அருணகிரிநாதர்
(திருப்புகழ் இயற்றிய அருணகிரியார் பற்றி பாரதியார் எழுதிய கட்டுரையொன்றை ரா.அ.பத்மநாபன் அவர்கள் "பாரதி புதையலில்" வெளியிட்டுள்ளார். அதனைப் படியுங்கள்.)
ஞானியும், பக்தரும் வரகவியுமாகிய அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
இவருடைய 'திருப்புகழ்' என்ற நூல் சந்தக் கணக்குப் புகழ் பெற்றது. வடமொழிச் சொற்களை மிகுதியாக உடையது. மண், பெண், பொன் என்ற உலக இன்பங்களைப் பழிப்பதில் ஓய்வில்லாதது இது. "பெரிய திருப்புகழ்", "பஞ்சரத்னத் திருப்புகழ்" என்ற ஐந்து பாட்டுக்களும் தனியாக எழுதப்பட்டன. அவை வேறு நூல்.
இவரைப் பற்றிய பல கதைகளில் என்னென்ன பகுதி உண்மை என்பதை விசாரித்து நிச்சயிக்க இது சந்தர்ப்பமில்லை. "பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறத்தல் அரிது" என்று தாயுமானவரால் வணங்கப்பட்ட மஹானாகிய பட்டினத்துப் பிள்ளைக்கு ஒரு தாசி வயிற்றில் இவர் பிறந்தவரென்ற விநோதமான கதையொன்று தமிழ்நாட்டில் வழங்கி வருகிறது.
இவருடைய கவிதையின் கனிவைப் பார்க்க வேண்டுமானால் "பஞ்சரத்னத் திருப்புகழ்", "கந்தரலங்காரம்", "வேல் வகுப்பு" மூன்றையும் படித்தால் போதும். சந்தக் கணக்கை வைத்துக் கொண்டு தெளிவாகவும் இயற்கையாகவும் சொல்லுதல் மிகவும் அருமை. காலிலும் கையிலும் தளைகளைப் பூட்டிக் கொண்டு கூத்தாட முடியாதென்று பழமொழி சொல்லுவார்கள். இந்த மஹானுடைய கவிதையோவென்றால், மிகவும் கடினமான தளைகளைப் பூட்டிக் கொண்டு தெய்வீகக் கூத்தாடுகிறது. பஞ்சரத்னத் திருப்புகழின் முதற்பாட்டில் இவர் தமக்கு அதிசயமான தமிழ் பாடும் திறமை வேண்டுமென்று முருகனிடம் கேட்கிற பொழுதே தெய்வ அருள் தோன்றி இவருடைய கவிதை அதிசயமாய் விடுகிறது.
மலடி வயிற்றிலே குழந்தை பிறந்தால் அவளுக்கு எப்படி ஆச்சரியமும் மகிழ்ச்சியுமுண்டாகுமோ, அவ்விதமான மனக் கிளர்ச்சி தமது பாட்டைப் படிக்கும்போது தோன்ற வேண்டுமென்கிறார்.
"மலடி வயிற்று மகன் போலே - ஒரு
புதைய லெடுத்த தனம் போலே - ஒளிர்
வயிர மடித்த களம்போலே - இள
................................................. மானார்
வலிய அணைத்த சுகம் போலே - கதி
ரொளி விடு ரத்ந படம் போலே - பரி
மளமிகு புட்ப வனம் போலே - சுர
ரதிபோலே"
கங்கா நதி வானத்திலிருந்து பொழிவது போலே தமது கவிதையும் ஞானலோகத்திலிருந்து நாவின் வழியே பொழிய வேண்டுமென்று கேட்கிறார். புதையலெடுத்த செல்வத்தைக் கண்டு ஏழை மகிழ்ச்சியடைவது போலே தமது கவிதை படிக்கும் போது மகிழ்ச்சியுண்டாக வேண்டுமென்கிறார். வயிரக் களம் போலே கவிதை முழுதும் ஒளிவீச வேண்டுமாம். இளம் பெண் வலியத் தழுவினாற் போன்ற இன்பம் தனது சொற்களிலே தோன்ற வேண்டுமாம். புஷ வனம் போலே கவிதையாம்! கவிதை.
மேலும், தேவர்கள் திருப்பாற் கடலை அமுதத்தின் பொருட்டாகக் கடைந்தார்கள். அப்போது எதிர்பார்க்காமல் லக்ஷ்மிதேவி தோன்றினாள். அப்போது அவர்கள் எப்படி வியப்படைந்திருப்பார்களோ அப்படிப்பட்ட வியப்பு தம்முடைய பாட்டிலே பிறக்க வேண்டுமென்று கேட்கிறார். தமது பாட்டில் பொருள் தெளிந்து மேலாகத் தெரிய வேண்டுமாம். படிப்போர் சிரமப்பட்டு மூச்சுமுட்டிப் பொருள் கண்டு பிடித்து அந்தப் பொருள் அதிஸாமான்யமாய் வியப்பின்றியிருக்கும் கவிதையைச் சிலர் கவிதையென்று மதிக்கிறார்கள். அது தமக்கு வேண்டியதில்லை யென்றும் கரையருகில் அடுத்த நீர் போலே எளிதில் மொண்டு செல்லத் தக்கதாகத் தமது பாட்டின் பொருள் ததும்பித் தெளிந்து கிடக்க வேண்டு மென்றும் இவர் விரும்புகிறார்.
