Tuesday, April 20, 2010
"பாரதி கருவூலம்"
பாரதி இலக்கியப் பயிலகம் பயிற்சிப்பாடம்
பாரதிகருவூலம்
"பாரதி கருவூலம்" எனும் தலைப்பில் 'தி இந்து' நாளிதழில் 1904 தொடங்கி 1921 வரையிலான காலகட்டத்தில் வெளியான மகாகவி பாரதியின் ஆங்கிலக் கடிதங்களைத் தேடிக் கண்டெடுத்து, தான் தொடர்ந்து செய்து வரும் பாரதி பணியின் மகுடமாக திரு ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்கள் நாகர்கோயில் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். அந்த நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரையே ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருக்கிறது. இந்த முன்னுரையை உங்களுக்குத் தருவதின் மூலம், அவருடைய இந்த நூலை வாங்கிப் படிக்கும் ஆவல் அனைவருக்கும் உண்டாக வேண்டும் என்று விரும்புகிறோம்.. இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பழைய இதழ்களைத் தேடிக் கண்டெடுத்து, அவற்றைத் தொகுத்து, தமிழாக்கமும் செய்து இந்த அரிய நூலை அவர் வெளியிட்டிருக்கிறார். இவர் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றாய்வு மையத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியர். தமிழ் சமூக வரலாறு பற்றிய குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துள்ள இவர், வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் படைப்புகளைப் பதிப்பித்திருக்கிறார். "வ.உ.சியும் பாரதியும்", "பாரதியின் கருத்துப் படங்கள்", "பாரதி: விஜயா கட்டுரைகள்" ஆகியவை பாரதியியலுக்கு இவருடைய முக்கியப் பங்களிப்புகள். இந்த நூல் வெளியாவதற்கு முன்பாகவே, இந்த அரிய தொகுப்பு நூல் குறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி பாரதி அன்பர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மகாகவி பாரதியின் கவித்துவம் குறித்தும், தமிழறிவு குறித்தும், உலக அரசியல், கலை, இலக்கியத் துறைகளில் அந்த மகா கவிஞனுக்கு இருந்த ஞானம் குறித்தும் அறிந்து வைத்திருந்தவர்களுக்கு, அவருடைய ஆங்கிலப் புலமை எவ்வளவு மேம்பட்டது என்பதை இந்த நூலின் வாயிலாக அறிய முடிந்தது. இந்த நூலின் முன்னுரையில் தொகுப்பாசிரியர் திரு ஆ.இரா.வெங்கடாசலபதி அவர்கள் கொடுத்திருக்கும் அரிய கருத்துக்களை இங்கு உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இந்த நூல் கிடைக்குமிடம்: சுதர்சன் புத்தக பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள், 669, கே.பி.சாலை, நாகர்கோயில் 629001. இதன் விலை ரூ.140/= அவர்களுடைய தொலைபேசி எண்: 91 - 4652 - 278525. கணினி அஞ்சல்: sbpd669@gmail.com.
"ஹிந்து"வில் பாரதி.
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் (27 டிசம்பர் 1904) பிரசுரமான "Mr.Sankaran Nair's Pronouncement" என்ற கடிதமாகும். அப்பொழுது பாரதிக்கு வயது இருபத்திரண்டு.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை ஒன்றேகால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் 'ஹிந்து'வில் சி.சுப்பிரமணிய பாரதி (1882 - 1921) எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் இந்நூலில் அடங்கும். இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன்முறையாக இந்நூல் வழியாக வெளிச்சத்திற்கு வருகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங்களோடும் நிலவிய சில பாரதி எழுத்துக்கள் இந்நூல் வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன. இவை தவிர, பாரதியோடு செய்யப்பட்ட ஒரே நேர்காணல் எனக் கருதலாகும் ஒரு கட்டுரையும் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகிறது. மேலும், 'ஹிந்து'வில் பாரதி எழுதியவற்றுக்குத் தூண்டுகோலாகவும் எதிர்வினையாகவும் அமைந்த கடிதங்களும் கட்டுரைகளும் பிற்சேர்க்கையாக அமைந்து பாரதி பற்றிய விரிவான ஆய்வுக்கு வழிகோலுகின்றன.
1921இல் பாரதி மறைந்தபொழுதே கையெழுத்துப் படிகளாக நின்றுவிட்ட படைப்புகள், பல்வேறு இதழ்களில் தொகுக்கப் படாமல் சிதறிக்கிடந்த எழுத்துகள் என இரு நிலையிலும் பாரதி பதிப்பியல் முழுமை பெறாமல் இருந்தது. ஆனால் சிறிது காலத்திற்குள்ளேயே அவருடைய படைப்பாளுமையின் பெருமையும் சமூக - பண்பாட்டு முக்கியத்துவமும் உணரப்பட்டு அவருடைய படைப்புகளைத் தேடி வெளியிடும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. பாரதியின் மனைவி செல்லம்மாள் தொடங்கிய பாரதி ஆசிரமத்தின் முயற்சிகள், பாடல்களை வெளியிடுவதோடு நின்றுவிட்டன.
1920களின் இடைப்பகுதியில் பாரதி பிரசுராலயத்தைத் தொடங்கி, பாரதியின் வெளிவந்ததும் வெளிவராததுமான பல நூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவந்த பாரதியின் தம்பி சி.விசுவநாதய்யர் சிதறிக்கிடந்த பாரதியின் ஆங்கில எழுத்துகளையும் தேடியெடுத்து 1930களின் பிற்பகுதியில் வெளியிட்டார். சென்னையிலுள்ள பிரம்மஞான சபையின் அடையாறு நூலகத்திலுள்ள அன்னிபெசண்டின் 'நியு இந்தியா', 'காமன்வீல்' இதழ்களிலிருந்தும், புதுச்சேரியில் அரவிந்தர் நடத்திய 'ஆர்யா' மாத இதழிலிருந்தும் (சுத்தானந்த பாரதியின் உதவியோடு) பாரதியின் ஆக்கங்களை அவர் திரட்டினார். மேலும் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் சேர்த்து "Agni and Other Poems and Translations" மற்றும் "Essays and Other Prose Fragments" என்று இரு நூல்களாக ஆங்கிலக் கவிதைகளையும் கட்டுரைகளையும் தனித்தனியே 1937இல் வெளியிட்டார். இரண்டாம் நூலின் பதிப்பாளர் குறிப்பு 'A few of these pieces were originally published over twenty years ago in the periodicals New India and Commonwealth (sic) Madras and Arya (Pondicherry). The others are now published for the first time, from the commonplace note-book and other Ms. material of the late C.S.Bharati, now in the possession of his brother, Mr.C.Viswanatha Ayyar' என்று கூறுகிறது. இந்த நூலில் பாரதியின் 'ஹிந்து' எழுத்துகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. (காங்கிரஸ் பற்றிய கடிதம் 'நியு இந்தியா'வில் வெளிவந்தவாறே பதிப்பிக்கப்பட்டிருக்கிறது).
