Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

மகாகவி பாரதியின் சொல்லாட்சி.மகாகவி பாரதியின் சொல்லாட்சி.
கட்டுரை: ஆக்கியோன் தஞ்சை வெ.கோபாலன்
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
-------------------------------------------
பழமைப் புழுதியில் புரண்டு கொண்டும், மகா பண்டிதர்களின் புரியாத கடின தமிழ் நடையில், சொற்களைக் கோத்துக் கோத்து புலவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்கும் செய்யுள்களை இயற்றிக் கொண்டும், தமிழறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டின் மொழி இருளை நீக்க இளசையில் உதித்த கதிரவன்தான் மகாகவி பாரதி. பாரதிதாசன் சொற்களால் சொல்லவேண்டுமென்றால் அவன் ஓர் வையத்து மாகவிஞன், புது நெறிகாட்டிய புலவன், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவன், பைந்தமிழ்த் தேர்ப்பாகன், செந்தமிழ் தேனீ, சிந்துக்குத் தந்தை இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிறமொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் இவைகளைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் துவக்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது. அவன் படைப்புகளில்தான் எத்தனை யெத்தனை புதிய சொற்கள், எளிய சொற்கள், அதுமட்டுமல்லாமல் பழைய சொற்களை கையாண்ட விதம், தனித்து எழுதினால் பொருள் கிடைக்காத பல ஒலிச் சொற்களுக்கு புதிய பொருளைக் கொடுத்தது, இப்படி பற்பல பெருமைகளுக்கு உரியவன் மகாகவி பாரதி. அந்த வகையில் மகாகவி பயன்படுத்திய புதிய சொல்லாக்கம் சிலவற்றையும் அவன் எழுத்துக்கள் அமைத்துக் காட்டிய எழிலுறு சித்திரங்கள் சிலவற்றையும் இந்த கட்டுரையில் காணலாம்.

மகாகவியின் பெருமையை உலகறியும்படிச் செய்தவர்கள் பலர். அவர்களில் சிலர் அவன் காலத்திலேயே அவனது பெருமையை உணர்ந்தவர்கள், அதனை உலகறியப் பறை சாற்றியவர்கள். அப்படிப்பட்ட சிலரில் எஸ்.ஜி.இராமானுஜுலு நாயுடு என்பவர் ஒருவர். அந்தக் காலத்தில் வெளிவந்த "அமிர்த குண போதினி" எனும் பத்திரிகையில் 1928, 1929 ஆண்டுகளில் வெளியான தொடர் கட்டுரையில் அவர் மகாகவியின் ஆற்றலையும், பெருமையையும் போற்றிப் புகழ்ந்திருப்பதைக் காணலாம். பர்மா மாகாணம் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததும், அங்கு மகாகவியின் பாடல்கள் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வரலாறும், அந்த பறிமுதல் நிகழ்ச்சியின் எதிரொலியாக சென்னை மாகாண சட்டசபையில் தீரர் சத்தியமூர்த்தியின் எதிர்ப்புக் குரல் ஓங்கி முழங்கியதையும் பழைய ஆவணங்களிலிருந்து அறிய முடிகிறது. மகாகவியின் சொற்கள் எவ்வளவு வலிமையுடையதாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட தடையுத்தரவும் பறிமுதல் நிகழ்ச்சியும் நடந்திருக்கும்? அது மட்டுமா? தன் கட்டுரையில் இராமானுஜுலு நாயுடு குறிப்பிடும் வேறு சில நிகழ்ச்சிகளும் மகாகவியின் சொற்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சொல்கிறார்:

"இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிரக வாசமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்ஸம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய் சட்ட வரம்புக்கு உட்பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயமென்று பலர் கூறினர். ஒரு சமயம் பாரதியார் டிராம் வண்டியில் செல்லுகையில் 'இந்தியா' பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த ஒரு உத்தியோகஸ்தர் மிக்க கோபாவேசமாய் இப்பத்திரிகையின் ஆசிரியரை அவசியம் தண்டிக்க வேண்டுமென்று பாரதியாரிடமே கூறினார். பாரதியார் பதிலுக்கு "அப்படியா?" என்றார். இந்த ஸம்பவத்திற்குப் பிறகு 'இந்தியா' பத்திரிகை தனக்கென்று ஒரு புது காரியாலயமும் அச்சுக்கூடமும் அமைத்துக்கொண்டு வேறாய் விட்டது. பத்திரிகையே வேறு கை மாறினும் அதன் கொள்கை எப்போதும்போல் இருக்கும் என்று ஒரு தனிக்குறிப்பும் வெளியிடப்பட்டது".

