Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

பாரதியார் கட்டுரைகள் (1) காமதேனு.



திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
வழங்கும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
பாரதியார் கட்டுரைகள் (1) காமதேனு.

பாரதியாருடைய கவிதைகள் அனைவருக்கும் அறிமுகமானவை. கதைகளும் கட்டுரைகளும் அந்த அளவுக்குப் பரவலாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரதியை முழுமையாக தரிசனம் செய்வதற்கு அவைகளையும் நன்கு படித்தல் அவசியம். அதனால்தான் இந்த மாதம் அவருடைய கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளை எடுத்துத் தந்திருக்கிறோம். மகாகவி பாரதியார் எழுதியுள்ள கட்டுரைகளை யெல்லாம் தொகுத்து ஒரே நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து சில பகுதிகளை இந்த மாதப் பாடமாகப் பார்க்கலாம். முதலில் 'காமதேனு' எனும் தலைப்பில் உள்ள கட்டுரையைப் பார்க்கலாம்.

நம்பிக்கையே காமதேனு.
இன்று ராமானுஜ தரிசனம் முக்கிய ஹிந்து தரிசனங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால் ஆரம்பத்தில் அப்படி இல்லை. ராமானுஜ மதத்தைக் காக்கும் பொருட்டு ராமானுஜரின் முக்கிய சிஷ்யராகிய கூரத்தாழ்வான் கண்களைப் பறிகொடுக்கும்படியாக நேரிட்டது. இவருடன் பெரிய நம்பி என்ற யோகிக்கும் அதே தண்டனை ஏற்பட்டது. பெரிய நம்பி அப்போது கிழவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கொல்லையிலே பெரிய நம்பி கண் போன வேதனையைப் பொறுக்க மாட்டாமல் பக்கத்தில் வேண்டியவர்கள் எவரும் இல்லாமல் கூரத்தாழ்வான் மடியில் படுத்துக் கொண்டு மஹா சந்தோஷத்துடன் உயிர் துறந்தார். கூரத்தாழ்வானோ, "தரிசனத்துக்காகத் தரிசனத்தை இழந்தேன், அது எனக்குப் பெரிய பாக்கியம்" என்று மகிழ்ச்சி கொண்டாடினார். தம்முடைய கொள்கை நிலைபெறும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் உறுதியாக நின்றது.

நம்பினார் கெடுவதில்லை
சிவாஜி மஹாராஜா இளம்பிள்ளையாக இருந்த போது மஹாராஷ்டிரம் என்ன நிலைமையில் இருந்தது? சிவாஜி இறக்கும்போது என்ன நிலைமை? சிவாஜி துணிவினால் ராஜ்ய சம்பத்தை அடைந்தான். நம்பிக்கையினால் நெப்போலியன் ராஜா பிரான்ஸ் தேசத்தைக் கட்டியாண்டு ஐரோப்பா முழுவதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிறுத்தினான். நம்முடைய முயற்சியின் ஆரம்பத்தில் நம்மைப் பிறர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பலர் துணை செய்ய மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் காலக்கிரமத்தில் வெளியுதவிகள் தாமே வரும். ஆரம்பத்தில் நமக்கு நாமே துணை. எத்தனை இடையூறுகள் எவ்வளவு பெரிதாகி வந்த போதிலும் எடுத்த காரியத்தை ஒரே உறுதியாக நடத்திக் கொண்டு போவதே ஆரிய லக்ஷணம். அவ்வாறு செய்யக் கூடியவனே மனிதரில் சிறந்தவன்.

"நம்பினார் கெடுவதில்லை
நான்கு மறைத் தீர்ப்பு - இது
நான்கு மறைத் தீர்ப்பு"

திருநாவுக்கரசர்
மனிதனுக்குப் பகை புறத்திலில்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல், முதலான குணங்கள் நம்மை ஜயம் அடைய வொட்டாமல் தடுக்கும் உட்பகைகளாம். இவை அனைத்துக்கும் ஒரே பெயர்; அதாவது, நம்பிக்கை குறைவு. இந்த ராக்ஷஸனை அழித்தாலொழிய நமக்கு நல்ல காலம் வராது. பகீரதன் கங்கையை வரவழைத்த கதையை இந்தக் காலத்தில் நாம் பொய்க் கதையாகச் செய்து விட்டோம். முன்னோர் அக்கதையின் உட்பொருளைக் கொண்டனர். நம்பிக்கையினால் ஆகாய கங்கையைப் பூமியில் வரவழைத்தார்களாம். எத்தனை பெரிய ஆபத்துக்கள் வந்து குறுக்கிட்ட போதிலும் அவற்றை நம்பிக்கையினால் வென்று விடலாம்.

"கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே"

என்று திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியிருக்கிறார்.

சில முயற்சிகள்
இக்காலத்திலே பலர் நமது பாஷைகளை ஒளிமிகச் செய்து பூமண்டலத்தார் வியக்கும்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். பலர் நமது பூர்வ சாஸ்திரங்களின் உண்மையை உலக முழுவதும் கேட்டு உஜ்ஜீவிக்கும்படி செய்ய வேண்டுமென்று பாடுபடுகிறார்கள். பலர் நமது நாட்டுச் செல்வத்தை வெளியேறவொட்டாமல் தடுக்க வழி தேடுகிறார்கள். பலர் ஹிந்து தேசத்துக்குத் தன்னாட்சி வேண்டுமென்று தொழில் செய்து வருகிறார்கள். பலர் ஆரிய வேதத்தைச் சரண் புகுந்து பூமண்டலம் வாழும்படி செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இவ்வனைவருக்கும் வெற்றி உண்டு; நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு.

