Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, April 20, 2010

பாரதி வழி

திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் பாரதி அஞ்சல் வழிப் பயிற்சி - பாரதி வழி
(அமரர் ப.ஜீவானந்தம் கட்டுரைகள்: தொகுப்பு: இளசை மணியன்)

(அமரர் ஜீவா அவர்களின் நூற்றாண்டையொட்டி "தாமரை" இதழ்களில் வந்த கட்டுரைகளின் தொகுப்பை இப்பாடத் திட்டத்தின் 2ஆம் பாடத்தில் பார்த்தோம். இப்போது அவர் எழுதிய ஓர் சிறு நூலில் கண்ட கட்டுரைகளைத் தொகுத்து திரு இளசை மணியன் அவர்கள் வெளியிட்டுள்ள "பாரதி வழி" எனும் நூலிலிருந்து சில பகுதிகளை இந்தப் பாடத்தில் பார்க்கலாம். எட்டயபுரத்தில் பாரதி விழாவினை ஆண்டுதோறும் நடத்தி வருபவரும், பாரதி பிறந்த இளசை எனும் எட்டயபுரத்தில் வாழ்ந்து வருபவரும், அறிஞர் தொ.மு.சி.இரகுநாதன் அவர்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகத்தை நிர்வகித்து வருபவரும், மிகச் சிறந்த பாரதி அன்பரும், சிந்தனையாளருமான இளசை மணியன் அவர்களுக்கும், இந்த நூலை பிரசுரம் செய்த நியு செஞ்சுரி புத்தக நிலையத்தாருக்கும் நமது நன்றியறிதலை உரித்தாக்குகிறோம். மகாகவி பாரதியின் பணியில் இவர் ஆற்றியுள்ள சேவைகளைப் பாராட்டி திருவையாறு பாரதி இயக்கம் தனது வெள்ளி விழா மாநாட்டில் இவருக்கு பாராட்டும் நினைவுப் பரிசும் அளித்து கெளரவித்தது. சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற பாரதி-125 கருத்தரங்கில் இவர் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டார். எட்டயபுரம் சென்று பாரதியின் நினைவு மணிமண்டபம், பாரதி வாழ்ந்த இல்லம் இவற்றைப் பார்க்க விரும்புவோர், எட்டயபுரம், கார்த்திகை வீதியில் வசிக்கும் திரு இளசை மணியன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். இவர் பாதுகாத்து வரும் அமரர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் நூல்நிலையத்தில் இருக்கும் அரிய நூல்களையும் பார்த்து வரலாம்.)

இனி படியுங்கள் திரு இளசை மணியனின் "பாரதி வழி"யை.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்று தொடங்கினார் திருவள்ளுவர்.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே" என்று வணங்கினார் கம்பர்.

"வந்தேமாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்று தொடங்கினான் பாரதி.

தெய்வ பக்தியின் இடத்தில் தேசபக்தியை ஏற்றி வைத்துப் போற்றி நின்ற முதல் தமிழ்க்கவி பாரதிதான். "நாட்டன்பில்லா நடைப்பிணம்" என்று மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை கூறுகிறாராயினும்; .

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"

என்று தேசபக்திக்கு முதல் வரிசை அளித்தவன் பாரதியே. "பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு" என்று போற்றி நாட்டன்பை மக்களிடம் தட்டி எழுப்பி "சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் - இனி அஞ்சிடோம்" என்று ஆவேசக்கனலை மூட்டி, "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப் பயங்கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார்" என்று நம்பிக்கை ஊட்டுகிறான்.

தேசபக்தியை எழுப்ப, அடிமைத்தனத்தில் வெறுப்பை மூட்டுகிறான்.

"புல்லடிமைத் தொழில் பேணி - பண்டு
போயின நாட்களுக் கினி மனம் நாணி
தொல்லை யிகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையை 'தூ'வென்று தள்ளி
வந்தே மாதரம் என்போம்."

என்று நாட்பட்ட அடிமைத்தனத்தால் தடித்துப்போன தோலிலும் 'சுரீர்' என்று தைக்கும்படிச் சாட்டையடி கொடுத்து எழுப்புகிறான். "இளந்தமிழா! பள்ளி எழுந்தருளாயே" என்ற பாட்டுக் கேட்கிறது. அடிமை வாழ்வின் அருவருப்பையும் ஆத்திரத்தையும் ஊட்டி "குப்பை விரும்பும் நாய்க்கே - அடிமை கொற்றத்தவிசு முண்டோ?" என்று ஆங்கிலேயன் மூலம் இந்தியனின் - தமிழனின் ஆத்திர நெருப்பில் எண்ணெய் வார்த்து, மான உணர்ச்சியைக் கிளறி:

"மானிட ஜென்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உணர்ந்தாரேல் - அவர்
ஊனுடல் தீயினும் உண்மைநிலை தவற
உடன்பாடு மாறுளதோ?"

