Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Wednesday, April 21, 2010

மகாகவி பாரதி பற்றி மகள் சகுந்தலா பாரதி


திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம்
நடத்தும் மகாகவி பாரதி பற்றிய இலவச அஞ்சல் வழிப்பயிற்சி - பாடம்
மகாகவி பாரதி பற்றி மகள் சகுந்தலா பாரதி

மகாகவி பாரதியாருடைய இளைய மகள் சகுந்தலா. இவரை மகாகவி பாப்பா என்றுதான் அழைப்பார். பாரதியாரின் அன்பு மகள் தன் தந்தையைப் பற்றி "என் தந்தை" எனும் தலைப்பில் ஒரு நூலை இயற்றி பாரதியார் பற்றிய பல அரிய செய்திகளைக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.

"1940-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அவர் இறந்த நாள் 'பாரதி தின'மாகக் கொண்டாடப்பட்டதை இரண்டாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள நான் ரேடியோ மூலமாகக் கேட்டேன். அவரது கவிதைத் திறமையை, அவர்தம் உயரிய தேசபக்தியை ஜனங்கள் அறிந்து பக்தி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்தம் கவிதையின் மூலமாகத் தம் கருத்துகளை வெளியிட முடியாமல் கட்டுண்டு கிடந்ததை நினைத்து மனம் நொந்து மறுகியதை யாரறிவார்?" என்ற செய்தியோடு தனது நூலைத் தொடங்குகிறார் சகுந்தலா.

"அவர் ஒரு க்ஷத்திரியனைப் போன்று வீர மரணத்தை விரும்பினார்! போர்முனையிலே முன்னணியில் நிற்பேன், துண்டிக்கப்பட்டு விழுந்த என் சிரசைப் பல்லக்கில் வைத்துக் கொணர்வார்கள்! செல்லம்மா! அப்போது ஜனங்கள் உனக்குச் சேனைத் தலைவனுடைய மனைவிக்குரிய மரியாதை செய்வார்கள் என்பார். 'நரைகூடிக் கிழப் பருவமெய்தி, கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும், பல வேடிக்கை மனிதரைப் போல, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' என்று பராசக்தியிடம் ஒவ்வொரு நாளும் ஸ்நானம் செய்யும் போது கோபத்துடன் கேட்பது போலப் பாடுவார். சிறு குழந்தையான என் மனத்தில் அவரது வார்த்தைகள் பசுமரத்தாணி போல பதிந்தன."

"எனக்குப் பொழுது போவதற்காக எண்ணற்ற கதைகள் சொல்லுவார். தமிழ்க்கதைகள் முடிந்துவிடும். பஞ்ச தந்திரம் மற்றும் சம்ஸ்கிருதக் கதைகள், 'லாபோந்தேன்' எழுதிய ஃபிரெஞ்சுக் கதைகள், அவைகளும் முடிந்து விடும். புதிய புதிய கதைகள், அப்போதைக்கப்போது கற்பனை செய்து கூடச் சொல்வார். நட்சத்திரக் கதைகள், கடலலைக் கதைகள் எனப்பலப்பல."

"சாதாரணமாக, குழந்தைகளுக்குத் தாய் தந்தையரிடம் மிக்க அன்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் அவரிடம் கொண்டிருந்த அன்பு, மதிப்பு, பக்தி எல்லையற்றவை. 'அண்ணன் ஒருவனை அன்றியே, புவியத்தனைக்கும் தலையாயினோம், என்னும் எண்ணம் மனதிடைக் கொண்டவன்' என்று பாஞ்சாலி சபதத்தில் துச்சாதனனை அவர் வர்ணிப்பதைப் போல, எனக்கு அவர் எது கூறினாலும் என்ன சொன்னாலும் வேதவாக்கு என்ற நம்பிக்கை."

"எனக்குத் தந்தையிடம் மிக்க சலுகை உண்டு. அதனால், ஒரு நாள், என் தாயார் சொல்லியதைக் கேளாமல் மறுத்துரைத்தேன். அவர் உடனே 'தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா' என்று பாடினார். நான் செய்ய வேண்டியதற் கெல்லாம் ஒரு பாட்டு இப்பொழுது எழுதிக் கொடு என்று கேட்டேன். உடனே 'பாப்பா பாட்டு' எழுதிக் கொடுத்தார்."

"எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கும். எங்கள் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடுவது வழக்கம். முதன் முதலாக, அப்பா எனக்குப் பிரசங்கம் செய்யக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு ஸ்வாமி விவேகானந்தருக்கு வணக்கமும், விவேகானந்தர் சரித்திரத்தின் சுருக்கமும் எழுதிக் கொடுத்துப் படிக்கும்படி செய்தார். ராமகிருஷ்ணரின் சரித்திரம், தேவி நிவேதிதாவின் சரிதை இவற்றைச் சிறிய கதைகள் போல எனக்குச் சொல்வார்."

"1907-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஸ்ரீ விபின் சந்திரபாலரை சென்னைக்கு அழைத்து வரும் பொருட்டு அப்பா கல்கத்தாவுக்குச் சென்றிருந்தார். அப்பொழுது அங்கு ஸ்ரீ நிவேதிதா தேவியைக் கண்டு வணங்கி அவரிடம் சம்பாஷித்துக் கொண்டிருக்கும் போது, தேவியார், "மகனே, உனக்குத் திருமணம் முடிந்தாயிற்றா?" என வினவினாராம். என் தந்தை, தமக்கு விவாகமாகி ஒரு பெண் குழைந்தையும் பிறந்திருப்பதாகச் சொன்னாராம். தேவியார், "அப்படியானால் என்னைக் காண்பதற்கு நீ ஏன் உன் மனைவியை அழைத்து வரவில்லை?" என்று கேட்டார். "சென்னையிலிருந்து நான் மட்டும்தான் கல்கத்தா வந்திருக்கிறேன். தேசிய காரிய நிமித்தம் வந்ததால் மனைவி மக்களை அழைத்து வரவில்லை" என்றார். உடனே தேவியார், "மகனே, நீ போகுமிடத்திற்கு உன் வலக்கரம் இல்லாமல் போவாயா? யாது வேலையாயினும் உன் தர்மபத்தினியை உடனழைத்துப் போவதுதான் சரி, அதுதான் கிரஹஸ்தாசிரமத்திற்கு உகந்தது" என்றார். ஸ்ரீநிவேதிதா தேவியார், தாம் இமயமலைக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மரத்தின் இலையொன்றைத் தம் ஞாபகார்த்தமாக அளித்திருந்தார். அதை என் தாயார் தம் நகை (இல்லாத) பெட்டியில் வைத்திருந்தார்."

ஆடற்கலை, சங்கீதக்கலை
"பரத நாட்டியத்தில் என் தந்தை மிக்க ஆவல் கொண்டவர். கோபாலகிருஷ்ண பாரதியாரின் "ஆனந்த நடனம் ஆடினார்" என்ற பாடலை அவர் அடிக்கடி பாடிப் பரவசமடைவார். 'தகதக தகதகவென்றாடோமோ' முதலிய பாட்டுகளில் அவர் மனத்தில் ததும்பிய நாட்டிய பரவசத்தின் மேன்மை வெளியாகின்றது. பரதநாட்டியக் கலை பற்றி அவர் கூறுவார்:-

"பரத நாட்டியம் என்ற மாபெருங்கலை, தற்காலம் தனித்து ஒதுக்கப்பட்ட ஓர் வகுப்பினரால் கைக்கொள்ளப் பட்டிருக்கிறது. அதனால், அதன் மேன்மை சகலரும் கண்டு ஆனந்திக்கத்தக்கதாக இருந்தபோதிலும், நம்முள் நாமே சிறிது வெட்கத்துடன் மறைமுகமாக அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்தத் தெய்விகக் கலையை நம் வீட்டில் தாய்மார்களும் சகோதரிகளும் நடத்தினால், நாம் பகிரங்கமாகக் கண்டு ஆனந்திக்கலாம் என்பார். அதைத் தாம் நடத்திக் காண்பிப்பதற்காகத் தம் மக்களுக்கே நாட்டியம் பயில்விக்க விரும்பினார். அவர் அதைச் செய்விக்க முடியவில்லை. தமக்கு இயற்கையில் அமைந்துள்ள சங்கீத ஞானத்தை விருத்தி செய்து கொள்வதற்கு ஒரு வித்வானுடன் நெருங்கிப் பழகிப் பயிற்சி பெற அவருக்கு வசதியில்லை. தாமே தேடிக்கொண்ட சிறையில் பத்து வருஷங்கள் கட்டுண்டு கிடந்தாரல்லவா?"

