குருவிப் பாட்டு
(பாரதி ஆய்வாளர் திரு ரா.அ.பத்மநாபன் "பாரதி புதையல்" எனும் நூலில் வெளியிட்டிருக்கிற கட்டுரை இது. இதன் முன்னுரைக் குறிப்பில் அவர் இந்தப் பாடல் குறித்த சில செய்திகளையும் சொல்லியிருக்கிறார். அவற்றையும் இந்தக் கட்டுரையில் கொடுத்து, பாரதியாரின் பாடலையும் கொடுத்திருக்கிறோம்.)
(இந்தப் பாட்டு புதுச்சேரியில் சரஸ்வதி விலாச சபை என்ற இளைஞர் சங்கத்தில் 1909இல் பாரதியார் பாடியது)
இனி திரு ரா.அ.பத்மநாபன் அவர்களின் குறிப்பு:--
"1909 ஜனவரி 1ஆம் தேதி, பாரதியாரும் சில இளைஞர்களும் சரஸ்வதி விலாச சபையில் கூடியிருந்த சமயம் சபை இருந்த அறையில் மேலே கூடுகட்டியிருந்த குருவிகள் கொம்மாளமிட்டு இரைச்சலுடன் குதூகலமாய் இங்குமங்கும் பறந்து சென்றன. பாரதியார் இதைக் குர்ந்து கவனித்தார். அதைக் கண்ட பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளை என்ற இளைஞர் குருவிகளின் இன்பகரமான வாழ்க்கை பற்றி ஒரு பாட்டுப் பாடும்படி பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் உடனே ஒரு பாட்டுப் பாடினார். அதை ராஜமாணிக்கம் பிள்ளை அங்கேயே எழுதிக் கொண்டார்.
பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளை வேறு யாருமல்லர். பாரதியை ஆதரித்த வள்ளல் பொன்னு. முருகேசம் பிள்ளையின் மைத்துனர் அவர். கொத்தவால் பதவி வகித்த உயர் குடும்பத்தினர்; கொத்தவால் பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளை என்பது அவரது முழுப்பெயர். இவர் பாரதிக்கு சமகாலத்தவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட சமவயதினரும்கூட.
ஆர்வமுள்ள பாரதி பக்தரான ராஜமாணிக்கம் பிள்ளை தாம் அறிய வந்த பாரதி பாடல்களை யெல்லாம் ஒரு கெட்டி அட்டை நோட்டில் பிரதி செய்து வைத்துக் கொண்டு வந்தார். 1957ஆம் ஆண்டு நான் (திரு ரா.அ.ப.) அவரைப் புதுவையில் சந்தித்த சமயம் இந்தப் பழுப்பேறிய, தோல் பைண்டு நோட்டையும், இதே போலப் பழுப்பேறிய மற்றொரு நோட்டையும் என்னிடம் காட்டினார். மற்றது சரஸ்வதி விலாச சபையின் நடவடிக்கைய்கள் பதிவேடு (மினிட்ஸ் புக்).
பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளையின் நோட்டுப் புத்தகத்தில் இருந்த பாரதி பாடல்கள், அந்த நோட்டு எழுதப்பட்ட சமயம், அச்சேறாதவை. பிற்காலத்தில்தான், அவை அச்சேறி பாரதி நூல்களில் இடம் பெற்றன. ஆனால் ஒரு பாட்டு நூல்களில் சேராமல் இருந்தத்தை அவர் சுட்டிக் காட்டினார். அதுதான் "குருவிப் பாட்டு". நான் அப்பொழுது அதைப் படித்துப் பார்த்து, அதன் சுவையை ரசித்தேன். இப்பாடல், 1946இல் "தமிழ் அன்பன்" என்ற புதுவை மாதமிருமுறைப் பத்திரிகையில் பாரதி பாடல் எனத் "தண்டமிழ்ப் பித்தன்" என்பவரால் வெளியிடப் பட்டுள்ளதையும் நான் அறியலானேன்.
1958இல் "பாரதி புதையல்--I" நூல் தயாரானபோது, இந்தப் பாடலும் அதில் இடம்பெற்றது. அந்த நூல் வெளியானதும், 'இந்தப் பாடல் பாரதியினுடைய பாடல்தானா' என்ற சந்தேகத்தை திரு பெரியசாமி தூரன் நண்பர்களிடம் தெரிவித்தார்; என்னிடம் நேரில் தெரிவிக்கவில்லை. இருப்பினும், பாரதிக்குத் தவறு நேரலாகாது என நான் உடனே எனக்கு இப்பாடலை உதவிய பொன்னு. ராஜமாணிக்கம் பிள்ளைக்கு எழுதி விசாரித்தேன். அவர் உடனே பதில் போட்டதுமன்றி, பாரதியார் இப்பாட்டைப் பாடியபோது கூட அந்த அறையில் இருந்தவரான கோபால்சாமி ராஜா என்கிற நாராயணசாமியையும் என்னிடம் அனுப்பினார். இவருக்கு பரலி. சு.நெல்லையப்பர் உட்பட அனைவரையும் நன்கு தெரியும்; பாரதி, ஐயர் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகிய இளைஞர்களுள் இவரும் ஒருவர்.