"அலைகடல் பெற்றிடு பெண் போலே - வரு
புலவர் தமக்கிரு கண்போலே - கரை
யருகி லடுத்த ஜலம் போலே - நின
தழகா மோர்
அமுது புஜித்த ரஸம் போலே - திரை
கடல் மடை விட்ட ஜலம் போலே - தினம்
அதிசய முத்தமிழ் அன்பால் ஒகநின்
அருள் தாராய்!"
அழகு வேண்டுவோர் தெய்வத்தை வேண்டுகின்றார்கள். தெய்வமே அழகின் எல்லை. தெய்வத்தின் அழகை அனுபவித்த ரஸம் தமது கவிதையிலே காணவேண்டு மென்கிறார். மேற் காட்டிய வரிகளிலே அந்த ரஸம் இருக்கத்தான் செய்கிறது.
பின் வரும் பாட்டைக் கேளுங்கள்:
"கலியை யலைத்துத் தொலைத்து விட்டொரு
பிணியை யடித்துத் துரத்தி விட்டெழு
கவலை நெருப்பைத் தணித்து விட்டற
நெறியாலே.
கடின கசப்புக் கினிப்பு விட்டென
துயிரில் அழுந்தத் துடைத்து விட்டோர்
கருணை மழைக்குட் குளிக்க விட்டினி
யலையாதே.
அலையு மனத்தைப் பிடித்து வைத்ததில்
உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின்
அழகு விளக்கைப் பதித்து வைத்த
கவியாதே.
அறிவை யுருட்டித் திரட்டி வைத்து நின்
அமுத குணத்தைத் துதிக்க வைத்தனை
அடிமை படைக்கக் கருத்து முற்றிலும்
நினையாயோ."
கலியுகத்தை ஒழித்து, நோயைத் துரத்தி, கவலைத் தீயைத் தணித்துக் கசப்பை இனிப்பாக்கி உயிரை அழுக்கறுத்த கருணை மழையிலே குளிக்கவிட்டு அலைகின்ற மனதை நிறுத்தி அதிலுள்ள இருட்டைத் தொலைக்கும் பொருட்டு முருகனுடைய அழகாகிய விளக்கை அதில் நாட்டி அந்த விளக்கு நீடித் தெரியும்படி அறிவைத் திரட்டி முருகனுடைய அமிர்த குணங்களைப் புகழும்படித் தம்மை வரகவியாக்கச் சொல்லுகிறார். அந்த நிலைமை இவர் பெற்று விட்டனரெறு அந்தப் பாட்டிலேயே தெரிகிறது. அதை ஸங்கீதம் சேர்த்துப் பாடிப் பாருங்கள்.
பின்வரும் வரிகளிலே அக்நி சக்தியாகிய வள்ளியம்மையைப் புகழ்கின்றார்.
"குலவரை விட்டுத் திசை களிற்றினை
உடலை மிதித்துக் கிழித்ததிற் சொரி
குருதி குடித்து"
வள்ளியம்மையின் திருமார்பு புகுந்ததென்கிறார். வீரம், ரெள்த்ரம் என்ற ரஸங்கள் இவருடைய கவிதையில் செறிந்து கிடக்கின்றன. அவை பின்னொரு வியாஸத்தில் விளக்கப்படும். இவருடைய கவிதையின் முக்கியப் பொருள் தெய்வ பக்தியாகையால் தெய்வத்தைப் பற்றி இவருடைய கொள்கை எப்படிப்பட்ட தென்பதை விளக்கும் பொருட்டாகச் சில திருஷ்டாந்தங்கள் காட்டுகிறேன்.
பரமாத்மா எப்படியுள்ளது?
"ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின் மேல்
அளியில் விளைந்ததொ ரானந்தத் தேன்."
(பூதரம் - மலை; அளி - கருணை)
"வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானென்ற சரீரியன்று (அ) சரீரியன்றே"
அப்படியானால் அது என்னது?
"சொல்லுகைக் கில்லையென் றெல்லாம்
இழந்து சும்மா இருக்கும் எல்லை"
இப்படிப்பட்ட பரம்பொருள் மனுஷ்ய ஜீவனைக் காப்பாற்றும் பொருட்டு, இஷ்ட தேவதா ரூபமாகத் தோன்றுகிறது. இவருக்கு அந்த இஷ்ட தேவதை தேவசேனாபதியாகி அசுரரை அழிக்கப் பரமசிவனுடைய நெற்றிக் கண்ணில் தோன்றிய அக்நி குமாரனாக வெளிப்பட்டது! தெய்வத்தின் அருள் பெறும் வழி சரணாகதி. அருள் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.
அதனாலே அருணகிரிநாதர் சொல்லுகிறார்:---
"மரண ப்ரமாதம் நமக்கில்லை" (ப்ரமாதம் - தவறு)
பின்வரும் பாட்டு எமனை நோக்கிச் சொல்லப்படுகிறது:--
"தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி யுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தோண்டாகிய என் அவிரோத ஞானச்சுடர் வடிவாள்
கண்டாயடா அந்தகா வந்து பார் சற்றென்கைக் கெட்டலே!"
விதியை வெல்லும் முறை சொல்லுகிறார்:--
"வேல் பட்டழிந்தன வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டழிந்த திங்கென் தலைமேலயன் கையெழுத்தே"
பயன் சொல்லுகிறார்:--
அஞ்ஞானமாகிய சிறை
"விடுதலைப் பட்டது விட்டது பாசவினை விலங்கே"
No comments:
Post a Comment
You can send your comments