Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

சென்றுபோன நாட்கள்"

"சென்றுபோன நாட்கள்"
ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி
எழுதியவர்: எஸ்.ஜி.ராமனுஜலு நாயுடு

(மகாகவி காலமாகி ஏழெட்டு ஆண்டுகளிலேயே அவருடைய பெருமையை உணர்ந்தவரும், புதுச்சேரியில் அவரோடு பழகியவருமான எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு என்பவர் எழுதி அந்தக் காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த "அமிர்த குண போதினி" எனும் மாத இதழில் 1928ஆம் வருடம் நவம்பர், டிசம்பர், 1929ஆம் வருடம் ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பை "மகாகவி பாரதியார்" எனும் தலைப்பில் நாங்கள் வெளியிடும் இரண்டாவது பகுதி இலவச அஞ்சல் வழிக் கல்வித் திட்டத்தில் முதல் பாடமாக வெளியிடுகிறோம். இந்த கட்டுரை மறுபடி "காலச்சுவடு" அறக்கட்டளை சார்பில் 2006 டிசம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கோவையில் நடத்தப்பெற்ற "உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கம்" நிகழ்ச்சியையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையின் தமிழ்நடை அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதை நினைவில் வைத்துப் படிக்க வேண்டும். இதனை மறுவெளியீடு செய்ய அனுமதித்த காலச்சுவடு அறக்கட்டளையினருக்கு எமது மனமார்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகிறோம். இந்த முதல் பாடம் துவங்கி அடுத்த பனிரெண்டு மாதங்களுக்கு பாரதி பாடங்கள் உங்கள் கரங்களில் தவழும். படித்து, ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலெழுதி பயன்பெறுங்கள்.)

"ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் பறிமுதல் செய்யப்பெற்றுப் பெரும் கிளர்ச்சி எழுந்துள்ள இச்சமயம்* (1928இல் எழுதப்பட்டது) அவரது ஜீவியத்தை வரைதல் பொருத்தமானது. பலர் பலவிதமாக அவரைப் பற்றி வரைந்துள்ளனர். அவருடன் கலந்து நட்பு முறையிலிருந்த வகையில் நமக்குத் தெரிந்தவற்றை இங்கு எழுதுகிறோம். பாரதியாருக்கு ஏற்பட்ட பிரசித்தியெல்லாம் அவர் காலஞ்சென்ற பிறகுதான்; விசேஷமாக அவரது பாடல்களால்தான். அவர் ஆதியில் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராய் இருந்து வந்த நாளில் அவரைத் தெரிந்தவர்கள் மிகச் சொற்பம். உதவி ஆசிரியரின் நிலை திரைக்குப் பின்னிருந்து வேலை செய்து அவ்விதமே ஒழிந்துபோவதாம்! 'மித்திர'னின் உதவி ஆசிரியராய் இருந்து கொண்டே சக்ரவர்த்தினி என்ற மாத ஸஞ்சிகையின் ஆசிரியத்துவத்தையும் ஏற்று, அதை நடத்தி வந்தார். 'மித்திர'னில் *எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும் என்று தொடர்ச்சியாகப் பாடல்கள் எழுதத் தொடங்கினார். 'மித்திர'னில் இதுதான் அவரது முதல் பாடலாகும். இது இப்போது வெளிவந்துள்ள அவரது நூல்களில் சேர்க்கப்படவில்லை. சக்ரவர்த்தினி பத்திரிகையில் அவரால் எழுதப்பட்ட வியாசங்களும் பாடல்களும் புதுமணம் கமழ்ந்து யாவராலும் விரும்பப்பட்டன.

ஃஃஃஃஃஃஃ

(*கட்டுரை ஆசிரியர் எழுதும் காலத்தில் இந்தக் கவிதை எந்த நூலிலும் வெளிவரவில்லை. ஆனால் பிந்நாளில் இது வெளிவந்து சீனி.விஸ்வநாதன் வெளியிட்ட நூலில் காணப்படுகிறது. அந்தக் கவிதையை கற்போர் பயன்பெய வேண்டி இங்கே தந்திருக்கிறோம்)

எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்.

புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ
இன்னலொடு கண்ணீ ரிருப்பாகி விட்டனவே! 1.

ஆணெலாம் பெண்ணாய் அரிவையரெலாம் விலங்காய்
மாணெலாம் பாழாகி மங்கிவிட்ட திந்நாடே! 2.

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே! 3.

வீமாதி வீரர் விளிந்தெங்குப் போயினரோ?
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே! 4.

வேத வுபநிடத மெய்ந்நூல்க ளெல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே! 5.

ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னதுபோய்
வீதி பெருக்கும் விலையடிமை யாயினரே! 6.

செந்தேனும் பாலும் தெவிட்டி நின்ற நாட்டினிலே
வந்தே தீப்பஞ்ச மரபாகி விட்டதுவே! 7.

மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! 8.

பொன்னு மணியுமிகப் பொங்கிநின்ற விந்நாட்டில்
அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனைபேர்? 9.

ஃஃஃஃஃஃஃ

அந்தக் காலத்தில் பாரதியார் தீவிர தேசபக்தராயிருந்தார். எதிலும் நிதானத்தையே யனுசரித்து நின்ற ஸ்ரீமான் ஜி.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் பாரதியார் வேறுபட்டுப் பிரிந்து இந்தியா என்ற தமிழ் வாரப் பத்திரிகையைத் தொடங்கி, அதற்கு ஆசிரியராய் அமர்ந்தார். அப்பத்திரிகயின் சொந்தக்காரர் வேறொருவராவர். பாரதியாரின் தமிழ்நடை அது முதற்கொண்டு ஒரு புதுவழியில் மாறியது. அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகு சிறப்புடனும் திறமையுடனும் எழுதிவரத் தொடங்கினார். சிறுசிறு பதங்களுடன் கூடிய ஒரு நவீன கம்பீர நடை இந்தியா பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளியாகி வந்தது. நாலாயிரம் பிரதிகள் வரை போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு பத்திரிகையிலும் அவ்வார வர்த்தமானத்தின் சார்பாய் ஒரு பெரிய சித்திரம் கண்ணுக்கினிய காட்சியாய் மிக்க அழகுடன் பிரசுரிக்கப்பட்டு வந்தது. அந்தப்படம் இன்னின்னவாறு இருக்க வேண்டுமென்று சித்ரீகருக்குப் பாரதியார் சொல்லுங்காலையில் அப்படத்தின் அம்ஸங்களையெல்லாம் தமது முகத்திலும் அபிநயங்களிலும் காண்பித்து விடுவார். சித்ரீகரின் மனதில் அந்தப் பாவனைகள் நன்கு பதிந்துவிடும். அவ்விதமே சித்திரமும் தயாராகும்.

ஃஃஃஃஃஃஃ

இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிரக வாசகமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்ஸம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய் சட்டவரம்புக்கு உட்பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயமென்று பலர் கூறினர். ஒரு சமயம் பாரதியார் டிராம் வண்டியில் செல்லுகையில், இந்தியா பத்திரிகையைப் படித்த உத்தியோகஸ்தர் மிக்க கோபாவேசமாய் இப்பத்திரிகையின் ஆசிரியரை அவசியம் தண்டிக்க வேண்டுமென்று பாரதியாரிடம் கூறினார். பாரதியார் 'அப்படியா!' என்றார். இந்த ஸம்பவத்திற்குப் பிறகு இந்தியா பத்திரிகை தனக்கென்று ஒரு புது காரியாலயமும் அச்சுக்கூடமும் அமைத்துக் கொண்டு வேறாய்விட்டது. பத்திரிகையே வேறு கை மாறினும் அதன் கொள்கை எப்போதும்போல் இருக்கும் என்று ஒரு தனிக்குறிப்பும் வெளியிடப்பட்டது.

