Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

சங்கீத விஷயம்.திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
வழங்கும் மகாகவி பாரதியார் பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
பாரதியார் கட்டுரைகள் - சங்கீத விஷயம்.

மகாகவி பாரதியார் எழுதியுள்ள கட்டுரைகள் குறித்த இரண்டு பாடங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற கட்டுரை அவருடைய "சங்கீத விஷயம்" எனும் கட்டுரை. இந்தக் கட்டுரையில் காணப்படும் கருத்துக்கள் எந்த காலத்துக்கும் பொருந்தும்படியாகவும், சங்கீத வித்வான்கள் எப்படியெல்லாம் தங்களது சங்கீத ஞானத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பதைப் பற்றியும் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. நவரஸங்கள் எவை என்பதையும், பெண்களுக்கும் இசைக்கும் இடையேயான உறவு எத்தகையது என்பதையெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஸங்கீத விஷயம்.

இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்குந்தான் பாடத் தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மன நிலை ஸங்கீதத்திற்கு இசைகின்றது போலும்! மனிதன் உடம்பினாலே பறக்காவிட்டாலும் உள்ளத்தைத் திசை வெளியிலே பறக்கும்படி செய்கிறான். அப்போது இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது.

ரஸங்கள் ஒன்பது:-- அவை

(1) வீரம்
(2) ரெளத்திரம் (கோபம்)
(3) அத்புதம் (வியப்பு)
(4) சாந்தம் (நடுவுநிலை)
(5) பயாநகம் (அச்சம்)
(6) பீபத்ஸம் (வெறுப்பு)
(7) ஹாஸ்யம் (நகைச்சுவை)
(8) கருணை, சோகம் (துயரம்) இதை அவலம் என்பது பழைய தமிழ் வழக்கு (9) சிருங்காரம் (காமம்)

வெளிப் பொருள்களைக் காணும்போது அல்லது நினைக்கும் போது மனிதனுடைய உள்ளத்திலே இந்த ஒன்பது சுவைகளில் ஏதேனும் ஒன்று தோன்றும், இரண்டு மூன்று கலந்தும் தோன்றக்கூடும். ரஸ உணர்ச்சியிலே உள்ளத்தை முழுதும் ஈடுபடுத்தக்கூடிய சிலர் கவிதை, பாட்டு, சித்திரம் முதலிய தெய்வக் கலைகளிலே சிறப்படைகிறார்கள். ரஸ உணர்ச்சி இல்லாவிடின், இக்கலைகள் நசித்துப் போகும்.

பிறர் துன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும் பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப் பழகுவராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான்; பிந்தியவன் பதங்களைப் பின்னுவான்; இவனுடைய தொழிலிலே கவிதை இராது. இப்படியேதான் ஒவ்வொன்றிலும்.

ரஸ ஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை, அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர் என்பதை அறியாதவர்.

முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன் பாடுவோரே 'முதல்தர வித்துவான்'. இந்தக் கீர்த்தனங்களெல்லாம் ஸம்ஸ்கிருதம் அல்லது தெலுங்கு பாஷையில் இருக்கின்றன. ஆகவே, முக்காலே மும்மாகாணி 'வித்வான்'களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களையும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகிறார்கள். அர்த்தமே தெரியாதவனுக்கு 'ரஸம்' தெரிய நியாயம் இல்லை.

நானும் பிறந்தது முதல் இன்றுவரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம்' என்று ஆரம்பஞ் செய்கிறார். 'ராமநீ ஸமான மெவரு', 'மரியாத காதுரா', 'வரமுலொஸகி' ஐயையோ, ஐயையோ, ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ, எந்த 'வித்வான்' வந்தாலும், இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டு பாட்டுக்களை வருஷக் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற் காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள்.

'பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டும்' என்பது என்னுடைய கக்ஷியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும்; பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விழுங்கிவிடக் கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது.

புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டுவர வேண்டும். இப்போது ஸங்கீத வித்வான்களிலே தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுகளில் கீர்த்தனங்கள் செய்ய முயலவேண்டும். நவரஸங்களின் தன்மைகளையும், இன்னின்ன ரஸங்கள் உண்டாகும் என்பதையும் கற்றுத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

'பூர்வ காலத்து மஹான்களுக்குத் தெய்வப் பிரஸாதமிருந்தது, எங்களுக் கில்லையே, என்ன செய்வோம்?' என்று புதிய வித்வான்கள் புதிய கீர்த்தனங்கள் அமைப்பதிலே பின் வாங்கக்கூடாது. தெய்வங்கள் இறந்து போகவில்லை. இப்போதும் அவற்றை உபாஸனை செய்து அவற்றின் அருள் பெறலாம். தெய்வப் பிரஸாதத்தை ஒருவன் பக்தியாலும், ஜீவதயையாலும், நேர்மையாலும், உண்மையாலும், இடைவிடாத உழைப்பினாலும் ஸம்பாதிக்க முடியும்.

"நாட்டிலே ஸங்கீதத்திற்குச் சரியான போஷணை செய்யும் ராஜாக்களும், பிரபுக்களும் இல்லை. எங்களுக்கு ஜீவனமோ கஷ்டமாயிருக்கிறது. மனக்கஷ்டம் இல்லாமல் இருந்தாலன்றோ ரஸ ஞானத்தை வளர்த்துக் கொண்டு போகலாம். சில வருஷங்களுக்குள்ளே சில கீர்த்தனங்களை வரப்படுத்திக் கொண்டு ஜீவனத்திற்கு வழிதேட வேண்டிய ஸ்திதி ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்யலாம்?" என்று நினைத்து மனமுடைந்து போக வேண்டாம்.

இப்போது உலக முழுவதிலுமே ராஜாக்களையும், பிரபுக்களையும் நம்பி வித்தை பழகும் காலம் போய்விட்டது. பொது ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் கலைகளுக் கெல்லாம் போஷணையும் ஆதரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கு உண்மையான அபிருசி உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடைய கடமை. பிறகு, நல்ல போஷணை கிடைக்கும். ஒரு பிரபு மாதம் ரூபாய் 100 கொடுப்பான். ஊர் சேர்ந்தால் தலைக்குக் கால் ரூபாயாக வசூல் பண்ணி மாதம் 1000 ரூபாய் கொடுக்கும்; ஊரையே யஜமானாகக் கொள்ள வேண்டும்.

