Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Sunday, December 23, 2012

"இந்தியா" பத்திரிகை கட்டுரை:


"இந்தியா" பத்திரிகை கட்டுரை:

தலைப்பு: "முதற்பிரயத்தனம்" 21 நவம்பர் 1908.

ஒரு ஜாதியார் ஸ்வதந்திரத்தின் பொருட்டுத் தலைமுறை தலைமுறையாகக் கஷ்டமடைவது இறுதி வரையில் வெற்றி கொண்டே முடியுமென்ற கருத்தை "பைரன்" என்ற ஆங்கிலேய மகாகவி அழகிய மொழிகளிலே புனைந்திருக்கின்றார். அவரது மொழிகளை ஒருவாறு தமிழில் பெயர்த்துத் தருகின்றோம்.

தந்தையர் குருதியிற் சாய்ந்துதாம் மடியினும்
பின்வழி மக்கள் பேணுமா றளிக்கும்
சுதந்தரப் பெரும்போர் ஓர்காற் தொடங்குமேற்
பன்முறை தோற்கும் பான்மைத் தாயினும்
இறுதியின் வெற்றியொ டிலகுதல் திண்ணம்.

இதன் உரை யாதெனில்:--

"பரம்பரையாகத் தந்தையார் தாம் இரத்தத்தில் வீழ்ந்து மாய்வாரேனும் தமது சந்ததியார் நடத்திச் செல்லுமாறு தந்துவிட்டுப் போகின்ற சுதந்தர யுத்தமானது பல முறை தோற்றுப் போயினும் கடைசிவரை ஜயங்கொண்டே முடிவதாகும்."

கவிரத்தினமாகிய 'பைரன்'.

கவிரத்தினமாகிய 'பைரன்' எழுதியிருக்கும் இம்ம்மொழிகளை நமது நாட்டில் ஒவ்வொருவனும் பொன்னெழுத்துக்களிற் புனைந்து எப்போதும் கழுத்திலே தரித்துக் கொள்ளுதல் தகும். நமது செவிலித்தாய் என்று கருதுதற்குரியதாகிய பிரான்ஸ் தேசத்தின் சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால் மேற்கூறப்பட்ட கருத்தின் உண்மை நன்கு விளங்கும். நிற்க, நமது தாய் நாடாகிய பாரத தேசத்திலுள்ளோர் இரண்டு வருஷங்களாக சுதந்தரப் பிரயத்தினம் தொடங்கி நடத்தி வருகின்றார்கள்.

வங்காளத்து மகாஜனங்களின் பிரதிக்கினை

1905ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 16 ஆந்தேதியன்று கல்கத்தாவில் ஐக்கிய மண்டல ஸ்தலத்திலே பெங்காளத்து மகாஜனங்கள் ஒருங்கு சேர்ந்து ஏக சிந்தனையுடன் 'பரமேசுவரன் சாட்சியாக இனி நாம் அன்னிய தேசத்து வஸ்திராதிகளைத் தீண்டுவதில்லை' என்று பிரதிக்கினை செய்து கொண்டார்கள். அப்போது 'வந்தேமாதரம்' என்ற தொனி எங்கிருந்தோ பிறந்தது. சுதந்தரப் போர் பாரத நாட்டிலே 'ஓர் கால் தொடங்கி'விட்டதென்பதற்கு இவை சின்னங்களாகும். அது முதல் ஸ்ரீ திலகருக்குத் தீவாந்தர சிக்ஷை விதித்ததோட் பாரத தேசத்தாரின் சுதந்தரப் போரிலே முதற் சருக்கம் முடிவு பெற்றது. சிறிது காலத்திற்கு இரு திறத்தாரும் இளைப்பாறுவார்கள். இளைப்பாறுதற்கென்றமைந்த இந்தச் சமயத்திலே தேசாபிமானிகள் செய்ய வேண்டிய கடமை யாது? அதை ஒரு திருஷ்டாந்த மூலமாக விளக்குவோம்:

'மாஜினி'

'மாஜினி' என்னும் பெயர் கொண்ட இத்தாலி தேசபக்தரைப் பற்றிப் பல முறை பிரஸ்தாபம் செய்திருக்கிறோம். அவர் தமது வாழ்நாளிலேயே தம்முடைய நாடு சுயாதீன நிலையடைந்ததைக் காண்பதற்குப் பாக்கியம் பெற்றிருந்தார். அதுவும் பெரும்பாலும் இவரது சொந்த முயற்சியாலேயே நிறைவேறிற்று. இவர் 'பால இத்தாலி' என்ற சங்கம் தொடங்கி வேலை செய்து வந்தார். இவரது முயற்சிகளிலேயும் முதல் சருக்கத்தில் தேச பக்தர்களின் பக்கம் தோல்வியடைந்து போய் கொடுங்கோலரசாகிய ஆஸ்திரியாவின் பக்கமே வெற்றி வாய்த்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தைக் குறிப்பிட்டு மாஜினி பின்வருமாறு எழுதுகின்றார்.