ஃஃஃஃஃஃஃ

இந்தியா பத்திரிகை வரவரக் 'கார'மாகி விட்டது. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் 'பாஞ்சாலி சபதம்' போலி பெருங்காவியமாகத் தொடர்ச்சியாய் பத்திரிகையில் எழுதிவந்தார். அது முற்றும் வீர ரஸமாய் இருந்தது. அதனைத் தனிப் புஸ்தக உருவமாய் வெளியிடுவதற்குப் பாரதியார் விரும்பினார். அது ஆபத்தென அவரது நண்பர்களால் தடுக்கப்பட்டது. இந்தியா பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரியராக இருந்தாரேயன்றி வெளிப்படையாக அன்று. ஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்பவருமென்று பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்றும் இந்தியா பத்திரிகையில் பாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார். 1907ஆம் வருஷத்தில் ஸ்ரீ லஜபதிராயைத் தேசப்பிரஷ்டம் செய்தகாலையில் அவர் தம்மைப் பற்றி இரங்கிப் பிரலாபிப்பதாகப் பாரதியார் இந்தியா பத்திரிகையில் அரிய பாடல்களை வரைந்து அதற்குத் தெளிபொருள் விளக்கமும் குறிப்பிட்டார். அந்த விளக்கம் இப்பொழுது வெளிவந்துள்ள அவரது நூல்களில் இல்லை. பாடல்கள் மட்டுமேயுள்ளன.

(நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக அந்தப் பாடலை இங்கே கொடுத்திருக்கிறோம். கட்டுரையாசிரியர் கூறியுள்ளது போல பாடலுக்கு பாரதி எழுதிய தெளிபொருள் விளக்கம் காணப்படவில்லை)

லாஜ்பத்ராய் பிரலாபம்.

நாடிழந்து மக்களையு நல்லாளை யும்பிரிந்து
வீடிழந் திங்குற்றேன் விதியினையென் சொல்கேனே 1.

வேதமுனி போன்றார் விருத்தரா மெந்தையிரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ? 2.

ஆசைக் குமர நருச்சுனனைப் போல்வான்றன்
மாசற்ற சோதி வதனமினிக் காண்பேனோ? 3.

அன்றிலைப்போன் றென்னை யரைக்கணமே னும்பிரிந்தால்
குன்றிமனஞ் சோர்வாளிக் கோலம் பொறுப்பாளோ? 4.

வீடு முறவும் வெறுத்தாலு மென்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே? 5.

ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளு
நீதிமறை வின்றி நிலைத்த திருநாடு 6.

சிந்துவெனுந் தெய்வத் திருநதியு மற்றதிற்சேர்
ஐந்துமணி யாறும் அளிக்கும் புனனாடு 7.

ஐம்புலனை வென்ற அறவோர்க்கு மாற்றலர்தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரருக்குந் தாய்நாடு 8.

நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கெளரவராம்
புல்லரைச் செற்றாழ்த்த புனிதப் பெருநாடு 9.

கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலிகேட்ட மேன்மைத் திருநாடு 10.

கன்ன னிருந்த கருணைநிலம் தர்மனெனு
மன்ன னறங்கள் வளர்த்த புகழ்நாடு 11.

ஆரியர்தந் தர்மநிலை யாதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு. 12.

வீமன் வளர்ந்த விறனாடு வில்லசுவத்
தாம னிருந்து சமர்புரிந்த வீரநிலம் 13.

சீக்கரெனு மெங்கள் விறற்சிங்கங்கள் வாழதரு நல்
லாக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு 14.

ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ் ஞான தயாநந்தர் திருநாடு 15.

என்னருமைப் பாஞ்சால மென்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ? 16.

ஏதெல்லாம் பாரதத்தே இந்நாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ? 17.

என்னை நினைந்து மிரங்குவரோ? அல்லாது
பின்னைத் துயர்களி லென் பேரு மறந்திட்டாரோ? 18.

தொண்டுபட்டு வாடு மென்றன் தூய பெரு நாட்டிற்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலு மின்புறுவேன் 19.

எத்தனைஜன் மங்கள் இருட்சிறையி லிட்டாலும்
தத்துபுனற் பாஞ்சாலந் தன்னில் வைத்தால் வாடுகிலேன். 20.

ஃஃஃஃஃஃஃ

இவ்விதமே அவ்வப்போது நடந்தேறிய ஸம்பவங்களுக்கெல்லாம் சிறுசிறு பாடல்களை 'இந்தியா' பத்திரிகையில் தமது பெயருடன் வெளியிடுவதானார். வந்தேமாதர கீதத்துக்கு 'இனிய நீர் பெருக்கினை இன்கனி வளத்தினை' என்று தமிழ் பொழிபெயர்ப்பு ஒன்றும் வெளியிட்டார். அப்பாடல்களின் மூலமாக மட்டும் அவர் பெயரைத் தமிழ்நாட்டினர் அறிந்து வந்தனர்.

2

இந்தியா பத்திரிகைக்குப் பாரதி ஆசிரியரென்று எவருமே அறியார். பாரதியாருக்குத் தமிழ்நாட்டிலிருந்த பெயர் இவ்வளவுதான். சென்னையிலுள்ளார் மட்டும் அதிலும் சில முக்கியஸ்தர்கள் மட்டும் உண்மையை உணர்ந்திருந்தனர். தமது பாடல்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஸ்வதேச கீதங்கள் என்று இரண்டணா விலையில் ஒரு புஸ்தகமாக வெளியிட்டார். அதைக் குறித்து இந்தியா பத்திரிகையில் 'சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் அடங்கிய 'ஸ்வதேச கீதங்கள்' வரப்பெற்றோம்' என்று தம்மை அந்நியர் போலக் கொண்டு அதற்கு ஒரு மதிப்புரையும் வரைந்தார்.
ஃஃஃஃஃஃஃ