ராமானுஜர் வெள்ளையுடை தரித்தது
சோழனுடைய பயத்தாலே ராமானுஜ முனி சந்நியாசி வேஷத்தை மாற்றி ஸ்ரீரங்கத்தை விட்டுப் புறப்பட்டு நீலகிரிச் சாரலில் வேடர்களுடைய உதவியினால் தேனும் தினைமாவும் தின்று பசி தீர்த்துக் கொண்டு படாத பாடெல்லாம் பட்டு மைசூர் பக்கத்திலே போய் வாழ்ந்தார். "இனிமேல் ராமானுஜ கூட்டம் அதிகப்படாது; ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டோம்" என்று ராஜா நினைத்தான். அனுபவத்தில் பார்த்தீர்களா? அந்த ராஜா ராமானுஜருடைய நம்பிக்கையைக் கணக்கிலே சேர்க்கவில்லை.

சிலுவை
யூதர்களை ரோம் தேசத்தார் வென்று யூதநாட்டில் பிலாத்து ரோமன் ராஜாதிகாரியாய் விட்டான். இயேசு கிறிஸ்து தெய்வத்தை நம்பி விடுதலையை முழக்கினார். யூத குருக்களே அவருக்கு விரோதமாய் அன்னியனான அதிகாரியிடம் கோள் மூட்டி விட்டார்கள். உள்ளூர் யோக்கியர்கள், வெளிநாட்டு யோக்கியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிறிஸ்துவைச் சிலுவையில் அடித்துக் கொன்றார்கள். 'கிறிஸ்து மதத்தையே கொன்று விட்டோம்' என்று அந்த மூடர்கள் நிச்சயித்தார்கள். இன்று கிறிஸ்து மதம் உலக முழுவதையும் சூழ்ந்து நிற்கிறது. வருந்தினால் வாராதது ஒன்றுமில்லை.

நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம்
நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. அந்த நம்பிக்கையின் முக்கிய லக்ஷணம் என்ன வென்றால் விடாமுயற்சி. மனத்திற்குள் நிலைத்த நம்பிக்கை இருந்தால் செய்கை தடைப்படுமா? முயற்சி தூங்குமா? இடுக்கண் பயமுறுத்துமா? உள்ளம் சோருமா? ராமானுஜர் சோழ நாட்டிலிருந்து போகும் காலத்தில் தம் பின்னே நம்மைப் பிடித்துச் செல்லும் பொருட்டு குதிரைப்படை வருகிறது என்று கேள்விப்பட்ட பொழுது, தம்முடன் வந்த சிஷ்யர்களிடம் சொல்லிய மந்திரம் நல்ல மந்திரம்:-

"எனது கோல் ஆடும்பொழுது எமனும் கிட்ட வரமாட்டான்" என்று சொன்னார். அதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

"கொடுமை செய்யும் கூற்றமும்
என் கோலாடி குறுகப் பெறா"

முஹம்மது நபி
'பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும்' என்று முஹம்மது நபி அலகிவஸல்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும் கொலை செய்தும் அடக்கி விட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்று சதிசெய்து கொண்டிருக்கையிலே, அந்த மஹான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும்போது பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படை துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன் அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்திவரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், 'இனி என்ன செய்வது?' என்று தயங்கினான். அப்போது நபி, 'அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை உலகத்தில் நிலைநிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. என்னுடன் இருப்போர் பயப்படாமல் இருந்தால் அவர்களுக்கும் இல்லை' என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடந்தெரியாமல் ஏமாறித் திரும்பினார்கள். முஹம்மது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக் கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலைநிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு; அது கேட்ட வரமெல்லாம் கொடுக்கும்.

வாசக ஞானம்
வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜன சமூகத் திருத்தம் முதலிய லெளகிக விவகாரங்கள் எல்லாவற்றிலும் மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்து விட்டனர். ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றிய ஸூக்ஷம தந்திரங்கள் மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த அந்த நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனையதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.

பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில் மஹா ஸூக்ஷமமான பரம சத்தியங்களை யெல்லாம் கண்டுபிடித்து முடித்து விட்டனர். ஆனால் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமையற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது. எனவே அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர்

"வாசக ஞானத்தினால் வருமோ ஸுகம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே"

என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார். இதன் பொருள் 'வெறுமே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த முடியவில்லையே! என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே? இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்' என்பதாம். இதே உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி திருவள்ளுவர்

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

என்ற குறளால் உணர்த்துகிறார். இதன் பொருள் "வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்" என்பது.

திருஷ்டாந்தமாக, 'ஆண்களும், பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும், ஆத்ம குணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக் கருதுதல் பிழை' என்ற கொள்கை ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண்களுக்கு வாக்குச் சீட்டு ஸ்வதந்தரம் வேண்டும் என்று கேட்டால் அதைப் பெரும்பான்மையான ஐரோப்பிய ராஜதந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.

'விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லா வகையிலும் சமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ஸ்ரீ ராமானுஜாச்சார்யருடைய பரம சித்தாந்தம்' என்பதை நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் ஜாதி பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை - தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.

'எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்" என்று கண்ணன் கீதையால் உணர்த்திய உண்மையையும், 'எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன்' என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையையும் வேதோபநிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள் உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிறார்கள்.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது"

என்ற குறளின்படி, 'இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவது கண்டும் மானிடர் ஒருவருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள் வழங்குவது மடமை' என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக் கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும், கொடுஞ் சொற்களும், கோபச் செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது.

'மரணம் பாவத்தின் கூலி' என்று கிறிஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் பாவத்தை அறவே ஒழித்த கிறிஸ்தவர்கள் எவரையும் காணவில்லை. 'நாமெல்லோரும் பாவிகள்' என்பதைப் பல்லவி போல சொல்லிக் கொண்டு காலங் கடத்துகிறார்கள்.

இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! சாதாரணமாக வியாபாரம், விவசாயம் முதலிய காரியங்களிலேகூட மனிதர் நிச்சயமாக லாபங் கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை அனுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்திஹீனத்திற்கு மாற்றுக் கண்டுபிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.

கண்ணைத் திறந்துகொண்டு படுகுழியில் விழுவதுபோல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.

இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந்தான் மருந்து. தற்கால அசெளகர்யங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி நடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் சன்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்: வீண் துன்பங்களும் அநாவசியக் கஷ்டங்களும் பட்டுப்பட்டு உலகம் அலுத்துப் போய்விட்டது.

வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள், உலகத்தீரே! கூட்டங் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.

ஆண் பெண் சமத்துவமே தர்மமென்று தெரிகிறதா? அப்படியானால் வாருங்கள்; மாதர்களை லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா? நல்லது, வாருங்கள். கோடிக்கணக்காக, சமத்துவ நெறியிலே பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.

'அன்பே இன்பம் தரும். பகைமையை அழிக்கும்' என்று தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும் எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம், சத்தியத்தை நாட்டுவோம்.

அமிர்தம் தேடுதல்
'காக்க நின்னருட் காட்சியல்லாலொரு போக்குமில்லை' -- தாயுமானவர்.

பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான்.

"தூங்கையிலே வாங்குகிற மூச்சு - அது
சுழிமாறிப் போனாலும் போச்சு"

இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாகிவிட்டது. என்னடா இது! இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தில் நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்? ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிறான். அறிவே தமது வடிவமாக அமைந்திருக்கிறான். அறிவு, இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம் இன்பம். இந்த உலகம் கவலையற்றதாகும்; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீதுதான் நம்மால் சஞ்சரிக்க முடிகிறது. இதுபோல் கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினாலே காண்கிறோம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக் கண்ணாலே தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இவ்வளவில் எங்கே பார்த்தாலும் ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுதும் ஒரு மேற்கட்டி போலத் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி. சூரியன் செய்கிற ஆயிர விதமான ஒளியினங்கள், மலை, காடு, நதி, கடல் -- அழகு.

தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம் அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர், குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம், பார்த்தாலே இன்பம்; மண், இதன் விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம். இதன் தாங்குதல் இன்பம்; காற்று, இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்; மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக்கட்டி. பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல் இன்பம்; உழைத்தல் இன்பம்; உறங்கல் இன்பம்; ஆடுதல் இன்பம்; கற்றல், கேட்டல், பாடுதல், எண்ணுதல், அறிதல் -- எல்லாம் இன்பந்தான்.

துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை
ஆனால் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்துவிட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ள வேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டி எறியத் திறமை கொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால், அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகுதான், சிறிய உண்மைகள் புலப்படுகின்றன. நம்மைச் சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மகத்தான அறிவு வேண்டும், கீர்த்திகள் வேண்டும், செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நாம் செய்ய வேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக் கொண்டு வர வேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத் தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் காலம் வேண்டும். ஆத்மஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். "பொறுத்தவன் பூமியாள்வான்." "பதறின காரியம் சிதறும்" இடையே குறுக்கிடும் மரணம். இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மால் இயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது. இதனிடையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது? தூங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்சை இது? நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். 'அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை' என்று தீர்ந்து விட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டி வராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நம்முடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.

தர்மம்
"ஹிந்துஸ்தான் ரெவ்யூ" என்று அலஹாபாத்தில் பிரசுரமாகும் மாதப் பத்திரிகையில் ஸ்ரீ வாடியா என்பவர் "ஒழுக்கம்" என்பது பற்றி மிகவும் நேர்த்தியான லிகிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் சில ரஸமான கேள்விகள் கேட்கிறார். அவருடைய வசனங்களை முழுதும் மொழி பெயர்க்காமல் அந்தக் கேள்விகளின் ஸாரத்தை இங்கே சொல்லுகிறேன்:--

"தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் போரென்று சாமான்யர் சொல்லுகிறார்கள். சில சம்பவங்களில் தர்மங்களே ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. ஒரு தந்தை தன் மகணைக் கொலைத் தண்டனையிலிருந்து மீட்கும் பொருட்டாய்ச் சாட்சி சொல்லுவதாக வைத்துக் கொள்வோம். அவனுடைய செய்கையை எவ்விதமாகத் தீர்மானஞ் செய்வோம்? மகனைக் காப்பது தந்தையின் கடமை. ராஜ்யத்தில் நீதி பரிபாலனத்திற்கு, தான் துணை புரிவதும் கடமை. இரண்டும் தர்மம். ஆனால் ஒன்றுக்கொன்று முட்டுகின்றன. தவிரவும், பூர்வ சரித்திரங்களை ஆராய்ந்து செய்யுமிடத்தில், யூனியுஸ் புரூத்தஸ் என்ற ரோம தேசத்தான் தேசபக்தியின் மிகுதியால் தன் சொந்த மகனைக் கொன்றான். மார்க்குஸ் புரூத்தஸ் அதே காரணத்தைச் சொல்லி யூலியுஸ் கேஸரைக் கொன்றான். பதிவிரதை நோன்பு பெரிதென்று கருதி லூக்ரெஸியா தற்கொலை செய்து கொண்டாள். சீதை ராமனுடைய சந்தேக நிவர்த்திக்காக நெருப்பிலே விழத் துணிந்தாள். ஹிந்து மதத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்ற அவாவினால் சிவாஜி அப்ஜுல்கானைக் கொலை செய்தான். தர்மங்களுக்குள்ளே பரஸ்பர முட்டுப்பாடு அவசியம் ஏற்படத்தான் செய்கிறது. தர்ம சாஸ்திரத்தை பிரமாணமாகக் கொண்டால் இரண்டு பக்கமும் பேசுகிறது. இதற்குத் தீர்ப்பு என்ன?

