Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Monday, December 31, 2012

'அங்ஙனே யாகுக'

                                    'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே!


மகாகவி பாரதியாரின் இந்த வரிகளை புதிதாய்ப் பிறந்துள்ள இந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் மனதில் கொள்வோம். கூடியவரையில் இனி வருங்காலங்களில் இந்தப் பொன்வரிகளை மனத்தில் ஆழப் பதித்துக் கொண்டு செயல்படுவோம். இறைவன் 'அங்ஙனே ஆகுக! (ததாஸ்து) என்பான். அதுதானே நாம் விரும்பும் வரம்!


"கடமை யாவன தன்னைக் கட்டுதல்*
பிறர்துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
நாராய ணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர்பல கூறி
அல்லா! யெஹோவா! எனத் தொழுதன்புறும்
தேவருந் தானாய், திருமகள் பாரதி
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும், பயனிதில் நான்காம்
அறம், பொருள், இன்பம், வீடெனுமுறையே
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சும் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே."

"புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யையெலாம் ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்."

"நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல் -உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே இம்மூன்றும் செய்."

"பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள்,
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன் இதனைநீ!
திருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே!
இந்நாள் இப்போழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய் ஆதிமூலமே! அநந்த
சக்திகுமாரனே! சந்திர மவுலி
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே!

"செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு!"

"மொய்க்குங் கவலைப் பகைபோக்கி
முன்னோன் அருளைத் துணையாக்கி
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே"

".................................................
..............................................
உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம்*
உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்
உள்ளத்தைக் கட்டு, சக்தியைக் கட்டலாம்
அநந்த சக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது
அதற்கு ஒரு வடிவம், ஓரளவு ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது
இந்த நியமத்தை அழியாதபடி சக்தி பின்னே நின்று
காத்துக் கொண்டிருக்கிறாள்
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்
யாதபடி காக்கலாம்
அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால், அந்த
வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும்.
புதுப்பிக்காவிட்டால் அவ்'வடிவம்' மாறும்
அழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை, பழைய
தலையணை, அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய
மெத்தையிலே போடு, மேலுறையைக் கந்தையென்று
வெளியே எறி, அந்த 'வடிவம்' அழிந்து விட்டது
வடிவத்தைக் காத்தால்
சக்தியைக் காக்கலாம்
அதாவது சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்
வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை
எங்கும், எதனிலும் எப்போதும் எல்லாவிதத் தொழில்களும்
காட்டுவது சக்தி
வடிவத்தைக் காப்பது நன்று. சக்தியின் பொருட்டாக
சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு
ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை
இழந்து விடுவர்!






1 comment:

  1. அருமை. தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2013

    ReplyDelete

You can send your comments