அடுத்து, நாயுடு அவர்கள் மற்றொரு சம்பவத்தையும் விளக்குகிறார். அது: "இந்தியா பத்திரிகை வரவர 'காரமாகிவிட்டது'. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் 'பாஞ்சாலி சபதம்' போல் பெருங்காவியமாகத் தொடர்ச்சியாய் பத்திரிகையில் எழுதி வந்தார். அது முற்றும் வீர ரஸமாய் இருந்தது. அதனைத் தனிப் புஸ்தக உருவமாய் வெளியிடுவதற்குப் பாரதியார் விரும்பினார். அது ஆபத்தென அவரது நண்பர்களால் தடுக்கப்பட்டது. 'இந்தியா' பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரியராக இருந்தாரேயன்றி வெளிப்படையாக அன்று. ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்பவருமென்று பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்று, இந்தியா பத்திரிகையில் பாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார். 1907ஆம் வருஷத்தில் ஸ்ரீ லஜபதிராயைத் தேசப்பிரஷ்டம் செய்த காலையில் அவர் தம்மைப் பற்றி இரங்கிப் பிரலாபிப்பதாகப் பாரதியார் 'இந்தியா பத்திரிகையில் அரிய பாடல்களை வரைந்து அதற்குத் தெளிபொருள் விளக்கமும் குறிப்பிட்டார். அந்த விளக்கம் இப்போது வெளிவந்துள்ள அவரது நூல்களில் இல்லை. பாடல்கள் மட்டுமே உள்ளன."

'இந்தியா' பத்திரிகையில் மகாகவிதான் எழுதி வந்தாரேயன்றி, அதன் ஆசிரியராகவும், பிரசுரம் செய்பவராகவும் அரசாங்க இலாகாக்களில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அல்ல. எனினும் 'இந்தியா' பத்திரிகையின் கடுமையான விமரிசனங்களைத் தாங்கமுடியாத அரசாங்கம், அதன் ஆசிரியரைக் கைது செய்வது என்று வந்தபோது ஸ்ரீ ஸ்ரீநிவாசன்தான் கைதானாரேயன்றி, மகாகவி அல்ல. இதன் காரணமாகவே நண்பர்கள் ஆலோசனைகளின்படி மகாகவி புதுச்சேரி செல்லும்படி நேர்ந்தது என்பது வரலாற்றுச் செய்தி.

'இந்தியா' பத்திரிகை ஆசிரியர் மீது நடந்த விசாரணை, தீர்ப்பு இவற்றைப் பற்றி 16-11-1908இல் வெளிவந்த 'சுதேசமித்திரன்' ஒரு துணை தலையங்கம் எழுதியது. எழுத்தின் வலிமை எப்படிப்பட்டது, அந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் யார் என்பதை ஓரளவு மறைமுகமாக அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அது வருமாறு:

