Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

"பாரதியின் விசுவரூப தரிசனம்"திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
வழங்கும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
"பாரதியின் விசுவரூப தரிசனம்"

மகாகவி பாரதியாரிடம் அதீதமான பற்றுடையவர் நல்லி குப்புசாமி செட்டியார். தன்னை பாரதி ஆர்வலர் என்று சாதாரணமாகச் சொல்லிக் கொண்டாலும்கூட, பாரதியாரின் கருத்துக்களை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டு அவைகளைத் தொகுத்து பல நூல்களை வெளியிட்டிருப்பவர். பாரதி ஆய்வுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகளை வெளியுலகுக்கு இதுவரை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கும் திரு சீனி விஸ்வநாதன் அவர்களுடைய பணி நல்லி குப்புசாமி செட்டியாரை பாரதி பற்றிய நூல்களை எழுதத் தூண்டியிருக்கிறது. திரு சீனி விஸ்வநாதனுடைய வழிகாட்டுதலோடு, இவரை பாதித்த பல கருத்துக்களைத் தொகுத்து 'பாரதியின் விசுவரூப தரிசனம்' எனும் நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு தலைப்புக்களில் பதினோரு கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார். அதில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி மற்றவர்களிடம் செய்த முறையீடுகள், வேண்டுகோள்கள், விண்ணப்பங்கள் இவைகளைப் பற்றி தொகுத்து இந்தக் கட்டுரையில் வெளியிட்டிருக்கிறார். பாரதியின் எந்த எழுத்தும் தனக்கு, தன் குடும்பத்துக்கு என்று எதுவுமே இருந்ததில்லை. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தவர் பாரதி. எல்லாமே இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்தான். அந்த வகையில் பாரதி என்னென்ன முறையீடுகள், விண்ணப்பங்கள் செய்தார் என்பதை இந்தக் கட்டுரை வாயிலாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த நூலை சென்னை 600035 சி.ஐ.டி.நகர், எண். 2, மாடல் ஹவுஸ் சந்து, ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் விலை ரூ. 70. இனி கட்டுரையைப் பார்ப்போம்.

"ஒவ்வொரு மனிதனும் தனக்காகவும், தன் குடும்ப நலத்திற்காகவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் கடவுளிடம் வேண்டிக் கொள்வான். தனக்குள்ள குறைகளை நீக்கி, அருள் புரியுமாறு விண்ணப்பம் செய்து கொள்வான்.

ஊர் ஜனங்கள் ஒன்றுகூடி ஊர் ஒற்றுமைக்காக வேண்டுவதும் உண்டு.

பக்திமான்களும் இறைவனிடம் விண்ணப்பங்களும் வேண்டுகோள்களும் விடுத்ததை பக்தி இலக்கியங்களால் அறிகிறோம்.

மனித குல மேம்பாட்டிற்காகப் பொது வாழ்க்கையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மேலோர்கள் ஆட்சியாளர்களிடமோ - பொது மக்களிடமோ - விண்ணப்பங்களும், வேண்டுதல்களும் சமர்ப்பணம் செய்துள்ளனர்.

பொது வாழ்க்கையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மேலோர்களும் சான்றோர்களும் சரித்திர புருஷர்களாகப் போற்றிக் கொண்டாடப் படுகிறார்கள். தமிழ்நாட்டில் சரித்திரப் புருஷர்கள் வரிசையில் பாரதியும் தலைசிறந்தவராகப் போற்றிக் கொண்டாடப் படுகிறார்.

பாரதி தமக்காக மட்டுமில்லாமல் 'நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நாநிலத்தார் மேனிலை எய்தவும்' இறைவனிடம் வேண்டுகோள்களும் விண்ணப்பங்களும் செய்துகொண்டார்.

சுதேசிய இயக்கம் நாட்டில் கிளர்ந்து எழுந்த காலத்தில், அந்த இயக்கம் வெற்றி பெறப் பாடுபட்ட நேரத்தில் மக்களிடமே தம்முடைய விண்ணப்பங்களையும், வேண்டுகோள்களையும் தெரிவித்துக் கொண்டார்.

"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே, இம்மூன்றும் செய்"

என்று விநாயகப் பெருமானிடம் பாரதி பிரார்த்தனை செய்து கொண்டார்.

கவிதைத் தொழில் செய்யவும், நாட்டிற்கு உழைக்கவும், இமைப்பொழுதும் சோராது இருக்கவும் பாரதி தமக்கு வேண்டுவனவாக,

"நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்"

என்று விண்ணப்பம் செய்து கொண்டார்.

இந்த மட்டோடு பாரதியின் விண்ணப்பம் முடியவில்லை. மேலும் தொடர்கிறது. மகாசக்தியிடமே பின்வருமாறு விண்ணப்பம் செய்து கொள்கிறார். எப்படி?

"எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே யெண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்"

இதன் பின்னரும் பாரதியின் மனம் திருப்தியடையவில்லை போலும்! உலகத்தின் மூலசக்தியாகிய காளியை நோக்கிச் சரண் அடைந்து, பின்வருமாறு வரம் கேட்கிறார்.

"நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே யின்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதிய உயிராக்கி - எனக்கு
ஏதும் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!"

மகா காளியிடம் இந்த வரங்களைக் கேட்ட நிலையிலும் தமக்கும் - ஏன், எல்லோருக்கும் வேண்டுவனவாகப் பாரதி கேட்கிறார்:

"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்"

இந்த விதமாகக் கணபதியிடமும், பராசக்தியிடமும் விண்ணப்பங்களும், வேண்டுகோள்களும் செய்து கொண்ட பாரதி, காலத்தை அனுசரித்து மக்களின் மேம்பாட்டை உத்தேசித்து, அவ்வப்போது சில விண்ணப்பங்களையும், வேண்டுகோள்களையும் மக்கள் மன்றத்தின் முன் வைத்தார்.