ஸ்ரீ திலகர் 1907ஆம் வருஷத்தில் புதிய கக்ஷியைத் தழுவிப் பிரஸங்கங்கள் செய்ய, அதில் முதல் பிரஸங்கத்தைப் புதிய கட்சியின் கோட்பாடு என்ற பெயருடன் நூல் வடிவமாக ஆங்கிலமும் தமிழுமாய் ஒரு அணா விலையில் வெளியிட்டார். பாரதியார் புதிய கக்ஷியைத் தழுவி நின்றார். கவிதா சக்தி ஜனங்களிடை பெருக வேண்டுமென்று விஸ்தாரமாக வரைவார். 'சுதேசமித்திரன்' வெள்ளி ஜுபிலி நடந்த காலத்தில் பாரதியாரும் அங்கு வந்திருந்தார். 'மித்திரன்' ஆசிரியரான ஸ்ரீ ஜி.சுப்பிரமண்ய ஐயர் பழைய கக்ஷியையும், புதிய கக்ஷியையும் தழுவி நின்றதில், பாரதியார் தமது இந்தியா பத்திரிகையில் உக்கிரகமாய்க் கண்டனங்கள் வரைந்தார். கண்டனமான படங்களும் வெளியிட்டார். "பால பாரதம்" என்ற ஆங்கில வாரப் பத்திரிகையொன்றையும் வெகு திறமையுடன் நடத்தி வந்தார். 1907ஆம் வருஷத்தில் பரிமளா என்ற நாவலை அச்சிட நாம் சென்னை சென்றிருந்த சமயம் ஒரு கொடிய முறை ஜ்வரத்தினால் வருந்தும்படியாக, பாரதியாரே பரிமளா 'புரூப்'கள் முக்காற் பாகத்தையும் திருத்தி முடிவுசெய்து, அந்த நாவலைப் பற்றி இந்தியா பத்திரிகையின் தலையங்கத்தில் ஆறு கலங்கள்வரை மதிப்புரை வரைந்தார். அதிலே மொழி பெயர்க்குந் தொழிலைக் குறித்தும், தமிழ்மொழியில் ஸம்ஸ்கிருத பதங்களைச் சேர்ப்பதைக் குறித்தும் தமிழின் இயற்கை இனிமையைக் குறிக்கும் 'அங்கனாமணி' என்பதிலும் 'பெண்மணி' என்ற தமிழ்ச்சொல் மிக்க இனிமையுடையது என்றும் விஸ்தாரமாக வரைந்தார்.

ஃஃஃஃஃஃஃ

சூரத்தில் நடந்த காங்கிரஸுக்குப் பாரதியாரும் சென்றிருந்தார். சூரத்தில் காங்கிரஸ் பிளவுபட்டது. பாரதியார் தாம் சென்னையிலிருந்து பிரயாணப்பட்டது முதல் மறுபடியும் சென்னை வந்து சேர்ந்த வரையில் நடந்த விஷயங்களைக் கோர்வையாகத் தொகுத்து இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு, எங்கள் காங்கிரஸ் யாத்திரை என்று ஒரு புஸ்தகமாகவும் இரண்டணா விலையில் பிரசுரம் செய்தார். நூல்கள் யாவும் சொற்ப விலைக்கே உதவப் பட்டன. ஒவ்வொன்றும் புதுச் சுவை, புதுநடை, புதிய அழகு கொண்டு இலங்கின.

ஞானரதம் என்ற தலைப்பெயருடன் தமிழ்நாடு என்றும் கண்டிராத துள்ளிக் குதிக்கும் ஒரு புதிய கந்தர்வ நடையில் இயற்கையின் அழகுகளைப் பற்றியும், தேசச் செய்திகளைப் பற்றியும், நெருங்கிய நண்பர்களின் மனமாறுபாடுகளைப் பற்றியும் அற்புதமான கல்பனையுடன் வாரந்தோறும் இந்தியாவில் எழுதிவந்தார். அவற்றை ஒருங்கு சேர்த்து ஞானரதம் என்று ஒரு புஸ்தகமாக வெளியிட்டார். அதன் விலை அணா எட்டு. அதற்கு இணையான நூல் தமிழ்மொழியில் இல்லை. சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியது. பாச்சுவை பரவிய நடையானமைந்தது.

ஃஃஃஃஃஃஃ

பாரதியின் இந்தியா பத்திரிகை சட்ட வரம்பை மிகவும் மீறி நெருப்பு மழை மொழியத் தொடங்கிற்று. இது பாரதியாரைப் பிடித்த கெட்ட காலம்தான். சாந்தமான நடையில் அவர் சென்றிருந்தால் நாளைக்கும் இந்தியா பத்திரிகை நடக்கக்கூடும். இந்தியா பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது. போலீசார் இந்தியா பத்திரிகையின் காரியாலத்துள் பிரவேசித்துப் பாரதியாருக்கு வாரண்டைக் காண்பித்தனர். தாம் ஆசிரியரல்லவென்றும் தமது பெயர் வாரண்டிலில்லையென்றும் கூறிக்கொண்டிருக்கையில் இந்தியா பத்திரிகையை வெளியிடுபவரான ஸ்ரீநிவாஸன் என்பவர் அங்குற்று "என்ன?" என்றார். போலீசார் அவரே ஆசிரியராகப் பதிவு செய்யப்பெற்றவரென்று அறிந்து அவரைக் கைது செய்தனர். விசாரணை காலத்தில் ஸ்ரீநிவாஸன் தாம் ஆசிரியரல்ல என்றும் பாரதியாரே உண்மை ஆசிரியரென்றும், தாம் ஒரு குமாஸ்தா போலவே இருந்து வந்ததாயும் தமக்கு வியாஸம் எழுதச் சக்திகூடக் கிடையாதென்றும் தெரிவித்துக் கொண்டார். ஆயினும் அவருக்கு ஐந்து வருஷ கடினகாவல் சிக்ஷை விதிக்கப்பட்டது. பாரதியாருக்கும் வாரண்டு பிறந்தது. அதற்குத் தப்பிப் பாரதியார் புதுச்சேரி போய்ச் சேர்ந்தார்.

ஃஃஃஃஃஃ

இது சம்பந்தமாக சுதேசமித்திரன் 16-11-1908இல் துணையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டிருந்தது.

"சென்னையிற் பிரசுரமாய் வந்த இந்தியாவென்ற வாராந்தத் தமிழ்ப் பத்திரிகையில் சென்ற மார்ச்சு மாதம் முதல் ராஜத்துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதாக அதன்பேரில் ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டி, அதை அச்சிட்டுப் பிரசுரப் படுத்துவோரான (Printer and publisher) ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்காரைக் கைதிப்படுத்தி, விசாரணை செய்ததில், ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ தீபாந்திர சிக்ஷை விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாகக் கவர்ன்மெண்டார் யாரை நினைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து விசாரணைக்குக் கொண்டு வருவதும் ஜட்ஜுகள் கொடுந்தண்டனை விதிப்பதும் இப்போது சாதாரணமாய்விட்டது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அவசியமென்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், ராஜத்துவேஷக் குற்றஞ் செய்கிறவர்கள் படித்தவர்களாயும் கெளரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர்களிடத்தில் கவர்ன்மெண்டாரும் ஜட்ஜுகளும் அவ்வளவு கொடுமை காட்டாமல் இருக்கக்கூடும். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை யெழுதினவரல்ல; எழுதினவரும் அந்தப் பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார்கள். ஸ்ரீநிவாஸய்யங்கார் பெயர் போலீஸ் கமிஷனர் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர் அகப்பட்டுக் கொண்டாரேயன்றி, குற்றத்துக்கு முதல் உத்திரவாதம் அவர் பேரில் தாங்கியதல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்குக் கொடுந் தண்டனை விதிக்காமல் இலகுவான தண்டனை விதித்திருக்கக்கூடும் அல்லது இந்தியா பத்திரிகையில் ராஜத்துவேஷக் குற்றமுள்ள வியாஸங்கள் தோன்றின துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால், இப்போது ஓடிப்போயிருக்கிற எடிட்டரும் புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாஸங்கள் தோன்ற இடங் கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்."