என்று வினவி, வீரச் சுதந்திர வேட்கையைக் கிளப்புகிறான் பாரதி. அவன் வேண்டிய சுதந்திரம் மிகப் பெரிது. அது 'ஆரமுது', புளித்த கள் அல்ல; அது விண்ணில் இரவி, மின்மினி அல்ல; 'கண்ணினும் இனியது அந்தச் சுதந்திரம்'. பாரதி கருத்தில் இந்தச் சுதந்திரம் "கண்ணீரும் செந்நீரும்" பாய்ச்சி வளர்க்கப்பட்டதேயன்றி, 'தண்ணீர் விட்டு' வளர்க்கப்பட்டதோ, படுவதோ அல்ல. ஆகவே, இதை 'வீர சுதந்திரம்' என்று வீறுகொண்டு பாடுகிறான். பெருவாழ்வுக்கு இன்றியமையாத இந்தச் சுதந்திரத்தை போராடி, 'எதுவும் நல்கி இங்கெவ்வகையானும்' வெல்ல முயலாமல், அற்ப சுகத்தில் மூழ்கிக் காலத்தைத் தள்ள முயல்வோரை நினைத்துதான் பாரதி

"மண்ணிலின்பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?'

என்று கேட்கிறான். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதும், சுதந்திரத்தை விற்றுச் சுகவாழ்வு பெறுவதும், கை கொட்டிச் சிரிக்கத்தக்க மகா மடத்தனம் என்று என்ன அழகாகச் சொல்கிறான் பாருங்கள்!

நரக வாதனைகளும், ஹிட்லர் கொலை பாதகங்களும், முசோலினியின் அட்ட காசங்களும் 'விஸ்வரூப'மெடுத்து வெம்புலி போல் பாய்ந்தாலும் "சுதந்திர தேவீ! நின்னைத் தொழுதிடல் மறக்கிலனே" என்று சுதந்திர வேட்கையோடு இரண்டறக் கலந்து நிற்க வேண்டிய உடும்புப் பிடிப்பையும் உருக்கு உறுதியையும் இசை முழக்குகிறான்.

எத்தனை செல்வச் செழிப்பிலும், ஆடம்பர போகபோக்கியத்திலும் திளைப்பவராயினும், சுதந்திரம் இல்லாதவராயின் அவர்களுடைய வாழ்க்கை 'அணிகள் வேய் பிணம்' (அலங்காரம் செய்யப்பட்ட பிரேதம்) போல் பாழானதே என்று 'நெட்டை நெடுமரங்களுக்கும்' மண்டையில் உறைக்கும்படி அடித்துக் கூறுகிறான். சுதந்திரம் இல்லா நாட்டில் "ஆவியங்குண்டோ? செம்மை அறிவுண்டோ? ஆக்கமுண்டோ?" என்று உலகம் அதிர வினவுகிறான். அடிமை நாட்டில் காவிய நூல்களும், ஞானக் கலைகளும் விளையாதென்கிறான். விடுதலை விழையாத, சுதந்திரத்தைப் பரிபாலிக்காத மக்களை "பாவிகள்" என்று சபிக்கிறான். சுதந்திரம் இல்லாத நாடு, நாடன்று. அது நடைப்பிணங்கள் திரியும் காடு என்று கூறி தமிழகத்தின் கும்பகர்ணத் தூக்கத்தை இருப்புலக்கை கொண்டு அடித்துக் கலைக்கிறான்.

சுதந்திரத்தின் பெருமையை நன்றாக உணர்ந்த பாரதி, "கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும், நின் பேற்றினைப் பெறுவோம்" என்று கோஷிக்கிறான். அதோடு நிற்கவில்லை:

சுதந்திரம், ஜனநாயகம் என்னும் "பேரறத்தினைப் பேணும் நல் வேலி" என்றும், "சோர வாழ்க்கை, துயர், மிடி" ஆகிய காரிருட் படலங்களைக் கிழித்தெறியும் 'சோதி' என்றும், 'வீரருக்கு அமுது' என்றும் அமுதத் தமிழில் பொழிகிறான். இவ்வாறு பல பாட்டுக்கள், கண்ணிகள், விருத்தங்கள் மூலம், பொதுப்படையாகச் சுதந்திரத்தின் மாண்புகளை, உலக இலக்கியத்தில் இடம் பெறத்தக்கவாறு தமிழனுக்கு விளக்கிவிட்டு இந்நாட்டுக்கு ஏற்ற ரீதியில் சுதந்திரத்தையும் விடுதலையையும் பற்றிப் பாடுகிறான். எல்லோரும் பாடத் தக்க பாணிகளில் பாடுகிறான் - "சுதந்திரப் பள்ளு", "விடுதலை" என்ற இரண்டு பாடல்களில்.