இறைவன் - இறைவியிடம் பாரதி செய்து கொண்ட விண்ணப்பங்களில் எந்த அளவுக்குத் தெளிவும், ஆழமும், அழுத்தமும், செறிந்து காணப்பட்டனவோ, அதே அளவுக்குச் சற்றும் குறையாமல் மக்கள் மன்றத்தின்முன் வைக்கப்பட்ட வேண்டுகோள்களிலும் காணப்பட்டன.

தமக்கு விவரம் தெரிந்த காலம் தொட்டே பாரதி பெண்களின் முன்னேற்றத்தில் தீவிர அக்கறை காட்டி வந்தார். குறிப்பாக, பெண்கள் கல்வி விஷயத்திலும், அவர்களின் சுதந்திர விஷயத்திலும் பாரதி காட்டிய அக்கறையை வார்த்தைகளிலே அடக்கிக் காட்ட முடியாது.

'அறிவின்மை என்னும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களைக் கல்விக்கண் கொண்டு கரை சேர்க்க வேண்டும்' என்று ஆதங்கப்பட்டவர், பாரதி.

'நம் நாட்டு மாதர்கள் கல்வியும், ஞானப் பரப்பும் பெற்று விளங்க வேண்டும்' என்பதில் உறுதி கொண்ட பாரதி ஒரு சமயம் சற்று ஆவேசமாக:

'தேசத்தின் 'சக்தி ரூபங்'களாகிய மாதர்களை அறிவின்மையென்னும் பேரிருளில் ஆழ்த்தி வைத்துவிட்டுத் 'தேசாபிவிருத்தி, தேசாபிவிருத்தி' என்று கூக்குரலிடுவோரின் பேதைமையை என்னென்றுரைப்போம்?' என்று மனம் வெதும்பியவரானார்.

அதனால், பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியக் கருவி அவர்களுக்குக் கல்வி அறிவு புகட்டுவதை நாமெல்லோரும் முழுமுதற் நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி வற்புறுத்தினார்.

வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் நம் இந்திய நாட்டிற்கு 1905ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருகை புரிந்தனர். அவர்கள் முதன்முதலாகப் பம்பாய் நகரத்திற்கு விஜயம் செய்தனர். அந்நகரில் ராஜ தம்பதியருக்கு மிகச் சிறப்பான முறையில் மாதர்களால் உபசரணைகள் செய்யப்பட்டன. அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட மண்டபம் வெகு ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பார்சி மாதர்களும், ஹிந்து மாதர்களும், மகமதிய மாதர்களும் வேல்ஸ் இளவரசிக்குத் தகுந்த உபசரணைகளைச் செய்தனர். திருஷ்டி கழித்தல் தூபங் காட்டுதல் முதலியனவும் நிகழ்ந்தன.

பம்பாய் பயணத்தை முடித்துக் கொண்டு கல்கத்தா சென்றதன்பின் சென்னை நகரம் வருவதாக இருந்தது. இந்தச் சமயத்தில் பாரதி ஒரு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோள் சற்று வித்தியாசமானதுதான். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதான முறையில் அது அமைந்தது.

"எமது வேண்டுகோள்" என்று மகுடமிட்டுப் பாரதி எழுதுகிறார், இப்படி:-

"நவீன அளகாபுரி என்று கூறத்தக்க பம்பாய் நகரத்திலே வேல்ஸ் இளவரசியாருக்கும், இளவரசருக்கும் நடந்த உபசரணைகள் போலவே கல்கத்தாவிலும் நடைபெறுமென்று அறிகின்றோம்.

சென்னை நகரத்திலும் வேல்ஸ் இளவரசருக்குச் செய்யும் பல உபசாரங்களுடன் இளவரசியாருக்கும் இந்நகரத்து மாதர்கள் பலர் கூடி, பம்பாயில் நடந்ததைப் போல உபசரணைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று கேள்விப்படுகின்றோம்.

மாதர்கள் ஒருங்குகூடித் தாமாகவே ஓர் பொது நன்மை பற்றிய காரியத்தை ஏற்று நடத்துவது பெருமைப்படுவதற்குரிய விஷயமே யென்றாலும், இவ்விஷயத்தில் மிகுதியான பணத்தை வீண் செலவு செய்வது தகுதியாக மாட்டாது.

ஸர் வி.பாஷ்யம் ஐயங்காரின் மனைவியார் முதலிய மாது சிரோமணிகள் இவ்விஷயத்தில் முற்பட்டு வேண்டிய முயற்சிகள் புரிவார்களென எண்ணுகிறோ மாதலால், அவர்கள் இளவரசியார் வரவின் அறிகுறியாக ஹிந்து மாதர் ஹைஸ்கூல் ஒன்று ஸ்தாபனஞ் செய்யுமாறு பிரயத்தனிக்கும்படி பிரார்த்தனை புரிகின்றோம். மேலும் இளவரசியாருக்குத் திருஷ்டி கழித்தல், மந்திரம் போடுதல், தூபங் காட்டுதல் முதலிய செய்கைகளை யெல்லாம் கூடியவரை சுருக்கிவிட வேண்டும்.

ஆதலால், நல்வரவுப் பத்திரிகை படித்தல், மாலை புனைதல், முதலிய சிறு செய்கைகளொடு உபசாரங்களைச் சுருக்க வேண்டுமே யல்லாது, பம்பாய் ஸ்திரீகளைப் போல வரம்பு கடந்துபோய்விடலாகாது.

இப்போது வேல்ஸ் இளவரசியை உபசரிக்கும் முறைமையினாலும், அவருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவதில் காண்பிக்கும் யூகத்தினாலும் சென்னை மாதர்கள் தாம் மாற்றைப் பகுதியிலுள்ள ஸ்திரீகளைக் காட்டிலும் சிறந்தவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்வார்கள் என்று யாம் நம்புகிறோம்."

