Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Monday, December 24, 2012

"வாக்தேவி" ஸரஸ்வதி


"வாக்தேவி" ஸரஸ்வதி

வேதத்தில் 'வாக்கை' ஒரு தெய்வமாகச் சொல்லியிருக்கிறது. திருஷ்டாந்தமாகப் பின் வரும் மந்திரங்களை நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம்.

"நம்மைப் பரிசுத்தம் செய்வாள் ஸரஸ்வதி; வளங்களிலே மிகுந்தாள், அறிவுச் செல்வமுடையவள், (நமது) வேள்வியைத் தாங்குக"

"உண்மையொளிகளைத் தூண்டுவாள், நல்ல மதிகளை விளங்கச் செய்வாள், ஸரஸ்வதி வேள்வியைக் காக்கின்றாள்."

"பெரு வெள்ளமாகிய ஸரஸ்வதி ஞானவொளியால் விளக்குவாள்; எல்லா அறிவுகளிலும் கதிர் செய்கிறாள்."

"வாக்" என்பது, மூலத்திலே, படைத்தல் என்று பொருள்படும். ஸரஸ்வதியை இந்திரணுடைய மறைவுயிர் என்று சொல்வதுண்டு. ஸ்ருஷ்டியே வாக்கு; ஸ்ருஷ்டியே சக்தியானபடியாலேதான் புராணக்காரர் ஸரஸ்வதியைப் பிரம்மாவின் சக்தியென்றார். பைபிள் புஸ்தகத்திலே, 'ஆரம்பத்தில் வாக்கு' இருந்தது; அந்த வாக்கு ஈசனோடிருந்தது; அந்த வாக்கே ஈசன்' என்று சொல்லப்படுகிறது. சக்தி பரமபுருஷனோடு இருப்பதையும், அவ்விரண்டும் ஒன்று என்பதையும் அந்த வாக்கியம் காடுகிறது.

ஸரஸ்வதி பூஜை - உண்மை வழி.

சொல்லை ஸாதாரணமாக நினைத்து விடலாகாது. உண்மைச் சொல் க்ஷேம மந்திரமாகும். பொய்ச்சொல் அழிந்துவிடும். "வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்".
இவளை அறிஞன் தனக்குள்ளே ஞான வெள்ளமாகக் காண்கிறான். அவளுடைய அறிவு கதிர் விடுகின்றது. இவளுடைய பூஜைக்கு முக்கிய வழிகள் எவை? தான் எப்போதும் எவ்விடத்திலும் உண்மை சொல்லுதல், பிறர் உண்மை சொல்வதை எப்போதும் எவ்விடத்திலும் விருப்பத்தோடு கேட்டல் என்ற இவ்விரண்டுமேயாம். தான் உண்மை சொல்வது மிகவும் சிரமமாய்விட்டது. பிறர் உண்மை சொல்வதைக் கேட்கும்போது நாராசவாணமாய்விட்டது. ஸாதாரண நிலையில், மனித வாழ்க்கை அத்தனை கோணலாகிவிட்டது; மனித அறிவு அவ்வளவு குழப்பமடைந்து நிற்கின்றது.

தேவ வாக்கு அவதாரம்: ஸரஸ்வதி

வேத மார்க்கமாகிய வேள்வியின் ரஹஸ்யப் பொருளை உணர்ந்து நடந்தால், உண்மை சொல்வதிலும் துன்பமிராது; கேட்பதிலும் துன்பமிராது. உலக வாழ்க்கையே தேவருக்குச் செய்யப்படும் வேள்வியல்லவா? அதனை ஸரஸ்வதியே தரிக்க வேண்டுமென்று மதுச்சந்த ரிஷி வேண்டுவதை மேலே கண்டோம். உண்மைச் சொல்லே ஸரஸ்வதி வசம் நமது வேள்வியை ஒப்புக் கொடுப்பதற்கு முக்கிய வழியென்றோம். இதனுடன் நிந்தை, பழி, சாபம், பயம், அசுசி -- இவற்றினால் வாக்கை மாசுபடுத்தாதிருக்க வேண்டும். அமங்கள வார்த்தைகளும் அவச்சொற்களும், பய வசனங்களும் தீமை தரும். பரிபூரண தீரமும் வலிமையும் உண்மையும் திருத்தமும் தெளிவும் பொருந்திய வாக்கே, தேவ வாக்கென்று சொல்லப்படும். மனித ஜாதிக்கு தேவ வாக்குப் பிறந்திடுக.