"சென்னையிற் பிரசுரமாய் வந்த 'இந்தியா' வென்ற வாராந்தர தமிழ் பத்திரிகையில் சென்ற மார்ச்சு மாதம் முதல் ராஜத் துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதாக அதன்பேரில் ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டி, அதை அச்சிட்டுப் பிரசுரப்படுத்துவோரான (Printer & Publisher) ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்காரைக் கைதிப்படுத்தி, விசாரணை செய்ததில் ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ தீவாந்தர சிக்ஷை விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாகக் கவர்ன்மெண்டார் யாரை நினைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து விசாரணைக்குக் கொண்டு வருவதும் ஜட்ஜுகள் கொடுந்தண்டனை விதிப்பதும் இப்போது சாதாரணமாய்விட்டது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அவசியமென்று எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் ராஜத்துவேஷக் குற்றம் செய்கிறவர்கள் படித்தவர்காளாயும் கெளரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர்களிடத்தில் கவர்ன்மெண்டாரும் ஜட்ஜுகளும் அவ்வளவு கொடுமை காட்டாமல் இருக்கக்கூடும். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை யெழுதினவரல்ல; எழுதினவரும் அந்தப் பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் பெயர் போலீஸ் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவர் அகப்பட்டுக் கொண்டாரே யன்றி, குற்றத்துக்கு முதல் உத்திரவாதம் அவர் பேரில் தாங்கியதல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்குக் கொடுந்தண்டனை விதிக்காமல் இலகுவான தண்டனை விதித்திருக்கக்கூடும் அல்லது இந்தியா பத்திரிகையில் ராஜத்துவேஷக் குற்றமுள்ள வியாஸங்கள் தோன்றின துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால், இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும் புரொப்பரைட்டரும் அப்படிப்பட்ட வியாஸங்கள் தோன்ற இடங்கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்" இதில் ஓடிப்போய்விட்ட 'இந்தியா' பத்திரிகை ஆசிரியராக வர்ணிக்கப்படுபவர் நமது மகாகவி பாரதியார்தான்.

இப்படிப் போகிறது அந்தத் தலையங்கம். இதிலிருந்து மகாகவி அதன் ஆசிரியராக இருந்து, அவர் இந்தியாவில் எழுதிய கட்டுரைகளின் கடுமை காரணமாக அரசாங்கம் விதித்த தண்டனையை ஸ்ரீநிவாசன் என்பவர் ஏற்றுக் கொள்ளும்படியும், மகாகவி புதுச்சேரி சென்று தங்கும்படியாகவும் ஆயிற்று. இவ்வளவுக்கும் அவரது கட்டுரையில் அவர் கையாண்ட 'சொற்கள்' அவைகளின் ஆற்றல், வலிமை இவைகள்தான் என்பது தெளிவு. இந்தச் செய்திகள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்த உண்மைகள்தான் என்றாலும்கூட, அவர் காலமான ஒரு சிறிது காலத்திலேயே கட்டுரை வடிவில் கொடுத்திருக்கும் ஸ்ரீ ராமானுஜுலு நாயுடு தரும் தகவல்கள் உண்மையாகவும், அவர் காலத்திய பிரதிபலிப்பாகவும் இருப்பதை உணரலாம்.

இனி மகாகவி தனது பாடல்களில் கையாண்டுள்ள ஒருசில சொற்களையும், அவை கொடுக்கும் புதிய உத்வேகம், புத்துணர்ச்சி, அவர் கூற்றால் சொல்ல வேண்டுமானால், புதிய சொற்கள், புதிய சிந்தனை இவற்றைப் படித்து மகிழ முடியும். 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' என்றொரு பாடல். குவளை கிருஷ்ணமாச்சாரியின் தாயார் மகாகவியை ஓர் திருப்பள்ளியெழுச்சி பாடும்படி கேட்க, அன்று மடுவுக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பும்கால் களியாட்டத்தோடு இந்த கவிதையைப் பாடி முடித்ததாக பாரதிதாசன் குறிப்பிடுகிறார். அந்தக் கவிதையில் "எழுபசும் பொற்சுடர்" என்று காலைக் கதிரவனைக் குறிப்பிடுகிறார். காலைக் கதிரவன் எழுகிறான். கதிரவனின் கிரணங்கள் சூடானவை. காலை வேளையென்பதால் உதிக்கின்றபோது அவன் கிரணங்கள் பொன்னிறமாக இருக்கிறது, ஆனால் அது எப்படிப் பசும்பொற் கிரணங்களாகிறது. அதுதான் சூடான கதிரவன் கிரணங்களையும்கூட பசுமையும் குளுமையும் உள்ளதாக நம்மை உணரச்செய்கிறது. புற உடம்பில் சுடும் அக்கிரணம், மனதைக் குளுமைப்படுத்தும் பசும் பொற்கிரணமாக அந்த மகா கவிஞனுக்குத் தோன்றுவதில் என்ன வியப்பு? எழும் ஞாயிறை வணங்குகிறான். உடனே மலருக்கு எங்கே போவது. அவனுக்குக் கிடைத்த "கனிவுறு நெஞ்சம்" எனும் மலர்கொண்டு கதிரவனைப் போற்றுகிறான். மனமே மலர். அந்த மனத்தைக் கனிவும், இரக்கமும், கருணையும், அன்பும் உள்ளதாக வைத்துக் கொண்டால், அந்த மனம் கொண்டே இறைவனை அர்ச்சிக்க முடியும். என்னே அவன் சொல்லாட்சி!