ஊர்தான் ராஜா. இந்த ராஜாவுக்கு ஆரம்பத்திலே கொஞ்சம் ஞானம் அளித்துப் பழக்கங் கொடுத்தால் வித்தைகளுக்கு எவ்விதமான குறைவும் ஏற்படாது. நவரஸங்களும் சேரவேண்டும். கருணா ரஸமும் (அதாவது சோக ரஸமும்) சிருங்கார ரஸமுந்தான் நமது தேசத்தில் நடைபெறுகின்றன. மற்ற வீரம், கோபம் (ரெளத்ரம்), வியப்பு, வெறுப்பு, அச்சம், சாந்தம் என்ற ரஸங்களின் விலாஸம் பாட்டிலே காணப்படவில்லை. நல்ல பாட்டுப் பாடினால் நல்ல மதிப்புத் தானாகவே வரும். அதிலிருந்து நல்ல வரும்படி ஏற்படும்.

திருஷ்டாந்தமாக, ஹாஸ்ய ரஸம் தோன்றும்படி ஒரு ராகத்தை விஸ்தரிக்கும் போது, அதிலே அர்த்தச்சேர்க்கையில்லாவிடத்தும் ஜனங்கள் கடகடவென்று சிரிக்க வேண்டும்.

ரெளத்ர ரஸம் தோன்றும்படி பாடினால், அதைக் கேட்கும்போது, ஜனங்களுக்கு மீசை துடிக்க வேண்டும்; கண்கள் சிவக்க வேண்டும்.

வீர ரஸமுள்ள பாட்டை ஒரு வித்வான் பாடும்போது, ஜனங்களெல்லாம் தம்மையறியாமல் முதுகு நிமிர்ந்து தலைதூக்கி உட்கார வேண்டும். அவர்கள் விழியிலே வீரப்பார்வை உண்டாக வேண்டும். அப்போதுதான் பாட்டு ஸுலபமாகும். பொருளிலும், ஓசையிலும், 'ரஸம்' கலக்காத பாட்டு இனிமேல் தமிழ்நாட்டிலேயே வழங்கலாகாது.

முத்துசாமி தீக்ஷிதர், தியாகையர், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் இந்த மூன்று பெயருடைய கீர்த்தனைகளைத்தான் வழக்கத்தில் அதிகமாகப் பாடுகிறார்கள். இவற்றுள்ளே, தீக்ஷிதரின் கீர்த்தனைகள் பச்சை ஸமஸ்கிருத பாஷையிலே எழுதப்பட்டவை. இவை கங்கா நதியைப் போலே கம்பீர நடையும் பெருந்தன்மையும் உடையன. வேறு பல நல்ல லக்ஷணங்களும் இருந்த போதிலும், ஸமஸ்கிருத பாஷையில் எழுதப்பட்டிருப்பதால் இவை நமது நாட்டுப் பொது ஜனங்கள் ரஸானுபவத்துடன் பாடுவதற்குப் பயன்பட மாட்டா.

தியாகராஜ சுவாமிகள் பெருமை

தியாகையர் தெய்வ வரம் பெற்றவர். தியாகையர் ரஸக்கடல், கர்நாடக ஸங்கீதம் இப்போது உயிர் தரித்திருப்பதற்கு அவரே காரணம். பூர்வகாலத்து ஞானிகளைப் போலே, இவர் இஷ்ட தேவதைக்கு ஆத்ம யக்ஞம் செய்து, தான் அற்று வித்தை வடிவாகி விளங்கினார். இவருடைய பாட்டுக்களை இக்காலத்துப் பாடகர் அதிக 'ஸங்கதி'களாலும், ரஸநாசத்தாலும், சொற்களைத் திரித்தல், விழுங்குதல் முதலிய செய்கைகளாலும் இயன்றவரை ஆபாஸமாக்கிவிட்ட போதிலும், இன்னும் அவற்றிலே பழைய ஒளி நிற்கத்தான் செய்கிறது. குப்பையிலே கிடந்து மாசேறி ஒளி மங்கிப் போயிருந்த போதிலும் மாணிக்கத்தின் குணம் ரத்னப் பரீக்ஷைக்காரனுக்குத் தெரியாதா? அதுபோலவே, ரஸ உண்மை தெரிந்தோர் இத்தனை குழப்பத்துக்கிடையே தியாகையருடைய தொழிலின் ஸ்வரூபத்தை நன்கு கண்டு பிடித்துக் கொள்ள முடியும். கீர்த்தனத்தில் ராக தாளங்களை இசைத்திருக்கிற மாதிரியிலேயே அர்த்தம் தொனிக்க வேண்டும். அதைத்தான் ரஸச்சேர்க்கை என்று சொல்லுகிறோம். இதிலே தியாகையர் மிகவும் சிறப்புக் கொண்டவர்.

திருஷ்டாந்தமாக, 'சக்கனி ராஜமார்க்கமு' என்ற கீர்த்தனத்தை எடுத்துக் கொள்வோம். அதில் ஸங்கதிகளும், பின்னல்களும் இல்லாமல் இதன் பல்லவியை சுத்தமாகப் பாடிப் பாருங்கள். "நல்ல ராஜமார்க்கம் இருக்கும்போது சந்துகளில் ஏன் சுற்றுகிறாய், மனமே!" என்று அர்த்தம் இந்த இசையிலே அகப்படும்.

'மாருபல்க குன்னாவேமி' (ஏன் மறுமொழி சொல்லாமல் இருக்கிறாய்?) என்ற கீர்த்தனத்தின் பல்லவியைப் பாடிப் பாருங்கள். அந்த அர்த்தம் இசையிலே தொனிக்கும்.

'நன்னு ப்ரோவ நீகிந்த தாமஸமா' (என்னைக் காக்க உனக்கு இத்தனை தாமஸமா?) என்ற பல்லவி எடுத்தவுடனேயே அர்த்தம் பளீரென்று வீசும்.