ஃஃஃஃஃஃஃ

தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும். தண்டனையடைந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொண்டாரென்று ஒரு வருஷத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக வதந்தி. பாரதியார் சென்னையை விட்டுப் போனதற்குப் பிறகு இந்தியா பத்திரிகையும் சென்னையில் நின்றுவிட்டது. பாரதியாரின் அதிர்ஷ்ட காலமும் சென்னையின் பிரபல வாழ்க்கையும் இத்துடன் பூர்த்திபெற்றது. இனி, தமது அந்திய காலத்தின் எஞ்சிய சில நாட்களைக் கழிப்பதற்குத்தான் பத்து வருஷங்களுக்கு மேற்பட்டு பாரதியார் புதுச்சேரியிலிருந்தும் சென்னைக்கு மறுபடியும் வருபவராகிறார்.

3

"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்ற வாக்கியம் பாரதியாருக்குப் பொருந்தும். புதுச்சேரிக்குப் பாரதியார் வெறுமனே வந்து விடவில்லை. இந்தியா பத்திரிகையின் வியாஸங்கள், கணக்குப் புஸ்தகங்கள் யாவற்றுடனும் வந்து குதித்தார். புதுச்சேரியிலும் தமிழன்பர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். சென்னையில் பயந்து நின்ற ஒரு தன்மை புதுச்சேரியில் அவரை விட்டு நீங்கிவிட்டது போலுங் காண்கிறது. இந்தியா பத்திரிகையைப் புதுச்சேரியிலிருந்தும் தொடங்கிவிட்டார். அங்கும் தமது பெயரை ஆசிரியராகக் காண்பித்துக் கொள்ளவில்லை. சென்னையில் ஸ்ரீநிவாஸன் என்பவரைத் தெரிந்தெடுத்ததுபோல் புதுச்சேரியிலும் ஒருவரைத் தெரிந்தெடுத்து அமைத்து விட்டார். இந்தியா பத்திரிகை சென்னையில் நடைபெற்றதைவிட இன்னும் 'கார'மாகவும் வியாபகமாவும் நடைபெறலானது. இந்தச் சமயம் பாரதியார் விஜயா என்ற ஒரு தினசரித் தமிழ்ப் பத்திரிகையையும் தொடங்கிவிட்டார். அதுவும் பிரபலப்பட்டு விட்டது. காலந்தவறாமல் வெளிவந்தவாறு இருந்தது. விஜயாவில் பிரதி தடவையும் சித்திரப் படங்கள் பதிப்பிக்கப் படலாயின. அந்தப் படங்களையும் அதிலுள்ள வியாசங்கள் பெரும்பான்மையையும் அப்படியே எடுத்து இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு, இந்தியாவின் உருவையும் இரட்டிப்பாக்கி விட்டார். சென்னை இந்தியா பத்திரிகையில் ஒரு தடவைக்கு ஒரு படமாய் வரப்போக, புதுச்சேரி இந்தியாவிலோ பக்கங்கள் முற்றிலும் படங்களாகவே திகழ்ந்தன. வாசக நடையும் உக்கிரகமானது. பாரதியாரின் பாலபாரதம் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையும் புதுச்சேரியில் நடைபெற்று வந்தது. இத்துடன் கர்மயோகி என்ற மாதப் பத்திரிகையொன்றும் தாமே ஆசிரியர் என்று புலப்படுத்திக் கொண்டு புது முறையில் வெளியிடத் தொடங்கினார்.

ஃஃஃஃஃஃஃ

சென்னையிலிருந்தகாலை பாரதியார் 'வந்தேமாதரம்' என்ற கீதத்துக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாக இனிய நீர்ப் பெருக்கினை இன்கனி வளத்தினை என்று தமிழ் மொழிபெயர்ப்பை இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு, அதை ஸ்வதேச கீதங்கள் என்ற நூலிலும் சேர்த்தார். புதுச்சேரியில் கர்மயோகிப் பத்திரிகையைத் தொடங்கியதும் அதன்முதல் ஸஞ்சிகையில், முந்திய மொழிபெயர்ப்பு அத்தனை தெளிவும் சுலபமுமாயில்லையென்று நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந்தென்றலும் என்று வேறொரு மொழிபெயர்ப்பினை இன்னும் சுவையமுதம் பெருகுமாறு வெளியிட்டார். இப்பாடலையும் வேறு சில கீதங்களையும் சேர்ந்து ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாகமாக ஜன்மபூமி என்ற பெயரால் வெளியிட்டார். அதன் பின்னர், இன்னும் அநேக புதிய பாடல்களுடன் மாதா வாசகம் என்ற மற்றொரு நூலையும் வெளியிட்டார். இது தென்னாப்பிரிக்காவில் அச்சிடப்பட்டதாக ஞாபகம். ஆக மூன்று கீத நூல்கள் பிரகடனமாயின. அதன் பின்னர் பாஞ்சாலி சபதம் என்ற அரிய நூலினை முதற் பாகமாக வெளியிட்டார். அதிலுள்ள ரஸத்தை என்னென்று புகழ்வோம்! அதற்கு நிகர் அதுவே நிகர். அதன் இரண்டாம் பாகம் பாரதியாரின் நாளில் வெளிவரவில்லை. பின் பாலகர்களுக்கென முரசு, பாப்பா பாட்டு என்று சிறு நூல்களைக் காலணா விலையில் வெளியிட்டார். அவை இரண்டும் இரு தங்க விக்கிரகங்கள்தான். அதற்கு அடுத்ததாகக் கண்ணன் பாட்டு என்ற அரிய பிரபந்தத்தைத் தமிழகத்திற்கு உதவினார். அதன் அற்புதத்தைப் பேச நமக்குச் சக்தியில்லை. இத்துடன் இந்தியா பத்திரிகையில் அடிக்கடி புதிய பாடல்களின் அமுதம் வெளிவந்தவாறு இருந்தன. பாரதியாருக்கு இப்பொழுது சென்னையில் இருந்த செல்வாக்கு புதுச்சேரியிலும் இன்னும் பிரபலமாகிவிட்டதென்றே சொல்ல வேண்டும். இத்துடன் புதுச்சேரியில் சூர்யோதயம் என்ற வாரப் பத்திரிகையும் புதுவிதமான அமைப்பில், ஆனால் மகா காரமாக வெளிவரத் தலைப்பட்டது. அதிலும் பாரதியார் ஆசிரியராகச் சம்பந்தப்பட்டிருந்தாரென்று தெரிகிறது. இந்தியா பத்திரிகையை வாரம் இருமுறையாக்கவும் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதுவரையில்தான் பாரதியாருக்குப் புதுச்சேரியில் சுக்கிரதசை! சென்னை அரசாங்கத்தார் இந்தியா பத்திரிகையையும், சூர்யோதயம் என்ற பத்திரிகையையும் சக்கரவர்த்தியாரின் பெயரால் பறிமுதல் செய்துவிட்டதாக அரசாங்க கெஜட்ட்டில் வெளியிட்டு விட்டனர். புதுச்சேரி ஃபிரென்சு இலாகாவாயினும் அங்குள்ள தபாலாபீஸ் பிரிட்டிஷ் இலாகாவுடன் சம்பந்தித்தே இருந்தது. இந்தியா, விஜயா, சூர்யோதயம் பத்திரிகைகளைத் தபாலாபீஸில் கொண்டு போய்க் கொட்டியதும் அவற்றை ஒருமிக்கக் கட்டி சென்னைத் துரைத்தனத்தாருக்கு அனுப்பி விடப்பட்டதாகத் தெரிகிறது. பத்திரிகையின் சந்தாதாரருக்குக் கொடுபடவில்லை. இதைப் பிறகு பாரதியார் அறிந்து திகைத்தார். இந்தியா, விஜயா, சூர்யோதயம் இம்மூன்றும் திடீரென்று நின்று போக நேர்ந்து விட்டன. தபால் மூலமாக அனுப்ப ஹேதுவில்லை. பாரதியாரின் பத்திரிகை முயற்சிகள் யாவும் அடியுடன் நின்று போயின. பத்திரிகைகள் வருமானத்தால் ஜீவித்த பாரதியாரை வறுமை நோய் பிடித்தாட்டத் தொடங்கிற்று. பத்திரிகைகள் நின்று போனதுடன் புதுச்சேரியின் ஆரவார வாழ்க்கையும் பூர்த்திபெற்றது.