புத்தம் புதிய வார்த்தை ஜாலங்களை பரவ விட்டிருக்கும் மகாகாவியம்தான் "குயில் பாட்டு". இந்த அரிய காவியத்தில் அவன் தூவியிருக்கும் அரிய சொற்கோவைகள், அடடா! படித்துப் படித்து இன்புறத்தக்கன. காலைப் பொழுது. கீழைக் கடற்கறை. கதிரவன் உதிக்கும் காட்சி, நீலக்கடலில் நெருப்பு எழும் நேர்த்தியான காட்சி அவன் மனதை உருக்குகிறது. அந்த நாள், பறவைகளுக்கு விருந்துத் திருநாள். ஏன் தெரியுமா? அவைகளை வேட்டையாட வேடர்கள் வராத நாள். அதனாலேயே அந்த நாளை அந்தப் பறவைகள் விருந்துத் திருநாளாகக் கொண்டாடுகின்றன. அங்கே ஓர் மரக்கிளையில் ஓர் சின்னக் குயில் "மேனி புளகமுற; ஆற்றல் அழிவுபெற; உள்ளத்தனல் பெருக" தன் தேனினும் இனிய குரலெழுப்பி காதல் கீதம் இசைக்கிறது. அக்கீதம் 'இன்னமுதைக் காற்றிடை கலந்ததுபோல்' சுவைக்கிறது. அது சரி! அமுதை காற்றில் கலப்பது எப்படி? அதுதான் மகாகவியின் சொல்லோவியம்.

மனத்தில் இன்ப வெறி. அத்தோடு துன்பம் எனும் சோக கீதம் உள்ளத்தின் ஆழத்தில் ஒலிக்கிறது. இன்பத்திற்குக் காரணமான இசை, அதனை எழுப்பும் குயில் தனக்கு வசப்படவில்லையே என்ற ஏக்கம் தரும் சோகம், இவை ஒருங்கிணைந்து தரும் "இன்ப வெறியும் துயரும்" எனும் சொல்லாட்சி. 'தீ' உஷ்ணமானது. அது சுடுவது. துன்பத்தைத் தருவது. குளிரில் அதே தீயின் சுடர்கள் உடலுக்கு சுகம் தருவது. அது என்ன "இன்பத் தீ"? இது எங்ஙனம் சாத்தியமாகும்? அக்குயிலின் இசை கவிஞரின் மனத்தில் 'இன்பத் தீயை' மூட்டி வதைக்கிறது. கானகத்தில் மரங்களிலும், கிளைகளிலும் தங்கியுள்ள பறவைகள் குரலெழுப்புகின்றன. எத்தனையெத்தனை வகை பறவைகள், அத்தனை யத்தனை குரல் ஒலிகள். அவை 'கலகலெனும்' ஓசைகளாக கவிஞன் காதில் விழுகின்றன. ஒருங்கிணைந்த பறவைக் குரல்கள், அதன் ஒலி 'கலகல' வென்கிறது.

பாட்டில்தான் எத்தனை வகை. மனிதன் தன் உழைப்பின் வருத்தம் தெரியாமலிருக்க பாட்டிற் மனம் பதித்த அரிய செயல். ஏற்றம் இறைக்கும் பாட்டு, நெல்லிடிக்கும் பாட்டு, இது நடுவில் உரலை வைத்து இரு புறமும் பெண்கள் கையில் உலக்கைகளை ஏந்தி மாற்றி மாற்றி நெல்லை இடிக்கும்போது அந்த இசையின் காலப் பிரமாணமும், உரல் வயிற்றில் உலக்கை விழும் சமச்சீர் நேரக் கணக்கும், இசையினால் விளைவதன்றோ? சுண்ணமிடிப்பார் தம் சுவை மிகுந்த பாடல்கள், பண்ணையில் பணிபுரியும் பெண்டிர் பாடும் பாடல்கள், பெண்கள் கைகொட்டிப் பண் இசைக்கும் பழகு தமிழ் கும்மி, கோலாட்டப் பாடல்கள், இப்படிப் பற்பல இசை வடிவங்களைப் பட்டியலிட்டு, நமது பாரம்பரிய மரபு வழி இசை நாட்டத்தை மகாகவி அரிதான சொற்களால் விளக்குவதைப் படித்து இன்புறமுடிகிறது.