"பால இத்தாலி" சங்கத்தாரின் முயற்சியிலே முதற் பருவம் எங்கள் பக்கம் தோல்வியோடு முடிவு பெற்றது. எனவே, அப்பால் நான் செய்தற்குரியது யாது? ராஜ்ய சம்பந்தமான முயற்சியையே விட்டுவிட்டு, என்னைக் காட்டிலும் திறமையேனும் துணிவேனும் மிகுதியாகவுடைய மனிதர்கள் இத்தாலி தேசத்தைப் பக்குவப்படுத்தும் வரை காத்திருக்கலாமா? நான் என் சொந்த அபிவிருத்தியிலேயே கருத்தைச் செலுத்தி எனது பிரகிருதிக்கு அனுகூலமாகிய படிப்புகளிலே காலத்தைச் செலவிடலாமா?

அநேகர் அவ்வாறு செய்யும்படி எனக்குப் போதனை செய்வார்கள். நெடுங்காலத்து அடிமை வாழ்க்கையில் இத்தாலி தேசமானது வேர் வரை அழுகிப்போய்விட்டது. ஆகையால், அத்தேசம் நாம் காட்டுகின்ற ஆதர்சத்தை அங்கீகரித்து, தனது முயற்சியைக் கொண்டே தான் வெற்றி பெறுவதற்குரிய வழி தேடிக் கொள்ளப் போவதே கிடையாது என்றனர் சிலர். வேறு சிலர் போராட்டத்தின் தொடக்கத்திலேயே எய்ப்புற்றவராய், தமக்கு மேலே தோன்றிக் கறுத்து வரும் புயற்காற்றையொத்த விபத்துகளைக் கண்டு நடுக்கமுற்று, தன் சொந்த நலத்தையே நாடிக் காலஞ் செலவிட விருப்பம் கொள்வாராயினர். துரதிருஷ்டமாக முடிந்த 'ஸேவாய்' படையெழுச்சிக்கு அப்பால் நிகழ்ந்த செய்திகள் இவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு ஓர் பலம் ஆயின. எந்தப் பக்கத்தார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களையே தொழும் வழக்கமுடைய சாமானிய ஜனங்கள் எங்கு பார்த்தாலும் தேசத்தார்களின் மீது பழி தூற்றுவாராயினர். பாறைகளின்மீது அடித்துத் தாக்கிய அலைகள் அது பயனில்லையென்று உணர்ந்தபோது பின்வாங்கிச் செல்லத் தொடங்கின.

மாஜினியும் அவருடைய நண்பர்களும் இத்தருணத்தில் ஸ்விஜர்லாந்து தேசத்திலே போய் வாசஞ்செய்து வந்தார்கள். இத்தாலி தேசத்திலிருந்து மனம் சோர்வதற்குரிய வர்த்தமானங்களே கிடைப்பதாயின. தேசபக்தர் கூட்டத்திலே பலர் ஓடிப்போய்விட்டார்கள் என்றும், ஸபைகள் உடைந்து துண்டு துண்டாய்ப் போயினவென்றும் தெரிய வந்தது. ஸ்விஜர்லாந்து தேசத்திலோ ஆரம்பத்தில் எங்களை விருப்புடன் நடத்திய ஜனங்கள், வரவர எங்கள் மீது வெறுப்புறத் தொடங்கினர். (ஸ்விஜர்லாந்து தேசத்தின் ராஜதானியாகிய) ஜெனிவா நகரத்தில் மற்ற ராஜாங்கத்தாரிடமிருந்து உடனே எங்களைத் துரத்திவிடச் சீட்டுக்கள் வந்து குவியத் தொடங்கின. நாங்கள் தாழ்ந்த நிலைக்கு வந்துவிடவே, அந்நாட்டிற் பெரும்பான்மையோர் தேசத்தின் அமைதியைக் கெடுக்க வந்தவர்கள்; 'ஸ்விஜர்லாந்து மற்ற ஐரோப்பிய அரசுகளுக்கும் உள்ள சமாதானத்தையும் நேசப்பான்மையையும் அழிக்கவந்த அன்னியர்' என்று பலவாறாகச் சபிக்கத் தொடங்கி விட்டார்கள். அதிகாரிகள் எங்களைப் பற்றி பலவிதமான விசாரணைகள் செய்யலாயினர். எங்களுடைய யுத்த ஸாமக்கிரியைகளையெல்லாம் பற்றிக் கொண்டனர். எங்கள் கையிலிருந்த பொருள் பெரும்பாலும் செலவாகிவிட்டது. அந்நிய தேசத்திலே சரணாக வந்திருந்த தேசபக்தர் கூட்டத்தில் பெரும் பகுதியோருக்கு உணவுக்கும் உடைக்குங்கூட வழியில்லாமல் எங்கள் நிலைமை மிகக் கேவலமாகிவிட்டது. மிகுந்த கஷ்டத்தாலும் ஆசாபங்கத்தினாலும் எங்களுக்குள்ளே பிரிவுகளும் பரஸ்பர விரோதங்களும் கிளைக்கத் தொடங்கின. எங்களைச் சூழ நான்கு திசையிலும் இருள் நிரம்பி விட்டது.