'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டொமென்று' பாரதி ஆனந்த சுதந்திரப்பள்ளுப் பாடும்போது, "வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என்று பாடிவிட்டு, வருணாசிரம தர்மம் அல்லது சாதி முறையின் ஆதிக்கம் தவிடு பொடியாக வேண்டும், எல்லோரும் சமமென்பது உறுதியாகவேண்டும், வாழ்வில் எல்லோருக்கும் சமசந்தர்ப்பமும், சம உரிமையும் கிடைக்கப் பெற வேண்டும், எல்லோரும் ஒன்றெனும் காலம் வரவேண்டும், பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வரவேண்டும், கெட்ட நயவஞ்சகக்காரர்களுக்கு நாசம் வரவேண்டும், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து, வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்து, விழலுக்கு நீர்பாய்ச்சி வீணருக்கு உழைத்து 'மாய மாட்டோம்' 'உடலும் ஓயமாட்டோம்' என்ற நிலை ஏற்படவேண்டும். நாமிருக்கும் நாடு நமது என்ற அறிவும், அது நமக்கே உரிமை என்ற உணர்வும் ஏற்படவேண்டுமென்று பாடுகிறான். மேற்கண்ட அனைத்தும் நிறைவேறினால்தான் பூரண சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என்பது பாரதியின் கருத்து.

'விடுதலை'ப் பாட்டு மேலும் பல விளக்கங்களைத் தருகிறது. வெள்ளை ஆதிக்க வர்க்கத்திலிருந்து விடுதலை பெறுவதோடு பாரதி திருப்தி கொள்ளவில்லை. "சாதியால் வந்த சிறு நெறி"யால் தாழ்த்தி மிதிக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற்றால்தான் உண்மையான விடுதலை வரும் என்று தெளிகிறான். அதனாலேயே, 'பறையர்க்கும், தீயர்க்கும் (கேரளப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள்), புலையர்க்கும் விடுதலை வேண்டும், பரவரோடு குறவருக்கும், மறவருக்கும் விடுதலை வேண்டும் என்று அழுத்தந்திருத்தமாகக் கோருகிறான். வெறும் விடுதலை மாத்திரமல்ல; அவர்கள் 'திறமைகொண்ட, தீமையற்ற' தொழிலையும் 'தேர்ந்த கல்வி ஞானமும்' எய்தி நல்வாழ்வு வாழ்வதே உண்மையான விடுதலை என்கிறான். ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை என்றும், சாதியினால் எவனும் இழிவு கொண்ட மனிதன் என்ற நிலை இந்தியாவில் இல்லை என்றும், அப்படிப்பட்ட சமூக வாழ்வு அமைந்தால்தான் உண்மையான விடுதலை மலரும் என்கிறான். கல்வியும், செல்வமும் சகலரும் எய்தி, எல்லோரும் மனமகிழ்ந்து கூடி, மனிதர் யாவரும் ஒரு நிகராக வாழவேண்டுமென்கிறான். மாதர்களும், 'தாதர்கள்' (அடிமை, தொண்டர்) என்ற நிலைமை மாறி சரிநிகர் சமானமாக வாழவேண்டுமாம்.

"ஒரு நாட்டை மற்றொரு நாடு அடிமை கொள்ளும் வரையிலும் முதலாளிகள் தொழிலாளிகளைக் கொடுமை செய்யும் வரையிலும், ஆடவர் பெண்டிரை அடக்கி ஆளும் வரையிலும் நான் நிம்மதியாக இருக்க மாட்டேன்" என்று ரோமன் ரோலண்ட் எனும் பிரெஞ்சு நாட்டு அறிஞர் சொன்னார். பாரதி ஒருபடி மேலே போய் சொல்லுகிறான்.

"பொய்மை தீர மெய்மை நேர
வருத்தமழிய வறுமை யொழிய
வைய முழுதும் வண்மை பொழிய
வேண்டுமடி யெப்போதும் விடுதலை அம்மா!"

'ஒற்றுமை பயின்றாயோ?' என்ற ஆங்கிலேயன் கேட்பதாக ஒரு கேள்வியைக் கேட்டு, இந்த நாட்டின் சாபக்கேடு ஒற்றுமையின்மைதான் என்பதை உணரவைக்கிறான் பாரதி. 'ஒற்றுமைக்குள் உய்யவே, ஒரு பெரும் செயல் செய்யத்' துணிகிறான். 'ஒற்றுமை வழி ஒன்றே வழியென்ப தேர்ந்திட்டோம் - நன்கு - தேர்ந்திட்டோம்' என்று பாருலகதிர பறைசாற்றி, ஏகாதிபத்திய வாதிகளுக்கு புரிய வைக்கிறான்.

"ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?"

என்று அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக ஒற்றுமையின் அவசர அவசியத்தை உணர்த்துகிறான். சாதிப் பிரிவினைகள் தேசியத்திற்கு பரம வைரி, சுதந்திரப் போராட்டத்திற்கு பேரிடையூறு என்று உணர்த்தும் விதமாக


"ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அந்நியர் வந்து புகலென்ன நீதி"
ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?"