காதல் இனியது. காதலினால் மனிதர்க்குக் கலவியுண்டு; கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் கவிதையுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதல் கலைகளுண்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பறை சாற்றிய மகாகவி குயிலியின் மீது கொண்ட காதலினால் அனுபவித்தது "வெம்மைக் கொடுங்காதல்". இது சாத்தியமா? காதல் வெம்மையானதா? கொடுமையானதா? ஆம், கோவலனைப் பிரிந்த மாதவி கடற்கரையில் குளுமையான முழுமதியின் ஒளிகூட பிரிந்தவர்க்கு 'வெங்கதிராக' மாறியதாகவும், கூடியவர்க்கு 'தண்ணொளி'யாக இருப்பதாகவும் கூறியதிலிருந்து, காதல் நிறைவேறாதாருக்கு அது 'வெம்மைக் கொடுங்காதல்' என்பதை மகாகவி சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

ஓர் ஆங்கில கவிதையின் தாக்கம். மகாகவியின் சொல்லோவியத்தில் பிரதிபலிக்கிறது. இசையின் ஆற்றல் என்ன தெரியுமா? காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவைதனை பாம்பறியும்" என்றுரைப்பர் என்பதால் இது ஓர் கவிதையின் எடுத்துக்காட்டு என்கிறார். காதல் மனத்தின்பாற்பட்டது. பேசியோ, எழுதியோ காதல் உணர்வுகளை வெளிக்கொணர முடியுமா? எனவேதான் "பேசமுடியாப் பெருங்காதல்" என்ற சொற்றொடரை உதிர்க்கிறார். 'கண்ணோடு கண் ஒன்று பட்டால்" அங்கு வாய்ச் ேசொற்களுக்குப் பயன் என்ன?

தங்கத்தை உருக்கி, தழலைக் குறைத்து மிதமான சூட்டில் அந்தத் தங்கக் குழம்பை எங்கும் பரப்பினால் எப்படியிருக்கும்? மகாகவி விவரிக்கும் அந்த மாலைப்பொழுது நம் மனக்கண்ணில் அந்த வானத்துக் காட்சியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. கதிரவன் செயல்பாடுகள்தான் எத்தனை? புல்லை நகையுறுத்துகிறான், பூவை வியப்பாக்கி உருவாக்குகிறான்; மண்ணை தெளிவாக்குகிறான், நீரில் வெளிச்சம் தருகிறான், விண்ணை வெளியாக்குகிறான். கதிரவனின் ஜோதி செய்யும் மாயா ஜாலங்களைத் தன் வார்த்தை ஜாலங்களால் மகாகவி விளக்கும் இடங்கள் இவை.

அமைதியில் இன்பமுண்டா? உயிர்கள் இருக்குமிடங்களில் உயிர்ப்பும் உண்டு. எங்கும் மயான அமைதி இருக்குமானால் மனத்தில் பீதி உண்டாகும். இயங்கும் உயிர்கள் ஆர்ப்பரிப்புக்கு இடையே மனிதன் தனித்து இருந்தாலும் அந்த உயிர்களின் நாதங்கள் ஓங்கி ஒலித்திடவும், இன்பக் களி இயல்பாக வந்து சேர்ந்து இந்தப் புவி இயங்கிடக் காண முடியும்.