"ஸ்ரீ ஸி.ஆர்.சீனிவாசய்யங்கார், தியாகராஜ கீர்த்தனைகளுக்கு ஸ்வரம் எழுதிய புத்தகம் ஒன்று அவரிடம் இருந்தது. அதை வைத்துக் கொண்டு தாமே பாடிக் கற்றுக் கொள்வார். 'நகுமோமு', 'மாருபல்க', 'நிதிசால ஸுகமா' முதலிய கீர்த்தனைகள் மீது அவருக்குள்ள பிரியம் அளவிடமுடியாது. என் தந்தை தெலுங்கும் நன்றாகக் கற்றிருந்தார். அதனால் அவ்வார்த்தைகளின் அர்த்தத்தை, அவை அமைந்துள்ள அழகை, அவற்றில் ததும்பும் பாவத்தைச் சொல்லி இன்புறுவார். 'மாருபல்க' என்ற கீர்த்தனத்தின் மீது அவருக்குள்ள இன்ப மிகுதியை அவர்தம் 'சந்திரிகையின் கதை' என்ற நவீனத்தில் கதாநாயகி விசாலாக்ஷி பாடுவதன் மூலம் காட்டியிருக்கிறார்."

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற அவரது பாட்டின் உண்மையைத் தமிழ் மக்களுக்கு அறிவிக்கத் தமது வாழ்நாளையெல்லாம் செலவிட்டார். தமிழைப் போன்ற உன்னத பாஷை வேறில்லை. பச்சைத் தமிழிலே நினை. ஆங்கிலத்தில் நினைத்துப் பின் மொழிபெயர்க்காதே என்று தம்மிடம் வரும் நண்பர்களுக்குச் சொல்வார். தம்மையடுத்தோரும் தம் வீட்டிலுள்ளோரும் தமிழன்றி வேறு பாஷை பேச சம்மதிக்க மாட்டார். ஆனால், சங்கீதம் என்பது வேறு கலை. அதற்குப் பாஷையென்ற கட்டுப்பாடு கிடையாதென்பதே அவர் அபிப்பிராயம். உதாரணமாக, சங்கீத விஷயத்தைப் பற்றி, என் தந்தை தம் கட்டுரையொன்றில், தியாகப்பிரும்மம் தம் பாடல்களுக்கு அவற்றின் கருத்துக்கிசைய அமைத்திருக்கும் இசை வல்லமையையும் பின்னாளில் ஏற்பட்ட தெலுங்குக் கீர்த்தனைகள் சில அவ்வாறு செய்யப்படாமல் முரணாயிருப்பதையும் குறிப்பிடுகிறார். தியாகையரின், 'நன்னு ப்ரோவ நீரு இந்த தாமஸமா' என்ற பாடலுக்கு இசை எத்தனை பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஆனால் பின்னாளில் பட்டணம் சுப்பிரமணிய அய்யர் இயற்றிய 'வரமுலொஸகி' என்ற பாடலில் வித்துவான் 'வரங்கொடுத்து காப்பது உனக்கு அரிதா' என்று கேட்கிறார். அதில் இசை சண்டைத் தாளம் போடுகிறது என்பார்."

"என் தந்தை பாட்டு இயற்றுங்காலையில் அதற்கு ராகம், ஒரு மெட்டு அமைக்க ஒரு உதவியும் நாடுவதில்லை. ஏதேனும் ஒரு மெட்டில் தாமே பாடிப் பார்ப்பார். அந்த மெட்டு அவருக்குப் பிடித்திருந்தால் அந்த இசை எந்த ராக ஸ்வரங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றதோ அந்த ராகத்தின் பெயர் மட்டும் எழுதி வைத்திருப்பார். தாள கதி தானே வந்து அமைந்து கொள்ளும். தாம் எழுதிய பாடல்களை என் தந்தை தம் ஆப்த நண்பர்கள் சிலரிடம் பாடிக் காண்பிப்பார். ஸ்ரீ வ.வெ.சு.அய்யர், கண்ணன் பாட்டுக்கு எழுதித் தந்துள்ள முகவுரையில், கற்பனா பாவத்தோடும், சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியர் தம் பாடல்களைப் பாடும்போது கேட்டிருப்பவர்கள் அவற்றை அக்ஷர லக்ஷம் பெறுமான முள்ளதாக மதிப்பர் என்றார். என் தந்தை தம் குயில் பாட்டில் "காதல் காதல் காதல்" என்று குயில் பாடியதாகக் கூறும்போது, அந்தப் பொருளை அவனிக்கு உரைத்திடுவேன், விந்தைக் குரலுக்கு மேதினியீர் என் செய்வேன் என்றார். ஆனால் அந்த அவரது கற்பனைக் குயில் காதலிக்குள்ள குரலினிமை ஒரு வேளை அவருக்கு இல்லாமல் போயிருக்கலாம். அவரது கம்பீரமான குரலினிமையை - அந்த அற்புதமான உச்சரிப்பை - ஒரு கிராமபோன் இசைத்தட்டு மூலமாகப் பல நாள் கேட்டு அனுபவிக்கும் பாக்கியம் நானும் எங்கள் குடும்பத்தாரும் - ஏன் தமிழ்நாட்டாருமே - பெறவில்லையே."

பராசக்தி அனுப்பிய தீபாவளி இனாம்
"மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித்தர வேணும், தானத்துக்கென்று மேலும் சில வேட்டிகள் தரவும் கடனாண்டே" என்று என் தந்தை கண்ணன் பாட்டில் 'ஆண்டை'யிடம் முறையிடுகிறார். தம்மிடம் யாசிப்பவர்களுக்குத் தம் வசமுள்ள எதையும் கொடுக்க அவர் பின்வாங்க மாட்டார். தமக்குச் சாப்பிட அன்னம் இல்லாவிடினும் பொருட்படுத்தமாட்டார். பிச்சை யெனக் கேட்போருக்குக் கொடுக்க அரிசி இல்லையென்று நினைத்தே வருந்துவார். அவரது மனநிலைக்கு ஒப்பவே அவரது நண்பர்கள் அவர் கேளாமலே, தேவையான பொருளைக் கொடுத்து உதவுவார்கள். ஒரு தீபாவளியன்று நடந்த சம்பவம் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது."

"முதல் நாள், ஜவுளிக்கடை சொந்தக்காரரான நண்பர் ஒருவர், வழக்கம் போல, என் தந்தைக்கு வேஷ்டிகள், எனக்குப் பாவாடை சட்டை, என் தாயாருக்குப் புடவை இவற்றை இனாமாக அனுப்பி வைத்தார். அன்பிற் சிறந்த சீடர் பலர், எனக்குத் தேவைக்கு மிஞ்சியே பட்டாஸ், மத்தாப்பு, வாண வகைகளும் மற்றும் பூ, வெற்றிலை, பழங்கள் யாவும் கொணர்ந்து தந்தார்கள். தீபாவளியன்று இரவு, நாங்கள் குதூகலமாக விளையாடிவிட்டுத் தூங்கிப் போய்விட்டோம்."

"என் தந்தை மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். கவிதை எழுத யோசிப்பதானால் அவர் அங்குமிங்கும் உலாவுவார். பிறகு எழுதத் தொடங்கினால், கை சளைக்காமல் எழுதிக் குவிப்பார். எனவே, அவர் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதிலிருந்தே அவர் எதையோ நினைத்துக் கவலைப்படுகிறார் என்று அறியலாம். நடுநிசி. இரண்டு நண்பர்கள் வந்து கதவைத் தட்டினார்களா. என் தந்தை தாமே போய்க் கதவைத் திறந்தார். வந்தவர்களில் ஒருவர் ஓரணாவும் இரண்டணாவுமாக மாற்றிப் பணச்சுருள்களை என் தந்தையின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தார். அவர் வியப்புடன், "நான் பணம் வேண்டுமென்று யாரிடமும் சொல்லவில்லையே! நீங்கள் எவ்வண்ணம் என் உள்ளக் கருத்தை உணர்ந்து சில்லறை மாற்றிக் கொணர்ந்தீர்கள்? என்று கேட்டாராம். வந்தவர்கள் பணக்காரர்கள் அல்ல, சாதாரணக் குடும்பத்தில் பிறந்து துணி நெய்யும் தொழிலாளிகள். அந்த அன்பர்களில் ஒருவர் பின்வருமாறு பதிலளித்தாராம்."

"சுவாமி! நாங்கள் யாவரும் சாப்பிட்டுப் படுத்து நித்திரை போய்விட்டோம். என் கனவில், மாதா பராசக்தி காளிதேவி தோன்றி, அடே, உத்தராவதி! எழுந்திரு. என் பக்தன் பாரதி நாளைக் காலையில் தன்னைக் காணவரும் ஏவலர், தொழிலாளிகள், நண்பர்களுக்குப் பரிசளிக்கக் கையிலே காசில்லாமல் நொந்து மனம் வருந்துகின்றான். உடனே உன் கையிலுள்ள பணத்தைச் சில்லறையாக மாற்றி எடுத்துக் கொண்டு போய்க் கொடு என்று சொன்னாள். நான் உடனே எழுந்து, என் கையிலிருந்த ரூபாய் பத்துக்கும், காசுக்கடை செட்டியாரை எழுப்பி, சில்லரை மாற்றிக்கொண்டு, தனியே வரப் பயமாக இருந்ததால், என் சிநேகிதனையும் உடனழைத்துக் கொண்டு வந்தேன் என்றார்."

