Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Tuesday, August 9, 2011

நமது கல்வி முறையில் ஒரு பெருங் குறை


நமது கல்வி முறையில் ஒரு பெருங் குறை


(மகாகவி பாரதியாரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு 1941ஆம் ஆண்டில் "கலைமகள்" ஆகஸ்ட் மாத இதழில் வெளியிடப்பட்டது. நன்றி: திரு ரா.அ.பத்மநாபன் "பாரதி புதையல்")

நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே பிரஸ்தாபிக்க விரும்புகின்றோம். நம் பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும், வீரர்களையும் பற்றிச் சரியான பயிற்சி அளிக்கப் படுவதில்லை. இந்த விஷயத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் எழுதினாலும் போதாது. எனினும் இங்கு அதை மிகவும் சுருக்கமாக விவரிப்பது பயனில்லாத விஷயமாக மாட்டாது.

நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப் படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வி யுறுகின்றார்கல். அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. ரெயில்வே, தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிராததனால் கம்பன் தெய்விகமான கவியென்பது பொய்யாய் விடுமா? பூமி சூரியனைச் சுற்றி வட்டமிடுகிற தென்ற உண்மையை ஒப்புக் கொள்ளாததனால் ஆதிசங்கரர் மஹா வேதாந்த ஞானி யென்பது தவறாகப் போய்விடுமா? நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா?

இதே விஷயத்தில் இங்கிலாந்தின் தலைமை எவ்வாறு இருக்கிற தென்பதைச் சிறிது ஆலோசிப்போம். கிறிஸ்துநாதர் மோட்டார் வண்டியையும், தந்தி விநோதங்களையும் அறியாதிருந்த போதிலும், அவர் நல்லொழுக்கம், தெய்விக ஞானம் என்பவற்றில் நிகரற்று விளங்கினா ரென்பது பாடசாலை மாணாக்கர்களுக்கு ஓயாமல் எடுத்து ஓதப்பட்டு வருகின்றது. எல்லாக் காலங்களிலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் உயர்ச்சி பெற்று விளங்கினவர்களின் சரித்திரங்களெல்லாம் எளிய, தெளிவான நடையிலே எழுதப்பட்டு மாணாக்கர்களுக்குக் காண்பித்து வரப்படுகின்றன. அவர்கள் சிற்சில விஷயங்களிலே அநாகரிகமும் அறிவுக் குறைவும் கொண்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் பிரஸ்தாபிப்பதே இல்லை. அவர்கல் இருந்த காலத்தின் மாதிரியென்பதாகக் கருதி அதை இலேசாக விட்டு விடுவதே மரபாகும்.

தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்.

நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, "உனக்குத் தெரிந்த விஷயங்கள்கூட வியாஸனுக்குத் தெரியாதே! பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்" என்று கூறினார். அவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும், மஹா ஞானிகளென்று கருதும் செயிண்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த உபாத்தியாயர் மறந்து விட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாக மாட்டாது? நமது முதலாவது கடமை யாதென்றால், நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்குத் தேசபக்தி, செளரியம் (இந்தச் சொல்லுக்கு வீரம் (Valour) என்று பொருள்), ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். சிவாஜியைப் பற்றி, ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குழறு படைகளும் உபநிஷத்துக்களைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டுவிடுவோமானால், நமது நாட்டிற்கு நாமே பரம சத்துருக்களாக முடிவோம்.

(இதுபோன்ற கருத்துக்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் போலிருக்கிறது)

Sunday, August 7, 2011

கட்டுரைப் போட்டி


கட்டுரைப் போட்டி



மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள்
கருத்தரங்கக் கட்டுரைப் போட்டி


பாரதி அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு:

மகாகவி பாரதியாரின் 90ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புவோர் கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து கருத்தரங்கில் படிக்க ஏற்பாடு செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா திருவையாற்றில் 2011 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும்.

விதிமுறைகள்:
1. கட்டுரை சுமார் பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடிக்கும்படி A/4 அளவுள்ள காகிதத்தில் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2. கட்டுரை பாரதி பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது தலைப்பு பற்றி மட்டும் இருக்க வேண்டும்.

3. போட்டியின் விதிமுறைகளுக்கு பாரதி இயக்கத்தின் முடிவே இறுதியானது.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

1. மின்னஞ்சல் முகவரி:- privarsh@gmail.com 

2. அஞ்சல் முகவரி: தலைவர், பாரதி இயக்கம், 19, வடக்கு வீதி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் 613204

Wednesday, August 3, 2011

அருணகிரியார்


அருணகிரிநாதர்

(திருப்புகழ் இயற்றிய அருணகிரியார் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரையொன்றை ரா.அ.பத்மநாபன் அவர்கள் "பாரதி புதையலில்" வெளியிட்டுள்ளார். அதனைப் படியுங்கள்.)

ஞானியும், பக்தரும் வரகவியுமாகிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இவருடைய 'திருப்புகழ்' என்ற நூல் சந்தக் கணக்குப் புகழ் பெற்றது. வடமொழிச் சொற்களை மிகுதியாக உடையது. மண், பெண், பொன் என்ற உலக இன்பங்களைப் பழிப்பதில் ஓய்வில்லாதது இது. "பெரிய திருப்புகழ்", "பஞ்சரத்னத் திருப்புகழ்" என்ற ஐந்து பாட்டுக்களும் தனியாக எழுதப்பட்டன. அவை வேறு நூல்.

இவரைப் பற்றிய பல கதைகளில் என்னென்ன பகுதி உண்மை என்பதை விசாரித்து நிச்சயிக்க இது சந்தர்ப்பமில்லை. "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறத்தல் அரிது" என்று தாயுமானவரால் வணங்கப்பட்ட மஹானாகிய பட்டினத்துப் பிள்ளைக்கு ஒரு தாசி வயிற்றில் இவர் பிறந்தவரென்ற விநோதமான கதையொன்று தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.

இவருடைய கவிதையின் கனிவைப் பார்க்க வேண்டுமானால் "பஞ்சரத்னத் திருப்புகழ்", "கந்தரலங்காரம்", "வேல் வகுப்பு" மூன்றையும் படித்தால் போதும். சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது. பஞ்சரத்னத் திருப்புகழின் முதற்பாட்டில் இவர் தமக்கு அதிசயமான தமிழ் பாடும் திறமை வேண்டுமென்று முருகனிடம் கேட்கிற பொழுதே தெய்வ அருள் தோன்றி இவருடைய கவிதை அதிசயமாய் விடுகிறது.


மலடி வயிற்றிலே குழந்தை பிறந்தால் அவளுக்கு எப்படி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமுண்டாகுமோ, அவ்விதமான மனக் கிளர்ச்சி தமது பாட்டைப் படிக்கும்போது தோன்ற வேண்டுமென்கிறார்.

"மலடி வயிற்று மகன் போலே - ஒரு
புதைய லெடுத்த தனம் போலே - ஒளிர்
வயிர மடித்த களம்போலே - இள
................................................. மானார்
வலிய அணைத்த சுகம் போலே - கதி
ரொளி விடு ரத்ந படம் போலே - பரி
மளமிகு புட்ப வனம் போலே - சுர
ரதிபோலே"

கங்கா நதி வானத்திலிருந்து பொழிவது போலே தமது கவிதையும் ஞானலோகத்திலிருந்து நாவின் வழியே பொழிய வேண்டுமென்று கேட்கிறார். புதையலெடுத்த செல்வத்தைக் கண்டு ஏழை மகிழ்ச்சியடைவது போலே தமது கவிதை படிக்கும் போது மகிழ்ச்சியுண்டாக வேண்டுமென்கிறார். வயிரக் களம் போலே கவிதை முழுதும் ஒளிவீச வேண்டுமாம். இளம் பெண் வலியத் தழுவினாற் போன்ற இன்பம் தனது சொற்களிலே தோன்ற வேண்டுமாம். புஷ வனம் போலே கவிதையாம்! கவிதை.

