யார் மனிதன்?
(மகாகவி பாரதி எழுதியது. வெளியிட்டது "குமரி மலர்" நவம்பர் 1977)
நம்மை நாம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருகங்களாயிருந்திருக்கிறோம் என்பது தெரியும்.
வஞ்சனையாலும் குத்திரத்தாலும் (நமது விளக்கம்:-- குத்திரம் என்ற சொல்லுக்கு வஞ்சகம் (deceit) கொடுமை (cruelty) இழிவு (meanness) ஏளனம் (sarcasm) என்றெல்லாம் பொருள் அகராதியில் காணப்படுகின்றன) சமயத்திற்கேற்பப் பலவிதமான கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே!
ஊக்கமில்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக் கொண்டு மனஞ் சோர்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.
மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.
தர்மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி.
சுயாதீனத்திலே இச்சையில்லாமல், பிறருக்குப் பிரியமாக நடந்துகொண்டு அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் நாய்.
கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர் திடீரென்று கோபமடைகிறவன் வேட்டை நாய்.
காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இதமாக நடக்க வேண்டுமென்கிற விருப்ப முடையவன் வெளவால்.
அறிவுத் துணிவால் பெரும் பொருள்களைத் தேர்ந்து கொள்ளாமல், முன்னோர் சாஸ்திரங்களைத் திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை.
பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்திய போதிலும், அவன் அக்கிரமத்தை நிறுத்த முயலாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை.
வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி.
கல்வி அறிவில்லாதவனை மிருகக் கூட்டத்திலேயும் சேர்க்கலாகாது. அவன் தூண்.
தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்து உண்ணுபவன் கழுகு.
ஒரு நவீன உண்மை வரும்போது, அதை ஆவலோடு அங்கீகரித்துக் கொள்ளாமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக் கண்டு அஞ்சும்) ஆந்தை.
ஒவ்வொரு நிமிஷமும் சத்தியமே பேசித் தர்மத்தை ஆதரித்து பரமார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதன் என்றும் தேவன் என்றும் சொல்வதற்குரியவனாவான்.
நம் குறிப்பு:--
எங்கோ படித்த நினைவிலிருந்து ஒரு நிகழ்ச்சி. திருவொற்றியூர் ஆலய வாயிலில் ஒரு துறவி உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரையெல்லாம் பார்த்து, "இதோ போகிறது கழுகு", "இதோ பார் ஒரு ஆடு" என்றெல்லாம் சொல்லிக் கொண்டே யிருந்தாராம். இதை கவனித்துக் கொண்டிருந்த சிலர் இவர் ஏன் போவோர் வருவோரைப் பார்த்து இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அந்த வழியே போவதைக் கண்டு, இதோ ஒரு மனிதன் போகிறான் என்றாராம். மேலே பாரதியார் எழுதிய கட்டுரையின் சாரத்தை ஒரு துறவி நேரடியாகக் கண்டு சொன்னதையும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆம்! நாம் யார் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொண்டு விடை தேட வேண்டியதுதான். சரிதானே!
அன்புள்ள கோபால்ஜி! யார் மனிதன், ஸ்திரிகளுக்குரிய ஸ்தானம் கட்டுரைகளை வாசித்தேன் .நல்ல படங்களுடன் அருமையாகக் கொடுத்து உள்ளீர்கள். வாழ்க தங்கள் பணி! தொலை தூரக் கல்வியில் வாசித்த மாணவர்கள் அனைவருக்கும் இந்தத் தகவல்களை அனுப்பினால் அவர்கள் தொடர்ந்து படிக்க வாய்ப்பாகும். செய்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteகேஎம்ஆர்கே
உண்மை தான் ஐயா!
ReplyDeleteஇந்தக் கலியில்
மனிதர்களாக வாழ பெரும்
முயற்சித்தால் தான் முடிகிறது.
மனிதனாக வாழ்வதே கடும் தவம் தான்.
சிந்தித்து கடை பிடிக்க வேண்டிய விஷயம்.
நல்லப் பதிவு.
நன்றிகள் ஐயா!