பாரதியைப் பொறுத்த மட்டில் உபசாரப் பத்திரங்கள் வாசித்தல், ஆடம்பர வரவேற்புகள், வாண வேடிக்கை போன்ற வீண் செலவுகள் செய்யாமல் நிரந்தரமான - அவசியமான பணிகளுக்குச் செலவிட வேண்டுமென்று கருதிய காரணத்தால் இளவரசியின் வரவையொட்டிப் பெண்களுக்குப் பாடசாலை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்தார்.

பெண்களுக்கான பாடசாலை அவசர - அவசியத் தேவை என்று வற்புறுத்தி வேண்டுகோள் விடுத்த பாரதி, தமிழ்நாட்டு மாதர்களில் பலர் மேல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று விண்ணப்பமும் செய்து கொண்டார்.

பலவித சாஸ்திரங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்ற மாதர்கள் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்றுத் திரும்பினால், அவர்களுக்கு அதிகமான மதிப்பு கிடைக்கும் என்பது பாரதி கொண்ட நம்பிக்கை.

அதனால், பாரதி தமிழ்நாட்டுப் பெண்மணிகளிடம்,

"தமிழ்ச் சகோதரிகளே! (பலவித சாஸ்திரங்கள் படித்துத் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்தி ஸம்பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டு இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்களே! மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது; வந்துவிட்டது. நீங்கள் விடுதலை பெறுவீர்கள்; உங்களால் உலகம் மேன்மையுறும்." என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தவிதமாகப் பெண்களுக்கான முன்னேற்றத்திற்கான வழிவகைகளை வகுத்துக் காட்டிய பாரதி பின்னொரு சமயம் சுதேசியப் பாடசாலைகள் உருவாக வேண்டிய அவசியத்தைக் குறித்து அன்னிபெசண்ட் சொல்லிய கருத்தை நம்மவர் கவனத்திற்குக் கொண்டுவந்தார். அன்னிபெசண்ட் அம்மையின் வேண்டுகோள் என்றே தம் கட்டுரைக்குத் தலைப்பும் தந்தார். அன்னிபெசண்ட் அம்மையார் தெரிவித்த வேண்டுகோள் கருத்தாகப் பாரதி பின்வருமாறு எழுதுகிறார்:

"இந்தியா முழுமையும் கூடியவரை கவர்ன்மெண்ட் உதவியினின்றும் நீங்கி நிற்பனவாகிய 'சுதேசியப் பாடசாலைகள்' ஸ்தாபனமுற்று, அவற்றிலே மேற்கு நாட்டுக் கலைகளுடன் நமது நாட்டு உயர்ந்த ஞானமுறைகளும் ஒழுக்கங்களும் கலந்து பயிற்றுவிக்கப்பட வேண்டுமென்பது மிஸஸ் பெசண்ட் அம்மையின் முக்கியக் கோட்பாடுகளிலே யொன்றாகும்.

இந்தியா நற்கதியடைய வேண்டுமாயின் இந்தியர்களில் ஆண் - பெண் அடங்கலும் கல்வி யறிவு நிறைந்திராவிடின் ஒன்றும் நடக்காதென்று இம்மாது ஓயாமல் சொல்லிச் சொல்லி இவருக்குத் தொண்டை வற்றிப் போய்விட்டது."

அதாவது, பெசண்ட் அம்மையின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் எடுத்துச் சொன்ன பாரதி, தம் கருத்தாகப் பெசண்ட் அம்மையாரின் அபிமானிகள் மேற்கொள்ள வேண்டிய கடமையையும் எடுத்துச் சொன்னார்.

பாரதி தெரிவித்த கருத்தாவது:-

"மிஸஸ் பெசண்ட் அம்மையைத் தெய்வாவதாரம் என்று நம்பும் ஜனங்கள் இந்தியாவிலே எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாலும், அநாவசியமான விஷயங்களில் அந்த அம்மை சொல்வதையெல்லாம் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்களே யல்லாமல், முக்கியமான காரியங்களில் அவர் சொல்வதைக்கூட நம்மவர்கள் கேட்டு நடப்பதாகத் தோன்றவில்லை."

குறைந்த பட்சம் பெசண்ட் அம்மையாரின் வேண்டுகோளை மதித்து, அம்மாது சிரோமணியின் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியது அம்மையின் அபிமானிகளின் கடமை என்று பாரதி வேண்டுகோள் விடுத்தார்.

அறிவுடையவர்களையும், லோகோபகாரிகளையும், வீரர்களையும், போற்றிக் கொண்டாட வேண்டும் என்பது பாரதி ஆசை; எதிர்பார்ப்பு; ஏன் வேண்டுகோளும் ஆகும்.

தேச நலத்தின் பொருட்டு உழைப்பவர் யாவரேனும் அவர்களுக்குத் தக்கபடி மரியாதை செலுத்த வேண்டும்; உரிய ஸ்தானத்தை அளித்துப் பெருமைப்படுத்த வேண்டும் என்று பாரதி தமக்குச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் நாட்டு மக்களிடையே எடுத்துச் சொல்லி வந்தார்.

அந்த வகையில், ராஜா ராம்மோஹன் ராய் அவர்களுக்கு உரிய ஸ்தானத்தை இந்தச் சமூகம் அளிக்க வேண்டும் என்றார் பாரதி. ராஜா ராம்மோஹனராயர் பிரம சமாஜத்தை ஸ்தாபித்தவர். சமூக சீர்திருத்தங்களில் அழுத்தமான பிடிப்புக் கொண்டு உழைத்தவர். தீமைப் பாதைகளிலே சென்று கொண்டிருந்த மக்களை நல்ல வழியில் நடக்க வழிகாட்டிய உத்தமர். சதி தகனம் என்னும் அநீதியை எதிர்த்துப் போராடியவர். பெண் குலத்திற்கு மட்டுமில்லை - இந்திய நாட்டிற்கே புத்தொளி காட்டிய பெருமைக்குரியவர்.