மேலும், "ஒழுக்கம் என்ற சொல்லுக்கே பொருள் சில இடங்களில் சரியாக வழங்கவில்லை" என்று அவர் சொல்லுகிறார். ஒழுக்கத்திற்குப் பணிவு, கீழ்ப்படிதல் அவசியமென்று சிலர் சொல்லுகிறார்கள். சரித்திரத்தில் மேன்மைகொண்ட பெரியோர்களைக் கருதுவோம். புராதன உலகத்தில் அலெக்சாந்தர், யூலியுஸ்கேஸர், ஹானிபால் என்பாரும், இங்கிலாந்தில் க்ராம்பெல், சேதாம் என்பாரும், நெப்போலியன், பிஸ்மார்க், அக்பர், சிவாஜி, ஹைதர் அலி முதலிய சக்திமான்களும், இலக்கியத்தில் மில்டனும், கெத்தேயும் மிகுந்த கீழ்ப்படிவுள்ள குணத்துடன் இருக்கவில்லை. தன்னம்பிக்கை அவர்களிடம் பரிபூரணமாக இருந்தது. "நமது காலத்தில் நாம் மகத்தான காரியங்கள் செய்வோம்; இளைக்க மாட்டோம்; பின் வாங்க மாட்டோம்' என்று தீவிரமாக வேலை செய்தார்கள்; சரித்திரத்தின் நாயகராயினர். நீதி சாஸ்திரம் இன்னும் நேரே வகுத்தாகவில்லை.

"அட போ. பழமொழிகளை நம்பி ஒழுக்கத்தை நடத்துவோமென்று நினைப்பதும் பயனில்லை" என்று மேற்படி வாடியா சொல்லுகிறார். "பதறின காரியம் சிதறும்" என்பதாக ஒரு பழமொழி சொல்லுகிறது. "சோற்றுக்கு முந்திக்கொள்" என்று மற்றொரு பழமொழி சொல்லுகிறது. எந்தப் பழமொழியை நம்பலாம்? "ஒழுக்கமாவது மனோதைரியம், இஷ்டத்தைக் கைவிடாத மேன்மைக் கொள்கை; மற்றதெல்லாம் அதற்கிணங்க வைத்துக் கொண்டால் அதுவே சரியான தீர்ப்பு" என்று ஸ்ரீ வாடியா சொல்லுகிறார்.

கடைசியாகத் தம்முடைய முடிவை ஒருவிதமாக மேற்படி லிகிதகர்த்தா காட்டுகிறார்:-

"ஆரம்பத்தில் சொல்லியபடி பொய்ச் சாக்ஷி கூறி மகனுயிரை நீதி வஞ்சனையால் மீட்கக் கருதிய பிதாவினுடைய திருஷ்டாந்தத்தை எடுப்போம். அவன் கேவலம் தன்னுடைய குடும்ப தர்மமே உயர்வென்று நினைக்காமல் லோக தர்மமே மேலென்று நினைத்து அதன்படி உண்மை கூறியிருந்தால், மகனுயிர் போய்விடலாம். நெஞ்சு தகரலாம், மானம் அழியாமலும் தர்ம சம்பத்துக்கு வழியாகவும் இருக்கும்" என்பது மேற்படி லிகித சாரம்.

உண்மை (ரத்தினக் களஞ்சியம்)
பூமண்டலத்தில் வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு காலங்களிலே பிறந்து, மனுஷ்ய ஜாதியாருக்கு ஞானதானம் செய்த சில பெரியோரின் வசனங்களை இங்கே கோத்தெழுதுகிறேன். தயவுசெய்து சிரத்தையுடன் படிக்கும்படி தமிழ்நாடு மகஜனங்களை வேண்டுகிறேன்.

தெலுங்கு தேசத்து ஞானியாகிய வேமன்ன கவி சொல்லுகிறார்:-

"கல்லைக் குவித்துப் பெரிய கோவில்கள் ஏன் கட்டுகிறீர்கள்?" தெய்வம் உள்ளுக்குள்ளே இருப்பதை அறியாமல், வீணாக ஏன் தொல்லைப் படுத்துகிறீர்கள்?"

ஸ்வாமி விவேகானந்தர்:- "ஒவ்வொரு மனிதனுடைய அறிவிலும் பரமாத்மா மறைந்து நிற்கிறது. வெளியுலகத்தையும் உள்ளுலகத்தையும் வசப்படுத்தி உள்ளே மறைந்திருக்கும் தெய்வத்தை வெளிப்படுத்துவதே நாம் செய்ய வேண்டிய காரியம். செய்கை, அன்பு, யோகம், ஞானம் இவற்றினால் அந்தப் பொருளை அடைந்து விடுதலை பெற்று நில்லுங்கள். தர்மம் முழுதும் இஃதேயாம். மற்றப்படி மதங்கள், கொள்கைகள், கிரியைகள், சாஸ்திரங்கள், கோயில்கள், ஆசாரங்கள் எல்லாம் இரண்டாம் பக்ஷமாகக் கருதத்தக்க உபகரணங்களேயன்றி வேறில்லை."

அமெரிக்கா தேசத்து மஹா வித்வானும் ஞானியுமாகிய எமர்ஸென் சொல்லுகிறார்:-

"எவன் வந்தாலும் சரி, அவனிடமுள்ள தெய்வத்தை நான் பார்ப்பதற்கு தடையுண்டாகிறது. ஒவ்வொருவனும் தன்னுள்ளேயிருக்கும் திருக்கோயிலின் கதவுகளை மூடி வைத்துவிட்டு மற்றொருவனுடைய தெய்வத்தையும், மற்றொருவனுக்கு வேறொருவன் சொல்லிய தெய்வத்தையும் பற்றிப் பொய்க் கதைகளை என்னிடம் சொல்ல வருகிறான்."

த்ஸென் தஸே த்ஸுங் என்ற சீன தேசத்து ஞானி சொல்லுகிறார்:-

"பழைய காலத்திலிருந்து வந்ததென்று கருதி, ஒரு மதம் உண்மையென்பதாக நிச்சயித்து விடலாகாது. உண்மை இதற்கு நேர் மாறானது. மனித ஜாதி நாளாக நாளாக வாழ்க்கையின் உண்மை விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ளுகிறது. நமது பாட்டன்மாரும் பூட்டன்மாரும் நம்பிய விஷயங்களையே நாமும் நம்ப வேண்டுமென்ற விஷயமானது குழந்தையாக இருக்கும்போது தைத்த உடுப்புகளையே பெரியவனான போதும் போட்டுக் கொள்ள வேண்டுமென்பதற்கு ஒப்பாகும்."

