.

விட்டு விடுதலை யாகி நிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே (விட்டு)

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாதவோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

முற்றத்திலேயுங் கழனி வெளியிலு
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

கரும்புத் தோட்டத்திலே:
பிஜித் தீவில் இந்தியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்திருந்தாராம். அதைத் தமிழ்க் கவிதை செய்யும்படி பாரதியாரைப் பத்திராதிபர்கள் கேட்டார்கள். ஒரு நாள் சாயங்காலம் ஐயர் (வ.வெ.சு.ஐயர்) என் தகப்பனார் (ஸ்ரீ.ஸ்ரீ.ஆச்சாரியார்) நான் மூன்று பேரும் பாரதியாரின் வீட்டிற்குப் போயிருந்தோம். அப்போது பாரதியார் "வாருங்கள், ஏது திரிமூர்த்தி தரிசனம்" என்று வரவேற்றார். பிறகு பாரதி தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பது பற்றி பேச்சு வளர்கிறது.

பாரதி சொன்னார்: "நம் இந்து அடிமைகள் பிஜித் தீவில் படும் கஷ்டத்தைப் பற்றி யாரோ பிரசங்கம் செய்திருக்கிறார்களாம். அந்த அடிமைகளின் நிலைமையை விளக்கிக் கவிதை செய்து அனுப்பும்படி கேட்டிருக்கிறார்கள்."

வ.வெ.சு.ஐயர்: "பாட்டுக்கு என்ன பெயர் வைத்தீர்? பிஜித்தீவு உங்கள் பாட்டால் பிரசித்தியாகிவிடும்."

"அதை நினைத்தே 'கரும்புத் தோட்டம்' என்ற பெயரிட்டிருக்கிறேன் அந்தக் கவிதைக்கு. பாட்டைக் கேளுங்கள் என்று, "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாடலைப் பாடினார் பாரதியார். அந்தப் பாட்டைக் கேட்டதும் என் மனத்தில் ஏற்பட்ட துக்கத்திற்கு அளவே இல்லை. பாரதியார் என்னைப் பார்த்து, "ஐயோ, பைத்தியம்! ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நீ ஏன் அழுகிறாய்?" என்றார்.

அதற்கு வ.வெ.சு.ஐயர், "எங்கள் கண்களிலேயே நீர் பெருகும்போது பெண் குழந்தை அவள் என்ன செய்வாள்? அவள் அழுவதில் அதிசயம் இல்லை.... அரசாங்கத்தார் மீட்க முடியாது என்று சொல்லி விட்டார்களா?" என்று கேட்டார். அதற்கு என் தந்தை சொன்னார் "அதற்கே பாரதி தெய்வங்களிடம் முறையிட்டிருக்கிறார்" என்று.

வ.வெ.சு.ஐயர்: "போக்கிரித்தனம்! நம் நாட்டு ஜனங்களை நயவஞ்சகமாகப் பேசி, லாபம் காட்டி அந்தத் தரகர்கள் அழைத்துப் போய் இரக்கமில்லாமல் நடத்துவது பழிக்கத் தக்கது!"

பாரதி: "நீர் நூறு வருஷத்திய மனிதர். இனி ஏற்றுமதியாகும் ஜனங்களைத் தடுக்கலாமே ஒழிய அந்தத் தீவில் அகப்பட்டவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தேன். ஒரு 'கிருஹஸ்தன்' சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஆபீசுக்குப் போயிருக்கிறான். அவன் சம்சாரம் வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையுடன் உட்கார்ந்திருக்கிறாள். அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஓர் ஆள் வந்து சீட்டு ஒன்றைக் கொடுத்தானாம். அதில், "உன் புருஷன் சாகும் தருவாயில் இருக்கிறான். உடனே வா" என்று இருக்கிறது. இவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு முன்பின் யோசனை இல்லாமல் புறப்பட்டாள். அந்த நீசன் ஒரு மணிக்குப் புறப்படும் கப்பல் துறைமுகத்திற்கு அவளை அழைத்துச் சென்றான். "கப்பலுக்கு எதற்காக வந்தார்?" என்று கேட்டாளாம் அவள். "ஆபீஸ் அதிகாரி கப்பல் தலைவனுக்கு ஒரு காகிதம் கொடுத்தனுப்பினார், கப்பலுக்கு வந்து கம்பிப்படிகளில் ஏறும்போது தலைசுற்றி விழுந்து மண்டை உடைந்தது" என்றானாம் அவன். அந்தப் பெண் அதையும் நம்பிக் கப்பலில் ஏறினாளாம். மேல் மாடிக்குப் போவதற்குள் கப்பல் புறப்பட்டுவிட்டது. அங்கே இவளைப்போல் அநேகம் பெண்கள் இருந்தார்களாம். எல்லோரும் கப்பல் நகர்ந்தவுடன் அழுதார்களாம். ஏன் என்று இந்தப் பெண் கேட்க, "நாம் அடிமைகள், பிஜித்தீவில் இருக்கும் அடிமைகளுடைய சுகத்திற்காக நாம் நாசம் செய்யப்பட்டோம்!" என்று கதறினார்களாம். இப்படி எவ்வளவு குடும்பங்கள் நாசம் செய்யப்பட்டனவோ!"