எனக்குப் பலரும் செய்த போதனைகளிலும் எவ்விதமான ஆபத்துக்களிலும் அதிகமாக எனது தாயாருடைய வருத்தமும் கவலையுமே பொறுக்க முடியாமல் இருந்தன. எனக்கு எவ்வகையிலேனும் தளர்ச்சியுண்டாயிருத்தல் சாத்தியமானால் எனது தாயைப் பற்றிய நினைவு ஒன்றுதான் அத்தளர்ச்சியை விளைத்திருக்கும்.

ஆனால், எனது ஆத்மாவிலே வெளி மாறுபாடுகளால் வசப்படாத ஒரு சக்தி விளங்கின்றது. எனது ஆத்ம நிலை தன்னிலே தானடங்கியதாய் வெளித் தோற்றங்களினால் சலனமடையும் இயற்கையில்லாதது. ஆத்மா தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகை அடக்கி ஆளவேண்டியது; உலகத்தின் ஆட்சிக்குத்தான் உட்படக்கூடாது என்ற நம்பிக்கை அக்காலத்திலேயே எனக்கு இருந்தது. எனது ஜீவமுறை உள்ளிருந்து வெளியே வீசும் தன்மையுடைத்தன்று.

நாங்கள் எடுத்த பிரவிருத்தியானது முந்தோன்றிய தொன்றை மாற்றுவது மட்டுமே நோக்கமாக உடையதன்று. நோயாளி தன் வருத்தம் நீங்கும்பொருட்டு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் புரண்டு படுப்பது போன்ற தன்மையும் உடையதன்று. நாங்கள் ஸ்வதந்தரத்தை நாடுவதில் அதனையே ஒரு லட்சியமாகக் கருதி நாடவில்லை. அதனினும் உயர்ந்ததும் ஸத்துவமுடையதுமாகிய லட்சியமொன்றை அடைவதற்கு ஸ்வதந்தரத்தை ஓர் உபகரணமாகக் கருதி நின்றோம். எங்களுடைய கொடியின்மீது "ஒருமை கொண்ட குடியரசு" என்ற பதங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஓர் ஜாதியை ஸ்தாபனம் செய்டல் -- ஓர் ஜன அமைப்பைப் புதிதாகப் படைத்தல் -- இப்பெருநோக்கத்தோடு முயற்சி புரிந்தோம். இத்தனை உயர்ந்த நோக்கமுடையவர்க்கு ஒரு முறை தோல்வியடைந்தது ஓர் பொருட்டாகுமா? கஷ்டம் வந்தபோது அமைதியுடன் பொறுத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை நம் கட்சியாருக்குக் கற்பித்தல் எங்களுடைய போதனைத் தொழிலில் ஓர் பகுதியல்லவா? இதை எங்களுடைய சொந்த நடைமூலமாக அந்தப் பாடத்தைத் திருஷ்டாந்தப் படுத்துவதைக் காட்டிலும் அதனைப் போதிப்பதற்கு வேறொரு வழியுண்டோ? இத்தருணத்தில் நாங்கள் எங்களுடைய கடமையைக் கை நழுவ விட்டுவிடுவோமானால் இத்தாலிக்கு ஐக்கியம் ஒருபோதும் ஏற்படாதென்று சொல்வோருக்கு எங்கள் செய்கையே ஒரு பலமாகுமன்றோ?