"தமக்குத் தேவையான துணி முதலியன இருந்தும், மறுநாள் காலையில் தம்மைக் காணவரும் வேலையாள்கள், ஏழைகள், முதலானவர்களுக்குக் கொடுக்க ஓர் பைசாக்கூட இல்லாததை நினைத்து, எங்கு யாரிடம் போய்க் கடன் வாங்கி வருவது என்று என் தந்தை வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாராம். பராசக்தியருளால் அந்தத் தீபாவளி மனக் கவலையின்றிக் கொண்டாடப்பட்டது."

புதுவையில் கவிதை மழை
"காலை யிளம்பரிதி வீசும் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறை தவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகரின்
மேற்கே, சிறு தொலைவில் மேவுமொரு மாஞ்சோலை"

என்று குயில் பாட்டில் புதுவை நகரின் செளந்தரியத்தைத் தந்தையார் வர்ணித்திருக்கிறார். ஆனாலும் அத்தகைய புதுவை நகரை விட்டு வெளிவரக் கூடாதென்று அரசாங்க ஆக்ஞையினால் கூண்டில் அடைபட்ட சிங்கம் போல என் தந்தை தவித்து மறுகினார்.

"இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்,
தனுவுண்டு, காண்டீவம் அதன்பேர் என்றான்"

இவ்வாறு பாஞ்சாலி சபதத்தில் அர்ச்சுனன் கூறியதாக என் தந்தையார் எழுதியுள்ள பாடலைப் பற்றி ஸ்ரீ வ.வெ.சு.ஐயர் தம் முகவுரையில் பரவசத்துடன் எழுதியிருப்பதைக் காணலாம். அந்த ஓரடிப் பாடலுக்கு அவர் அத்தனை பெரிய மதிப்பு அளித்ததன் காரணம், என் தந்தையின் பாவன்மைக்காக மட்டுமல்ல; புதுவையில் அவர்கள் அடைபட்டுக் கிடந்தபோது அந்தப் பாட்டு அவர்களுக்கு எவ்வளவு பொருத்தமாயிருந்தது என்பதுதான். அந்தப் பாடலை ஸ்ரீ அய்யர் தனிமையில் தமக்குள், பாடிப்பாடி மகிழ்வதை நான் கேட்டிருக்கிறேன்."

"ஸ்வாமி! சாம்பாரும் சாதமும் சாப்பிட்டுக் கொண்டு எத்தனை நாள் இவ்வாறு அடைந்து கிடப்போம் என்று மிக்க மன வெறுப்புடன் ஸ்ரீ ஐயர் ஒரு நாள் தந்தையிடம் கேட்டார். அதற்கு மறுமொழியாகத் தாம் புதிதாய் அப்பொழுதுதான் எழுதி முடிந்திருந்த பாஞ்சாலி சபதத்தில் அர்ச்சுனன் கூறிய மேற்கண்ட பாடலை என் தந்தை வீராவேசத்துடன் பாடினார்."

"ஒரு நாள் தந்தை காலையில் வெளியில் போனவர் சாயங்காலம் வரை திரும்பி வரவில்லை. எங்கள் வீட்டில் என் தந்தையாரின் சாப்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் கிடையாது. அதனால் நாங்கள் சாப்பிட்டு முடிந்ததும் இரவு அவருக்குத் தேவையான சாப்பாட்டைத் தயாராக மாடிமீது கொணர்ந்து வைத்து விடுவோம். அன்றிரவு அவர் திரும்பி வந்தபோது அன்று தம் மனம் பட்ட பாட்டை ஒரு பாட்டாக எழுதிக் கொணர்ந்தார். "கண்ணன் என் காதலன்" என்ற தலைப்பில் வரும்

"தூண்டிற் புழுவினைப் போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சம் துடிக்குதடி"

என்னும் நாலு அடிதான் அந்தப் பாட்டு. இதை எழுதி முடித்ததும் அவர் மனம் சோர்வு நீங்கி உற்சாகமடைந்து விட்டதாம். பின்பு, பாடல் முழுவதையும் தம் காதலனான கண்ணனை நினைத்துருகும் காதலியின் பாட்டாக எழுதினார்."

"ஒரு கவியின் மனப்பாங்குடன் கவியின் கண்களால் உலகினைக் காணும் என் தந்தைக்கு அதிலுள்ள அழகிய தோற்றங்களும், இன்பங்களும் அதிகமாகக் காணப்பட்டன. அதனாலேயே அவர்
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!"

என்று பாடவும் முடிந்தது. ஆனால், தம் நாட்டாரின் தாழ்நிலையை எண்ணி மனங்குமுறும் கவிஞரல்லாத வீரர் வ.வெ.சு.ஐயருக்கோ எங்கு பார்த்தாலும் துன்பங்களும், எதிர்ப்புந்தாம் தென்பட்டது ஆச்சரியமல்ல. ஸ்ரீ ஐயர் பிரெஞ்சு பாஷையிலிருந்து மொழி பெயர்த்திருக்கும் 'அழேன் ழக்கே' என்ற கதையைக் குழந்தைகளாகிய எங்களுக்கு அவர் படித்துக் காண்பிக்கும்போது, கண்ணுங் கண்ணீருமாகக் கதை கேட்கும் நாங்கள், அவர் முகத்தில் யாதொரு மாறுதலும் தோன்றாததைக் கண்டு வியந்ததுண்டு. எத்தகைய ஹாஸ்ய நிகழ்ச்சிகளைக் கேட்டபோதும் அவர் வாய் திறந்து சிரித்ததைக் கண்டதில்லை. என் தந்தை கோபமாக இருந்ததையோ, அவர் முகத்தைப் பார்த்து ஒரு நொடியில் அறிந்து கொள்ளலாம். கடல் மடை திறந்தாற்போலத் தமது உள்ள மகிழ்ச்சியைக் கள்ளங் கபடமற்ற சிரிப்பால் வெளிப்படுத்துவார். அது போன்றே தமது மற்ற உள்ளக் கிளர்ச்சிகளையும் கட்டுப் பாடில்லாமல் வெளியிடுவார்."

அம்மாக்கண்ணு புகழ்
பாரதியாரின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவர் அம்மாக்கண்ணு. பாரதியார் இவருக்காக 'அம்மாக்கண்ணு பாட்டு' என்றொரு பாட்டையும் பாடியிருக்கிறார். இவரைப் பற்றி சகுந்தலா குறிப்பிடும் செய்திகளை இப்போது பார்ப்போம்:- "அம்மாக்கண்ணுவை சாதாரண பணிப்பெண் என்ற இனத்தில் சேர்க்கக்கூடாது. ஒரு தனிப்பிறவி. வீட்டில் அரிசி இல்லாவிடில் எங்கிருந்தேனும் எப்படியும் வாங்கி வந்து தருவாள். கையில் பணம் உள்ளபோது சாமான் வாங்கக் கொடுத்த பணத்தைச் சாமான் வாங்காமலும் திரும்பக் கொடுக்காமலும் இருப்பது உண்டு. ஆபத்துக் காலத்தில் தன் உயிரையும் திரணமாக மதித்து உண்மையுடன் உழைப்பாள். ஒரு நாளிரவு என் தந்தை வெகு நேரம் சென்று வீட்டுக்கு வந்தார். வாயிற் கதவைத் தட்டினாராம். அம்மாக்கண்ணு ஆழ்ந்த நித்திரையிலிருந்தபடியால், என் தாயார், தாமே போய், வாயிற் கதவைத் திறந்தார்களாம். என் தந்தையார் உள்ளே வந்ததைத் திடீரென விழித்துக் கொண்ட அம்மாக்கண்ணு கண்டு விட்டாள். பாதி விழிப்பு. சின்ன மங்கலான விளக்கு வெளிச்சம். பார்த்தாள் அம்மாக்கண்ணு. என் தாயார் படுத்திருந்த அறையின் வாயிற்படியில் தனது இரு கைகளையும் விரித்துக் கொண்டு, காளி ஸ்வரூபமாக நின்றாள். "அடே! நீ யாரடா? திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்துவிட்டாய். ஆனால், என்னைத் தாண்டிப் போய் நீ அம்மாளைத் தொட முடியுமா? வா, ஒரு கை பார்க்கிறேன்" என்று அட்டகாசம் செய்தாள். என் தந்தைக்கு வியப்பும், சந்தோஷமும் தாங்க முடியவில்லையாம். சிரித்துக் கொண்டு, "நான்தான், பாரதி. என்னைத் தெரியவில்லையா?" என்றாராம். குரலைக் கேட்டதும் அம்மாக்கண்ணுக்குத் தன் பிழை தெரிந்தது. வெட்கத்தினால் முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு மறைவில் ஓடிவிட்டாளாம். பின்னர் அவர் கண்ணில் படாமல் சில நாள் இருந்தாளாம்."