மேலும், தேவர்கள் திருப்பாற் கடலை அமுதத்தின் பொருட்டாகக் கடைந்தார்கள். அப்போது எதிர்பார்க்காமல் லக்ஷ்மிதேவி தோன்றினாள். அப்போது அவர்கள் எப்படி வியப்படைந்திருப்பார்களோ அப்படிப்பட்ட வியப்பு தம்முடைய பாட்டிலே பிறக்க வேண்டுமென்று கேட்கிறார். தமது பாட்டில் பொருள் தெளிந்து மேலாகத் தெரிய வேண்டுமாம். படிப்போர் சிரமப்பட்டு மூச்சுமுட்டிப் பொருள் கண்டு பிடித்து அந்தப் பொருள் அதிஸாமான்யமாய் வியப்பின்றியிருக்கும் கவிதையைச் சிலர் கவிதையென்று மதிக்கிறார்கள். அது தமக்கு வேண்டியதில்லை யென்றும் கரையருகில் அடுத்த நீர் போலே எளிதில் மொண்டு செல்லத் தக்கதாகத் தமது பாட்டின் பொருள் ததும்பித் தெளிந்து கிடக்க வேண்டு மென்றும் இவர் விரும்புகிறார்.

"அலைகடல் பெற்றிடு பெண் போலே - வரு
புலவர் தமக்கிரு கண்போலே - கரை
யருகி லடுத்த ஜலம் போலே - நின
தழகா மோர்

அமுது புஜித்த ரஸம் போலே - திரை
கடல் மடை விட்ட ஜலம் போலே - தினம்
அதிசய முத்தமிழ் அன்பால் ஒகநின்
அருள் தாராய்!"

அழகு வேண்டுவோர் தெய்வத்தை வேண்டுகின்றார்கள். தெய்வமே அழகின் எல்லை. தெய்வத்தின் அழகை அனுபவித்த ரஸம் தமது கவிதையிலே காணவேண்டு மென்கிறார். மேற் காட்டிய வரிகளிலே அந்த ரஸம் இருக்கத்தான் செய்கிறது.

பின் வரும் பாட்டைக் கேளுங்கள்:

"கலியை யலைத்துத் தொலைத்து விட்டொரு
பிணியை யடித்துத் துரத்தி விட்டெழு
கவலை நெருப்பைத் தணித்து விட்டற
நெறியாலே.

கடின கசப்புக் கினிப்பு விட்டென
துயிரில் அழுந்தத் துடைத்து விட்டோர்
கருணை மழைக்குட் குளிக்க விட்டினி
யலையாதே.

அலையு மனத்தைப் பிடித்து வைத்ததில்
உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின்
அழகு விளக்கைப் பதித்து வைத்த
கவியாதே.

அறிவை யுருட்டித் திரட்டி வைத்து நின்
அமுத குணத்தைத் துதிக்க வைத்தனை
அடிமை படைக்கக் கருத்து முற்றிலும்
நினையாயோ."

கலியுகத்தை ஒழித்து, நோயைத் துரத்தி, கவலைத் தீயைத் தணித்துக் கசப்பை இனிப்பாக்கி உயிரை அழுக்கறுத்த கருணை மழையிலே குளிக்கவிட்டு அலைகின்ற மனதை நிறுத்தி அதிலுள்ள இருட்டைத் தொலைக்கும் பொருட்டு முருகனுடைய அழகாகிய விளக்கை அதில் நாட்டி அந்த விளக்கு நீடித் தெரியும்படி அறிவைத் திரட்டி முருகனுடைய அமிர்த குணங்களைப் புகழும்படித் தம்மை வரகவியாக்கச் சொல்லுகிறார். அந்த நிலைமை இவர் பெற்று விட்டனரெறு அந்தப் பாட்டிலேயே தெரிகிறது. அதை ஸங்கீதம் சேர்த்துப் பாடிப் பாருங்கள்.

பின்வரும் வரிகளிலே அக்நி சக்தியாகிய வள்ளியம்மையைப் புகழ்கின்றார்.

"குலவரை விட்டுத் திசை களிற்றினை
உடலை மிதித்துக் கிழித்ததிற் சொரி
குருதி குடித்து"

வள்ளியம்மையின் திருமார்பு புகுந்ததென்கிறார். வீரம், ரெள்த்ரம் என்ற ரஸங்கள் இவருடைய கவிதையில் செறிந்து கிடக்கின்றன. அவை பின்னொரு வியாஸத்தில் விளக்கப்படும். இவருடைய கவிதையின் முக்கியப் பொருள் தெய்வ பக்தியாகையால் தெய்வத்தைப் பற்றி இவருடைய கொள்கை எப்படிப்பட்ட தென்பதை விளக்கும் பொருட்டாகச் சில திருஷ்டாந்தங்கள் காட்டுகிறேன்.

பரமாத்மா எப்படியுள்ளது?

"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொ ரானந்தத் தேன்."

(பூதரம் - மலை; அளி - கருணை)

"வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானென்ற சரீரியன்று (அ) சரீரியன்றே"

அப்படியானால் அது என்னது?

"சொல்லுகைக் கில்லையென் றெல்லாம்
இழந்து சும்மா இருக்கும் எல்லை"

இப்படிப்பட்ட பரம்பொருள் மனுஷ்ய ஜீவனைக் காப்பாற்றும் பொருட்டு, இஷ்ட தேவதா ரூபமாகத் தோன்றுகிறது. இவருக்கு அந்த இஷ்ட தேவதை தேவசேனாபதியாகி அசுரரை அழிக்கப் பரமசிவனுடைய நெற்றிக் கண்ணில் தோன்றிய அக்நி குமாரனாக வெளிப்பட்டது! தெய்வத்தின் அருள் பெறும் வழி சரணாகதி. அருள் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.

அதனாலே அருணகிரிநாதர் சொல்லுகிறார்:---

"மரண ப்ரமாதம் நமக்கில்லை" (ப்ரமாதம் - தவறு)

பின்வரும் பாட்டு எமனை நோக்கிச் சொல்லப்படுகிறது:--

"தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி யுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தோண்டாகிய என் அவிரோத ஞானச்சுடர் வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்து பார் சற்றென்கைக் கெட்டலே!"

விதியை வெல்லும் முறை சொல்லுகிறார்:--

"வேல் பட்டழிந்தன வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்த திங்கென் தலைமேலயன் கையெழுத்தே"

பயன் சொல்லுகிறார்:--

அஞ்ஞானமாகிய சிறை

"விடுதலைப் பட்டது விட்டது பாசவினை விலங்கே"

குருவிப் பாட்டு


குருவிப் பாட்டு


(பாரதி ஆய்வாளர் திரு ரா.அ.பத்மநாபன் "பாரதி புதையல்" எனும் நூலில் வெளியிட்டிருக்கிற கட்டுரை இது. இதன் முன்னுரைக் குறிப்பில் அவர் இந்தப் பாடல் குறித்த சில செய்திகளையும் சொல்லியிருக்கிறார். அவற்றையும் இந்தக் கட்டுரையில் கொடுத்து, பாரதியாரின் பாடலையும் கொடுத்திருக்கிறோம்.)

(இந்தப் பாட்டு புதுச்சேரியில் சரஸ்வதி விலாச சபை என்ற இளைஞர் சங்கத்தில் 1909இல் பாரதியார் பாடியது)

இனி திரு ரா.அ.பத்மநாபன் அவர்களின் குறிப்பு:--

"1909 ஜனவரி 1ஆம் தேதி, பாரதியாரும் சில இளைஞர்களும் சரஸ்வதி விலாச சபையில் கூடியிருந்த சமயம் சபை இருந்த அறையில் மேலே கூடுகட்டியிருந்த குருவிகள் கொம்மாளமிட்டு இரைச்சலுடன் குதூகலமாய் இங்குமங்கும் பறந்து சென்றன. பாரதியார் இதைக் குர்ந்து கவனித்தார். அதைக் கண்ட பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளை என்ற இளைஞர் குருவிகளின் இன்பகரமான வாழ்க்கை பற்றி ஒரு பாட்டுப் பாடும்படி பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் உடனே ஒரு பாட்டுப் பாடினார். அதை ராஜமாணிக்கம் பிள்ளை அங்கேயே எழுதிக் கொண்டார்.

பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளை வேறு யாருமல்லர். பாரதியை ஆதரித்த வள்ளல் பொன்னு. முருகேசம் பிள்ளையின் மைத்துனர் அவர். கொத்தவால் பதவி வகித்த உயர் குடும்பத்தினர்; கொத்தவால் பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளை என்பது அவரது முழுப்பெயர். இவர் பாரதிக்கு சமகாலத்தவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட சமவயதினரும்கூட.