"அந்த புருஷன் விஷயம் என்ன ஆயிற்று? ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார் ஐயர்.

அதற்கு பாரதி "வீட்டின் வீதிப் பக்கத்து ஜன்னலில் ஒரு துண்டுக் காகிதத்தில் "எனக்கு உன் ஏழ்மைத் தனத்தில் இருக்க முடியாது. நான் பெரிய பதவியை அடையப் போகிறேன். என்னை மறந்து விடு!" என்று இருந்ததாம். அவன் போலீசில் பிராது கொடுத்தானாம். அந்தப் பெண் இந்தத் தேசத்தைவிட்டுக் கடல்மேல் போனபின் எங்கே தேடுவது? முடிந்தது கதை."

"நியாயமான வழியில் உண்மையைச் சொல்லிப் பணம் கொடுத்து அழைத்துப் போகக்கூடாதா? இது தப்பு வழி! கேட்பார் இல்லையா?" என்றார் என் தந்தை.

"அது முடியாது. எவ்வளவு ஏழ்மை, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஆண்கள் வெளியில் செல்வார்களே ஒழிய, பெண்களை அனுப்ப ஒப்பமாட்டார்கள்; அதுவும் கண்காணாத இடங்களுக்கு. பிஜித் தீவிலுள்ள இந்தியர்களிடையே போதுமான அளவு பெண்கள் இல்லை; அதற்காக அந்தத் தீவு அதிகாரிகள் இப்படி அநீதி செய்கிறார்கள்" என்றார் ஐயர். பாரதி சொன்னார்: "ஒரு தப்பு என்றால் யோசிக்கலாம். தலைக்கு மிஞ்சியது துக்கித்துப் பயன்?" அப்போது அங்கிருந்த நான் கேட்டேன், "கப்பல்காரனை அவ்வளவு பெண்களும் கேட்டுக் கொண்டால் விடமாட்டானா?"

பாரதி சொன்னார்: "அவன் யமகாதகன்! இந்தத் தேசத்துப் பெண்களையே பிடித்துப் பணங்கொடுத்து மோசமாக அழைத்துப் போய்விடுகிறான். அதிகமாகச் சொன்னால் சாட்டையடி!"

"எல்லோரும் சமுத்திரத்தில் குதித்துவிட்டால்? எல்லோரையும் இப்படித்தான் செய்கிறார்களா?" நான்.

"இல்லை, சில அனாதைகள், சோற்றுக்கு இல்லாமல் தவிக்கும் பெண்கள், படிப்பில்லாத மூடப் பெண்கள் எல்லோரையும் ஓர் இடத்தில் சேர்த்து மூன்று நான்கு மாதத்திற்கு ஒரு தரம் ஏற்றுகிறார்கள். அவன் பேச்சின் மயக்கத்தில் பூலோக நரகமாக இருக்கும் இடம் சுவர்க்கமாகத் தோன்றும்"

அப்போது என் அப்பா "யதுகிரிக்கு என்ன தெரியும்? நீர் எதையாவது சொன்னால், அதே கிலி பிடிக்கும் அவளுக்கு" என்றார். அதற்கு ஐயர் "கொஞ்சம் கஷ்டங்களையும் குழந்தைகளுக்குக் காட்ட வேணும். கோழை நெஞ்சு என்று மூடிவைத்தால் பின்னர் கஷ்டமாகும்" என்றார். பாரதி சொன்னார்: "முன்வரும் கஷ்டங்களைக் குழந்தைகளின் மனத்திற்குக் காட்டக்கூடாது. நம் பெருமையைக் காட்டினால் கஷ்டம் வந்தாலும் தடுக்கும் சக்தி பகவான் கொடுக்கிறார்" என்றார். "யதுகிரி நீ பயப்படாதே, என் பாட்டால் காளி, அந்தப் பெண்களின் அடிமைத்தனம் விலகிப் போகும்படி செய்வாள். நீ சென்று செல்லம்மாவைக் கேட்டு ஜலம் கொண்டு வா. நம் வீடுகளில் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். ஏதோ ஒரு மூலையில் நடக்கும் விஷயத்துக்கு நீ கவலைப்பட வேண்டாம், எங்கே சிரி! பார்க்கலாம்" என்று என்னைத் தேற்றி அனுப்பிவிட்டார்.