"ஒரு சமயம் நானும் என் தாயும், என் தாயாரின் பிறந்த வீடான கடையத்திற்குப் போயிருந்த போது, என் தந்தை வீட்டு வாசல் கதவைப் பூட்டிக் கொண்டு எங்கோ வெளியே சென்றிருந்தவர், திரும்ப வீட்டிற்கு வந்தவுடன் கதவைத் திறக்கச் சாவியை 'கோட்' பைகளில் தேடிப் பார்த்திருக்கிறார். காணப்படவில்லை. உடனே அம்மாக்கண்ணு தற்செயலாக அங்கு வந்தவள், பழைய பூட்டான படியால், சரியாக மாட்டிக் கொண்டிராத அந்தப் பூட்டைக் கையினாலேயே அசைத்துத் திறந்து விட்டாளாம். உடனே என் தந்தை பாடினார்:

"பூட்டைத் திறப்பதும் கையாலே - நல்ல
மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பதும் பண்ணாலே - மன
வீட்டைத் திறப்பதும் பெண்ணாலே"

கனகலிங்கத்துக்குப் பூணூல்
"புதுவையை அடுத்துள்ள உப்பளத்தில் 'தேசமுத்து மாரியம்மன் கோயில்' என ஒரு மாரியம்மன் கோயில் உண்டு. அதில் ஒரு வள்ளுவ இளைஞன் பூஜை செய்து வந்தான். அவன் தேவிபூஜை செய்கிறான், பிராமணத் தொழில் நடத்துகிறான் என்று என் தந்தை அவனுக்கு வேத முறைப்படி பூணூல் போட்டு வைத்தார். அந்தத் தேசமுத்துமாரியம்மன் பேரில் ஒரு பாட்டு எழுதினார். ஒருவன் தன் செய்கையினாலும், தர்மத்தினாலுமே தனது ஜாதிக்கு உரியவனாகிறான், பிறவியினால் அல்ல என்பதே என் தந்தையாரின் கருத்து. அதை ஞான ரதம் எனும் நூலில் கண்வ ரிஷிகள் உபதேசம் மூலமாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்."

"ஸ்ரீ சுப்பிரமணிய சிவா நடத்தி வந்த 'ஞான பானு' என்ற பத்திரிகைக்கு என் தந்தையார் விஷயதானம் செய்து வந்தார். ஞானபானு பழைய பிரதிகள் யார் வசமாயினும் இருக்குமானால் அந்த அன்பர்கள் அவற்றைக் கொடுத்து உதவினால், பல நல்ல கதைகள் கட்டுரைகள் தமிழ் இலக்கியத்திற்குக் கிட்டும். ஞான பானுவில் ஒரு சமயம் என் தந்தை, "சின்னச் சங்கரன் கதை" யென்ற தலைப்புடன் ஒரு பெரிய கதை எழுதியிருந்தார். அதில் அவருடைய நகைச்சுவையை நன்றாக அனுபவிக்கலாம். கதையில் வரும் ஜமீன்தார் ஓர் நல்ல தமிழ் அறிஞர். அவருக்குப் பாடல்கள் எழுதுவதில் விருப்பமதிகம். நன்றாக ருசி பார்த்துச் சாப்பிடுவதிலுள்ள விருப்பத்திற்கடுத்த படியாகத் தமிழில் மோகங் கொண்டவர். ஜமீன்தார் ஒரு பாட்டு எழுதித் தமது புலவர் சபையில் பாடிக் காண்பித்தாராம். பாடல் பின்வருமாறு:

(ராகம்: அடாணா)
"மானே கையில்தானே தரித்தானே - ஒரு மாதைத் தரித்தானே, மழுவைத் தரித்தானே
கோனே சிவனே குருவே யருவே - மெய்ஞானமான மோனமான (மானே)
நாதா தாமரைப் பாதா!
எந்தனை மோக்ஷ கதியினில் சேர்த்திட இன்னமும் ஆகாதா - உன்னை
சொந்த குலதெய்வம் என்று நிதம் துதி சொன்னது போதாதா
விந்தையுடன் என்னை ஆண்டிட உனக்கு மொத்த மெத்த வாதா
ராமஸாமிக் கவுண்ட ராஜ போஜனுக்கருள் செய்யும் பாதா"

அதில் 'ராமசாமிக் கவுண்ட ராஜபோஜனுக்கு அருள் செய்யும் பாதா' என்று தனது முத்திரை வரும் அழகைச் சொல்லிக் காண்பித்து அளவிலா ஆனந்தம் அடைந்தாராம்."

பாரதி அறுபத்தாறு
"தமிழில் அர்த்தமில்லாத பக்திப் பாடல்கள் எத்தனை நிறைந்திருந்தன என்பதை விளக்கவே தாம் அம்மாதிரி ஒரு பாடலை எத்தனை சுலபமாக அமைக்க முடியுமென்று பல தடவை புலவர்களிடையே தர்க்கம் வரும்போது தமது சிறு பிராயத்தில் நிரூபித்திருக்கிறார். பல்லை உடைக்கும் கடின நடையுடைய தமிழ் இலக்கியங்களை அவர் கேலி செய்யத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது. ஆறுமுக நாவலர் எழுதிய 'கந்த புராணம்' புஸ்தகம் ஒன்று எங்கள் வீட்டிலிருந்தது. புராணக் கதைகளை முழுவதும் வேதவாக்காக நம்பக்கூடாது. அவைகள் வெறும் அழகிய கற்பனைகள் என்ற ஹோதாவில் படித்தால் மிக்க ரஸமாயிருக்கும் என்பார். யாராவது நம்பக்கூடாதபடி பொய் சொன்னால், இந்தப் புளுகு கந்த புராணத்தில்கூடக் கிடையாது என்று கேலி செய்வார். காதல் என்றால் என்ன என்று ஒரு வாலிபர் ஒரு சமயம் என் தந்தையைக் கேட்க, அவருக்கு விரிவாக எடுத்துச் சொல்லிய காதலின் தன்மையை என் தந்தை "பாரதி அறுபத்தாறு" என்ற பாடல்களில், 'காதலின் புகழ்' என்ற தலைப்பில் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்."

பாரதியாரின் வீட்டில் அவர் எழுதிக்கொண்டிருக்கும்போது அவருடைய சீடனான குவளைக் கண்ணன் உரத்த குரலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் செய்வது வழக்கம். பாரதி சொன்னார், கண்ணா நீ உரக்கப் பாராயணம் செய்வது எனக்கு இடையூறாக இருக்கிறது, ஆகவே நீ வேறு எங்காவது போய் பாராயணம் செய் என்றார். அதற்கு குவளைக் கண்ணன் சொன்னார், ஐயா நீங்கள் ஒரே நேரத்தில் பல காரியங்களைச் செய்யக்கூடிய சதாவதானி. அப்படியிருக்க நான் உரக்கப் பாடுவது உங்களுக்கு எப்படித் தொல்லையாக இருக்கும் என்றார். சரி சரி என்று சொல்லி பாரதி அவரிடம் நாலாயிரம் எத்தனை ஆழ்வார்கள் பாடியது என்று கேட்டார். அவர் சொன்னார் பன்னிரெண்டு ஆழ்வார்கள் என்று. அப்படியா இவர்கள் பன்னிரெண்டு பேர் சேர்ந்து நாலாயிரம் பாடல்கள் பாடினார்களல்லவா? நான் ஒருவன் மட்டும் நாலாயிரம் பாடுகிறேன் பார் என்று சொன்னார் பாரதி. ஆனால் அவரால் அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே பாடமுடிந்தது, அதற்குள் அவரை இறைவன் அழைத்துக் கொண்டு விட்டான். இது பற்றி சகுந்தலா பாரதி கூறும் செய்தியை இனி பார்க்கலாம்.