ஆர்வமுள்ள பாரதி பக்தரான ராஜமாணிக்கம் பிள்ளை தாம் அறிய வந்த பாரதி பாடல்களை யெல்லாம் ஒரு கெட்டி அட்டை நோட்டில் பிரதி செய்து வைத்துக் கொண்டு வந்தார். 1957ஆம் ஆண்டு நான் (திரு ரா.அ.ப.) அவரைப் புதுவையில் சந்தித்த சமயம் இந்தப் பழுப்பேறிய, தோல் பைண்டு நோட்டையும், இதே போலப் பழுப்பேறிய மற்றொரு நோட்டையும் என்னிடம் காட்டினார். மற்றது சரஸ்வதி விலாச சபையின் நடவடிக்கைய்கள் பதிவேடு (மினிட்ஸ் புக்).

பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளையின் நோட்டுப் புத்தகத்தில் இருந்த பாரதி பாடல்கள், அந்த நோட்டு எழுதப்பட்ட சமயம், அச்சேறாதவை. பிற்காலத்தில்தான், அவை அச்சேறி பாரதி நூல்களில் இடம் பெற்றன. ஆனால் ஒரு பாட்டு நூல்களில் சேராமல் இருந்தத்தை அவர் சுட்டிக் காட்டினார். அதுதான் "குருவிப் பாட்டு". நான் அப்பொழுது அதைப் படித்துப் பார்த்து, அதன் சுவையை ரசித்தேன். இப்பாடல், 1946இல் "தமிழ் அன்பன்" என்ற புதுவை மாதமிருமுறைப் பத்திரிகையில் பாரதி பாடல் எனத் "தண்டமிழ்ப் பித்தன்" என்பவரால் வெளியிடப் பட்டுள்ளதையும் நான் அறியலானேன்.

1958இல் "பாரதி புதையல்--I" நூல் தயாரானபோது, இந்தப் பாடலும் அதில் இடம்பெற்றது. அந்த நூல் வெளியானதும், 'இந்தப் பாடல் பாரதியினுடைய பாடல்தானா' என்ற சந்தேகத்தை திரு பெரியசாமி தூரன் நண்பர்களிடம் தெரிவித்தார்; என்னிடம் நேரில் தெரிவிக்கவில்லை. இருப்பினும், பாரதிக்குத் தவறு நேரலாகாது என நான் உடனே எனக்கு இப்பாடலை உதவிய பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளைக்கு எழுதி விசாரித்தேன். அவர் உடனே பதில் போட்டதுமன்றி, பாரதியார் இப்பாட்டைப் பாடியபோது கூட அந்த அறையில் இருந்தவரான கோபால்சாமி ராஜா என்கிற நாராயணசாமியையும் என்னிடம் அனுப்பினார். இவருக்கு பரலி. சு.நெல்லையப்பர் உட்பட அனைவரையும் நன்கு தெரியும்; பாரதி, ஐயர் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகிய இளைஞர்களுள் இவரும் ஒருவர்.

இப்பாடலை பரலி சு.நெல்லையப்பர் பாடியதாக திரு பெரியசாமித் தூரன் கூறுகிறாரே என்று கேட்டபோது, கோபால்சாமி ராஜா, "நெல்லையப்பர் இதைத் தாம் பாடியதாகக் கூறினால், அவர் ஏதோ ஞாபகப் பிசகாய்ச் சொல்லுகிறார் என்று கூறுவேன்" என்றார். "நெல்லையப்பர் இந்தப் பாடல் தம்முடையது என்று சொல்வதாகத் தூரன் சொல்லுகிறாரே" என்று கேட்டபோது சிரித்தார்.

திரு தூரனிடம் இது பற்றி, சமீபத்தில், கடிதப் போக்கு கொண்டபோது, இப்பாடல் தம்முடையது என்று நெல்லையப்பர் தம்மிடம் கூறவில்லை என்றும், இது நெல்லையப்பருடையது என்பது தமது ஊகமே என்றும் தெரிவித்துள்ளார். இப்பாடல் "லோகோபகாரி" என்ற நெல்லையப்பரின் வாரப் பதிப்பிலும், "நெல்லைத் தென்றல்" என்ற நூலிலும் வந்துள்ளதாம்; நெல்லையப்பர் பாடல் என அவற்றில் குறித்துள்ளதாம்.

திரு பெரியசாமித் தூரன் தரும் ஆதாரங்கள் இவ்வளவுதான். இது நெல்லையப்பரது பாடல் என ஒரு முறை தவறாக வந்து விட்டால்கூட, அதே பிழை தொடர்வது இயல்பு. நெல்லையப்பர் அதை மறுத்துத் தடுத்தாலொழிய பிழை நிற்காது. நெல்லையப்பரோ, அவ்வாறு செய்யவில்லை; வலியப்போய் மறுதளித்துச் சர்ச்சை உண்டாக்கும் இயல்பினர் அல்லர் அவர்.

இவற்றைத் தவிர, எல்லா விஷயங்களையும் ஆர அமரச் சீர்தூக்கிப் பார்த்தபின், இது பாரதி பாட்டுதான் என்ற எனது கருத்தை மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்றே நான் கருதுகிறேன். திரு தூரனும் தமது 18-2-1982 கடிதத்தில், "பாரதியாரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருக்கும் தாங்கள் தீர விசாரியாமல் பாரதியார் பாடல்தான் என்று நிச்சயம் சொல்லியிருக்க மாட்டீர்கள்" என்று எனக்கு எழுதியுள்ளார். ஆகவே, இத்துடன் இந்தச் சர்ச்சை முற்றுப் பெறுவதாகக் கொள்ளலாம்.

திரு தூரன் மேலும் சொல்வது நமது கவனத்துக்குரியது. "நாம் பாரதியாருடைய கவிதைகள் எவையெல்லாம் என்று நிச்சயிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இந்த முயற்சியில் யார் வெற்றி அடைந்தார்கள் என்பது அல்ல பெரிது. பாரதியாருடைய இலக்கியப் படைப்பு ஒன்றுகூட விடாமல் சேர்க்க முடியுமானால் அதுவே பெரிய வெற்றியாகும்."

முடிவாக, பரலி சு. நெல்லையப்பரும் நம்முடைய ஆழ்ந்த மதிப்புக்குரியவரே என்பதை நாம் மறந்துவிடலாகாது. நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடலாகாது. சிறந்த பாரதி பக்தர், மிக்க சிரமங்களின் நடுவேயும் பாரதி நூல்களைத் துணிந்து வெளியிட்டவர். பாரதியின் மேன்மையை தீர்க்கதரிசனத்துடன் பறையறைவித்தவர் அவர் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பாரதியார் இலட்சிய நோக்குள்ளவர்; உலகாயதத் தேவைகளை உணர்ந்தவரேயாயினும், தாமாக உலகாயதத் தேவைகளுக்காக விட்டுக் கொடுக்கும் இயல்பினர் அல்லர். ஆனால் அன்பர்கள் வாக்குக்குக் கட்டுபட்டுப் பணியும் தன்மையும் அவருக்கு உண்டு."

(மேற்கண்டவாறு இந்தப் பாடலின் பின்னணியைக் கொடுத்த பிறகு அந்தப் பாடலையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் திரு ரா.அ.பத்மநாபன். அவருக்கு நன்றி செலுத்தி அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.) 

குருவிப் பாட்டு

அருவி போலக் கவி பொழிய - எங்கள்
அன்னை பாதம் பணிவேனே
குருவிப் பாட்டை யான்பாடி - அந்தக்
கோதைப் பாதம் அணிவேனே.

கேள்வி: சின்னஞ்சிறு குருவி - நீ
செய்கிற வேலை யென்ன?
வன்னக் குருவி - நீ
வாழும் முறை கூறாய்!

குருவி விடை: கேளடா மானிடவா - எம்மில்
கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமையில்லை - எல்லோரும்
வேந்தரெனத் திரிவோம்.

உணவுக்குக் கவலையில்லை - எங்கும்
உணவு கிடைக்குமடா
பணமும் காசுமில்லை - எங்கு
பார்க்கினும் உணவேயடா.

சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள்
ஜன்ம மெல்லாம் வீணாய்
மறிகள் இருப்பதுபோல் - பிறர்
வசந் தனில் உழல்வதில்லை.

காற்றும் ஒளியு மிகு - ஆ
காயமே எங்களுக்கு
ஏற்றதொரு வீடு - இதற்
கெல்லை யொன்றில்லையடா!

வையகம் எங்குமுளது - உயர்
வான பொருளெல்லாம்
ஐயமின் றெங்கள் பொருள் - இவையெம்
ஆகார மாகுமடா!

ஏழைகள் யாருமில்லை - செல்வர்
வறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை - என்றும்
மாண்புடன் வாழ்வமடா!

கள்ளம் கபடமில்லை - வெறும்
கர்வங்கள் சிறுமையில்லை
எள்ளற் குரிய குணம் - இவை
யாவும் உம் குலத்திலடா!

களவுகள் கொலைகளில்லை - பெருங்
காமுகர் சிறுமையில்லை
இளைத்தவர்க்கே வலியர் - துன்பம்
இழைத்துமே கொல்லவில்லை.

சின்னஞ்சிறு குடிலிலே - மிகச்
சீரழி வீடுகளில்
இன்னலில் வாழ்ந்திடுவீர் - இது
எங்களுக்கு இல்லையடா!

பூநிறை தருக்களிலும் - மிகப்
பொலிவுடைச் சோலையிலும்
தேனிறை மலர்களிலும் நாங்கள்
திரிந்து விளையாடுவோம்.

குளத்திலும் ஏரியிலும் - சிறு
குன்றிலும் மலையினிலும்
புலத்திலும் வீட்டினிலும் - எப்
பொழுதும் விளையாடுவோம்.

கட்டுகள் ஒன்றுமில்லை - பொய்க்
கறைகளும் ஒன்றுமில்லை.
திட்டுகள் தீதங்கள் - முதற்
சிறுமைகள் ஒன்றுமில்லை.

குடும்பக் கவலையில்லை - சிறு
கும்பித்துயரு மில்லை
இடும்பைகள் ஒன்றுமில்லை - எங்கட்
கின்பமே என்றுமடா!

துன்ப மென்றில்லையடா - ஒரு
துயரமும் இல்லையடா
இன்பமே எம் வாழ்க்கை - இதற்கு
ஏற்ற மொன்றில்லையடா.

காலையில் எழுந்திடுவோம் - பெருங்
கடவுளைப் பாடிடுவோம்
மாலையும் தொழுதிடுவோம் - எங்கள்
மகிழ்ச்சியில் ஆடிடுவோம்.

தானே தலைப்பட்டு - மிகச்
சஞ்சலப் படும் மனிதர்
நானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்
ஞானத்தைக் கைக்கொள்ளடா!

விடுதலையைப் பெறடா - நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை - உன்
கீழ்மைகள் உதறிடடா!

இன்பநிலை பெறடா - உன்
இன்னல்கள் ஒழிந்ததடா
துன்பம் இனியில்லை - பெருஞ்
சோதி துணையடா.

அன்பினைக் கைக்கொள்ளடா - இதை
அவனிக் கிங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை - உன்
துயர்ங்கள் ஒழிந்ததடா

சத்தியம் கைக்கொள்ளடா - இனிச்
சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா - வெறும்
வேஷங்கள் தள்ளிடடா

தர்மத்தைக் கைக்கொள்ளடா - இனிச்
சங்கடம் இல்லையடா
கர்மங்கள் ஒன்றுமில்லை - இதில் உன்
கருத்தினை நாட்டிடா

அச்சத்தை விட்டிடடா - நல்
ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்தினிமேலே நீ - என்றும்
இன்பமே பெறுவையடா.






Tuesday, August 2, 2011

யார் மனிதன்?


யார் மனிதன்?
(மகாகவி பாரதி எழுதியது. வெளியிட்டது "குமரி மலர்" நவம்பர் 1977)

நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயிருந்திருக்கிறோம் என்பது தெரியும்.

வஞ்சனையாலும் குத்திரத்தாலும் (நமது விளக்கம்:-- குத்திரம் என்ற சொல்லுக்கு வஞ்சகம் (deceit) கொடுமை (cruelty) இழிவு (meanness) ஏளனம் (sarcasm) என்றெல்லாம் பொருள் அகராதியில் காணப்படுகின்றன) சமயத்திற்கேற்பப் பலவிதமான கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே!

ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ் சோர்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி.

சுயாதீனத்திலே இச்சையில்லாமல், பிறருக்குப் பிரியமாக நடந்துகொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்.

கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர் திடீரென்று கோபமடைகிறவன் வேட்டை நாய்.

காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இதமாக நடக்க வேண்டுமென்கிற விருப்ப முடையவன் வெளவால்.

அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல், முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.

பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்திய போதிலும், அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை.

வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி.

கல்வி அறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண்.

தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.

ஒரு நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்) ஆந்தை.

ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்து பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதன் என்றும் தேவன் என்றும் சொல்வதற்குரியவனாவான்.

நம் குறிப்பு:--

எங்கோ படித்த நினைவிலிருந்து ஒரு நிகழ்ச்சி. திருவொற்றியூர் ஆலய வாயிலில் ஒரு துறவி உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரையெல்லாம் பார்த்து, "இதோ போகிறது கழுகு", "இதோ பார் ஒரு ஆடு" என்றெல்லாம் சொல்லிக் கொண்டே யிருந்தாராம். இதை கவனித்துக் கொண்டிருந்த சிலர் இவர் ஏன் போவோர் வருவோரைப் பார்த்து இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அந்த வழியே போவதைக் கண்டு, இதோ ஒரு மனிதன் போகிறான் என்றாராம். மேலே பாரதியார் எழுதிய கட்டுரையின் சாரத்தை ஒரு துறவி நேரடியாகக் கண்டு சொன்னதையும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆம்! நாம் யார் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொண்டு விடை தேட வேண்டியதுதான். சரிதானே!

நாகரிக வளர்ச்சியில் ஸ்த்ரீகளுக்குரிய ஸ்தானம்



கல்வி கற்ற பெண்களின் தொகை

(இந்தக் கட்டுரையை எழுத பாரதியைத் தூண்டியது 1901ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளியான ஒரு புள்ளிவிவரமாக இருந்திருக்க வேண்டும். அந்த செய்தி பாரதியை மிகவும் மனவேதனைக்கு ஆளாக்கியிருக்க வேண்டும். அதன் விளைவாக அவர் 1906இல் "சக்கரவர்த்தினி" பிப்ரவரி மாத இதழில் ஒரு குறிப்பை எழுதினார். அந்தக் குறிப்பைப் பார்த்துவிட்டுப் பின்னர் கட்டுரைக்குச் செல்வோம்.)

"சக்கரவர்த்தினி" பிப்ரவரி 1906இல் மகாகவி எழுதிய குறிப்பு:--

"சென்ற 1901ஆம் வருஷத்தில் பிரசுரிக்கப் பெற்ற சென்ஸஸிலிருந்து, மொத்தம் 10,000 ஸ்திரீகளுக்கு 94 ஸ்திரீகளே கல்விப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

இந்தப் பயிற்சியும் அதி சொற்பமானதாகவே இருக்குமென்று நாம் தெரிவிக்க வேண்டுவதில்லை. முதன் மூன்று பாடப் புஸ்தகங்களுக்கப்பால் படித்திருக்கும் மாதர்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களில் கூட கிறிஸ்தவப் பெண்கள் மிகவும் பெருந்தொகையாக இருப்பார்கள்.

தேசபக்தியுடைய ஒவ்வொருவனும் இந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு மனம் நடுங்குவானென நம்புகிறோம்.

கல்வியறிவில்லாமல் அறிவிருண்டு கிடக்கும் மாதரின் தொகை இவ்வளவு மிகுதிப்பட்டிருக்கும் தேசம் எவ்வாறு முற்படப் போகின்றது? எனினும் இங்ஙனம் பேரிருள் மீறிக்கிடக்கும் வானத்தில் நம்பிக்கைத் தாரகைகள் சிற்சில திகழ்வது பற்றி ஒருவாறு மன ஆறுதலடைகிறோம்."