இதன் பிறகு, 1959இல் வெளியான பாரதி ஆய்வு முன்னோடி ரா.அ.பத்மநாபனின் "பாரதி புதையல்" இரண்டாம் தொகுதியில் பாரதியின் "The Fox with the Golden Tail" நூல் மறுவெளியீடு செய்யப்பட்டதோடு, The Political Evolution in the Madras Presidency என்ற முற்றுப்பெறாத கட்டுரையின் சில பத்திகளும் இடம் பெற்றன. மேலும் 'ஹிந்து' பத்திரிகையின் "Fifty Years Ago" பகுதியில் இடையிடையே மறுபிரசுரம் செய்யப்பட்டு வந்த பாரதியின் சில கடிதங்களும் பாரதி ஆய்வாளர்களுக்குக் கிடைக்கலாயின. (எ-டு: பெ.தூரனின் "பாரதி தமிழ்" இரண்டாம் பதிப்பில் (1963) இடம்பெற்ற 'Proscription of Innocuous Literature'.
பாரதி நூற்றாண்டுக்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு சி.விசுவநாதய்யர் தம் நண்பர் ஏ.நடராஜன் என்பவரைக் கொண்டு 1937இல் வெளியான மேற்குறித்த இரண்டு ஆங்கில நூல்களையும் இணைத்ததோடு, இரண்டு பாடல்களையும், ஏழு கட்டுரைகளையும் புதியதாகச் சேர்த்து Agni and Oher Poems and Translations & Essays and Other Prose Fragments என்று தனி நூலாக வெளியிட்டார். இவற்றுள் 'Mr. Tilak and the British Government' என்ற கடிதம் 'ஹிந்து', 'நியு இந்தியா' இரண்டிலும் வந்தது; 'National Languages as Media of Instrtuction' 'ஹிந்து'வில் வெளிவந்தது. (ஆனால் தேதி 18 அக்டோபர் 1916 என்று பிழையாக உள்ளது. வெளிவந்த தேதி 19 ஆகும்). 'A letter to Mr.Ramsey Macdonald' என்ற நீண்ட கடிதம் பாரதி பயன்படுத்திய ஏராளமான துணைத் தலைப்புகள் இல்லாமல் தொகுக்கப்பட்டிருந்தது.
1982இல் 'பாரதியின் கடிதங்கள்' நூலை வெளியிட்ட ரா.அ.பத்மநாபன், ராம்சே மெக்டொனால்டுக்கு எழுதப்பட்ட இக்கடிதத்தை முழுமையாக, ஏறத்தாழ அனைத்துத் துணைத் தலைப்புகளோடு வெளியிட்டார். இதற்கடுத்து எழுதப்பட்ட 'Police Rule in India' என்ற கடிதம் ஆங்கில மூலமில்லாமல் தமிழாக்கம் மட்டும் இந்நூலில் இடம்பெற்றது.
பாரதியின் படைப்புகளைக் காலவரிசையில் செப்பமாகப் பதித்துவரும் சீனி.விசுவநாதன், அண்மையில் வெளியிட்ட அதன் எட்டாம் தொகுதியின் பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்: 'The Hindu' பத்திரிகையிலே வெளியான பாரதி கடிதக் கட்டுரைகளுக்கான பிரதிகள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. ஆயினும், பாரதியின் எழுத்துக்களை மறுபிரசுரம் செய்திருந்த பாரதி பிரசுராலயத்தாரின் Essays and Other Prose Fragments என்ற நூலும், ஹிந்து அலுவலகமே வெளியிட்ட The Hindu hundred years (sic) என்ற நூலும் பெரிதும் பயன்பட்டன'.
மேற்கண்ட பதிப்பு வரலாறு உணர்த்தும் செய்தி இதுவரை 'ஹிந்து' நாளிதழின் பாரதி காலத்துக் கோப்புகளை ஆய்வாளர்கள் பார்வையிட இயலவில்லை என்பதேயாகும். மேலும் சீனி.விசுவநாதன் மேற்கண்ட தம் பதிப்புரையில் கூறுவதாவது "..... ராம்ஸே மக்டனால்டு அவர்களுக்கு எழுதிய கடிதத்துடன் 'ஹிந்து' பத்திரிகையுடனான பாரதியின் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது. இதன்பின் இரண்டொரு கடிதங்களும் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன."
பாரதி ஆய்வின் இன்றைய எல்லை இது. பாரதியின் எழுத்துகள் 'ஹிந்து'வில் இடம்பெற்றுள்ளது அறியப்பட்ட நிலையிலும் அதன் கோப்புகள் பாரதி ஆய்வுக்காக பயன்படுத்தப்படவில்லை என்பது வெள்ளிடைமலை. 1921இல் நீதிபதி மணி ஐயரின் தலைமையில் பாரதி நிகழ்த்திய "நித்திய வாழ்வு" (Life Eternal) என்ற பேச்சின் விவரத்தையும், பாரதியின் குருநாதர் குள்ளச்சாமி படத்தையும் 'ஹிந்து'வில் தேட வேண்டும் என்று "சித்திர பாரதி"யின் முதல் பதிப்பிலேயே ரா.அ.பத்மநாபன் குறிப்பிட்டிருந்தாலும் இத்தேடல் நடைபெறவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 'ஹிந்து' நாளிதழின் 1904 முதல் 1921 வரையிலான காலகட்டத்துக் கோப்புகள் பார்வையிடப்பட்டு, சீனி.விசுவநாதன் குறிப்பிடும் 'இரண்டொரு' என்பதற்கு மேலாகப் பத்துக்கும் அதிகமான எழுத்துகள் அடையாளம் காணப்பட்டு இந்நூலில் இடம்பெறுகின்றன. பாரதி எழுத்துகள் இத்தனை புதையலாகக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் ரா.அ.பத்மநாபன் குறிப்பிடும் "நித்திய வாழ்வு" உரையும், குள்ளச்சாமி படமும் காணக் கிடைக் காததில் ஏமாற்றமே.
இந்நூலின் முக்கியத்துவத்தை இச்செய்திகள் வெள்ளிடைமலையாகப் புலப்படுத்து கின்றன என்பதில் இருவேறு கருத்துக்கிடமில்லை.
1
அச்சில் வெளிவந்த பாரதியின் முதல் படைப்பு, 'விவேகபாநு' மாத இதழ் (ஜூலை 1904) வெளியிட்ட "தனிமையிரக்கம்" என்ற 'சானட்' வடிவப் பாடலாகும். இப்பாடல் வெளிவந்த காலத்தையொட்டிச் சில மாதங்கள் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பாரதி பணியாற்றினார். 'சுதேசமித்திரன்' நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயரால் இனங்காணப்பட்ட பாரதி 1904 நவம்பரில் சென்னைக்கு வந்து, 'சுதேசமித்திரன்' நாளிதழில் உதவியாசிரியராகப் பணியாற்றலானார். ஆனால் 'சுதேசமித்திர'னில் அவருடைய படைப்பு எதுவும் 1906 ஏப்ரல் வரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில் 1904 டிசம்பர் 27இலேயே, அதாவது பாரதி சென்னைக்கு வந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே 'ஹிந்து' நாளிதழுக்கு ஒரு நீண்ட கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார்.