"என் தந்தை 'பாரதி நாலாயிரம்' என்றொரு நூல் எழுத வேண்டித் தொடங்கினார். அது அறுபத்தாறு பாடல்களில் முடிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. இன்னும் பலபல விஷயங்களையெல்லாம் எழுத வேண்டினார். கடவுள் அவருக்குப் போதிய ஆயுள் கொடுக்கவில்லை. 'காதலைப் பற்றிச் சிறிய குழந்தைகளுக்கு என்ன தெரியும்? தங்கம்மாவும் பாப்பாவும் இருக்கும்போது அதுபற்றிப் பேசலாமா? என்று ஒரு நண்பர் கேட்டார். என் தந்தை சொல்கிறார்:-"

"ஸ்வாமி, குழந்தைகள் மனத்தை அறியும் சாஸ்திரம் படித்திருந்தால் இப்படிக் கேட்க மாட்டீர். மற்றவரைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. என்னைப் பற்றிய வரையில் எனக்குப் பத்து வயதிலேயே காதல் என்னவென்று தெரிந்து விட்டது. முக்கியமாகச் சொல்ல வேண்டியவற்றை மறைத்து வைத்துத்தான் மண்ணாகப் போயிற்று என்றார். "கனவு" என்ற தலைப்பில் என் தந்தையார் எழுதியிருக்கும் சுயசரிதைப் பகுதியில் தமது இளம் பிராயத்துக் காதலை மறைக்காமல் குறிப்பிட்டே பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் அவர் குறிப்பிடும் பிள்ளைப் பிராயத்துக் காதலை, அவர் கலைமகள் மீது கொண்ட காதலென மயங்குவது கூடாது. அவர் பிள்ளைப் பிராயத்திலே கலைமகள் மீது கொண்ட காதலையும், பின்னர் லக்ஷ்மி மீது கொண்ட மோகத்தையும், கடைசியில் ஆதிபராசக்தி, மகாகாளிமீது கொண்ட காதலையும், முறையே 'மூன்று காதல்' என்ற பாடலில் தனியே எழுதியிருக்கிறார். பிள்ளைப் பிராயத்தில் கலைமகள்மீது கொண்ட காதலை அவர் வர்ணித்திருப்பதையும், ஸ்வசரிதையில் பத்தாண்டில் காதலித்த பெண்ணை வர்ணித்திருப்பதையும் ஒப்பிட்டால் உண்மை தெளிவாகும். தாம் கலைத் தேவியின் மீது கொண்டிருந்த காதலை என் தந்தை எட்டையபுரத்தில் முன்னாளில் வசித்து வந்தபோது எழுதிய "வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி" என்ற பாட்டிலும் தெளிவாகக் கூறியிருக்கிறார்."

வறுமையின் பிடியில்
"என் தந்தைக்கு மனத்துன்பங்கள் சகிக்க முடியாமல் போனதற்கு தக்க காரணங்களும் ஏற்பட்டிருந்தன. ஐரோப்பிய மகா யுத்தம் முடிந்துவிடும் நிலையில் தாம் கட்டிய மனக் கோட்டைகள் தகர்ந்து போனதைக் கண்டார். ஓயாத ஒழியாத மிடிமைத் துன்பம். என் தந்தை எழுதி வைத்திருந்த குறிப்புகள் ஒன்றில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

"பராசக்தீ! இந்த உலகத்தின் ஆத்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?"

"முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜுரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாத காலம் இரவும்பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை, இருவருக்கும். எப்போதும் சஞ்சலம். பயம், பயம், பயம்! சக்தீ, உன்னை வாழ்த்துகிறேன்."

"கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து, தொல்லை இல்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன்; உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச்சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டு ஒன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்."

"தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால் உன்னை எப்படிப் பாடுவேன்?"

ஸ்ரீ அரவிந்தரிடம் பிரியா விடை
பாரதி புதுச்சேரியை விட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, அப்படி புதுவையினின்றும் வெளியேறுவதென்பது எத்தனை துன்பமாக இருந்ததென்று அவர் ஓர் கட்டுரை எழுதி வைத்திருந்தாராம், அது பிறகு காணாமல் போய்விட்டதாம். அப்படி அவர் புதுவையை விட்டு வெளியேறுமுன்பாக ஸ்ரீ அரவிந்தரிடம் சென்று விடைபெறுவதற்காகச் சென்றார். அதுபற்றி சகுந்தலா பாரதி எழுதும் பகுதியைப் பார்ப்போம்.

"ஸ்ரீ அரவிந்தரிடம் என் தந்தை விடைபெறுவதற்காகச் சென்றார். நாங்களும் போயிருந்தோம். அந்நாளில் ஸ்ரீ அரவிந்தரின் ஆசிரமத்திற்கு இப்போதுள்ளது போன்ற கட்டுக் காவல் கிடையாது. எங்களுக்கு விருப்பமான போதெல்லாம், ஸ்ரீ அரவிந்தரின் மாளிகைக்குச் செல்வதுண்டு. அங்கு ஸ்ரீ அரவிந்தரும், என் தந்தையும், ஸ்ரீ வ.வெ.சு.ஐயரும், ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாரும் சம்ஸ்கிருதத்தில் ஏதேதோ பல விஷயங்களைப் பற்றி சம்பாஷிப்பார்கள். குழந்தைகளாகிய நாங்கள் சிறிது நேரம் கேட்டிருப்போம். பின்பு அவரது மாளிகையைச் சூழ்ந்த விசாலமான தோட்டத்தில் விளையாடியும், ஸ்ரீ அரவிந்தருடன் வசித்து வந்த அவரது சிஷ்யர்களுடன் பேசியும் சில நேரம் கழிப்போம்."

"ஸ்ரீ அரவிந்தரது பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தால் எங்களுக்கு அது விடுமுறை நாள். அன்று முழுவதும் அவரது வீட்டிலேயே தங்குவோம். இரவு ஒரு பெரிய விருந்து நடக்கும். நம் நாட்டுச் சமையல் வகையெல்லாம் என் தாயார்தான் செய்தனுப்புவார். ஸ்ரீ அரவிந்தர் சாம்பாரும், அப்பளமும், மிக்க பிரியத்துடன் சாப்பிடுவார். என் தந்தை வேதம் படிப்பதற்காகச் சில நாள் ஸ்ரீ அரவிந்தரின் மாளிகைக்குப் போவார். இரவில் வீட்டுக்குத் திரும்ப மாட்டார். சில சமயம் காலை ஆறு மணிவரை படித்துக் கொண்டிருப்பார்களாம். அதனால், ஸ்ரீ அரவிந்தரின் சிஷ்யர்கள் வந்து சாம்பாரும், அப்பளமும் மட்டும் வாங்கிப் போவார்கள். என் தந்தை, பொரித்த அப்பளத்தில் தமக்குள்ள விருப்பத்தைச் 'சந்திரிகையின் கதை'யில் கோபாலய்யங்கார் மூலமாக வெளியிட்டிருக்கிறார். கடைசி முறையாக தந்தை ஸ்ரீ அரவிந்தரிடம் விடை பெறப்போனபோது, அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அதுமட்டும் தான் நான் கண்டேன்."

"ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள். நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்."

புதுச்சேரியை விட்டு இந்திய எல்லைக்குள் நுழைதல்
"புதுவையை விட்டு இரண்டு ஜட்கா வண்டிகளில் நாங்கள் புறப்பட்டோம். எங்கள் பின்னாலேயே மற்றொரு வண்டியில் போலீசாரும் வந்தார்கள். பிரெஞ்சு எல்லையைத் தாண்டியதும் என் தந்தையைக் கைது செய்தார்கள். இது நடக்குமென்பதை எதிர்பார்த்திருந்த போதிலும் அதுசமயம் என் தந்தையைப் பிரிவது மிக்க வருத்தமாகத் தானிருந்தது. என் மாமன் ஸ்ரீ அப்பாத்துரை ஐயர் என் தந்தைக்கு வேண்டிய செளகரியங்களை ஏற்பாடு செய்வதற்காகக் கடலூரிலேயே தங்கிவிட்டார். நான், என் தாயார், சின்ன மாமன் ஆகியோர் சென்னைக்கு வந்து சேர்ந்தோம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேராக என் தந்தையாரின் நண்பர் ஸ்ரீ துரைசாமி ஐயர் வீட்டுக்கு வந்தோம். ஸ்ரீ துரைசாமி ஐயர் வீட்டார் எங்களைத் தங்கள் குடும்பத்தார்களைப் போலவே எண்ணி மிக அன்பாக நடந்து கொண்டார்கள். ஸ்ரீ துரைசாமி ஐயர் என் தந்தைக்குத் தேவையான பண உதவியும் செய்தார். சிறையில் விசாரணை நடக்குமுன் காவலில் வைக்கப்பட்டிருந்த என் தந்தைக்கு ஆகாரம் முதலியன கொண்டுபோய்க் கொடுப்பதற்கு ஸ்ரீ ஆராவமுதன் என்பவர் கடலூரிலேயே தங்கியிருந்தார். விசாரணையில் என்ன நடந்ததென்ற விவரங்கள் எனக்குச் சரியாக ஞாபகமில்லை. அச்சமயம் என் சிறிய தாயாரும் சின்ன மாமனும் பம்பாய்க்குப் போய்விட்டார்களாதலால் நானும் என் தாயாரும் கடையம் வந்து சேர்ந்தோம்."