*********
நாகரிக வளர்ச்சியில் ஸ்த்ரீகளுக்குரிய ஸ்தானம்

(மகாகவி பாரதி புதுவையிலிருந்து வெளியான "இந்தியா" பத்திரிகையில் வெளியிட்டக் கட்டுரை இது. மறு வெளியீடாக 1941 டிசம்பர் "கலைமகள்" இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையைத் தேடிக் கண்டுபிடித்துத் தனது "பாரதி புதையலில்" வெளியிட்டவர் திரு ரா.அ.பத்மநாபன். நமக்குக் கிடைத்த இந்தப் புதையலை அவருக்கு நன்றிகூறி இப்போது பார்ப்போம்)

"பாரதி புதையல்" நூலில் திரு ரா.அ.பத்மநாபன் எழுதியுள்ள இந்தக் கட்டுரைக்கான அறிமுகம். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று அனல் கக்கிய கவி பாரதி, நமது பெண்களுக்குக் கல்வி போதிக்க வேடும் என்று வாயளவில் சொல்லி நிறுத்தி விடுபவர்களை இக் கட்டுரையில் நையப் புடைத்திருக்கிறார். பெண்களே நாட்டின் எதிர்கால மேதைகளை உண்டாக்குகிறவர்கள்; அதற்கேற்றபடி அவர்களுக்குக் கல்வியளித்து பாரத நாட்டில் அர்ஜுனன் பொன்ற வீரர்களும், சங்கரர் போன்ற ஞானிகளும் தோன்றச் செய்ய வேண்டாமா என்று கேட்கிறார் கவிஞர்.

முடிவாக, தாம் பல்லாண்டுகளுக்கு முன் நிவேதிதா தேவியாரைச் சந்தித்த போது பெண்கள் முன்னேற்றம் பற்றி அவர் கூறிய மொழிகளையும் நினைவுறுத்துகிறார்." -- ரா.அ.ப.
******

"நாகரிகம் பெற்று வரும் ஜாதியாருக்கு முதல் அடையாளம் அவர்கள் ஸ்திரீ ஜனங்களை மதிப்புடன் நடத்துவதேயாகும். நாகரிகம் என்ற பதத்தை நாம் சாதாரண அர்த்தத்திலே உபயோகிக்கவில்லை. வெறும் சில யந்திரங்கள் அதிகப்பட்டு மோட்டார் வண்டிகள் ஓடுவதனால் மட்டுமே ஒரு காலம் நாகரிக காலமாய் விடமாட்டாது. ஜனங்களுக்குள்ளே பெரும்பான்மையாக இகபர ஞானமும், சற்குணங்களும், பரஸ்பர சகாய சிந்தையும், அதனால் ஏற்படும் செள்கரியங்களும் மிகுதியுறுமானால் அதையே நாகரிக நிலைமையென்று சொல்வோம்.

இப்போது நமது பாரத நாடு உண்மையான நாகரிகத்திலே முதிர்ச்சி பெற வேண்டுமானால் அதற்கு எத்தனையோ சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை யெல்லாம் பற்றி இங்கே விவரிக்கத் தொடங்கவில்லை. இங்கே முக்கியமாகப் பேச வந்த விஷயமெல்லாம் நமது நாகரிக முதிர்ச்சியிலே ஸ்திரீகளுக்கு எந்த ஸ்தானம் கொடுக்க வேண்டுமென்பதேயாம்.

ஸ்திரீகளுக்குக் கல்வியும் அறிவும் ஊட்டித் தீரவேண்டுமென்ற ஸர்வஜன சம்மதமான பழங் கருத்தை நாம் இங்கே வற்புறுத்தவில்லை. ஆனால் நம்மவர்களிலே அக்கருத்து ஸர்வ சாதாரணமாகப் போய்விட்டதென்ற போதிலும், அதை நாம் நடத்தைக்குக் கொண்டு வராதிருக்கும் பெருங்குற்றத்தையே இங்கே கண்டிக்க விரும்புகிறோம். கவர்ன்மெண்ட் பள்ளிக்கூடங்களிலும், வெள்ளைப் பாதிரிகளின் பள்ளிக்கூடங்களிலும் நம் கன்னியர்களிலே ஒரு சிறு பகுதியாருக்குக் கொடுக்கப்படும் பயனற்ற கல்வியானது அறியாமையைக் காட்டிலும் நூறு மடங்கு கொடியதாகும். நம்மவர்கள் தாமாகவே இவ்விஷயத்தில் பிரயத்தனங்கள் செய்து ஊருக்கு ஊர் பெண் பாடசாலைகள் ஏற்படுத்தி அவற்றிலேயே முற்றும் சுதேசி முறைமையைத் தழுவிய கல்வி கற்பிக்கச் செய்தல் வேண்டும்.

ஆண்கள் குணமிழந்து போய்விட்டாலும் பிறகு ஜாதி கடைத்தேறுவதற்கு ஒரு விதமான நம்பிக்கை மிஞ்சக்கூடும். பெண்கள் குணமிழந்து போய்விட்டால் பிறகு தேசம் அதோகதி அடைந்து போய்விடும். ஆகையால் பெண்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானது மிகுந்த தீர்க்காலோசனையின் பேரில் ஏற்பட வேண்டும். இவ்விஷயத்தில் தேச முழுமைக்கும் இப்போதே பொது விதிகள் அமைப்பதைக் காட்டிலும் தாய் தந்தையர் அவர் அவர்களுக்குத் தெரிந்த மட்டிலும் நன்கு ஆலோசித்து அதற்கு இசைந்த வண்ணம் அந்தந்த ஊரில் ஒருவிதமான கல்வி முறையை அனுசரித்து அது எவ்வாறு நடந்து வருகிறதென்பதைக் கவனித்துப் பிறகு பொது விதிகளைப் பற்றி நினைக்கத் தொடங்குதல் பொருந்தும்.

மாதர்களுக்குக் கல்வி வேண்டுமென்று ஒவ்வொருவரும் மனத்தில் நினைத்துக் கொண்டும் வாயினால் சொல்லிக் கொண்டும் இருந்து விடுவது பெரும் பேதைமையாகும். 'அறிவிலே உணர்ந்த பிறகு அவ்வாறு உணரப்பட்ட விஷயத்தைச் செய்கையிலே நடத்தாமல் இருப்பவன் வெறும் குழந்தைகளுக்கு நிகராவான்' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்கிறார். மாதர்கள் உதவியின்றி ஒரு தேசமும் எவ்விதமான அபிவிருத்தியும் அடைய முடியாது. ஈசுவரனுக்கே தேவிதான் சக்தி என்று மதவாதிகள் சொல்லும் உண்மைப் பொருளை மறந்துவிடக் கூடாது. சக்தியாகிய தேவியில்லாத விஷயத்தில் புருஷன் ஒன்றும் செய்ய முடியாதென்பது மத வியவகாரங்களில் மாத்திரமன்று, எல்லா வியவகாரங்களிலும் உண்மையேயாகும். பாரத நாடு இப்போது அடைந்திருக்கும் இழிவு நிலையிலிருந்து உன்னதம் பெற வேண்டுமானால் ஆண்கள் மட்டுமேயல்லாமல் பெண்களும் தேசபக்தியிலே சிறந்தவர்களாக வேண்டும். பாரதத்திலே குந்தி தேவி, சத்தியபாமை முதலிய ஸ்த்ரீ ரத்தினங்களின் சரித்திரங்களை நம் பெண்கள் அறியும் சக்தி வேண்டும். புராதன ராஜபுத்திர ஸ்த்ரீகளின் எண்ணிலா வீரச் சரித்திரங்கள் கற்பிக்கப்படாத பாடசாலைக்குப் பெண்கள் போகலாகாது. அர்ஜுனனைப் போன்ற வீரர்களையும், பாஸ்கராச்சாரியார், சங்கரர், ராமானுஜர், காளிதாசர் முதலியவர்களைப் போன்ற பலவித ஞானவான்களையும் பெற்று வளர்க்க வேண்டுமென்ற ஆசை நம் பெண்களின் நெஞ்சிலே குடியேற வேண்டும்.