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். உலகத்தைப் படைத்தான். இந்த உலகத்தில் நீர் நெருப்பு, ஆகாயம், காற்று, மண் இவற்றையும் படைத்தான். இந்த பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைந்த பற்பல தோற்றங்களை, உயிர்களைத் தோற்றுவித்தன. இவற்றில் எதுவும் புதிதாகத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை. இந்த பஞ்ச பூதங்கள் மட்டுமே மாறி மாறி, உருமாறி இருப்பதும், பின்னர் மாறுவதும், வேறொரு உருவெடுப்பதுமாக இயக்குகின்றது. இதைத்தான் நீரைப் படைத்து, நிலத்தைத் திரட்டி வைத்தான், நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தான், காற்றை முன்னே ஊதினான், கான்றிய வானவெளி தோற்றுவித்தான் என்று இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தைத் தன் வாக்கு வன்மையில் விவரிக்க முன்வந்தான் மகாகவி. மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து, விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் காட்சியை விமரிசையாக விளக்குகின்றான்.

உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவ்வதிசயங்களில் எல்லாம் பேரதிசயமாக விளங்குகின்றது இசை என்ற இறைவன் நமக்களித்த வரம். மகாகவியின் வாக்கால் இந்த செய்தியை "இறைவனின் அதிசயங்கள் யாவினும் கானாமுதம் படைத்த காட்சி விந்தை", "பாட்டு என்று ஒன்று உண்டானதைப் போன்ற அதிசயம் வேறு எதுவுமில்லை", "நாதங்கள் சேரும் நயத்துக்கு எது நிகர்?", "ஓசை தருகின்ற இன்பத்துக்கு எதுதான் நேராகும்?" இவையெல்லாம் கவிஞரைப் பொறுத்தவரை "உவமையிலா இன்பம்".

மழை பொழிந்துகொண்டுதான் இருக்கின்றது. நமக்கு அது ஒன்றும் புதிதல்ல. எனினும் அந்த மழையை மகாகவி பார்க்கும் பார்வை என்ன? மின்னலடிக்கிறது. இடி முழங்குகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வெளிப்பாடுகள். இவைகள் சில நேரம் அச்சம் தருவனவாகவும் இருக்கிறது. கவிஞருக்கு இவை தரும் உணர்வு என்ன? அவர் சொல்லுகிறார், இடியின் நாதம் தாளவாத்தியத்தின் 'தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட' என்று இசையின் முழக்கமாகத் தெரிகிறதாம். மழையின் காரணமாக எங்கும் வெள்ளம், பள்ளங்கள் எல்லாம் நீரால் மூழ்குகின்றன. அவைகளின் தாளகதி 'தக்கத் ததிங்கிடத் தோம்' என்று கவிஞருக்குத் தோன்றுகிறது. காற்று அடிப்பதைத்தான் நாம் பார்ப்போம், உணர்வோம். அது 'கூ கூ' வென்று அழகிய ஓசை நயத்தோடு வெளிப்படுவதை எத்தனை பேர் கூர்ந்து கவனித்திருக்கிறோம். இடி முழக்கம் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட ஓசைதான். அதன் ஓசையை, ஒலி வடிவத்தை எழுத்தில் வடிக்க முடியுமா? முடியுமாம் மகாகவிக்கு. அந்த இடியோசை அவருக்குச் 'சட்டச்சட, சட்டச்சட, சட்டச்சட டட்டா" என்று கேட்கிறது. ஒரு முறை முழங்கிப் பாருங்கள், இடியோசை உங்கள் காதுகளில் ஒலிக்கும்.

முன்பே குறிப்பிட்டதைப் போல சில பொருளற்ற ஒலிகள்கூட கவிஞன் வாக்கால் உயிர் பெற்று விளங்குகின்றன. அவ்வொலிக் குறிப்புகள் பொருள் சேர்ந்து வெளிப்படுகின்றன. ஓர் தென்னை மரம். அதன் படர்ந்த மட்டையின் மீது அமர்ந்த செல்வப் பசுங்கிளி. அருகே 'கீச்சிட்டுப்' பாயும் சின்னஞ்சிறு குருவி. அது கிளைவிட்டுத் தாவி மேலே மேலே பறந்து ஏறுகிறது எப்படி? 'ஜிவ்' வென்று பாய்கிறது. இந்த 'ஜிவ்' எனும் ஒலி, இங்கே அந்தக் குருவி பறந்து செல்லும் விரைவின் வெளிப்பாடு அன்றோ?