"ஆனால், ஒரு மாதம் சிறைவாசம் செய்வதற்குள் மனநோயுற்ற என் தந்தை உடல் நோய்க்கும் உள்ளாகி, இராஜிய விஷயங்களில் இனித் தலையிடுவதில்லை என்று வாக்குக் கொடுத்துவிட்டுச் சிறையினின்றும் வெளிவந்து விட்டார். அதிலும் திருப்தி அடையாத அரசாங்கத்தார் அவர் சென்னையில் வசிக்கக்கூடாது குறிப்பிட்ட நாலு ஊர்களில்தான் வசிக்கலாம் என்று கட்டுப்படுத்தினார்கள். அவ்வாறே என் தந்தை சென்னையிலிருந்து கடையத்திற்கு வந்து சேர்ந்தார்."

கடையம் வாழ்க்கை
"என் தந்தை தேசிய விஷயங்களில் இனி சம்பந்தப்படுவதில்லை, அது சம்பந்தமான பிரசங்கங்கள் செய்வதில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு வெளிவந்ததில் என் மாமனுக்கு மிக்க வருத்தம். பெரிய குடும்பத்தைத் தாம் சம்ரட்சிப்பதற்குப் பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தால் தேச சேவைக்கு நேரமில்லாமல் போய்விட்டது. நம் தங்கையின் குடும்பத்தையும் தாமே வைத்துக் காப்பாற்றுவதாக உறுதிமொழி அளித்தும் கூட என் தந்தை கேளாமல் சிறையிலிருந்து வெளிவந்தது சரியல்ல எனக் கோபித்தார். வீட்டில் எப்பொழுதும் கோபப் பேச்சுக்கள், மன வருத்தங்கள். இவற்றிற்கு மத்தியில் என் தந்தையைக் காணவேண்டி வந்த பந்துக்களின் கூட்டம். இவ்வாறு சில நாள்கள் கழிந்தன. தம் அனுமதியின்றி மகளுக்குக் கல்யாணம் முடிக்கவில்லை யென்பதைக் கண்டு என் தந்தைக்குச் சற்று மன ஆறுதல் உண்டாயிற்று. ஆனால், தம் வாழ்க்கையின் இலட்சியமாகப் போற்றி வந்த தேசத் தொண்டாற்றுவதற்கான அரசியலில் சம்பந்தப்படுவதில்லை யெனத் தாம் வாக்களித்தது பின்னால் அவருக்கு அதிக மனக்குழப்பத்தை உண்டாக்கிற்று. விதியின் கொடுமை! என் தந்தை, பின்னும் சில மாதங்கள் புதுவையிலேயே இருந்திருப்பாரானால் யுத்த சமாதானத்தினால் யாதொரு நிபந்தனையு மின்றிப் புதுவையிலிருந்து ஸ்ரீ வ.வெ.சு. ஐயர், ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் இவர்கள் வெளிவந்தது போல் அவரும் நிம்மதியாக வெளி வந்திருக்கலாம்."

"எட்டயபுரத்தில் என் தந்தைக்கு உலாவப்போக நல்ல கண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்த சோலைகள் புதுவையைப் போலக் கிடையாது. 'அல்லாத் தோட்டம்' என்ற ஒரு பெரிய தோட்டம் எட்டயபுரத்தில் இருக்கிறது. அங்கு, ஒரு நாள் என் தந்தையார் என்னையும் என் தாயாரையும் அழைத்துக் கொண்டு போனார். புருஷனும் மனைவியும் கைகோர்த்துக் கொண்டு தெருவில் நடந்து போகும் விந்தையைக் கண்டு எட்டயபுரத்தில் பரிகசிக்க ஆரம்பித்தார்கள்.

'கொண்ட பெண்டாட்டியிடம் காதலாம் - கையை
கோர்த்துக் கொண்டு உலாவுதலாம்"

என்ன வேடிக்கையான செய்தி!

"நாடகத்திற் காவியத்திற் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றா மென்பர்;
ஊடகத்தே, வீட்டினுள்ளே, கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்!
பாடைகட்டி யதைக் கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலெனும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொய்மையினால் விதிகள் செய்து
முறைதவறி யிடரெய்திக் கெடுகின்றாரே."

என என் தந்தை எழுதினார். அவரைக் குறை கூறப் புதியதொரு சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்துப் பலர் உள்ளம் மகிழ்ந்தார்கள். எட்டயபுரம் வாழ்க்கை என் தந்தைக்கு உகந்ததாக இல்லை, எனவே அழகிய கிராமமான கடையத்துக்குப் போய் வசிப்பது என்று தீர்மானித்தார். எட்டயபுரத்தில் அவர் கவிதை எழுதும் தொழிலையே அனேகமாக மறந்து விட்டார். சூழ்நிலை கவிஞரின் மனத்தை எப்படிப் பாதிக்கு மென்பதை இதிலிருந்து சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்."

குவளைக் கண்ணன்
"குவளைக் கிருஷ்ணனைப் பற்றி என் தந்தை தமது பாரதி அறுபத்தாறில் 'குவளைக் கண்ணன் புகழ்' என்ற பகுதியில் பாடியிருக்கிறார்.

"குவளைக் கிருஷ்ணனுக்கு எப்பொழுதும் என் தந்தை கூட இருப்பதே பரமானந்தம். பிடித்துத் தள்ளினாலும் போக மாட்டார். புதுவையில், என் தந்தை பகலில் நித்திரை செய்வதற்காகப் படுத்துக் கொண்டவுடன், கிருஷ்ணன் அவருக்குக் கால் வருட வந்துவிடுவார். என் தந்தை அவரைக் கோபித்து வைதாலும் பொருட்படுத்த மாட்டார். குவளைக் கிருஷ்ணனுடைய வேண்டுகோள் பலித்தது. திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் ஒரு வீட்டில் முன் பகுதியொன்று வாடகைக்கு கிடைத்தது. முன் பகுதியில் பெரிய விசாலமான கூடம். இரண்டு பெரிய அறைகள், நடுவில் பெரிய சதுரமான முற்றம். அதில் ஒரு தண்ணீர்க் குழாயும் உண்டு. இதைத்தவிர பின்கட்டில் சமையலறை, குளிக்குமிடம் முதலியன. மிக்க செளகரியமாக இருந்தது. மேற்படி வீட்டில் இன்னும் மூன்று குடித்தனக்காரர்கள் இருந்தார்கள். சாதாரணமாக ஒரு வீட்டில் பல குடித்தனக்காரர்கள் இருந்தால் தமக்குள் சச்சரவு செய்து கொள்வது சகஜம். ஆனால், எங்களைப் பற்றிய வரையில் எல்லோரும் மிகுந்த அன்புடனும் ஒற்றுமையுடனுமிருந்து வந்தார்கள்."

நீலகண்ட பிரம்மச்சாரி
"என் தந்தையின் நண்பர்களில் நீலகண்ட பிரம்மச்சாரி ஒருவர். நாங்கள் திருவல்லிக்கேணிக்கு வந்தவுடன் என் தந்தையை வந்து பார்த்து, தாம் சிறைச்சாலையில் பட்ட கஷ்டங்களையும், அவற்றிற்கு மேலான கஷ்டமான தமது தற்கால நிலைமையையும் சொல்லி வருந்தினார். வேலை தருவார் யாருமிலர். கட்டுரைகள் எழுதிப் பிழைக்கலாம் என்றால் அவர் எழுதும் உணர்ச்சியுள்ள கட்டுரைகளைப் பிரசுரிக்க ஒரு பத்திராதிபரும் ஒப்பவில்லை. முக்கிய காரணம், அவரது கட்டுரைகளில் பொதுவுடைமை யுணர்ச்சி பொங்கி வழிந்து கொண்டிருந்ததுதான். முதலாளித்துவம் தாண்டவமாடிய காலத்தில் பொதுவுடமைக் கட்சி பேசத் துணிந்தவர்கள் நிலைமை யாவரும் அறிந்ததே."

