கல்வி கற்ற பெண்களின் தொகை
(இந்தக் கட்டுரையை எழுத பாரதியைத் தூண்டியது 1901ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளியான ஒரு புள்ளிவிவரமாக இருந்திருக்க வேண்டும். அந்த செய்தி பாரதியை மிகவும் மனவேதனைக்கு ஆளாக்கியிருக்க வேண்டும். அதன் விளைவாக அவர் 1906இல் "சக்கரவர்த்தினி" பிப்ரவரி மாத இதழில் ஒரு குறிப்பை எழுதினார். அந்தக் குறிப்பைப் பார்த்துவிட்டுப் பின்னர் கட்டுரைக்குச் செல்வோம்.)
"சக்கரவர்த்தினி" பிப்ரவரி 1906இல் மகாகவி எழுதிய குறிப்பு:--
"சென்ற 1901ஆம் வருஷத்தில் பிரசுரிக்கப் பெற்ற சென்ஸஸிலிருந்து, மொத்தம் 10,000 ஸ்திரீகளுக்கு 94 ஸ்திரீகளே கல்விப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இந்தப் பயிற்சியும் அதி சொற்பமானதாகவே இருக்குமென்று நாம் தெரிவிக்க வேண்டுவதில்லை. முதன் மூன்று பாடப் புஸ்தகங்களுக்கப்பால் படித்திருக்கும் மாதர்கள் மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களில் கூட கிறிஸ்தவப் பெண்கள் மிகவும் பெருந்தொகையாக இருப்பார்கள்.
தேசபக்தியுடைய ஒவ்வொருவனும் இந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு மனம் நடுங்குவானென நம்புகிறோம்.
கல்வியறிவில்லாமல் அறிவிருண்டு கிடக்கும் மாதரின் தொகை இவ்வளவு மிகுதிப்பட்டிருக்கும் தேசம் எவ்வாறு முற்படப் போகின்றது? எனினும் இங்ஙனம் பேரிருள் மீறிக்கிடக்கும் வானத்தில் நம்பிக்கைத் தாரகைகள் சிற்சில திகழ்வது பற்றி ஒருவாறு மன ஆறுதலடைகிறோம்."
*********
நாகரிக வளர்ச்சியில் ஸ்த்ரீகளுக்குரிய ஸ்தானம்
(மகாகவி பாரதி புதுவையிலிருந்து வெளியான "இந்தியா" பத்திரிகையில் வெளியிட்டக் கட்டுரை இது. மறு வெளியீடாக 1941 டிசம்பர் "கலைமகள்" இதழில் வெளியானது. இந்தக் கட்டுரையைத் தேடிக் கண்டுபிடித்துத் தனது "பாரதி புதையலில்" வெளியிட்டவர் திரு ரா.அ.பத்மநாபன். நமக்குக் கிடைத்த இந்தப் புதையலை அவருக்கு நன்றிகூறி இப்போது பார்ப்போம்)
"பாரதி புதையல்" நூலில் திரு ரா.அ.பத்மநாபன் எழுதியுள்ள இந்தக் கட்டுரைக்கான அறிமுகம். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று அனல் கக்கிய கவி பாரதி, நமது பெண்களுக்குக் கல்வி போதிக்க வேடும் என்று வாயளவில் சொல்லி நிறுத்தி விடுபவர்களை இக் கட்டுரையில் நையப் புடைத்திருக்கிறார். பெண்களே நாட்டின் எதிர்கால மேதைகளை உண்டாக்குகிறவர்கள்; அதற்கேற்றபடி அவர்களுக்குக் கல்வியளித்து பாரத நாட்டில் அர்ஜுனன் பொன்ற வீரர்களும், சங்கரர் போன்ற ஞானிகளும் தோன்றச் செய்ய வேண்டாமா என்று கேட்கிறார் கவிஞர்.
முடிவாக, தாம் பல்லாண்டுகளுக்கு முன் நிவேதிதா தேவியாரைச் சந்தித்த போது பெண்கள் முன்னேற்றம் பற்றி அவர் கூறிய மொழிகளையும் நினைவுறுத்துகிறார்." -- ரா.அ.ப.