ஸரஸ்வதியும் இலக்கியமும்

உலக நடையிலே, உண்மை முதலிய குணங்கள் ஸரஸ்வதி தேவியின் கருணைக்கு நம்மைப் பாத்திரமாக்கி, நம்மிடத்திலே வேத வாக்கைத் தோற்றுவித்து, நமது வேள்வியைக் காக்கும் என்பது கண்டோம். இலக்கியக்காரருகோவென்றால், இத் தெய்வமே குலதெய்வம், அவர் இதனைச் சுடர்செய்யும் உண்மையுடனே போற்றவேண்டும். எதுகை மோனைகளுக்காகச் சொல்லவந்த பொருளை மாற்றிச் சொல்லும் பண்டிதன் ஸரஸ்வதி கடாக்ஷத்தை இழந்துவிடுவான். யமகம், திரிபு முதலிய சித்திரக் கட்டுகளை விரும்பிச் சொல்லுக்குத் தக்கபடி பொருளைத் திரித்துக் கொண்டு போகும் கயிறுபின்னிப்புலவன் வாணியின் திருமேனியை நோகும்படி செய்கிறான். அவசியமில்லாத அடைமொழிகளோ கோப்போன் அந்தத் தெய்வத்தின் மீது புழுதியைச் சொரிகிறான். உலகத்தாருக்குப் பொருள் விளங்காதபடி இலக்கியஞ் செய்வோன் அந்தச் சக்தியைக் கரித்துணியாலே மூடுகின்றான்; 'வெள்ளைக்கலை' யுடுத்துவதில்லை. மனமறிந்த உண்மைக்கு மாறு சொல்லும் சாஸ்திரக்காரனும் பாட்டுக்காரனும் ஸரஸ்வதிக்கு நிகரில்லாத பாதகம் செய்கின்றனர். இலக்கியத்துக்குத் தெளிவும் உண்மையுமே உயிரெனலாம். இவ்வுயிருடையவர்க்கே அருள்வாக்கென்று சொல்லப்படும்.

முடிவுரை

வேதரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாரதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது; அத்வைதத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடயா; பக்தி மாத்திரந்தானுண்டு.

கோவிலும் மடமும், பெளத்த மதப் பழக்கத்தால் வெளிநாடுகளிடமிருந்து நமக்குக் கிடைத்த பேறுகள் என்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோயிலைப் பிரிக்க முடியாது. கோயில்களுக்குள்ளே பரஸ்பரம் பொறாமையும் சண்டையும் இல்லாதபடி எல்லாக் கோயில்களும் ஸாக்ஷாத் ஸூரியனாகவும், அக்நி குமாரனாகவும், ருத்ரனாகவும், இந்த்ரனாகவும், வாயுவாகவும், விஷ்ணுவாகவும், வருணனாகவும் விளங்குகிற பரமாத்மாவின் கோயில்கள் என்றும், கோயில்களுக்குள்ளே கக்ஷி பேதங்கள் கிடையாவென்றும் பண்டித-பாமரர்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ப்ரகிருதி இயற்கைத் தோற்றம்; காணப்ப்டுகிற உலகம் விஷ்ணுவுடைய சரீரம். இதற்குள்ளே வ்யாபித்து நிற்கும் ஆத்மாவே விஷ்ணு. விஷ்ணுவைச் சிலையிலும் வணங்கலாம்; மலையிலும் வணங்கலாம்; தூணிலும் திரும்பிலும் வணங்கலாம். சிலைகளிலே வணங்குதல் ஒருவகை யோகம். வேதரிஷிகள் இந்த விஷ்ணுவை, இந்த்ரனை, ஸூர்யனை, ருத்ரனை நேராகக் கண்டு வணங்கினார்கள். உலகமே இவனுடைய உடம்பாதலால் அவர்கள் உலகத்தை வணங்கினர். அறிவுக்குள்ளே வானமும் ஸூர்யனும் இருப்பது போல, வெளியுலகத்திலும் இருக்கின்றன. உள்ளும் புறமும் ஒன்று.