இப்படியே எல்லாக் கீர்த்தனங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி ஏற்படுத்த வேண்டும் என்று தியாகையர் சிரமப்பட்டு வேலை செய்யவில்லை. நெஞ்சிலே உண்மையிருந்ததால், ஸங்கீதம் இயற்கையிலே இவ்விதமாகப் பிறக்கும்.

பிற்காலத்தில், பட்டணம் சுப்பிரமணிய அய்யர் முதலானவர்களின் பாட்டிலே இந்த லக்ஷணம் இல்லை. 'வரமுலொஸகி' என்ற பாட்டை எடுத்தீர்களானல், இசைக்கும் பொருளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது விளங்கும். சொற்கள் 'வரங்கொடுத்துக் காப்பது உனக்கு அரிதா?' என்று கேட்கின்றன. இசை சண்டைத் தாளம் போடுகிறது. இது நிற்க.

வித்வான்கள் பழைய கீர்த்தனங்களைப் பாடம் பண்ணி புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால் தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிறபாஷைகளில் பழம் பாட்டுகளை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்.

மேலும் 'பாட்டுக்குத் தாளமே யொழிய தாளத்திற்குப் பாட்டில்லை' என்ற விஷயத்தைப் பாடுவோர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். சிலவிதக் கூத்துக்களிலே, தாளத்திற்குப் பாட்டுப் பாடுதல் பொருத்தம். அங்கேகூட, முழுதும் தாள நயத்தையே கருதி இசை நயத்தை நாசம் செய்துவிடக் கூடாது. அப்படியிருக்க, 'பாட்டுக் கச்சேரி' என்று பெயர் வைத்துக் கொண்டு அங்கே இசையின்பங்களைக் கொன்று தாள முழக்கத்தைப் பிரதானமாக்குதல் தகாது. அதிலும் கீர்த்தனங்களைப் பாடும்போது இசையின்பங்களைக் காட்டுதல் முதல் காரியமாகவும், தாளத்தை உபகரணமாகவும் கொள்ள வேண்டும்.

வடநாட்டு இசைக் கலைஞர்கள்

சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் காசியில் வாஸஞ் செய்தேன். அங்கே பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிர மற்றப்படி பொதுவாக வித்வான்களுக் கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும் இருப்பதன் காரணமென்ன? இதைப் பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். "வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள்; புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலேதான் தொண்டை கெட்டுப் போகிறது" என்றனர். பின்னிட்டு, நான் யோசனை செய்து பார்த்ததில், 'மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம்தான்' என்று தெரிந்து கொண்டேன். ஆனால், அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்ய வேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய் சாதகம் செய்யும் வழக்கம் தென்னாட்டிலே குறைவு பட்டிருக்கிறது.

தவிரவும், உள்ளத்திலே வீரம் இருக்க வேண்டும். உள்ளத்திலே ஸத்து இல்லாதவர்களுக்கு ஒரு தொழிலும் நேரே வராது. கலைகள் நேர்ப்படுவதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. உள்ளத்திலே தைர்யம், ஸந்தோஷம், வலிமை முதலிய சுப லக்ஷணங்கள் தமிழரைக் காட்டிலும் வட நாட்டு ஜனங்களிடம் சிறிது அதிகமாகத் தோன்றுகின்றன. முன்னெல்லாம் தமிழ் நாட்டிலேதான் இந்தக் குணங்கள் மிகவும் விசேஷமாக விளங்கின. இப்போது சில வருஷங்களாகக் குறைவுபட்டிருக்கின்றன. இந்த குணங்களை நமது ஜனங்கள் எல்லோருமே பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஸங்கீத வித்வான்கள் இவற்றைப் பழக்கப்படுத்தினால்தான், அவர்கள் கண்டத்தில் உவகையும், வீரமும் பிறக்கும்; பாட்டிலே களையுண்டாகும்.

தமிழ்நாட்டு வித்வான்களுடைய ஸங்கீதத்தைப் பற்றி மேலே எழுதினேன். மற்ற சாதாரண ஜனங்கள் பாடும் பாட்டைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். இந்தப் புதிய பகுதி தொடங்கு முன் மேற்படி சங்கீத வித்வான்களிடம் உள்ள நன்மையையும் சொல்ல வேண்டாமா? பெயர்கள் குறிப்பிடாதது பற்றி மன்னிப்பு வேண்டுகிறேன். கன்யாகுமரி முதல் சென்னை வரை தமிழ்நாட்டில் உள்ள ஜில்லாக்களிலே ஒவ்வொன்றிலும் இக்காலத்தில் கருவிகளிலும் வாய்ப்பாட்டிலும் புகழ்பெற்ற வித்வான்கள் பலர் இருக்கின்றனர்.

காலத்தின் சீர்கேட்டாலும், ஸம்ப்ரதாய பழக்கத்தினாலும் நவரஸங்களுக்கும் பாட்டுக்கும் உள்ள தொடர்பை மறந்து விட்ட போதிலும், இவர்களிலே சிலர் (ஆணும், பெண்ணும்) ஸரஸ்வதி கடாக்ஷத்தினால் தம்மை அறியாமலே அற்புதமான வேலை செய்கிறார்கள். சிலர் சமயங்களில் ஓரிரண்டு ரஸங்களைத் தெரிந்தே பாட்டில் இசைக்கிறார்கள். அப்போது இவர்களுடைய பாட்டு அல்லது வாத்தியம் மிகவும் உயர்ந்த நிலையடைகிறது. ஸமீப காலத்தில் இறந்து போன மஹா வைத்யனாதய்யர், புல்லாங்குழல் சரப சாஸ்திரி முதலிய மஹான்களுக்கு இப்போது தக்க பின்காப்பாளர் இல்லாமற் போகவில்லை.

ஆனால், இவர்கள் நான் முன்னிரண்டு பகுதிகளில் குறிப்பிட்ட செய்திகளையும் தயவுசெய்து கவனிக்கும் பக்ஷத்தில் தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்துவரும் உபகாரம் பலமடங்கு அதிகப்படு மென்பதும் அப்படி அதிகப்பட வேண்டுமென்பதும் என்னுடைய கருத்து; அதைத் தெரிவித்துக் கொண்டேன்.

நமது குடும்பப் பெண்கள் பாடல்கள்

இனி சாஸ்திரோக்தமாகப் பாடும் வித்வான்கள் அல்லாமல் ஸாமான்யமாகப் பாடும் பொது ஜனங்களுடைய செய்தியைப் பார்ப்போம்.