நீங்கள் தெரிந்துகொள்வதற்காக அந்தப் பாடலை இங்கே கொடுத்திருக்கிறோம். படித்து பிஜித்தீவில் நடந்த கொடுமைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே.

கரும்புத் தோட்டத்திலே - அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே - ஹிந்து மாதர்தந் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய்
சுருங்கு கின்றனரே - அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற் கிலையோ - செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றா ரந்தக் (கரும்பு)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு பேயுமிரங்கு மென்பார் தெய்வமே - நின
தெண்ண மிரங்காதோ - அந்த ஏழைக ளங்கு சொரியுங் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே யங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றா ரந்தக் (கரும்பு)

நாட்டை நினைப்பாரோ - எந்த நாளினிப் போயதைப் பார்ப்பதென்றே யன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர் விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக் கேணியிலே யெங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டு முரையாயோ? - அவர் விம்மி யழவுந் திறங்கேட்டுப் போயினர் (கரும்பு)

நெஞ்சங் குமுறுகிறார் - கற்பு நீங்கிடச் செய்யும் கொடுமையிலே யந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப் பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? ஹே! வீர கராளி! சாமுண்டி காளி!! (கரும்பு)

புயற்காற்று.
நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி (16-11-1916) புதன்கிழமை நல்ல நாளில் பாரதியார், தான் முதலில் குடியிருந்த பழைய இடியும் நிலையிலிருந்த வீட்டிலிருந்து ஈஸ்வரன் தர்மராஜா வீதியின் கடைசியில் இருந்த ஒரு மாடி வீட்டிற்கு குறைந்த வாடகைக்குக் குடியேறினார். அந்த வருஷம் ஐப்பசி மாதம் மழை இல்லாமல் ஜனங்களெல்லாம் 'ஆ, ஆ' என்று அலைந்தார்கள். ஆனால் கார்த்திகை மாதத்திலோ புயலும் மழையும் அடித்தன! பாரதியார் புதுவீட்டிற்குக் குடிபோன அன்று மாலை சுமார் நாலு மணியிலிருந்தே மேகக்கூட்டங்கள் குவிந்து குவிந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன. எங்கள் வீடு வெயிற் காலத்தில் சுகமாக இருக்குமே ஒழிய மழைக் காலத்திற்குச் சுகமில்லை. எல்லா இடங்களிலும், சாரல் அதிகமாக இருக்கும். இரண்டு மெத்தைகளுக்கு நடுவிலே இருக்கும் பள்ளமான அறை, வீதிப்புறம் இருக்கும் அறை, தொட்டில் இருக்கும் அறை - இவை மூன்றே நனையாத இடங்கள். மற்ற இடமெல்லாம் தெப்பமாகிவிடும்.

நாங்கள் மாலை ஏழு மணிக்குச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மாடிக்குச் சென்றோம். என் தாய் கீழேயே இருந்தாள். இரண்டு பெஞ்சுகள், அவற்றில் நான், என் மடியில் என் குழந்தை (இந்த நிகழ்ச்சி நடந்த காலத்தில் யதுகிரி திருமணமாகி குழந்தையோடு இருந்தார்) பக்கத்தில் தங்கைமார் இருவர், தகப்பனார் ஆகியோர் உட்கார்ந்திருந்தோம். எட்டு மணி சுமாருக்கு மழை ஆரம்பமாயிற்று. கடுமையான மழை. பாகவதத்தில் இந்திரன் மழை பொழியச் செய்ததைப் படித்திருந்தோம். இப்பொழுது அதை நேராகவே பார்த்தோம். இடியின் ஓசை வீட்டையே அதிரச் செய்தது. மின்னலின் வீச்சு கண்ணைப் பறித்தது. புயல் காற்றும் வீசத் தொடங்கிற்று.

சுண்டு விரல் பருமனுக்கு மழை தாரைதாரையாகப் பொழிந்தது. வீட்டின் ஒரு பக்கத்துச் சுவர் ஒரே நேராகப் பெரிய மதில் சுவர்போல் இருந்தது. ஒரே நெட்டாகச் சுவர் எழுப்பக் கூடாதென்று ஒரு சட்டம் உண்டாம். அந்தச் சட்டத்திற்கு விரோதமாக, நேராகச் சுவர் எழுப்பி அந்த வீட்டைக் கட்டியிருந்தார்கள். பழையக் கட்டிடம். எஜமான் இல்லை. எஜமானி இருந்தாள். அவள் வாடகைப் பணத்திற்கு எஜமானியே தவிர விட்டை ரிப்பேர் செய்வதில் அவளுக்கு அக்கறை இல்லை.