******
"நாகரிகம் பெற்று வரும் ஜாதியாருக்கு முதல் அடையாளம் அவர்கள் ஸ்திரீ ஜனங்களை மதிப்புடன் நடத்துவதேயாகும். நாகரிகம் என்ற பதத்தை நாம் சாதாரண அர்த்தத்திலே உபயோகிக்கவில்லை. வெறும் சில யந்திரங்கள் அதிகப்பட்டு மோட்டார் வண்டிகள் ஓடுவதனால் மட்டுமே ஒரு காலம் நாகரிக காலமாய் விடமாட்டாது. ஜனங்களுக்குள்ளே பெரும்பான்மையாக இகபர ஞானமும், சற்குணங்களும், பரஸ்பர சகாய சிந்தையும், அதனால் ஏற்படும் செள்கரியங்களும் மிகுதியுறுமானால் அதையே நாகரிக நிலைமையென்று சொல்வோம்.
இப்போது நமது பாரத நாடு உண்மையான நாகரிகத்திலே முதிர்ச்சி பெற வேண்டுமானால் அதற்கு எத்தனையோ சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை யெல்லாம் பற்றி இங்கே விவரிக்கத் தொடங்கவில்லை. இங்கே முக்கியமாகப் பேச வந்த விஷயமெல்லாம் நமது நாகரிக முதிர்ச்சியிலே ஸ்திரீகளுக்கு எந்த ஸ்தானம் கொடுக்க வேண்டுமென்பதேயாம்.
ஸ்திரீகளுக்குக் கல்வியும் அறிவும் ஊட்டித் தீரவேண்டுமென்ற ஸர்வஜன சம்மதமான பழங் கருத்தை நாம் இங்கே வற்புறுத்தவில்லை. ஆனால் நம்மவர்களிலே அக்கருத்து ஸர்வ சாதாரணமாகப் போய்விட்டதென்ற போதிலும், அதை நாம் நடத்தைக்குக் கொண்டு வராதிருக்கும் பெருங்குற்றத்தையே இங்கே கண்டிக்க விரும்புகிறோம். கவர்ன்மெண்ட் பள்ளிக்கூடங்களிலும், வெள்ளைப் பாதிரிகளின் பள்ளிக்கூடங்களிலும் நம் கன்னியர்களிலே ஒரு சிறு பகுதியாருக்குக் கொடுக்கப்படும் பயனற்ற கல்வியானது அறியாமையைக் காட்டிலும் நூறு மடங்கு கொடியதாகும். நம்மவர்கள் தாமாகவே இவ்விஷயத்தில் பிரயத்தனங்கள் செய்து ஊருக்கு ஊர் பெண் பாடசாலைகள் ஏற்படுத்தி அவற்றிலேயே முற்றும் சுதேசி முறைமையைத் தழுவிய கல்வி கற்பிக்கச் செய்தல் வேண்டும்.
ஆண்கள் குணமிழந்து போய்விட்டாலும் பிறகு ஜாதி கடைத்தேறுவதற்கு ஒரு விதமான நம்பிக்கை மிஞ்சக்கூடும். பெண்கள் குணமிழந்து போய்விட்டால் பிறகு தேசம் அதோகதி அடைந்து போய்விடும். ஆகையால் பெண்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானது மிகுந்த தீர்க்காலோசனையின் பேரில் ஏற்பட வேண்டும். இவ்விஷயத்தில் தேச முழுமைக்கும் இப்போதே பொது விதிகள் அமைப்பதைக் காட்டிலும் தாய் தந்தையர் அவர் அவர்களுக்குத் தெரிந்த மட்டிலும் நன்கு ஆலோசித்து அதற்கு இசைந்த வண்ணம் அந்தந்த ஊரில் ஒருவிதமான கல்வி முறையை அனுசரித்து அது எவ்வாறு நடந்து வருகிறதென்பதைக் கவனித்துப் பிறகு பொது விதிகளைப் பற்றி நினைக்கத் தொடங்குதல் பொருந்தும்.