முதலாவது, நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டை யெடுத்துக் கொள்வோம். கல்யாணப் பாட்டுக்கள், கும்மிப் பாட்டுக்கள் முதலியவற்றுடன் நமது பெண்கள் 'கீர்த்தனை' வகைகளும் கொஞ்சம் பாடுகிறார்கள். இதில், ஒரு சில பெண்கள் நல்ல லக்ஷணத்துடன் பாடுகிறார்கள் என்பதில் ஆக்ஷேபமில்லை. ஆனால், பெரும்பான்மையோர் ஸங்கீத லக்ஷணமே தெரியாமல் தவறாகப் பாடுகிறார்கள். பெரும் பான்மையோருக்குத் தொண்டை நன்றாகப் பழகவில்லை. பெரும்பான்மையோருக்குப் படிப்பு மிகவும் குறைவாகவும் சூனியமாகவும் இருப்பதால் இவர்கள் பாடும் பாட்டுக்களிலே சொற்பிழையும் மொய்த்துக் கிடக்கின்றன. அதிலும், இவர்கள் தீக்ஷிதர், தியாகையர் முதலியவர்களின் கீர்த்தனங்கள் பாடும்போது, தாளம், சுருதி ஒன்றையும் கவனிக்காமல் பதங்களைச் சூறையாடி மிகவும் விகாரப்படுத்தி விடுகிறார்கள். ஆனாலும் .... ஆனாலும் .... ஆனாலும் .... தமிழ்நாட்டு ஸ்திரீகளின் ஸங்கீதத்தை நாம் புகழாதிருக்கலாகாது. இவர்கள் பாடும் பாட்டிலே பெரும்பான்மைக் கீர்த்தனங்களும், பத்யங்களும் தெலுங்கில் இருந்த போதிலும், தமிழ்ப் பாட்டுத்தான் அதிகமாகப் பாடுகிறார்கள். இந்தத் தமிழ்ப் பாட்டிலே பல பிழைகள் மலிந்து கிடந்தாலும் ஒரு சில பாட்டுக்கள் மிகவும் நன்றாக அமைந்திருக்கின்றன. 'ஓடம்' முதலியவற்றில் அதிஸமீப காலத்துப் பாட்டுக்கள் மிகவும் விகாரமாயிருந்தாலும், பழைய காலத்துப் பாட்டுக்களிலேயே சொல் நயம் அதிகம் இருக்கிறது. பின்னிட்டு 'ரயில் வண்டி ஓடம்' முதலிய அசுத்தங்கள் அதிகமாகச் சேர்ந்து விட்டன. இங்கிலீஷ் படித்த புருஷர்கள் கேட்டு மடத்தனமாகச் சந்தோஷப்பட்டதிலிருந்து பெண்களுக்கு இந்த மாதிரி விரஸங்களிலே பற்றுதல் உண்டாயிற்று.

கும்மிப்பாட்டு, பல்லிப்பாட்டு, கிளிப்பாட்டு, நலுங்குப்பாட்டு, பள்ளியறைப்பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு முதலிய பெண்களுடைய பாட்டெல்லாம் மிகவும் இன்பமான வர்ணமெட்டு. தமிழர்களின் தாய், அக்காள், தங்கை, காதலி முதலிய இவர்கள் பாடும் பாட்டு மறக்கக்கூடிய இன்பமா? ஞாபகம் இல்லையா?

தமிழ்ப் பெண்களின் பாட்டைக் கையெடுத்து வணங்குகிறோம். ஆனால் அதில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்கள் பல இருக்கின்றன.

தாள ஞானம்.

நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டிலே முக்கியமான குறை என்னவென்றால் இவர்களிலே பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை. பெண்களுக்குத் தாள ஞானம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சிரமமென்றும் இயற்கையிலே அவர்களுக்கு 'லய உணர்ச்சி' கொஞ்சம் குறைவென்றும் சிலர் தப்பாக நினைக்கிறார்கள். பெண்கள் குதித்துப் பாடும்போது பாருங்கள் 'டணீர், டணீர்' என்று எப்படித் தாளம் விழுகிறது. நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றை தாளமில்லாமற் பாடுவதற்குக் காரணம் பயிற்சிக் குறைவே யல்லாது வேறொன்றுமில்லை. அவர்களுக்கு நாம் சரியானபடி பாட்டுக் கற்றுக் கொடுப்பதில்லை.

'தாஸிகளா? கச்சேரி நடத்தப் போகிறார்களா? தாளம் தவறாமல் பாடி என்ன ஆகவேண்டும்?' என்று சிலர் பேசுவதுண்டு. தாளம் தவறிப் பாடினால் காதுக்கு விரஸமாக இருக்கும். ஜனங்களுக்குப் பிரியமுண்டாகாது. வீட்டிலும் அதே காரணந்தான். எனது மகள் பிழையாகப் பாடினால், பக்கத்தில் இருந்து கேட்கும் எனது காதுக்கு ஸுகப்படாது. அவளுக்கும் பாட்டில் நல்ல ருசி ஏற்படாது.

பெண்கள் பாடவே கூடாதென்று ஒரேயடியாக நிறுத்தி விட்டீர்களானால் ஒரு தொல்லையுமில்லை. பிறகு உலக வாழ்வுமில்லை. கல்யாணப் பாட்டுக்களும், தாலாட்டுப் பாட்டுக்களும், காதற் பாட்டுக்களும் நின்று போனால், பிறகு சுடுகாடுதான் மிச்சமிருக்கும். அப்படி நிறுத்த வேண்டுமென்று எவனும் விரும்பமாட்டான். ஆண்களைப் போலவே பெண்களும் எப்போதும் பாடத்தான் செய்வார்கள். ஆணைக் காட்டிலும், பெண்ணுக்கு ஸங்கீதத்திலே அதிகத் தொடர்பு உண்டு. "செய்வன திருந்தச் செய்". பாட்டுப் பாட விரும்புவோர் நல்ல பாட்டிற் பழக வேண்டும். பாட்டுக் கேட்க வழி தேட வேண்டும். பாட்டினால் மகிழ்ச்சி உண்டாகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுகிறது. உபசாந்தி பிறக்கிறது.