இடி இடிக்கும் போதெல்லாம் வீடு கிடு கிடு என்று நடுங்குவது போல் இருந்தது. கிழக்குப் புறத்துச் சுவர் பெரிய கண்ணாடி ஜன்னலுடன் கூடியது. அந்தச் சுவர் இரவு சுமார் பன்னிரண்டு மணி சமயத்தில் மளமளவென்று இடிந்து விழுந்தது. மேற்குப் புறத்துச் சுவர் அருகில்தான் நாங்கள் ஒதுங்கி இருந்தோம். அந்தச் சுவரும் தலைமேல் விழுந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கினோம். என் தந்தை சொன்னார், "இந்தப் பெரிய சுவர் விழுந்தால் நாமெல்லாம் நசுங்கி உருத் தெரியாமல் போய்விடுவோம். ஆனால் பெருமாள் அருளால் அது விழாது." கீழே என் தாய் என்ன ஆனாளோ என்ற திகில் வேறு எங்களை ஆட்டி வைத்தது. அருகில் பேசினால்கூட காதில் விழாதபடி பேய்க்காற்று! கொல்லைப்புறச் சுவரும் இடிந்து விழுந்து விட்டதாகத் தெரிந்தது. இரவெல்லாம் ஒரே பயங்கரம்.

விடியற்காலம் ஐந்து மணிக்கு மேல் எல்லா அமளியும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. முற்றும் அமளி அடங்கிய பின் வீட்டைச் சுற்றிப் பார்த்தபோது கடிகாரம், படங்கள் முதலியன சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கிடப்பதைக் கண்டோம். காலை ஆறு மணிக்கு மேல் வெளியே வந்து பார்க்கிறோம். தெருவில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது! நாங்கள் இருந்த வீட்டிற்கு ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு பெரிய சாக்கடை. அது நிறைந்து வழிந்து தெருவில் ஓடுகிறது. எங்கே பார்த்தாலும் விழுந்த மரங்களின் கூட்டம்! தென்னை, பூவரசு முதலிய மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன. மின்சாரக் கம்பங்கள், கம்பிகள் தாறுமாறாகக் கிடந்தன.

காலையில் நாங்கள் மாடியிலிருந்து கீழே வந்ததும் என் தாய், "எல்லோரும் உயிரோடு இருக்கிறீர்களா?" என்று முதல் கேள்வி கேட்டாள். ஆறரை மணி சுமாருக்கு ஐயர், பாரதியார் இருவரும் வந்தார்கள். "எல்லோரும் க்ஷேமமாக இருக்கிறீர்களா? வீடு, சாமான்கள் போனால் போகட்டும், உயிர் பிழைத்திருந்தால் போதும்" என்றார்கள். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது ஐயர் என்னைக் கூப்பிட்டு, "யதுகிரி! உங்களால் ஆனதைச் சரி செய்துகொண்டு சமையல் முதலியவற்றைக் கவனியுங்கள். வெளியில் ஏழைகளின் நிலைமை வெகு கஷ்டமாக இருக்கும். எங்களாலான உதவியைச் செய்து வருகிறோம். அம்மாவை எங்கும் ஸ்நானத்திற்குப் போக வேண்டாம் என்று சொல். வெளியில் பிணங்கள் மிதந்து வருகின்றன. இந்த அவாந்தர நிலை குறைந்த பிறகு ஸ்நானம் செய்யலாம். நீங்களும் வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

நாங்கள் அவர் சொல்லியபடியே இருந்தோம். ஆனால் என் தாய் என்ன சொல்லியும் கேளாமல் குளத்தில் குளித்துவிட்டுப் பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள். சுதேசிகள் முதலில் தங்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு, நாகசாமி முதலிய நாலைந்து பேர்களைத் தண்டலுக்கு (நிதி வசூல் செய்ய) அனுப்பினார்கள். குடிசைகளில் சிக்கி மடிந்த வர்களை எடுத்துப் போட்டார்கள். அடிபட்டவர்களை வீடு வாசல் எல்லாம் இழந்து தவிப்பவர்களை ஒருங்கு சேர்த்தார்கள். அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை செய்தார்கள். மடிந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய ஏற்பாடு பண்ணினார்கள். தண்டல் செய்து வந்தவர்களில் ஒருவரை ஈசுவரன் தர்மராஜா கோயிலில் கூழ் காய்ச்சும்படி ஏற்பாடு செய்தார்கள். இவர்களோடு புதுச்சேரியில் இருந்த பரோபகாரிகளும் சேர்ந்துகொண்டார்கள். சாய்ந்த தென்னை மரங்களின் மட்டைகளை ஓரிடத்தில் சேர்த்து ஓலையாக வேயும்படி செய்தார்கள். சிலரை மண் கலந்து சுவர் எழுப்பிக் குடிசை கட்டும்படி செய்தார்கள். குடிசைகள் கட்டி முடியும்வரை யாரும் சோம்பேறித்தனமாகக் காலம் கழிக்கும்படி விடாமல் கண்ணாய்க் காவல் காத்தார்கள். வேலைகளை ஆளுக்கு இவ்வளவு என்று பகுத்துக் கொடுத்துத் தாங்களும் அவர்களுடன் வேலை செய்தார்கள்.