இப்பாடலை பரலி சு.நெல்லையப்பர் பாடியதாக திரு பெரியசாமித் தூரன் கூறுகிறாரே என்று கேட்டபோது, கோபால்சாமி ராஜா, "நெல்லையப்பர் இதைத் தாம் பாடியதாகக் கூறினால், அவர் ஏதோ ஞாபகப் பிசகாய்ச் சொல்லுகிறார் என்று கூறுவேன்" என்றார். "நெல்லையப்பர் இந்தப் பாடல் தம்முடையது என்று சொல்வதாகத் தூரன் சொல்லுகிறாரே" என்று கேட்டபோது சிரித்தார்.
திரு தூரனிடம் இது பற்றி, சமீபத்தில், கடிதப் போக்கு கொண்டபோது, இப்பாடல் தம்முடையது என்று நெல்லையப்பர் தம்மிடம் கூறவில்லை என்றும், இது நெல்லையப்பருடையது என்பது தமது ஊகமே என்றும் தெரிவித்துள்ளார். இப்பாடல் "லோகோபகாரி" என்ற நெல்லையப்பரின் வாரப் பதிப்பிலும், "நெல்லைத் தென்றல்" என்ற நூலிலும் வந்துள்ளதாம்; நெல்லையப்பர் பாடல் என அவற்றில் குறித்துள்ளதாம்.
திரு பெரியசாமித் தூரன் தரும் ஆதாரங்கள் இவ்வளவுதான். இது நெல்லையப்பரது பாடல் என ஒரு முறை தவறாக வந்து விட்டால்கூட, அதே பிழை தொடர்வது இயல்பு. நெல்லையப்பர் அதை மறுத்துத் தடுத்தாலொழிய பிழை நிற்காது. நெல்லையப்பரோ, அவ்வாறு செய்யவில்லை; வலியப்போய் மறுதளித்துச் சர்ச்சை உண்டாக்கும் இயல்பினர் அல்லர் அவர்.
இவற்றைத் தவிர, எல்லா விஷயங்களையும் ஆர அமரச் சீர்தூக்கிப் பார்த்தபின், இது பாரதி பாட்டுதான் என்ற எனது கருத்தை மாற்றிக்கொள்ள அவசியமில்லை என்றே நான் கருதுகிறேன். திரு தூரனும் தமது 18-2-1982 கடிதத்தில், "பாரதியாரிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருக்கும் தாங்கள் தீர விசாரியாமல் பாரதியார் பாடல்தான் என்று நிச்சயம் சொல்லியிருக்க மாட்டீர்கள்" என்று எனக்கு எழுதியுள்ளார். ஆகவே, இத்துடன் இந்தச் சர்ச்சை முற்றுப் பெறுவதாகக் கொள்ளலாம்.
திரு தூரன் மேலும் சொல்வது நமது கவனத்துக்குரியது. "நாம் பாரதியாருடைய கவிதைகள் எவையெல்லாம் என்று நிச்சயிப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இந்த முயற்சியில் யார் வெற்றி அடைந்தார்கள் என்பது அல்ல பெரிது. பாரதியாருடைய இலக்கியப் படைப்பு ஒன்றுகூட விடாமல் சேர்க்க முடியுமானால் அதுவே பெரிய வெற்றியாகும்."
முடிவாக, பரலி சு. நெல்லையப்பரும் நம்முடைய ஆழ்ந்த மதிப்புக்குரியவரே என்பதை நாம் மறந்துவிடலாகாது. நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடலாகாது. சிறந்த பாரதி பக்தர், மிக்க சிரமங்களின் நடுவேயும் பாரதி நூல்களைத் துணிந்து வெளியிட்டவர். பாரதியின் மேன்மையை தீர்க்கதரிசனத்துடன் பறையறைவித்தவர் அவர் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பாரதியார் இலட்சிய நோக்குள்ளவர்; உலகாயதத் தேவைகளை உணர்ந்தவரேயாயினும், தாமாக உலகாயதத் தேவைகளுக்காக விட்டுக் கொடுக்கும் இயல்பினர் அல்லர். ஆனால் அன்பர்கள் வாக்குக்குக் கட்டுபட்டுப் பணியும் தன்மையும் அவருக்கு உண்டு."