'இந்நாட்டு மாதர்களின் அபிவிருத்தியின் பொருட்டாக முதன்முதல் பாடுபட்ட மஹான் ராஜாராம் மோஹன் ராயரென்பவர்' என்பது பாரதியின் கணிப்பு. அதோடுகூட பாரதி வேறுபல முக்கியமான காரணங்களையும் அடுக்கடுக்காகச் சொல்லி, "அவர் தகுதிக்குத் தக்கவாறு அவரை நன்கு மதிக்கத் தவறி விட்டார்கள் சுதேசத்தார்' என்று ஆதங்கப்பட்டார்.

பாரதி பார்வையில் ராம்மோஹனரைப் பற்றிய மதிப்பீடு எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

"இவ்வுலகினைக் கைதூக்கி விடும் பொருட்டுத் திருவவதாரம் புரியும் மகாகுரு கணத்துள்ளே ராம்மோஹனர் ஒருவர். அவர் அநீதியைக் கண்டு பொறுக்க மாட்டார்.

பகல் வேஷம் பொட்டு மோசம் செய்ய மாட்டார்.

மனத்தினுள்ளே விக்கிரக வணக்கத்தை வெறுத்து வெளிக்கு நால்வர் காணக் கைதூக்கிக் கும்பிடமாட்டார்.

உலகத்தாரின் நகைப்பு, உலகத்தாரின் நிந்தனை, அவர்களின் அவமதிப்பு, அவர்களின் கோபம், அவர்கள் செய்யும் மனத்துன்பம், பொருட்சேதம், சரீரத் துன்பம் ஆகிய எவற்றையும் பொருட்படுத்தாமல் தமது மனத்தில் கடவுளால் அமைக்கப்பட்ட உண்மை நெறியைத் தவறாது கைக்கொள்ள வேண்டுமென்ற வீர விரதங் கொண்டாருள்ளே ராம்மோஹனர் ஒருவர்".

இப்படி ராம்மோஹனரைச் சிறப்பித்து எழுதிய பாரதி அவருக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடனையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

"எண்ணிறந்த ஸ்திரீஹத்தி புரிந்து, இத்தேசத்துக் கெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழி கொடுத்த ஸதி தஹனமென்னும் அரக்கனை மிதித்துக் கொல்லும்படியாக முதலிலே தூக்கப்பட்ட ராம்மோஹனரின் திருவடியை நாம் மறந்து விட்டால் நமக்கு உய்தியுண்டாமா?

இத் தேசத்திலிருக்கும் ஒவ்வொரு பாஷையிலும் அவரது திருச்சரித்திரம் எழுதப்பட்டு, அதனை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டாமா? ஊருக்கு ஊர் ராம் மோஹனருடைய சிலை ஸ்தாபித்திருக்க வேண்டும்."

இப்படியொரு உணர்ச்சிமிக்க வேண்டுகோளை அறைகூவலாக விடுத்த முதல் பெருமை பாரதியையே சேரும்.

ராம்மோஹனரைச் சமூகம் போற்றிக் கொண்டாட வேண்டும் என்று கூறிய மாத்திரத்தில் பாரதி உள்ளம் திருப்தி கொள்ளவில்லை. அந்த மஹானை எந்த மாதிரியான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் வழிகாட்டினார்.

பாரதியின் விண்ணப்பங்களும் சரி - வேண்டுகோள்களும் சரி - அவை பல்வேறு பரிமாணங்களில் அமைந்திருந்தாலும், சமூகச் சிந்தனைகளைத் தூண்டிவிடும் விதத்திலேயே அமைந்திருக்கக் காணலாம்.

உதாரணமாக, மதுரை ஜில்லா போர்டில் விவசாய உத்தியோகம் பார்த்தவர் ஜி. காமாக்ஷி ராவ் என்பவர். சென்னை மாகாணத்துத் தென் ஜில்லாக்களில் நெல் சாகுபடி முறைகளை விவரித்து ஓர் அற்புதமான புத்தகத்தை எழுதியிருந்தார். பயனுள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி, புது முறைகளைக் கையாண்டு சாகுபடியை மேம்படுத்தலாம் என்பது நூலாசிரியரின் கருத்து.

விவசாயிகளில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்? ஆங்கில நூல் வந்துள்ள செய்தியைக்கூட அவர்கள் அறியமாட்டார்களே! அப்படியே ஆங்கிலம் தெரிந்த ஓரிருவரும் நூலைப்படித்து, அதில் கூறப்பட்டிருக்கும் நூதன முறைகளைக் கடைப்பிடிக்க முன்வருவார்களா?

எனவே, பாரதி நூலைப் பாராட்டி எழுதியபோது, நூலாசிரியர் காமாக்ஷி ராவ் அவர்களுக்குத் தம் பாராட்டுரையில் ஒரு வேண்டுகோளும் விடுத்தார். பாரதி எழுதிய பாராட்டுரையின் சில பகுதிகளையும், அவர் கேட்டுக் கொண்ட வேண்டுகோளையும் பார்ப்போம்.

"ஸ்ரீ காமாக்ஷி ராவ் என்பவர் ஓர் நேர்த்தியான சிறு புத்தகம் இங்கிலீஷிலே எழுதியிருக்கின்றார். அதிலே இவர் தென் இந்திய விவசாயிகள் தமது பூர்வீக வழிகளினின்றும் சிறிதேனும் மாறுபட விரும்பாதவர்களாயும், நவீன விவசாய சாஸ்திர அபிவிருத்தியினால் ஏற்பட்டிருக்கும் புது முறைகளைக் கவனியாதவரளாகவும் இருப்பதினால் பெரு நஷ்டங்களுக்கு உட்படுவதைப் பற்றிக் கண்டனை செய்து அவர்களுக்கு அனுகூலமான சில விஷயங்களைப் போதனை செய்திருக்கிறார்.

ஆனால், இங்கிலீஷில் உபந்நியாசம் எழுதிவிட்ட மாத்திரத்திலேயே நமது விவசாயிகள் திருந்தி விடமாட்டார்களல்லவா! நேரிலே அவர்களை அழைத்துத் தமிழ் முதலிய சுதேச பாஷைகளிலே உபந்நியாசம் புரிந்தும், நேரிலே செய்து காட்டியும் அவர்களைத் திருத்த முயல வேண்டும்.