இவ்வளவுக்கிடையிலும் பாரதியாரின் இயற்கை ரசனை குறையவில்லை. அவர் சொன்னர்: "இதோ பார் யதுகிரி! தலை நரைத்த கிழவி ஒருத்தி நான் தென்னம் ஓலை வேய்வதைக் கற்றுக் கொண்டிருந்தபோது, என்னிடம் வந்தாள். "அப்பேன்! என் வீடு விழுந்து விட்டது. கரைந்தும் பெருகியும் போய்விட்டது. திக்கில்லை. கண்ணும் தெரிவதில்லை. என் பாகத்திற்கு நீயே கட்டிக்கொடு அப்பா! உனக்குப் புண்ணியம் வரும்" என்றாள். நான், "எது உன் வீடு அம்மா?" என்று கேட்டேன். அவள் சுவர், கூரை, கதவு ஒன்றுமே இல்லாத வாசல் சட்டம் ஒன்றைக் காட்டினாள். அதைப் பார்த்துவிட்டு நான் உரக்கச் சிரித்தேன். அதற்கு அவள், "காற்று மழைக்குமுன் என் வீட்டை நீ பார்த்திருந்தால் இப்படிச் சிரிக்க மாட்டாய். அதன் அழகைக் கண்டு மகிழ்ந்திருப்பாய். இன்று விழுந்துவிட்டது. சிரிக்கிறாய். இந்த உடலும் ஒருநாள் அதே மாதிரித்தான் ஆகப்போகிறது. எல்லாம் யமனைப் போன்ற காற்றின் கோலம்!" என்றாள். எனக்கு இரக்கமாய்ப் போய்விட்டது. 'அவள் சொல்வதும் உண்மை. உயிர்போன பிறகு எச்சம் எலும்புக்கூடுதானே?' என்பது சட்டென்று என் மனதில் உறுத்தியது. "ஆகட்டும் ஆயா! கட்டித் தருகிறேன்" என்றேன். எல்லோருமாகக் கட்டிக் கொடுத்தோம்".

பாரதியார் கூறிய மேற்குறித்த விஷயம் மறுநாள், 'சுதேசமித்திர'னில் பாரதியாரின் வியாசத்தில் பிரசுரமாகியது. சங்கராச்சாரியாரின் "மாயை நீங்கினால் நிர்வாணம்" என்பதற்கு அன்று பொருள் கண்டேன். "காற்றில்லா விட்டாலும் வெறும் சட்டம், காற்று மிதமீறினாலும் வெறும் சட்டம்" என்றார் பாரதியார். தர்மராஜா கோயிலில் சுமார் ஒரு மாதம் வரையில் ஏழைகளுக்கு வயிறார இரண்டு வேளை கூழ் வார்க்கப்பட்டது. சுதேசிகள் ஒரு மாதம் வரை கூலிகளோடு உழைத்தார்கள்.

இதற்குப் பிறகு எங்கள் வீட்டைச் சீர்திருத்த ஏற்பாடு நடந்தது. வீட்டு வேலை நடந்து கொண்டிருந்த போது புதுச்சேரி முழுவதுமே இடிந்த வீடுகள் புதுப்பிக்கப்பட்டு வந்தன. பாரதியார் "திக்குகள் எட்டும் சிதறி" என்று மழை பெய்வதைப்போல அப்படியே அபிநயத்தோடு பாடிக் காண்பித்தார்."

அன்பர்களே! உங்களுக்காக பாரதியாரின் அந்த இடி, மழை, புயல் இவற்றைப் படம்பிடித்துக் காண்பிக்கும் பாடல்களைத் தருகிறோம். படித்துப் பாருங்கள்:

புயற்காற்று
(நள வருஷம் கார்த்திகை 8-ம் தேதி (1916-17) புதன்கிழமை இரவு.)
ஒரு கணவனும் மனைவியும்:
மனைவி: காற்றடிக்குது, கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே!
தூற்றல் கதவு சாளர மெல்லாம்
தொளைத் தடிக்குது பள்ளியிலே.

கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு
தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம்.

மனைவி: நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேர மிருந்தால் என்படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமை யன்றோ!