4

அச்சுக் கோர்ப்போர் பதங்களை வெகு நெருக்கிச் சேர்த்து, பதங்களுக்கு அதிக நோவு உண்டாகப் பண்ணிவிடுவது பெரிய துன்பமாகும். பல பதங்களை இடையில் இடம்விடாது ஒரே சொற்றொடராக்கி வேதனைப் படுத்துவதில் பாவம் பதங்கள் அலறிக் கூவுகின்றன. சிறுசிறு பதங்களையும் விசாலமாய்த் தூரத்தூரப் பிரித்து, ரயிலில் இரண்டாம் வகுப்பில்* உள்ளவர்கள் இடம் விட்டு விசாலமாய் தாராளமாக உட்கார்ந்திருப்பதுபோல் செய்து பதங்களைப் பரவசப்படுத்த வேண்டும். ( குறிப்பு:- திரு நாயுடு அவர்கள் குறிப்பிடும் அந்த நாளில் ரயில்வேயில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருந்தது. பொதுவாக சாதாரண மக்கள் மூன்றாம் வகுப்பில், அதாவது இப்போதைய இரண்டாம் வகுப்பு போன்றது, அதில்தான் பயணம் செய்வர். இரண்டாம் வகுப்பு என்பது சற்று வசதியுள்ளவர்கள் பயணம் செய்யும் வகுப்பு. எனவே அதில் இடங்கள் சற்று விசாலமாக அமைந்திருந்ததைக் குறிப்பிடுகிறார் கட்டுரை ஆசிரியர்) மெயில் வண்டியில் மூன்றாம் வகுப்பிலே நெருக்கத்தில் பிரயாணிகள் படும்பாட்டைவிட, அச்சுக் கோர்ப்போரால் பதங்கள் முகுதியும் நொந்து, உருவமும் இளைத்து உள்ள பொருளும் கெடுவது - அவைகளைப் பெற்ற தாய்மாராகிய ஆசிரியர்களுக்குக் கனத்த கண்ணீர்ப்ப் பெருக்கையுண்டு பண்ணிவிடுகின்றது. ஸ்ரீமான் நமச்சிவாய முதலியாரவர்களைப் போன்ற மகானுபாவர்களின் நூல்களிலே பதங்கள் விசாலித்த இடம்கொண்டு, ஒடிந்த பதங்களுக்கு வரியின் கடைசியில் (-) சிறு கோடும் இடப்பெற்று அழகு மிகுந்து ஆநந்தமாய்த் துள்ளிக் குதிக்கின்றன. பதங்களின் கருத்தும் நன்கு புலனாகின்றது. இவ்விதம் அச்சுக் கோர்ப்பதற்கு எழுத்துப் பிரதிகளிலேயே அவ்விதம் பதம் பதமாகத் தூரப் பிரித்து எழுத வேண்டுமென்று அச்சுக்கூடத்தார் நூலாசிரியர்களின் மீது குற்றஞ்சாட்டுகின்றார்கள். நூலாசிரியர்களோ தாம் எழுதிச் செல்வது எங்கே அது முடிவதற்குள் தமக்கு மறந்து போகின்றதோ வென்று மகாவேகமாய் தமது கற்பனையின் விஷயத்தை எதுவும் விட்டுவிடாமல் கடிதத்தில் அடக்கிவிட வேண்டி, மடமடவென்று கிறுக்கிக்கொண்டு போகவேண்டியவர்களாயுள்ளார்கள். ஆதலின் பதங்களைத் தூரத்தூர வைத்து ஒழுங்கு செய்ய அந்த எழுதும் அவசரத்திலே அவ்வளவாகச் சாத்தியப்படுவதில்லை.

இவ்விதம் பதங்களைத் தூரத்தூர வைத்து எழுதுவதிலே பாரதியார் மிகவும் தேர்ந்தவர். எவ்வளவு வேகமாய் எழுதிய போதிலும் ஒரு பதத்திற்கும் மற்றொரு பதத்திற்கும் வேண்டிய வரை தாராளமாக இடம் விட்டு எழுதுவதையே தமது வழக்கமாகக் கொண்டவர். பாடல்களைப் பதம் பதமாய்ப் பிரித்துத் தூரத்தூர எழுதுவதுபோல் வசன நடையையும் அமைத்து வரைவார்.

பாரதியார் தமது பத்திரிகைகள் நின்று போனபின்னர், சுதேசமித்திரனுக்குக் காளிதாஸன், சக்திதாஸன் என்ற பெயருடன் அநேக அரும்பெரும் விஷயங்களையும் அரிய கற்பனைக் கதைகளையும் எழுதி வந்தார். பாரத ஜனசபை என்று காங்கிரஸ் மகா சபையின் ஆதி வரலாறுகளை ஒவ்வொரு காங்கிரஸின் நடவடிக்கைகளையும் சுருக்கமாக விவரித்து இரண்டு பாகங்களாக இயற்றினார். அதன்பின் மகாகவி ரவீந்திரநாதரின் ஐந்து வியாசங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார். அதிலே அவர் உபயோகித்துள்ள புதிய பதங்களும் அதை எழுதிச் சென்றுள்ள அர்த்த புஷ்டியான தமிழ் நடையும் தமிழ்நாட்டிற்குப் புதியவையாகும்.

பாரதியாரைப் பிடித்துத் தருவோருக்கு நூறு ரூபாய் பரிசு தரப்படுமென்று ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதிலே அவரது உயரம் இத்தனை அடியென்றும், கஞ்சா, புகையிலை உபயோகிப்பவரென்றும், பூணூலை எடுத்து விட்டவரென்றும் இன்றும் பல குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

பாரதியார் புதுச்சேரியில் பெரிய தாடிக்காரராகவும் விளங்கியதாய் அவ்வுருவில் எடுத்த படம் ஒன்றால் தெரிகிறது. இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள அவரது படம் அவரது வதனத்தின் உண்மையான அழகு கொண்டதாய் இருக்கவில்லை. தம்மைப் படம் பிடிக்கும்போதுகூட எதையோ நினைத்துக் கொண்டு விழித்தது போன்ற நிலையில் இப்போதைய படம் உள்ளது.

பாரதியாரை மன்னித்துவிடுவதாகச் சென்னை அரசாங்கத்தார் தெரிவித்த பின்பு, அவர் புதுச்சேரியிலிருந்தும் வெளிவரவும் உடனே கைதியாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். அதன்பின் அவரை விடுவிக்கும்படி போலீஸாருக்கு உத்திரவு வந்து, அதன் பின்னர் சென்னை வந்து சேர்ந்தார். பாரதியாரின் அக்ஞாத வாசம் தீர்ந்தது. அவரைப் பிடித்த சனியும் விலகிற்று.

