"இந்தியா" பத்திரிகையில் மகாகவியின் கட்டுரை
மகாகவி பாரதியார் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக இருந்து பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரை 1908ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. 104 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை இப்போது படித்துப் பார்ப்போம். கட்டுரையின் தலைப்பு "கன்னித்தமிழ்" நிலைமையை நன்கு புரிந்து கொள்வோம்.
"தமிழ்ப் பாஷை இறந்து போய்விடும் என்றும், நமது தமிழ் நாட்டில் எல்லா பாஷைகளுக்குமே பிரதியாக இங்கிலீஷ் பாஷை ஏற்படுமென்றும் நம்பிய மூடர்கள் சுமார் 100 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள். இப்போதுங்கூட அந்த நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகள் எல்லாம் மடிந்து போய் அவற்றின் இடத்திலே இங்கிலீஷ் நிலவிவரும் என்பது இவர்களுடைய எண்ணம். இஃதிவ்வாறு இருப்ப, மகாவித்வான் ஸ்ரீ உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் சில தினங்களின் முன்பு இவ்விஷயத்தைப் பற்றிப் பேசியபோது பின் வருமாறு கூறியிருக்கிறார்:--
"அன்னியர்களைக் குறை கூறிப் பயனில்லை. தமிழ்ப் பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும். எவ்வாறாயினும் நமது தாய்மொழி ஸாமானியத்தில் இறந்துவிடக்கூடியதன்று. பெரியோர்கள் இதனைக் 'கன்னித் தமிழ்' என்று பெயரிட்டழைத்திருக்கிறார்கள். இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகையாகும். இதற்கு முதுமையே கிடையாது. மரணமும் இல்லை" என்றார்.
கன்னித் தமிழ் மொழியை முற்காலத்தில் ஆதரித்து வளர்த்தவர்களின் பெருமையைப் பற்றி, ஸ்ரீ சாமிநாதய்யர் பல அரிய விஷயங்கள் பேசினார். ஆசன், சீடன் என்போர் பண்டைக் காலத்தில் எங்ஙனம் ஒழுகி வந்தார்கள் என்பதை இனிது விளக்கினார். இறுதியில் திருவாரூரைப் பற்றித் தமிழ் நூற்களிலே தாம் செய்த ஆராய்ச்சியினின்றும் விளங்கிய பெருமைகளை வாசித்துக் கூறினார். தமிழ் வளர்ப்பதன் பொருட்டு முற்காலத்தில் இடத்துக்கு இடம் "திருக்கூட்டங்கள்" அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள்ளே, புகழ் மிஞ்சிய திருக்கூட்டமொன்று திருவாரூரிலே இருந்தது. 'இலக்கண விளக்க' நூலாசிரியராகிய ஸ்ரீ வைத்தியநாத தேசிகர் இத்திருவாரூர்க் கூட்டத்திலே ஓர் அவபவியாக விளங்கினார்.
பசுங்கன்றைக் கொன்றதன் பொருட்டு, தன் சொந்த மகனை உருளையின்கீழே போட்டு மேலே தேரோட்டிய மனு நீதி கண்ட சோழன் முதலிய மேலோர் திருவாரூரிலே வாசம் புரிந்தவர்கள் என்பதைத் தற்கால அதிகாரிகளின் நீதியைக் கண்டு மகிழ்ந்திருக்கும் அவ்வூரினருக்கு ஸ்ரீ அய்யரவர்கள் நினைப்பூட்டினர். பின்னர், அவ்வூர்ச் சிறப்புகளைப் புராணக் கதைகளினின்றும் பல திருஷ்டாந்தங்கள் கூறித் தெளிவாக்கி, அவ்வூரார் தமது பண்டை மாண்புக்குத் தக்கவாறு வாழ்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை வற்புறுத்தினர். இவ்வுபதேசத்தைத் திருவாரூர்ப் பிறந்தார்கள் மட்டுமேயன்றித் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மக்கலும் மனத்தே கொண்டு நலமுறுவாராக!
நன்றி: "புதுவையில் பாரதி" ஆசிரியர் திரு ப.கோதண்டராமன், M.A.,B.L.,
வெளியீடு, பழநியப்பா பிரதர்ஸ்.
No comments:
Post a Comment
You can send your comments