மழை

திக்குக்கள் எட்டும் சிதறி தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது தாம்தரிகிட
தக்கத் ததிங்கிடதித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கையடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிடத்தாம் தரிகிடதாம் தரிகிடதாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல், கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்; - திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

புதுச்சேரியை விட்டு வெளியேற்றம்:
நான் புதுவையிலிருந்த சமயம், செல்லம்மா தம் தம்பிக்குக் கல்யாணம் என்று முன்னேற்பாடுகளுக்காகத் தமது சொந்த ஊரான கடையத்துக்குப் போய்வந்தார். அவர் போயிருந்த ஒரு மாதமும் பாரதி மெளன விரதம் அனுஷ்டித்தார். எங்கள் வீட்டுக்கும் வருவதில்லை. நானும் முன்போல் போக முடியவில்லை. செல்லம்மா திரும்பி வந்த சில தினங்களுக்குள் அவரது தகப்பனார் இறந்து விட்டதாகத் தந்தி வந்தது. அப்பொழுது தங்கம்மா, சகுந்தலா இருவரையும் புதுவையிலேயே விட்டுவிட்டுச் செல்லம்மா மட்டும் கடையம் போனார். குழந்தைகள் எங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்.

செல்லம்மா சில தினங்களிலேயே திரும்பி வந்துவிட்டார். ஆனால் வந்தது முதல் புதுச்சேரியை விட்டு பிரிட்டிஷ் இந்தியாவிற்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை அவருக்கு அதிகமாக இருந்தது. சொந்த ஊரைவிட்டு வந்து இங்கே இப்படிக் கஷ்டப்படுவானேன் என்று உறவினர்களும் தூண்டினார்கள். பாரதியாருக்கும் புதுச்சேரி அலுத்திருந்தது. ஆனால் அவர் திரும்புவதில் இருந்த இக்கட்டுகள் பல.

பாரதியைத் தூண்டுவதற்காக அவரது தம்பி, தங்கை முதலியவர்களைக் கொண்டு அவருக்குக் கடிதம் எழுதும்படி செய்தார்கள். அதற்கும் பாரதி அசையவில்லை. பாரதியைத் தனியே விட்டுச் செல்ல மனமில்லாமல் செல்லம்மாவும் இருந்து வந்தார். புரட்டாசி மாதம் என் குழந்தையைப் பார்க்கச் செல்லம்மா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, "இனி இங்கிருப்பது சாத்தியமில்லை, நாங்கள் கடையம் போய்விடுகிறோம்" என்றார். எப்படிப் போகிறோம் என்பதைச் சொல்லவில்லை. பாரதியார் போவாரென்று நாங்கள் நம்பவில்லை. அவர் புதுவையைவிட்டு வெளியே வந்தால் சிறைவாசம் நிச்சயம் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஐப்பசி மாதம் சுமார் பதினைந்து தேதியிருக்கும் பாரதி, செல்லம்மா, அப்பாதுரை (செல்லம்மாவின் சகோதரர்) மூவருமாக வில்லியனூர்ப் பக்கம் போனார்களாம். வில்லியனூர் தாண்டியதும் போலீசார் பாரதியாரைப் பிடித்துக் கடலூர் ஜெயிலில் சேர்த்தார்களாம். செல்லம்மாவும் அப்பாதுரையும் திரும்பி வந்து புதுவை வீட்டைக் காலிசெய்து, பாக்கிகளைத் தீர்த்து, குழந்தைகளுடன் கடையம் போய்ச் சேர்ந்தார்கள்.

கடலூர் ஜெயிலிலிருந்து பாரதியார் சில நாட்களில் விடுதலையானார். உடனே நேராகப் பட்டணத்துக்கு வந்து எங்கள் வீட்டில் சில தினங்கள் தங்கினார். அப்போது சென்னைக் கடற்கரையில் சில பிரசங்கங்களும் செய்தார். அவருடைய பந்துக்களில் சிலர் அவரைக் கட்டாயப்படுத்திக் கடையத்தில் தனியாக வீடு ஏற்பாடு செய்து, அதில் அவரை இருக்கும்படி செய்து, 'வழிக்குக் கொண்டுவர வேண்டும்' என்று பெரும் பிரயத்தனம் செய்தார்களாம்; பலிக்கவில்லை. இதன்பின் சுமார் ஒன்றரை வருஷ காலம் பாரதியாருடைய விஷயங்கள் எனக்குத் தெரியாது. 'சுதேசமித்திர'னில் அவருடைய வியாசம் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பேன். பாக்கி விஷயம் ஏதும் தெரியாது.