5

கவிதையோ, நூலோ, ஒரு நற்கருமமோ எதுவும் திடீரென்று ஆக்கப்பெற்று விடுவதில்லை. அதற்கு ஒவ்வொரு கால சந்தர்ப்பங்கள் தோன்றிக்கொண்டு, தூண்டுதல் செய்து ஏவுகிற பலரோ சிலரோ ஒருவரோ ஏற்பட்டு, அவற்றால்தான் அவை நிறைவேற்றுவிக்கப்படுகின்றன. ஆகவே, கவிதையோ நூலோ இயற்றுதற்குச் சந்தர்ப்பம் - என்பது தேவைப்படுவதாகின்றது. கருத்து இன்றிக் கவிதைகள் தோன்றமாட்டா. ஒரு கருத்து மனத்தினிடை எழுவதற்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியோ, ஒரு நினைவோ, கனவோ, ஒரு மனோபாவமோ, சிந்தனையோ - எதுவோ ஒன்று உதித்தால்தான் அவற்றின் பொருளைக் கவியிலே அமைத்துக் கவிதைகள் இயற்ற முடியும். விஷயமின்றி எவ்விதம் ஒரு கவி பாடுவது? பாடுவதற்கு ஏதேனும் ஒரு கருத்தின் துணை வேண்டுமே. அந்தக் கருத்துக்கு அதச் சம்பந்தித்த ஒரு நிகழ்ச்சியிருந்தாலன்றோ முடியும்? ஒரு நூல் இயற்றுவதற்கு ஏதேனும் சரக்கு கிடைத்தபிந்தான் அதைக் கொண்டு நூல் எழுதிவிட வேண்டுமென்ற நோக்கம் மனத்துள் உதிக்க, உடனே நூலை ஆக்குதற்கான சக்தியும் அடுத்தடுத்துத் தோன்றிக்கொண்டு தூண்ட அவ்வழியில் நூலும் நெடுக எழுதப்பட்டுப் பூர்த்தி கொள்ளலாம். இவ்வாறின்றி எவ்வித நோக்கமுமேயில்லாமல் திடீரென்று நூல் இயற்றுதல் என்பது எவ்வாறு கூடும்? கவிதைகள் புனைவதற்கும் இவ்விதமே எங்கிருந்தேனும் ஒரு சரக்கு கிடைக்க வேண்டும். அந்த சரக்கை ஆதாரமாய்க் கொண்டுதான் அது ஆக்கப்பட வேண்டும். இதைப் போலவே பாரதியாரின் பாடல்களும் 1906ஆம் வருஷம் முதற்கொண்டு 1920ஆம் வருஷம் வரையிலும் இடையிடையே ஏற்பட்ட ஸம்பவங்களின் பலனாகவும் தூண்டுதல்களின் காரணமாகவும் அவரது மனத்துள் பலவித புதுக் கருத்துகள் தோன்றிக்கொண்டு அவ்வப்போது பாடப்பெற்று, அவற்றுள் பெரும்பான்மையும் 'இந்தியா' பத்திரிகையில் வெளியாகி, அவர் காலத்திற்குப் பிறகு இப்போது தனி நூல் வடிவமாக வெளிவரலாயின.

ஃஃஃஃஃஃஃஃ

எண்ணிக்கையில் அடங்காத பாடல்கள் எவ்வளவோ கேட்டிருக்கலாம். ஆனால் அந்தப் பாடல்கள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் எந்தெந்த தூண்டுதலில் எந்தெந்த நோக்குடன் சொல்லப்பட்டனவென்ற வரலாற்றினை நாம் தெரிந்து கொள்வதற்கு முடிகின்றதா? இங்ஙனம் பாடப்பெற்ற சந்தர்ப்பங்களைக் கண்டுகொள்ளக் கூடிய விவரங்களுள்ள பாடல்கள் சொற்பமாகவே இருக்கும். அவ்வரலாறு தெரிந்து அப்பாடல்களை நாம் சிந்திக்கும் போதுள்ள சுவையினை, வெறுமனே அப்பாடலின் பொருளை மட்டிலும் தெரிந்துகொள்வதிற் பெற முடியாது. இதன் ஸம்பந்தமாக ஒரு குறிப்பு மட்டும் இவ் விஷயத்தின் தெளிவுக்காக இங்கு கொடுக்கின்றோம்.

ஃஃஃஃஃஃஃஃ

புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்தகாலையில் 'தமிழ்நாட்டைப் பற்றி நல்ல கருத்துகள் அமையப் பெற்றதும் அதன் பெருமையை விளக்கக்கூடியதுமான பாடல்களை புனைந்து அனுப்புவோருக்கு இன்ன வெகுமதி தரப்படும்' என்று ஒரு விளம்பரம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. அதை பாரதியார் பார்த்தனரேனும் அவரது ஸ்வபாவப்படி அதை லக்ஷியம் செய்யாமல் விட்டுவிட்டார். எவரையும் மதிக்கப்பட்டவரல்ல. எல்லோருமே அவருக்கு ஒரு துரும்புபோல. ஒரு சக்கரவர்த்திக்குள்ள கர்வம் அவருக்கு இருந்தது. ஆனால் அன்பினரைக் காணினோ அவர்களின் கைக்குழந்தையாகி விடுவார். நில்லென்றால் நிற்பர், உட்காரு என்றால் உட்காருவர். அன்பின் வலையில் பாரதி சிக்கிவிடக் கூடுமேயன்றி அகோர கோப அச்சுறுத்தலின் வகையில் அவரை ஒரு விரலத்தனைகூட அசைக்க முடியாது. இது அவரது ஜென்மத்தோடு பிறந்த குணம். இதனை எழுதுங்கால் அவரோடு சண்டையிட்டு மிக்க ஆநந்தமாய்ப் போக்கிய அந்தப் பழைய நாட்களின் நினைவு நம் நெஞ்சில் புகுந்துகொண்டு மேலே எழுதுதற்குக் கூடாமல் கண்களில் ஜலம் நிறைந்து தத்தளிப்பு உண்டாவதால் இவ்விஷயத்தை இத்துடன் விட்டு ஒதுங்கிக் கொண்டு விடுகிறோம்.

ஃஃஃஃஃஃஃ

பாரதியாரின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்ரமணிய ஐயரவர்களும் மற்ரும் சில நண்பர்களும் அந்த விளம்பரத்தின்படி ஒரு பாடல் செய்ய வேண்டுமென்று பாரதியாரை நிர்ப்பந்தப் படுத்தினர். அவர்கள் அதிகாரம் செய்யப் பாத்தியதைப் பெற்றவர்கள். பாரதியார் இவர்களின் விருப்பத்தைக் கேட்டுப் புன்னை கொண்டார். வேறு பதில் சொல்லவில்லை. அதன் பின்பு வாத்தியார் ஐயரவர்கள், "வெகுமதிக்கு, நான் உங்களைப் பாடும்படி சொல்லவில்லை; சங்கத்துப் பண்டிதர் அநேகரின் முன்பு உங்கள் கவி ஜோடி கேட்கட்டுமே என்றுதான் சொல்லுகிறேன். சங்கத்தார் கவி கேட்பது, தமிழர்தம் நாட்டைப் பற்றி செந்தமிழில் பாடிக் களிக்கட்டும் என்ற நோக்கத்துடன்தான்; ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் லோபித்தனம் காட்ட வேண்டும்? என்று குத்திப் பேசிக் கேட்டார். "அதற்கு நான் சொல்லவில்லை" என்று இழுத்தார் பாரதியார். வாத்தியார் "அதெல்லாம் போகிறது, எங்களுக்குத் தேவை ஸ்வாமி" என்று ஒரே போடு போட்டுவிட்டார்.