'ரிக்' வேதம் பழமையானது. அதுதான் முதல் வேதம். மனிதன் இயற்கையைக் கண்டு மனதில் அச்சம் கொண்டான். சூரிய சந்திரர்களைக் கண்டு பயந்தான். இடியும் மழையும் மின்னலும் அவனுக்கு அச்சம் தந்தன. காற்றும் தீயும் பஞ்ச பூதங்களின் அங்கம் என்பதை அவன் முதலில் உணரவில்லை. இவற்றை எல்லாம் கண்டு அச்சம் கொண்டான். அவற்றை தங்கள் சக்திக்கு மீறியவைகளாக இருப்பதால் தெய்வங்களெனப் போற்றினான். அதன் வெளிப்பாடுதான் 'ரிக்' வேதம். ஆதிமனிதனின் அறிவுலகப் பிரவேசம். 'ரிக்' வேதத்தின் 100 பாடல்களை (ஸ்லோகங்களை) ஸ்ரீ அரவிந்தரிடம் பாடம் கேட்ட மகாகவியின் கற்பூர புத்தி அவற்றை சுவீகரித்துக் கொண்டது. விளைவு? ஞாயிறு என்றும், சக்தி என்றும், காற்று என்றும், கடல் என்றும் ஜகத்சித்திரம் வரைத்து வைத்துவிட்டார். ரிக் வேதம் ஓசை நயத்துடன் பாடப்படுபவை. அதே ஏற்ற இறக்கத்தோடு மகாகவியின் வசன கவிதைகளைப் பாடிப் பார்த்தால் என்ன? பாடிப்பார்த்தீர்களா? என்ன கண்டீர்கள்? ஆம் அதே ரிக் வேத ஒலி அமைப்புக்களோடு ஏற்ற இறக்கங்களோடு பாடத்தகுந்த படைப்புகள் அவை. மகாகவியின் பரிமாணம்தான் என்ன. தோண்டத் தோண்ட உட்புக உட்புக, பாரதியின் வீச்சு, வானத்தின் எல்லைகளையும் தாண்டி எங்கோ எங்கோ போய்க்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. மகாகவியை முழுமையாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதுதான் எப்போது? அது இன்னும் பல தலைமுறைகள், புதிய புதிய அறிவாளிகள் படித்துப் படித்துத் தெளிந்து பதில் சொல்ல வேண்டிய கேள்வி. பார்க்கலாம். என்றாவது ஒரு நாள் மகாகவி பற்றிய ஆய்வு நிறைவு பெற்றதா என்று தெரிந்து கொள்ளலாம்.

நாமெல்லாம் இப்பூவுலகின் பிரளயகால அழிவைப் பார்க்கப்போகிறோமா. அல்லது இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமா? தெரியவில்லை. ஆயினும் அந்த பிரளய கால தோற்றத்தைப் பாஞ்சாலி செய்த சபதத்தின் முடிவில் இப்பூவுலகம் கண்டதாக மகாகவி கூறும் சொற்கள் இதோ. 'ஓம் ஓம்' என்று உரைத்தனர் தேவர். வானம் உறுமிற்று - அதுவும் 'ஓம் ஓம்' என்றுதான் உறுமிற்று. பூமி அதிர்ச்சி உண்டாச்சு, விண்ணைப் பூழிப் படுத்தியது சுழற் காற்று. பிரளய காலம். மறுபடி அழிவு, மறுபடி உதயம், பிரபஞ்சத்தின் தடைபடாத சக்தி விளையாட்டை மகாகவி மிகச் சுலபமாக நமக்கு உருவகப் படுத்திக் காட்டிவிட்டார்.

மகாகவியின் சொற்சித்திரங்களை, சொல் பிரயோகங்களை நாளெல்லாம் வியந்து பாராட்டிக் கொண்டே இருக்கலாம். வருங்கால தலைமுறையினர் அந்த ஆய்வை மேற்கொள்ளட்டும். மேன்மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை வெளிஉலகுக்குக் கொண்டு வரட்டும். வாழ்க மகாகவியின் புகழ்!

No comments:

Post a Comment

You can send your comments