ஹார்மோனியம்.

தமிழ்நாட்டு மாதர்களுக்குள்ளே நல்ல பாட்டு வளர்ச்சி பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால், அதற்கு ஹார்மோனியப் பெட்டி ஒரு விக்கினமாக வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் பெட்டி நமது நாட்டிலே பழகுவதினால் சங்கீதத்திற்குப் பல விதவிதமான தீங்கு உண்டாவதாக வித்வான்களிலே பெரும்பாலோர் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், அதை நிறுத்துவதற்கு யாரும் வழி தேடவில்லை. நமது சங்கீதத்திலுள்ள சுருள்கள் வீழ்ச்சிகள் முதலியவற்றை ஹார்மோனியத்தில் காட்டமுடியாது. ஆதலால், அந்த வாத்தியத்தில் அதிகம் பழக்க முடையோரிடம் நமது ஸங்கீதத்தில் உள் விசேஷ நயங்கள் மங்கிப் போகின்றன. இதையெல்லாம் காட்டிலும், அந்தப் பெட்டி போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது.

மேலும், ஸங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கம் இல்லாதவர்களுக்கு எல்லாம் இந்தக் கருவியைக் கண்டவுடனே 'ஷோக்' பிறந்து விடுகிறது. சத்தமுண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன் பக்கத்துச் சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், 'ஹோ' என்ற சத்தமுண்டாகிறது. உடனே பாமரனுக்கு மிகுந்த சந்தோஷமுண்டாகிறது. "நாம் அல்லவா இந்த இசையை உண்டாக்கினோம்?" என்று நினைத்துக் கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும், கருப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத் தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்! பாமரன் பூரித்துப் போகிறான். முதல் நாள், முதல் தடவை, தொட்ட மாத்திரத்திலே இவ்வளவு கோலாஹலம் உண்டாகிறது. பிறகு ஸரளி, அலங்காரம், பிள்ளையார் கீதம், சங்கராபரண வர்ணம், 'பவநுத' கீர்த்தனம் -- இத்தனையும் ஹார்மோனியத்தில் மூன்று மாதத்திற்குள் பழக்கமாய் விடுகிறது. பாமரனின் மனதிலே "நாம் ஒரு வித்வான்" என்ற ஞாபகம் உறுதியாகப் பதிந்து விடுகிறது. ராக விஸ்தாரங்களைத் தொடங்கி விடுகிறான். ஒரு வீட்டில் 'ஹார்மோனியம்' வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசாரம் பண்ண வேண்டுமானல், அதற்கு இந்தக் கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை. வீணை தவறாக வாசித்தால் வீட்டில் உள்ள ஜனங்களுக்கு மாத்திரந்தான் துன்பம்; ஹார்மோனியம் தெரு முழுவதையும் ஹிம்சைப் படுத்திவிடுகிறது. ஒரு தேசத்தாரின் செவியைக் கெடுத்து ஸங்கீத உணர்ச்சி குறையும்படி செய்ய வேண்டுமானால், கிராமம் தோறும் 'நாலைந்து ஹார்மோனியம்' பரவும்படி செய்தால் போதும்.

நாடகக்காரர் வாய்ப் பாட்டுக்குச் சுருதி போடும் பொருட்டு இவை வைத்துக் கொள்ளுதல் ஒரு வேளை பொருந்தும். ஸாமான்ய ஜனங்கள் இதை சுருதிக்கு வைத்துக் கொள்வதனால் பல தீங்குகள் உண்டாகின்றன. இத் தீங்குகள் யாவை என்பதையும் நமது நாட்டுக்குப் பொருத்தமான வாத்தியங்கள் எவை என்பதையும் பெண்கள் பாட்டை நேராக்குவதற்கு இன்னும் என்ன வழிகள் தேட வேண்டுமென்பதையும் ஆராய்ச்சி செய்வோம்.

தம்பூர்.

நாடகக்காரர் தவிர மற்ற ஸாமான்ய ஜனங்கள் வீடுகளிலும் பஜனைக் கூடங்களிலும் பாடும்போது தம்பூர் சுருதி வைத்துக் கொள்வதே பொருந்தும். ஹார்மோனியம் பேரிரைச்சல் போடுவதிலே பாட்டின் சத்தம் கணீரென்று கேட்பதில்லை. பாட்டுக் கீழாகவும், சுருதி மேலாகவும் நிற்கிறது. அசாதாரணமான உச்ச சாரீரமுடைய சிலர் மாத்திரமே ஹார்மோனியத்தின் சுருதிக்கு மேலே பாடக்கூடும்; பொதுப்படையாக சாத்தியமில்லை. பாட்டுக்கு உதவியாக சுருதி ஒலிக்க வேண்டும். பாட்டை விழுங்கும் சுருதி பிரயோசனமில்லை. அது வெறும் மடமை.

வீணை.

வாத்தியம் படிக்க விரும்பும் ஸ்திரீகள் வீணை பழக வேண்டும். வீணை ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம். போகப்போக சுலபமாய்விடும். இந்தக் கருவியிலே தேர்ச்சி யேற்பட்டால் அதுதான் வாஸ்தவமான சங்கீதத் தேர்ச்சியாகும். பெண்கள் வீணை வாசிப்பதினால் நாட்டிலே ரஸப் பயிற்சியும் வாழ்க்கை நயமும் உண்டாகும். மைசூரிலும் மலையாளத்திலும் பழகியவர்களுக்கு, 'பெண்கள் வீணை கற்றுக் கொள்ளுதல் சிரமமில்லை என்பது தெரியும். வீணை பழகினால் அதிலேயே நல்ல தாள ஞானம் உண்டாய்விடும். வீணை மனிதர் குரல் போலவே பேசும். இன்பச் சுருள்களுக்கும் பின்னல்களுக்கும் வீணை மிகவும் பொருத்தமானது. அதன் ஒலி சாந்திமயமானது. ஸரஸ்வதி தனது கையில் வீணையை தரித்துக் கொண்டிருக்கிறாள். காளிதாஸ கவி பராசக்தியைப் பாடும்போது "மாணிக்ய வீணாம் உபலாலயந்தீம்" என்று தொடங்குகிறார்.