ஃஃஃஃஃஃஃ

பாரதியார் அதற்கு "நான் கட்டாயம் பாட்டு எழுதிவிட்டு மூச்சு விடுகிறேன். அது வேண்டுமென்கிற சன்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும் சர்க்காருக்கு நண்பர்கள்; எனது கவியை "நல்லது" என்று அவர்கள் உரத்துச் சொல்லக்கூடப் பயப்படுகிறவர்கள், அதனால் தான் தாமதித்தேன்" என்று சொல்லி ஒரு நிமிஷ நேரம் பூப்பூவாய் நகைத்தார். உடனே வரைவதற்கு எழுதுகோலைக் கொண்டார்.

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே" ...

என்று பல்லவி எழுதி வாசித்துக் காண்பித்தார். வாத்தியார் மலைத்தார். எடுத்த விஷயங்கள் அத்தனையும் பல்லவியிலேயே சுருக்கமாய் முடிந்துவிட்டது. கவிதையிலே காதில் இனிப்புப்படச் சரக்குக் கூட்டவேண்டுமென்று நிபந்தனையுண்டு. இந்தக் கவிதையில் காதினிலே தேன்வந்து பாய்வதாகச் சொல்லியாய்விட்டது. அங்கிருந்தவர்களின் செவிக்கும் தேன்போலவே தித்தித்தது. மற்றும் தமிழ்நாட்டருக்கும் தமிழனுக்கும் அவர் குறித்திருக்கும் வீரவன்மை அளவற்றது. சக்தி பிறக்குது மூச்சினிலே என்ற வார்த்தையை உணர்ச்சி உள்ள ஒருவன் சேர்ந்தாற்போல் உச்சரிப்பானாயின் மார்பு கனத்துத் தோள் பூரிக்காமல் இருக்க வழியில்லை. பிறகு மற்ற சரணங்களையும் எழுதி முடித்தார். அதைத் தமிழ் சங்கத்தாரின் விலாஸத்துக்கும் அனுப்பினர். ஆயினும், சங்கத்தாரைப் பற்றிப் பாரதியார் ஆசி கூறியது பொய்யாகிவிடவில்லை. இவ் வரலாறுகளை நமது அன்பர் க.சு.பாரதிதாசனின் அலங்காரமான வசன நடையில் கேட்டால் இன்னும் இனிக்கும்.

(கட்டுரையாசிரியர் குறிப்பிடும் பாரதிதாசனின் அந்தப் பகுதி படிப்போர் அறிந்து கொள்வதற்காக இங்கே கொடுக்கப்படுகிறது. இது நமது முதல் பாட திட்டத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது)

"தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்க் கவிகள் தந்தால்
அமைவான பாட்டுக்கு அளிப்போம் பரிசு என்று
சான்ற மதுரை தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போன்ற கவி ஒன்று செப்புகநீர் என்று
பல நண்பர் வந்து பாரதியாரை
நலமாகக் கேட்டார், அதற்கு நமது ஐயர்
என் கவிதான் நன்றாயிருந்திடினும் சங்கத்தார்
புன்கவி என்றே சொல்லிப் போட்டிடுவார், போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்
அந்த விதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெல்லாம்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்ற
அழகுத் தமிழ் நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்
காது இனிக்கும் நல்ல கருத்து இனிக்கும் பாட்டு இந்நாள்
மேதினியிள் சோதி விளக்கு"

(கட்டுரையாசிரியர் 1928ஆம் வருடத்தில் எழுதிய இந்தக் கட்டுரையில் இடையிடையே அவர் குறிப்பிட்டுள்ள சில பகுதிகளை வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக சில இடங்களில் கொடுத்திருக்கிறோம். எனினும் கட்டுரையின் வேகமும் கருத்துக் கோர்வையும் தடைபடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறோம்.)


ஃஃஃஃஃஃஃ

இவ்விதமே ஒவ்வொரு விஷயத்துக்கும் அந்தந்த வேளைக்குத் தக்கவாறு தூண்டுதல்கள் தோன்றிக்கொண்டு அவைகள் நிறைவேறிப் புஷ்பித்துக் காய்த்துக் கனியாகின்றன. மேற்கூறிய தூண்டுதலும் சந்தர்ப்பமும் நேரிடாவிடில் பாரதியார் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாடலைப் பாடியிருக்க முடியாது. இதனால் கவிதா சக்தியின் உதயம் எவ்வெப்போது நேரிடுகின்றதென்பதையும், ஒவ்வொரு பாடலுக்கும் அதைப் பாடிய காரணமும் ஒன்று இருக்கக் கூடுமென்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். இவ்விதம் பல சமயங்களில், பல தினங்களில் பாடிய பாடல்களெல்லாம் ஒருங்கு சேர்ந்து பின்பு ஒரு பாடற்புத்தகமாக உருக்கொள்ளுகின்றது. ஒரு பாடற்றிரட்டு நூல் தயாராகும் வரலாறு இவ்விதமாகத்தான்.

பாரதியார் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்ததினால், 'தமிழ்நாடு' என்ற அளவிலேயே அவருக்குத் தேன்போல் இனிக்கவும் அதையே கவிதையிலும் சேர்த்தார். எதுவும் இயற்கையில் தானாகவே சுயமாக அப்படியப்படியே வந்து விழுந்து காகிதத்தில் நிறைந்தால்தான், அது இயற்கையின் அழகு ததும்பி மணக்கும். தானே வருந்தி கஷ்டப்பட்டு எழுதுவது அவ்வளவு ருசிக்காது. அதிலே இயற்கையின் நறுமணம் கமழாது. பாரதியாரின் பாடல்கள் சக்தியின் தூண்டுதலால் தானாகவே, சுயமாக எழுந்ததன்றிப் பிரயத்தனம் செய்து எழுதப்பட்டதன்று.

6

சென்னைக்கு வந்தபின்பு பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராய் விளங்கினார். அவரது துள்ளிக் குதிக்கும் நடையைக் காண்பவர்கள் 'ஓ! இது பாரதி எழுதியது' என்று தெரிந்து கொள்ளாமற் போகார்.

காதல் முறையில் நவீனமாகக் கவிதைகள் இயற்ற வேண்டுமென்றும், 'பச்சை பச்சை'யாக எழுதும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்து, அதற்கு உதாரணமாக "வள்ளிப்பாட்டு" என்ற சிங்கார ரஸ கீர்த்தனையை 1920ஆம் வருஷ "மித்திரனில்" அனுபந்தத்தில் வெளியிட்டார். இன்னும் அநேக பாடல்கள் இயற்றி வைத்து இருப்பதாகவும் அதன் முகவுரையில் கூறியிருந்தார். இனியும் இயற்றலாம் என்று எவ்வளவோ கருதி இருக்கலாம்.