என்பதை அன்னியர்களுக்குப் புரிய வைக்கிறான். 'சாதி கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னிற் செழித்திடும் வையம்' என்றும் 'தகரென்று கொட்டு முரசே - பொய்மைச் சாதிப் பிரிவினையெல்லாம்' என்றும் பாடிய பாரதியை விடத் தமிழர் மரபில் சாதி ஒழிப்பில் சிறந்த வீரனாக விளங்கியவன் யார்?

பாரதத் தாயின் மணிக்கொடிக்கு வணக்கம் செலுத்த எல்லோரையும் அழைக்கின்ற பாடலில் கொடி வணக்கம் காட்சியைப் பாரதி வர்ணிப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

"செந்தமிழ் நாட்டுப் பொருநர், சேரன்றன் வீரர் (மலையாள நாட்டினர்) சிந்தை துணிந்த தெலுங்கர், தாயின் சேவடிக்கே பணி செய்திடு துளுவர், கன்னடர், போரிற் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், இந்துஸ்தானத்து மல்லர், மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர், பஞ்சநதத்துப் பிறந்தோர் (பஞ்சாபியர்) துஞ்சும் பொழுதினும் தாயின் தொண்டு நினைத்திடும் வங்கத்தினர் (வங்காளத்து மக்கள்) இத்தகைய தேசிய இனத்தார்களைத் திரட்டி, அணியணியாகக் கொடியின் கீழ் கொண்டு வந்து அணிவகுத்தி நிற்கச் செய்கிறான். இவர்கள் எத்தகையோர்?

"நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்"

என்று பாரத நல்வீரர்களின் ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கிறான். இப்படி இந்திய தேசிய இனங்கள் ஒன்றுபட்டு நின்று சாதிக்கப்போகும் வெற்றிச் சாதனைகளைத் தன் கற்பனைத் திறனோடு படம் பிடித்துக் காட்டுகிறான்.

'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'
'சிந்து நதியின் மிசை நிலவினிலே சேர நன்னாடிளம் பெண்களுடனே,
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்'
'கங்கைநதிப்புரத்துக் கோதுமைப் பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்'.
'சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'
'காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்'
'ராசபுதானத்து வீரர்தமக்கு நல்லியல் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்'

இப்படிப் பலப்பல சாதனைகள், தேசிய இனங்களின் ஒற்றுமையால் ஏற்படும் லாபங்களை பாரதி எடுத்துக் காட்டுகிறான். 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப் பயங்கொல்லுவார் துயர்ப்பகை வெல்லுவார்' என்றும் அதன் விளைவுகளையும் எடுத்துக் காட்டுகிறான்.

ஆண் பெண் சமத்துவமே அறமென்று தெரிகிறதா? வாருங்கள்! மாதர்களை அடிமைத் தளைகளிலிருந்தும் விடுதலை செய்வோம் என்று அழைப்பு விடுக்கிறான் பாரதி! 'புதுமைப் பெண்' தனது 'வண்மலர்த் திருவாயால்', 'நாரதவீணை'யிலும் இனிமையாக 'கண்ணன் வேய்ங்குழலி'னும் மதுரமாக "அறிவுகொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர் பித்தர்" என்றும், "சிறிய தொண்டுகள் தீர்த்தடிமைச் சுருள் தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டும்" என்றும் "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்" என்றும் "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும், ஞானம் நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடி பெண்ணின் குணங்கள்" என்றும், "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லை" என்றும்; "உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேறவும், ஓது பற்பல நூல்வகை கேட்கவும் இலகு நீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந்திங்கே, திலகவாள் நுதலார் நங்கள் பாரத தேசமோங்க உழைத்திட வேண்டும்" என்றும்; "விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பர்" என்றும்; "சாத்திரங்கள் பலபல கற்பர் செளகரியங்கள் பலபல செய்வர், மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பர், மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பர், ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வர்" என்றும் சீனியன் (சர்க்கரை என்பதை நெல்லைச் சீமையில் இப்படிச் சொல்வது வழக்கு) பந்தலில் தேன்மாரியாகப் பொழிகிறான்.

சில்லறைச் சீர்திருத்தக்காரர்கள் போல், பெண் மக்களுக்கான சில சிறுசிறு சீர்திருத்தங்களை பாரதி பாடவில்லை. "ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே" என்று ஆண் பெண் நேர்-நிகர் வாழ்க்கையே கோருகிறான். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பாரதி பாடும்போது பெண்ணடிமையைச் 'சொக்கப்பனை' கொளுத்த அவன் மூட்டும் நெருப்பை வளர்க்க 'டின் டின்'னாக எண்ணெய் கொண்டு போக வேண்டுமென்று நம்மிடம் ஆவேசம் படர்கிறது.

அரசியல் விடுதலையையும் பிற விடுதலைகளையும், பெண் விடுதலையை மறந்து பேசித் திரிந்த பெரியவர்களையும், 'வீரர்களையும்' பார்த்து

"விண்ணுக்குப் பறப்பது போல் கதைகள் சொல்வீர்
விடுதலையென்பீர், கருணை வெள்ளமென்பீர்
பெண்ணுக்கு விடுதலை நீ இல்லையென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை".