பாரதி 'ஹிந்து'வில் எழுதலானது வியப்புக்குரியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்திலிருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஒருவருக்கு 'ஹிந்து'வின் பரிச்சயம் தவிர்க்க இயலாதது. முத்துசாமி அய்யர் சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக அமர்த்தப்பட்ட பொழுது அதை ஐரோப்பியர் நடத்திய ஆங்கிலப் பத்திரிகைகள் கடுமையாகக் கண்டித்ததற்கு எதிர்வினையாக இந்தியக் குரலாக ஒலிப்பதற்கெனத் தோற்றுவிக்கப்பட்டதே 'ஹிந்து'. திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய ஐயர், முடும்பை வீரராகவாச்சாரி, பி.வி.ரங்காச்சாரி, டி.கேசவராவ் பந்த், என்.சுபாராவ் பந்துலு ஆகிய ஆறு இளைஞர்கள் 20 செப்டம்பர் 1878இல் அதனை வார இதழாக முதலில் வெளியிட்டனர். பத்திரிகை தொடங்கப்பட்ட சிறிது காலத்திலேயே அரசுப்பணி கிடைத்த காரணத்தினால் தோற்றுநர் நால்வர் விலகிவிட ஜி.சுப்பிரமணிய ஐயரும் மு.வீரராகவாச்சாரியாரும் முழு உரிமையாளர்களாயினர்.
அக்டோபர் 1883இல் வார மும்முறை இதழான 'ஹிந்து', ஏப்ரல் 1889 முதற்கொண்டு நாளிதழாகத் தொடர்ந்து வெளிவரலானது. (பாரதியின் காலத்திலும் அதற்குப் பின்னர் பல்லாண்டுகளுக்கும் ஞாயிறன்று பதிப்பு இல்லை. மேலும் அக்காலத்தில் 'ஹிந்து' மாலையில்தான் வெளிவந்தது.)
தொடக்கம் முதலே இந்திய தேசியத்தின் முதன்மையான ஒரு போக்கைப் பிரதிபலிக்கும் ஓர் ஊடகமாக 'ஹிந்து' விளங்கிவந்தது. சென்னை மாகாணத்தின் தொடக்க கால தேசிய அமைப்பாக விளங்கிய சென்னை மஹாஜன சபை 1884இல் 'ஹிந்து' அலுவலக வளாகத்தில் கால்கோளிடப்பட்டது தற்செயலானதல்ல. 1885இல் பம்பாயில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் ஜி.சுப்பிரமணிய ஐயர் முக்கியப் பங்காற்றியவர்; காங்கிரஸின் ஆரம்ப காலத் தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். மு.வீரராகவாச்சாரி "சுயாட்சி வினா விடை" (1887) முதலான துண்டறிக்கைகளை எழுதிப் பல்லாயிரக் கணக்கில் விநியோகித்தார். சுதேசி இயக்கக் காலம் வரையில் தீவிரமான ராஜவிசுவாசம், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் குறைபாடுகள் பற்றிய கடும் விமரிசனம் ஆகியன இரண்டும் கலந்து ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்ட 'ஹிந்து', வெகுஜன இயக்கமாக மாறிவந்த காங்கிரஸின் பிரதான போக்கோடு தன்னைத் தொடர்ந்து இணைத்துக் கொண்டு வந்தது. 'ஹிந்து'வின் புகழ்பெற்ற ஆசிரியர்கள் நால்வர் (ஜி.சுப்பிரமணிய ஐயர், மு. வீரராகவாச்சாரி, எஸ். கஸ்தூரிரங்க ஐயங்கார், அ. ரங்கசாமி ஐயங்கார்) காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்களாவர். அந்த வகையில் 'ஹிந்து'வின் நூற்றாண்டு வரலாறு 'இந்திய தேசியத்தின் காவியக் கதை' (A hundred Years of the Hindu: The Epic Story of Indian Nationalism) என்ற துணைத்தலைப்புடன் அமைந்ததும் பொருத்தமானதே.
சமூக சீர்திருத்தத்தில் பேரார்வம் கொண்டிருந்த ஜி.சுப்பிரமணிய ஐயருக்கும், உறுதியான சனாதனப் பிடிப்பு கொண்டிருந்த மு.வீரராகவாச்சாரிக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றியதன் விளைவாக 1898இல் ஜி.சுப்பிரமணிய ஐயர் 'ஹிந்து'விலிருந்து விலகி ஏற்கனவே தாம் 1882இல் தொடங்கிவிட்டிருந்த 'சுதேசமித்திர'னை 1899இல் நாளேடாக்கி அதில் ஆழ்ந்துவிட்டார். இதனால்தான் அவரைத் தமிழகத்தின் 'புதிய விழிப்பின் முன்னோடி'களில் ஒருவராக மதித்ததோடு, 'எவர் துணையுமின்றித் தமிழ்ப் பத்திரிகைத் துறையை இன்றைய உலகத்தில் நிலைநிறுத்திவிட்டார்' என்றும் பாரதி புறநிலையாக நின்று கூறினார்.
'ஹிந்து'வின் சட்ட ஆலோசகராக இருந்த எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்கார் (1859-1923) 1905இல் 'ஹிந்து'வின் உரிமையாளரானதோடு, தாம் மறையும்வரை அதன் ஆசிரியராகவும் இருந்தார். 'ஹிந்து'வைத் தாம் நடத்தத் தொடங்கிய உடனேயே தம் மருகரான அ.ரங்கசாமி ஐயங்காரை (1877-1934) உதவி ஆசிரியராகவும் மேலாளராகவும் அமர்த்தினார். 1907இல் 'ஹிந்து'வின் அச்சிடுவோராகவும் வெளியீட்டாளராகவும் பொறுப்பேற்ற ரங்கசாமி ஐயங்கார் 1915இல் 'ஹிந்து'விலிருந்து விலகி 'சுதேசமித்திர'னுக்கு ஆசிரியரானார். 1906ஆம் ஆண்டுக்குப் பிறகு 'சுதேசமித்திரனில்' பங்காற்றுவதை நிறுத்திவிட்ட பாரதி, ரங்கசாமி ஐயங்கார் அதற்குப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் தம் தொடர்பைப் புதிப்பித்துக்கொண்டு தொடர்ச்சியாக எழுதிவரலானார்.
பாரதியின் பத்திரிகை எழுத்தில் 'சுதேசமித்திரன்', 'ஹிந்து' இரண்டுக்கும் பங்குண்டு. ஜி.சுப்பிரமணிய ஐயர், ரங்கசாமி ஐயங்கார் ஆகிய இருவருமே இந்த இரண்டு பத்திரிகைகளிலும் நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர்கள். எனவே 'ஹிந்து' பற்றிய மேற்கண்ட சுருக்கமான அறிமுகம் கவனம் கொள்ளத்தக்க பின்புலமாகும்.