ஸ்ரீ காமாக்ஷி ராவ் தமது நூலைத் தமிழிலும், தெலுங்கிலும் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளை இங்கே செய்து கொள்கிறோம். இனி, வேறு இம்மாதிரி நூல்கள் எழுதுவோரும் சுதேச பாஷைகளிலேயே எழுதுதல் நலமாகும்".

ஆக, யாருக்காக நூல் எழுதப்படுகிறதோ, அவர்களுக்குப் புரியும்படியான - தெரிந்த பாஷையிகளில் நூல் எழுதப்பட வேண்டும் என்று பாரதி நூலாசிரியர்களுக்கு வேண்டுகோள் செய்து கொண்டார்.

பத்திரிகைத் துறையில் காலடி பதித்த பாரதி, அத்துறையில் பல புதுமைகளைப் புகுத்தினார்; பற்பல புத்தம் புதிய உத்திகளைக் கையாண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார்.

பொது மக்களையும் தாம் தொடர்பு கொண்ட பத்திரிகைத் துறையோடு பங்கு கொள்ளச் செய்ய வேண்டும் என்று பாரதி எண்ணங் கொண்டார். அதனால், பாரதி அவ்வப்போது பொதுமக்களிடம் சில வேண்டுகோள்களைச் செய்து கொண்டு வந்தார்.

அந்த வகையில் தமிழ் ஜில்லாக்காரர்களுக்கு ஓர் வேண்டுகோள் என்று பாரதி விடுத்த விண்ணப்ப அறிக்கை தெரிவிப்பதாவது:

1. தமிழ் ஜில்லாக்களிலுள்ள முக்கிய ஸ்தலங்கள், ஆலயங்கள், நதிக்கரைகள், மலைகள், அருவிகள், முக்கிய மனிதர்கள் முதலிய ஏதேனுமோர் ஸர்வ ஜனரஸகரமான விஷயத்தைப் பற்றிச் சரியான சித்திரங்கள் மையினால் சித்தரித்து அனுப்புவோர்களுக்குத் தக்க சன்மானங்கள் செய்யப்படும். பென்சில் சித்திரிப்புகள் நமக்கு வேண்டியதில்லை. பிரசுரத்தின் பொருட்டு அங்கீகாரம் செய்து கொள்ளப்படாத சித்திரங்கள் நமது சொந்தச் செலவில் திருப்பி அனுப்பிவிடப்படும்.

2. தமிழ் ஜில்லாக்களில் உத்தியோகஸ்தர்களேனும், பிறர்களேனும் ஜனங்களை அக்கிரமமாகவும், உதாசீனமாகவும் நடத்தும் பக்ஷத்தில் ஜனங்கள் அதை நமக்குத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அந்த இடங்களில் ஜனங்களுக்கு நீதி கிடைக்கும் பொருட்டு நம்மால் இயன்ற மட்டும் முயற்சி புரியக் காத்திருக்கிறோம். நமக்குத் தகவலனுப்பியவர்களின் பெயர்கள் எந்தச் சமயத்திலும் வெளியிடப்படமாட்டா.

3. முக்கியமான சபை ஸ்தாபனங்கள், உபந்நியாசங்கள் முதலிய ஜனஹிதகரமான எல்லா விஷயங்களைப் பற்றியும் தகவல் அனுப்புவோருக்கு மிகவும் நன்றி பாராட்டுவோம்.

1906ம் ஆண்டிலேயே இம்மாதிரியான வேண்டுகோளை விடுத்துப் புதுமையையும், புரட்சியையும் செய்தார் பாரதி என்று பத்திரிகை உலகம் என்றளவும் நினைவு கூர்கிறது.

1907ம் ஆண்டிலே தபால் இலாகாவில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்வதாகச் சொல்லி, அதுவரை ஸ்டாம்ப் வெண்டர்களுக்குக் கொடுத்து வந்த கமிஷன் தொகையை நிறுத்தி விட்டனர். இதனால், ஸ்டாம்ப் வெண்டர்களின் நிலை பரிதாபத்துக் கிடமானது.

சர்க்கார் ஏற்பாட்டால் ஸ்டாம்ப் வெண்டர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை, ஈடுசெய்ய பாரதி தமக்குத் தோன்றிய யோசனை ஒன்றை ஸ்டாம்ப் வெண்டர்களுக்கு ஓர் வேண்டுகோள் என்பதாக வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்திய வேண்டுகோளில்,

"ஸ்டாம்ப் வெண்டர்களிலே சர்க்கார் ஏற்பாட்டினால் நஷ்டமடையக் கூடியவர்களுக்கு ஒரு யோசனை இருக்கிறது. அதாவது, அவர்கள் சுதேசிய சாமான்கள் விற்று ஜீவனம் செய்யலாம். சுதேசிய முயற்சிகளுக்கு நற்காலம் பிறந்திருக்கும் இத்தருணத்தில் ஸ்டாம்பு வெண்டர்கள் சுதேசிய முயற்சிகளிலே கருத்தைச் செலுத்தும் பக்ஷத்தில் அவர்கள் சுலபமாக ஜீவனம் புரியலாமென்று நமக்குத் தோன்றுகிறது." என்று சுதேசிய முயற்சி யோசனையைப் பாரதி புலப்படுத்தியது, காலத்தின் தேவை என்பதை விளக்குகிறது.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட 'தூத்துக்குடி சுதேசிக் கப்பல் கம்பெனி' பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. வ.உசியின் முயற்சிக்கு ஆரம்பகால முதலாகவே பாரதி ஆதரவு தெரிவித்து வந்தார். அத்துடன் தமிழர்கள் கப்பல் கம்பெனிக்காகச் செய்ய வேண்டிய கடமைகளையும் உணர்த்தி வந்தார்.

பணமுடையால் கம்பெனியின் பணிகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்று பெரிதும் விசாரப்பட்டவர் பாரதி.