இறுதிக்காலம்:
ரெளத்திரி வருஷம் சித்திரை மாதம் புதுவையிலிருந்து ஐயர், ஐயா (என் தந்தை) எல்லோரும் வந்தார்கள். யுத்தம் நின்றவுடன் இவர்களுக்கும் 'விடுதலை' கிடைத்தது. ஐயருக்கு விடுதலை வரும்வரை தாம் புதுவையிலேயே இருப்பதாக என் தகப்பனார் முடிவு செய்திருந்தார். இப்போது இருவரும் புதுவையைவிட்டு வெளியேறினார்கள். அரவிந்தர் ஒருவரே புதுவையில் தங்கினார்.

கொஞ்ச நாளைக்கெல்லாம் புதுவை மூவரான பாரதி, ஐயர், என் தந்தை மூவரும் மறுபடி சென்னையில் ஒரே ஊரில் வாழ்ந்து வந்தார்கள். பாரதியார் 'சுதேசமித்திரன்' காரியாலயத்திலும், ஐயர் 'தேசபக்தன்' காரியாலயத்திலும், என் தந்தை தாம் முன்பு செய்து கொண்டிருந்த வியாபாரத்திலும் ஈடுபடலானார்கள்.

ஐப்பசி மாதக் கடைசியில் நான் மைசூரிலிருந்து சென்னைக்கு வந்திருந்தேன். அப்போது செல்லம்மாவும் ஐயரின் மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாளும் என்னைப் பார்க்க வந்தார்கள். ஐயர் அச்சமயம் பார்க் டவுனில் இருந்து வந்ததாக நினைப்பு. பாரதியார் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் வீதியில் இருந்தார். எங்கள் வீடு கோயிலின் வடபுறமுள்ள பேயாழ்வார் கோயில் தெருவில் முன்வாசல் மண்டபத்துக்கு எதிரே இருந்தது.

பாரதியார் தம் வீட்டில் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரைதான் இருப்பார். பிறகு காரியாலயம் போய்விடுவார். சிற்சில நாட்களில் மட்டும் இடைவேளைகளில் வந்துவிடுவார். அந்த நாளில் சென்னையில் ஹிந்திப் பிரச்சாரம் ஆரம்பமாகியிருந்தது. எங்கள் வீட்டு மாடியில் மகாத்மா காந்தியின் புதல்வர் தேவதாஸ் காந்தி எல்லோருக்கும் ஹிந்தியும், தேசியப் பாடல்களும் கற்றுக்கொடுத்து வந்தார். நன்றாக ஹிந்தி அறிந்த பாரதியாரும் இதில் கலந்து கொள்வார். மூன்று மாதக் குழந்தை கைகால்களை ஆட்டி 'ஆவ்' 'ஆவ்' என்னும்போது, பாரதியார் 'ஆவோ, ஆவோ, ஆவோ, ஸகல பாரத குமார்!' என்று பாடுவார்.

அப்போது நாட்டு அரசியலும் கொந்தளிப்பாக இருந்தது. அலி சகோதரர்கள் சென்னை வரும் வழியில் கைது செய்யப்பட்டிருந்தார்கள். (இவர்கள் தலைமையில்தான் 'கிலாபத்' இயக்கம் நடந்தது) அவர்களது தாய் ஒரு வீராங்கனை. அவர் சென்னைக்கு வந்து கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசி முடிந்து கூட்டம் கலையும் சமயம் பாரதி மேடைமேல் ஏறி "ஜய பேரிகை கொட்டடா!" என்று பாடத் தொடங்கினார். கலைந்த பொதுக்கூட்டம் பன்மடங்கு அதிகமாகக் கூடிவிட்டது. அந்தக் காலத்து பொதுமக்களுக்கு பாரதி பாட்டு என்றாலும் பாரதி பேச்சு என்றாலும் உயிர். அவரது குரலிலும் பாட்டிலும் அவ்வளவு கவர்ச்சி இருந்தது. அன்று பாரதியார் பேரிகையின் ஓசையைப்போல் வாயினால் சப்தித்தும் தமது பாட்டாலும் மக்களை மகிழ்வித்தார்.

சித்திரை மாதம், நான் ஊருக்குப் புறப்படுகிற தினம் காலையில் பாரதியார் வந்திருந்தார். அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பாரதி மறுபடியும் வந்தார். நான் அவரை நமஸ்கரித்து, "எங்கள் ஊர்பக்கம் (பங்களூருக்கு) நீங்கள் வருவதில்லையா?" என்று கேட்டேன். அவர், "எனக்கு பங்களூரில் என்ன அம்மா காரியம்? போய்வா அம்மா. நீ மறுபடி வரும்போது நான் எந்த ஊரில் இருப்பேனோ! உன்னை மறுபடி பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்றார். அதுவே அவரை நான் கண்ட கடைசி தடவை.

நான் மைசூரில் இருந்தேன். என் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'பாரதியார் இறந்துவிட்டார்!' என்ற செய்தி இருந்தது. முதலில் நான் நம்பவில்லை. மறுபடியும் என் தகப்பனாரே விவரமாக எழுதியிருந்தார்.

