"இந்தியா" பத்திரிகை கட்டுரை
"மாதாவின் கட்டளை" "இந்தியா" 1909 பிப்ரவரி 6.
காலை 9 மணி நாம் காலைக் கடன்களை முடித்துவிட்டு நமது தொழிலிடத்திற்குப் புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தோம். வெளியிலிருந்து அமிருத மயமான பாட்டுத் தொனிகள் காதிலே விழுந்தன. முதலில் 'நா........" என்று நீண்டதாய் இன்பத்தால் இழைக்கப்பட்டதாய் ஒரு தீர்க்க ஸ்வரம் வந்தது. பிறகு, அதிலே மனம் செலுத்திய போது சொல்ல முடியாத இன்பத்துடன் பின்வரும் பதங்கள் அடுக்கடுக்காய் வரலாயின:
"நா.......டு செ.........ழிக்க வேணும் ........... நல்ல மழை .......பெய்ய வேணும்"
இந்த வார்த்தைகள் காதில் பட்டவுடனே, வெளியில் போய் யார் பாடுகிறார்கள் என்று கேட்க வேண்டுமென்ற எண்ணம் நமக்குண்டாயிற்று. நமது தெருவிலேயே கீழ்ப்புறம் நான்கு வீடுகளுக்கு அடுத்த வீட்டு வாசலில், சில தொழிலாளி ஸ்திரீகள் வயது முதிர்ந்தவர்களாகவும், ஏழமை பற்றிய பசி முதலிய கஷ்டங்களால் மலினத் தன்மையுடையவர்களாகவும் நின்று, வீடு செப்பனிடுவதற்காகவும் சுண்ணாம்போ வேறெதோ குத்திக் கொண்டே இந்தப் பாடலைச் சேர்ந்து பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். நாற்பது வயதுடைய ஒரு ஸ்திரீ முதலில் வரிவரியாகப் பாடுகிறாள். மற்றவர்கள் அதைத் திரும்பச் சொல்லுகிறார்கல். திரும்பச் சொல்லுகிறவர்களுடைய குரல் உருக்கமால இல்லை. முதலில் பாடும் ஸ்திரீக்குத்தான் ஈசன் அருமையான கண்டம் கொடுத்திருக்கிறார்.
"நா.........டு..... செழிக்க வேணும்"
என்று மறுபடியும் தொனி பிறந்தது. நாமும் நம்முடன் இருந்த பிறரும் இது மாதாவின் ஆக்கினையென்பதை அறிந்து கொண்டோம். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்குமே பூமி சொந்தமானது; மனித சமூகத்தில் இவர்களே தேனீக்கள். மற்ற நம் போன்றோரெல்லாம் பிறர் சேகரித்து வைத்த தேனை உண்டு திரியும் வண்டுகள்.
தொழிலாளிகளையும் விவசாயிகளையுமே நாம் "வந்தேமாதரம்" என்ற மந்திரத்தால் வணங்குகிறோம். இவர்களுடைய எண்ணங்களும் ஆசைகளும் பிரார்த்தனைகளும் மற்றோர்களால் கட்டளைகளாகப் பாராட்டிப் போற்றத்தக்கனவாகும்.
மாதாவின் கட்டளையைக் கேளுங்கள்.
(ஹா! அந்த இசையினிமையை நாம் காகிதத்தின் மேலே எப்படி எழுதிக் காட்டுவது?)
நா..........டு..............செழிக்க வேணும்,
நல்ல மழை பெய்ய வேணும்
நெல்........லு......விளைய வேணும்
ரெண்டு படி விற்க வேணும்.
இந்தக் கட்டளையை நாமனைவரும் பின்பற்றக் கடமைப் பட்டிருக்கிறோம். "நெல் விளைய வேண்டும்" என்று ஆணை பிறக்கிறது. மணிலாக்கொட்டையும் (நிலக்கடலை) பருத்தியும், அவரியும் ஆஹாரமாட்டாது. பணம் எப்போதும் அரிசிக்கு நிகராக மாட்டாது. கையில் பணம் சேரவேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் நிலத்திலே உணவுத் தானியங்களல்லாத பிறவற்றைப் பயிரிடுபவர்கள் நீடித்த யோசனையில்லாதவர்கள். உணவுப் பொருள்களின் விலை அதிகப்பட அதிகப்பட உன் பணத்துக்கு விலை குறைவுதானே? பணத்துக்கு (அதாவது புதுச்சேரியில், 2 அணாவுக்கு 2 படி அரிசி விற்கவேண்டுமென்று தாய் கட்டளையிடுகிறாள். கீழ்ப்பங்காளத்தில் பெரும்பகுதி ஜூட்டு (சணல்) விளைவாய்ப் போய்விட்டது. தென்னிந்தியா முழுதும் மணிலாக்கொட்டையும், அவுரியுமாய்விட்டால், அரிசி 2 அணாவுக்கு 2 படி எப்படி விற்கும்? தக்க கிரகஸ்தன் என்பவன் ஒரு வருஷ செலவிற்கேனும் வீட்டில் அரிசி தயாராக வைத்திருக்க வேண்டும்.
அவுரி விற்ற காசு அவலம். அதை வைத்துக் கொண்டிருப்பவன் கிரகஸ்தனாக மாட்டான். மேலும், இந்தச் சமயத்தில் மணிலாக்கொட்டை, அவரி - இவற்றிற்கு விலை எப்போதும் கிடைகுமென்றெண்ணுவது பிழை! நாட்டிலே இந்தப் பயிர்கள் பரவி அதிகப்பட இவற்றிற்கு விலை குறைந்துவிடுமல்லவா? ஜுட் முதலியவை விதைப்பினால், கம்பு, கேழ்வரகு, சோளம், அரிசி முதலியவை பிறகு அச்செய்களில் விளைக்க யோக்கியதையில்லாமற் போய்ட்விடுகின்றது.
"நெல்லு...............விளைய வேணும்"
No comments:
Post a Comment
You can send your comments