மாதர்களுக்குக் கல்வி வேண்டுமென்று ஒவ்வொருவரும் மனத்தில் நினைத்துக் கொண்டும் வாயினால் சொல்லிக் கொண்டும் இருந்து விடுவது பெரும் பேதைமையாகும். 'அறிவிலே உணர்ந்த பிறகு அவ்வாறு உணரப்பட்ட விஷயத்தைச் செய்கையிலே நடத்தாமல் இருப்பவன் வெறும் குழந்தைகளுக்கு நிகராவான்' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்கிறார். மாதர்கள் உதவியின்றி ஒரு தேசமும் எவ்விதமான அபிவிருத்தியும் அடைய முடியாது. ஈசுவரனுக்கே தேவிதான் சக்தி என்று மதவாதிகள் சொல்லும் உண்மைப் பொருளை மறந்துவிடக் கூடாது. சக்தியாகிய தேவியில்லாத விஷயத்தில் புருஷன் ஒன்றும் செய்ய முடியாதென்பது மத வியவகாரங்களில் மாத்திரமன்று, எல்லா வியவகாரங்களிலும் உண்மையேயாகும். பாரத நாடு இப்போது அடைந்திருக்கும் இழிவு நிலையிலிருந்து உன்னதம் பெற வேண்டுமானால் ஆண்கள் மட்டுமேயல்லாமல் பெண்களும் தேசபக்தியிலே சிறந்தவர்களாக வேண்டும். பாரதத்திலே குந்தி தேவி, சத்தியபாமை முதலிய ஸ்த்ரீ ரத்தினங்களின் சரித்திரங்களை நம் பெண்கள் அறியும் சக்தி வேண்டும். புராதன ராஜபுத்திர ஸ்த்ரீகளின் எண்ணிலா வீரச் சரித்திரங்கள் கற்பிக்கப்படாத பாடசாலைக்குப் பெண்கள் போகலாகாது. அர்ஜுனனைப் போன்ற வீரர்களையும், பாஸ்கராச்சாரியார், சங்கரர், ராமானுஜர், காளிதாசர் முதலியவர்களைப் போன்ற பலவித ஞானவான்களையும் பெற்று வளர்க்க வேண்டுமென்ற ஆசை நம் பெண்களின் நெஞ்சிலே குடியேற வேண்டும்.
இது நிற்க. தேசத்தின் எந்தவிதமான பெருங் காரியமும் கைகூடி வர வேண்டுமானால் அதற்கு ஸ்த்ரீகளின் மனோபலம் இல்லாமல் தீராது. இதனை எழுதுபவரிடம் ஸ்ரீமதி சகோதரி நிவேதிதா தேவி சில கற்பனைகளைக் கூறிவருமிடையே அந்த அம்மை, "ஐயா, மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்து கூட முயல்வது வீண் முயற்சி. அது ஒரு போதும் நடக்க மாட்டாது" என்றார்.
இந்த வசனத்தை ஒவ்வொரு தேசாபிமானியும் மனத்திலே பதித்துக் கொள்ளும்படி விரும்புகிறோம்."
Sl.No. | Name of the State | Percentage of Female Literacy |
1. | Andhra Pradesh | 51.17 |
2. | Arunachal Pradesh | 44.24 |
3. | Assam | 56.03 |
4. | Bihar | 33.57 |
5. | Chattisgarh | 52.40 |
6. | Delhi | 75.00 |
7. | Goa | 75.51 |
8. | Gujarat | 58.60 |
9. | Haryana | 56.31 |
10. | Himachal Pradesh | 68.08 |
11. | Jammu & Kashmir | 41.82 |
12. | Jharkhand | 39.38 |
13. | Karnataka | 57.45 |
14. | Kerala | 87.86 |
15. | Madhya Pradesh | 50.28 |
16. | Maharashtra | 67.51 |
17. | Manipur | 59.70 |
18. | Meghlaya | 60.41 |
19. | Mizoram | 86.13 |
20. | Nagaland | 61.92 |
21. | Orissa | 50.97 |
22. | Punjab | 63.55 |
23. | Rajasthan | 44.34 |
24. | Sikkim | 61.46 |
25. | Tamil Nadu | 64.55 |
26. | Tripura | 65.41 |
27. | Uttaranchal | 60.26 |
28. | Uttar Pradesh | 42.98 |
29. | West Bengal | 60.22 |
Union Territories | ||
1. | Andaman & Nicobar Islands | 75.29 |
2. | Chandigarh | 76.65 |
3. | Dadra & Nagar Haveli | 42.99 |
4. | Daman & Diu | 70.37 |
5. | Lakshadweep | 81.56 |
6. | Pondicherry | 74.16 |
All India | 54.16 |
மகாகவி கூட செயல்முறை வேதாந்தம் நாம் அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதை மூன்றாவதாகச் செய்யச் சொன்னான். முதலில், அந்நியரிடம் இருந்து நாட்டுக்கு விடுதலை. அதன் பிறகு ஆண் அடிமைத் தனத்தில் இருந்து பெண்களுக்கு விடுதலை அதன் பிறகு செயல் முறை வேதாந்தம் என்று வரிசை படுத்தியதாக அறிகிறேன். ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும் என்றான்.
ReplyDeleteஅருமையானப் பதிவு. வாழ்க வளர்க பாரதி இலக்கியப் பயிலகம்.
நன்றி,
தமிழ் விரும்பி,