மேற்கூறிய எமெர்ஸென் பண்டிதரின் சிஷ்யரும் நல்ல ஞானியுமான தோரோ சொல்லுகிறார்:

"என்ன ஆச்சரியம்! உண்மையின் பிரகாசங்களில் நமது காலத்துக்குப் பயன்படாத பழையனவற்றை உலகம் ஒப்புக் கொள்ளுகிறது. இப்போது புதிய ஞானிகள் கண்டு சொல்லும் உண்மைகளை வீணாக மதிக்கிறது. சிற்சில சமயங்களில் பகைக்கவும் செய்கிறது. என்ன ஆச்சரியம்!"

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:-

"ஆச்சரிய சித்திகள் காட்டுவதாகச் சொல்லும் மனிதர் இருக்குமிடத்துக்குப் போக வேண்டாம். அவர்கள் உண்மை நெறியினின்றும் தவறிவிட்டார்கள்."

ருஷியா தேசத்து ஞானியாகிய டால்ஸ்டாய் (தோல்ஸ்தோய்):-

"நமது மதக் கொள்கைகளில் பயனில்லாதது, ஜடமாவது, புறவடிவமாவது, தெளிவில்லாதது, நிச்சயமில்லாதது - இவற்றை நாம் பயனில்லாமல் தள்ளிவிட வேண்டும். அதன் ஸாரத்தை மாத்திரம் கொள்ள வேண்டும். எத்தனைக் கெத்தனை இந்த ஸாரத்தை நாம் சுத்தப்படுத்து கிறோமோ, அத்தனைக்கத்தனை ஜகத்தின் உண்மை விதி நமக்குத் தென்படும்."

எது தெய்வம்?

'ஹெர்மெஸ்' என்ற புராதன மிசிர (எகிப்து) தேசத்து ஞானி சொல்லுகிறார்:-

"உடலில்லாதது, தோற்றமில்லாதது, வடிவமற்றது, ஜடமில்லாதது, நமது புலன்களுக்கு எட்டாதது - இது தெய்வம்."

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்:- "ஈசன் ஒளி; எல்லாப் பொருள்களிலும் திரைக்குள் மறைந்ததுபோல் மறைந்து நிற்கும் ஒளியே தெய்வம்."

பட்டினத்துப் பிள்ளை:- "எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கும் ஜோதி."

தாயுமானவர்:- "சுத்த அறிவே சிவம்."

ரிக் வேதம்:- "உண்மைப் பொருள் ஒன்று. அதனைப் புலவோர் பலவாறு சொல்லுகிறார்கள்."

நம்மாழ்வார்:- "திடவிசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசைப்படர் பொருள் முழுவதும் ஆய், அவையவை தோறும் உடல்மிசை உயிரெனக் கரந்துளன்."

ஹெர்மெஸ்:- "தெய்வம் எது? ஜகத்தின் உயிர்."

எனவே, எல்லா மதங்களும் உண்மைதான்; ஒரு மதமும் முழு உண்மையன்று. ஆதலால் மதப்பிரிவுகளைக் கருதி மனிதர் பிரிந்து விடக்கூடாது. எல்லா மதஸ்தரும் ஒரே தெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள். லெளகிக விஷயங்களைப் போலவே மத விஷயங்களிலும் ஒப்பு, உடன்பிறப்பு, விடுதலை மூன்றும் பாராட்ட வேண்டும்.

நம்பிக்கை
மயிலாப்பூரில் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் கிருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதிப்ரவீண ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜாசார்யருடைய மகிமையைப் பற்றிச் சில வார்த்தைகள் சொன்னார். நீதிபதி ஸ்ரீமான் மணி அய்யர் பிரம்ம வேதாந்தியாகையால் இவருக்கு துவைதம், விசிஷ்டாத்துவைதம், அத்வைதம், என்ற மூன்று கட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனை செய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கராச்சார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாக அவருடைய சரித்திரம் சொல்லுகிறது.

பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளக்கக் காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர்; பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும். நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தை பணிய வேண்டும். செல்வம் வேண்டுமானால் தெய்வத்தினிடம் கேட்க வேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்கும். தெய்வம் கொடுக்கா விட்டாலும் அதை நம்ப வேண்டும். பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இது கர்ம விதி. 'அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா.' எனவே, நாம் தெய்வத்திடம் கேட்ட பயன் கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும் அதைரியப்படாமல், தெய்வ பக்தியையும், அதனால் உண்டாகும் ஊக்கத்தையும் முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளைத் தெய்வ பக்தி வெல்லும். இந்த உலக முழுமைக்கும் ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள்; ஓயாமல் தொழில்செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே, தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும். தெய்வம் ப்ரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது. முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது. தெய்வம் விக்கிரமாதித்யனுக்கும், காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமானுஜர் மனிதருடைய இஹபர வாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார். ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலை யொளி நிற்பது கண்டு, அவற்றை வேதம் போல் கருத வேண்டுமென்று போதனை செய்தார்.

ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம். அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்து பூஜை செய்யலாமென்று ராமானுஜர் நியமித்தார். முற்காலத்தில் பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும் ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப் படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்து தர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப் பாதிரிகளும் அவ்விடத்து சிஷ்யர்களும் ராமானுஜாசாரியார் பிராமணர் என்பதை அறியமாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சி நம்பியை ராமானுஜர் குருவாகக் கொண்டு அவருடைய உச்சிஷ்டத்தை (எச்சில் உணவு) உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒரு சமயம் கோயிலுக்குள் வரலாமென்று ஸ்ரீ ராமானுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்து வருகிறது.

இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தை இக்காலத்தில் வளரும்படி செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில், பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ ஞானத்தை ஊட்டத் தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச் சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டு நம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை மிருகங்களைப் போலாக்கிவிடும். வேத தர்மம் ஒன்று. அதில் ராமானுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது. உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும் நாராயணன் விளங்குவது கண்டு, அந்த ஞானத்தாலே கலியை வென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படி கலவல கண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தால், தேசம் மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்தி அருள் செய்க.