சுதேசிக் கம்பெனியின் வளர்ச்சியில் தமிழ் மக்கள் பங்கு கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்ன பாரதி, தம் பங்களிப்பாக ஐந்து ரூபாயை செலுத்திவிட்டு, தமிழ் மக்களிடம் வேண்டுகோள் செய்து கொண்டார்.

"தூத்துக்குடிக் கம்பெனி நமது முதற் பெருந்தொழில் முயற்சி. இதைக் கைவிட்டு விட்டால் நம்மைப் பிறகு உலகத்தில் யாரும் நம்பவே மாட்டார்கள். உலகத்தாரெல்லாம் சிரிப்பார்கள். நம்மை நாமே நம்பாத ஸ்திதிக்கு வந்துவிடும்.

ஆகையால், இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த க்ஷணமே கையிலகப்பட்டதை அது அரைக்காசாயிருந்தாலும் சரி, அனுப்பி நமது மாதாவின் மானத்தைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழ் நாட்டிலே 160 லக்ஷம் ஜனங்கள் இருக்கிறார்கள். இதில் 159-1/2 லக்ஷத்தைக் கழித்துவிட்டுப் பாக்கி அரை லக்ஷம் ஜனங்கள் தலைக்கு 4 ரூபாய் விழுக்காடு கொடுக்கும் பக்ஷத்தில் இந்தச் சுதேசிக் கப்பல் கம்பெனியின் நோக்கம் நிறைவேறிவிடும்.

சுதேசியக் கப்பல் கம்பெனிக்குப் பணம் போய்ச் சேரவேண்டும், இல்லாவிட்டால் நமது ஜாதிய மானம் அழிந்து போய்விடும்" இந்த விதமாக வேண்டுகோள் விடுத்து, கப்பல் கம்பெனிக்கு உதவும்படி தமிழ் மக்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டார் பாரதி.

"நமது விண்ணப்பத்தைக் கருணைகூர்ந்து மறுபடியும் ஓர் முறை படித்துப் பாருங்கள். சுதேசியக் கப்பல் கம்பெனிக்கு ஸ்திரமான பணபலம் உண்டாக்கி விடுவதற்கு வழி தேடுங்கள்"
என்று மீண்டும் மீண்டும் விண்ணப்பம் செய்து கொண்டார் பாரதி, ஜாதிய மானத்தைக் காப்பாற்றுவதற்காக.

சென்னையில் பதிப்பான 'இந்தியா' பத்திரிகை பிரிட்டிஷ் அரசு அதிகாரிகள் கையாண்ட கெடுபிடிகள் காரணமாகப் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தது. அங்குப் புதிய பொலிவோடு வெளிவரத் தொடங்கியது.

புதுச்சேரியிலிருந்து பிரசுரமான 'இந்தியா' பத்திரிகையில் வாரம் தவறாமல் 'விகடச் சித்திரம்' வெளிவந்தது. வாசகர்களிடம் இந்த நூதனமான சித்திர முறைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை உணர்ந்த பாரதி, மேற்கொண்டும் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட நினைத்தார்.

தாம் மேற்கொள்ள விருந்த புதிய முயற்சியைப் பற்றித் தம் வாசக நேயர்களிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். பாரதி செய்து கொண்ட விண்ணப்பம் இப்படிச் சொல்கிறது.

"தமிழ்நாட்டு வர்த்தமானப் பத்திரிகைகலிலே நமது பத்திரிகை யொன்றுதான் விகட சித்திரங்கள் பதிப்பித்து வருவதென்ற விஷயம் நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால், அடுத்த வாரம் முதல் இன்னுமொரு புதிய அலங்காரம் நமது பத்திரிகைக்குச் செய்யக் கருதியிருக்கின்றோம். அதாவது, தலைப் பக்கத்திலுள்ள ஒரு சித்திரம் மட்டுமே யன்றி, பக்கத்துக்குப் பக்கமுள்ள முக்கியமான வர்த்தமானங்களை விளக்குவதன் பொருட்டு அங்கங்கே சிறிய சிறிய படங்களும், சித்திரங்களூம் போடுவதாக உத்தேசம்... நாம் நூதனமாகச் செய்யப் போகிறோம்.

ஆனால் இதுபோன்ற காரியங்களுக்குப் பணம் மிகுதியாகச் செலவாகும். அதுபற்றி நாம் சந்தாத் தொகையை உயர்த்தப் போவது கிடையாது. நமது சந்தாதார்களில் ஒவ்வொருவரும் இன்னும் அனேகரைச் சேர்த்து விடுவதற்கு மனதோடு உழைக்க வேண்டுமென்று ஒரு விண்ணப்பம் மட்டிலும் செய்து கொள்ளுகிறோம்."

'இந்தியா' பத்திரிகை அமைப்பில் நூதனம் செய்யப் போவதாகிய விடுத்த விண்ணப்பத்திலும், பத்திரிகையின் சந்தாத் தொகையை உயர்த்தப் போவதில்லை என்றுணர்த்தி, புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டதிலும் நூதனத்தைக் கையாண்டார் பாரதி.

பத்திரிகையின் அபிவிருத்திக்காகத் தமது சந்தாதாரர்களிடம் விண்ணப்பித்துக் கொண்ட பாரதி, தொழில் அபிவிருத்திக்காக மடாதிபதிகளிடமும் தம்முடைய பணிவான வேண்டுகோளைச் செய்து கொண்டார்.

நாட்டு முன்னேற்றத்திற்கு முக்கிய அறிகுறி தொழில் அபிவிருத்தி ஆகும். நாட்டுத் தொழில்கள் புனருத்தாரணம் பெறுவதற்கான வழிமுறைகளையும் பாரதி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உணர்த்தியே வந்துள்ளார்.

தொழில் அபிவிருத்திக்கு யார் யாரெல்லாம், எப்படியெப்படி யெல்லாம் உதவ முடியும், உதவ வேண்டும் என்று யோசனைகள் தெரிவித்த நிலையில், நமது மடாதிபதிகளின் நினைவு பாரதிக்கு வந்தது.