2
1904 டிசம்பரில் எழுதிய கடிதம் நீங்கலாக, 'ஹிந்து'வில் பாரதி எழுதிய பிற அனைத்தும் கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளிவந்துள்ளன. பாரதியின் கட்டுரைகளை மேலோட்டமாகப் புரட்டினாலும்கூட அவர் எந்த அளவுக்கு 'ஹிந்து' பத்திரிகையோடு நெருங்கிய பரிச்சயம் கொண்டிருந்தார் என்பது நன்கு விளங்கும். தம்முடைய எழுத்துகளில் பல இடங்களில் 'ஹிந்து' செய்திகளைக் குறிப்பிடவும் எதிர்வினையாற்றவும் செய்திருக்கிறார் பாரதி. உலகச் செய்திகளை, அதாவது மேலைச் செய்திகளை அதாவது இங்கிலாந்து செய்திகளை 'ஹிந்து' அளவுக்கு வெளியிட்ட பத்திரிகை இருக்குமா என்பது ஐயமே. 'தம் சொந்த நாட்டைவிட இங்கிலாந்து செய்திகளை "ஹிந்து" வாசகர் அதிகம் அறிந்திருப்பார்' என்று அதன் அதிகாரபூர்வ வரலாற்றாசிரியர் கூறியுள்ளது மிகப் பொருத்தமானது.
'ஹிந்து'வில் வெளியான பாரதியின் எழுத்துகள் ஏறத்தாழ அனைத்துமே "ஆசிரியருக்குக் கடிதங்கள்" (Correspondence) பகுதியிலேயே வெளிவந்துள்ளன. (பாரதியின் மேதைமையை 'ஹிந்து' ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்று கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. பாரதி மறைந்தபொழுதுகூட ஒரு *சிறு தலையங்கக் குறிப்பும் சில உதிரிச் செய்திகளும் மட்டுமே 'ஹிந்து'வில் வெளிவந்துள்ளன.
* The Hindu, 12 September 1921 -- Sub-editorial.
We regret to learn of the death of Vara Kavi Subramaniya Bharati at his residence in Triplicane last night. The deceased was an ardent nationalist, a great thinker, a stirring speaker and a powerful writer. He is the author of a number of Tamil works including 'National Songs'. His recitation of his national songs infused genuine patriotism in the hearts of his listeners. He, like many other patriots of India, was an excile in Pondicherry for some years because his patriotic speeches did not please the Gods of Power. He has for some time past been ailing and by his premature death the country has lost a born poet and a sincere patriot.
உதிரிச் செய்தி: *The Hindu 13 September 1921.
Under the auspices of the Amara Kala Vilasini Sabha, a condolence meeting was held last evening under the presidency of Brahmasri V.Somadeva Sarma and the following resolution were passed.
(1) That this meeting records its deep grief at the premature death of the great scholar and poet Mr.Bharathi and the loss sustained by this Sabha and conveys its condolences to his family. (2) That a committee be formed with power to add, including V.Somadeva Sarma, S.Krishnaswami Aiyar, Kalayanaswami Aiyengar and Narayana Rao, to concert measures to perpetuate his memory by the publication of Mr.Bharathi's unpublished manuscripts and take other steps towards the same.
1880 களின் தொடக்கம் முதலே இந்தப் பகுதி சூடான விவாதத்திற்கான களமாக விளங்கியுள்ளதை 'ஹிந்து' வரலாறும் கூறுகிறது. பிட்டி தியாகராயர், ம.சிங்காரவேலர், அ.மாதவையா, பி.வரதராசுலு நாயுடு முதலான ஏராளமான பெரியோரின் கடிதங்களை 'ஹிந்து'வின் பக்கங்களில் பரக்கக் காண முடியும்.
கஸ்தூரிரங்க ஐயங்காரின் ஆசிரியத்துவத்தில் இக்களம் மேலும் விரிவு பெற்றது. ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதிக்கு மேலதிகமான இடம் கொடுத்து, சர்ச்சைக்குரிய சமகால விஷயங்களுக்கு வடிகாலாக அமைய அவர் வழிவகுத்தார். முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் 'விவாதம் முற்றுப் பெற்றது' என்று ஆசிரியர் அறிவிக்கும்வரை வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் தொடர்ந்திருக்கின்றன. தலையங்கம் அளவுக்கு இந்தப் பகுதியும் பேர்பெற்றது என்று 'ஹிந்து' வரலாற்றாசிரியர் கூறுகிறார். இது உண்மை என்பதை இந்நூலிலுள்ள பாரதியின் கடிதங்களும், பிற்சேர்க்கை 11இல் உள்ள எதிர்வினைகளும் காட்டுகின்றன.
தம் பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் ஒரு கடிதத்தையும், சுதேசி இயக்கக் காலத்தில் இரண்டு கடிதங்களையும் பாரதி 'ஹிந்து'வுக்கு எழுதியிருக்கிறார்.
சென்னை ஆசாரத் திருத்தச் சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டுவிழாக் கூட்டத்தில் செட்டூர் சங்கரன் நாயர் ஆற்றிய உரையில் சமூக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுச் சாதி அமைப்பு ஒழியும்வரை இந்தியா விடுதலை பெறக்கூடாது என்று வாதிட்டு விரிவாகப் பேசியிருந்தார். இந்த உரை 'ஹிந்து'வில் ஒரு முழுப்பக்கத்திற்கு வெளிவந்திருந்தது. இதனை மறுத்து சென்னை மாகாணத்தின் உள் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் Plainspeaker (வெளிப்படையாகப் பேசுவோன்) என்ற பெயரில் எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாக சங்கரன் நாயரை ஆதரித்தும், 'வெளிப்படையாகப் பேசுவோனை' எள்ளிநகையாடியும் பாரதி ஒரு கடிதம் எழுதினார். 'ஹிந்து' 27 டிசம்பர் 1904 இதழில் வெளிவந்த இந்தக் கடிதமே நாமறிந்த வரையில் அச்சில் வெளியான பாரதியின் முதல் ஆங்கில எழுத்தாகும்.
இதற்கடுத்து மூன்றாண்டுகள் கழித்து, சூரத் நகரில் நடைபெறவிருந்த காங்கிரஸ் (1907) ஆண்டு மாநாட்டுக்குச் செல்லும் சென்னை மாகாணப் பிரதிநிதிகளுக்கு ஒரு அறிவிப்பாக ஒரு சிறிய கடிதம் பாரதியின் பெயரில் வெளியாகியுள்ளது.
சுதேசி இயக்கத்தின் உச்ச கட்டத்தில், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா முதலானோர் கைதாகியிருந்த வேளையில், பாரதி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்குச் சமக் குடியுரிமை கிடைக்கும் என்பது போலி நம்பிக்கை என்பதை பிரிட்டிஷ் பேரரசில் இந்திய ஒப்பந்தக் கூலிகள் அனுபவிக்கும் இன்னல்களை நிமித்தமாகக் கொண்டு இக்கடிதம் சாடுகிறது. தேசிய இயக்கத்தின் மூத்த தலைமுறையினையும், குறிப்பாக 'ஹிந்து' ஆசிரியரையும், விமரிசிக்கும் இக்கடிதத்தில் இந்தியா 'நிராயுதபாணியாக்கப்பட்ட ஒரு தேசம்' என்பதாலேயே இழிநிலை அடைந்துள்ளது என்ற கருத்தைப் பாரதி அடிக்கோடிட்டுள்ளார்.
இதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அரசாங்கம் தம்மைக் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் (ஆகஸ்ட் 1908) புதுச்சேரியில் அடைக்கலம் தேடுகிறார் பாரதி. இதன் பிறகு 'ஹிந்து'வில் வெளியான பாரதி எழுத்துக்கள் அனைத்தும் புதுச்சேரியிலிருந்து எழுதப்பட்டவையே.
'இந்தியா', 'விஜயா', 'சூரியோதயம்' முதலான பத்திரிகைகள் தடை செய்யப்பட்டு, கருத்து வெளிப்பாட்டுக்கு வேறு சாதனம் அற்ற நிலையில் பாரதி புதுச்சேரியில் தஞ்சமடைந்த இரண்டரையாண்டுக் காலத்திற்குப் பிறகு 1911 ஏப்ரல் 24ஆம் நாள் 'ஹிந்து'வில் அவருடைய கடிதம் வெளிவருகிறது. 'நம் காலத்தின் மிகப் பெரும் அறிவுலக மோசடி' என்று பாரதி தம் "பொன்வால் நரி" (The Fox with the Golden Tail) என்ற ஆங்கில அங்கத நூலில் விவரித்திருந்த பிரமஞான சங்கம் (Theosophical Society) பற்றியதாகும் இக்கடிதம். தங்கள் விமரிசகர்களை ராஜதுரோகிகள் எனக் கோள் சொல்லிக் காட்டிக் கொடுக்கும் பிரமஞான சபையினரின் மலினமான உத்தியை விமரிசிக்கும் கடிதம் இது. பிரமஞான சபையின் சமயப் புரட்டுகளையும் அதன் தலைவர் அன்னிபெசண்ட் பற்றியும் மேலும் இரண்டு கடிதங்களை 'ஹிந்து'வில் பாரதி வெளியிட்டார். ஒரு கடிதம் அப்பொழுது புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்த அரவிந்தரின் சார்பாக அன்னிபெசண்டுக்கு விடுக்கப்பட்ட மறுப்புரையாகும். பாரதிக்கும் அரவிந்தருக்குமான நெருக்கத்தைப் புலப்படுத்தும் ஆவணம் இது. மற்றொரு கடிதம், அன்னிபெசண்டின் பிரமஞான சபை சார்ந்த செயல்பாடுகளை மறுக்கும் அதே வேளையில், அவர் தேசிய இயக்கத்தில் காலடி எடுத்து வைப்பதை வரவேற்கின்றது.
பிரமஞான சபை மற்றும் அன்னிபெசண்ட் ஆகியோரைக் கண்டிக்க 'ஹிந்து'வைக் கருவியாகப் பாரதி மேற்கொண்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அன்னிபெசண்டோடு 'ஹிந்து' சொற்சமர் புரிந்து வந்தது. 1894இலேயே அன்னிபெசண்ட் இந்து மதம் மற்றும் நாகரிகம் பற்றிச் சென்னை மாகாண நகரங்களில் உரையாற்றியதைப் பதிவு செய்துள்ளதை 'ஹிந்து'வின் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். 1911 முதல் 'ஹிந்து'வுக்கும் அன்னிபெசண்டுக்கும் இடையே கடும் விவாதம் தொடங்கியது. பிரமஞான சபையின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும், முக்கியமாக ஜே.கிருஷ்ணமூர்த்தியை லோக குருவாக அறிவித்ததையும் கண்டித்து பாரதியின் நண்பரும் அந்நாளில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கியவருமான எம்.சி.நஞ்சுண்ட ராவ் எழுதியது 24 ஜனவரி 1914 'ஹிந்து'வில் வெளியானது. இதைத் தொடர்ந்து வாதங்களும், பிரதிவாதங்களும் முற்றின. முக்கியமாக, பிரமஞான சபையின் 'மகாத்மா' கோட்பாடு கடுமையாக மறுக்கப்பட்டது. ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய அண்ணனும் அன்னிபெசண்டுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டதைப் பற்றி அவர்களுடைய தந்தை ஜே. நாராயணய்யா தொடுத்த உயர் நீதிமன்ற வழக்கும், லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்ற மேல் முறையீடும் பெரும் விவாதங்களைக் கிளப்பின. பிரமஞான சபை பிரமுகர் லெட்பீட்டரின் 'பாலுறவுப் பிறழ்வுகள்' பற்றிய விமரிசனங்கள் அவதூறு வழக்குகளுக்கு வழிகோலின. 1917இல் அன்னிபெசண்டு, ஜார்ஜ் அருண்டேல், பி.பி.வாடியா ஆகியோர் உதகையில் கட்டுக்குள் வைக்கப்பட்டனர். இவ்வேளையில் 'ஹிந்து' பெசண்டை ஆதரித்து எழுதியது. 1919 முதல் காந்தியடிகளையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் அன்னிபெசண்ட் எதிர்க்கலானதும் 'ஹிந்து' மீளவும் அவருக்கு எதிராகத் திரும்பியது.
பிரமஞான சபை பற்றிய தம் விமரிசனங்களை வெளிப்படுத்த பாரதி 'ஹிந்து'வைக் கைக்கொண்டது, அதுவும் வேறு வெளியீட்டுச் சாதனங்களே இல்லாத நிலையில் வியப்பில்லை. 'ஹிந்து'வில் வெளியிடப்படாத பிரமஞான சபையின் ஒரு கூட்டம் பற்றிய விமரிசனத்தை 'ஹிந்து'வில் பாரதி எழுதியதை ஒரு பிரமஞான சபையின் பற்றாளரும்கூடக் குறிப்பிட்டுள்ளார். முதல் உலகப் போர் மூண்டுவிட்ட பின்னணியில், அன்னிபெசண்டை இந்திய தேசியவாதிகளின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டுவிட்ட பாரதி அதன் பிறகு சில வாரங்களிலேயே அன்னிபெசண்டின் 'நியு இந்தியா' நாளேட்டில் எழுதத் தொடங்கிவிடுகிறார். பிரமஞான சபை சார்ந்த இதழ் ஒன்றில் முதன்முறையாகப் பாரதியின் எழுத்து 'Home and War' என்ற கடிதமாக 'நியு இந்தியா' 3 அக்டோபர் 1914 இதழில் வெளிவருகிறது.