மற்றொரு முறை விளங்கச் சொல்லுகிறேன். வேத ரிஷிகள் அதன் முன்னே போய் நின்றார்கள். ஆயிர மின்னல்கள் வாள் போல வீசின. உலகம் குலுங்கிற்று. அண்டங்கள் இடிவதுபோலே சத்தம் கேட்டது. மேற்படி ரிஷிகள் பயப்படவில்லை. மந்திரங்களைப் பாடினார்கள். ருத்ரனுடைய உடம்புதானே உலகம்? வாயுவே ருத்ரன். வாயுவினுடைய உடற்செய்கைதானே புயற்காற்று? இந்திரன் மின்னலையும் இடையையும் காட்டுகிறான். மேகங்கள் சிதறுகின்றன. பூமிக்குத் தன்ணீர் கிடைக்கிறது. இதில் பயத்துக்கு இடமெங்கே? ரிஷி புயற்காற்றைத் துதிக்கிறார். பிறகு, இரவு நீங்கி ஸூர்யோதயம் உண்டாகிறது; ஒளி தோன்றுகிறது. அதைப் பார்த்து நேரே கைகூப்பி ரிஷி, மந்திரம் பாடுகிறார். பக்ஷிகள் பாடுகின்றன; பூக்கள் மலர்கின்றன. நீரும் காற்றும் சிரிக்கின்றன. இஃதத்தனையும் இயற்கைத் தெய்வத்தின் காட்சி. இதை ரிஷி போற்றும்போது ப்ரத்யக்ஷ நாராயணனைப் போற்றுகிறார்.

வீட்டிலே நெருப்பு வளர்த்து, அதிலே தெய்வத்தைக் கண்டு தொழும் வழக்கம் அக்காலத்தில் மிகுதிப்பட்டது. பொதுவாக, இயற்கை வணக்கம் வழக்கமில்லாமல் போன பிறகும் அக்நி பூஜையும் ஸூர்ய பூஜையும் இன்றுவரை நமக்குள்ளே மிஞ்சி நிற்கின்றன. ஸந்த்யாவந்தனாதிகளில் ஸூர்ய பூஜை நியதமாக நடந்து வருகின்றது. ஸர்வ வைதிக கிரியைகளும் ஹோமம் வளர்த்துப் பூஜை பண்ணாமல் நடப்பதில்லை.

ப்ரகிருதியை நேரே தொழும் வழக்கம் மிகுதிப்பட்டால் வேதம் ஒளிபெறும்.

சரணாகதியே வழி.

வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

குருவுக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றும், பரமாத்மா ஒருவனுக்கே சரணாகதி தகும் என்றும் என்னுடைய அபிப்பிராயம்.

மனத்தைக் கட்டி ஆளுவதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி. மந்திரத்தின் ஒலியைத் தியானம் செய்வதில் பயன் கிடைக்குமென்று தோன்றவில்லை. அதன் பொருளைத் தியானிக்க வேண்டும். பின்வரும் பாட்டில் பரம்பொருளாகிய நாராயணனுக்குச் சக்திநாமம் வழங்கப்படுகிறது.

பாட்டு
('தனத, தனத, தனத, தனத, தனத தாம்' என்று தாளம் போட்டுக்கொண்டு இந்தப் பாட்டை இஷ்டமான ராகத்தில் பாடலாம் - பாரதியார்)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்க ளாமிவள்
பார்வைக்கு நேர்பெருந் தீ,
வஞ்சக மின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென் றேயுரைப் பீரவள் பேர், சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்
அல்லது நீங்குமென் றேயுல கேழும்
அறைந்திடு வாய்முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காணிங்கு
சொல்லு மவர்தமை யே
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

நம்புவ தேவழி யென்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்;
கும்பிட்டெந் நேரமும் நக்தியென் றாலுனைக்
கும்பிடு வேன்மன மே,
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில் லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

பொன்னைப் பொழிந்திடு, மின்னை வளர்த்திடு
போற்றி யுனக்கிசை தோம்
அன்னை பராசக்தி யென்றுரைத் தோம்; தளை
யத்தனை யுங்கலைத் தோம்
சொன்ன படிக்கு நடந்திடு வாய்மன
மேதொழில் வேறில்லை காண்;
இன்னும தேயுரைப் போம்சக்தி ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்;
தெள்ளு கலைத்தமிழ் வாணி, யுனக்கொரு
விண்ணப்பஞ்ச் செய்திடு வேன்;
எள்ளத் தனைபொழு தும்பய னின்றி
யிராதென்ற நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய், சக்தி வேள் சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்.

(இந்தப் பாடல் பிறந்த விதம், இந்தப் பாடலுக்கு மகாகவி கொடுத்த விளக்கம் இவற்றோடு புரிந்து கொண்டு பாடினால்தான் நமக்குப் புரியும்.)


No comments:

Post a Comment

You can send your comments