"ஸ்ரீ நீலகண்டன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவர் தம்மை ஐயர் என்று சொல்லிக் கொள்ளாமல் பிரம்மச்சாரி என்று தம் பெயருடன் சேர்த்துக்கொண்ட காரணம், அவருக்குப் 'பங்கிம் சந்திரர்' எழுதிய ஆனந்தமடத்தில் சந்தானங்களின் தலைவர் அவ்வாறு பெயர் படைத்திருப்பதுதான். மறைந்து வாழும் தேசபக்தர்கள் தியாகிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீ நீலகண்டனும் அவர் நண்பர் ஒருவரும் வெங்கடரங்கம் பிள்ளைத் தெருவில் ஒரு சிறிய வீட்டு மாடியில் குடியிருந்தார்கள். அவர்களிருவரும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. என் தந்தை தம் கையில் பணமிருந்தால் அதில் ஒரு பகுதியை நீலகண்டனுக்குக் கொடுத்து வருவார். ஆனால் சாதாரணமாக என் தந்தையிடம் டிராம் சார்ஜுக்காகக் கொடுக்கப்படும் ஒரு ரூபாயைத் தவிர வேறு பணமிருக்காது. என் தந்தைக்கோ மாதம் ரூபாய் எண்பது மட்டுமே சம்பளம். அதில் வீட்டுவாடகை ரூபாய் பன்னிரண்டு. எனக்குப் பள்ளிக்கூடச் சம்பளம், வேலைக்காரி, இன்னும் இதர செலவுகள் நடக்க வேண்டும். நீலகண்டனுடன் வசித்த நண்பர் பெயர் எனக்கு மறந்து போய்விட்டது. அவர் நிலைமை நீலகண்டன் நிலைமையை விடக் கஷ்டமானது. எனவே, என் தந்தை, அவருக்கு மாதம் பதினெட்டு ரூபாய் சம்பளத்தில் தம்மிடம் செக்ரட்டரி வேலை போட்டுக் கொடுத்தார். வீட்டில் சாப்பாடு போடுவது சென்னையில் சாத்தியமில்லை. ஏற்கனவே வீட்டில் அடிக்கடி வரும் விருந்தாளிகளுக்குக் குறைவில்லை. நிரந்தரமாக ஒரு விருந்தாளியை வைத்துக் கொள்வது இயலாதென்று என் தாயார் சொல்லி விட்டார்களாம். அதனால்தான் மாதம் பதினெட்டு ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுத்தார். என் தந்தைக்கோ 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதிக் கொடுக்க மட்டுமே நாள் முழுவதும் நேரம் சரியாக இருந்தது. இவரது செக்ரட்டரிக்கு என்ன வேலை கொடுக்க முடியும்? வேலையும் இல்லாது போதிய சம்பளமும் இல்லாது எப்படி செக்கரட்டரி உத்தியோகம் பார்ப்பது?"

"நீலகண்ட பிரம்மச்சாரி, ஒரு நாள் காலையில், என் தந்தை வீட்டில் இல்லாதபடியால், என்னிடம் ஏதாவது காசு இருந்தால் கொடுகும்படி கேட்டார். என் கையிலிருந்த இரண்டணாவையும் கொடுத்தேன். அன்றிரவு பத்து மணிக்கு மறுபடி எங்கள் வீட்டுக்கு வந்தார். என் தந்தையிடம் ஏதாவது பணமிருந்தால் கொடுக்கும்படி கேட்டார். வழக்கம் போல் என் தந்தையிடம் பணம் கிடையாது. நீலகண்டன் கண்ணீரும் கம்பலையுமாக, "சுவாமி, இனிமேல் தாங்க முடியாது. யாராவது நல்ல பணக்காரர் வீட்டிற்குப் போய், பயமுறுத்தியோ, திருடியோதான் வயிறு வளர்க்க வேண்டும். வேறு வழியில்லை. நான் சாப்பிட்டு மூன்று நாளாயிற்று. இன்று காலையில் பாப்பா இரண்டணா கொடுத்தது. இரண்டணாவுக்கு என்ன சாப்பிட முடியும் வயிறு நிரம்பும்படியாக? இனிப் பொறுக்க முடியாது" என்று சொன்னார். என் தந்தை மனம் குமுறினார். "அட என்ன உலகம்! ஒரு பணக்காரன் சுகமாயிருப்பதற்காக ஆயிரம் ஏழைகள் அவதிப்படுவதா? "தனியொரு மனிதனுக்குணவில்லை யெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!" தம்பி நீலகண்டா! கவலைப்படாதே. பராசக்தி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லி, பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து நீலகண்டனை அனுப்பி வைத்தார். உடனே "பாரத சமுதாயம் வாழ்கவே" என்ற பாடலும் இயற்றினார்."

"நீலகண்ட பிரம்மச்சாரி தாம் குடியிருந்த மாடிக்கு என்னைப் பல தடவை அழைத்துப் போயிருக்கிறார். அப்பா பாட்டுகள் பாடச் சொல்லிக் கேட்பார். அவற்றில் நீலகண்டனுக்குப் பிரியமான பாடல்கள், "நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்" என்ற நொண்டிச் சிந்தில் பாடும் பாட்டும், "மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள்வலியும் தோள்வலியும் போச்சே" என்ற தெம்மாங்கு மெட்டில் பாடும் மறவன் பாட்டும். மேற்படி பாட்டுகளைக் கேட்கும்போது நீலகண்டன் மனம் வெதும்பி இரத்தக் கண்ணீர் வடிப்பார். என் தந்தை இறக்கும்போது அவர் அருகிலேயே நீலகண்டனும் இருந்தார். சில நாளைக்குப் பின் அவரை அரசாங்கத்தார் கைது செய்து விட்டார்கள் என்ற செய்தி தெரிந்தது. பின்பு எங்கு போனார், யாது நேர்ந்தது என்ற விவரம் தெரியவே தெரியாது!"

பார்த்தஸாரதி கோயில் யானை
காலை நேரத்தில் சில சமயம் என் தந்தை பார்த்தஸாரதி கோயிலுக்குப் போவார். அங்கு வாசல் மண்டபத்தில் கட்டியிருக்கும் யானைக்குப் பழம் வாங்கிக் கொடுப்பார். பின் அதனுடன் விளையாட்டாகச் சிறிது வார்த்தையாடிவிட்டு வருவது வழக்கம். சில நாளாகக் கோயில் பக்கம் போகாதிருந்த என் தந்தை ஒரு நாள் வழக்கம்போல யானைக்குப் பழம் கொடுக்கப் போனார். யானைக்கு மதம் பிடித்திருந்ததால் நான்கு கால்களும் சங்கிலி போட்டுக் கட்டப் பட்டிருந்தது. ஜனங்கள் கம்பி வேலிக்குப் புறம்பே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் தந்தை உள்ளே சென்றபோது அவரை யாரும் தடுக்கவில்லை போலும்! வழக்கம்போல வாழைப்பழத்தை யானையின் அருகில் சென்று கொடுத்தார். துதிக்கையை நீட்டிப் பழத்தை வாங்கிய யானை, பின் அவரைத் துதிக்கையால் கீழே வீழ்த்தி விட்டது. யானையின் நான்கு கால்களுக்குமிடையில் விழுந்து விட்டார். கீழே பாறாங்கல் பரவிய தரை. என் தந்தை எழுந்திருக்கவில்லை. முகத்தினின்றும் இரத்தம் பெருக்கெடுத்து விட்டது. யானை, தன் நண்பனுக்குத் தீங்கிழத்து விட்டோமே என்ற பச்சாதாபத்துடன் தன் பிழையை உணர்ந்தது போல, அசையாமல் நின்று விட்டது. அது தன் காலை ஒருமுறை அசைத்திருக்குமானால் அத்துடன் "பாரதியார்" கதை முடிந்திருக்கும். சுற்றி நிற்கும் ஜனங்கள் திகைத்து விட்டார்கள். உள்ளே நுழைந்து அவரைத் தூக்க ஒருவருக்கும் தைரியம் இல்லை. அந்த வேளையில் எங்கிருந்தோ வந்தான், குவளைக் கண்ணன். தன் உயிரைத் திரணமாக மதித்து, உள்ளே குதித்து, என் தந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தான். பின்னர்க் கேட்க வேண்டுமா? ஜனங்கள் அவரைத் தாங்கிய வண்ணம் கோயில் வாசல் மண்டபத்திற்குக் கொண்டு வந்தார்கள். எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாருக்கு விஷயம் எட்டியது. அவர் ஓடி வந்து ஒரு வண்டியில் என் தந்தையைப் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார். குவளைக் கண்ணனும் கூடவே போனான்".

"ஸ்ரீநிவாசாச்சாரியார் பெண் ரெங்காள் என்பவள் எங்கள் வீட்டிற்கு ஓடிவந்தாள். சகுந்தலா! அப்பாவை ஆனை அடிச்சுடுத்து என்று அழுது கொண்டே கத்தினாள். கடவுளே! அந்த ஒரு நிமிஷம் என் உள்ளம் இருந்த நிலையை எதற்கு ஒப்பிடுவேன்? - அப்பாவை ஆனை அடிச்சுடுத்து - ரெங்காவுடன் பார்த்தஸாரதி கோயில் வாயிலுக்கு ஓடினேன். அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்விட்டார்கள். எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது, என்ன செய்வது?"