என்று கிண்டல் செய்தும் மண்டையிலடித்தும் மயக்கம் தெளிவிக்கிறான். "பெண்டாட்டியை அடிமைப்படுத்த வேண்டி பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?" என்று பாரதி ஈரேழுலகமும் ஊடுருவிப் பாயும்படி ஒரு கேள்வியைப் போடும் பொழுது, 'ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தாயினத்திற்கு இழிந்த தன்னலத்தால் என்ன அநீதம் புரிந்தோம்' என்று நம்மை நாமே சபிக்கத் தோன்றுகிறது.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்,
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண் என்று கும்மியடி"

என்று குவலயம் குலுங்கும்படி கும்மியடித்தான். அவன் கனவு இன்று நனவாகி வருவதைக் காண்கிறோம்.

மக்களின் கண்களையும், கருத்தையும் கவர்ந்து நிற்கும் முக்கியப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை. உணவுப் பஞ்சம் பொதுமக்களை நெருப்புச் சட்டியில் புழுவைப்போல் வறுத்தெடுத்து விடும்.

"கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்று - நித்தம்
பரிதவித்து உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே"

பாரதியின் கண்களில் இத்தகைய காட்சிகள் அவனுடைய வாழ்நாளில் அதிகம் பட்டிருக்கிறது. மக்கள் நலத்தைவிட, தன்னலமே பெரிதென்ற போலி தேசபக்தர்கள் இன்றுபோல் அன்றும் இருந்திருக்கிறார்கள். "பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள்போல் துஞ்சத் தம் கண்ணாற் கண்டும் - கிளியே, சோம்பிக் கிடந்தாரடி" என்றும்; "தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சியுறார், வாயைத் திறந்து சும்மா - கிளியே, வந்தேமாதரமென்பார்" என்றும் பாடி நடிப்புச் சுதேசிகளின் தோலை உரிக்கிறான்.

'ஊருக்கு நல்லது சொல்வேன்' என்று தொடங்கி முரசு அறையும் பாரதி

"வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதர் எல்லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர் - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.
..................................................
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்"

என்று பிறர் பங்கைத் திருடும் கயவர்கள், பெரிய மனிதர்கள் உருவிலும், தேசபக்தர்கள் உருவிலும் ஒய்யாரமாக உலாவித் திரிவதை நினைத்தால் உள்ளம் குமுறுகிறது. பஞ்சத்தைப் போக்க பாரதி காட்டும் வழி என்ன?

"இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெரும் நாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரும் நாடு - நித்தநித்தம்
கணக்கின்றித் தரும் நாடு"

என்று நாட்டு வளத்தை அழகுற வர்ணித்தபின் இத்தகைய நன்னாட்டில் "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ?" என்ற கேள்விகளை நாடு அதிரக் கேட்கிறான். "இல்லை! இல்லை!!" என்ற பேரொலியுடன் மக்கள் திக்கெட்டுமிருந்து திரண்டு வந்து கூடுகின்றனர். "தாரணி விளக்கமாம், என்னரு நாட்டின் தவப் பெயர் அதன் மிசை ஆணை", "வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெயர் ஆணை" பஞ்சத்தை இந்த நாட்டில் வருவதற்கு அனுமதியோம் என்ற பாரதியின் குரலுக்கு "நினைத்தது முடியும்" என்று மக்கள் எதிர்க்குரல் கொடுக்கின்றனர். "இனி ஒரு விதி செய்வோம்!" என்கிறான் பாரதி. "அதை எந்த நாளும் காப்போம்" என்கின்றனர் மக்கள். உரத்த குரலில் பாரதி ஓர் சத்தியப் பிரமாணம் செய்கிறான்: "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று. ஒரே ஆரவாரம். அவன் உறுதிமொழியை மக்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர்.

அமைதி திரும்பிய மக்கள் கூட்டத்திடையே பாரதி முழங்குகிறான்: "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் ஓர் நிறை, இது ஒப்பிலாத சமுதாயம், உலகத்துக்கு ஓர் புதுமை!" என்று முடிக்கிறான்.

பொதுவான இலட்சியங்களை 'அற்புத'மாகச் சித்தரித்த வரகவி மட்டுமல்ல பாரதி. அவன் நாட்டின் வருங்காலச் சீரமைப்புச் சிற்பியுங்கூட. "மண் பயனுற வேண்டும்; வானகம் இங்கு தென்பட வேண்டும்" என்று இறைவனிடம் பாரதி வேண்டுகிறான். இந்த நாட்டை மாற்றியமைக்க பல இந்திர ஜால மகேந்திர ஜாலங்கள் நடைபெற வேண்டுமென்கிறான். கூழாங்கல்லை வைரக்கல் ஆக்குதலும், செம்பைத் தங்கமாகச் செய்வதும், புல்லை நெல்லெனப் புரிவது, ஆண் பன்றியை அடலேறு ஆக்குவது - இவை போன்ற விந்தை புரியும் சக்தியோடு பணியாற்ற வேண்டுமாம்.