(மேற்கண்டவாறு இந்தப் பாடலின் பின்னணியைக் கொடுத்த பிறகு அந்தப் பாடலையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் திரு ரா.அ.பத்மநாபன். அவருக்கு நன்றி செலுத்தி அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.)
குருவிப் பாட்டு
அருவி போலக் கவி பொழிய - எங்கள்
அன்னை பாதம் பணிவேனே
குருவிப் பாட்டை யான்பாடி - அந்தக்
கோதைப் பாதம் அணிவேனே.
கேள்வி: சின்னஞ்சிறு குருவி - நீ
செய்கிற வேலை யென்ன?
வன்னக் குருவி - நீ
வாழும் முறை கூறாய்!
குருவி விடை: கேளடா மானிடவா - எம்மில்
கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமையில்லை - எல்லோரும்
வேந்தரெனத் திரிவோம்.
உணவுக்குக் கவலையில்லை - எங்கும்
உணவு கிடைக்குமடா
பணமும் காசுமில்லை - எங்கு
பார்க்கினும் உணவேயடா.
சிறியதோர் வயிற்றினுக்காய் நாங்கள்
ஜன்ம மெல்லாம் வீணாய்
மறிகள் இருப்பதுபோல் - பிறர்
வசந் தனில் உழல்வதில்லை.
காற்றும் ஒளியு மிகு - ஆ
காயமே எங்களுக்கு
ஏற்றதொரு வீடு - இதற்
கெல்லை யொன்றில்லையடா!
வையகம் எங்குமுளது - உயர்
வான பொருளெல்லாம்
ஐயமின் றெங்கள் பொருள் - இவையெம்
ஆகார மாகுமடா!
ஏழைகள் யாருமில்லை - செல்வர்
வறியோர் என்றுமில்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை - என்றும்
மாண்புடன் வாழ்வமடா!
கள்ளம் கபடமில்லை - வெறும்
கர்வங்கள் சிறுமையில்லை
எள்ளற் குரிய குணம் - இவை
யாவும் உம் குலத்திலடா!
களவுகள் கொலைகளில்லை - பெருங்
காமுகர் சிறுமையில்லை
இளைத்தவர்க்கே வலியர் - துன்பம்
இழைத்துமே கொல்லவில்லை.
சின்னஞ்சிறு குடிலிலே - மிகச்
சீரழி வீடுகளில்
இன்னலில் வாழ்ந்திடுவீர் - இது
எங்களுக்கு இல்லையடா!
பூநிறை தருக்களிலும் - மிகப்
பொலிவுடைச் சோலையிலும்
தேனிறை மலர்களிலும் நாங்கள்
திரிந்து விளையாடுவோம்.
குளத்திலும் ஏரியிலும் - சிறு
குன்றிலும் மலையினிலும்
புலத்திலும் வீட்டினிலும் - எப்
பொழுதும் விளையாடுவோம்.
கட்டுகள் ஒன்றுமில்லை - பொய்க்
கறைகளும் ஒன்றுமில்லை.
திட்டுகள் தீதங்கள் - முதற்
சிறுமைகள் ஒன்றுமில்லை.
குடும்பக் கவலையில்லை - சிறு
கும்பித்துயரு மில்லை
இடும்பைகள் ஒன்றுமில்லை - எங்கட்
கின்பமே என்றுமடா!
துன்ப மென்றில்லையடா - ஒரு
துயரமும் இல்லையடா
இன்பமே எம் வாழ்க்கை - இதற்கு
ஏற்ற மொன்றில்லையடா.
காலையில் எழுந்திடுவோம் - பெருங்
கடவுளைப் பாடிடுவோம்
மாலையும் தொழுதிடுவோம் - எங்கள்
மகிழ்ச்சியில் ஆடிடுவோம்.
தானே தலைப்பட்டு - மிகச்
சஞ்சலப் படும் மனிதர்
நானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்
ஞானத்தைக் கைக்கொள்ளடா!
விடுதலையைப் பெறடா - நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை - உன்
கீழ்மைகள் உதறிடடா!
இன்பநிலை பெறடா - உன்
இன்னல்கள் ஒழிந்ததடா
துன்பம் இனியில்லை - பெருஞ்
சோதி துணையடா.
அன்பினைக் கைக்கொள்ளடா - இதை
அவனிக் கிங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை - உன்
துயர்ங்கள் ஒழிந்ததடா
சத்தியம் கைக்கொள்ளடா - இனிச்
சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா - வெறும்
வேஷங்கள் தள்ளிடடா
தர்மத்தைக் கைக்கொள்ளடா - இனிச்
சங்கடம் இல்லையடா
கர்மங்கள் ஒன்றுமில்லை - இதில் உன்
கருத்தினை நாட்டிடா
அச்சத்தை விட்டிடடா - நல்
ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்தினிமேலே நீ - என்றும்
இன்பமே பெறுவையடா.