1911 ஜூன் 17ஆம் நாள் திருநெல்வேலி மணியாச்சி தொடர்வண்டிச் சந்திப்பில் நெல்லை கலெக்டர் ஆஷ் வாஞ்சி ஐயரால் சுட்டுக் கொல்லப்பட்டது பாரதியின் வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்தது. பாரதியைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆள்காட்டிகளும் ஒற்றர்களும் அடங்கிய ஒரு பெரிய போலீஸ் படை புதுவையிலிருந்த சுதேசி இயக்கத்தவரைச் சிக்க வைக்க முயன்றது. 'குற்றமற்ற காதல் கவிதையும் சமூக சீர்திருத்தக் கதையும்' என்று பாரதி வருணித்த "கனவு", "ஆறிலொரு பங்கு" ஆகிய நூல்கள் தடைசெய்யப்பட்டன. போலீஸ் படையோடும் தடையுத்தரவுகளோடும், சில ஆண்டுகளுக்குப் பாரதி மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. வ.வே.சு.ஐயரையும் பிறரையும் சிக்க வைப்பதற்காகப் போலீஸே அவர்கள் வீட்டில் போலியாகச் சில பொருள்களை வைத்ததைப் பாரதி 'ஹிந்து'வில் அம்பலப்படுத்தினார். சென்னை மாகாண ஆளுநருக்குப் பல விண்ணப்பங்களை அனுப்பினார். இவற்றால் பயன் விளையாததைக் கண்டு 1914இன் தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தொழிற்கட்சித் தலைவரும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராம்சே மெக்டனால்டுக்கு எழுதிய மிக நீண்ட பகிரங்கக் கடிதம் 'ஹிந்து'வில் வெளிவந்தது. இதனையொட்டி மேலும் இரண்டு கடிதங்களையும் பாரதி 'ஹிந்து'வில் வெளியிட்டார். புரட்சிகர, ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே இக்கடிதங்களின் சாராம்சமாகும். போலீஸின் பிடியிலிருந்து தப்புவதற்கான ஒரு தந்திரோபாயமாகவே இது இருக்கலாமெனினும், பாரதியின் மாறிவந்த அரசியல் நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்ள இக்கடிதங்கள் துணைபுரிகின்றன.
1914இன் இடைப்பகுதியில் முதல் உலகப் போர் மூண்ட பின்னர், பாரதி சில கடிதங்களை எழுதுகிறார். போர்க் காலத்தில் ஆங்கில அரசுக்கு இந்திய மக்களின் ஆதரவு உண்டு என்றும், ஆனால் போர் வெற்றிக்குப் பின்னர் இந்தியாவுக்கு இதனால் அரசியல் பயன் விளையும் என்ற நம்பிக்கையினையும் பாரதி வெளிப்படுத்துகிறார். இந்த நிலைப்பாட்டுக்குத் திலகர் அரணாக இருப்பதையும் பாரதி சுட்டுகிறார்.
போர்ச் சூழலில் செர்பிய நாட்டின் வீரப் பாடல்களை வியந்தும் விதந்தும் ஒரு குறிப்பைப் பாரதி வரைந்துள்ளார். செர்பியரின் தேச உணர்வையும், அதற்கு வலுவூட்டும் வீரத்தையும் இந்தியாவுக்கு உதாரணமாக முன்வைக்கும் இக்கட்டுரையை இன்று படிக்கும்பொழுது 1990களில் போஸ்னியாவில் செர்பியர்கள் இழைத்த இனப்படுகொலைகள் நினைவுக்கு வந்து மன சஞ்சலத்தை ஏற்படுத்துகின்றன.
இவற்றைத் தவிரப் பல்வேறு பொருள்களைப் பற்றியும் பாரதி இடையிடையே 'ஹிந்து'வுக்குக் கடிதம் விடுத்துள்ளார். ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி பாரதி எழுதியுள்ள மதிப்பீட்டை அவர் தமிழில்கூடச் செய்ததில்லை. ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பாரதியின் குருநாதராகக் காட்டும் முயற்சிகள் பாரதிக்கே உவப்பளிக்காது என்பதை இக்கடிதம் காட்டுகிறது. ஜி.சுப்பிரமணிய ஐயரைப் புறநிலையாக நின்று நிறைகுறைகளோடு விமரிசித்துள்ள பாரதி, 'எவ்வளவு குறைகள் இருந்த போதிலும் தமிழ்நாட்டின் மிக உபயோகமான ஒரு செய்திப் பத்திரிகையாக ஒரு தினசரித் தமிழ்ப் பத்திரிகையை அவர் நிறுவிக் காட்டிவிட்டார்' என்று பாராட்டிய அதே வேளையில், 'மேதையின் ஒளிவீசும் ஆற்றல் ஸ்ரீமான் ஐயருக்கு இல்லை என்பது நிச்சயம்' என்றும் மதிப்பிடுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பற்றியும், கல்விக்குத் தாய்மொழியே பயிற்று மொழியாக வேண்டும் என்றும் பாரதி இக்கடிதங்களில் எழுதியுள்ளார்.
சாதி அமைப்பு பற்றிய பாரதியின் கருத்துகள் அன்றைய வைதீகர்களின் பகைமையைச் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. 1912ஆம் ஆண்டளவில் 'மெட்ராஸ் ஸ்டாண்டர்டு' நாளிதழில் எந்தப் பேராசிரியர் கே. சுந்தரராம ஐயரிடம் கடுமையாக விவாதித்திருந்தாரோ அவருக்கு 1915இலும் பாரதி எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
அரவிந்தரின் 'ஆர்யா' மாத இதழில் பெயரிடாமல் நம்மாழ்வார் பற்றி பாரதி எழுதிய கட்டுரை 'ஹிந்து'வில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
1916ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 'ஹிந்து'வின் மைசூர் நிருபர் புதுச்சேரிக்கு மூன்று நாள் சென்று அங்குள்ள சுதேசி இயக்கத்தவரைச் சந்திக்க முயன்றிருக்கிறார். பலத்த போலீஸ் கெடுபிடிகளுக்கிடையில் பாரதியை மட்டும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த அனுபவத்தை ஒரு சுவையான கட்டுரையாக எழுதி 'ஹிந்து'விலும் வெளியிட்டிருக்கிறார். பத்திரிகையில் வெளியான பாரதியின் ஒரே பேட்டி இதுவெனலாம். இந்த அனுபவத்தைப் பாரதியும் 'சுதேசமித்திர'னில் தாம் எழுதிய 'தராசு' என்ற பத்தியில் பதிவு செய்திருக்கிறார். இந்த மைசூர் நிருபரின் பெயர் தெரியவில்லை. பாரதியின் கட்டுரையிலிருந்து அவர் ஓர் ஐயங்கார் என்பதும் நெடுங்காலம் கர்நாடகத்திலேயே வாழ்ந்து வந்ததால் ஓரளவுக்கு மட்டுமே தமிழ் பேசத் தெரிந்தவர் என்பதும் அறியமுடிகின்றது. எழுதுவதற்கேற்ப ஊதியம் பெற்று கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தவர் என்பதும் தெரிகிறது. பெங்களூரில் வசித்து வந்தவர் என்பது 'ஹிந்து' நேர்காணலிலிருந்து தெரிகிறது.
1890களின் கடைசியில் 'ஹிந்து'வின் மைசூர் நிருபராக பெங்களூரிலிருந்து செயல்பட்டுவந்த சாளிகிராம சுப்பா ராவ் என்பவரைப் பற்றிக் கூறும் 'ஹிந்து' வரலாறு இவர் ஆற்றல் வாய்ந்த ஒரு வழக்குரைஞர் என்றும் குறிப்பிடுகிறது. எனவே, பாரதியைச் சந்தித்தவர் இவரல்லர் என்பது தெளிவு. பாரதியை நேர்கண்ட பெருமையுடைய ஒரே நிருபர் யாரெனத் தெரியவில்லை.