"தொல்லை தீர்த்துயர்வு கல்வி - வெற்றி
சூழும் வீரம் அறிவாண்மை
கூடும் திரவியத்தின் குவைகள் - திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள் - இவை
நாடும்படிக்கு வினை செய்து - இந்த
நாட்டோர் கீர்த்தி யெங்கு மோங்க - கலி
சாடும் திறம் எமக்கு வேண்டும்"

என்று வேண்டுகோள் விடுக்கிறான். உழைக்கும் மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்றும் வரையறுத்துக் கூறுகிறான்.

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பிரே!
அரும்பும் வேர்வை உத்ிர்த்துப் புவிமேல்
ஆயிரந்தொழில் செய்திடுவீரே!
பெரும் புகழ் நுமக்கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!
மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே!
மரத்தை வெட்டி மனை செய்குவீரே!
உண்ணக் காய்கனி தந்திடுவீரே!
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே!
எண்ணெய், பால்நெய் கொணர்ந்திடுவீரே!
இழையை நூற்று நல் ஆடை செய்வீரே!
விண்ணினின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!
பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே!
பரத நாட்டியக் கூத்திடுவீரே!
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே!
நாட்டிலே அறம் கூட்டி வைப்பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்டமின்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நேரே!"

இது நடைபெற என்ன வேண்டும்? "......தொழில் பண்ண பெருநிதியம் வேண்டும் - அதில் பல்லோர் துணைபுரிய வேண்டும்". அப்படித் தொழில் புரிந்து ஈட்டும் பொருள்களையும் செல்வத்தையும் "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ? அழுது கொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லமோ?" என்றும் ஆவேசமடைகிறான். அன்னியர்கள் வெளியேற நாம் அமைக்கும் புதிய சமுதாயம் வளம்பெற நாமெல்லாம்:

"நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம், கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம், நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"

பாரதி தான் தொட்டுப் பார்த்த பொருள்களையெல்லாம் மூலவேரின் அடிநுனிவரைச் சென்று தொட்டுப் பார்த்திருக்கிறான். அமைதி கெட்டு உலகத்து நாடுகள் போர் மேகங்கள் சூழ நிற்கின்ற போதும், உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக அமைதி கெட்டு நாடு பாழ்பட்டுப் போகும்போதும் சமாதானம் எனும் அரிய சூழ்நிலையும் இணக்க வாழ்வும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டுமென்பது அவன் குறிக்கோள். இந்தக் குறிக்கோளைப் பற்பல கோணங்களிலிருந்தும் பற்பல விதமாகச் சித்தரித்துக் காட்டுகிறான்.

அவன் 'ஜெய பேரிகை' கொட்டுகிறான் அல்லவா? எப்படிக் கொட்டுகிறான்? 'நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை' என்கிற பேரெண்ணத்தில் ஆனந்தமாக மிதந்துகொண்டு கொட்டுகிறான். காக்கை குருவிகளெல்லாம் தன் சாதி, கடல் மலைகளெல்லாம் தன் கூட்டம் என்ற தெளிந்த காட்சியில் ஜெயபேரிகை கொட்டுகிறான்.

"வியனுலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்"

இந்த வியனுலகத்தை, இந்தப் பிரபஞ்சத்தை அமுதென நுகர வேண்டுமென்பது அவன் ஆசை. அதுதான் வெற்றி. பிரபஞ்சம் முழுவதையும் அமுதமாக அனுபவிக்க வேண்டும் என்கிற அந்தப் பரந்த பெருவாழ்வின் பேரெண்ணத்தைச் சிந்தித்துப் பார்ப்போம்! நிரந்தரமாக உலகம் சமாதானத்தில் வாழ மூலவேர் எது என்பது நமக்குப் புலப்படும்.

தனது கவிதைகள் பற்றி பாரதி வழங்கும் 'முன்னறிவிப்பு' என்ன தெரியுமா? அவைகளில் "சுவை புதிது; பொருள் புதிது; வளம் புதிது; சொற் புதிது". இப்படி அனைத்தும் புதிதான அவனது படைப்புகளில் அகவற்பாவாக வரும் சில வரிகளைப் பாருங்கள்.

"பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்,
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்,
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்ப முற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானாகாசத்து நடுவே நின்று நான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும் மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன், இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
'அங்ஙனே ஆகுக' என்பாய் ஐயனே!"