பொய்த் தொண்டை.

ஆணாயினும் பெண்ணாயினும் கள்ளத் தொண்டை வைத்துக் கொண்டு பாடலாகாது. தொண்டையத் திறந்து பாடினால்தான் சுகமுண்டாகும். இயற்கையிலே ஆணுக்குக் கனமான குரலும், பெண்ணுக்கு ஸன்னமான குரலும் ஏற்பட்டிருக்கின்றன. பெண்களிலே சிலர் இயற்கை ஸன்னத்தை அதிக ஸன்னப்படுத்த வேண்டுமென்று கருதிக் கள்ளத் தொண்டையிற் பாடுகிறார்கள். வேறு சிலர் லஜ்ஜையினாலே கள்ளத் தொண்டைக்கு வந்து சேருகிறார்கள். இதுவும் தவறேயாம். தொண்டையைத் திறந்து தெளிவாகப் பாடுவதிலே லஜ்ஜைப்பட யாதொரு நியாயமுமில்லை.

பெண்ணின் பாட்டு
இதிலுள்ள வகுப்புக்கள்.

இருபாலருக்கும் பொதுவான சந்தங்கள் இருப்பதுடன், பெண்களுக்கு மாத்திரம் சிறப்பான பாட்டுக்களும், சந்தங்களும் இருக்கின்றன. பண்டைத் தமிழ்நாட்டு மாதர் பாடிக் கொண்டிருந்த பல பாட்டு வகைகள் இப்போது வழக்கின்றி இறந்து போய்விட்டன.

ஆனால், ஜீவன் பெண்ணென்றும், பரமாத்மா ஆணென்றும் பாவனை செய்து பழைய பக்தர் பாடியிருக்கும் பாட்டுக்களில் பெண்களுக்குரிய சில பாட்டு வகைகள் காணப்படுகின்றன.

திருஷ்டாந்தமாக, திருவாசகத்திலே பின்வரும் வகைகள் காணலாம்.

(1) எம்பாவை (பெண்கள் நீராடப் போவது)
(2) அம்மானைப் பாட்டு
(3) தும்பி, குயில், கிளி முதலிய தூதுப் பாட்டுக்கள்
(4) தெள்ளேணம் (நடுவே ஒரு பெரிய முரசை வைத்துக்கொண்டு பெண்கள் சுற்றியிருந்து இரண்டு
கைகளிலும் கோல் கொண்டு கொட்டி அந்தத் தாளத்திற்கு இசைய பாடுதல்)
(5) சுண்ணம் இடித்தல் (சுண்ணம் என்பது கந்தப் பொடி - வாசனைப்பொடி)
(6) சாழல்
(7) உந்தி
(இவ்விரண்டும் பெண்களுடைய விளையாட்டு என்று தெளிவாகிறது, ஆனால் விளையாட்டின்
விவரங்கள் தெரியவில்லை)
(8) பூவல்லி (பெண்கள் பூக் கொய்யும்போது பாடும் பாட்டு)
(9) தோணோக்கம் (பெண்கள் தோள் கோத்துப் பாடிக் குதிப்பது)
(10) ஊசல் (இதை இக்காலத்தில் "ஊஞ்சல் பாட்டு" என்கிறோம்)
(11) காலைத் துயில் எழுப்பும் பாட்டு

இங்ஙனம், தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி முதலிய வேறு பல வகைகளும் இருந்தன. "பிள்ளைத் தமிழ்" என்ற நூல் வகுப்பைக் காண்க. இவற்றிலே, தாலாட்டு, ஊஞ்சல், அம்மானை, பள்ளியெழுச்சி என்ற நான்கு வகையும் வெவ்வேறு சந்தங்களுடன் இக்காலத்தில் நமது பெண்களுக்குள் வழங்கி வருதல் காண்கிறோம். பழைய காலத்து வகைகளை நாம் விஸ்தாரமாகக் கவனிப்பதற்கு வேண்டிய ஸெளகரியங்கள் இல்லை. ஆதலால், பெயர் மாத்திரமே குறிப்பிட்டிருக்கிறோம்.

குடும்பத்துப் பெண்களிலே சாஸ்திரப்படி ஸங்கீதம் கற்றுக் கொள்வோரின் தொகை மிகவும் குறைவு. நகரப் பழக்கமும், சுக ஜீவனமும் உடைய குடும்பங்களில் மாத்திரமே பெண்களுக்கு வாத்தியார் வைத்துப் பாட்டுக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆயினும், வாத்தியார் இல்லாமல் சாஸ்திர வழிகளில் வாஸனை ஏற்பட்டவர் பலர் உண்டு.

இவர்களையல்லாது, பொதுப்படையாக பார்க்குமிடத்து, நமது மாதர் பாட்டுக்க ளின் இனம் பின் வருமாறு:--

1. கல்யாணப் பாட்டு, நலுங்கு, பத்யம், ஊஞ்சல், ஓடம் முதலியன
2. கும்மிப்பாட்டு, குதித்துப் பாடுகிற பாட்டுக்கள். இவ்வகுப்பில் கிளிப்பாட்டு,
பல்லிப்பாட்டு முதலியனவும் அடங்கும்
3. அம்மானை, தூது, மாலை, சோபனம் முதலிய நீண்ட கதைப் பாட்டுகள்
4. பொதுத் தாலாட்டு விளையாட்டுப் பாட்டுக்கள், ஜாவளிகள், கீர்த்தனை முதலியன

மேலும் பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள், நெல் குத்துவோர், சுண்ணாம்பு இடிப்போர், குறிகாரி, தொம்பச்சி முதலிய வகுப்பினர் தமக்கென்று தனியான மெட்டுக்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட பாட்டுக்களில் மிக இன்பமான சந்தங்கள் பல இருக்கின்றன. இவை கால வெள்ளத்தில் மறைந்து போகுமுன்பாக ஸங்கீத வித்வான்கள் பொறுக்கி யெடுத்து ஸ்வர நிச்சயம் செய்து வித்தைப் பழக்கத்திலே சேர்த்துவிட வேண்டும்.