ஃஃஃஃஃஃஃ

புதிய உருவில் வங்காளி போன்றும், ஒரு யுத்தவீரன் போன்றும் சென்னையில் விளங்கிய பாரதியாரை ஒரு தினம் சுதேசமித்திரன் காரியாலயத்தில் மாலைப் பொழுதில் உட்காரவைத்துப் பாடும்படி நாமும் இன்னும் சிலரும் கேட்டுக் கொண்டோம். ஆ! அப்பொழுது அவர் தம்மையே மறந்து பாடிய இன்ப ரஸத்தை நேரிலிருந்து அனுபவித்தவர்களே உணரவல்லார். அவர் நம்மோடு திருவல்லிக்கேணி கடற்கரையில் பழைய நாட்களில் (1907ஆம் வருஷத்தில்) எத்தனையோ பாடல்களைப் பாடியிருக்கின்றார். அவர் பாடுகையில் அந்தப் பாட்டின் அத்தனை ரஸங்களும் அவரது வதனத்தில் தத்ரூபமாய்த் தோன்றி ஜ்வலிக்கும்.

பாரதியார் எவ்வளவோ காலம் வாழப் போவதாக எண்ணியிருந்தார். எவ்வளவோ வேலைகள் செய்ய நினைத்திருந்தார். ஒரு வாரப் பத்திரிகை தொடங்க வேண்டுமென்று நம்மிடம் தர்க்கித்தார். பழைய இந்தியாவின் காரமான நடை கூடாதென்று நாம் சொன்னதையும் ஒப்புக் கொண்டார். 1920ஆம் வருஷத்து சுதேசமித்திரன் அனுபந்தத்தில் நல்ல வேலை செய்தார். 1921ஆம் வருஷ 'மித்திரன்' அனுபந்தத்திற்கு அவர் இல்லாமற் போய்விட்டார். அவர் வாழ்த்திச் சென்ற தமிழ்நாட்டில் சமீபத்தில் அவரது கீதங்களை அரசாங்கத்தினர் தடுத்துவிட்ட 'திருவிழா'வும் நடந்தது. நற்காலமாய் அந்தத் தடை நிவர்த்திக்கப்பட்டது. தமிழகத்தின் பாக்கியமே. பாரதியார் 1907ஆம் வருஷத்தில் தமது நண்பரொருவர் மரித்ததற்காக இரங்கிச் சில பாடல்கள் புனைந்தார். அச்சமயம் நாமும் அருகிலிருந்தோம். அவற்றின் இரண்டு அடிகளை இப்பொழுது பாரதியாருக்கே உபயோகித்து இவ் வியாசத்தை முடிக்கின்றோம்.

"அந்தோ மறலிநம் அமுதினைக் கவர்ந்தான்
நொந்தோ பயனிலை; நுவலயா துளதே!"

(இக்கட்டுரை "அமிர்தகுணபோதினி" எனும் மாத இதழில் 1928 நவம்பர், டிசம்பர், 1929 ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளிவந்தது)


கேள்விகள்
பாடம் 1.

கீழ்கண்ட கேள்விகள் அனைத்துக்கும் விடை எழுதி புத்தகம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் அனுப்பி வைத்தால், அவை மதிப்பீடு செய்யப்பட்டு முதலாவதாக மதிப்பெண் பெற்ற பத்து பேருடைய பெயர்கள் எமது அடுத்த பாடத்தில் பிரசுரிக்கப்படும். இந்த முழு திட்டமும் முடிவடையும்போது எல்லா மாதங்களிலும் அவரவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதல் பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிறைவு விழாவில் பரிசுகள் அளித்து பாராட்டு செய்யப்படுவார்கள். எனவே அனைவரும் தவறாமல் பதில் எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

ஒரு பத்தியில் பதில் எழுதுக:

1. முதல் பாடத்தின் தொடக்கத்தில் கட்டுரையாசிரியர் பாரதியார் பாடல்கள் பறிமுதல் செய்யப்பெற்று பெரும் கிளர்ச்சி எழுந்ததாக ஒரு செய்தியைக் கூறுகிறார்; அதுபற்றி உங்களுக்குத் தெரிந்த விவரங்களைக் கூறுக:

2. 'சுதேசமித்திரனில்' பணிபுரிந்த பாரதியார் அதன் அதிபர் ஜி.சுப்பிரமண்ய ஐயரின் கொள்கைகளில் வேறுபட்டுப் பிரிந் "இந்தியா" பத்திரிகையைத் தொடங்கியதாகக் கூறுகிறார். அதுமுதல் பாரதியாரின் எழுத்துக்களில் ஏற்பட்ட மாறுதல்களையும் அதன் விளைவுகளையும் பற்றி குறிப்பு வரைக.

3. ஸ்ரீ லாலா லஜபதிராய் தம்மைப்பற்றி இரங்கி பிரலாபிப்பதாகப் பாடிய பாடலின் கருத்தை விளக்கி எழுதுக.

4. "இந்தியா" பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்யப் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டின் மூலம் ஸ்ரீநிவாசன் கைது செய்யப்பட்ட விவரத்தை விளக்கி எழுதுக.

5. புதுச்சேரி வந்த பாரதியார் அங்கு தொடங்கி நடத்திய பத்திரிகைகள் எவை? அவற்றில் அவர் அறிமுகம் செய்த மாற்றங்கள் எவை? அவர் அறிமுகம் செய்த புதிய முறையால் பிற்காலத்தில் நாட்டில் பல புரட்சிகள் ஏற்பட்டன? அவற்றில் சில பற்றி கூற முடியுமா?

6. புதுச்சேரியில் அவர் வெளியிட்ட பத்திரிகைகளுக்கு பிரிட்டிஷ் இந்தியாவால் ஏற்பட்ட சங்கடங்கள் எவை? அவற்றால் பாரதியார் எங்ஙனம் பாதிக்கப்பட்டார்.

7. பாரதியார் காகிதத்தில் எழுதும் முறைபற்றி கட்டுரையாசிரியர் குறிப்பிடும் சிறப்புகள் எவை?

8. மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டி பற்றியும், அதில் பாரதியார் கலந்துகொள்ள நேர்ந்த சூழ்நிலை பற்றியும் சிறு குறிப்பு வரைக.

9. பாரதியார் "வள்ளிப்பாட்டு" பாடிய காரணமும் சூழ்நிலையும் என்ன?

10. "செந்தமிழ்நாடு" என்ற பெயரைச் சொன்னதும் காதில் தேன் பாய்ந்தது போல இருந்ததற்கு கட்டுரை ஆசிரியர் கூறும் காரணம் எது?

ஃஃஃஃஃஃஃஃஃ

4 comments:

 1. Greetings! Very useful advice in this particular article!

  It's the little changes which will make the greatest changes. Thanks a lot for sharing!

  Feel free to surf to my webpage; http://dermaroseblog.com

  ReplyDelete
 2. Greetings! Very useful advice in this particular article!
  It's the little changes that will make the most significant changes. Thanks a lot for sharing!

  Here is my site ... Vydox

  ReplyDelete
 3. Thanks for the marvelous posting! I definitely enjoyed reading it, you will be a great author.

  I will make certain to bookmark your blog and will eventually come back
  at some point. I want to encourage you to continue your great posts,
  have a nice afternoon!

  Here is my web-site - Dead Sea Kit Beauty Kit

  ReplyDelete
 4. Hello, i think that i saw you visited my site so i came to “return the favor”.
  I'm attempting to find things to enhance my site!I suppose its ok to use some of your ideas!!

  Stop by my blog: ultraslimpatchblog.net

  ReplyDelete

You can send your comments