இது நிற்க. தேசத்தின் எந்தவிதமான பெருங் காரியமும் கைகூடி வர வேண்டுமானால் அதற்கு ஸ்த்ரீகளின் மனோபலம் இல்லாமல் தீராது. இதனை எழுதுபவரிடம் ஸ்ரீமதி சகோதரி நிவேதிதா தேவி சில கற்பனைகளைக் கூறிவருமிடையே அந்த அம்மை, "ஐயா, மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்து கூட முயல்வது வீண் முயற்சி. அது ஒரு போதும் நடக்க மாட்டாது" என்றார்.

இந்த வசனத்தை ஒவ்வொரு தேசாபிமானியும் மனத்திலே பதித்துக் கொள்ளும்படி விரும்புகிறோம்."


STATE-WISE PERCENTAGE OF FEMALE LITERACY IN THE COUNTRY AS PER 2001 CENSUS
Sl.No.Name of the StatePercentage of
Female Literacy
1.Andhra Pradesh51.17
2.Arunachal Pradesh44.24
3.Assam56.03
4.Bihar33.57
5.Chattisgarh52.40
6.Delhi75.00
7.Goa75.51
8.Gujarat58.60
9.Haryana56.31
10.Himachal Pradesh68.08
11.Jammu & Kashmir41.82
12.Jharkhand39.38
13.Karnataka57.45
14.Kerala87.86
15.Madhya Pradesh50.28
16.Maharashtra67.51
17.Manipur59.70
18.Meghlaya60.41
19.Mizoram86.13
20.Nagaland61.92
21.Orissa50.97
22.Punjab63.55
23.Rajasthan44.34
24.Sikkim61.46
25.Tamil Nadu64.55
26.Tripura65.41
27.Uttaranchal60.26
28.Uttar Pradesh42.98
29.West Bengal60.22
Union Territories
1.Andaman & Nicobar Islands75.29
2.Chandigarh76.65
3.Dadra & Nagar Haveli42.99
4.Daman & Diu70.37
5.Lakshadweep81.56
6.Pondicherry74.16
All India
54.16

Monday, August 1, 2011


வீரத் தாய்மார்கள்
மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரை

'தாயைப் போல பிள்ளை'.

ஓர் தேசத்தார் ஞானமும், செல்வமும், வீரமும், புகழும் கொண்டு உன்னத நிலையிலே இருக்கும் போது, அவர்களுக்குள் ஆண் மக்களிடம் மட்டுமேயல்லாது பெண்பாலரிடத்திலும் தர்மாபிமானமும், வீரத்தன்மையும் சிறந்து விளங்கும்.

ராஜபுத்திரர்கள் உன்னத நிலையிலே இருந்த காலத்தில் ராஜபுத்திர ஸ்திரீகள் காட்டிய வீர குணங்கள் இன்றுகூட உலகத்தாரெல்லாம் கேட்டு மெய் சிலிர்க்கும்படியாக இருக்கின்றன.

யுத்த காலங்களில் ராஜபுத்திர ஸ்திரீகள் தமது உயிரைப் புல்லினும் சிறிதாக மதித்து, மானத்திற்காகவும், தர்மத்திற்காகவும், கற்பிற்காகவும் செய்திருக்கும் வீரச்செயல்கள் எண்ணி முடியாதன. 'டாட்' என்ற ஆசிரியர் எழுதியிருக்கும் ராஜஸ்தான் சரித்திரத்தை வாசித்தவர்களுக்கு நமது பாரத நாட்டு க்ஷத்திரிய மாதர்களுக்கு நிகரான 'வீரத் தாய்மார்' உலகத்தில் வேறெங்குமிருந்ததில்லை என்பது நன்கு விளங்கும். நிற்க,

நமது தமிழ் நாட்டிலேயும் அத்தகைய பெருங்குடி (மூதில்) மாதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைச் "செந்தமிழ்"ப் பத்திரிகாசிரியர் இம்மாதம் எழுதியிருக்கும் ஓர் திவ்யமான உபந்நியாசத்திலே பல அரிய திருஷ்டாந்தங்களால் விளக்கியிருக்கிறார். அவரது உபந்நியாசத்தைச் சென்ற வாரத்தில் ஒரு பகுதியும் இவ்வாரத்தில் ஒரு பகுதியுமாக நமது பத்திரிகையிலே பிரசுரம் செய்திருக்கிறோம். இன்னும் சிறிது மிஞ்சியிருக்கின்றது. அதனை அடுத்த வாரத்தில் பிரசுரம் செய்வோம்.

தமிழ்நாட்டுத் தாய்மாரைப் பற்றிச் "செந்தமிழ்" ஆசிரியர் எழுதியிருக்கும் உபந்நியாசத்தைப் படித்தபோது எமக்குண்டான பெரு மகிழ்ச்சிக்கும் பெருந்துயரத்திற்கும் அளவில்லை. 1800 வருஷங்களுக்கு முன்பாகவே இத்தனை பெருங்குணங்கள் வாய்க்கப் பெற்றிருந்த நாகரீக நாட்டிலே, இவ்வளவு உயர்வு கொண்டிருந்த பெரியோரின் சந்ததியிலே, இவர்கள் நடையிலும் செய்கைகளிலும் நிகரில்லாது கையாண்டு வந்த தமிழ்ப் பாஷையைப் பேசும் பெருங்குடியில் நாம் பிறந்திருக்கிறொ மென்பது அறிய மகிழ்ச்சி உண்டாகிறது.

ஆனால், பிரம்ம சந்ததியிலே இராவணன் பிறந்தது போல, இத்தனை பெரிய நாகரீகமும் சிறப்பும் அறவலிமையும் பொருந்திய மேலோரின் சந்ததியிலே குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பாகத் தோன்றி நாம் இக்காலத்திலே இருக்கும் நிலைமையெல்லாம் பார்க்கும்போது மனம் புண்ணாய் உலைகின்றது.

அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத் தன்மையையும், இந்நாளிலே ஆண்மக்கள் காட்டும் பேடித் தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, "ஆ!" நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இத்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக் காட்டிலும் ஒரேயடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாயிருக்குமே என்று மனம் குமுறுகின்றது.

நமது பத்திரிகை படிக்கும் நேயர்களனைவரும் நாம் "செந்தமிழ்"ப் பத்திரிகையிலிருந்து பெயர்த்துப் பதித்திருக்கும் உபந்யாசத்தைத் தாம் பல முறை படிப்பது மட்டுமேயன்றித் தமது சுற்றத்தாருக்கும், மித்திரருக்கும் தமது வீட்டு மாதர்களுக்கும் திரும்பத் திரும்பப் படித்துக் காட்டுதல் நலமென்று கருதுகிறோம்.

"மகனைப் பெற்று விடுதல் எமது கடமை. அவனைத் தக்கோன் ஆக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்கு வேல் செய்து கொடுத்தல் இரும்புக் கொல்லனது கடமை. என் மகனது கடமை எனிலோ யுத்தத்திலே சென்று யானையைக் கொன்று மீளுதல் ஆகும்" என்று ஓர் தமிழ்த்தாய் பாடியிருக்கின்றாள்.

இனி மற்றொரு தாய், "எனது மகன் யுத்த களத்திலே போர் வீரர் வாளினிலே கழுத்தறுப்புண்டு மடிவானானால், அதுதான் எனக்கு 'மேலான தர்மம்; அதுவே ஹத்கர்மம்" என்று பாடினாள். பின்னுமொரு பெண் புலவர், தமது சுற்றத்திலுள்ள ஓர் அம்மை தன் மகன் போரிலே யானையை வீழ்த்திக் கொன்று தானும் இறந்தான் என்று கேள்வியுற்று, தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்த சிறப்பைக் கண்டு வியந்து பாடல் சொல்லியிருக்கின்றார்.

அப்பால், ஒரு தமிழ்த்தாய் தனது தந்தையும் கணவனும் போரிலே சிறிது காலத்திற்கு முன்பு இறந்து போயிருக்கவும், யுத்தப் பறையின் ஒலி கேட்டவுடனே சந்தோஷம் மிகுந்து, தன் மகனுக்கு நல்ல ஆடையுடுத்தி, அவன் குடுமிக்கு எண்ணெயிட்டுச் சீவி முடித்து அவன் கையிலே வேலெடுத்துக் கொடுத்துத் தனது ஒரே பிள்ளையைப் போர்க்களத்திற்குப் போ என்று அனுப்பிய பெருமையை ஓர் பெண் புலவர் வியந்திருக்கின்றார்.