1916 அக்டோபர் 19இல் சுதேச மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று வாதிட்டு எழுதிய பாரதி அதன் பிறகு, 1921இல் இறக்கும் வரையான ஐந்தாண்டுகளில் 'ஹிந்து'வில் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை.
3
இந்நூல் வழி அறியவரும் பாரதியின் புதிய எழுத்துகள் கணிசமானவை. பின்வரும் காரணங்களுக்காக முக்கியமானவை. முதலாவதாக, தமிழில் அதிகம் அவர் பேசாத சில பொருள்கள் இவற்றில் பேசப்படுகின்றன. பிரமஞான சபை பற்றிய நேரிடையான விமரிசனங்களைத் தமிழில் அவர் அதிகமாகச் செய்யவில்லை. தமக்குப் போலீசால் புதுவையில் ஏற்பட்ட தொல்லைகளைப் பற்றியும் அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு வருவதற்காக ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கிறார். மேலும், 1910ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'இந்தியா', 'விஜயா', 'சூரியோதயம்' ஆகிய இதழ்கள் தடைசெய்யப்பட்டுவிட்ட சூழ்நிலையில் வெகுஜனப் பத்திரிகைகளில் அன்றாடச் சிக்கல்களைப் பற்றி எழுதும் வாய்ப்பு அருகிவிட்டது. 1915இல்தான் 'சுதேசமித்திர'னில் மீண்டும் எழுத வாய்ப்புக் கிடைத்த தென்றாலும் அரசியல் விஷயங்களை அவர் எழுத முடியாத நிலை. இந்தப் பின்புலத்தில் 'ஹிந்து'வுக்கு எழுதியவை மிக முக்கிய ஆவணங்களாகும்.
இன்று நமக்குக் கிடைக்கப் பெறும் பாரதியின் ஆங்கில எழுத்துகள் நூற்றைம்பது பக்கங்களுக்கும் குறைவே. இதைப் பார்க்க இந்நூல் வழி அறியலாகும் எழுத்துகள் கணிசமானவை. எடுத்துக்காட்டாக, விரிவும் ஆழமும் கொண்ட இரவீந்திரநாத் தாகூரின் ஆங்கிலப் படைப்புகளோடு ஒப்பிட இயலாது என்ற பொழுதும், தகுதியான ஆங்கிலத்தை வளத்தோடும், செழுமையோடும் பாரதி எழுதியிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. சிட்டுக்குருவியைப் பற்றிச் சின்ன சின்ன வாக்கியங்களை எழுதிய பாரதி, ஆங்கிலத்தில் மிக நெடிய சிக்கலான வாக்கியங்களைக் கையாண்டிருக்கிறார். பல இடங்களில் கேலியும் ஏளனமும் குத்தலும் மிளிர்கின்றன. குறைவு நவிற்சிக்கும் (understatement) குறைவில்லை. பொருளுணர்ந்து தக்க இடத்தில் இலத்தீன், பிரெஞ்சு சொற்றொடர்களையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
பாரதி 'ஹிந்து'வுக்கு எழுதிய கடிதங்கள் உடனுக்குடன் வெளிவந்திருக்கின்றன. புதுச்சேரியிலிருந்து அனுப்பப்பட்டாலும்கூட மிக விரைவிலேயே அவை பிரசுரிக்கப்பட்டுள்ளன. காட்டாக, 2 செப்டம்பரில் எழுதிய கடிதம் 3 செப்டம்பர் 1914 இதழிலேயும், 8 ஜூலையில் எழுதிய கடிதம் 11 ஜூலை 1914இலும் வெளிவந்திருக்கின்றன.
தம் கடிதங்களைப் பெரும்பாலும் C.Subramania Bharati என்ற பெயரிலேயே அவர் எழுதியிருக்கிறார். ஒரு கடிதத்தில் முதலெழுத்து இல்லாமலும், ஒரு கடிதத்தை C.S.Bharati என்றும் கையெழுத்திட்டுள்ளார். 'ஹிந்து'வே அவர் பெயரைக் குறிப்பிடும்பொழுது வெவ்வேறு வகையில் எழுதியிருக்கிறது. (எடுத்துக்காட்டு:- C.Subrahmania)
பாரதி ஒரே கடிதத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருக்கிறார். கடிதங்கள் சில எந்த மாற்றமுமில்லாமல் அன்னிபெசண்டின் 'நியு இந்தியா'விலும் வெளிவந்துள்ளன.
ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஒரே கருத்தை ஒரே சமயத்தில் பாரதி வெளிப்படுத்தி யிருக்கிறார். தாய்மொழியே பயிற்றுமொழியாக வேண்டும் என்று 'ஹிந்து'வுக்கு எழுதிய அதே சமயத்தில் இதே கருத்தைச் 'சுதேசமித்திரன்' 24 அக்டோபர் 1916 இதழில் தமிழில் சாஸ்த்ர பரிபாஷை என்ற கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார்.
முதல் கடிதத்தின் ஒரு பகுதி 'ஹிந்து'வின் அதிகாரபூர்வ வரலாற்றில் (1978) முதலில் வெளிவந்தது. இந்நூலில் முதன் முறையாக முழுவடிவில் இடம் பெறுகிறது.
ஒரு கடிதம் பெ.தூரன் தொகுத்த 'பாரதி தமிழ்' நூலின் இரண்டாம் பதிப்பில் (1963) முதன் முறையாக நூல் வடிவம் பெற்றது. 'ஹிந்து' தன் பழைய கோப்புகளிலிருந்து மறுபிரசுரம் செய்யும் "Fifty Years Ago" என்ற பகுதியிலிருந்து இது எடுக்கப்பட்டிருக்கலாம் என உய்க்க முடிகிறது.
மற்றொன்று ராம்சே மக்டனால்டுக்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம் - Agni and Other Poems and Translations & Essays and other Prose Fragments (1980) இல் வெளிவந்தது. ஆனால் இதில் துணைத் தலைப்புகள் இல்லை. ரா.அ.பத்மநாபன் பதிப்பித்த "பாரதியார் கடிதங்கள்" (1982) நூலில் மூலத்திலுள்ள துணைத் தலைப்புகள் இரண்டொன்று நீங்கலாக முழுதும் உள்ளன. இங்கு மூலத்தோடு ஒப்பிட்டுச் செப்பமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ரா.அ.பத்மநாபனின் "பாரதியின் கடிதங்கள்" (1982) நூலில் உள்ள தமிழ் வடிவத்திலுள்ள கடிதத்தின் ஆங்கில மூலம் முதன்முதலாக நூல்வடிவம் பெறுகிறது. முன்பே வெளியிடப்பட்ட ஒருசில கடிதங்கள் தவிர பிற அனைத்தும் இந்நூலில்தான் முதன்முறையாக நூல்வடிவம் பெறுகின்றன.