தைரியம்
நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானல், இவையனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன்பொருட்டே அதைத் தெய்வ பாஷை யென்கிறோம்.

அந்தப் பாஷையில் தைரியம் என்பதோர் சொல்லுண்டு. தீரனுடைய இயற்கை தைரியம். தீரன் என்ற வார்த்தையில் தாதுப் பொருளைக் கவனிப்போமானால் அறிவுடையவன் என்ற அர்த்தமாகும். துணிவுடையவனுக்கும் அந்தப் பாஷையிலே அதுவே பெயராக வழங்கப்படுகிறது. எனவே, 'தைரியம்' என்ற சொல் அறிவுடைமையென்றும், துணிவுடைமையென்றும் இருவித அர்த்தங்கள் உடையது. இங்ஙனம் இவ்விரண்டு கருத்துக்களுக்கும் ஒரே சொல்லை வழங்குவது அந்த பாஷையின் பெருமைக்குள்ள சின்னங்களிலே ஒன்றாகும்.

உலகத்தில் வேறு எந்தப் பாஷையிலும் மேற்கூறிய இரண்டு கருத்துக்களையும் சேர்த்துக் குறிப்பிடக்கூடிய ஒரே பதம் கிடையாது. எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மஹான்கள் வழங்கிய பாஷையாதலால், அந்தப் பாஷையிலே இவ்விரண்டு பொருள்களுக்கும் ஒரே பதம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து தெரியக்கூடியது யாதென்றால், துணிவுள்ளவனையே அறிவுள்ளவ னென்பதாக நமது முன்னோர்கள் மதிக்கிறார்கள். எடுத்ததற்கெல்லாம் அஞ்சும் இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பல சாஸ்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளியென்றும் சொல்வானானால், அவனை நம்பாதே! அவன் முகத்தை நோக்கிக் காறியுமிழ்ந்துவிட்டு, அவனிடம் பின்வருமாறு சொல்:- "அப்பா, தீ ஏட்டைத் துளைக்கும். ராமபாணப் பூச்சியைப் போல், பல நூல்களைத் துளைத்துப் பார்த்து ஒருவேளை வாழ்நாளை வீணாக்கியிருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய். அஞ்சாமைக்கும் அறிவுக்கும் நமது முன்னோர்கள் ஒரே சொல்லை உபயோகப்படுத்தி யிருக்கிறார்கள். அதை நீ கேள்விப்பட்டதில்லை போலும்."

ஆம். அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் மூடன்தான். விபத்துக்கள் வரும்போது, எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அவற்றையெல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ, அவனே ஞானி. 'ஹரி; ஓம்' என்று எழுதத் தெரியாத போதிலும் அவன் ஞானிதான்.

சிவாஜி மஹாராஜா தமது சொந்தப் பிரயத்தனத்தாலும், துணிவாலும், புத்தி கூர்மையாலும் அவுரங்கசீப்பின் கொடுங்கோன்மையை அழித்து, மகாராஷ்டிரம் ஏற்படுத்தி தர்மஸ்தாபனம் செய்தார். அவர் ஏட்டுப் படிப்பில் தேர்ந்தவர் அல்லர். இந்தக் காலத்தில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துப் பரீக்ஷைகள் தேறி 15 ரூபாயைக் கொண்டு பிழைப்பதற்காகத் தமது தர்மத்தையும், ஆத்மாவையும் விலைப்படுத்தக் கூடிய மனிதர்கள், ஆயிரக்கணக்கான சுவடிகள் படித்துக் கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு மஹாராஷ்டிர ராஜ்யம் லாபம். இவ்விருவரிலே யார் சிறந்தவர்? இவ்விருவரிலே யார் அறிஞர்?

பாரத வாசிகளாகிய நாம் இப்போது புனருத்தாரணம் பெறுவதற்குக் கல்வி வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். நாம் 'துணிவு வேண்டும்' என்கிறோம். துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன.

உயிரின் ஒலி
சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீச சந்திரவஸு (Jagadish Chandra Bose) தமது 'வஸுமந்திரம்' என்ற கூடத்தைப் பாரதமாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில், "உயிரின் ஒலி" என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.

அவருடைய கொள்கை எப்படியென்றால்:- நாம் ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர் நிறைந்திருக்கிறது. ஜந்துக்களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும் உணர்ச்சியிருக்கிறது. ஆகவே, மண், செடி, ஜந்து, மனுஷ்ய அத்தனைக்குள்ளும் ஒரே விதமான பிராண சக்தியிருக்கிறது. 'இந்த உலகமே உயிர்கடல்' என்பது அவரது சித்தாந்தம். அவர் பல நுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத் தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூக்ஷ்மக் கருவிகளை எல்லாம் செய்து கொண்டார். அந்தக் கருவிகளின் நேர்த்தியைப் பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும் ஆச்சரியப் படுகிறார்கள். அந்தக் கருவிகளின் உதவியால், ஒரு பூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒரு புகைப்பட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது. அதாவது, கோடுகள் கூறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின் உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.

செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சை போடுகிறது. மறுபடி தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம் செய்வித்தால் உணாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின் சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லா நிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப் பார்க்கும்போது செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதர மனுஷ்ய மிருகாதி ஜந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை என்பது ருஜு வருகிறது.

இவ்விதமான அற்புதப் பரீக்ஷைகளினால் உலகத்தின் உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படி ஜகதீச சந்திரவஸு நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்த பக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின் மேன்மையைப் பற்றி அவர் வார்த்தை சொல்லும் போது, அந்த வார்த்தைகளிலே மிகச் சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்த வார்த்தைகளைப் படிக்கும்போதே படிப்போரின் ஜீவசக்தி மிகுதிப்படுகிறது.