பெண்களுக்குக் கல்விப் பயிற்சி ஏற்பட்டால், இப்போதுள்ள கொச்சை மொழிகளும், பிழைகளும், ரஸக் குறைவும் பொருந்திய பாட்டுகளை மறந்து விடுவார்கள். ஆனால், அத்துடன் பழைய ஸங்கீதக் கட்டுக்களை மறந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழைய வழிகளை முற்றிலும் மறந்துபோய் நமது பெண்கள் நாடக மெட்டுக்கள் முதலியவற்றையே பாடத் தொடங்கி விட்டால், தமிழ்நாட்டில் ஸங்கீத உணர்ச்சி நாசமாய்விட ஹேது உண்டாகும்.

கொச்சை மொழிகளும் ரஸக் குறைவும் மலிந்த பாட்டுக்களென்று சொன்னோம். ஆனாலும் ஒரு கூடைப்பதரில் ஓருழக்கு அரிசியகப்படும். அதை நாம் இழந்துவிடக் கூடாது. கவிதைத் தேட்ட முடையோர் நமது பெண்களின் பாட்டைத் தேடிப் பார்த்தால், சிற்சில விடங்களில் நல்ல கவிதை கிடைக்கும். பாட்டி ராமாயணத்தில் குசலவரின் கதையை ஒரு நீளப்பட்டாகச் சொல்லுவாள். அதில் சீதையின் கஷ்டங்களைக் கேட்கும் போது குழந்தைகளெல்லாம் கண்ணீர் விட்டழும். ராமனைக் குசலவர் வெல்லும் இடத்து வரும்போது மனதிலே ஆத்திரம் பொங்கும். 'ராமனுக்கு வேணும், நன்றாக வேணும்' என்று தோன்றும். நலுங்குப் பாட்டு, கும்மி முதலியவற்றிலே கூடச் சில இடங்களிலே முத்துப்போல வார்த்தைகள் அகப்படும். தொழிற் பெண்களின் பாட்டு மிகவும் ரஸமானது. சந்தமும் இன்பம். ஒன்றுக்குப் பாதி நல்ல கவிதை.

பெண்களின் பாட்டில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களில் பெரும்பகுதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இதன் சம்பந்தமாக இங்கே இன்னும் சில வார்த்தைகள் சேர்க்க விரும்புகிறேன். வீட்டிலே பந்துக்களின் முன்பும், விவாக ஸந்தர்ப்பங்களிலும் பாடும்போது கூச்சத்தினாலே பாட்டை விடக்கூடாது. வித்தை விஷயத்தில் கூச்சம் காட்ட நியாயமில்லை. வித்தைப் பயிருக்கு விடுதலை நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் பெண்களுக்குள்ளே பொதுக் கல்வியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்க வேண்டும். கல்வியறிவில்லாத மூடர் எந்தத் தொழிலிலும் நேரே செய்ய மாட்டார்கள். தவிரவும் பார்ஸி மெட்டிலே ஆர்த்தி யெடுப்பது, இங்கிலீஷ் நலுங்கு முதலிய சோரமான விகாரங்களுக்குத் துணை செய்யக்கூடாது. நமது நாடக சாலைக்குள்ளே கல்வியறிவும், சாஸ்திரப் பழக்கமும், நாகரீகமும் நுழையும் காலம் வரை, நமது பெண்கள் நாடகப் பாட்டுக்களை கவனியாமல் இருப்பது நன்று. வேதாந்தக் கொடுமையையும் கொஞ்சம் குறைத்து விட்டால் பெரிய உபகாரம்.

ரவீந்திரநாத் தாகூர்

ஐரோப்பிய ஸங்கீதம், ஹிந்து ஸங்கீதம் இரண்டையும் பற்றித் தமது கொள்கைகளை வங்கத்துப் புலவராகிய ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூர் தமது சரித்திரக் குறிப்புகளிலே எழுதியிருக்கிறார். இவர் இள வயதிலேயே பல வருஷம் இங்கிலாந்தில் வாஸம் செய்தவர்; குழந்தை முதலாகவே நல்ல ரஸிகர். இவருடைய வார்த்தைகள் மதிப்புக்குரியன. ரவீந்திரநாதர் சொல்லுகிறார்:--

"குரலைப் பழக்குவதில் நமது தேசத்துப் பாட்டுக் காரரைக் காட்டிலும் மேற்கு நாட்டுப் பாடகர் மிகவும் சிறப்புடையோர். அவர்களுக்குத் தொண்டை வசப்பட்டிருப்பதைப் போலே, இங்கு இல்லை. நம்மவர்களிலே உயர்ந்த பாட்டுக்காரர் பாடும்போதுகூட 'இவர்கள் சிரமப்படுகிறார்கள்' என்ற விஷயம் வெளியே தெரிந்து விடுகிறது. யாதொரு சிரமமும் காட்டாதபடி மழை பெய்வது போலே இயற்கையாகப் பாடும்படி நம்மவர் சாரீரத்தைப் பழக்கவில்லை. சில சமயங்களில் மேல் ஸ்தாயியிலும் தமக்கு எட்டாத ஸ்வரங்களைத் தொட முயற்சி செய்கிறார்கள். ஐரோப்பாவில் பாட்டுக்கு வெளியேறுவோரின் தொண்டை, வல்லவன் வாசிக்கும் வாத்தியம் போலே, ஒரு குற்றம், ஒரு அபசப்தம், ஒரு கரகரப்பு, ஒரு பிழை இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு தொண்டையைப் பயிற்சி செய்யாதோர் அங்கே பாடுவதாக வெளிப்பட மாட்டார்கள்."

"நம்மவர்கள், பாட்டுக் கச்சேரி வந்தால், சபைக்கு வந்த பிறகுதான் தம்பூர் சேர்ப்பதும், மிருதங்கத்தைத் தட்டித் தட்டி ஒத்திட்டுப் பார்ப்பதும் ஏதெல்லாமோ ஒரு மணி நேரத்து வேலை செய்கிறார்கள். இந்த நீண்ட ஹிம்சையை சபையோர் சும்மா பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலே அப்படியில்லை. கருவிகளையெல்லாம் சபைக்கு வருமுன்பாகவே நேர்படுத்தி வைத்துக் கொண்டு சபைக்கு வந்து உடனே பாட்டுத் தொடங்குகிறார்கள்."