பின்னுமொரு தாய், தன் மகன் யுத்த களத்திலே வலியிழந்து புறங்கொடுத்து ஓடியது உண்மையாயின், 'அவன் பால் உண்டு வளர்ந்த தற்குக் காரணமாயிருந்த என் முலைகளை அறுத்திடுவேன்' என்று வாளைக் கையிலே கொண்டு போர்க்களத்திற்குப் போய், அங்கே வீழ்ந்து கிடக்கும் பிணங்களை வாளினால் புரட்டித் தேடுகையிலே, அப் பிணங்களினிடையில் தன் மகன் உடலும் இரண்டு துண்டமாகக் கிடந்ததைப் பார்த்து அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சியடைந்தாள் என்று ஓர் பாடல் இருக்கிறது.

இன்னும், அதுபோல் எத்தனையோ ஆச்சரியமான திருஷ்டாந்தங்கள் காட்டப் பட்டிருக்கின்றன. இடம் போதாமைபற்றி அவற்றை இங்கே எடுத்துக்கூற முடியவில்லை.

இவ்வளவு மேலான வீரப் பயிற்சி இருந்த நாடு இப்போது என்ன நிலைமைக்கு வந்துவிட்டது!

ஆனால், நமக்கு ஒரு ஆறுதல் இருக்கின்றது. அதுவும் வீணான ஆறுதலன்று, உண்மை பற்றிய ஆறுதல்.

அந்த ஆறுதல் யாதெனில், நமது ஜாதியை இடையே பற்றிய சிறுமைநோய் விரைவிலே நீங்கிவிடும் என்பதற்கு ஆயிரக்கணக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பரிசுத்தமான நெஞ்சமும் தெய்வ பக்தியும் தன்னல மறுப்பும் உடைய பல மேலோர்களை இப்போது நாட்டிலே காண்கிறோம். இது வீணாக மாட்டாது. நம்மைப் பற்றியிருந்த புன்னோய் சீக்கிரத்திலே மாறிப்போய்விடும். வானத்திலே துந்துபியொலி அதிரக் கேட்கின்றோம். மகாபாரதம் (Great India) பிறந்துவிட்டது. வந்தேமாதரம்!

Saturday, July 30, 2011

கட்டுரைப் போட்டி



மகாகவி பாரதியாரின் 90ஆவது நினைவு நாள்
கருத்தரங்கக் கட்டுரைப் போட்டி


பாரதி அன்பர்களுக்கு ஓர் அறிவிப்பு:

மகாகவி பாரதியாரின் 90ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருவையாறு பாரதி இயக்கம் ஒரு கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கருத்தரங்கத்தில் பங்குபெற விரும்புவோர் கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாகவோ, அஞ்சல் வழியிலோ கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.அவற்றிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து கருத்தரங்கில் படிக்க ஏற்பாடு செய்கிறோம். தேர்ந்தெடுக்கப்படாத மற்ற கட்டுரையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விழா திருவையாற்றில் 2011 செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும்.

விதிமுறைகள்:
1. கட்டுரை சுமார் பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடிக்கும்படி A/4 அளவுள்ள காகிதத்தில் 5 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

2. கட்டுரை பாரதி பற்றியோ, அவரது படைப்புகள் பற்றியோ ஏதாவதொரு நிகழ்ச்சி அல்லது தலைப்பு பற்றி மட்டும் இருக்க வேண்டும்.

3. போட்டியின் விதிமுறைகளுக்கு பாரதி இயக்கத்தின் முடிவே இறுதியானது.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

1. மின்னஞ்சல் முகவரி:- privarsh@gmail.com 

2. அஞ்சல் முகவரி: தலைவர், பாரதி இயக்கம், 19, வடக்கு வீதி, திருவையாறு
தஞ்சை மாவட்டம் 613204



இன்று தேவர்களை அழைக்கிறோம்.


கலைகள்

(மகாகவி பாரதியார் "கலைகள்" எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கின்றோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனைகள் முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். அங்கு சொல்லப்பட்ட மந்திரங்கள் என்ன சொல்கின்றன. வேதங்களைக் கற்றவர்கள் சொல்லலாம். பாமரனுக்குத் தெரியாது. பரவாயில்லை. இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களைமூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கினன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் 'ரிக் வேதத்தில்' பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்பதும், 'ரிக் வேதம்" பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்பதும் பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. ரிக் வேதம் பயின்ற அன்பர்கள்தான் சொல்ல வேண்டும். அன்பர்கள் பாரதியின் இந்தக் கட்டுரையைப் படித்தபின் அது குறித்துத் தங்கள் கருத்துக்களை எழுதுங்கள்)

இன்று ......................
(ஒரு ரிஷி குமாரன் எழுதியது)

இன்று தேவர்களை அழைக்கிறோம்.

இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தைக் காட்டும் பொருட்டாக.

அறிவின்மை, அசுத்தம், சிறுமை, நோய், வறுமை, கொடுமை, பிரிவு, அநீதி, பொய் என்ற ராக்ஷஸக் கூட்டங்களை அழித்து மனித ஜாதிக்கு விடுதலை தரும் பொருட்டாக.

கல்வி, அறிவு, தூய்மை, பெருமை, இன்பம், செல்வம், நேர்மை, ஒற்றுமை, நீதி, உண்மை என்ற ஒளிகளெல்லாம் வெற்றியடையும் பொருட்டாக.

இன்று தேவர்களை அழைக்கிறோம். எம்மை ரிஷிகளாகச் செய்து தரும் பொருட்டு எமது குற்றங்களையெல்லாம் நீக்கிக் கோணல்களை நிமிர்த்தி, எமக்கு அமர இன்பத்தைத் தரும் பொருட்டு.

எமதறிவையே தேனாக்கிக் கொடுக்கிறோம். இந்தத் தேனை தேவர்கள் உண்டு களிபெறுக. எமது மந்திரங்கள் தேவருடைய திருவடியைப் பற்றுக. அவர்களை இந்த வேள்வியிலே கொண்டு தருக. எமதுடலையும், உயிரையும், அறிவையும் அவர்களுக்குக் கோயிலாக்குகிறோம். எமதுடைமைகள் எல்லாம் அவர்களைச் சார்ந்தன; எமது மனைவி மக்கள் அவர்களுக்குச் சேவகர்; எமது வீடு, வாசல், மாடு, கழனியெல்லாம் அவர்களுக்குரியன. எமது தொழில் அவர்களுடையது. எமது நினைப்புக்களெல்லாம் ஆசைகளெல்லாம் விருப்பங்கள் எல்லாம், இன்பங்கள் எல்லாம் தேவர் முன்பு வைக்கிறோம்; அவை அவர்கள் உணவாகுக.

வானவரே! வந்து சுவை கொள்ளுவீர்.

அன்பே வா, மித்ரா; உன்னைப் பணிகின்றோம். உன்னாலே காக்கப்பட்டவன் அழிவதில்லை; தோல்வி பெறுவதில்லை. இவனை இங்கிருந்தேனும், தொலைவில் இருந்தேனும் தீங்கு வந்து தீண்டுவதில்லை என்று எமது முன்னோர் கண்டனர். நாமும் அங்ஙனமே காண்கிறோம்.

அனைத்தையும் ஆழ்ந்து நிற்கும் அநந்த நிலையே, வருக, வருணா! எல்லையற்ற நினதாண்மை, இந்த எமதறிவாகிய யாகஸ்தலத்திலே நிறுத்தி, எமது கட்டுகளை எல்லாம் வெட்டிவிடு வலிமையே. நினது வரவு நல்வரவு. உன்னை மிகவும் வேண்டுகிறோம். அர்யமந், எமக்கு வலிமை தருதல் வேண்டும்.