'விநாயகர் நான்மணி மாலையில்', விநாயகப் பெருமானிடம் பாரதி கேட்கும் வரங்கள் அனைத்தும் புதுமையோ புதுமை. பேசாத பொருளைப் பேசி, கேட்கா வரத்தைக் கேட்க துணிந்த பாரதி கேட்கும் வரங்கள் அனைத்தும் யார் பொருட்டு? எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும், பூவுலகில் அன்பும் அமைதியும் கொடிகட்டிப் பறக்க வேண்டும். துன்பமும், மிடிமையும், நோவும், சாவும் கூண்டோடு தொலைய வேண்டும். இவ்வாறு அவன் மானிட வர்க்கத்தின் நல்வாழ்வுக்காக வேண்டுகிறான். சாவு கூண்டோடு தொலைய வேண்டும் எனும்போது, அகால மரணம், நோயினால் மடிதல், போரில் வீழ்தல் போன்ற சாவுகள் நீங்கி மக்கள் ஆரோக்கியமாக வாழவேண்டுமென்று பாடுகின்றானேயன்றி, இயற்கையின் செயல் பாட்டிலிருந்து மாறவேண்டுமென்பதில்லை.

பாரதியின் முப்பெரும் காவியங்களில் ஒன்றான பாஞ்சாலி சபதத்தில், தருமன் சூதாடி நாட்டை இழக்கும் கட்டத்தில், அவன் செய்கையைச் சொல்ல வந்த பாரதி "சிச்சீ! சிறியர் செய்கை செய்தான்" என்கிறான். இங்கு கவிக்கூற்றாக பாரதி சொல்லும் ஒரு கருத்து:

"நாட்டு மாந்தரெல்லாம் தம்போல்
நரர்களென்று கருதார்
ஆட்டு மந்தையாமென்றுலகை
அரசர் எண்ணி விட்டார்"

மக்களை ஆட்டுமந்தைகளாகக் கருதிக்கொண்டு, தங்கள் சுயநல நோக்கில் நாடுகளைப் பிடிப்பதும், நாடுகளைப் பணயம் வைப்பதும், நாடுகளை நாசம் செய்வதும் நடைபெற்றுவருவதை எடுத்துக் காட்டி வேகப்படுகிறான். அவனது புதிய ஆத்திசூடி சிறுவர்களுக்குக் கூறும் புதிய உபதேசம். பழைய ஆத்திசூடி பாடிய ஒளவையார் "போர்த்தொழில் புரியேல்" என்கிறாள். இன்றைய சூழ்நிலைக்கு அது ஒத்து வருமா? எனவே பாரதி சிறுவர்களுக்கு அறிவுரை கூறுகிறான் தனது புதிய ஆத்திசூடியில் "போர்த்தொழில் பழகு!" என்று.

பகைவனுக்கு அருள்வாய் எனும் அவன் பாட்டில் "தின்னவரும் புலிதன்னையும் அன்போடு சிந்தையிற் போற்றிடுவாய் - நன்னெஞ்சே! சிந்தையிற் போற்றிடுவாய்" என்கிறான். அன்புகொண்ட இவ்வையம் தழைக்க அழைப்பு விடுகிறான் பாரதி.

மகாத்மா காந்தியடிகள் பற்றி அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலந்தொட்டு பாரதி கவனித்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறான். அவர் இந்தியா திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஆழங்கால் பட்டிருந்தபோது அவரைப் போற்றிப் பாடும் சந்தர்ப்பம் பாரதிக்குக் கிடைக்கிறது. அந்த மகாத்மாவின் சாத்வீக அன்பு வழிப் போர் அவன் மனதைக் கவர்கிறது. அதே நேரம் நடந்து முடிந்திருந்த முதல் உலக யுத்தத்தின் விளைவாக உலக மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஏற்பட்டிருந்த ஏராளமான சேதங்களையும் நாசங்களையும் எண்ணிப் பார்க்கிறான். அப்போதுதான் யுத்தம் அழிவைக் கொடுக்கிறது, சமாதானம் மட்டுமே உலக மக்களை வாழ்விக்கும் என்று தெளிந்து அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பஞ்சகத்தில் இவ்வாறு பாடுகிறான்.


"தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்ன மெய்ஞ்ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடுபோர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைந்திடத் துணிந்தனை, பெருமான்!

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்;
அதனினும் திறன் பெரிதுடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த் தொண்டர் தங்கள்
அறவழி என்று நீ அறிந்தாய்;
நெருங்கிய பயன் சேர் 'ஒத்துழையாமை'
நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதி கண்டு பகைத் தொழில் மறந்து
வையகம் வாழ்க நல்லறத்தே".

மகாத்மா காந்தியடிகளின் அறவழிப் போராட்டமே சிறந்தது என்ற உணர்வினைப் புகட்டுகிறான். கெட்ட போரிடும் வழியைப் 'பெரும் கொலைவழி' என்று இகழ்கிறான். இந்த வையகம் பகைத்தொழில் மறந்து நல்லற வழியில் வாழ்தல் வேண்டும் என்கிறான்.

பாரதி வழி வாழ்க!