KMR.Krishnan KMR.Krishnan to me
ReplyDeleteshow details 13:19 (35 minutes ago)
அருணகிரிநாதர், குருவிப்பாட்டு இரண்டும் வாசித்தேன். நன்கு பிரசுரித்து உள்ளீர்கள்.
எல் ஐ சி பி ஹெச் எஸ் பிரிவில் ஒரு மதிய இடைவேளையில் விட்டு விடுதலை ஆகி நிற்பாய் என்ற குருவிப்பாட்டையும் அதற்கு பாரதியின் உரை நடை விளக்கத்தையும் தங்களுக்கு வாசித்துக்காண்பித்தது
நினைவுக்கு வருகிறது."ஏது!சிட்டுக் குருவிக்கு என்றாவது தலை நோவு வந்ததுண்டா?"
என்ற பாரதியின் நெல்லைத்தமிழைக்கேட்டுத் தாங்கள் புன்னகை புரிந்ததும்
கண் முன் நிற்கிறது.அது முதலே உங்களுக்கு பாரதியின் மேல் 'பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன்'.
மேலும் தங்கள் பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கேஎம்ஆர்கே
குயில் பாட்டு அருமை...
ReplyDeleteசொல்லும் பொருளும் அருமை என்றாலும்
பாரதியின் கொள்கையும் குறிக்கோளும் மிளிரும்
இடங்களைக் கொண்டேக் கூறலாம்
இது பாரதியின் பாடல் தான் என்று..
அவை தாம் இவை.
///கட்டுகள் ஒன்றுமில்லை - பொய்க்
கறைகளும் ஒன்றுமில்லை.
திட்டுகள் தீதங்கள் - முதற்
சிறுமைகள் ஒன்றுமில்லை.///
///காலையில் எழுந்திடுவோம் - பெருங்
கடவுளைப் பாடிடுவோம்///
///தானே தலைப்பட்டு - மிகச்
சஞ்சலப் படும் மனிதர்
நானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்
ஞானத்தைக் கைக்கொள்ளடா!
விடுதலையைப் பெறடா - நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை - உன்
கீழ்மைகள் உதறிடடா!////
///அச்சத்தை விட்டிடடா - நல்
ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்தினிமேலே நீ - என்றும்
இன்பமே பெறுவையடா.///
அரிய பொக்கிஷம் அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா!
இந்தத் தருணத்தில் திரு ரா.அ.பத்மநாபன் அவர்களையும்
நன்றியோடு நினைவில் கொள்கிறோம்.
ஐயா சிறு திருத்தம்..
ReplyDeleteகுயில் பாட்டென்று தவறுதலாக முன்னைய
பின்னூட்டமிட்டு விட்டேன். திருத்தி விடுகிறேன். நன்றி.
குருவிப் பாட்டு அருமை...
சொல்லும் பொருளும் அருமை என்றாலும்
பாரதியின் கொள்கையும் குறிக்கோளும் மிளிரும்
இடங்களைக் கொண்டேக் கூறலாம்
இது பாரதியின் பாடல் தான் என்று..
அவை தாம் இவை.
///கட்டுகள் ஒன்றுமில்லை - பொய்க்
கறைகளும் ஒன்றுமில்லை.
திட்டுகள் தீதங்கள் - முதற்
சிறுமைகள் ஒன்றுமில்லை.///
///காலையில் எழுந்திடுவோம் - பெருங்
கடவுளைப் பாடிடுவோம்///
///தானே தலைப்பட்டு - மிகச்
சஞ்சலப் படும் மனிதர்
நானோர் வார்த்தை சொல்வேன் - நீ மெய்
ஞானத்தைக் கைக்கொள்ளடா!
விடுதலையைப் பெறடா - நீ
விண்ணவர் நிலை பெறடா
கெடுதலை ஒன்றுமில்லை - உன்
கீழ்மைகள் உதறிடடா!////
///அச்சத்தை விட்டிடடா - நல்
ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்தினிமேலே நீ - என்றும்
இன்பமே பெறுவையடா.///
அரிய பொக்கிஷம் அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா!
இந்தத் தருணத்தில் திரு ரா.அ.பத்மநாபன் அவர்களையும்
நன்றியோடு நினைவில் கொள்கிறோம்.
ithan karuthu patri enakku vilakkuga ?
ReplyDeleteithan karuthu patri enakku vilakkuga ?
ReplyDelete