அவர் சொல்லுகிறார்:- "ஸாதாரணக் கருவிகளால் மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின் ஸந்ததியிலே நாம் பிறந்திருக்கிறோம். ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தினால், அடைத்திருந்த கதவுகள் திறக்கும். அசாத்யமாகத் தோன்றுவது அவனுக்குச் சாத்யமாகும். உண்மை தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களை விரும்பலாகாது. லாப நஷ்டங்களையும், வெற்றி தோல்விகளையும் ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்கு நைவேத்யமாக விடவேண்டும். பாரததேசம் இப்போது வென்று காப்பாற்ற வேண்டிய வஸ்து யாது? சிறியதும் வரம்பற்றதுமாகிய ஒரு பொருளினால் பாரதமாதா திருப்தியடைவாளா? இவளுடைய அற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும் செயல்களையும் யோசிக்கும்போது, தாழ்ந்த தரமுள்ளது சிலநாள் நிற்கிறதுமான பாலமொன்றை இவள் விரும்ப மாட்டாளென்பது தெரியும்.

இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமான தர்மங்கள் காணப்படுகின்றன.

"முதலாவது (ஐரோப்பியரைப் போல நாமும் படிப்பின் பரவுதலாலும், நகரத்தானுக்குரிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாலும், கைத்தொழில், வியாபார சம்பந்தமான பலவித முயற்சிகளாலும், பாரத நாட்டை வலிமையுடைய நாடாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம் தேசக் கடமையின் முக்கியாம்சங்கள். இவற்றைப் புறக்கணித்தால் நமது ஜீவனுக்கே ஆபத்து நேரிடும். வாழ்க்கையிலே ஜயமும், அவனவன் தந்தன் அவாவைத் திருப்தி செய்து கொள்ளும் வழியும் வேண்டிப் பாடுபட்டால் அதிலிருந்தே மேற்கூறிய லெளகிக தர்மத்திற்குத் தூண்டுதல் உண்டாகும். இரண்டாவது, ஆத்ம தர்மம் க்ஷணமாயிருக்கும் இன்பங்களை மாத்திரம் கருதாமல், மனுஷ்ய வாழ்க்கையின் அதியுந்நதமான நோக்கத்தை நாடி உழைத்தவர்கள், நமது நாட்டில் எக்காலத்திலும் மாறாமல் இருந்து வருகிறார்கள்."

ஆத்ம தர்மமாவது யாதென்றால், ஸ்ரீ வஸு சொல்லுகிறார், "மனுஷ்ய ஜாதியின் பரம க்ஷேமத்திற்காக ஒருவன் தன்னைத் துறந்து விடுதல்" என்று. இந்தத் தர்மத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் ஒரு சிலரேனும் ஆதரவு செய்து வந்தமையாலேதான் - அஸ்ஸிரியா தேசத்திலும் நீல நதிக்கரையிலும் தலைதூக்கி நின்ற பெரிய ஜாதிகள் அழிந்து போயின - நாம் அழியாமல் என்றும் இளமை கொண்டிருக்கிறோம். கால வெள்ளத்தில் வரும் மாறுதல்களுக்கெல்லாம் மாறாமல், தான் அவற்றைத் தனதாக்கிக் கொண்டு வாழும் திறமை நமது நாட்டிற்கு இருக்கிறது.

வந்தேமாதரம்
இதுவே உயிரின் ஒலி. ஹிந்துஸ்தானத்தை வணங்குகிறேன். ஹிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்.

இதுதான் ஜீவசக்தியின் சாந்தி வசனம். தர்மம் ஐரோப்பியருக்குத் தெரியாது. அதை நாம் ஐரோப்பியருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய முயற்சிகளை நாம் கற்றுக் கொண்டு, பிறகுதான் அவர்களுக்கு நாம் உபாத்யாயராகலாம்.

ஐரோப்பாவின் தொழில் நுபங்களை நாம் பயிற்சி செய்தல் எளிதென்பது ஸ்ரீமான் வஸுவின் சரிதையிலே நன்கு விளங்கும். நம்முடைய சாந்தி தர்மத்தை ஐரோப்பியர் தெரிந்து கொள்வதால், அவர்களுக்கு விளையக்கூடிய நன்மையோ மிகமிகப் பெரியது.

ஸ்ரீமான் ஜகதீச சந்திர வஸு சொல்லுகிறார்:- "தன்னை அடக்கியாளும் சக்தியில்லாமையால் மனுஷ்ய நாகரிகமானது சேதப்படுகுழியின் கரையில் நடுங்கிக் கொண்டு நிற்கிறது. ஸர்வ நாகத்திலே கொண்டு சேர்ப்பதாகிய இந்த வெறி கொண்ட வேகத்திலிருந்து மனிதனைக் காப்பாற்ற மற்றொரு தர்மம் வேண்டும்." அதாவது, நம்முடைய ஹிந்து தர்மம். ஏனென்றால் "ஆத்மா தியாகம் தனக்குத் தனக்கென்ற அவாவினால் உண்டாகாது. எல்லாச் சிறுமைகளையும் அழித்துப் பிறர் நஷ்டமெல்லாம் தனக்கு லாபமென்று கருதும் அஞ்ஞானத்தை வேரறுப்பதால் விளையும்" என்கிறார்.

முன்னொரு முறை சில வருஷங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரர் சொல்லிய வாக்கியமொன்றையும் இங்கு மொழிபெயர்த்துக் காட்டுதல் பொருந்தும். லண்டன் நகரத்தில் 'ராயல் சொசைட்டி' என்ற பெரிய சாஸ்திர சங்கத்தார் முன்பு செய்த பிரசங்க மொன்றிலே அவர் சொன்னார்:- "ஸ்வலி கீதங்களின் பேசாத ஸாக்ஷ்யத்தை நான் பார்த்தேன். எல்லாப் பொருளையும் தன்னுள்ளே கொண்ட ஏகவஸ்துவின் கலை ஒன்றை அங்கு கண்டேன். ஒளியின் சிறு திரிகளுக்கிடையே தத்தளிக்கிற துரும்பும் பூமியின் மேலே பொதிந்து கிடக்கும் உயிர்களும், நமது தலைமேலே சுடர் வீசும் ஞாயிறும் - எல்லாம் ஒன்று. இதைக் கண்ட பொழுதே, மூவாயிர வருஷங்களுக்கு முன்பு என் முன்னோர் கங்கைக் கரையில் முழங்கின வாக்கியத்திற்குச் சற்றே பொருள் விளங்கலாயிற்று. 'இந்த ஜகத்தின் பேத ரூபங்களில் ஒன்று, காண்பார் எவரோ அவரே உண்மை காண்பார், பிறர் அல்லர், பிறர் அல்லர், இதுதான் ஜீவ ஒலி. வாயுபகவானுடைய ஸ்ரீமுக வாக்யம். எல்லாவற்றிலும் ஓருயிரே அசைகிறது. அதை அறிந்தால் பயமில்லை; பயம் தீர்ந்தால் சாவில்லை. அமிர்தம் ஸதா."