நூலின் முதற்பகுதியில் கடிதங்கள் காலவரிசையில் தரப்பட்டுள்ளன. கடிதத்தின் ஆங்கிலத் தலைப்பின் தமிழாக்கம் இயல் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆங்கில மூலமும் அதனடியில் காலக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளன. அதன்பின் ஒவ்வொரு கடிதத்தின் கீழும் அதன் தமிழாக்கம் வழங்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் பாரதியின் ஆங்கிலத் தொடரமைப்பு பேணப்பட்டுள்ளது. எளிமை கருதி அவை சிறு வாக்கியங்களாக உடைக்கப்படவில்லை. கூடுமானவரை பாரதி காலத்துச் சொற்களே தமிழாக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்றியமையாத சில குறிப்புகள் வேறு எழுத்துருவில் தமிழாக்கத்தின் கீழே தரப்பட்டுள்ளன. மூன்று பிற்சேர்க்கைகள் நூலின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளன. 'ஹிந்து'வின் மைசூர் நிருபரின் பாரதி நேர்காணலும், இந்த அனுபவத்தைப் பற்றிய பாரதியின் "தராசு" பதிவும் முதல் பிற்சேர்க்கையாகும்.
பாரதியின் கடிதங்கள் எழுதப்படுவதற்குத் தூண்டுகோலான எழுத்துகளும், பாரதியின் சில கடிதங்களுக்கு 'ஹிந்து'வில் வெளியான எதிர்வினைகளும் இரண்டாம் பிற்சேர்க்கையில் இடம்பெறுகின்றன. கடைசி பிற்சேர்க்கையில் பாரதி பற்றி 'ஹிந்து'வில் வெளியான செய்திக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
'ஹிந்து' இதழ்களை நான் நுண்படச் சுருளில் பார்த்தேன். பெரும்பாலான சுருள்கள் மங்கிப் புகையெழுத்துப் போல் தோற்றம் தருகின்றன. பண்டை எழுத்துகளைப் புதிரவிழ்த்துப் படிப்பதைப் போலவே பல இடங்களில் ஆங்கில எழுத்துகளை இனங்காண வேண்டியிருந்தது. ஆங்கிலம் நன்கு கைவரப்பெறாதவர்கள் இவற்றைப் படிப்பது எளிதல்ல. சில இடங்களில் கொண்டுகூட்டியே பொருள் கொள்ள வேண்டியிருந்தது. நாளிதழானதால் பல அச்சுப் பிழைகளும் உண்டு. அவை திருத்தப்பட்டுள்ளன. மூலத்திலுள்ள எழுத்து முறையும் ( spelling) தலைப்பெழுத்துகளும் (capitalisation) பேணப்பட்டுள்ளன. தெளிவு கருதிச் சில இடங்களில் நிறுத்தக்குறிகள் இடப்பட்டுள்ளன. எழுத்துக்கள் தெரியாத இடங்கள் பகர அடைப்புக்குள் முப்புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. பிறைக் கோடுகள் மூலத்தில் உள்ளவை எனக் கொள்க.
4
பாரதி நூற்றாண்டு கிளர்த்திய ஆர்வம், வ.உ.சி. ஆய்வினூடாக இன்றும் என்னை உந்திக் கொண்டிருக்கிறது. பாரதியின் அறியப்படாத எழுத்துகளைச் சென்ற கால் நூற்றாண்டாகத் தொடர்ந்து தேடிவருகிறேன். 'வ.உ.சி.யும் பாரதியும்', 'பாரதியின் கருத்துப்படங்கள்', 'பாரதி: விஜயா கட்டுரைகள்' ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த நூல் வெளிவருகிறது. பாரதியியலுக்கு அரிய வரவாகும் இந்நூல் எனக்குப் பெரும் மனநிறைவளிக்கின்றது.
'ஹிந்து' பத்திரிகைய முழுவதுமாகப் பார்வையிட வேண்டும் என்ற பலநாள் ஆவல் 2006இல் ஓரளவு நிறைவடைந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்திற்கு 2006 வேனிற் பருவத்தில் வருகை தரு ஆய்வாளராக (Charles Wallace Visiting Fellow) அழைக்கப்பட்டேன். இச்சமயத்தில் 1904 - 1921 ஆம் ஆண்டுகளுக்கான இதழ்களின் பெரும்பகுதியைப் பார்வையிட்டேன். பிறகு 2007 வேனிற் காலத்திலும் குளிர் காலத்திலும் இரு முறை கேம்பிரிட்ஜ் சென்று ஒன்றரை மாதங்கள் இந்தத் தேட்டத்தைத் தொடர்ந்தேன். இந்த வாய்ப்பை நல்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தென்னாசிய ஆய்வு மையத்திற்கும், முக்கியமாக அதன் இயக்குநர் (மறைந்த) முனைவர் இராஜ்நாராயண சந்தாவர்கர் அவர்களுக்கும் என் முதல் நன்றி உரியது. இம்மையத்தில் உறுதுணை புரிந்தவர்கள் முனைவர் கெவின் கிரீன்பேங், ராஷெல் ரோவ், பார்பரா ரோ, ஜான் தால்பர்ன் ஆகியோர்.
ஆங்கில பகுதிகளின் மெய்ப்பைப் பார்த்து உதவியவர் பேராசிரியர் வி.கே.நடராஜ், பிரெஞ்சு தொடர்களைச் சரிபார்த்து உதவியர் முனைவர் அப்பாசாமி முருகையன். இலத்தீன் தொடர் ஒன்றின் பொருளை விளக்கியவர் முனைவர் விட்னி காக்ஸ். கடைசி நேரத்தில் எனக்காக ஒரு மூல ஆவணத்தை பிரிட்டிஷ் நூலகத்தில் ஒப்பிட்டுப் பார்த்தவர் முனைவர் சுனில் அம்ரித். கே.சுந்தரராம ஐயரின் படத்தைத் தேடுவதில் உதவியவர் பிளேக் வெண்ட்வர்த்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம், சென்னை அடையாறு நூலகம், சென்னை மறைமலையடிகள் நூல்நிலையம், புதுச்சேரி மகாகவி பாரதி நினைவு அருங்காட்சியகம், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், புது தில்லி நேரு நினைவு அருங்காட்சியகம் - நூலகம், இலண்டன் பிரிட்டிஷ் நூலகம் ஆகியவை மூல ஆவணங்களைப் பார்வையிட அனுமதி நல்கின.
வழக்கம்போல் ஆய்வில் துணைநின்றவர் பழ.அதியமான், கடைசி மெய்ப்புப் படியினை மேற்பார்த்தவர் பா.மதிவாணன். ஆய்வுப் பணி நிமித்தமான வெளிநாட்டுப் பயணங்களில் துணை புரிபவர்கள் இ.பத்மநாப ஐயர், பார்ணி பேட், ஸ்டீவ் ஹ்யூஸ், சாரா ஹாட்ஜஸ். நூல் செப்பமாக வெளிவருவதற்குக் கீழ்வேளூர் பா.ராமநாதன், ஏ.லோகநாதன், சு.நாகம் முதலான காலச்சுவடு பதிப்பக நண்பர்கள் துணை செய்துள்ளனர். இவர்கள் அனைவர்க்கும் என் நன்றி உரியது.
13 மார்ச் 2008. திருநெல்வேலி எழுச்சி நூற்றாண்டு. சலபதி.
(நன்றி: முனைவர் ஆ.இரா.வெங்கடாசலபதி மற்றும் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்����
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
You can send your comments