இன்பமே வா! வா! வா! பகதேவா, எப்போதும் எம்மோடு கூடி வாழ்ந்திரு. உனது முகம் மிகவும் அழகுடையது. அதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். எமதுள்ளம் நிறைந்திருக்கும். உனது உதயதேவி முன்னமே வந்துவிட்டாள். இளையவள், செந்நிறமுடையவள், என்றும் விழிப்பவள். இவளைத் தீ கொணர்ந்து கொடுத்தான். தீ எம்மிடத்தே வளர்கிறான். தீ வலியவன். அவன் உண்மையையுடைய கடவுள். உள்ளத்தை அவனுக்கு விறகாகக் கொடுத்தோம். அதில் என்றும் எரிவான்; அவிந்து போக மாட்டான். நீ எமது தலைவன். அவனை முப்போதும் சரணமடைகின்றோம்.

இன்று இப்போது தேவர்களை அழைக்கிறோம். வா சூர்யா, தெய்வ ஒளியே, ஞானச் சுடரே, அமிர்த ஊற்றே, வலிமையின் தந்தையே, வானவர் வழியே, அநந்தவிரிவே, ஆக்கமே, புகழே, வெற்றியே, எமதரசே, நின்வரவு நன்று மிகவும் நன்று.

மருத்துக்களே, புயற் காற்றுக்களே, மனதின் அசைவுகளே, மதிகளே, ஒளிமிகுந்தீர், வலிமையுடையீர், வானத்தையும் மண்ணையும் வலிமைக் களியிலே குமுறும்படி செய்வீர். மேகங்களைப் புடைத்து நல்ல மின்னல் காட்டுவீர். மருத்துக்களே, வாரீர். மனதிலே நேரும் சோர்வுகளை யெல்லாம் உங்கள் வீரத்தினாலே தீர்த்து விடுக. நீங்கள் வாயு மண்டலத்தைப் புனிதப் படுத்துகிறீர்கள். வானத்திலிருந்து மழை பொழியச் செய்கிறீர்கள். வருக.

இன்று தேவர்களை அழைக்கின்றோம்.

காற்றே வா! இங்கேயே இரு எப்போதும்; திரும்பியே போகாதே. நீ உயிர், உன்னை வரிக்கின்றோம். அசுவினி தேவர் உயிர்ப்பரிகளிலே ஏறி வருகின்றனர். அவர் நோய்களைத் தீர்ப்போர். அவரை எம்முள்ளே பதியும்படி செய்கின்றோம்.
**************

தியானங்களும் மந்திரங்களும்
(விடுதலைக்கு வழி)

என் அறிவில் தெய்வத் தன்மை காணப்படுகிறது. நான் ஒரு தேவனைப் போலவே சிந்தனை செய்ய வல்லேன். இனி என் செய்கைகளிலும் தெய்வத்தன்மை விளங்குதற்குரிய வழி செய்ய வேண்டும்.

நான் இவ்வுலகத்துப் பொருள்களின் மீது பேரவாக் கொள்வதில்லை. நான் இவ்வுலகத்தின் நாதன். இதற்கு நான் அடிமையில்லை. என் கையில் இயற்கை கொணர்ந்து தரும் பொருள்களைக் கொண்டு நான் திருப்தி எய்தக் கடவேன்.

நான் வேண்டிக்கரையத் தக்கது யாது? அதிகாரத்தை வேண்டி வருந்துவேனா? ருஷ்ய ஜார் சக்கரவர்த்தி வரம்பற்ற அதிகாரம் படைத்திருந்தான். அதினின்றும் என்ன பயனைக் கண்டான்? அன்றி, நான் செல்வத்தை வேண்டி அழுங்குவேனா? செல்வம் என்ன பயன் தரும்? நோவின்றிக் காக்குமோ? அன்று; நோவுகளை விளைக்கும்; பகையின்றிக் காக்குமோ? அன்று; பகையைப் பெருக்கும்; கவலைகளும் அச்சங்களும் இன்றிக் காக்குமோ? அன்று; அவற்றை மிகுதிப்படுத்தும்; மரணமின்றிக் காக்குமோ? காக்காது. எனில், அதனை வேண்டு அழுங்குதல் பெரும் பேதமையன்றோ?

இரப்போன் தன்னைத்தானே விலைப்படுத்திக் கொள்கிறான். பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்று கூடப் பிறரிடம் யாசித்தல் பெரிய அவமானம் என்று திருவள்ளுவர் சொல்லுகிறார். நான் எவரிடத்தும் ஒரு பொருள் வேண்டுமென்று கேட்க மாட்டேன். கடவுள் தன் அருளால் கொடுப்பவற்றை ஏற்று மகிழ்வேன்.

ஆரோக்கியம் ஸம்பந்தமான மந்திரங்கள்

நான் நோயற்றேன். நால் வலிமையுடையேன். என் உடம்பின் உறுப்புக்கள் என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன. அவை திறனுடையன; இலாவகமுடையன; இன்பந் தரித்தன. மிக எளிதில் இயங்குவன; மஹாசக்தியின் வீடுகளாயின. என் உடம்பில் நோயின் வேகமே கிடையாது. நான் நோய்களையெல்லாம் புறத்தே வீசியெறிந்து விட்டேன். நான் ஸுகம்; நானே பலம்; நான் சக்தி. பொய் பலஹீனமுடையது; நான் ஸத்யம்; நான் கடவுள்; நான் ஆற்றல்; நான் வலிமையின்று நோயுறல் யாங்ஙன மியலும்?

ஆஹா! வலிமையும், நோயின்மையும், ஆற்றலுமிருப்பதால் எனக்கு விளையுமின்பத்தை என்னென்றுரைப்பேன்? தேவத் தன்மையால் நான் எய்தும் ஆனந்தத்தை ஏதென்று சொல்வேன்? நான் தேவன்; நான் தேவன்; நான் தேவன்.

என் தலை, என் விழிகள், எனது நாசி, என் வாய், என் செவிகள், என் கழுத்து, மார்பு, வயிறு, கைகள், இடை கால்கள் -- இவையெல்லாம் முற்றிலும் ஆரோக்கியமுடையன. நோயற்றன; நோயுறத் தகாதன; எக்காலும் நோயுற மாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது. என் மனமும், ஹ்ருதயமும் எவ்வித நோய்ப் பூச்சிகளாலும் தாக்கப்படாதன.

நோய்களையும், அசுத்தங்களையும் நான் அறவே எறிந்துவிட்டேன். அவை மீண்டும் வராதபடி அவற்றை சூன்யத்திற்குள்ளே வீழ்த்தி விட்டேன்.

நானே ஆரோக்கியக்; நான் தேவன்!

அமரத் தன்மையைக் குறித்த மந்திரங்கள்

நான் அமரன்! எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிர் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தெரிந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.

நான் கடவுள்! ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்து கொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள் நிரம்பியிருக்கிறான். அதாவது, என்னுள் யான் நிரம்பிக் கிடக்கின்றேன். என் நாடிகளில் அமிர்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீர்யம் பொங்கிக் கொண்டிருக்கிறது.

நான் எப்போதும் வீர்யமுடையேன்; ஜாக்கிரதையுடையேன்; எப்பொதும் தொழில் செய்வேன்; எப்போதும் காதல் செய்வேன்; அதனால் சாதல் இல்லேன்.

நான் இத்தனை ஆனந்தத்துள் மூழ்கிக் கிடக்குமாறென்னே? நான் தேவனாதலால்.

நான் தீராத இளமை சார்ந்தேன். என்றும், எப்போதும், நித்யமான கால முழுமையிலும் தீராத மாறாத இளமையுடையேன். மூட மனிதர் தீர்க்காயுள் வேண்டுகின்றனர், நான் அதனை வேண்டேன். ஏனென்றால், இவர்களெய்தும் நீண்ட வயது துன்பமாகிறதேயன்றி வேறில்லை. நான் ஸதாகாலம் துன்பமின்றி வாழும் வாழ்க்கையை விரும்புகிறேன். அதனை நான் எய்தி விட்டேன். தீராத கவலை பொதிந்த சாதாரண மனித வாழ்க்கை சற்று நீடிப்பினால் என்ன பயன் தரும்? நான் கவலையை ஒழித்தேன். ஆதலால் எப்போதும் வாழ்வேன். எப்போதும் வாழ்வேன். ஆதலால் கவலையை விட்டேன். கவலையாலும் பயத்தாலும் மரணமுண்டாகிறது. கவலையும் பயமும் பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். ஆதலால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.