"திருவல்லிக்கேணியில், விக்டோரியா ஹாஸ்டலில் என் தாயாரின் இளைய சகோதரர் வசித்து வந்தார். அவரைப் போய் அழைத்து வருவதற்காக விக்டோரியா ஹாஸ்டலுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு அவர் குடியிருந்த அறை நெம்பர் தெரியாது. ஒருவாறு தேடிக் கண்டுபிடித்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தேன். ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருப்பார்கள் என நினைத்து அவர் அங்கு சென்றார். பின்பு நான் வீடு திரும்பி வந்தபோது என் தந்தையை வீட்டுக்குக் கொணர்ந்து விட்டிருந்தார்கள். மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால் ஏற்பட்ட காயம். தலையில் நல்ல பலமான அடி. மண்டை சிதைவுற்று இருந்தது. நல்ல காலமாக அவரது பெரிய தலைப்பாகையிருந்தபடியால் தலை தப்பிற்று."

"என் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையெனக் கேட்டு என் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது. காயங்கள் சிறிது குணமடைந்து அவர் திரும்ப வேலைக்குச் செல்லப் பல நாள்களாயின. யானை அவரைத் தள்ளிய சில காலத்திற்கெல்லாம் ஏதோ ஓர் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக என் தந்தை தனிமையாக நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் படம் (தாடியில்லாமல்) எடுக்கப்பட்டது. யானை தள்ளிய கதையையும், தம் சொந்தக் கற்பனையையும் சேர்த்துக் "காளி கோயில் யானை" என்ற கதையொன்று எழுதியிருந்தார். அது சுதேசமித்திரனில் பிரசுரிக்கப் பட்டிருந்தது."

"யானை மதம் பிடித்தபோது கீழே தள்ளியதையும் அவர் பொருட்படுத்தவில்லை. உடம்பு சற்று குணமானதும் வழக்கம்போல யானைக்குத் தேங்காய் பழம் வாங்கிக் கொடுப்பதையும் நிறுத்தவில்லை. மதம் தெளிந்து சுய அறிவு திரும்பப்பெற்ற யானையும் தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்பது போல, என் தந்தையைக் கண்டவுடன் தும்பிக்கையை நீட்டி அழைக்கும். ஆறறிவு படைத்த மனிதர்களைப் போலவே மிருகங்களும் அவர்மீது பாசம் காட்டின".

மகாகவியின் இறுதி நாட்கள்
"என் தந்தையார், தமக்கு உகந்த தொழிலான பத்திரிகைக்கு வியாசம் எழுதுவதிலும், பாட்டுகள் புனைவதிலும், நண்பர்களுடன் சல்லாபம், கடற்கரைக் கூட்டங்கள், நிபுணர்களுடன் சங்கீத ஆராய்ச்சி முதலியவற்றாலும் சிறிது மனச்சாந்தி பெற்றவராகக் கூடியவரை உற்சாகத்துடன் இருந்து வந்தார். ஆனால் யானையினால் தள்ளப்பட்டு நோயில் வீழ்ந்த பின், அவரது உடல்நிலை அத்தனை திருப்திகரமானதாக இல்லை. மிகுந்த பலஹீனமாகவே காணப்பட்டார். ஸ்ரீ வ.வெ.சு.ஐயர் 'தேசபக்தன்' பத்திரிகையை அப்பொழுது நடத்தி வந்தார். அவரும் அடிக்கடி என் தந்தையாரைச் சந்தித்துப் பேசுவார். சில சமயங்களில், காலை வேளையில் தெருக்கள் தோறும் பஜனை செய்துகொண்டும் போவோம். என் தந்தை ஒரு அடி பாடுவார். நாங்கள் அதைத் திரும்பப் பாடுவோம். ஸ்ரீ ஐயருக்குப் பாடத் தெரியாது. எனினும் ஆவல் மிகுதியால் கூடியமட்டில் எல்லோருடனும் சேர்ந்து பாட முயல்வார். திருவல்லிக்கேணியில் சில பெரிய தெருக்கள் வழியாகச் சென்று பார்த்தஸாரதி கோயில் வாசலில் வந்து பஜனை முடிவடையும்."

"இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருந்தபோது என் தந்தையார், திடீரென வயிற்றுக் கடுப்பு நோயால் பீடிக்கப்பட்டார். ஏற்கனவே, மிகுந்த பலஹீனமடைந்த உடலானபடியால் வியாதியின் கடுமையைத் தாங்கமுடியவில்லை. உற்ற நண்பர்கள் சிலர் எப்பொழுதும் வந்து கூட இருந்து உதவினார்கள். ஸ்ரீ வ.வெ.சு.ஐயரைத் 'தேசபக்தன்' ஆசிரியர் என்ற ஹோதாவில் அவரது பத்திரிகையில் வெளியான கட்டுரை ராஜத் துவேஷம் உள்ளது என்ற குற்றத்திற்காகக் கைது செய்தார்கள். ஸ்ரீ ஐயர், போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகுமுன், வாரண்டுச் சேவகர்கள், போலீஸ் உத்தியோகஸ்தர்கள், மற்றும் சில நண்பர்கள் யாவரும் பின் தொடர நோயுற்றுப் படுத்த படுக்கையாக இருந்த என் தந்தையாரிடம் கடைசி முறையாக விடை பெற்றுச் சென்றார்."

"கடைசிவரை, தாம் பிழைத்தெழுந்து விடுவோம் என்றுதான் என் தந்தை எண்ணியிருந்தார். சாகாதிருக்கும் வழியைப் பற்றிச் சதா காலமும் பிரசங்கம் புரிந்தவருக்குச் சாக மனம் வருமா? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம், பதினொன்றாம் தேதி - சாயங்காலம், விளக்கேற்றும் நேரம், 'இன்றிரவு, தப்பினால்தான் பிழைப்பார்' - அதாவது, இனிமேல் நம்பிக்கையில்லை - என்று வைத்தியர் சொல்லிவிட்டார். எது நேருமோ வெனக் கிலி பிடித்த மனத்துடன், என் தந்தை படுத்திருக்கும் அறை வாயிலில் உட்கார்ந்திருந்தேன். சில நாட்களாகவே என் தந்தையார் மருந்து சாப்பிட மறுத்து விட்டார். மிகுந்த சிரமத்துடன் கட்டாயப் படுத்தித்தான் மருந்து கொடுக்க வேண்டி வந்தது. அன்று, "அப்பாவுக்கு மருந்து நீ கொடுத்தால், ஒருவேளை கோபிக்காமல் சாப்பிடுவார்" என்று என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார். மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்தென்று நினைத்து, பக்கத்தில் கிளாசில் வைத்திருந்த 'பார்லி' தண்ணீரை அவரிடம் கொடுத்தேன். மருந்து வேண்டாமென்றார். உடனே அவர் மனத்தில் என்ன தோன்றியதோ? என் கையிலுள்ள கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார். "பாப்பா! நீ கொடுத்தது மருந்து இல்லையம்மா! கஞ்சி!" என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடிவிட்டார். எனக்கு மறுபடியும் அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை. அப்படியே வெளியில் கூடத்தில் வந்து படுத்திருந்தேன். தூங்கிவிட்டேன் போலும்!".

நன்றி: "பாரதி - என் தந்தை" திருமதி சகுந்தலா பாரதி. வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்.


வினாக்கள்.

1. பாரதி ஒரு க்ஷத்திரியனைப் போல வீரமரணம் விரும்பினார் என்று கூறும் செய்தியை விளக்குக.
2. பாரதி நிவேதிதா தேவியைச் சந்தித்த நிகழ்ச்சி பற்றி சகுந்தலா கூறும் விவரங்கள் எவை?
3. பரத நாட்டியம் பற்றி பாரதியார் கொண்டிருந்த கருத்து என்ன?
4. நீலகண்டன் பற்றி சகுந்தலா பாரதி கூறும் செய்திகள் எவை?
5. அம்மாக்கண்ணுவுக்கு பாரதி குடும்பத்தின்பால் இருந்த அன்பு எப்படிப்பட்டது?
6. மகாகவியின் இறுதி நாளில் நடந்தவை பற்றி சகுந்தலாபாரதி கூறும் செய்திகளை எழுதுக:

3 comments:

 1. I needed to thank you for this great read!! I certainly loved
  every little bit of it. I have got you bookmarked
  to look at new stuff you post…

  Feel free to visit my website; http://dermaroseblog.com

  ReplyDelete
 2. Asking questions are genuinely good thing if you are not understanding anything fully, however this article presents fastidious understanding even.


  My blog - Nuvocleanse Diet

  ReplyDelete
 3. Hello there, I found your site by way of Google even as looking for a comparable subject, your web
  site got here up, it looks great. I have bookmarked
  it in my google bookmarks.
  Hello there, simply was aware of your blog thru Google, and located that
  it is truly informative. I'm gonna be careful for brussels. I'll be grateful when you continue
  this in future. Numerous people might be benefited
  out of your writing. Cheers!

  Also visit my web site Green coffee info

  ReplyDelete

You can send your comments