"நம்மவர்கள் வர்ணமெட்டு சரியா என்பதையே பிரதானமாகப் பார்க்கிறார்கள். அங்குள்ளோர் குரலையே முதலாக வைத்துக் கொண்டு ஆச்சரியமாக வேலை செய்கிறார்கள்."

"எனக்கு ஐரோப்பிய ஸங்கீதம் ரஸப்படவில்லை; நன்றாகத்தானிருக்கிறது; ஆனால் 'ஸர்க்கஸ்' வேடிக்கை எப்படி ஒழுங்காகவும் நன்றாகவும் இருக்கிறதோ அதே மாதிரி, ஒரு பெரிய பாட்டுக்காரி இங்கிலாந்தில் கச்சேரி நடத்தும்போது நான் கேட்கப்போனேன். பாடிக்கொண்டு வரும்போதே பக்ஷிகள் கத்தும் ஒலிகளைக் காட்டத் தொடங்கினாள். எனக்கு சிரிப்புப் பொறுக்க முடியவில்லை. பெருங் கேலியாக இருந்தது. ஆண் பாட்டு இத்தனை மோசமில்லை."

"நெடுநாள் பழக்கத்தினால் இப்போது எனக்கு ஐரோப்பிய ஸங்கீதத்தின் பொருள் விளங்கத்தான் செய்கிறது. ஆனால் நம்முடைய ஸங்கீதத்தின் வழி வேறு; அவர்கள் வழி வேறு. அது ஜடம்; நம்முடையது ஸூக்ஷ்மம். அது லெளகீகம், நமது பாரமர்த்திகம். அந்த ஸங்கீதத்திலே மானுஷிக சக்தி அதிகமிருக்கிறது; நமது ஸங்கீதத்திலே தெய்வ சக்தி விளங்குகிறது."

மேலே ரவீந்திரர் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்கவில்லை. ஸாராம்சத்தை எனது பாஷையில் எழுதியிருக்கிறேன். 'நம்முடைய ஸங்கீத சாஸ்திரம் ஐரோப்பிய சாஸ்திரத்தைவிட மேலானது' என்று ரவீந்திரர் சொல்லும் வார்த்தை முழுவதும் உண்மையென்பது இரண்டு முறைகளிலும் பழக்கமுடைய பண்டிதரெல்லாருக்கும் தெரிந்த விஷயமேயாம். ஆனாலும், நமது தேசத்து வித்வான்கள் கண்டப் பயிற்சி, ஸபா நாகரீகம் என்ற அம்சங்களில் ஐரோப்பியருக்கு ஸமானமாகும்படி முயற்சி செய்தால் நல்லது. ஜனங்களுக்கு இன்பம் அதிகப்படும்; பாடுவோருக்கு பணம் அதிகப்படும்.


நிறைவாக .......... தமிழருக்கு

தமிழா! தெய்வத்தை நம்பு. பயப்படாதே, உனக்கு நல்ல காலம் வருகின்றது.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங் கண்ட கவிகள், அற்புதமான ஸங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத் தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார். ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார். நமது நாட்டு ஸ்திரீகளிலே பலர் சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார்கள். ஒளி, சக்தி, வலிமை, வீர்யம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றன.

தமிழா! பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்.

ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே. 'ஜாதியிரண்டொழிய வேறில்லை' என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்.

பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர், மனைவியை "வாழ்க்கைத் துணை" என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம்.

வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டு பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள்போல் நடந்து கொள்ளாதே.

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள் லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை, எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்து விட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது; பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்; உண்மை சாஸ்திரங்களுக் கெல்லாம் வேர்; உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி; உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

தமிழா! எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை. எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. "முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய்" என்று தீர்மானம் செய்து கொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? "தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள்" என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக் கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. பிறர் என்பதனுள் வையகம் முழுதும் அடங்கும். கடமையில் தவறலாகாது. தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.

பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல், இனப் பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இச்செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.

இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது. பெண், பாட்டு, கூத்து முதலிய ரஸ வஸ்துக்களை அனுபவிப்பது இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா! உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. உனக்கு இனிமையும் அழகுமுடைய வஸ்துக்களெல்லாம் வசப்படுக. பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படுக. நீ எப்போழுதும் இன்பம் எய்துக.

வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. "வீடு" என்ற சொல்லுக்கு 'விடுதலை' என்பது பொருள். மேற்கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலையருள் செய்வான். தமிழா! உனது புருஷார்த்தங்கள் கைகூடும்!

வினாக்கள்

1. உண்மையான கவிதை எழுத வேண்டுமானால் கவிஞனிடம் அமையவேண்டிய இயல்பு என்ன?
2. சிறப்பான சங்கீதத்தை வழங்க வித்வான்களுக்கு பாரதி கூறும் வழிமுறைகள் என்ன?
3. நவரஸங்களின் 'ரஸ' உணர்வோடு பாடகர் பாடும்போது நமக்கு ஏற்பட வேண்டிய உணர்ச்சிகள் எப்படி இருக்க வேண்டுமென்று பாரதி கூறுகிறார்.
4. சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பெருமையை பாரதி எவ்வாறு விளக்குகிறார்?
5. வடநாட்டு இசைக் கலைஞர்கள், தென்னாட்டுக் கலைஞர்கள் இவர்கள் தங்கள் சாரீர வளத்தைப் பாதுகாக்கும் முறைபற்றி பாரதி என்ன கூறுகிறார்?
6. 'ஹார்மோனியம்' எனும் இசைக்கருவி பற்றி பாரதியாரின் கருத்தை ஒரு சிறு கட்டுரையாக வரைக:

2 comments:

 1. We stumbled over here different website and thought I might as well
  check things out. I like what I see so now i'm following you. Look forward to looking at your web page repeatedly.

  Feel free to surf to my webpage; serwis klimatyzacja

  ReplyDelete
 2. Howdy great website! Does running a blog similar to this take a
  large amount of work? I've absolutely no understanding of coding however I was hoping to start my own blog in the near future. Anyways, should you have any recommendations or techniques for new blog owners please share. I understand this is off topic but I simply wanted to ask. Thanks a lot!

  my homepage klimatyzacja do biur

  ReplyDelete

You can send your comments