வினாக்கள்

1. 'நம்பிக்கை'யின் அவசியத்தை விளக்க பாரதி கூறும் எடுத்துக்காட்டுக்கள் எவை?
2. "மனிதர் அறிவினால் பெற்ற உண்மைகளை நடைமுறைப் படுத்த சிரமப்படுகின்றனர்" என்ற
கருத்தை பாரதி எப்படி விளக்குகிறார்?
3. 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!' என்று பாரதி பாடிய பாடலுக்கேற்ப,
உலகில் எங்கும் இன்பம் என்பதை கட்டுரையில் எப்படி விளக்குகிறார்?
4. கடமை தர்மம் இவற்றின் முரண்பட்ட நிலைமை பற்றி பாரதி கூறும் உதாரணங்கள்
எவை?
5. "உண்மை" பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்து என்ன?
6. இயற்கை விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸின் கண்டுபிடிப்பான 'உயிரின் ஒலி' பற்றி ஓர்
சிறு கட்டுரை வரைக.

4 comments:

  1. அன்பரீர் வணக்கம். தங்கள் வலைப்பூவை இன்று தான் தற்செயலாகக் கண்டேன். மிக அற்புதமானதொரு சேவையை செய்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். பாரதி என்னும் ஒரு யுக புருஷனின், மஹா கவிஞனின், கண்ணனின் கீதை வழி நின்ற ஒரு யோகியின், அன்னையின் அருள்வேண்டி நின்ற ஒரு ஞானியின் கருத்துக்களைப் பரப்பும் உங்களை பணிந்து வணங்குகிறேன். நன்றி.

    அஷ்வின்ஜி,
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    www.vendantavaibhavam.blogspot.com.
    www.frutarians.blogspot.com.

    ReplyDelete
  2. ஐயா, பகவத் கீதையைப் போன்று, மஹாகவி பாரதி பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு உரை எழுதி இருக்கிறாரா என்று அறிய ஆவலாக உள்ளேன்.
    நன்றி.
    அஷ்வின்ஜி.

    ReplyDelete
  3. காமதேனு மகாகவியின் ஆராய்சிக் கட்டுரை.
    எவ்வளவு அற்புதமாக, ஆழமாக எத்தனை எத்தனை ஞானிகளின் விளக்கத்தோடு பகுத்தாராய்ந்து இந்தியனுக்காக மட்டுமல்லாது ஐரோப்பியரும் வேறுபல நாட்டாரும் பயனுற மொத்தத்தில் இந்த மானுடம் பயனுற எத்தனை சத்தியமான விசயங்களை தன்முனைப்பை தரும் ஊக்க மருந்தை அள்ளித் தெளித்திருக்கிறான். மதம், தெய்வம், ஒழுக்கம், தைரியம், கடமையோடு கூடிய கடின உழைப்பு என்று எல்லாவற்றையும் கூறி கடைசியாக ஜகதீஸ் சந்திர போசின் வழியே எது அந்த பரம ரகசிய உண்மையை அறிந்ததாகக் குறிக்கும் என்பதையும் தெளிவாக செதுக்கியுள்ளான். பலகற்றும் மூடர் யார்? எதுவுமே கற்காதவரும் எப்போது அறிவாளியாகிறார் என்று அறிதியிட்டு, மிகவும் அற்புதமாக சொற்பதத்துடன் கூறியிருக்கிறான் பாரதி. வியாக்கியானமாக மட்டும் இல்லாமல் தீர்க்க தரிசனமாக எது தேவை என்பதையும் விளக்கமாக தெளிவாக ... எந்த சூழலிலும், எந்தக் காலத்திலும் எப்பேர் பட்ட விசயத்திற்கும் காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை சிரமமின்றி இயல்பாக தன்னை உட்படுத்திக் கொள்ளும் தன்மை இந்தியாவிற்கு உண்டு என்ற அந்த தெளிவு தான் பாரதி.... முப்பத்தொன்பதுக்குள் எவ்வளவுப் படித்தி இருக்கிறான் எவ்வளவு படைத்திருக்கிறான், உண்மையில் இவன் தான் இந்த யுக புருஷன் என்பதற்கு வேறு ஒரு சான்றே வேண்டாம்.... எந்திர மனிதனைப் போல் "ஸ்கேன்" செய்தானா! அப்படி செய்திருந்தாலும் கூட அதற்கு அர்த்தம் புரிந்திருக்காதல்லவா.

    மானுடம் பாடி இந்த மகா கவி கடைசியாக தனது முடிவாக அவனும் "அறிவொன்றே தெய்வம்" என்றான்... அவன் கூறிய அந்த வாசகத்தில் அனைத்தும் அடக்கம்.
    இதில் நான் புதிதாக ஒரு வார்த்தையையும் கற்றுக் கொண்டேன் " ராமபாணப் பூச்சி" ஆமாம் அது ஸ்ரீ ராமன் விடும் பாணம் போல் தான் இருக்கும்.

    அருமையானக் கட்டுரை.
    வாழ்க, வளர்க, பாரதியின் புகழ்.

    ReplyDelete
  4. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://sagakalvi.blogspot.com/



    Please follow

    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete

You can send your comments