ஆத்ம விசாரத்தில் பக்தி ஏற்படும்படி செய்வதுதானே மடாதிபதிகளின் கடமை என்று கருதிய காலகட்டத்தில், அவர்களாலும் தொழில் அபிவிருத்திக்கு உதவ முடியும் என்று நம்பினார் பாரதி. நம்பிய காரணத்தால் மடாதிபதிகளுக்கும் வேண்டுகோள்களை விடுக்கப் பாரதி தயங்கவில்லை.

"மடாதிபதிகள் மடத்தின் மூலதனத்தின் ஒரு பகுதியைக் கொண்டும், தனவான்கள் கொடுக்கும் பாத காணிக்கைகளைக் கொண்டும் முதல் சேர்த்துக் கொண்டு தொழிற்சாலைகளை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்பட்டிருக்கும் தொழிற் சங்கங்களிலும் வர்த்தகச் சங்கங்களிலும் பணம் கொடுத்து பங்குகளை வாங்கிக் கொள்ளலாம். அப்படிச் செய்வதால் மடத்தினுடைய திரவியம் விருத்தியடைவதோடு ஜனங்களும் லாபமடைவார்கள்.

சென்னையில் இந்தியன் பாங்கு என்று ஒரு தனசாலை இருக்கிறதே, அதில் ஷேர்கள் எடுத்துக் கொண்டால், அதில் போட்ட திரவியம் விருத்தியடைவதோடு, பொதுஜனங்களும் நன்மையடைவார்கள். நெசவுச்சாலை யேற்படுத்தினால், அதனால் அநேகம் ஜனங்களுக்குப் பிழைப்பு நடகும். மடத்தினுடைய திரவியம் விருத்தியாகும்.

தூத்துக்குடியில் 'கப்பற் சங்கம்' ஒன்று ஏற்படுத்தி வர்த்தகத்தை விருத்தி செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். அதற்குத் தக்க பொருளுதவி மடாதிபதிகள் செய்யலாகாதா? ஒவ்வொரு மடாதிபதியும் பதினாயிரம் ரூபாய் அல்லது இருபதினாயிரம் ரூபாய் கொடுத்து அதில் பங்குகளை வாங்கிக் கொண்டு, அந்தக் கப்பல் கம்பெனியை நடத்தினால் மடங்களுக்கும் ஜனங்களுக்கும் அதிலாபத்தைத் தருமே. தென்னாட்டிலுள்ள மடாதிபதிகளும், ஜமீன்தார்களும் முன்வந்து அந்தக் கம்பெனியை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்."

பெண்கல்வி அபிவிருத்திக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த மேலோர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டிய அவசியம் குறித்தும், தொழிலபிவிருத்திக்காக மடாதிபதிகள் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் - இப்படி பல்வேறு முறைகளில் கவனத்தைச் செலுத்தி வேண்டுகோள்களும் விண்ணப்பங்களும் செய்து கொண்டவர் பாரதி.

பின்னொரு சந்தர்ப்பத்தில் என்ன காரணங் கருதியோ தமிழ்நாட்டாருக்கு இறுதி விண்ணப்பம் என்பதாக ஓர் விண்ணப்பத்தைச் செய்து கொண்டார் பாரதி. அவர் செய்து கொண்ட இறுதி விண்ணப்பம் கல்மனத்தையும் கரைக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அந்த அறிக்கையின் சில முக்கியப் பகுதிகளை மட்டுமே இங்கு பார்ப்போம்.

"சகோதரர்களே! ஒரு வார்த்தை மட்டும் சொல்லுகிறேன். இன்னொரு முறை சொல்ல எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ கிடைக்காதோ. அதுவே சந்தேகமாயிருக்கிறது. ஆகையால், தயவு செய்து இந்த ஒரு வார்த்தையை மனதில் பதிய வைக்கும்படி உங்கள் பாதங்களில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். அதாவது, ஏது வந்தாலும் அதைரியப் படாதேயுங்கள். மாதாவை மறந்துவிட வேண்டாம். நியாயத் தவறான செய்கைகள் செய்ய வேண்டாம். தைரியம், உறுதி இந்த இரண்டுமே நம்மைக் காக்கப் போகிறது.

தேசத்தை உத்தாரணஞ் செய்வதற்கு ஒவ்வொருவரும் இயன்றதெல்லாம் செய்க. நாம் செய்யக்கூடியது சிறிதுதானே யென்று கருதி, அதனைச் செய்யாதிருந்து விடலாகாது. நியாயமான சட்டங்களை மீற வேண்டாம். அநியாயமான சட்டங்களை யெடுத்து விடுவதற்கு இயன்ற முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டும். சுதேசிய விரதத்தை உயிருள்ள வரை கைவிடாமல் ஆதரித்து வர வேண்டும். மானத்தைப் பெரிதாக நினைக்க வேண்டும். ஸ்வதந்திரத்தை எப்போதும் தியானஞ் செய்து வரவேண்டும். வந்தேமாதரம்!"

பாரதியின் இந்த விண்ணப்பத்தில் அமைதி, ஒழுங்கு, அபிவிருத்தி ஆகியவை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்திச் சொல்லப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த விண்ணப்பத்தைச் சுதேசிய விரதத்தின் கொள்கைப் பிரகடன சாசனமாகக் கொள்ள இடமளிப்பதாகவும் கருதலாம்.

தமிழ் வளர்ப்பை நோக்கமாகக் கொண்டவர் பாரதி. இயன்றவரை தமிழே பேசுவேன்; தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்' என்று சங்கற்பம் செய்து கொண்டவர். இப்படி மிகுந்த தமிழ்ப் பற்றுடன் தேசத் தொண்டு புரிந்தவர் பாரதி. எனவே தமிழ் மொழியைப் பற்றி எவரேனும் இழித்தும் பழித்தும் பேசினாலும், எழுதினாலும் பாரதிக்கு அடங்காத கோபம் வந்துவிடும்.

திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரி சரித்திர ஆசிரியர் நீலகண்ட ஐயர் என்பவர் தமக்குச் சொந்த பாஷையான தமிழில் பாடங்கள் சொல்லித் தர சிரமாக இருக்கிறதென்றும், தமக்கு இங்கிலீஷ்தான் தமிழைக் காட்டிலும் நன்றாக வருகிறது என்றும் ஒரு சமயம் வங்காளப் பத்திரிகையில் எழுதியிருந்தார். நீலகண்ட ஐயர் வங்களாப் பத்திரிகையில் எழுதியதைப் பார்த்த பாரதியின் தமிழ் நெஞ்சம் துடிதுடித்தது. உடனே ஐயரின் கருத்துக்குச் சுடச்சுடப் பதிலடி தந்தார்.

"ஸ்ரீ நீலகண்டய்யரின் நிலைமையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சொந்த பாஷை நேரே பேசத் தெரியாதவர்கள் சாஸ்திரப் பாடங்கள் நடத்தும் விநோதத்தை இந்தத் தேசத்திலேதான் பார்த்தோம். புதுமை! புதுமை! புதுமை!" என்று கண்டனம் தெரிவித்து விட்டு "இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப்போனார் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை" என்று நையாண்டி செய்தார் பாரதி.

"தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தானத்து வகுப்புகளைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மிலே சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு நகைப்புண்டாக்குகிறது" என்று வேதனைப்பட்டு, வருந்தி, இதன் தொடர்பாகத் தம்முடைய கருத்தை மிக அழுத்தம் திருத்தமாகப் பாரதி பதிவு செய்தார். பாரதி தெரிவித்த கருத்து விவரமாவது.

"என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். உலகத்திலுள்ள ஜாதியார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிறோம். எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப்போலே வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றும் இல்லை.

இந்த நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளியுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன நிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனால், போன நிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த நிமிஷம் ஸத்யமில்லை. நாளை வரப்போவது ஸத்யம்.

மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவாவிட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரையில் இங்கு பண்டிதர்களாக இருப்போர் வாயை மூடிக் கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும். இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்."

தமிழுக்கு நல்ல காலம் பிறக்கும் என்பதைத் தம்முடைய வேண்டுகோள் மூலம் பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னார், பாரதி.

'ஜீவகாருண்ய' ஒழுக்கத்தை மக்கள் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று வற்புறுத்திய சான்றோர்களில் பாரதிக்கும் இடம் உண்டு. குறிப்பாக, பிராணிகளை இம்சை செய்வதையும் மாமிசம் சாப்பிடுவதையும் 'பாவம்' என்றே பாரதி கருதி தாம் கொண்ட கருத்தை அவ்வப்போது எழுதி உள்ளார்.

குறிப்பாக, புலால் உண்போரைப் பாரதி கடுமையான வார்த்தைகளால் கண்டனம் செய்திருக்கிறார். பாவங்களில் எது கொடிய பாவம் என்பதைச் சொல்ல வந்த பாரதி

'மனிதர் செய்யும் அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவான அநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாகப் புலப்பட்டிருக்கிறது. மனிதன் செய்யக்கூடிய பாபங்கள் அனைத்திலும் இதுவே மிகக் கொடிய பாபம் என்று என் புத்திக்கு ஐயந் திரிபற விளங்கியிருக்கிறது." என்று மிருக பட்சி ஜாதிகளைக் கொன்று தின்பவர்கள் தாங்கள் அறிந்தே பாவத்தைச் செய்கிறார்கள் என்று விளக்குகிறார்.

'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று போதனை செய்த பாரதி, ஜீவநாசத்தின் அநியாயத்தையும், அதனால் ஜனங்களுக்கு உண்டாகும் பாவங்களையும் ஆழமாகச் சிந்தித்துத்
'தமிழ் நாட்டு ஜனத் தலைவர்களே! உங்கள் காலில் வீழ்ந்து கோடி தரம் நமஸ்காரம் செய்கிறேன். மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். சமூகப் பிரச்சினையாகக் கருதி, தனி மனிதர்களிடத்தில் மட்டுமேயில்லாமல், ஜனங்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற ஜனத் தலைவர்களிடமும் புலால் உண்பதைத் தடுக்க வேண்டிப் பாரதி சொன்னது இன்றும் அர்த்தம் கொண்டதாகவே இருக்கிறது.

இந்த விதமாகச் சமூகப் பிரச்சினைகளில் மிக்க அக்கறை கொண்டு பாரதி செய்துகொண்ட விண்ணப்பங்களும், வேண்டுகோள்களும் ஏராளம், ஏராளம், ஏராளம்.

வினாக்கள்.

1. சுதேசி இயக்கம் வெற்றி பெறுவதற்காக மகாகவி பாரதி வைத்த வேண்டுகோள் எவை?
2. பெண்கள் முன்னேற்றம், சுதந்திரம் இவற்றுக்காக பாரதி விடுத்த வேண்டுகோள் எவை?
3. வேல்ஸ் இளவரசரின் இந்திய விஜயத்தின்போது சென்னை மாதர்கள் அவரிடம் எத்தகைய
கோரிக்கைகளை வைக்க வேண்டுமென ஆலோசனை கூறுகிறார்?
4. ராஜா ராம்மோஹன ராய் அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக்கடன் எவை?
5. வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சுதேசி கப்பல் கம்பெனி நிதிநிலை வளர்ச்சிக்கு பாரதியின்
ஆலோசனைகள் எவை?
6. பாரதி தமிழ்நாட்டாருக்கு விடுத்த "இறுதி விண்ணப்பம்" என்ன என்பதை ஓர் கட்டுரையாக
எழுதுக.

1 comment:

  1. ஜீவகாருண்ய ஒழுக்கம் சாப்பாடு போடுவதல்ல!

    http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_27.html

    ReplyDelete

You can send your comments