தமிழ் மக்களின் சிறந்த பண்பாடுகளையும் உணர்ச்சி ஓட்டங்களையும் உய்த்தறிந்து, துய்த்தறிந்து உணர்ந்தவன் பாரதி. தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வு எப்படியிருக்கும் என்று சித்தரித்தவன் பாரதி. தமிழ் மக்களின் குறைகளை எல்லாம் எடுத்துக் காட்டி அவற்றை ஒழிக்க வழி காட்டியவன் பாரதி. தமிழ் மக்களின் முன்னேற்றப் பாதையில் கண்ட தடைக்கற்களைத் தூக்கியெறிந்து பாதையைப் புதுப்பித்தவன் பாரதி. 'பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவிகொள்ள', 'வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவச்' செய்தவன் பாரதி.

"நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்"

என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவன் பாரதி. எனவேதான் "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!" என்றொரு கிராமத்து மனிதன் பாடுவதாக புகழ்ந்து பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

பாரதி காலத்திற்குப் பின் பாரதியை எந்தக் கவிஞனாலும் புறக்கணிக்க முடியாது!
எந்த எழுத்தாளனும் அலட்சியம் செய்ய முடியாது!
எந்த மக்களாலும் தலைவர்களாலும், கிளர்ச்சிகளாலும் அசட்டை செய்ய முடியாது!

அத்தகைய தனிப்பெரும் பீடத்தில் ஏறிக்கொண்டான் பாரதி. ஆகவே இந்த சகாப்தத்தை "பாரதி சகாப்தம்" என்று சொல்வதே பொருத்தம் என்கிறார் திரு.வி.க.

தேசியக் கவி நாமக்கல் கவிஞர் தம்மை "பாரதி பரம்பரை" என்பதில் பெருமை கொண்டாடுகிறார். தமிழகத்தின் உயிர்க் கவிஞனாகிய கனகசுப்புரத்தினமோ "பாரதிதாசனாகி" விட்டார்.


"சேமமுற வேண்டுமெனில் தமிழ் முழக்கம்
தெருவெல்லாம் செழிக்கச் செய்வீர்!"

என்று ஆணையிட்டார் பாரதி. இந்த ஆணையை நிறைவேற்ற பாரதி இலக்கியங்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டன. எவரும் அவன் படைப்புகளை வெளியிடலாம். இந்தக் கட்டுரையின் நிறைவாக பாரதியின் சில அபூர்வமான கவிதைத்துளிகளைக் காணலாம். அவற்றில் பொதிந்து கிடக்கும் வீரியம் மிகுந்த கருத்துக்களை நம் மனதில் ஏற்றுக்கொண்டு சிந்தனை செய்வோம்.

"சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு தன்னில் செழித்திடும் வையம்".
"பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணீர்".
"பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்".
"வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில் மானுடர் வேற்றுமையில்லை".
"நிகரென்று கொட்டு முரசே - அதில் நீணிலம் வாழ்பவ ரெல்லாம்"
"அன்பென்று கொட்டு முரசே - அதில் ஆக்கமுண்டா மென்று கொட்டு".
"அன்பென்று கொட்டு முரசே - மக்கள் அத்தனை பேரும் நிகராம்".
"அன்பென்று கொட்டு முரசே - அதில் யார்க்கும் விடுதலையுண்டு"
"உடன்பிறந்தார்களைப் போலே - இவ்வுலகில் மனிதரெல்லோரும்
இடம் பெரிதுண்டு வையத்தில் - இதில் எதுக்குச் சண்டைகள் செய்வீர்".
"பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றும் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது - புவி எங்கும் விடுதலை செய்யும்"
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்"
"ஒன்றென்று கொட்டு முரசே - அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே
நன்றென்று கொட்டு முரசே - இந்த நானில மாந்தருக் கெல்லாம்."

வினாக்கள்.

1. தெய்வபக்தியின் இடத்தில் தேசபக்தியை வைத்துப் போற்றத் தூண்டிய பாரதி பாடல்களின் கருத்தினை விளக்குக.
2. சுயநலத்திற்காக நம் தேச சுதந்திரத்தை விற்கும் கயமையை பாரதி எங்ஙனம் சாடுகிறார்?
3 ."விடுதலை" எனும் பாடலில் பாரதி தரும் விளக்கங்கள் எவை?
4. தாயின் மணிக்கொடிக்கு வணக்கம் செய்யும் காட்சியை பாரதி எங்ஙனம் வர்ணிக்கிறார்?
5. பெண்ணடிமைத் தொழில் நீங்க பாரதி விடுக்கும் அழைப்பினை அவன் பாடல் வரிகளைக் கொண்டு விளக்குக.
6. "ஊருக்கு நல்லது சொல்வேன்" எனத் தொடங்கும் பாரதியின் 'முரசு' பாடல் பற்றிய ஓர் கட்டுரை வரைக. (மகாகவி பாரதியாரின் கவிதை நூலிலிருந்து இந்தக் கேள்விக்கான விடையைத் தொகுத்து எழுத முயலுங்கள்)

No comments:

Post a Comment

You can send your comments