'விதி முடிந்துவிட்டது! தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்!'

1923-ம் வருஷம் நான் மறுபடி சென்னை வந்திருந்தேன். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா மூவரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களைக் காண எனக்கு வருத்தமாயிருந்தது. செல்லம்மா, "யதுகிரி! அவர் பிராணன் போகும்முன்கூட, 'செல்லம்மா யதுகிரி எங்கே இருக்கிறாள்? என்று விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாகச் சொன்னேன். 'எவ்வளவு குழந்தைகள்?' என்று கேட்டார். நம்மைப்போல் இரண்டு பெண்கள் என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருப்பதாகச் சொல்லிவிட்டு, 'அவள் இப்போது எங்கே வருவாள்?' எங்காவது நன்றாக இருக்கட்டும். காலை சீக்கிரம் சமைத்துவிடு. எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்குப் போகவேணும் என்றார். இதெல்லாம் சொன்ன ஒரு மணி நேரத்துக்கெல்லாம் அவர் உயிர் பிரிந்துவிட்டது! என்ன செய்வேன்! அதுவும் ஒரு கூத்தாகி விட்டது! என்றார்.

பாரதியாரை எப்போதும் தன்னையறியாததோர் சக்தி தூண்டும். அவர் பாடும்போது கவிதை தங்கு தடையில்லாமல் கோவையாக வந்து கொட்டும். தாம் செய்த கவிதைகளைக் கண்டு சில சமயம் தாமே அதிசயப்படுவார். அவர் பதம், நடை, இலக்கணம், எதுகை, மோனை என்பவைகளைத் தேடித் தேடி அமைக்கும் கஷ்டம் அவருக்கு இருக்கவில்லை; அவர் ஒரு வரகவி.

ஒரு சிறந்த கவிதை வெளிவர வேண்டுமானால் மனிதன் எவ்வளவு தவம் செய்ய வேண்டும். மனத்தை எப்படி பக்குவம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு பாரதி ஒரு சிறந்த உதாரண புருஷர்! அத்தகைய கவிகள் பல நூற்றாண்டுகளுக்கொரு முறையே தோன்றுவர்! அப்படிப்பட்ட மகான்களைப் பெற்றெடுக்கும் சமூகம் பாக்கியம் செய்த சமூகமே!!

வறுமையின் கிளையில்
வசித்துவிட்டுப் போன
யுகக்குயிலே!

காற்றின் உயிரில்
கலந்துவிட்டது உனது
கவிக்குரல்.

அது - மனித ராசியின்
கடைசிக் காதுவரை
கட்டாயம் கேட்கும்.

ஒரு மகாகவி
பிறக்கப் போகும்
பிரஜைகளுக்கும்
பிரதிநிதியாகிறான்.

மனித குலத்தின்
பயணப் பாதையை
முகவரி தெரியா இருட்டு
மூடும் போதெல்லாம்
ஒரு மகாகவி வந்துதான்
தீக்குச்சி கிழிக்கிறான்.

மகாகவியே!
நெருப்பின் மகனே!

நீ தீக்குச்சியா?
இல்லை, தீப்பந்தம்.

பாரதியின் கவிதைக்கு
வார்த்தையால் அல்ல
வாழ்க்கையால் உரை வரைவோம்.

உனக்கு மரணமில்லை!
கவிஞனும் காற்றும் மரித்ததாய்
ஏது சரித்திரம்?

கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளோடு இந்த மாதப் பாடத்தை நிறைவு செய்கிறோம். மீண்டும் சந்திப்போம்.

. வினாக்கள்.
1. 'சிட்டுக்குருவி' பாடல் உருவான சூழ்நிலை என்ன?
2. 'சிட்டுக்குருவி' யினுடைய வாழ்க்கை பற்றி அந்தப் பாடலில் பாரதி கூறும் கருத்துக்கள் எவை?
3. பிஜித்தீவுக்கு இந்தியாவிலிருந்து பெண்களைக் கடத்திய நிகழ்ச்சி பற்றி பாரதி கூறும் விவரங்கள் என்ன?
4. புதுச்சேரியில் அடித்த புயலின் போது 'சுதேசிகள்' செய்த சேவைகள் எவை? 5. பாரதியார் புதுச்சேரியை விட்டு வெளியேறிய சூழ்நிலையை விளக்குக. 6. பாரதியாரின் இறுதி நாட்களைப் பற்றி யதுகிரி அம்மாள் கூறும் செய்திகள் எவை?

3 comments:

  1. கருததுக்கள் பயனுள்ளதாக இருந்தது

    ReplyDelete
  2. தகவல்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  3. தகவல்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete

You can send your comments