இத்தாலி ஜாதியை துர்ப்பல நிலைக்குக் கொண்டு வந்த முக்கியமான குறை யாதெனில், அது ஸ்வதந்தரத்திலே விருப்பமில்லாமையன்று, அந்த ஜாதியாருக்குத் தமது சொந்த திறமையிலே நம்பிக்கை யில்லாமையும் எளிதில் சோர்வடைந்து விடுதலும் ஸ்திர சித்தமில்லாமையும் முக்கிய குறையாகும். (ஸ்திர சித்தமில்லாவிடின் தர்மம் கூடப் பயனற்றதாய் முடியும்) நம்மவரிடையே உள்ளக் கருத்திற்கும் புறச் செய்கைக்கும் லயமில்லாதிருக்கின்றன. இந்த லயமின்மை மஹா விநாசகரமானது. இதுவே நமது ஜாதியாரின் முக்கிய குறையாகும்.

இந்தப் பெருநோயைத் தீர்க்க ஒரு வழியுண்டு. அதாவது, இதனளவுக்குத் தக்கபடி விஸ்தாரமாக லிகிதங்கள் மூலமாகவும் உபந்நியாசங்கள் மூலமாகவும் தேச ஜனங்களுக்கு உபதேசங்கள் புரிவதேயாகும். ஆனால், இத்தாலியில் போலீஸ் நிஷ்டூரத்தினால் இம்மார்க்கத்தை அநுசரிக்க ஸாத்தியமில்லாது போய்விட்டது. எனவே ஆவேசம் நீங்காததொரு பக்தி ஸமாஜம் ஏற்படுத்துதல் அவசியமாயிற்று. மன உறுதியிலேயும் கடைப்பிடிப்பிலேயும் திண்மையுற்று மனச்சோர்வுக்கு வசப்படாத மனிதர்கள் நிஷ்டூரத்தை உல்லங்கனம் செய்து ஓர் பெரிய தர்மத்தின் பொருட்டு அபஜயத்தையும் புன்சிரிப்போடு ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள், இன்று தளர்ச்சியடைந்தாலும் மறுநாள் உயிர்த்தெழுவர். எப்பொழுது பார்த்தாலும் மனோயுத்ததிற்குச் சன்னத்தமாகிக் காலத்தையும் விதியையும் இகழ்ந்து இறுதி வெற்றியிலே நீங்காத பக்தி நிரம்பியவர் இத்தன்மை கொண்ட பக்தர்களின் சமாஜம் ஒன்று இன்றியமையாததாயிற்று. நாங்கள் கைக்கொண்டது ஓர் தேசபக்தி கக்ஷியன்று, தேசபக்திமார் சங்கம். கட்சிகளைக் கொடுமையினால் நசிக்கச் செய்யலாம். மார்க்கங்களை ஒரு போதும் நசிக்கச் செய்தல் இயலாது.

(இவ்வாறு சிந்தித்து) நான் எனது சந்தேகங்களையெல்லாம் உதறிவிட்டு அடுத்த காரியத்தை விடாது நடத்த வேண்டுமென்ற உறுதி செய்து கொண்டேன். இத்தாலியில் எங்கலுடைய வேலையை இன்னம் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது தெளிவாக நின்றது. எமது ஜனங்கள் கலக்கம் தெளிவதற்கும், அரசு புரிவோர் தமது வெற்றியை உறுதியாக நம்பி, மறுபடியும் கண்ணயர்வதற்கும் சிறிது காலம் கடந்தே தீர வேண்டும் எனினும், உள்நாட்டில் எங்களுக்கேற்பட்ட நஷ்டங்களை வெளி தேசங்களில் சென்று பிரயத்தனங்கள் புரிந்து ஒருவாறு ஈடு செய்து கொள்ள முடியும். நாம் இரண்டாவது முறை ஓர் எழுச்சி தொடங்கும் போது நமக்கு அன்னிய தேசத்தாரின் அனுதாபம் இருக்குமாறு செய்து கொள்ளக்கூடும்."

மேலே மாஜினி கூறியிருக்கும் வசனங்கள் நமது தற்கால நிலைமைக்கு முற்றிலும் பொருந்தியனவாகும். நமது தேசபக்தர்களிலே அன்னியர்கலின் சரீர பல உதவியைச் சிறிதேனும் எதிர்பார்க்காத விபின் சந்திரர், காபர்தே முதலியவர்கள்கூட இப்போது ஐரோப்பிய்ற்குப் போயிருக்கிறவர்கள் நோக்கமும் மேலே கூறிய வசனங்களினின்றும் நன்கு விளங்கும்.

No comments:

Post a Comment

You can send your comments